Jump to content

எரிக் சூல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Eric-Cyril.jpg

ஈழத்தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம், சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, அன்றைய சூழலில் பார்த்தசாரதி, டிக்சிட் போன்ற பெயர்கள், தமிழர் அரசியலில், முக்கிய இடத்தை பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக இருந்திருந்தாலும் கூட, அவை, இயக்கங்கள் மத்தியில் பரவலாக உச்சரிக்கப்பட்டளவிற்கு, ஊடங்களின் கண்களை அதிகம் உறுத்தியிருக்கவில்லை எனலாம். இதற்கு அவ்வாறான சிலர், உளவுத்துறை சார்ந்தவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும். 

பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தம், உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலே குறிப்பிட்டவாறான பெயர்கள் அனைத்தும் மெதுவாக அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து போயின. இதன் பின்னர் ஒரு வெளிநாட்டவரது பெயர் தமிழர் அரசியலில் அதிகம் உச்சரிக்கப்பட்டதென்றால், அது நிச்சயமாக எரிக் சூல்ஹெய்மினது பெயராகத்தான் இருக்க முடியும். 

பிரபா - ரணில் உடன்பாட்டைத் தொடர்ந்து எரிக்சூல்ஹெய்ம் என்னும் பெயர் தமிழர் அரசியலில் நம்பிக்கைக்குரிய ஒன்றாக நோக்கப்பட்டது. எரிக் எதனை குறிப்பிட்டாலும் அது தலைப்புச் செய்தியாகியது. அவர் 2002 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் மத்தியில் ‘ஒரு சமாதான தேவனாகவே’ நோக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் ஊடகங்களும் அரம்பத்தில் அப்படியானதொரு தோற்றத்தைத்தான் எரிக்கிற்கு வழங்கியிருந்தன. 

1994ல் சந்திரிக்கா நிறைவேற்று அதிபராக தெரிவான போது, அவரையும் கூட, விடுதலைப் புலிகள் ‘சமாதான புறா’ என்றே வர்ணித்திருந்தனர். ஆச்சரியம் என்னவென்றால், அதனை கூறியவர் புலிகளின் தத்துவ ஆசிரியராக அறியப்பட்டிருந்த அன்ரன் பாலசிங்கம் ஆவார். அதே பாலசிங்கம், பின்னர் லண்டனில் இடம்பெற்ற உயிர்நீத்தார் கூட்டமொன்றில், எங்கட பொடியங்களுக்கு அவவ (சந்திரிக்கா) கட்டிப்பிடிக்க ஆசைதான் என்று, நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். 

‘கட்டிப்பிடித்தல்’ என்பது, விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலை குறித்து நிற்கிறது. பாலசிங்கம் குறிப்பிட்டது போன்றே, புலிகள் சமாதான புறா சந்திரிக்காவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதலையும் நடத்தினர். புலிகள் பொதுவாக தங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவர்களுக்கு ஆராத்தி எடுப்பது வழக்கம். ஆனால் அது அவர்களுக்கு பிடிக்கும் வரைக்கும்தான். இப்படித்தான் எரிக்சூல்ஹெய்மும் புலிகளோடு பழகிய காலத்தில், அவர்களது ஊடகங்களால் ஒரு சமாதான தேவனாகவே நோக்கப்பட்டிருந்தார். 

இந்தக் காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை அதிகமாக சந்தித்த ஒரேயோரு வெளிநாட்டவராகவும் எரிக்சூல்ஹெய்மே விளங்கினார். அதே வேளை எரிக்சூல்ஹெய்மி ற்கும், பாலசிங்கத்திற்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவிருந்தது. அது எப்படியான நெருக்கம் என்றால், எரிக்சூல்ஹெய்ம், லண்டனில் உள்ள பாலசிங்கத்தின் வீட்டிற்கு சென்றால், வீட்டுக்குள் சென்றவுடன் நேராக குளிர்சாதனப்பெட்டியை நோக்கித்தான் செல்வாராம். அதனை திறந்து ‘பீர்’ பானத்தை, இரு குவளைகளில் ஊற்றிக்கொண்டுதான், பாலசிங்கத்தின் அருகில் வருவாராம். அப்படியொரு நெருக்கம். 

பாலசிங்கம் மேற்குலகை நன்கு விளங்கி வைத்திருந்ததாலோ என்னவோ, மேற்கு ராஜதந்திரிகளுடன் தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்பைக் கொண்டிருந்தார். பாலசிங்கத்திற்கு பின்னர் அவ்வாறு மேற்கு ராஜதந்திரிகளுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தவர்கள், எவரும் இல்லை எனலாம். 

எரிக்சூல்ஹெய்முக்கு புலிகள் விடயத்தில் தனிப்பட்ட ரீதியில் அனுதாபம் இருந்ததாகவும் சிலர் சொல்லுகின்றனர். இதற்கு, சூல்ஹெய்ம்-பாலசிங்கம் ஆகியோருக்கிடையில் நிலவிய தனிப்பட்ட நட்பே காரணமாக சொல்லப்படுகிறது. சூல்ஹெய்ம் தமிழ் மக்களுக்கு பாதகமாக எதனையும் செய்யவில்லை. அவர் அப்படிச் செய்தார் என்றும், எவராலும் சொல்லவும் முடியாது. 

எரிக்சூல்ஹெய்மை போன்றவர்கள், அவர்களுக்கிருந்த ராஜதந்திர எல்லையின் வழியாக முடிந்தவரை தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க முயற்சித்திருக்கின்றனர். ஆனால் பிரபாகரனின் விடாப்பிடியான எண்ணப்பாட்டினால், எரிக்சூல்ஹெய்மின் முயற்சிகள் கைகூட முடியாது போனது. இதனை எரிக்சூல்ஹெய்மே பின்னர் ஒரு முறை குறிப்பிட்டுமிருக்கின்றார் – « பிரபாகரன் போன்ற ஒருவருக்கு விளங்கப்படுத்துவதென்பது, வீண் வேலையாகும் ». 

இறுதியில் நோர்வேயின் ஜந்து ஆண்டுகால பங்களிப்பானது, விழலுக்கு இறைத்த நீராகிப் போனதுதான் மிஞ்சம். புலிகள் அழிவுற்ற பின்னர், தங்களின் முயற்சி எங்கு தோற்றுப் போனது என்பதை, தெரிந்து கொள்ளும் நோக்கில், நோர்வே அறிக்கையையொன்றை வெளியிட்டிருந்தது. உண்மையில் இலங்கை சமாதான முயற்சியில் நோர்வே தோல்வியடைந்தது என்பது உண்மை ஆனால் அதனால் எரிக்சூல்ஹெய்மிற்கோ அல்லது நோர்வேயிற்கோ எந்த விதமான பாதிப்புக்களும் இல்லை. அவர்கள் வந்தார்கள், செயற்பட்டார்கள், சென்றார்கள். நோர்வே [எரிக்சூல்ஹெய்ம்], இலங்கைக்குள் கால் வைத்த போது, புலிகள் என்றொரு அமைப்பு இருந்தது. ஆனால் அவர்கள் தங்களை மதிப்பீடு செய்ய முற்பட்டபோது, புலிகள் என்னும் அமைப்பு இலங்கையில் இல்லை. 

தற்போது மீண்டும் ஒரு புதிய பெயர் தமிழர் அரசியலுக்குள் எதிர்பார்ப்புடன் நோக்கப்படுகிறது. அதுதான் சிறில் ரமபோச. தென்னாபிரிக்காவின் சிறப்பு தூதுவராக வந்திருக்கும் ரமபோச, தென்னாபிரிக்காவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பிரதி தலைவராவார். 

இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைக்கு, ஒரு நிரந்தர தீர்வை காணும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், அரசாங்கம் மற்றும் அனைத்து தரப்பினருடன் ரமபோச, பேசவுள்ளார். முன்னர் எரிக்சூல்ஹெய்ம் புலிகளுடன் பேசியது போன்று, ரம்போச, கூட்டமைப்புடன் பேசவுள்ளார். முன்னர் சூல்ஹெய்ம் புலிகளுடன் பேசிய போது, அதனை எதிர்த்து கொடியுயர்த்திய ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய அமைப்புக்கள் தற்போது, ரம்போசவையும் எதிர்த்து நிற்கின்றன. தமிழர்களுக்கு இந்த நாட்டில், ஒரு குண்டுமணியளவு நன்மை கூட கிடைத்துவிடக் கூடாதென்று நினைக்கும், இது போன்ற அமைப்புக்களின் எதிர்ப்பு குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

உண்மையில் ரமபோச இலங்கை பிரச்சனையில் எவ்வாறானதொரு பாத்திரத்தை ஆற்றப் போகிறார்? இதற்கு முதலில் தென்னாபிரிக்கா எவ்வாறானதொரு காலப்பகுதியில் இலங்கை விடயத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். தென்னாபிரிக்க அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வது தொடர்பான அபிப்பிராயங்கள் அவ்வப்போது தலைநீட்டி வந்திருக்கிறது. 

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தென்னாபிரிக்கா சென்று திரும்பியிருந்தது. இந்த பயணம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தாம் சொல்ல வேண்டிய விடயங்கள் அனைத்தையும், அங்கு சொல்லியிருப்பதாக தெரிவித்திருந்தார். இது தவிர, தென்னாபிரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பு பிரதிநிதிகள் உண்மையிலேயே என்ன பேசினார்கள் என்பது எவரும் அறியார். 

ஆனால் வழக்கத்திற்கு மாறாக கூட்டமைப்பின் குழுவில் ஒரு சிங்களவரும் இடம்பெற்றிருந்தார். பின்னர் கிடைத்த தகவல்களின்படி, அவர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்று அறியக் கிடைத்தது. கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னரேயே, ரமபோச விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதான தவல்கள் வெளியாகின. அதனடிப்படையிலேயே தற்போது ரமபோச இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பு ஆகிய இருதரப்பினரின் உடன்பாட்டுடனேயே, தென்னாபிரிக்கா இலங்கை விடயத்தில் உதவி வழங்க முற்பட்டிருக்கிறது. முன்னர் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் விரும்பத்தின் பேரில், நோர்வே சமாதான முன்னெடுப்புக்களில் ஈடுபட்டது போன்று. 

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அனைத்தலக ரீதியாக அழுத்தங்களை எதிர்நோக்கியிருக்கின்ற இன்றைய சூழலில், இலங்கை விடயங்களை, தென்னாபிரிக்கா எவ்வாறு கையாளும் என்பதே கேள்வியாகிறது. ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கீழ், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சொல்லப்படும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையொன்றிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இன்றைய சூழலில், இலங்கைக்குள் மூன்றாம் தரப்பொன்றின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள, நல்லிணக்க முயற்சிக்கான முன் நிபந்தனையாக இருக்கப் போவது எது? 

அனைத்துலக அழுத்தங்கள் முன்னைய இறுக்கத்துடன் தொடருமானால், இலங்கைக்குள் மூன்றாம் தரப்பொன்று, நல்லிணக்க முயற்சிகளுக்கான ஏற்பாட்டாளராக தொழிற்பட முடியுமா? அது சாத்தியமான ஒன்றுதானா? தன் மீதான அழுத்தங்களில் எந்தவொரு சாதகமான மாற்றங்களும் இல்லை என்றால், அரசாங்கம், மூன்றாம் தரப்பொன்றின் ஆலோசனையின் கீழ் செயலாற்றுமா? 

தென்னாபிரிக்க தலையீடு தொடர்பில், இப்படி பல கேள்விகளை, தமிழர் தங்களுக்குள் கேட்க வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரையில், அது எந்தவொரு முன்னெடுப்பை கருத்தில் கொள்ளும் போதும், அதனால் தற்போதுள்ள நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா என்றுதான் பார்க்கும். அவ்வாறில்லாது போனால், அரசாங்கத்தால் எந்தவொரு இணக்கப்பாட்டிற்கும் செல்ல இயலாது போகும். இது கூட்டமைப்பும் அறியாத ஒன்றல்ல. 

ஆனால் கூட்டமைப்பை பொறுத்தவரையில் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போன்றே நடந்து கொள்ள முற்படும். இது, கடந்த ஜந்து ஆண்டுகளாக கூட்டமைப்பை துரத்திவரும் ஒரு அரசியல் பலவீனமாகும். ஏனெனில் கூட்டமைப்பு பலரை ஒரே நேரத்தில் திருப்திப்படுத்த வேண்டிய இக்கட்டு நிலைக்குள் அகப்பட்டுக்கிடக்கிறது. ஆனால் மூன்றாம் தரப்பொன்றின் ஆலோசனையின் கீழ் செயலாற்றுவதாயின், கூட்டமைப்பு ஏதாவது ஒன்றுக்குதான் ஆசைப்பட வேண்டும். ஒன்றில், போர்க்குற்ற விசாரணை, அரச படைகளை தண்டித்தல் போன்ற விடயங்களை விட்டுவிட்டு, உள்ளக ரீதியாக ஒரு தீர்வுக்காக உழைக்க வேண்டியிருக்கும். இந்தியாவும் இதனையே வலியுறுத்தும். அவ்வாறில்லாது போனால், கூட்டமைப்பு அனைத்துலகத்தின் முன் இலவுகாத்த கிளியாகக் கிடக்கவேண்டும். 

எனவே தற்போது பொன்னாடை போர்த்தி வரவேற்கப்படும் ரமபோசவின் பங்களிப்பு என்பது, இலங்கையின் முரண்பட்ட தரப்பினரின் அனுகுமுறையில்தான் தங்கியிருக்கிறது. சூல்ஹெய்ம்இலங்கை அரசியல் அரங்கிலிருந்து வெளியேறிய போது, அவர் வரும்போது இருந்த, புலிகள் அமைப்பு உருத்தெரியாமல் போனது. தற்போது ரமபோச காலடியெடுத்து வைத்திருக்கிறார் ஆனால் அவர் முழுமையாக வெளியேறும் போது? எனவே கூட்டமைப்பு கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது.

 

http://www.puthinappalakai.com/view.php?20140713110874

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரம போசா இல்ல எந்த போசாவும் இஞ்ச ஒன்றும் புடுங்க ஏலாது 
ரமபோசா வெளியேறும் போது  சிங்களவன் அவருக்கு கொடுத்து அனுப்புவான் சமபோசா (samaposha)   :D  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட போங்க சார்....ரம போசா வந்தால் என்ன...போனால் என்ன..?


ஒருவேளை இப்படி நடந்தா.....போகும் போது ராஜபக்சே கும்பலை கூட்டிக்கிட்டு போயிருவாங்களோ..?
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.