Jump to content

'இந்த பிளவுபட்ட தீவு' - சிறிலங்கா போர் சொல்லும் கதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமந் சுப்ரமணியம் [samanth Subramanian] 'இந்த பிளவுபட்ட தீவு' [This Divided Island] என்கின்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலானது சிறிலங்காவின் மிகமோசமான கடந்த காலத்தையும் நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலின் ஆசிரியருடன் Hindustan Times ஊடசகத்திற்காக Sudha G Tilak மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு:

 Book%20-%20This%20Divided%20Island.jpg

கேள்வி: இந்த நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?

பதில்: போர் என்பதன் தாக்கம் என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதியாகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன். நான் சிறிலங்காவை சேர்ந்தவன் அல்லன். ஆனால் நான் சென்னையில் வளர்ந்தவன் என்ற வகையிலும் நான் ஒரு தமிழன் என்ற வகையிலும் சிறிலங்காவில் எத்தகைய போர் இடம்பெற்றது என்பதை எழுதியுள்ளேன். இந்திய அரசியலில் சிறிலங்காவின் போர் என்பது ஒரு நிரந்தரப் பிரசன்னத்தையும் செல்வாக்கையும் கொண்டுள்ளதாகும். தமிழ்நாட்டில், இது மிகவும் அதிகமாகப் பேணப்படுகிறது. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் என்பது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்த யுத்தமானது முப்பதாண்டு காலமாக சிறிலங்காவில் தொடரப்பட்டது. ஆனால் நாங்கள் இது தொடர்பாக மிகச் சிறிய அளவிலேயே அறிந்துள்ளோம் என்பது போர்க் காலத்தில் சிறிலங்காவில் ஊடகத்துறை எவ்வளவு கடினங்களைச் சந்தித்திருக்கும் என்பதைச் சான்றுபடுத்துகிறது. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும் என சிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த அன்றைய நாள் நான் கருதினேன். இது ஊடகவியலாளர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே நான் நோக்கினேன். போர்க் காலத்தில் பெற்றுக் கொள்ள முடியாத பல்வேறு தரப்பட்டவர்களின் உண்மையான கதையை வெளியுலகிற்குத் தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே இதை நான் கருதினேன். போர்க் காலத்தில் அங்கிருந்த மக்கள் எவ்வாறு தமது அன்றாடத்தைக் கழித்தார்கள் என்பதையும் அவர்களின் வாழ்வில் போரானது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் போரின் பின்னர் சிறிலங்கா எவ்வாறு உள்ளது என்பதையும் அறிய நான் விரும்பினேன்.

கேள்வி: சிறிலங்கா பெற்றுக் கொண்ட போர் வெற்றியானது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பி.பி.சி செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா அதிகாரிகள் போன்றவர்களின் சவால்களுக்கு உட்பட்டுள்ளது. 'சிறிலங்காவில் சமாதானமானது ஆரோக்கியமற்றதாகவும் வரவேற்கப்பட முடியாததாகவும் காணப்படுவதாக' நீங்கள் உங்களது நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனை விளக்குவீர்களா?

பதில்: போர் முடிவடைந்த கையோடு சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான எத்தகைய மிகப் பெரிய வாய்ப்புக் காணப்பட்டது என்பதை நான் நூலில் விளக்கியுள்ளேன். ஆனால் இந்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பெரும்பான்மைவாதிகளின் செயற்பாடுகளால் இந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டுள்ளது. சிறிலங்காத் தீவில் இன்னமும் இராணுவ வீரர்கள் மக்களின் வாழ்வில் தலையீடு செய்கின்ற நிலை காணப்படுகிறது. சிறிலங்கா அரசால் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவானது போரால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்தது. இதன் அடிப்படையால் இவ் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சிறிலங்கா அரசாங்கத்தால் அசட்டை செய்யப்பட்டுள்ளன.

Samanth%20Subramanian.jpg

கேள்வி: பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கமானது ராஜபக்ச அரசாங்கத்துடன் நட்புறவைக் கட்டியெழுப்புவது போல் தெரிகிறது. இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: இது பதில் சொல்வதற்கு தந்திரமான ஒரு கேள்வியாகும். சிறிலங்காவில் மீளிணக்கத்தை ஏற்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். இத்துடன் சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க் குற்றவியல் விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் இது நடைமுறை உண்மைக்கு மாறுபட்டதாகவே காணப்படுகிறது. குறிப்பாக, இந்திய மத்திய அரசின் அரசியல் இதற்கான காரணமாகும். சிறிலங்கா தொடர்பில் தான் எத்தகைய கோட்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை இந்தியா வரையறுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட கால நோக்குடன் குறுகிய கால நலனை ஒப்பீடு செய்யாது இந்தியா, சிறிலங்கா தொடர்பில் தீர்க்கமான கோட்பாட்டை வரையறுக்க வேண்டும். இதற்கப்பால், இது தொடர்பான பதிலை நான் எனது நூலின் மூலம் வழங்க முடிந்துள்ளதா என்பது நிச்சயமற்றதாகும்.

கேள்வி: தெற்குப் புதுடில்லியில் யாழ்ப்பாணத்தை விட மிக அதிகமான பாதுகாப்பு அரண்களும் காவற்துறையினரின் சோதனைச்சாவடிகளும் உள்ளதாக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாரதீய ஜனதாக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்திருந்தது. இதில் உண்மையுள்ளதா?

பதில்: இது உண்மையல்ல. சிறிலங்காவில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுகிறது. பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறியுள்ளதில் இராணுவம் மற்றும் காவற்துறை ஆகிய இரண்டு பதங்களுக்கிடையிலான வரையறையைத் தெளிவாக நோக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மிக மோசமாகச் செயற்படுகின்றனர். சிறிலங்காவின் யாழ்ப்பாண மாவட்டத்தை அந்நாட்டு இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளது போன்று, சிறிலங்காவுக்குப் பயணம் செய்திருந்த இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சிப் பிரதிநிதிகளின் சொந்த மாவட்டங்களை இந்திய இராணுவத்தினர் ஆக்கிரமித்தால் இவர்களும் ஆத்திரமடைந்திருப்பார்கள்.

கேள்வி: சிறிலங்கா வாழ் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிரிவினை முடிவுக்கு வருமா?

பதில்: தமிழ், சிங்களவர்களுக்கு இடையிலான பிரிவினையானது வரலாற்று ரீதியானதும் ஆழமானதுமாகும். இப்பிரிவினையை சீர்செய்து இரு சமூகங்களுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பதற்கான எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது தமிழர்களை, அனைத்துலக சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தியுள்ளதா என்றால் 'இல்லை' என்பதே அதற்கான பதிலாகும். சிறிலங்காவுக்கு வெளியேயுள்ள சமூகங்கள், புலிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மிகவும் நேர்த்தியாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

கேள்வி: சிறிலங்காத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தங்களின் இறுதியான கருத்துக்கள் எவை?

பதில்: தனது சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் கொண்டுள்ள சமூகமாக சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் விளங்குகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். போர் முடிவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் நாட்டின் அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் பங்கெடுக்கக் கூடிய பாரிய வாய்ப்பொன்று காணப்பட்டது. ஆனால் இந்த அரிய வாய்ப்பானது நழுவவிடப்பட்டுள்ளது.

கேள்வி: தங்களது நூலின் முடிவுரையானது மிகக் கடுமையானதாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: தற்போது சிறிலங்கா ஒரு கொடூரமான இடமாகக் காணப்படுவதாலேயே நான் எனது நூலின் முடிவையும் பயங்கரமாகவும், கடும் தொனியிலும் எழுதியுள்ளேன். இது தொடர்பில் நம்பிக்கையைக் கொடுக்கும் விதமாக எழுதுவதில் நான் எப்போதும் தயக்கம் கொள்கிறேன். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஆட்சிக்கு வருபவர்களின் செயற்பாடுகளால் மாற்றமுறக் கூடியன. சிறிலங்காவில் வாழும் மக்கள் நம்பிக்கையுடன் வாழ்வதை நாம் காணலாம். ஆனால் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கைக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர். இவர்கள் தாங்கள் வாக்குறுதிகளை வழங்கியதற்கு அமைவாக செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சிறிலங்காத் தீவானது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்களற்ற, முரண்பாடுகளைக் கொண்ட ஒரு தேசமாக விளங்குவதால் இது தொடர்பில் நான் எனது தீர்க்கத்தரிசனமான எண்ணத்தை வெளிப்படுத்துவதில் தயக்கம் காண்பிக்கிறேன்.

மொழியாக்கம் - நித்தியபாரதி

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140722110931

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.