Jump to content

கமக்காரன் - நட்சத்திரன் செவ்விந்தியன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கமக்காரன்

நட்சத்திரன் செவ்விந்தியன்

தைப் பொங்கலுக்கு முதல்நாள் காலையில் கொடிகாமம் வீதியில் நெல்லியடிச்சந்தை நோக்கி மடித்துக் கட்டிய சாரம் மட்டுமே கட்டியிருந்த ஒல்லியன் ஒருத்தன் தோளில் அரைச்சாக்கு நிறைந்த பயறோடு போய்க்கொண்டிருந்தான். ஆயம் என்ற சிற்றூரில் வசிக்கும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக உவர் ஏறி தரிசாக மாறிவரும் தன்னுடைய சிறு தோட்டத்தில் கடுமையாக மாரடித்து அறுவடை செய்தது அந்தளவுதான்.

வீட்டில் கொஞ்சம் பழஞ்சோற்றை மனுசிக்கு ஆரோ கொடுத்தது என்ற அருமையான பச்சை மிளகாய்த் துண்டுகளோடும் வழமையான வெங்காயத்தோடும் சாப்பிட்டிருந்தான். மனுசி இஞ்சி போட்டுத்தந்த பிளேன் டீயையும் உள்ளங்கையில் போட்ட ஒரு சொட்டு சீனியில் நக்கி நக்கிக் குடித்திருந்தான். நெல்லு வெட்டிய வெற்று வயல்களுக்கு ஊடாக பயணத்தைத் தொடங்கினான். வெறும் பாதத்தில் வெட்டப்பட்ட அடிக்கட்டைகள் குத்தியபோது உடம்பு சிலிர் த்தது. கொஞ்ச நேரத்துக்கு முதல் கடித்த மிளகாயில் நாக்கும் மண்டையும் சிலிர்த்திருந்தது. சோக்கான மிளகாய்தான் என்று எண்ணிக்கொண்டான்.

சாயம்போன அவனது அரணாக்கயிறு இடுப்பில் சாரத்தின் ஒரு மூலையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. வெறுங்காலோடும் பாரத்தோடும் அவன் நடப்பதைப் பார்த்தால் அவன் ஒருவித ஒத்திசைவோடு அனுபவித்து பாரஞ் சுமந்து செல்வது எவருக்குமே தெரியும். காலை என்றாலும் நாலு கட்டை தூரம் நடந்து வந்ததால் அவனுடலில் சிறிது வியர்த்தது. அதன்மேல் மார்கழி மாத குளிர்த் தென்றலொன்று பட்டபோது அவனுக்கு இதமாக இருந்தது. சந்தோசமொன்றை எதிர்பார்த்திருக்கிற ஒரு இன்பமும் நம்பிக்கையும் அவன் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

நெல்லியடி நகருக்குள் அவன் வந்தபோது நெல்லியடியும் களிப்பில் இருந்ததை அவன் கண்டான். “தை பிறக்குது நாளைக்கு. ஏன் என்ர அப்பு ஆத்தைக்குப் பிடிச்ச பருவம் இந்த முன்பனிக்காலந்தான் எண்டது எனக்கு இப்பதானே விளங்குது’’ என்று நினைத்தவனுக்கு அவனுடைய புது மனைவியின் நினைப்பு இதன் தொடர்ச்சியாக வந்தது. தன்னைப்போன்ற ஏழைக் கமக்காரன் இந்தப் பருவத்தில மட்டும்தானேமனுசியோடு சந்தோசமாகக் கூடலாம் என்றும் சந்தோசமாகக் கூடுகிறபோதுதானே குழந்தை ஜனிக்கும் என்றும் நினைத்தவன் “நானும் என்ர சகோதரங்களும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில பிறந்த மர்மம் இதுதான்’’ என்று நினைத்தபோது தேகத்தில் தெரிந்த புழுக்கத்தை அவனால் மறைக்க முடியவில்லை. “இது கொஞ்சம் ஓவராய் போகுது. முகத்தைக் கடுப்பா வச்சிருக்கோணும். இல்லாட்டி நான் இளிச்சவாயன் என்டு நினச்சு ஆராவது சாணக்கமூலை மில்காரன் அறாவிலை பெறாவிலைக்கு என்ர பயறெல்லாம் அடிச்சுக்கொண்டுபோடுவான்’’ என்று இறுக்கமானான்.

சந்தை வாசலில் பத்து ரூபாய் கொடுத்து விற்பனை செய்வதற்கான நகரசபை வரிக்கான பத்திரத்தைப் பெற்றான். பின்னர் உள்ளே போய் பயற்றுச் சாக்கை இறக்கி வைத்து விற்பனை செய்யத்தொடங்கினான். சந்தையில் நிரம்பச் சனம். கமக்காரன் ஒரு பதினொரு மணிக்கே முழுவதும் விற்று விட்டான். காசை எண்ணிப் பார்த்தபோது சரியாக 255 ரூபா வந்திருந்தது. “எல்லாம் சரியா வந்திருக்கு, மனுசிக்கு பருத்திச்சீலைக்கு இருநூற்றி அம்பது. எனக்கு சுமைதூக்கி நடந்த களைக்கு, கள்ளுக்கு அஞ்சு’’ என்று நினைத்துக் கொண்டு அவன் வெளியே வந்தபோதுதான் கலாதியாக லோங்சும் சேட்டுமாக உடுத்தியிருந்த சுக்கிலான் என்ற இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க வாட்டசாட்டமான ஒரு புலி இயக்கப் பொடியன் நமது கமக்காரனை எதிர்கொண்டான். அவன்தான் அவ்வியக்கத்தின் நெல்லியடிக்கான பொறுப்பாளர்.

‘‘என்னண்ணை எங்கடை வரி தராமல் போறாய். எடு இருபத்தைஞ்சு ரூபா’’ என்று கமக்காரனிடம் பாய்ந்தான்.

இயக்கப் பொடியன் ‘தன்மை’ இல்லாமல் தன்னோடு பறைந்தாலும் “நமக்கேன் வேறை ஊரில சோலி சுரட்டு’’ என்று முதலில் கமக்காரன், “தம்பி நான் நகர சபைக்கு பத்துரூபா கட்டித்தான் வித்தேன். வேறை ஆருக்கும் நான் காசு குடுக்கத் தேவையில்லை’’ என்று நிதானமாய் சொல்லிவிட்டு எட்டி இரண்டு அடிவைக்க, சுக்கிலான் அவனின் வெற்றுச்சாக்கை இழுத்துப் பறித்தான். கமக்காரனுக்கு முகத்திலிருந்து முதுகு வரைக்கும் கோபம் பாய்ந்தது.

“உன்ர கோத்தையட்டைப் போய்கேளடா இருபத்தைஞ்சு ரூபா. ஒரு மசிரும் என்னட்டையிருந்து பிடுங்கமாட்டாய்’’ என்று கூவிக்கொண்டு சுக்கிலானை இழுத்து உருட்டிப் புரட்டி நிலத்தில் வைத்து செமச்சாத்து சாத்தினான் கமக்காரன். என்ன நடந்தது, நடக்கிறது என்பதை சுக்கிலானும் சனமும் அறிவதற்கிடையிலே சுக்கிலான் தரையில விழுந்து கிடந்தான். சேட் முழுவதும் கிழிந்து கிடக்க சுக்கிலானுக்கு உடம்பு முழுக்க உட்காய வலி. தன்னுடைய ஆணுடம்பில் மட்டும் அடிக்காமல் விட்டதும் லோங்சை கிழிக்காமல் விட்டதும்கூட கமக்காரனின் யுத்த தர்மத்தின் அடிப்படையில் தனக்கு தரப்பட்ட பிச்சையே என்பதும் சுக்கிலானுக்கு அவமானமாகவும் வலியாகவும் இருந்தது. வலியில் முனகியவாறு தன்னுடைய பிஸ்டல் இன்னமும் இடுப்பில் இருக்கிறதா என்பதை தடவிப்பார்த்தபோது அது உறையோடு அப்படியே இருந்தது. தான் ஏன் பிஸ்டலை கமக்காரன் மேல் உபயோகிக்கவில்லை என்று யோசித்தபோது கமக்காரன் எங்கே உபயோகிக்க விட்டான் என்ற பதில் யோசனை வந்தது. பெரும்பயத்தால் ஆட்கொள்ள ப்பட்டிருந்த சுக்கிலான், ஒரு சாகா வரம்பெற்ற மாயாவியைப் போல சாகசங்கள் செய்து தன்னைப் புரட்டி அடித்த கமக்காரனை துவக்கால் சுட்டு சாக்காட்ட முடியாது என்று அக்கணத்தில் உண்மையிலேயே நம்பினான். மேலும் தன்னை அவன் உயிரோடு விட்டதே பெரும் புண்ணியம் என்றும் தான் மட்டும் பிஸ்டலை உபயோகிக்க முயன்றால் நிச்சயமாக தன்னை கொன்றுபோடுவான் என்றும் நடுங்கினான். இப்போதுதான் சர்க்கஸ் பார்க்கிற மாதிரி தன்னையும் கமக்காரனையும் சுற்றி சனங்கள் வட்டமாக மொய்த்திருப்பதையும் கண்டான். தான் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம் குப்பிகடித்துச் சாகவேண்டும் என்றவாறு கழுத்தில்நஞ்சு மாலையைத் தேடியபோது அதுவும் கமக்காரனின் அடியில் எங்கோ கிழிந்து விழுந்து விட்டதை அறிந்தான். செய்வதறியாது நிலத்தில் புரண்டபோது கமக்காரன் “என்ர கண்ணில படாமல் எங்காவது ஓடித்தொலையெடா மூதேசி" என்று கத்தினான்.

அப்போதுதான் கமக்காரன் தன்னை பயத்தினால் முழுமையாகக் கட்டிப்போட்டிருப்பதை சுக்கிலான் உணர்ந்தான். தன்னுடம்பில் சக்தி எதுவுமே இல்லையென்பதையும் மகுடியின் சத்தத்துக்கு ஆடுகிற பாம்பைப்போல கமக்காரனின் கட்டளைக்கு மட்டுமே தன்னுடல் இப்போது பணிகிறது என்பதையும் கண்டான். அவன் தன்னை உரிந்துவிட்டு ஓடச்சொன்னாலும் தான் அவ்விதம் ஓடத் தயாராக இருப்பதைக் கண்டான்.

எழும்ப முடியாமல் தடங்கித் தடங்கி எழும்பினபோது ஒரு பக்கத்தால் சனங்கள் விலகி வழிவிட்டனர். பெரும்போதையில் போகிற ஒரு குடிகாரனைப்போல தடுக்கி விழுந்து அலாதுபட்டு நடந்து போனான். ஒருக்கால் கமக்காரன் தொடர்ந்து வருகிறானா எனத் திரும்பிப் பார்த்தபோது முழுச்சனங்களும் தன்னையே குழப்பத்தோடும் அனுதாபத்தோடும் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

மோட்டார் சைக்கிள் அடிக்குவந்த சுக்கிலானின் நிலையை உணர்ந்த வாழைப்பழ வியாபாரி ஒருவன் சுக்கிலானிடம் சாவியை வாங்கி தானே அதிலிருந்து காலால் உழக்கி அதனை ஸ்டார்ட் செய்து சுக்கிலான் மோட்டார் சைக்கிளில் ஏறி இருக்க உதவி செய்தான்.

சுக்கிலான் வீதியில் ஏறினான். அப்போதுதான் தானிருக்கும் சேட்டில்லாத ‘ரம்போ’ கோலத்தில் இப்படியே தான் பொறுப்பாயிருக்கும் முகாமுக்குப் போவது தனக்கு அவமானம் என்று நினைத்து தன் சொந்த வீடிருக்கும் அந்திரான் பக்கம் மோட்டார் சைக்கிளைத் திருப்பினான். “இனி எப்போதும் எங்க போறதெண்டாலும் என்ர பொடி காட்டோடு தான் திரியோணும்’’ என்றும் மனசில் போட்டுக்கொண்டான். வீட்டடிக்குப் போனபோதும் அவன் சுமுக நிலைக்கு வரவில்லை. ஒரு “குரூப்” உடன் போய் ரோட்டிலேயே வைத்து கமக்காரனை எலும்பு முறித்து அடித்துச் சாக்காட்டுவதற்கு அவன் தேகம் துடித்தது. என்றாலும் சுதாரித்தான். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் தலைமயிரை சரிக்கட்டிக்கொண்டு இரண்டுமுறை ஆழமாக மூச்சை உள்ளுக்கு இழுத்து வெளியில் விட்டு சாந்தமாக இருக்க முயற்சித் துக்கொண்டு “அம்மா நானொருக்கா குளிச்சிட்டுப்போக வந்தனான்... காம்ப் கிணத்தில எங்கட பொடியள் எல்லாம் குளிச்சு தண்ணி முடிஞ்சு போச்சு’’ என்று சமாளித்துக்கொண்டே கிணற்றடிக்குப் பக்கத்தில் சைக்கிளை நிறுத்தி உறையோடு பிஸ்டலை கிணற்றுக்கட்டில் கழற்றிவைத்து அன்றைக்கு இரண்டாவது முறையாக துலாவிலிருந்து தண்ணி அள்ளி தலையில ஊற்றினான். தாய்க்காரி ஒரு துவாயை கொணர்ந்து கிணற்றுக்கட்டில் வைத்துக்கொண்டு “அப்ப இண்டைக்கு இங்கேயே சாப்பிட்டிட்டுப் போமேன உனக்குப் பிடிச்ச சுறா மீன்கறி றச்சிச்சரக்குப் போட்டுச் சமைச்சுக்கொண்டிருக்கிறன்’’ என்று கெஞ்சினாள்.

“இல்லையெணை இண்டைக்கு நான் அவசரமா ஒரு வேலைக்குப் போகவேணும். அடுத்த ஞாயிற்றுக்கிழம கட்டாயமா வாரன்” என்று சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக தலையைத் துவட்டினான். பிறகு வீட்டுக்குள் போய் எனக்கொரு சேட்டும் சாரமும் தாவெணை என்று தாயிடம் கத்தினான். (சுக்கிலான் அவசரப்படுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இன்னுமொரு பத்தோ இருபது நிமிடத்துக்குள் யாராவது ஒருவர் தாயிடம் வந்து அவன் சந்தையில் பட்ட அவமானத்தைச் சொல்வார்கள். அவர்கள் வருவதற்கு முன் அவன் பறந்துவிடத் துடித்தான்.) தாய் கொணர்ந்த உடுப்புக்களை அணிந்துகொண்டான். தாய் “உனக்கெண்டுதான் செய்தனான். கொஞ்சம் எள்ளுப்பாகெண்டாலும் சாப்பிடடா உன்ர பொடியளுக்கும் குடுத்து’’ என்று ஒரு பெரிய பையை அவனிடம் கொடுத்தவாறே ஒரு கவளம் பாகை அவன் வாய்க்குள் திணித்தாள். எள்ளுப்பாகை சப்பியவாறே மோட்டார் சைக்கிளில் ஏறியவன்; முகாமை நோக்கி விரைந்தான்.

இதற்கிடையில் நமது கமக்காரனுக்கு என்ன நடந்தது?

கமக்காரன் ஒன்றும் யோசிக்காமல் இயக்கப்பொறுப்பாளருக்கு வெளுத்து வாங்கிவிட்டான். அடி வாங்கின சுக்கிலானும் ஓடி மறைந்திட்டான். கொஞ்ச நேரத்தில்தான் கமக்காரனுக்கு நிலமை புரிந்தது. அடிவாங்கினவனை விட்டு இப்ப அடிச்ச தன்னை முழுச்சந்தைச் சனமும் விடுப்புப் பார்த்தமாதிரி பாக்குதுகள். ஒண்டும் பறையுதுகள் இல்ல. கோழி களவெடுத்தவனைப் பிடிச்சமாதிரி தன்னை சனங்கள் நெருங்கி வருகுதுகள். வெத்தில விக்கிற இளம் பொடியன்தான் முதல்ல கிட்டவந்து கமக்காரனை ஒருமாதிரிப் பாத்துக்கொண்டு சொன்னான்.

“அண்ண நீ வீட்ட சொல்லிப்போட்டே வந்தனீ? நீ அடிச்சது ஆரெண்டு தெரியுமே.... புலிப்படையின்ர நெல்லியடிப் பொறுப்பாளர். இண்டக்குப் பின்னேரத்துக்கிடையில உன்ர பிரேதத்தைக் கொண்டுபோய் உன்ர வீட்டை குடுப்பாங்கள். என்ன காரியம் செய்து போட்டாய் அண்ண நீ?’’

கமக்காரனுக்கு சாடையா தலைசுத்துற மாதிரிக் கிடந்தது. முழுச்சனமும் புறுபுறுக்குதுகள். அவனுக்குத்தெரியும் புலிப்பட பொல்லாதது எண்டு. ஆனா ஆருக்குத்தெரியும் புலிப்பட சந்தையில காசுகேட்டு ஆக்கள கொல்லுமெண்டு.

புலியின்ர போக்குவரத்து ஒண்டும் புரியுதில்ல எண்டு தலையில கைவச்சவாறே உடல் நடுங்கி வயக்கெட்டு சப்பாணி கட்டிக்கொண்டு குனிஞ்சு இருந்தான்.

ஒரு மீன் விக்கிற மனுஷி தான் நிலமையைச் சமாளிச்சாள்.

“என்ன எல்லாரும் அவனைச் சுற்றி நிக்கிறியள். காத்துப்படாமல் அவன் மயங்கி விழவெல்லே போறான்’’ என்று சனங்களைக் கலைத்து கமக்காரனிடம் கிட்டப்போய்ச் சொன்னாள், “நடந்ததுக்கு இனிம ஒண்டும் செய்யேலாது. உனக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. நீ ரெலோ தாஸட்ட போய் நடந்ததைச்சொல்லி தஞ்சம் கேள். அவன் உடுப்பிட்டிச் சண்டியன். அவனுக்கு மற்ற எல்லா இயக்கமும் பயம். மகாத்மா தியேட்டருக்கு பக்கத்திலதான் அவங்கட காம்ப்’’ என்றவனுக்கு தெம்பேற்றி வழிகாட்டி அவனை அனுப்பினாள்.

கமக்காரன் தலையில சாக்கைப் போட்டுக்கொண்டு ஒருமாதிரி நடந்துபோக காம்ப் மாதிரியிருந்த ஒரு வீடு தெரிந்தது. காம்ப் கேற்றோடு வீதியில் ஒரு வாட்டசாட்டமான ஒரு இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க தாடிக்கார இளைஞன் ஒரு மரக்கதிரையில் குனிந்து கொண்டு இருந்தான். அவனுக்கு வெறிமாதிரி இருந்தது. இடைக்கிடை நிமிர்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அநேகநேரம் அவன் நிலத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். “அவன்தான் காவலாக்கும்’’ என்று நினைத்த கமக்காரன் “அண்ண நானொருக்கா உங்கட பொறுப்பாளர் தாஸைப் பாக்கவந்திருக்கிறன்’’ என்று தடுமாறிச்சொன்னான்.

இருந்தவன்; ஒருக்கா வடிவாக நிமிர்ந்து கமக்காரனைப் பார்த்து தான்தான் தாஸ் என்றான். பிறகு தன்னினும் பார்க்க கமக்காரனுக்கு வயது கூட என்பதால் தன்னைத் தம்பி என்று கூப்பிடுமாறும் என்ன பிரச்சனை என்றும் விசாரித்தான். அவன் காவல் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்ததும் அவன் குரலில் இருந்த கம்பீரமும் அரவணைக்கிற தன்மையும் கமக்காரனை தேற்றச் செய்தது. அடுத்த கணமே அவன் அழுவாரைப் போலாகினான்.

“தாஸ் தம்பி நானொரு குடும்பக்காரன். தெரியாத்தனமா ஒரு புலிப்பொடியனுக்கு அடிச்சுபோட்டன். அவங்கள் என்னக் கொல்லத்திரியிறாங்கள்’’ என்று தொடங்கி “தம்பி என்னட்ட மட்டு மட்டாத்தான் காசு இருந்தது. கலியாணங்கட்டினத்துக்கு இதுதான் எங்களுக்கு முதல் பொங்கல். அவளுக்கு ஆசையா ஒரு பருத்திச்சீலதான் என்னால வேண்டிக் குடுக்க முடியும். அதுக்களவாத்தான் காசு என்னட்ட இருக்கு’’ என்று முழுப்பிரச்னையையும் சொல்லிமுடித்தான். நிமிர்ந்து முழுவதையும் கேட்ட தாஸ், “அண்ண நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. உன்னட்ட காசில்லாதபடியால் நீ ஒரு வரியும் கொடுக்கத் தேவையில்லை. நான் சுக்கிலானட்டச் சொல்லுறன். அதுவரையும் இதில சாக்கை விரிச்சுப்போட்டு இரு’’ என்றவன் “கொஞ்சம் மெண்டிஸ் சாராயம் குடிக்கிறாயா’’ என்று கேட்க பனங்கள்ளு மட்டுமே தான் குடிப்பதாக கமக்காரன் பதில் சொன்னான்.

இப்போது கமக்காரனுக்கு கொஞ்சம் நிம்மதி மூச்சுவிட முடிந்தது. வெளி நிலவரங்களயும் அவதானிக்க முடிந்தது. சரியாக மதியம் பன்னிரண்டு மணி. மார்கழி என்றபடியினால் வெயில் இதமாக இருந்தது. நாளைக்கு தைப்பொங்கலுக்கு ஏறவேண்டிய பட்டங்களில் சில ஒத்திகைக்காக இப்போதே பறந்துகொண்டிருந்தன. தாஸின் இரண்டு கண்களும் வெறியில் இரத்தச் சிவப்பாய் இருந்ததையும் அப்போதுதான் அவதானித்தான்.

வீதியில் கதிரைக்குக் கீழேயே அவன் கிளாசை வைத்துக் குடிக்கவில்லை. சரியான இடைவெளிகளில் தாஸ் கூப்பிடாமலேயே இடுப்பில சின்னத் துவக்குக் கட்டியிருந்த ஒரு பொடியன் கிளாசில சாராயத்தைக் கொணர்ந்து கொடுப்பான். தாஸ் ஒருவாய் உறிஞ்சிப்போட்டுக் குடுக்க அவன் கிளாசோடு உள்ளே போவான். இது தொடர்கிறது. மதிலைத் தாண்டின கையோடேயே போட்டிக்கோவும் வீடும். போட்டிக்கோவில் மண்மூட்டை அடுக்கி நீளத்து வக்கோடு இரண்டு பொடியள். அவங்கள் வீட்டுக்குக் காவலோ தாஸ் தம்பிக்குக் காவலோ என்பது அவனுக்கு விளங்கவில்லை. இந்தப் பிரச்சனையில் தான் மாட்டியிருக்காவிட்டால் தானும் வீடுபோய் இந்த இதமான வெயிலில கள்ளுக் குடித்துக் கொண்டிருந்திருப்பான் என்று ஏங்கினான்.

தன்னுடைய தந்தையைப்போலவே தாஸும் நிதானமான சண்டியன் என்று பெயரெடுத்திருந்தான். அவன் வம்பு தும்புக்குப் போவதில்லை. வந்த வம்பு தும்பையும் விடுவதில்லை. அவனுடைய சாகஸங்கள் முழுவதும் சனத்துக்குத் தெரியாது. பதினேழு வயதில் அவன் இயக்கத்துக்குப் போய்ச் சேர்ந்திருந்தான். அதற்குப்பிறகு அவனுக்கு இராணுவத் தந்திரங்களின் வல்லுனன் என்பதும் உண்மையான வீரன் முதலிய தகுதிகள் ஒட்டிக்கொண்டன. எதிரி இராணுவ இலக்குகளை தாக்குகிறபோது அவன் குடித்து வெறியில் இருக்காவிட்டாலும் தாக்குதலைத் திட்டமிடுகிறபோது அவனுக்கு சாராயம் தேவை. டோப்பில் தான் அவனால் நிதானமாக கவனம் செலுத்தி யோசிக்கமுடியும். இதனால் ஒவ்வொரு கிழமையிலும் மூன்று நாலு நாட்கள் அவன் தண்ணியில்தான் மிதப்பான். பெண்களுக்கு கல(ர்)ஸ் காட்டுகிற புத்தியும் அவனுக்கு இல்லை. ஒருவகையில் பெண்களை அலட்சியப்படுத்துகிற மாதிரி அவன் இருந்ததால் மற்ற இயக்க பொறுப்பாளர்களைவிட அவன்தான் பெண்களிடம் மிகப் பிரபல்யமாக இருந்தான். சாப்பாடு கொண்டுவரும் சாட்டில் தாஸைப் பார்த்து இரண்டு கதை கதைச்சுப் போவதற்கென்றே மூன்று நேரமும் யாராவது ஒரு ஊர்ப்பெண் வந்துபோவாள்.

சுக்கிலானும் ஒரு பெக்கோ இல்லை. அவனும் ஒரு சின்னச் சாகசக்காரன் தான். அதில் முக்கியமானது அவன் ஏ.எல் வகுப்பு படிக்கிற காலத்தில பின்னேரம் டியூட்டரிக்கு வரும்போது ஒரு அப்பியாசக் கொப்பியும் அவன் கையிலிருக்காது. ஒரு இருபதுதாள் கொப்பியை வேண்டி அதை நாலாய் மடிச்சு தன்னுடைய லோங்ஸ் பின் பொக்கற்றுக்குள் வைத்திருப்பான். வஞ்சகமில்லாமல் ஒவ்வொரு பாடத்துக்கும் அஞ்சு அஞ்சு தாளா நோட்ஸ் எழுதுவான். இரண்டு கையும் ஆயத்தமாக இருக்கிறபடியால் அவன் எப்போதும் சண்டைக்குத் தயார். அவனொரு பள்ளிச்சண்டியன்.

இப்படியே ஒரு மணித்தியாலம் போயிருக்கும். தன்னைக் காணாமல் மனுஷி யோசிப்பாள் என்று கலவரப்பட்டான் கமக்காரன். பிறகும் தாஸ் சொல்லாமலேயே சின்னத் துவக்கு கட்டியிருந்த பொடியன் இரண்டு கோப்பையில் தாஸுக்கும் கமக்காரனுக்கும் சாப்பாடு கொணர்ந்து கொடுத்தான். “சாப்பிர்றதுக்கு வெக்கப்படக்கூடாது. நீ வடிவாச் சாப்பிடண்ணை’’ என்று தாஸ் வற்புறுத்தவும் செய்தான். சம்பா அரிசி, நண்டுக்கறி, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, வெண்டிக்காய் பால்கறி, ஒரு மீன் பொரியல் என்று சாப்பாடு ஆடம்பரமானதாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து கையலம்பி மறுபடியும் வீதிக்கரையில் வந்து அமர்ந்தபோதுதான் தூரத்தில் சுக்கிலானின் தலையை கமக்காரன் கண்டான். கமக்காரனின் உடல் திகிலடைந்ததைக்கண்ட தாஸும் நிமிர்ந்து பார்த்தான். சுக்கிலான் தூரத்தில்தான்நின்றான். அதைவிடத் தூரத்திலேயே தன் மோட்டார் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு தனக்குப் பின்னால் வருமாறு தன் பொடிகாட்டிடம் சொல்லிவிட்டு சிறிது பதற்றத்தோடு மெதுவாக அடியெடுத்து வந்தான். தாஸ் நிமிர்ந்து பார்த்தபோது ஒருகணம் சுக்கிலான் அசையாமலே நின்றான். பிறகு மெதுவாக நடந்துவர தான் என்ன சொல்லவேண்டு மென்பதை தயார்ப்படுத்த அவனுக்கு நாக்கு வரள்கிறமாதிரி இருந்தது. சுக்கிலானுக்கு சிரமத்தைக் கொடுக்காமல் தாஸே தொடங்கினான்.

‘‘என்ன சுக்கிலான் என்ன விசயம்?’’

‘‘இல்லை தாஸ் அண்ணன் ... சந்தையில... வரிதராமல் உந்தப்...பெ.. பெரியவர் எனக்கு.....’’

‘‘சுக்கிலான் அண்ணை உன்னை ஆரெண்டு தெரியாமல் அடிச்சு போட்டார். ஒரு வருசத்துக்குப்பிறகு சந்தைக்கு வந்தபடியால அவருக்கு நீங்கள் வரிவேண்டிற விசயமும் தெரியாதப்பன். அவர் உனக்கு அடிச்சதுக்கு உன்னட்ட மன்னிப்புக் கேக்கிறார். இதோட இந்தப் பிரச்சினைய விடு. இனி இரண்டு பேரும் ஒராளை ஒராள் சந்திக்கக் கூடாது’’ என்று வழக்கை தீர்த்த தாஸ் ‘‘அண்ணை நீ சாக்கை எடுத்துக்கொண்டு போ’’ என்று பணித்தான். கமக்காரன் எழும்பி தன் வீட்டுப்பக்கமாகப் போக ‘‘அப்ப எப்பண்ணை நீ சீலை வேண்டப்போறாய்? கடை பூட்டுறதுக்குமுதல் வேண்டிக்கொண்டு போ. பயப்பிடாமல் போ’’ என்று கடைப்பக்கமாக அனுப்பினான்.

அக்காலத்தில் வடமராட்சிக்கும் அதனுடைய உப்பாறுகளுக்கும் கடலுக்கும் தாஸ்தானே கவர்னர். அவன் வைத்தது தானே சட்டம்.

சுக்கிலான் மனசுக்குள்ள கோபப்பட்டுக் குமைஞ்சாலும் அதை வெளியில் காட்டாமலிருக்க முயன்றான். பிறகு ஒரு காலத்தில் கமக்காரனை பழிவாங்குவதற்கு தனக்கு காலம் வராமலா போகிறது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

விதியும் வரலாறும் வேறு வழிகளில் பயணித்து விட்டதால் சுக்கிலானால் அந்தக் கமக்காரனை பழிவாங்கவே முடியவில்லை. சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியனாமி வர அவர்களோடு புலிப்படை அடிபட்டது. ஒருநாள் பற்றைக்குள் தடம் போட்டு வைத்து இந்திய ஜவான்கள் சுக்கிலானைப் பிடித்தார்கள். ஏனோ சுக்கிலான் குப்பி கடிக்கவில்லை. அந்தக் காலத்தில் இந்தியாவோடு ஒரு கள்ள சமரசத்துக்கு புலி முயன்று கொண்டிருந்ததால் பிடிபடுகின்ற புலிகளுக்கு குப்பி கடிக்க வேண்டாம் என்று கட்டளை இருந்ததாயும் ஒரு வதந்தி உலாவியது. சுக்கிலான் தனக்குத் தெரிய தாட்டு வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆயுதங்களையெல்லாம் சிப்பாய்களுக்கு காட்டிக்கொடுத்தான். அவன் தலையாட்டியாகவும் வேலை செய்ததாக ஊரில் கதை அடிபட்டது. பிறகு விடுதலை பெற்று ஐரோப்பாவுக்குப் போனான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஸ் மாநகரில் ஒரு தமிழரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்தவறியேனும் தான் யாரிடமும் பிடிபட்டுவிடக்கூடாது’ யாரும் தன்னை அடையாளம் காணக்கூடாது என்று ஓடியபோது சுக்கிலான் பெரும்பயத்தை உணர்ந்தான். கடைசியாக இதே அளவுக்கு பயந்தது ஊரில ஒரு சேட்டுக்கே வழியில்லாத எளிய தோட்டக்காரனிடம் அடிவாங்கிய போதுதான் என்பதும் அப்போது அவன் நினைவுக்கு வந்தது.

-- தீராநதி

Link to comment
Share on other sites

புலிகளின் நெல்லியடி பொறுப்பாளராக இருந்த சுக்குளாவை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் பாரிசில் நடந்த கெலைக்கும் சுக்குளாவிற்கும் நேரடி சம்பந்தம் இருந்திருக்கவில்லை அதை செய்தவர் வேறொருத்தர்.

அட இந்த பெரிய கதையை புனைந்தவர் கடைசியில் சொதப்பி விட்டார்.

Link to comment
Share on other sites

ஆனால் பாரிசில் நடந்த கெலைக்கும் சுக்குளாவிற்கும் நேரடி சம்பந்தம் இருந்திருக்கவில்லை அதை செய்தவர் வேறொருத்தர்.

:o :o :o :o :o :o :o :o :o :o

Link to comment
Share on other sites

இதைப் போய் தீராநதியில் போட்டார்களா?

இந்த வார விகடனில் வந்த முத்துலிங்கத்தின் "பாரம் " இதை விட கேவலம்.

விகடன் ,குமுதம்,தீராநதியை விட யாழ் களம் எவ்வளோவோ மேல்.

இன்னுமொருவனும் ,சாத்திரியும்,சகாராவும், நிழலியும் சுபாசும்,கவிதையும்,கோமகனும்,சாந்தியும் தொடர்ந்து எழுதுங்கள்.

இனி ஒரு விதி நாம் செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thas.jpgthas.jpg

TELO தாஸ்

இந்த ரெலோ தாசும் வவுனியாவில கப்பம் வாங்கி வயிறு வளர்த்த "அலவாங்கு" அல்லது "சின்ன" தாசும் ஒரே ஆளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரெலோ தாசும் வவுனியாவில கப்பம் வாங்கி வயிறு வளர்த்த "அலவாங்கு" அல்லது "சின்ன" தாசும் ஒரே ஆளா?

இவர் கிட்டாண்ணாவின் பள்ளி தோழன்.

இவர் டெலோவிலும் அவர் புலியிலும் இருந்தார்கள். இவரும் கிட்டண்ணா போலவே டெலோ செய்த எல்லா தாக்குதல்களையும் வழிநடத்தினார். சாவச்சேரி போலிஸ் நிலையம்.......... . .தோல்வியில் முடிந்தாலும் கொக்குளாய் இராணுவமுகம் மீதான தாக்குதல் இரவனுவம் பயணம் செய்த இரயிலை கண்ணிவெடி வைத்து தகர்த்து 257 இராணுவத்தை கொன்றது என்று எல்லாமே இவருடைய தலைமையிலேயே நடந்தது.

கிட்டன்னவுடணான தோழமையும் தொடர்ந்தது. பின்பு புலிகளை தாக்க டெலோ இந்தியாவல் எவிவிடபட்டபோது இவர் அதை கிட்டுவிக்கு சொல்லிவிடுவார் என்ற காரணத்தால் டெலோ பொபியும் ஸ்ரிசபாரத்னமும் சேர்ந்து இவரை யாழ் பேதன வைத்திய சாலை கன்டீன் அருகே வைத்து சுட்டு கொன்றார்கள்.

Link to comment
Share on other sites

நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு காலத்தில் என் நல்ல தோழன். அவர் அப்பாவை புலிகள் தான் போட்டுத் தள்ளியது. பிற்காலத்தில் அவரின் சில செயற்பாடுகளால் அவருடனான தோழமையை தொடர முடியாது போயிட்டு. எப்போவாவது ஒருநாள் என்ற கவிதை தொகுப்பை 1997 இல் வெளியிட்டு இருந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்கிலான் என்பவரையும்,புலிகளையும் பழி வாங்க என கதை எழுதி தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டார்

இவர் தானே வங்கியில் கொள்ளையடித்து விட்டு புலிகளால் கைது செய்யப்பட்டு கொள்ளையடித்த பணத்தோடு தப்பி ஓடி வந்தவர்

அடக் கடவுளே... அவர் இல்லை இவர். கொழும்பில் பல காலம் வசித்து வந்து பின் பெற்றோர் இல்லாமையால் நெருங்கிய உறவொன்றின் ஸ்பொன்சர் மூலம் அவுஸ் வந்தவர். ஈழத்தில் இருக்கும் போதே பல கவிதைகளையும் சில இலக்கிய விமர்சனங்களையும் எழுதியவாறு படித்துக் கொண்டு இருந்தார். காலச்சுவட்டில் பல படைப்புகள் வந்து இருக்கு.

ஓ அப்படியா மன்னித்து கொள்ளுங்கள் நான் தான் ராயகரனையும் இவரையும் போட்டு குழப்பி உள்ளேன் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

ஓ அப்படியா மன்னித்து கொள்ளுங்கள் நான் தான் ராயகரனையும் இவரையும் போட்டு குழப்பி உள்ளேன் என நினைக்கிறேன்

கண்டதையும் வாசித்து குழம்பாதீர்கள்.

ரயாகரன் தனக்கென இணையம் வைத்திருக்கின்றார் .நட்சத்திரன் செவ்விந்தியன் தேசம்நெற் இல் அதிகமாக பதிவுகள் இடுபவர் .ரயாகரனை பற்றிய உமது எண்ணமும் பிழையென தான் நான் சொல்வேன்.

நட்சத்திரனின் தாசை பற்றிய கதைவிட மேலே ஒருவரின் கதை நன்றாக இருக்கு.

சட்டம் என் கையில் முதல் நாள் காட்சிக்கு போய் ராணி தியேட்டரில் கியூவில் நிற்கும் போது ஆரியகுளம் பொன்ராசாவின் மகன் வந்து இப்படிதான் ஒரு கமக்காரனில் கை வைக்க அவன் ஒரே அடியில் ஆளை நோக்அவுட் ஆக்கிவிட்டான் .நின்ற சனம விஷயத்தை சொல்லி கமக்காரனை அனுப்பிவிட்டார்கள் .இவர் பின்னர் எழும்பி உள்ள டாக்ஸிகாரர்களை எல்லாம் கூட்டி வந்து எவ்வளவு தேடியும் கமக்காரன் அகப்படவில்லை .நாங்கள் நிம்மதியாக போய் "சொர்க்கம் மதுவிலே பார்த்தோம்".

Link to comment
Share on other sites

எழுதச் சொல்கிறது

மஞ்சட் பூக்காடுகளில் பூத்த மப்பில்

கிழக்கிலிருந்து கொழும்புக்கு

இந்தப் பிரிவுப் பயணம்

மழை பெய்து ஓய்ந்து

நான் மனசார இழைப்பாறிய கொஞ்சக் காலம்

வாழ்வு கொடுத்த ஊர்

உன்னைப் பிரிந்து கொண்டிருக்கிறேன்

இந்தப் பயணம் தருகிற போதை

எழுதச் சொல்கிறது

இழந்த வாழ்வையும் வாழ்வின் கவிதையையும்

கவிதையின் போதையையும்

எழுதச் சொல்கிறது

பிரிவில் பூக்கிற ஒரு துயரம் இதில் இல்லை

வெண்மணல் கொடுக்கிற நதியும்

காடுகளும் கூட

என்னோடு தொடர்ந்து வருகிறது

மீண்டும் மீண்டும் நகரங்களை நோக்கிப் போனாலும்

நகரங்களை அவாவிய என் கனவுகள் போயிற்று

நகர வாழ்வும் போயிற்று

அழிந்துபோன நாகரீகங்களைப்போல

அந்த வாழ்வு அப்படியே இருப்பினும்

அங்கிருந்தபோது எனக்கு எழுத முடியவில்லை

மனசார வாழவும் கிடைக்கவில்லை

--நட்சத்திரன் செவ்விந்தியன்

(1996)

நன்றி: ’எப்போதாவது ஒருநாள்’

தாமரைச் செல்வி பதிப்பகம்

Link to comment
Share on other sites

நட்சத்திரன் செவ்விந்தியன் தேனி இணையத்தில் மகாதேவன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்

Link to comment
Share on other sites

நட்சத்திரன் செவ்விந்தியன் தேனி இணையத்தில் மகாதேவன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்

ஓ அவரா இவர் இதையெல்லாம் கதையெண்டு தீராநதி பிரசுரிக்கிறது. அதைவிட இது எத்தனைபேரிற்கு புரிந்திருக்கும். சுக்குளாவையும் ??தாசையும்.????

Link to comment
Share on other sites

நட்சத்திரன் செவ்விந்தியன் தேனி இணையத்தில் மகாதேவன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்

'தேனீ'' இணையத்தில் குப்பை கொட்டியவர்களில் ஒருவரா இவர்?

அங்கு எழுதிய வீரவான்கள் பலர் இப்பொழுது எழுதுவதில்லை. அதற்கான தேவையுமில்லை. காலத்திற்கேற்ப வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பிழைப்பு.

Link to comment
Share on other sites

எழுத்தாளருக்கு புலிகள் குறித்து ஏற்கனவே ஒரு கருத்து இருக்கின்றது. அதற்குள்ளாகவே அவர் கதை இருக்கின்றது.

கதை ஊடாக புலிகளை விமர்சித்தில் அல்லது எதிர்ப்புநிலையை முன்வைத்தல் என்ற காரணத்திற்காக இந்தப் படைப்பை நிராகரிக்கமுடியாதுள்ளது காரணம் புலிகள் குறித்த அவருக்கு இருப்பில் இருக்கும் கருத்து அவர் தந்தை கொல்லப்பட்டதில் இருந்து உருவாகியிருக்கும்போது அக்கருத்துநிலையில் நியாயமும் இருக்கவே செய்கின்றது.

உண்மைச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டு உணர்வுகள் பாதிக்கப்பட்டு உருவாகும் கருத்துநிலை அக்கருத்துநிலையின் அடிப்படையில் உருவாகும் படைப்புக்களை அனுசரித்தே பயணிக்கமுடியும்.

கமக்காரன் என்ற இந்தப் படைப்பு இந்தப்படைப்புக்கான பின்னணி படைத்தவரின் பின்னணி எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க்கும்போது சரி பிழை என்ற கருத்துக்களை கடந்து வேதனைகளே மிஞ்சுகின்றது.

உன்ர அப்பாவை போட்டுத்தள்ளினாலும் பரவாயில்லை விசில் அடிக்கக் கூடியமாதிரியே எழுது என்ற கோரிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு இல்லை.

உண்மை... ந.செ. யின் கவிதைகள் மிகச் செறிந்த படிமங்களினூடு கடத்தப்படும் அனுபவ பகிர்வு. அற்புதமான இலக்கிய படைப்பு

உன்ர அப்பாவை போட்டுத்தள்ளினாலும் பரவாயில்லை விசில் அடிக்கக் கூடியமாதிரியே எழுது என்ற கோரிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு இல்லை.

ஒருவரின் இலக்கியம் பற்றி கதைக்கும் போது அவரையும் ஒரு மனிதனாக கணக்கிட்டு (இன்னும் சொல்லப் போனால் தலையின் பின்னால் ஒளிவட்டம் இல்லாதவர்கள் தான் கலைஞர்கள்/இலக்கியவாதிகள் என்று அணுகப்படாது) தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க கூடாது என்று சொல்லும் நான் தான் அவரின் சில தனிப்பட்ட விடயங்களைக் எழுதினேன்.

ஏனெனில் ந.செ. யின் அப்பாவை போட்டதின் பின்னான அரசியல் அவருக்கு தெரிந்து இருக்கும். டி.சிவராம் அண்ணை ஒரு நாள் கதைக்கும் போது, "அடே இவன் (ந.செ) தன்னை வித்தியாசமாக காட்டத்தான் புலியெதிர்ப்பை கையாளுகின்றான்" என்று சொன்னார். அது தான் உண்மை என்றே உணர்கின்றேன். இலங்கை இராணுவத்தின் அத்தனை அட்டூளியங்களையும் மன்னித்து அல்லது ஏற்றுக் கொள்வதற்கு தன் தந்தையை புலி கொலை செய்தது ஒன்றே காரணம் என்பது சினிமாத்தனமான ஒரு வில்லத்தனம். அதனை ந.செ இலக்கியம் என்ற ஒன்றின் மூலம் நிறுவும் போது அதை ஏற்க முடிகின்றது இல்லை

ந.செ யிடம் விசிலடிக்கும் இலக்கியம் பற்றிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் நேர்மையான இலக்கியம் ஒன்றை எதிர்பார்க்கும் தேவை இலக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளருக்கு புலிகள் குறித்து ஏற்கனவே ஒரு கருத்து இருக்கின்றது. அதற்குள்ளாகவே அவர் கதை இருக்கின்றது.

கதை ஊடாக புலிகளை விமர்சித்தில் அல்லது எதிர்ப்புநிலையை முன்வைத்தல் என்ற காரணத்திற்காக இந்தப் படைப்பை நிராகரிக்கமுடியாதுள்ளது காரணம் புலிகள் குறித்த அவருக்கு இருப்பில் இருக்கும் கருத்து அவர் தந்தை கொல்லப்பட்டதில் இருந்து உருவாகியிருக்கும்போது அக்கருத்துநிலையில் நியாயமும் இருக்கவே செய்கின்றது.

உண்மைச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டு உணர்வுகள் பாதிக்கப்பட்டு உருவாகும் கருத்துநிலை அக்கருத்துநிலையின் அடிப்படையில் உருவாகும் படைப்புக்களை அனுசரித்தே பயணிக்கமுடியும்.

கமக்காரன் என்ற இந்தப் படைப்பு இந்தப்படைப்புக்கான பின்னணி படைத்தவரின் பின்னணி எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க்கும்போது சரி பிழை என்ற கருத்துக்களை கடந்து வேதனைகளே மிஞ்சுகின்றது.

உன்ர அப்பாவை போட்டுத்தள்ளினாலும் பரவாயில்லை விசில் அடிக்கக் கூடியமாதிரியே எழுது என்ற கோரிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு இல்லை.

சுவிஸ் போலிஸ் (அதில் கடமையாற்றும் ஒரு முட்டாள் போலிஸ்) ஒருமுறை ஆளை தவறாக இனம் கண்டு என்னை பிடித்து அடித்து தனது காரில் ஏற்றிக்கொண்டு பொலிஸ்நிலையம் சென்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை எனது அமெரிக்க பாஸ்போர்ட் மட்டும் போக்கேற்றில் உள்ளது.

பின்பு தமது பாசையில் எதோ எதோ பேசிவிட்டு வந்து என்னுடனும் தமது பாசையில் பேச நான் இங்கிலிஸ் ப்ளீஸ் என்றேன் அதற்கும் அவன் அடிக்க கை ஓங்கினான் அருகிருந்தவன் எதோ சொல்ல அடிக்க வில்லை.

பின்பு அருகிருந்தவன் தொடர்ந்த உரையாடலுடன் எனது பாஸ்போர்டை நீட்டினேன். பார்த்துவிட்டு அவருக்கு என்னை பார்க்க கொஞ்சம் பரிதாபம் வந்துவிட்டது.

எனக்கு இப்போது கொஞ்சம் எழுத தெரியும்............. தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையங்களில் எழுதுகிறேன். ஆக இனி எங்கே எழுதினாலும் நான் சுவிஸ் போலிசை குற்றம் சாட்டியே எழுதவேண்டும்? அதுதான் எழுத்துலகின் சமதர்மம்? இங்கே சொந்த மூளை சம்பவம் நடந்ததற்கான காரணங்கள் அதன் பின்புலம் எதையும் ஆராயும் அறிவு எனக்கு இல்லை அது தேவையும் இல்லை................... ஆனால் புலிக்கு அரசியல் கற்பிக்கும் சட்டாம்பி அறிவு மட்டும் எனக்கு இருக்கு?

இது எங்கே இருந்து வருகிறது?

Link to comment
Share on other sites

ஒருவரின் இலக்கியம் பற்றி கதைக்கும் போது அவரையும் ஒரு மனிதனாக கணக்கிட்டு (இன்னும் சொல்லப் போனால் தலையின் பின்னால் ஒளிவட்டம் இல்லாதவர்கள் தான் கலைஞர்கள்/இலக்கியவாதிகள் என்று அணுகப்படாது) தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க கூடாது என்று சொல்லும் நான் தான் அவரின் சில தனிப்பட்ட விடயங்களைக் எழுதினேன்.

ஏனெனில் ந.செ. யின் அப்பாவை போட்டதின் பின்னான அரசியல் அவருக்கு தெரிந்து இருக்கும். டி.சிவராம் அண்ணை ஒரு நாள் கதைக்கும் போது, "அடே இவன் (ந.செ) தன்னை வித்தியாசமாக காட்டத்தான் புலியெதிர்ப்பை கையாளுகின்றான்" என்று சொன்னார். அது தான் உண்மை என்றே உணர்கின்றேன். இலங்கை இராணுவத்தின் அத்தனை அட்டூளியங்களையும் மன்னித்து அல்லது ஏற்றுக் கொள்வதற்கு தன் தந்தையை புலி கொலை செய்தது ஒன்றே காரணம் என்பது சினிமாத்தனமான ஒரு வில்லத்தனம். அதனை ந.செ இலக்கியம் என்ற ஒன்றின் மூலம் நிறுவும் போது அதை ஏற்க முடிகின்றது இல்லை

ந.செ யிடம் விசிலடிக்கும் இலக்கியம் பற்றிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் நேர்மையான இலக்கியம் ஒன்றை எதிர்பார்க்கும் தேவை இலக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் வரும்

நிழலி, எனது கருத்து உங்களுக்கான பதில் இல்லை. பொதுவான கருத்தாகவே முன்வைத்தேன். இந்தப் படைப்பை ஒரு புலியெதிர்ப்புவாதமாக தூக்கி எறிய முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அவர் ஒரு புலியெதிர்ப்புவாதியாக இருக்கும் போது அதற்கான நியாயங்களையும் நாம் அனுசரித்தே ஆகவேண்டும். கருத்து தர்க்கம் என்றளவில் அல்லாமல் உணர்வுரீதியாக இவரையும் இவரது எழுத்துக்களையும் அணுகமுற்படும்போது அனுசரிப்புக்கள் அவசியம். ஒருவகையில் இவர் இப்படி எழுதுவதுதான் நேர்மையான இலக்கியமாகவும் பார்க்கமுடியும். பலர் இலங்கை அரசின் அட்டுளியங்களை உள்வாங்கி இலக்கியங்களை படைக்கட்டும். ந செ போன்ற ஒரு சிலர் இவ்வாறான இலக்கியத்தையும் பெரும்பான்மையானவர்கள் காலத்தின் பெரும்பான்மை துன்பத்தை சொல்லும் இலக்கியத்தையும் படைக்கட்டும். இருதரப்பிடமும் நேர்மை இருக்கட்டும். அதை ஏற்றுக்கொள்வோம் எதிர்பார்ப்போம் என்பதே எனது கருத்தின் அடிப்படை.

Link to comment
Share on other sites

சுவிஸ் போலிஸ் (அதில் கடமையாற்றும் ஒரு முட்டாள் போலிஸ்) ஒருமுறை ஆளை தவறாக இனம் கண்டு என்னை பிடித்து அடித்து தனது காரில் ஏற்றிக்கொண்டு பொலிஸ்நிலையம் சென்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை எனது அமெரிக்க பாஸ்போர்ட் மட்டும் போக்கேற்றில் உள்ளது.

பின்பு தமது பாசையில் எதோ எதோ பேசிவிட்டு வந்து என்னுடனும் தமது பாசையில் பேச நான் இங்கிலிஸ் ப்ளீஸ் என்றேன் அதற்கும் அவன் அடிக்க கை ஓங்கினான் அருகிருந்தவன் எதோ சொல்ல அடிக்க வில்லை.

பின்பு அருகிருந்தவன் தொடர்ந்த உரையாடலுடன் எனது பாஸ்போர்டை நீட்டினேன். பார்த்துவிட்டு அவருக்கு என்னை பார்க்க கொஞ்சம் பரிதாபம் வந்துவிட்டது.

எனக்கு இப்போது கொஞ்சம் எழுத தெரியும்............. தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையங்களில் எழுதுகிறேன். ஆக இனி எங்கே எழுதினாலும் நான் சுவிஸ் போலிசை குற்றம் சாட்டியே எழுதவேண்டும்? அதுதான் எழுத்துலகின் சமதர்மம்? இங்கே சொந்த மூளை சம்பவம் நடந்ததற்கான காரணங்கள் அதன் பின்புலம் எதையும் ஆராயும் அறிவு எனக்கு இல்லை அது தேவையும் இல்லை................... ஆனால் புலிக்கு அரசியல் கற்பிக்கும் சட்டாம்பி அறிவு மட்டும் எனக்கு இருக்கு?

இது எங்கே இருந்து வருகிறது?

ஒருவரின் தகப்பனை சுட்டுக்கொல்வதும் நீங்கள் ஒப்பிடும் பிரச்சனையும் ஒரு தராசில் வைத்துப் பார்க்க முடியாது.

இப்படைப்புக் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தில்

// எழுத்தாளருக்கு புலிகள் குறித்து ஏற்கனவே ஒரு கருத்து இருக்கின்றது. அதற்குள்ளாகவே அவர் கதை இருக்கின்றது.

கதை ஊடாக புலிகளை விமர்சித்தில் அல்லது எதிர்ப்புநிலையை முன்வைத்தல் என்ற காரணத்திற்காக இந்தப் படைப்பை நிராகரிக்கமுடியாதுள்ளது காரணம் புலிகள் குறித்த அவருக்கு இருப்பில் இருக்கும் கருத்து அவர் தந்தை கொல்லப்பட்டதில் இருந்து உருவாகியிருக்கும்போது அக்கருத்துநிலையில் நியாயமும் இருக்கவே செய்கின்றது.//

என்று குறிப்பிட்டுள்ளேன். இது அரசியல் கற்பிக்கும் சட்டம் பற்றியதல்ல நபரின் கமக்காரன் என்ற கதை குறித்தது.

இது எங்கே இருந்து வருகிறது?

தகப்பனை போட்டுத்தள்ளியதில் இருந்து வரலாம்.

என்ற அடிப்படையில் எழுத்தாளரின் கருத்துக்களை தர்க்கரீதியாக அன்றி உணர்வுரீதியாக மதிக்கின்றேன்.

ஏன் தராசு தட்டு ஓடைஞ்சிடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கிட்டாண்ணாவின் பள்ளி தோழன்.

இவர் டெலோவிலும் அவர் புலியிலும் இருந்தார்கள். இவரும் கிட்டண்ணா போலவே டெலோ செய்த எல்லா தாக்குதல்களையும் வழிநடத்தினார். சாவச்சேரி போலிஸ் நிலையம்.......... . .தோல்வியில் முடிந்தாலும் கொக்குளாய் இராணுவமுகம் மீதான தாக்குதல் இரவனுவம் பயணம் செய்த இரயிலை கண்ணிவெடி வைத்து தகர்த்து 257 இராணுவத்தை கொன்றது என்று எல்லாமே இவருடைய தலைமையிலேயே நடந்தது.

கிட்டன்னவுடணான தோழமையும் தொடர்ந்தது. பின்பு புலிகளை தாக்க டெலோ இந்தியாவல் எவிவிடபட்டபோது இவர் அதை கிட்டுவிக்கு சொல்லிவிடுவார் என்ற காரணத்தால் டெலோ பொபியும் ஸ்ரிசபாரத்னமும் சேர்ந்து இவரை யாழ் பேதன வைத்திய சாலை கன்டீன் அருகே வைத்து சுட்டு கொன்றார்கள்.

கொக்குளாய் இராணுவமுகம் மீதான தாக்குதல் செய்தவர்கள் புலிகள்

Link to comment
Share on other sites

//ஏன் தராசு தட்டு ஓடைஞ்சிடுமா?//

பேரளிவுக்கு உந்த எகத்தாள மனநிலையும் ஒரு பெரிய காரணம். இவ்வாறான கேள்வி கேட்கமுன் ஒன்றை மனதில் வையுங்கள் நாம் வென்றவர்ளோ எமக்கான உரிமைகளை பெற்றவர்களோ இல்லை மாறாக படுதோல்வி அடைந்தவர்கள் முன்பிருந்ததை விட மேலும் அடிமை நிலைக்குள் தள்ளப்பட்டவர்கள்.

உங்களை பொறுத்தவரை யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளலாம் பின்பு எகத்தாளமாகபேசலாம் என்ற உரிமை இருக்கும் போது அதை விமர்சித்து எழுதும் உரிமை பாதிக்ப்பட்டவர்களுக்கு தாரளமாக இருக்கின்றது. இப்படி எழுதுபவர்களை போட்டுத் தள்ள முடியவில்லையே என்ற கவலை உங்களுக்கு இருந்தால் அதை நீங்களும் ஒரு இலக்கியமாக படையுங்கள் அதையும் படிப்போம். நீங்களும் எழுத்தாளரும் சேர்ந்தது தானே இந்தச் சமூகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.