Jump to content

பாதை தெரியாத பயணங்கள்! (நெடுங்கதை)


sOliyAn

Recommended Posts

"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி.

"ஆள் 'றெயினா'லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார்.

சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான்.

சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனியே அமைக்கப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் வசிப்பவன்.
 

ஜேர்மனிக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி ஏறக்குறைய இரண்டு வருடங்களாவது இருக்கும். ஜேர்மன் மண்ணை மிதித்த முதல்நாள்....

சோதி வீட்டுத் தொலைபேசி நள்ளிரவில் அலறியடித்து நித்திரையைக் குழப்பியது.

"ஹலோ...."
தூக்கம் கெட்ட எரிச்சலுடன் அழைத்தான் சோதி.

"சோதி அண்ணையே கதைக்கிறியள்...." என்று கேட்டுவிட்டு ஒரு இளவயது ஆணின் குரல் மறுமுனையில் அழ ஆரம்பித்தது.

"ஹலோ.... ஆரது...." என்று மீண்டும் மீண்டும் கேட்க, சில... பல நிமிடங்கள் அழுகையிலே கழிய, சோதி பலதை எண்ணிப் பயப்பட ஆரம்பித்தான். ஊரிலுள்ள சகோதரிகள்.... உறவுகள்.... வயதான பெற்றோர்கள்.... எல்லோருமே அவன் மனக்கண்ணில் வலம்வரத் தொடங்கினார்கள். அவர்களில் எவருக்காவது ஏதாவது நிகழ்ந்துவிட்ட துயரச் செய்திதான் அழுகுரலுடன் வரப்போகிறதோ? பலவாறாகச் சிந்தனைகள் சுழன்றன. அழுகை ஓய்ந்தபாடில்லை. எரிச்சல் சினமாகச் சீற முற்பட்டது.

"ஹலோ... ஆர் கதைக்கிறது..." என்று சற்று அதட்டலாகவே கேட்டான்.

"சோதியண்ணை.... அது நான்...."

"நான் எண்டால்....?"

"நான் சந்திரன்..."

"சந்திரன்....? சந்திரன் எண்டால்....?"

"மெக்கானிக் மயில்வாகனத்தாற்றை மகன்...."
தாயகத்தில் சோதி வாழ்ந்த கிராமத்தின் பிரபலமான "கார் மெக்கானிக்"தான் மயில்வாகனம்.

"ஓ.... மயில்வாகனம் அண்ணையின்ரை மேன்.... ம்.... என்ன திடீரெண்டு.... எவ்வளவு காலம் ஜேர்மனிக்கு வந்து...."

"இண்டைக்குத்தான் அண்ணை வந்தனான்...." என்று மீண்டும் அழ ஆரம்பித்தான்.

"அழாதை.... அழாதை.... வந்ததுக்குச் சந்தோசப்படுறதை விட்டுப்போட்டு இப்ப என்னத்துக்கு அழுகிறாய்...?"

"இல்லையண்ணை.... எல்லாம் புதுசாய்க் கிடக்கு..... ஆக்களும் புதுசாய்க் கிடக்கு.... எனக்குப் பயமாய்க் கிடக்கண்ணை..."

"ஊரிலைதான் பயப்பிட வேணும்.... இஞ்சை வந்துபேந்தேன் பயப்பிடுறாய்...."

"உங்களுக்கென்ன.... உங்கை இருந்துகொண்டு சொல்லுவியள்.... என்ரை நிலமை எனக்குத்தானே தெரியும்...?"

அப்பாவியாக இருந்தான். மனதில் தோன்றியதை முன்பின் சிந்தியாமல் தெரிவிப்பவனாக இருந்தான்.

"ஓ.... ஓ.... நான் இந்த நாட்டுக்குப் புதிசாய் வராமை, இஞ்சை பிறந்தவன்தானே...?!" என்று ஏளனமாகக் கேட்டான் சோதி.

"இல்லையண்ணை.... எல்லாம் புதிசாய் இருக்கு.... கண்ணைக் கட்டி மரங்களில்லாத காட்டிலை விட்டமாதிரி இருக்கு.... நீங்கள் ஒருக்கா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கோவன்...." என்று தொலைபேசியில் கெஞ்சினான்.

"நீ ஆம்பிளைதானே.... ஏன் பயப்பிடுறாய்... நான் இப்ப வந்து உன்னைக் கூட்டியந்தாலும், திரும்பவும் உங்கைதான் கொண்டுவந்து விடவேணும்.... அதோடை ஐநூறு கிலோ மீற்றருக்குமேலை வரவேணும்.... அதுக்கும் பாக்க நீ உங்கை கொஞ்சநாளைக்கு இருந்தியெண்டால் வேறை ஒரு இடத்துக்கு மாத்தி விடுவினம்.... அதுக்குப் பிறகு வந்து சந்திக்க முடியுமெண்டால் வாறன்...."

"அதென்ன முடியுமெண்டால் வாறன்.... முடியாதெண்டு ஒண்டு இருக்கே.... ஏதோ சாக்குப்போக்குச் சொல்லுறியள்...." உரிமையோடு கேட்டான்.

சோதிக்குச் சிரிப்பாக இருந்தது. அதேநேரத்தில் அவனைப் பிடித்தும்போனது.

"சந்திரன்.... உனக்கு இப்ப இஞ்சத்தே நிலமையள்.... சிக்கல்கள்.... என்ரை கஸ்டங்கள்.... எதுவுமே புரியாது... அப்பு ராசா.... கொஞ்சநாள் பொறு.... எல்லாம் விளங்கும்..."

"வெளிநாடு என்றால் இப்படித்தான் இருக்கும்" என்று தங்களுக்குள்ளே முடிவாகிப்போன கற்பனைகளுடன் வருகிறவர்கள், அந்தக் கற்பனைக் கோடுகளை அழித்தொழிக்கும்மட்டும் எந்த யதார்த்த உண்மைகளும் அவர்களின் உணர்வுக்கு எட்டாதென்பதுதான் உண்மை. இதற்குச் சந்திரனும் விதிவிலக்கல்ல.

"அண்ணை.... என்னவோ உங்களை நம்பித்தான் இருக்கிறன்.... எனக்கு நீங்கள்தான் உதவி செய்யவேணும்..." மீண்டும் கெஞ்சினான். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையின் ஏற்பும், நிராகரிப்பும் எந்தவிதத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன- அவன் தொடர்ந்து வாழ்வதற்கான நகரமும் குடியிருப்பும் எந்தரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது புரியாத புதிராக, ஏதோ அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பாக நிகழ்வில் நிதர்சனத்தைப் பிரதிபலிக்கும் தோற்றத்தை ஏற்படுத்துகையில், சந்திரனின் கெஞ்சுதலுக்கு எப்படி உத்தரவாதம் கொடுப்பதென்று தடுமாறினான் சோதி.

நம்பிக்கைதானே வாழ்க்கை...?!

இன்று இருப்பது நாளை எங்கோ.... நாளை வருவது இன்று நினைத்துப் பாராதது என்றாகும்போது, போவதையும் வருவதையும் எதிர்நோக்கித் தடுமாறாமல் நிதானமாக இருப்பவன் வாழ்கிறான்- மற்றவன் வாழ்வதாக எண்ணி, தனக்குள் ஏற்படும் எண்ணங்களைக் கற்பனை கலந்த புளுகுகளாக வெளியே மற்றோர் முன்னிலையில் கக்கிக் கொட்டி தனக்குத்தானே பெருமைப்பட்டு ஏமாறுகிறான் அல்லது
மற்றவனுக்கு "வாழ்வு இதுதான்" என்று சொல்லிப் பலரைப் பரிகசித்துத் தானே கேலிக்குள்ளாகும் காட்சிப் பொருளாகிறான்.

"இதோ பார் சந்திரன்.... பதட்டப்படாதை.... ஊரிலை உனக்கு என்ன பிரச்சினை.... ஏன் ஜேர்மனிக்கு வந்தனீ எண்டதை ஒழுங்காய்ச் சொல்லு.... நீ இப்ப சொல்லுறதுதான் ஓரளவுக்காலும் நீ இந்த நாட்டிலை தொடர்ந்து வாழுறதுக்கு உதவி செய்யும்...."

தெரிந்தவற்றைக் கூறினான்.

"அண்ணை.... என்னெண்டு சொல்லுறது.... இன்னும் ரண்டு மூண்டு நாளிலை விசாரிப்பினமாம்..."

"ம்.... ஜேர்மனிக்கு வரத் தெரிஞ்சளவுக்கு, என்னத்துக்கு வந்ததெண்டு தெரியேலை... ஊரிலை இருந்து வெளிக்கிடேக்கை கொஞ்சமாலும் தெரிஞ்சுகொண்டு வாறேல்லையே..... தெரியாமை வந்து சிக்கலிலை மாட்டுப்பட்டுப்போட்டு.... பேந்து அவன் பிடிச்சனுப்ப வெளிக்கிடேக்கை அழுது புரளுறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை..."

"அண்ணை.... அனுப்புவாங்களோ....?" ஏக்கத்துடன் கேட்டான்.

"நானும் உன்னைப்போலை அகதிதான் சந்திரன்... இப்பிடி நடக்கலாம் எண்டாப்போலை நடக்கும் எண்டு எப்பிடிச் சொல்லேலும்... நீ ஊரிலை ஆமி பொலிஸாலை ஏதாலும் பிரச்சினைப்பட்டனியே....?"

"நான் கொழும்பிலை நாலைஞ்சு தரம் உள்ளுக்கை இருந்தனான்.... அதுகளைச் சொல்லட்டே...."

"அதுகளைத்தான் சொல்லவேணும்.... உன்னாலை சிறிலங்காவிலை வாழமுடியாதபடி என்ன பிரச்சினை எண்டு சொல்லவேணும்.... ஆதாரத்தோடை சொல்லவேணும்...."

"சொல்லுறன்.... என்ரை அப்பா வாகனங்களுக்குக் கீழை படுத்து, கொழுப்பு உடுப்புகளோடை வாயைக் கட்டி வயித்தைக் கட்டிக் கட்டின வீட்டையும் வளவையும் விட்டுபோட்டு வன்னிக்குப் போனதைச் சொல்லுறன்... விசாரணை எண்டு அப்பாவை "வூட்ஸ்" காலாலை உதைஞ்சு, அவரைச் சுடுகாட்டுக்கு அனுப்பின அரக்கர்களைப்பற்றிச் சொல்லுறன்.... மழையுக்கையும் வெயிலுக்கையும் பஞ்சத்தோடையும் நோயோடையும் வாழுற என்ரை தங்கச்சியளைப்பற்றி சொல்லுறன்.... கொழும்புக்கு வந்த என்னை சந்தேகத்திலை விசாரிக்கிறம் எண்டு பிடிச்சுக்கொண்டுபோய், வெலிக்கடைக்குள்ளையும் நாலாம் மாடியிலையும் வைச்சு ஆளுக்காள் அடிச்சு மிதிச்சாங்களே.... அதையும் சொல்லுறன் அண்ணை.... சொன்னால் இஞ்சை இருக்க விடுவாங்களே...."
இப்போது சோதி அழுதுவிடுவான் போலிருந்தது.

"சொல்லு.... உப்பிடியே சொல்லு.... உன்ரை வேதனை.... இயலாமை எல்லாத்தையும் சொல்லு..... அதுக்குப் பிறகு இஞ்சை இருக்கவிடுறது அவங்கடை விருப்பம்...."

"என்னண்ணை உப்பிடிச் சொல்லுறியள்...."

"உப்பிடிச் சொல்லுறதுதான் உண்மை.... அப்பிடிச் சொன்னால் அது கிடைக்கும்.... இப்பிடிச் செய்தால் இது கிடைக்கும் எண்டு சொல்லுறதெல்லாம் பொய் சந்திரன்.... சரி சரி.... உனக்குத்தான் ரெலிபோனிலை காசு போகுது.... விசாரணை முடிஞ்சு உன்னை வேறை இடத்துக்கு மாத்துவாங்கள்... அதுக்குப் பிறகு ரெலிபோன் எடு.... பயப்பிடாதை... அவையவைக்கு அளந்ததுதானே கிடைக்கும்...." என்று ஆறுதல் கூறினான் சோதி.

"சரி அண்ணை.... நான் பேந்து எடுக்கிறன்...."

 

சந்திரனை நினைக்கப் பாவமாக இருந்தது. ஆனால் உதவிசெய்ய முடியாத இயலாமையானது அன்னிய நாட்டின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, அனுதாபத்தோடுமட்டும் மட்டுப்பட வைத்தது.

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்.

மீண்டும் தொலைபேசி அலறல்.... மீண்டும் சந்திரன்....!

"அண்ணை.... நான் ஒரு நம்பர் தாறன்... அதுக்கு ரெலிபோன் எடுக்கிறியளே...."

"சொல்லு...."

கூறினான். எழுதிய சோதி அவனுடன் தொடர்புகொண்டான்.

"அண்ணை.... விசாரிச்சவங்கள்...."

"எல்லாம் சரியாய்ச் சொன்னனியே...?"

"சொன்னனான்.... "புறூவ்" கேட்டவங்கள்.... என்னட்டை எங்காலான் "புறூவ்"..."

"கொழும்பிலை உள்ளுக்கை இருந்தனெண்டாய்...."

"அந்தத் துண்டுகளையெல்லாம் கொண்டுவரேல்லை.... "ஏஜென்ஸி"க்காரன் எல்லாத்தையும் விட்டுப்போட்டு வரச் சொன்னதாலை... ஒண்டையுமே கொண்டு வரேலை.... இப்ப என்ன செய்யுறது...?"

"பேந்து எடுத்துத் தாறன் எண்டு சொல்லாதன்...."

"அப்பிடிச் சொல்லலாமே....?" என்று திருப்பிக் கேட்டவனின் அறியாமையை எண்ணித் தலையில் அடித்துக்கொண்டான் சோதி.

"என்னடாப்பா உப்பிடி விபரம் தெரியாத ஆளாய் இருக்கிறாய்…. மொழிபெயர்ப்பாளரிட்டை விபரம் கேக்காதன்...?"

"ஐயோ அண்ணை.... மொழிபெயர்ப்பாளர் சரியான பொல்லாதவன்.... ஜேர்மன்காரன் ஒரு கேள்வி கேட்டால்... இவன் ரண்டு கேள்வியெல்லே கேக்கிறான்.... பொய் சொல்லாதை.... உனக்கு அங்கை பிரச்சினை இல்லை.... இஞ்சை ஏன் வந்தனீ எண்டெல்லாம் கேட்டு வெருட்டுறவனிட்டையோ விபரம் கேக்கிறது...."

சந்திரன் அழ ஆரம்பிப்பதைக் குரல் இனங்காட்டியது.

"சரி சரி... எங்கடையள் சிலதுகள் உப்பிடிக் களிசறையளாய்த்தான் இருக்குதுகள்...."

வாழ வழியற்று வருவாய் தேடி வந்த பழைய தமிழன் ஒருவன் மொழிபெயர்ப்பாளர் என்ற பதவியை அதிகாரப் பொறுப்பாக எண்ணி, புகலிடம் தேடி வந்த புதிய தமிழனிடம் தனது "மேதாவித்தனத்தை" வெருட்டலூடாகத் தெரிவித்திருக்கிறான்.

அடுத்த மொழிபெயர்ப்புக்கான சந்தர்ப்பத்தை வரவழைக்கும் முன்னெடுப்பாகக்கூட இருக்கலாம். ஒரு தமிழனின் துரத்தலில் தமது இருப்பையும் வசதிகளையும் வாய்ப்புக்களையும் மேம்படுத்த முயலும் மொழிபெயர்ப்பாளர் கூட்டமொன்று "பிராங்பேர்ட்" விமான நிலையத்தில் உள்ளதென்ற காதில்விழும் செய்திகளுக்கு அத்தாட்சியாக ஒருவன் சந்திரனின் விசாரணையுள்ளும் புகுந்திருக்கிறான்.

"சந்திரன்.... புதுசா வாறவைக்கு ஒண்டுந் தெரியாது எண்ட நினைப்பிலை எங்கடையள் சிலது தாங்கள்தான் "விசா" தாறாக்கள்போலை எகிறிப் பாய்வினம்.... உதுகளுக்கெல்லாம் பயப்பிடாதை.... உங்களைப்போலை புதாக்கள் வாறதாலைதான் அவைக்கு பிழைப்பே
நடக்குது.... இல்லாட்டி மாடுமாதிரி வேலை செய்தால்தான் ஏதாலும் பிழைக்கலாம்...."

"உதெல்லாம் எனக்கெங்கை அண்ணை தெரியும்..... என்னவோ அண்ணை.... என்னை நம்பித்தான் ரண்டு சகோதரியள்.... நான் நல்லபடியா உழைச்சுக் கொடுப்பன் எண்ட நம்பிக்கையிலை வயசான அம்மா.... எல்லாரையும் நான்தான் பாக்கவேணும்...
எல்லாத்துக்கும் நான் உங்களை நம்பித்தான் இருக்கிறன்...." என்று விக்கலெடுத்து அழ ஆரம்பித்தான்.

"ஏண்டாப்பா இப்ப அழூறாய்.... அழூதாப்போலை எல்லாம் சரி வந்தூடுமே..... நல்லது நடக்குமெண்டு நம்பு... நம்பிக்கைதானே வாழ்க்கை...."

ஆறுதல் கூறமட்டுந்தான் முடிந்தது.

ஜேர்மனியைப் பொறுத்தவரையில் அரசியல் தஞ்சக் கோரிக்கையுடன் உட்புகுந்த தமிழர்கள் யாவருமே "அகதிகள்" என்றானபோது, அதற்குள் சிலர் தமது முயற்சியால் முன்னேற்றம் கண்டு முதலாளிகளாகவும், ஜேர்மன் பிரசைகளாகவும், சில சில்லறை உத்தியோகத்தர்களாகவும் மாறினாலும், இதன் பயனாகப் பொருளாதாரத்தையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தமக்குச் சாதகமாக்கிய எண்ணத்தில், தம்மைப் போலியாகச் சமூகத்தில் முன்னிறுத்தவென அற்ப அதிகாரமுள்ளவர்களாக அல்லது சொற்ப சலுகைகளுக்கு வழிகாட்டுபவர்களாக மாய்மாலம் காட்டினாலும், "அகதிகள்" என்ற முத்திரைக்கு உரித்தானவர்கள் என்ற உண்மையை எவ்வாறு துடைத்தழிக்க முடியும்?!

அதற்காக, "அகதிகள்"தானே என்ற எண்ணம் தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்து வாழாதிருக்கவும் முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லாவற்றுக்கும் என்றோ ஒருநாள் நல்ல தீர்வு என்ற விடியலுக்கான நம்பிக்கைதானே வாழ்தலுக்குண்டான பாடுபடுதலுக்கு ஊக்கமளிக்கிறது?! எனவே சோதியால் சந்திரனுக்கு நம்பிக்கையான வார்த்தைகளைத்தான் ஆறுதலாகக் கூறமுடிந்தது.

அந்த நகரின் ஒதுக்குப்புறமாக வெளிப்பார்வைக்குப் பாழடைந்த கட்டிடமாகத் தோற்றமளித்த அந்தக் கட்டிடக் கூட்டத்தைக் கண்டு பயந்துவிட்டான் சந்திரன்.

செங்கற்களாலான பழமைவாய்ந்த கட்டிடங்கள் அந்த வளவினுள் அடங்கியிருந்தன. பார்வைக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத் தளமொன்றைக் கண்முன்னே கொண்டுவந்தது.

உண்மைதான். கிழக்கு ஜேர்மனி சோவியத் யூனியனின் கீழ் இருந்தபோது அது இராணுவ முகாமாகத்தான் இருந்தது. தற்போது அரசியல் தஞ்சம்கோரி தாயகத்தில் இராணுவ அதிகாரத்துக்குள்ளால் தப்பி ஜேர்மனிக்குள் நுழையும் பல்வேறு நாட்டவரது வசிப்பிடம் அது.

ஒவ்வொரு நாட்டவர் ஒவ்வொரு கட்டிடமாகத் தங்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். அறைக்கு நான்கு கட்டில்கள். அறையின் இரு சுவர்க்கரை ஓரமாக இரண்டு இரட்டைக் கட்டில்கள் மேலும் கீழுமாக. அந்தக் கட்டில்களின் தற்காலிகச் சொந்தக்காரர்களாக நான்கு அகதிகள். அவ்வாறான ஒரு அறையில், அவ்வாறான கட்டில்களில் ஒன்று சந்திரனுக்கு. அவனுடன் சண்முகம், பாலன், சுதன் ஆகியோர் அவனது அறைக்காரர்களாக அமைந்தார்கள்.

அங்கே ஏறக்குறைய ஆயிரம் அகதிகளாவது வசித்தார்கள். அத்தனை பேருக்கும் உணவு வழங்கவென ஒரேயொரு சமையற்கூடம். அவர்களுக்கென வழங்கப்பட்ட கோப்பைகளுடன் வரிசையாக நின்று உணவைப் பெற்றாகவேண்டும். நேரம் தவறினால் பட்டினிதான்.

அதுமட்டுமல்ல.

அவர்களுக்கென்று புகைப்படத்துடன் கூடிய அட்டை. தினமும் அதில் அங்குள்ள அதிகாரியிடம் கையொப்பம் வாங்கியாக வேண்டும். இல்லையேல் சாப்பாட்டிலிருந்து உறங்கும் வசதிகளிலிருந்து பலவற்றுக்குப் பலவாறான இடையூறுகளை ஏற்படுத்தி, "எங்கே போனாய்? ஏன் போனாய்? அனுமதி எடுத்தா போனாய்? அகதியாக உயிருக்கு உத்தரவாதம் கேட்ட நீ, அதற்கும் மேலாக வெளியிடங்களுக்கு எப்படிச் செல்லலாம்?" என்பன போன்ற கேள்விகளால் குத்திக்குதறி அவர்களைக் குற்றவாளிகளாக்கிவிடுவார்கள் அங்குள்ள அதிகாரிகள்.

அந்த முகாமுக்கு வந்து, அங்கேயுள்ள கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுத்தபோது, புலம்பெயர்ந்து வந்த நாட்டில் மீண்டுமொரு சிறைக்குள் அகப்பட்ட பிரமையிலிருந்த மீள சந்திரனுக்குப் பல நாட்கள் எடுத்தன.

உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதக்கும் உரித்தாக ஒவ்வொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்வை வளமாக்குவதற்கு முயற்சி மூலதனமாகிறது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள். "இதுதான் பாதை... இப்படித்தான் அதில்தான் நடக்கவேண்டும்" என்று தீர்மானித்துச் செயற்பட்டால், சென்றடைய வேண்டிய இடத்தைச் சந்திக்கலாம் என்பது எல்லோருக்குமே பொதுவான செயற்பாடாக இருக்கும்போது, ஈழத் தமிழினத்துக்குமட்டும் ஏன் இது பொருந்தாமல் போயிற்று?! வாழலாம் என்று செல்லும் வழிகளில் திடீர் திடீரென்று வந்து விழுகின்ற இனவெறி, எதேச்சாதிகாரம், அடக்குமுறைகள் என்ற பாறாங்கற்கள் ஈழத்தமிழனை மேலெழவிடாமல் சின்னாபின்னப்படுத்தும் நிகழ்வுகளுக்கு என்றுதான் முடிவுவரும்?! அவனால் சிந்தித்து விடை காண முடியவில்லை.

ஊரில் அவனைக் கண்ணீருடன் கட்டித் தழுவி உச்சிமோர்ந்து வழியனுப்பி, எதிர்காலத்துக்கான நம்பிக்கைகளை மூட்டைகளாக மனதிலேற்றிக் காத்திருக்கும் அம்மா, அன்புச் சகோதரிகளின் நிலை தற்போது என்னவாக இருக்கும்?! சந்திரன் தங்களுக்கொரு விடிவெள்ளியாகி ஒளி காட்டுவான் என்ற எண்ணங்களைச் சுமக்கும் அந்த உறவுகளுக்கு, இந்தப் பெரிய கட்டிடங்களுக்குள் ஓர் அறையிலுள்ள கட்டிலில் முடங்க வைக்கப்பட்டிருக்கும் அவனால் ஏதாவது செய்ய முடியுமா?! எதிர்காலம் பயமுறுத்தியது. மனப்பாரங்கள் தீரக் குலுங்கிக் குலுங்கி அழவேண்டும் போலிருந்தது.

"இறைவா! ஏன் என்னை இப்படியாகப் படைத்தாய்...." என்று அரற்றித் தேம்பவேண்டும் போலிருந்தது.

அழுதால் பாரம் அழியுமா?!

"சந்திரன்... வாவன் வெளியாலை போவிட்டு வருவம்..."

"நான் வரேல்லை...."

"ம்... இப்பிடியே தலையணியைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு கட்டிலிலை கிடந்து யோசிச்சாப்போலை எல்லாம் சரி வருமே.... உப்பிடியே கிடந்து மனசைமட்டுமில்லை.... உடம்பையும் பழுதாக்கப் போறாய்..."

"நான் வரேல்லை...."

"உப்பிடியே சொல்லிக்கொண்டிரு.... உப்பிடியே கிடந்து என்ன செய்யப்போறியோ தெரியேல்லை.... வெளியாலைபோய் கொஞ்சம் உலாத்தினாலும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கும்...."

"நிம்மதி.... அது இந்த ஜென்மத்திலை வராது...." கலங்கினான் சந்திரன்.

"அதுக்காக.... கட்டிலிலை கிடந்தே வாழலாமெண்டு கனவு காணுறியா? இஞ்சை உனக்கு மட்டுமில்லை... எல்லாருக்குமே பிரச்சினைதான்... கஸ்டங்கள்தான்... கவலையள்தான்... எல்லாற்றை வாழ்க்கையும் எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமை வெறும் ஏக்கங்கள் நிறைந்ததாய்த்தான் இருக்கு.... அதுக்காக எதுவுமே சரிவராது எண்டு ஓய்ஞ்சு போனால்.... பேந்து வாழ்க்கையே ஓய்ஞ்சு போனமாதிரித்தான். இந்த நாட்டைப் பொறுத்தவரையிலை அவரவற்ரை வாழ்க்கை அவரவற்ரை கைகளிலைதான் தங்கியிருக்கு. இடையிலை ஆராரோ வருவார்கள்... ஆராரோ போவார்கள்.... அவர்களைச் சந்திச்சுக்கொண்டே நாங்கள் வாழ்வதற்காக ஓடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்... வெளியிலை இண்டைக்கு நல்ல வெய்யில் அடிக்குது... வாறதெண்டால் வா..." என்று அவனை உலுக்காத குறையாக அழைத்தான் சுதன்.

அங்கே வெளியே செல்வதானால்கூட கூட்டமாகத்தான் செல்ல வேண்டியிருந்தது. அந்த நகரிலுள்ள சிறுவர்களிலிருந்து முதியவர்கள்வரை இவர்கள் இந்த நாட்டுக்கு வேண்டப்படாதவர்கள். அவர்களின் தந்தையர் நாட்டுக்கு இடையூறுசெய்து அவர்களது நலன்களையும் வசதி வாய்ப்புகளையும் பாதிக்க வந்தவர்கள்.பார்வையாலே பச்சடி போட்டுவிடுவார்கள்.

சிறுவர்களோ கல் எடுத்து எறிந்து காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள்.

சந்திரனால் இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்க இயலவில்லை. பழகிக் கொண்டு வாழவும் அவன் தயாரில்லை என்பதுதான் உண்மை.

அன்று...

அம்மாவின் கடிதம் வந்திருந்தது. எத்தனையோ மைல்களுக்கப்பால் புதிய அறிமுகங்களுக்குள் வாழும் அவனுக்கு அம்மாவின் கடிதம் சுவாசக் காற்றாக மூச்சுத் தர, கடிதத்தைப் பிரித்து வாசித்தான். அவனின் சுகங்களுக்காக பற்பல தெய்வங்களைப் பிரார்த்தித்திருந்தாள். அவனின் கவலைகளுக்கு ஆறுதல் கூறி, தைரியம் சொல்லியிருந்தாள். அவன் அருகே இல்லாத பிரிவுத்துயரைப் பந்திபந்தியாகப் பகிர்ந்திருந்தாள். ஈற்றில் தனதும் மகள்மாரதும் சுமைகளைச் சொல்லியிருந்தாள். ஆனால், "நீ அதைச் செய்... இதைச் செய்" என்று அவள் எதையுமே கேட்கவில்லை. எனினும் அவள் பலதை அவனிடம் கேட்பதாக... எதிர்பார்ப்பதாக... நம்புவதாக அந்தக் கடிதம் எழுத்துக்களின்றி எடுத்தியம்பியது.

'சோதி அண்ணைக்குக் காட்டி, அவற்ரை இடத்துக்கு என்னை மாத்தும்படி கேக்கவேணும்...'

ஜேர்மனியின் நடைமுறைச் சிக்கல்கள் புரியாமல் தனக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டான்.

 

நாட்களுக்குத்தான் எத்தனை அவசரம்...?! கொஞ்சம் கொஞ்சமாகச் சந்திரன் அந்த முகாம் வாழ்வுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டான். பயம் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் இனசனம்.... உற்றம் சுற்றம்.... ஊர்… என்று நினைக்கும்போது பீறிட்டெழும் அழுகையைத்தான் கட்டுப்படுத்த இயலவில்லை.

"என்னடா நீ... எப்ப பாத்தாலும் அழுமூஞ்சியாய் இருக்கிறாய்… பொம்பிளையாய்ப் பிறக்க வேண்டிய நீ தவறி ஆம்பிளையாய் பிறந்துபோட்டாய்..."

நண்பர்களின் கேலிகள் கூட அவனுக்கு உறைக்கவில்லை.

ஒருநாள்....

வழமைபோல உணவு பெறுவதற்காக அந்த சமையல் கூடத்தின் முன்னால் கோப்பைகளுடன் நின்றிருந்தார்கள்.

இலங்கையர், ஆபிரிக்கர், அல்பானியர் என்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் எல்லோரும் முட்டிமோதிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு அதிகாரி அவர்களுக்கான அடையாள அட்டையில் கையொப்பமிட, வேறு நால்வர் உணவு வகைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் அட்டகாசமான சத்தத்துடன் வந்துகொண்டிருந்த இளைஞர் கூட்டத்தைப் பார்த்ததும் சந்திரனுக்கு உதறல் எடுத்தது.

அவர்கள் அல்பானியர்கள். அந்த முகாமில் "பியர்" போத்தல்களை உடைப்பதிலிருந்து, கத்தி காட்டி மிரட்டுவதுவரை அவர்களுக்குக் கைவந்த கலை.

அவர்கள் சந்திரனும் நண்பர்களும் நின்றிருந்த வரிசையின் இடையே புகுந்துகொள்ள முற்பட்டார்கள்.

"உவங்கள் எந்தநாளும் உந்த விளையாட்டுத்தான்... உள்ளுக்கை விடாதை..." என்று கத்தினான் சண்முகம்.

"ஓ... ஓ... ஆபிரிக்கன்காரங்கள் நிக்கிற வரிசையுக்கை போகப் பயம்.... எந்தநாளும் எங்களோடைதான் தனுகீனம்... இண்டைக்கு உவங்களை உள்ளுக்கை பூர விடக்கூடாது..." இது பாலன்.

அந்த அல்பானிய இளைஞர்கள் ஆக்ரோசத்துடன் கண்டபடி தங்கள் மொழியில் திட்டியவாறு இவர்களை இடறி விழுத்தியவாறு உட்புக முற்பட்டார்கள்.

ஆத்திரமடைந்த பாலன் ஒருவனைப் பிடித்திழுத்து வெளியே தள்ளினான்.

உடனே அந்த இடம் கூச்சலும் குழப்பமுமாயிற்று. கோப்பைகள் பறந்தன. இளைஞர்கள் கட்டிப் புரண்டார்கள். அதிகாரிகள் குறுக்கே பாய்ந்தார்கள்.

சம்பந்தப்பட்டவர்களைத் தரதரவென்று இழுத்துச் சென்றார்கள்.

"உவங்கள்தான் குறுக்கை வந்தவங்கள்..."

"எந்தநாளும் உப்பிடித்தான்..."

பாலனும் சுதனும் சண்முகமும் வேறு சில தமிழ் இளைஞர்களும் நடந்ததைக் கூறினார்கள். தெரிந்த வார்த்தையாலும் சைகையாலும் விளங்கப்படுத்த முயற்சித்தார்கள். அந்த அல்பானிய இளைஞர்களும் பதிலுக்கு இவர்களைக் குற்றம் சாட்டிக் கத்தினார்கள். நியாயங்கள் மொழியறிவின்மையால் எடுபடாமல் போயின.

இருதரப்பினரும் குற்றவாளியாகினார்கள். அன்று அவர்களுக்கு உணவு இல்லை.

அல்பானியர்கள் "பழி தீர்ப்போம்" என்பதுபோல் முறைத்தார்கள்.
 

சந்திரனுக்குத் தேகம் நடுங்கியது. எடுத்ததற்கெல்லாம் கத்தி எடுப்பவர்கள் அவர்கள். வீரமும் தீரமும் நிறைந்து இரத்தக் கறைகளைத் தாங்கும் கந்தகக் காற்றுவீசும் பூமியிலிருந்து வந்தவனானாலும், பயம் அவனுக்குள் பதுங்கியிருக்கும் ஒன்று. நண்பர்கள்மீது எரிச்சலாக வந்தது.

துட்டனைக் கண்டால் தூர விலகுவதுதானே?! இடையில் புகுந்தவங்களை மறிக்கப் போய்த்தானே இவ்வளவு வில்லங்கமும்?! அதுவும் ஒருவேளைச் சாப்பாட்டுக்காக....

"மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சாப்பாட்டுக்கா பஞ்சம்?!" முன்பு வந்து விசாக்களுடன் இருக்கும் தமிழர்கள் கேட்கலாம்! ஆனால் இங்கே....

ஒரு கோப்பைச் "சூப்"புத் தண்ணிக்கும் இரண்டு துண்டு பாணுக்கும் இந்தப் பிரச்சினை... இதே நிதமாகி, புலம்பெயர் வாழ்வாகி, இதற்குள்ளேயே இளமைகளும் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் தொலைந்து போய்விடுமோ?! சந்திரனின் பயம் இன்னும் அதிகமாகியது. பசி பயத்தில் பஞ்சாய்ப் பறந்துவிட்டது.

ஒரு சனிக்கிழமை மாலைநேரம்....

பிறந்தநாள் விழா ஒன்றுக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான் சோதி.

வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

சந்திரன் இன்னொரு இளைஞனுடன் நின்றிருந்தான். 
எதிர்பாராத வரவு.

வந்துவிட்டார்கள். வரவேற்றான்.

சந்திரனைப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. எண்பதுகளில் தாயகத்தைவிட்டு வெளியேறும் காலகட்டத்தில் சின்னஞ்சிறு சிறுவனாக அரைக்காற்சட்டையுடன் "சைக்கிள் ரயரை" உருட்டிக்கொண்டு ஓடித் திரிந்த சந்திரன், தற்போது சோதிக்கும் மேலாகவே வளர்ந்து இளைஞனாயிருந்தான். மீசை தாடிகூட அரும்பியும் அரும்பாமலுமாக ஆங்காங்கே துருத்திக்கொண்டிருந்தன.

"சந்திரன்.... உப்பிடி வளர்ந்திருப்பியெண்டு நான் நினைச்சுக்கூடப் பாக்கேலை.... உந்தப் பெரிய உருவத்தை வைச்சுக்கொண்டோ ரெலிபோனிலை சின்னப் பொடியன்மாதிரி அழுதனி?" என்று கேட்டதுதான் தாமதம், சந்திரனின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழங்களைப்போலச் சிவப்பாகிக் கண்ணீரைக் கன்னங்களில் வடிக்கத் தயாராகின.

"சந்திரன்... ஐயையோ.... நான் சும்மா பகிடிக்குக் கேட்டனான்..."

"அண்ணை... இவன் எந்தநேரம் பாத்தாலும் அழுகைதான்.... வீட்டிலை இருந்து காயிதம் ஏதாலும் வந்தால்.... அண்டுமுழுக்க சாப்பாடு தண்ணி ஒண்டும் இல்லை.... காயிதத்தையே பாத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பான்..." என்று அவனுடன் கூட வந்திருந்த இளைஞன் கூறினான்.

"சந்திரன்... இவரைப்பற்றி அறிமுகப்படுத்தன்..."

"என்னோடை "காம்ப்"பிலை இருக்கிறவன்... சண்முகம்..... தனிய வருறத்துக்குப் பயமா இருந்தது... அதுதான் கூட்டிக்கொண்டு வந்தனான்..."

"சந்திரன்.... நான் ஒருக்கா வெளியாலை போகவேணும்.... ரண்டு மூண்டு மணித்தியாலத்திலை வந்தீடுவன்... நீங்கள் ஓய்வெடுக்கிறதெண்டால் எடுக்கலாம்.... "ரீவி" பாக்கிறதெண்டால் பாக்கலாம்...."

சந்திரனின் முகம் வாடி இருண்டது.

"நான் உங்களைத் தேடி வந்திருக்கிறன்... நீங்கள் எங்களைத் தனியவிட்டுப்போட்டு எங்கையோ போறனெண்டு சொல்லுறியள்... நாங்கள் வந்தது பிடிக்கேலையே..." என்று திடீரென்று வந்த கேள்வியால் ஒருகணம் திகைத்துவிட்டான் சோதி.

"சந்திரன்... எத்தினையோ கிலோமீற்றருக்கு அங்காலை இருந்து வாறாய்... வாறத்துக்கு முந்தி ரெலிபோன் எடுத்துச் சொன்னனியோ... இல்லை.... உன்ரை நல்லகாலம்... நான் இப்ப வீட்டிலை நிண்டதாலை உள்ளுக்கை வந்தீட்டாய்…. நான் எங்கையாலும் வெளியாலை போயிருந்தால் என்ன செய்திருப்பாய்.... நாங்கள் வாறது பிடிக்காமையே வெளியாலை போனனி எண்டு கேக்கேலுமோ...?"

"நல்லாய்க் கதைக்கிறியள்..." அப்பாவியாகக் கூறினான் சந்திரன்.

"இஞ்சை ஒரு கொண்டாட்டம் நல்ல காரியம் எண்டால் போகவேணும். அப்பதான் அவையளும் எங்கடை நன்மை தீமையளுக்கு வருவினம். வெளிநாட்டைப் பொறுத்தவரையிலை தமிழாக்கள் எல்லாரும் ஒருவருக்கு ஒருவர் நண்பர்களாக.... அதுக்கும்மேலாக சொந்தக்காரரைப்போலைப் பழகவேணும்... தனிய இருந்து வாழலாம் எண்டு வீம்புக்குச் சொன்னாப்போலை... ஏதோ ஒரு க்டகாலத்திலை மற்றவேன்ரை உதவியைத் தேடவேண்டிய சந்தர்ப்பங்கள் கட்டாயம் ஏற்படும்.... ஊரெண்டால் பரவாயில்லை.... விலகிப்போனாலும் சொந்தங்கள் துரத்திப் பிடிச்சிழுக்கும்.... இஞ்சை அப்பிடியில்லை... தூரத்துச் சொந்தங்கள்கூட கண்ட புதிசிலை இரத்த உருத்துக்கள்போலை விழுந்துவிழுந்து வரவேற்றுப் பழகும்.... பழகிக்கொண்டே கண்ணுக்குத் தெரியாத நுணுக்குக்காட்டியளாய் என்ன
குறையள்... என்ன பலவீனங்கள் இருக்கெண்டு தேடும்.... தேடியதைக் கண்ணும் காதும் வைச்சுத் தைச்சு உருப்பெருக்கி அவலட்சணமாய் உருமாற்றும்.... கொஞ்சநாள் செல்ல சொந்தமெண்டு சொல்லிக்கொண்டே தாங்கள்தான் மேதாவியள்... தங்கடை சொல்லுக்குள்ளை மற்றவையள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எண்டமாதிரி காத்திலை கயிறு திரிக்க வெளிக்கிடுவினம்.... கயிறெண்டு சொல்லாட்டி
அவ்வளவுதான்.... ஏற்கெனவே உருமாற்றி உருப்பெருக்கி வைச்சிருக்கிற அவலட்சணத்தை வெளியிலை கொட்டிச் சிந்தி ஏப்பமிட வெளிக்கிடுவினம்.... உதுக்கும் பாக்க தமிழர் எண்ட ரீதியிலை சொந்தங்களுக்குள்ளாலை வெளிக்கிட்டு சொந்தங்கள்போலை பழகினால்.... அது எப்பவுமே உதவும்..." அனுபவம் அவனது பேச்சில் குந்திக் குதித்தது.

"ம்.... என்னவோ சொல்லுங்க.... கேக்கிறன்..." சலித்துக்கொண்டான் சந்திரன்.

"பழகப் பழகத்தான் உனக்கு உதெல்லாம் புரியும்... சரி சந்திரன்.... நான் போவிட்டு வாறன்... குறை நினையாதை... உன்ரை வீடுமாதிரி... முகத்தைக் கழுவிப்போட்டு ஓய்வெடு.... பசிச்சால் பாண் இருக்கு... நான் வந்தபேந்து சமைக்கலாம்... ஆருக்காலும் ரெலிபோன் எடுக்க வேணுமானால்... வெக்கப்படாமை எடுத்துக் கதை... என்ன..." வெளிக்கிட்டான்.

ஐந்து மணிக்கு ஆரம்பமாகிவிடும் என்று அழைத்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஒருவாறாக ஏழுமணிக்கு ஆரம்பமாகியது.

"தமிழாக்களின்ரை எந்த விசேசமெண்டாலும் உப்பிடித்தான். எப்பவும் தாமதம்.... அதொரு தமிழற்ரை பண்பாடாப்போச்சு" என்றொரு முனகல். அதை முந்திக்கொண்டு "உப்பிடிக் கதைக்கிறவையே தாமதமாய் வரேக்கை, என்னெண்டு நேரத்துக்குத் தொடங்க ஏலும்?! சனமில்லாட்டி கொண்டாட்டம் கொண்டாட்டமாயே இருக்கும்?" என்றொரு குரல் வழக்கம்போலவே எழுந்தது.

'சொல்லிக்கொண்டே இருப்போம்.... செய்கை என்று வரும்போது ஆயிரம் காரணங்களை அருகே இழுத்துக் காட்டுவோம்.' மனதிற்குள் எண்ணிக்கொண்டான் சோதி.
 

பிறந்தநாள் விழா முடிவடைய இரவு பத்துமணிக்கு மேலாகிவிட்டது. வீட்டில் இரு விருந்தாளிகள் பசியுடன் காத்திருப்பார்கள். அதுவும் "ரண்டு மூண்டு மணித்தியாலத்தில் வாறன் எண்டவனை இவ்வளவு நேரமாய் காணேல்லையே" என்று எரிச்சலுடன் புறுபுறுக்கப்போகும் சந்திரன் நினைவுக்கு வர வீட்டைநோக்கி விரைந்தான் சோதி. உள்ளே நுழைந்தவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அலங்கோலமாக இறைந்து கிடந்த ஆடைகளெல்லாம் அந்தந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சுத்தம் அங்கே சுதந்திரமாக உலாவியது.

 

சந்திரனும் சண்முகமும் ரீவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு ஏதாவது உணவு தயாரிப்பதற்காகச் சமையலறைக்குள் சென்றான். அங்கே எல்லாம் தயாராக இருந்தது. எல்லாம் சந்திரனின் கைங்கரியம். உரிமையோடு செய்திருக்கிறான். செய்கையில் அவனுடனான நெருக்கத்தை உணர்த்தியிருக்கிறான். 

"சந்திரன்... என்ன இது... நான் வந்து சமைச்சிருப்பன்தானே... உன்னை ஆர் இதையெல்லாம் செய்யச் சொன்னது..."

"நீங்கள்தானே இது உன்ரை வீடுமாதிரி எண்டு சொல்லிப்போட்டுப் போனனீங்கள்... என்ரை வீடெண்டால் உப்பிடித்தான் துப்புரவாய் இருக்கும்.... ஊரிலை எண்டால் விடியவெள்ளண்ண எழும்பி, வேலிக் கறையான் தட்டி, முற்றத்திலை இருக்கிற சருகுகளைக்கூட்டித் தண்ணி தெளிக்கேக்கை எழும்புற புழுதி மணம் மூக்குக்கை புகுந்தால்தான், எனக்கு விடிஞ்சமாதிரி இருக்கும்.... விடியக் காலத்தாலை அம்மா தாற பழஞ்சோத்துத் தண்ணி.... மாட்டுமாலுக்கை இருந்து தலையாட்டிக் கூப்பிடுற சிவப்பி மாடு... என்ரை சகோதரங்கள்... இவை எல்லாரையும் விட்டுப்போட்டு இப்ப ஒரு அறையுக்கை எதையுமே செய்ய ஏலாமை ஏதோ சாப்பாடெண்ட பேரிலை அவங்கள் தாற "சூப்"பையும் பாணையும் அதக்கிக்கொண்டு.... ஊரிலை அதுகள் என்ன செய்யுதுகளோ தெரியேலை...." அழத் தயாராகிவிட்டான்.

"அண்ணை... நான் பிறந்ததிலை இருந்து அம்மா ஒரு இடத்திலை ஓய்வாய் இருந்ததை நான் பாத்ததே இல்லை.... எங்கடை கஸ்டத்தோடை போராட உழைச்சுக்கொண்டே இருந்தா... இப்பகூட இந்த வயசான நேரத்திலைகூட உழைச்சுக்கொண்டுதான் இருக்கிறா.... அவவுக்கு நான் ஓய்வு கொடுக்கவேணும்... என்ரை அம்மாவை ஒரு இடத்திலை இருத்திவைச்சு நான் சோறு போடவேணும்.... என்ரை சகோதரங்களுக்கு நல்ல வழிகாட்டவேணும்.... முடியுமா... எனக்கென்னவோ பயமாக் கிடக்கு...."

சோதிக்குச் சங்கடமாக இருந்தது.

கஸ்டப்படுகிறவர்களைத்தான் கஸ்டங்களும் விரும்பிச் செல்கின்றனவோ?!

"கவலைப்படாதை சந்திரன்.... எல்லாருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு எண்டு நம்பு... நம்பிக்கைதான் வாழ்க்கை... இப்ப எல்லாரும் சாப்பிடுவம்... வாங்கோ..." 

சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தானே உணவு பரிமாற அடம்பிடித்து, எல்லோருக்குமாய் பரிமாற ஆரம்பித்தான் சந்திரன்.

"சந்திரன்... இனி நாங்களாய் எடுத்துச் சாப்பிடுவம்.... நீ இப்ப உதிலை இருந்து எங்களோடை சாப்பிடு...."

"நான் பேந்து சாப்பிடுறன் அண்ணை...."

"பேந்தோ.... சும்மா உந்தச் சில்லறை விசயங்களுக்கெல்லாம் பிடிவாதம் பிடிக்காமைச் சாப்பிடு..." என்று வலுக்கட்டாயமாக அவனையும் உணவருந்துவதற்காக உட்காரவைத்தான் சந்திரன்.

"சண்முகம்.... நீங்கள் ஜேர்மனிக்கு வந்து எவ்வளவு காலம்?"

"ரண்டு வருசம் முடிஞ்சுபோச்சு.... இந்த ரண்டு வருசமாய் அந்த முகாம் எனக்குப் பழகிப்போச்சு.... புதிசாய் வந்தமூட்டம் நானும்
சந்திரனைப்போலைதான் நல்லாய்ப் பயந்துபோனன். ஏண்டா இஞ்சை வந்தம் எண்டு அடிக்கடி நினைச்சுக்கொண்டன்.... இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வாழ்க்கையோ தெரியேலை... வாழ்க்கை இப்பிடியே அர்த்தமில்லாமை அடங்கி ஒடுங்கிப் போய்க்கொண்டிருக்குது.... நாகரீகத்திலை, தொழில் நுட்ப விஞ்ஞானங்களிலை வளர்ச்சியடைந்த நாடெண்டு சொல்லீனம்... ஆனா எங்கடை பகுதியிலை வசிக்கிற ஜேர்மன் சனங்களின்ரை மனங்களிலை மனித நேயத்தின்ரை வளர்ச்சி கொஞ்சங்கூட இல்லையெண்டுதான் சொல்லவேணும்.... சாடையாய் இருட்டின பிறகு றோட்டாலை தனியப் போகேலாது.... பெரியாக்களிலை இருந்து சின்னஞ்
சிறிசுகள்வரை ஏதோ ஒரு இழிவான பிராணியைப் பாக்கிறமாதிரிப் பாத்து.... வார்த்தையளாலை கொல்லாமைக் கொல்லுறமாதிரி ஏசுவாங்கள்.... சிலவேளை கண்டபடி தாக்குவாங்கள்.... சின்னன்கள்கூட தூரத்திலை நிண்டு கல்லுகளாலை எறியும்.... அதாலை இரவுவேளைகளிலை நாங்கள் தனியப் போறேல்லை. நாலைஞ்சு பேராய்ச் சேர்ந்துதான் திரியிறனாங்கள்... இந்த நிலமையிலை எங்கடை
குடும்பக் கஸ்டங்களுக்காக, ஏதாலும் வேலை கிடைச்சால் இரவு பகல் பாராமைச் செய்யத்தான்வேணும்.... அப்ப வேலை முடிஞ்சு இரவு நேரங்களிலை தனிய வரேக்கை அடி உதைகளை வாங்கிக்கொண்டுதான் வரவேணும்.... வேலை எண்டாலும் ஆராலும் இத்தாலிக்காரங்களின்ரை "றெஸ்ரோரண்ட்"களிலைதான் கிடைக்கும். அதுவும் மாடுமாதிரி வேலை செய்யவேணும். மணித்தியாலம் மூண்டு மார்க் கிடைச்சாலே பெரிய விசயம்...."

அகதியாகச் சுமைகளுடன் வரும் வெளிநாட்டவரின் தேவைகளையும், இயலாமைகளையும் தமக்கு இரையாக்கி இலாபமீட்டும் முதலாளி முதலைகள்.... இவர்களுக்கு இரையாக இந்தச் சண்முகத்தைப்போல எத்தனையோ தமிழீழ இளைஞர்கள்....!

தமிழா! நீ எங்கு சென்றாலும் உனக்குக் கிடைப்பது நக்குத்தண்ணிதானா?!

தமிழனின் தலைமீது திணிக்கப்படும் வாழ்தலுக்கான சுமைகள் யாவும் தூசிகளாகப் பறந்தோடும் காலம் என்றாவதொரு நாள் விடிவென்ற பெயரில் அண்மிக்காமலா போய்விடும்?! 

நிறத்துவேசத்தைப் பொறுத்தவரையில் ஜேர்மனியின் சகல பாகங்களிலுமே அது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. கிழக்கு ஜேர்மனியில் வெளிப்படையாகத் தெரியும் துவேச உணர்வானது மேற்கில் மறைமுகமாக வெளிநாட்டவரது, குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாட்டவரது மனங்களை ரணங்களாக்குவதைப் பரவலாகவே அவதானித்திருக்கிறான் சோதி.

கடைகளுக்குச் சென்று சாமான் வாங்கிவிட்டுப் பணத்தைச் செலுத்தினால் மிகுதிக் காசைக் கைகளில் தரமாட்டார்கள். வஸ் வண்டிகளில் பக்கத்தில் அமர மாட்டார்கள். காலை வணக்கம் கூறினால் பதில் கிடைப்பது வெகுவெகு அரிது. அத்துடன் உண்மையான கருத்துகளையோ, விளக்கங்களையோ அல்லது ஆலோசனைகளையோ கூற முற்பட்டால்கூட, "உனக்கென்ன தெரியும்?" என்ற அலட்சியம் பலரது பார்வைகளில் தோன்றி மறையும். ஆக, துவேச உணர்வு பல வடிவங்களில் பதம் பார்க்கின்றன என்பதுதான் உண்மை.

"உப்பிடி றோட்டாலை போய்வரேக்கை நடக்கிற பிரச்சினையளைப்பற்றி பொலிஸ்காரரிட்டை இல்லாட்டி சம்பந்தப்பட்ட அதிகாரியளிட்டைச் சொல்லலாந்தானே..." என்று கேட்டான் சோதி.

"ம்..... சொல்லாமலே இருக்கிறம்.... இண்டைக்கு அந்த முகாமிலை இருக்கிற எல்லாருமே அனேகமாய் ஏதோ ஒருவிதத்திலை தாக்கப்பட்டிருக்கிறம்.... எத்தனையோ தடவை அவங்களிட்டைச் சொல்லியிருக்கிறம்.... ஆனா எல்லாம் செவிடன் காதிலை ஊதின சங்குமாதிரித்தான்.... சிலவேளை "நீங்களேன் வெளியிலை போனனீங்கள்… சாப்பிட்டுவிட்டு முகாமுக்கை இருக்க வேண்டியதுதானே" எண்டு எங்களிலையே குற்றம்சாட்டி ஏறிப்பாய்வாங்கள்.... இந்த நிலமையிலை எங்களாலை என்ன செய்யேலும்? அகதியாய் அடைக்கலம் தேடின நாட்டிலையும் எந்தநேரம் என்ன நடக்குமோ எண்ட அல்லலோடை வாழுறதுதான் எங்கடை வாடிக்கையான வாழ்க்கையாய்ப்போச்சு. குட்டக்குட்ட குனிஞ்சு நாங்கள் இண்டைக்கு மனம் உடல் ரண்டாலையும் பாதிக்கப்பட்டு, இவர்களின்ரை பரிகாசத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறம் எண்டதுதான் உண்மையான விசயம்..." என்று பெருமூச்சுடன் கூறினான் சண்முகம்.

ööö
 

டவுள் கிருபையால் முன்னிட்டு வாழும் அன்புள்ள தம்பி சோதி அறிவது!

உங்கள் சுகங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எனது மகன் சந்திரனின் கடிதம் போன கிழமை வந்தது. அதை வாசித்ததில் இருந்து எனக்கு நிம்மதி இல்லை. சதா அவனுடைய எண்ணமும் கவலையுமாக இருக்கிறது. அதனால் இதுகளுக்கெல்லாம் உங்கள் மூலமாவது ஏதாவது தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தினசரி சோதனை என்றும் சந்தேகத்துக்கு உரியவர்கள் என்றும் விசாரணைகள் என்றும் இங்கு வாழும் இளம் பிள்ளைகளை ஆமிக்காரர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உபாதைக்கு உள்ளாக்குவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எத்தனையோ நூற்றுக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகள் எதிர்கால வாழ்வு என்னவென்று தெரியாதவர்களாக, வாழ்வு சிதறிச் சின்னாபின்னமானவர்களாக, வாழ்வைத் தொலைத்தவர்களாக இந்த மண்ணிலிருந்து காணாமல் போயும், இந்த மண்ணுக்குள்அமிழ்ந்து எலும்புக்கூடுகளாயும், விசாரணைகளோ குற்றங்களோ இல்லாத நிலையில் சிறைக்கம்பிகளுக்குள்ளும் உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நானும் என்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் கஸ்டப்பட்டாலும் பரவாயில்லை- எனது ஆண்பிள்ளையாவது இந்த ஆள்பிடிப்புகளுக்கு உள்ளாலும் சித்திரவதைகளுக்குள்ளாலும் ஓடித் தப்ப வேண்டும் என்றுதான் அவனை உங்கே அனுப்பினேன். இவன் உங்கே ஒரு நல்ல நிலைக்கு வந்தால், அதன் பின்னர் என்னுடைய பெண் பிள்ளைகளுக்கும் ஒரு வாழ்வு வரும் என்றும் நம்பினேன். ஆனால் என் எண்ணங்கள் எல்லாமே பாழாகும்போலிருக்கிறது. சந்திரனின் கடிதத்தைப் பார்த்ததில் இருந்து நாங்கள் நிம்மதியில்லாமல் தவிக்கிறோம்.

என்னுடைய பிள்ளை ஊரில் இருந்தபோது சோதனை, விசாரணை அது இதென்று வாங்காத அடி இல்லை. பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. வெளிநாட்டுக்கு வெளிக்கிட என்று கொழும்புக்கு வந்த பிறகும் அவன் நிம்மதியாய் இருக்கவில்லை.

நாலைந்து தரம் சந்தேகப் பேர்வழி என்று வெலிக்கடைச் சிறைச்சாலையிலேயும் நாலாம் மாடியிலேயும் அனுபவிக்காத சித்திரவதைகள் இல்லை. அவன் வாங்கிய அடிகள் அவனுக்குள்ளிருந்து என்னென்ன வருத்தங்களை எதிர்காலத்தில் அவனுக்குக் கொடுக்கப்போகின்றனவோ என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். இதுதான் இலங்கையில் தமிழராய்ப் பிறந்த எங்களுடைய தலையெழுத்தாய் மாறிவிட்டது என்றால், உங்கேயும் தினமும் பயந்துபயந்து நிரந்தரமில்லாமல் வாழவேண்டிக் கிடக்கென்று அவன் எழுதும்போது எப்படி எங்களால் தாங்கிக் கொள்ளமுடியும்?!

அதுதான் தம்பி, பெற்ற மனம் பொறுக்க முடியாமல் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உங்களை என்னுடைய மகனாகப் பாவித்து உரிமையோடு கெஞ்சிக் கேட்கிறேன். சந்திரனை அவனிருக்கிற இடத்திலிருந்து உங்களுடைய இடத்துக்கு மாற்றி, அவனுக்கு ஏதாவது வேலை எடுத்துக் கொடுத்து உதவிசெய்ய உங்களால்மட்டுமே முடியும் என மனதார நம்புகிறேன். உங்களுடைய சிரமத்தைப்
பாராமல் இந்த உதவியைச்செய்து எங்களுடைய வாழ்க்கைக்கு ஒளி காட்டுவீர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
தயவுசெய்து குறை நினைக்காமல் இந்த உதவிமூலமாக எங்களின் வாழ்வுக்கு ஒரு நம்பிக்கையை, ஒரு பிடிப்பை ஏற்படுத்துவீர்கள் என நினைக்கிறேன்.

உங்களது சுகங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, இத்துடன் இக் கடிதத்தை முடிக்கிறேன்.
 

அன்புடன்,
ம.மீனாட்சி

ஒரு தாயின் நம்பிக்கையான வேண்டுகோள்... ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கான தகுதிகள் தனக்கு இல்லாத இயலாமையுடன் தடுமாறினான் சோதி. சந்திரனைப்போல எத்தனை இளைஞர்களைக் கண்டிருப்பான்.... உயிருக்கு உத்தரவாதம் என்ற தேடலில் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைத்தவர்களாக....! வாழ்வில் தட்டுப்படும் தடைகளைத் தகர்த்து, தாங்களும் வசந்தங்களைத் தேடிக் குடும்பமாகி, குவலயத்தில் சந்ததிகளின் தோற்றத்தைத் தரிசிக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கழியும் வருடங்களைக் கணக்குப் பார்ப்பவர்களாக...!!

 

"நீங்கள் அகதிகளாக வந்தவர்கள்... குறித்த காலத்துக்கு வேலை செய்யக்கூடாது... அப்படிக் காலம் கடந்தாலும் அனுமதித்த வேலைகளையே செய்யலாம்.... குறிப்பிட்ட எல்லைகளுள் தான் உங்கள் நடமாட்டம் இருக்கவேண்டும்.... விரும்பிய இடத்தில் விரும்பிய சொந்தங்களுடன் சேர்ந்து வாழக்கூடாது.... மீறினால் குற்றவாளிகளாக்கி, அதையே காரணமாக்கி தாயகத்துக்கு திருப்பி அனுப்பிவிடுவோம்" என்று சொல்லாமல் பயமுறுத்தும் சட்டங்களின் முன்னால் சந்திரனால் எவ்வாறு அந்தத் தாயின் நம்பிக்கைகளுக்கு
உரம் சேர்க்கமுடியும்?! அவனுக்குப் புரியவில்லை. எனினும், அந்தத் தாயின் நம்பிக்கைகள் நாசமாகாதவாறு ஏதாவது செய்துதானாக வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

ööö

ங்கு எல்லோர் வாயிலும் இதே கதையாகத்தான் இருந்தது. எல்லோரது முகங்களிலும் பயமும் ஏக்கமும் அப்பட்டமாகத் தெரிந்தது. "இருபது பேரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்." "அதுவும் ஜேர்மன் அதிகாரிகள் கூட்டிச்சென்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவர்களை ஒப்படைத்திருக்கிறார்கள்... அங்கை சீஐடி பொலிஸார் அவர்களை விசாரிச்சிருக்கினம்.... தாக்கியிருக்கினம்... நீதிமன்றத்திலை ஒப்படைச்சிருக்கினம்..." நிகழ்ந்து முடிந்த செய்தி பயங்கரமாகப் பயமுறுத்தியது.

ஒன்று இரண்டாக அனுப்பியவர்கள் குழுக்களாகச் சேர்த்து அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். "எங்களையும் அனுப்புவாங்களே...." ஒவ்வொருவருடைய மனதிலும் முளைவிட்ட கேள்வி நெஞ்சத்தை முள்ளாகக் குத்திக் குடைந்தது.

திருப்பி அனுப்பினால், அங்கே எப்படி வாழப்போகிறோம்...?! மீண்டும் இராணுவக் கெடுபிடிகள்.... விசாரணைகள்... கைதுகள்.... சித்திரவதைகள்.... இடப்பெயர்வுகள்... பட்டினியான நாட்கள்... நோய்கள்… இத்தனைக்கும்மேலாக ஜேர்மனிக்கு வரவென்று செலவழித்த பணத்துக்கான கடன் தொல்லை.... இவ்வளவையும் சுமந்துகொண்டு தாயகத்தில் வாழமுடியுமா....?! வழமையாக உற்சாகத்துடன்
காணப்படும் சண்முகநாதன்கூடச் சோர்ந்திருந்தான். ஒருவருக்குப் பிரச்சனை என்றால் மற்றவர் ஆறுதல் கூறலாம். எல்லோருக்குமே பொதுவான பிரச்சனை என்றால் எவருக்கு எவரால் ஆறுதல் கூறமுடியும்?!

"அந்தப் பிளேனிலை நூற்றிநாப்பத்தைஞ்சு தமிழரும் சேர்ந்து போனவையாம்..."

"என்ன..."

"ஓ... சிறீ லங்காவுக்குச் சுற்றுலாவாக..." வெறுப்புடன் கூறினான் பாலன்.

"பிரச்சினை எண்டு வந்த நூற்றிநாப்பத்தைஞ்சு பேருக்குப் பிரச்சினை இல்லை... சுற்றுலாப் போகினம்... இருபது பேருக்குப் பிரச்சினை எண்டால் நம்புவாங்களே...?" "ஆபத்து அந்தரமெண்டால் போகாமை இருக்கேலாதுதான்... ஆனால் கனபேர் சொந்தக்காரரின்ரை பிறந்தநாள் கலியாணவீடு எண்டெல்லாம் போறதுதான் எங்களுக்குச் செய்யுற அநியாயம்...."

"அவை எல்லாம் ஜேர்மனிக்கு வரேக்கை அங்கை வாழ வழியில்லை எண்டுதானே வந்தவை... இப்ப ஏதோ வசதியான விசா கிடைச்ச உடனை வாழவழி வந்திட்டுது எண்டபோலை பறக்கினம்..."

"முதல்லை உவையளைப் பிடிச்சு அனுப்பவேணும்..." ஆத்திரமுற்றான் சுதன்.

"அவையையும் ஒருநாள் அனுப்பத்தான் போறாங்கள்... இப்ப போறவையைப் போகவிட்டுப் புள்ளிவிபரம் எடுக்கிறாங்கள்..." சில வசதிகளைப் பெற்றவுடன் பலருக்குப் பழையநிலை மறந்துபோகிறது. அதனால் மற்றவர்களுக்குப் பாதிப்பு என்பதை அறிந்தும், அதைப்பற்றிச் சிறிதளவும் கருத்திலெடுக்க முடியாமற் போகிறது.

"தான்மட்டும் வாழ்ந்தால் போதும், மற்றவன் எப்படிப் போனால் என்ன" என்ற போக்கே மிதமிஞ்சிக் காணப்படுகிறது. ஜேர்மனிக்குள் புகும்போது தமிழன், தமிழினம், தமிழர் பிரச்சினை என்று வாக்குமூலங்களில் எழுதியவைகள் யாவுமே வசதியான விசாக்களினால் வெறும் வார்த்தைகளாக அடிபட்டுப் போய்விட்டன என்பதுதான் உண்மை.

"அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான்" என்பார்கள். இதைத்தான் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களில் பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் ஈழத் தமிழனின் முன்னெடுப்புகளுக்கான தடைக் கல்லோ?! இந்தத் தடைக் கல்லைத் தகர்த்தெறியக் கூடிய சாத்தியம் ஏற்பட்டு, தாயக அவலங்களுக்குள்ளால் தப்பித்து உயிர்த் தஞ்சம் கோரி வரும் ஆயிரமாயிரம் தமிழர்களின் வாழ்வு பாதுகாப்பாகுமா? இப்படியான எண்ணங்கள் அந்த முகாமிலுள்ள தமிழர்களின் எண்ணங்களில் சுற்றிச்சுழன்று கொண்டிருந்தன.

சந்திரன் தொலைபேசியில் அழுதான். "அண்ணை.... அவசரமாய் உங்கை நான் வரவேணும்..."

"நாளைக்கு வேலையடா.... பின்னேரந்தான் வருவன்..."

"ஐயோ.... அண்ணை! என்ரை அவசரம் தெரியாமைக் கதைக்கிறியள்.... எல்லாம் முடிஞ்சு போச்சண்ணை.... நான் இனி மருந்து குடிச்சுத்தான் சாகவேணும்..." என்று தேம்பியழ ஆரம்பித்தான்.

"சந்திரன்.... எதுக்கும் பயப்பிடாதை.... உப்பிடி எல்லாம் நினையாதை. சரி... என்ரை சிநேகிதன் குமாரிட்டைச் சொல்லிப்போட்டுப் போறன். நீ வந்து "வானோவ்"விலை நில். குமார் அங்கை வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருவான்..."

"நாளைக்குக் காலமை சரியாப் பத்து மணிக்கு அங்கை வந்தீடுவன். பத்து மணிக்கு "ஸ்டேசனி"லை வந்து நிக்கச் சொல்லுங்கோ.... என்னைக் குமாருக்குத் தெரியுமே...?"

"நல்ல வாட்டசாட்டமான கறுவல் எண்டு சொன்னனான்... கண்டு பிடிச்சூடுவான்..." என்று நகைப்புடன் கூறினான் சோதி.

"உங்களுக்கு என்ரை நிலமை தெரியாமை விளையாட்டாய் கிடக்கு..." தொலைபேசியில் சினந்தான்.

"சந்திரன்.... கோவிக்காதையடா... சும்மா பகிடிக்குச் சொன்னனான்.... கவலையள் எல்லாருக்கும் இருக்குதான்... அதுக்காக எந்தநேரமும் சிணுங்கிக்கொண்டே இருக்கிறது.... எதுக்கும் மனந்தளராமை வா... எல்லாம் வெல்லலாம் எண்டு நினைச்சுக்கொண்டு வா" என்று அவனுக்குத் தைரியம் கூறி, "ரிசீவரை" வைத்தான் சோதி.

மறுநாள்....

குமார் சந்திரனை அழைத்துக்கொண்டு வந்தான்.

"என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க்கிடக்கு? சுகமில்லையே?" என்று தெரியாத பாவனையில் கேட்டான் சோதி.

"ஆள் நல்லாய் அழுதுபோட்டார்...." சந்திரனை முந்திக்கொண்டு கூறினான் குமார்.

"இவளவும் நடந்துபோச்சு.... அழாமை என்ன செய்யுறது?" என்று கேட்டான் சந்திரன்.

"என்ன அப்பிடி நடந்துபோச்சு.... உங்கை கன ஆக்களுக்கு நடந்தமாதிரி உனக்கும் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டிருக்கும்.... உதுக்கு வாழ்க்கையே போச்செண்டமாதிரி நினைக்கிறாய்.... உப்பிடியான கவலையள் எல்லாருக்கும் பழகிப்போனவை சந்திரன்..."

"ம்.... உதிலைதான் அண்ணை என்ரை குடும்பத்தின்ரை வாழ்க்கையே இருக்கு.... அதுகள் என்ரை நம்பிக்கையிலைதானண்ணை வாழுதுகள்.... இஞ்சை பாருங்க.... "பாஸ்போட்"டை எடுத்துக்கொண்டு வா, நாட்டுக்குத் திருப்பி அனுப்ப எண்டு ஒரு மாத விசா தந்திருக்கிறாங்கள்" என்று அந்தக் கடதாசியைத் தூக்கிக் காட்டினான் சந்திரன்.

இவனைப்போல எத்தனை தமிழர்களின் கைகளில் இந்தத் துண்டு விசா திணிக்கப்பட்டுப் பயமுறுத்துகின்றன?!

உண்மையான பிரச்சினைகளுடன் வாழ வந்தவர்களுக்கு இந்த நாடு காட்டும் பரிவின் வடிவம் இந்த நிலையில் பாசாங்காக அமைவதை எவரால் கேள்விகேட்டுத் தடுத்து நிறுத்தமுடியும்?! சந்திரனின் தாயாரது கடிதமும் அதில் கண்ட கோரிக்கைகளும் சோதியின் மனதைக் குடைய ஆரம்பித்தன. "அந்தத் தாய்க்கு எந்தவகையில் உதவிசெய்து வாழ்தலுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறேன்?" 

"மாத இறுதியில் அவனது பணம் வரும்" என்ற நம்பிக்கையில் தாயகத்தில் காத்திருக்கும் பெற்றோர் கண்முன் வந்தனர்.

அவர்களுக்கு அனுப்புவதா? அல்லது இவனுக்கு இம்முறை உதவுவதா? தற்போது இவனது பிரச்சினை முன்னால் பூதமாக வந்து விசுவரூபம் எடுத்துப் பயமுறுத்துகிறது.

அந்தப் பூதத்தை ஓட விரட்டுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து செயற்படுவதுதான் முக்கியம். "சந்திரன்.... நல்ல வக்கீல் ஆரையாலும் தொடர்புகொண்டு ஒழுங்கான விசாவுக்கு முயற்சிக்கலாம்.... இல்லாட்டி வேறை ஏதாலும் ஒரு நாட்டுக்குப்போய் அங்கை பாதுகாப்பும் முன்னேற்றமும் கிடைக்குமா எண்டு முயற்சிக்கலாம்.... இதுதான் இஞ்சை புதிசாய் வாறாக்களுக்கு முன்னாலை தெரியுற வழியள்.... இவையள் சரியான பாதையளா.. இல்லாட்டிப் பிழையான பாதையளா எண்டு தெரியாமைத்தான் எல்லாரும் போகிறார்கள்.... பத்துப் பதினைஞ்சு வருசங்களுக்கு முந்தி வந்தாக்களும் இப்பிடித்தான்.... சின்னச்சின்ன சலுகையளும் வசதியளும்தான் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ற பாதையள் எண்ட நம்பிக்கையிலை போய்க்கொண்டிருக்கினம்… உலகத்திலை அகதியளாயோ இல்லாட்டி வேறைவிதமாயோ வாழுற தமிழாக்களின்ரை பயணங்கள் எல்லாமே இதுதான் பாதை எண்டு போற பாதை தெரியாத பயணங்கள்தான்…. சிலவேளை குருட்டுவாக்கிலை சில சலுகைகளோ வசதியளோ கிடைக்கலாம்.... அதாலை சிலதுகளைச் செய்யக்கூடியதாக இருக்கலாம். எண்டாலும் எங்களுக்காய்க் கிடைக்கிற நாட்டிலைதான் எங்கடை பயணங்கள் பாதையை அறிந்தவையாக இருக்கும். இப்ப சந்திரன்.... வக்கீலை வைக்கிறதா இல்லாட்டி வேறை நாட்டுக்குப் போறதா எண்டதை நீதான் தீர்மானிக்கவேணும்.... அதுக்கான உதவியை நான் செய்யுறன்..." என்று கூறிய சோதியைக் கண்கள் பனிக்கப் பார்த்தான் சந்திரன்.

ööö

புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் வர மறுத்தது. மேல் கட்டில் இடைக்கிடை கிறீச்சிட்டது. மேலே படுத்திருந்த பாலனுக்குக்கூடத் தூக்கம் வரவில்லைபோலும். "வேறு நாட்டுக்குப் போகலாமா அல்லது நல்லதொரு வக்கீலை வைத்து வாதாடலாமா? நல்ல வக்கீல் என்றால்... ஆரிடம் கேட்பது?!" சிந்தனைகள் தூக்கத்தைத் தூரவிலக்கிச் சுற்றிச்சுழன்றன. இவ்வாறு நீண்ட நேரமாகத் தூக்கமின்றிப் புரளும் அனுபவம் ஊரில்கூட ஒருமுறை நிகழ்ந்தது சந்திரனின் நினைவுக்கு வந்தது.

"டேய் தம்பி... உங்கா... அந்தச் சனியனை அடிச்சுத் துரத்தடா... ஒண்டும் வைக்க எடுக்க வழியில்லை..." என்று கத்தினாள் மீனாட்சி.

"என்னத்தை அம்மா..."

"என்னத்தையோ.... அந்தக் கறுத்தக் கோழியைத்தான்... மளமளவெண்டு அவிச்சுப்போட்ட நெல்லை எல்லாம் தின்னுது... நீ உங்கை என்ன செய்யிறாய்..."

சந்திரனின் தாய் முற்றத்தில் நெல் அவித்துப் போட்டிருந்தாள்.
 

அயல்வீட்டுக்குப் புதிதாக இடம்பெயர்ந்து வந்திருந்த சின்னத்தம்பியருடைய கறுத்தக் கோழி, உக்கியிருந்த வேலிப் பொட்டுக்குள்ளால் புகுந்துவந்து நெல்லைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்து வந்தவர்களுடன் ஆடு மாடு கோழிகள்கூட இடம்பெயர்ந்துவிட்டனபோலும்! பக்கத்திலிருந்த விளக்குமாற்றை எடுத்துக் கோழியை நோக்கி ஓங்கி எறிய, விளக்குமாற்று ஈர்க்குக் குச்சிகள் கட்டைவிட்டுச் சிதறிச் சிந்தின.

"ம்... கோழியைக் கலைக்கச் சொன்னால் விளக்குமாற்றைப் பிய்ச்சுப்போட்டு நிக்கிறாய்..."

தாயின் கத்தலினூடே பக்கத்து வீட்டு வேலியடியிலிருந்து "கல கல" சிரிப்பொலி அடக்கமுடியாமல் சிறிதாக எழுந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். வேலிக்கப்பால் ஒரு கறுப்புச் சந்திரன் அரைகுறையாகத் தெரிந்து மறைந்தது.

"சின்னத்தம்பியற்ரை மகளோ?!"

"என்ன பெயர்...?!"

அறிய ஆவலாக இருந்தது. மூர்த்தியிடம் கேட்கலாந்தான். "ஏன், எதற்கு" என்று விசாரிப்பான். பிறகு அதுக்கும் மேலேபோய் "காதலா..." என்று கேட்டாலும் கேட்பான். ச்சீ.... காதலா.... பார்த்தவுடன் காதலா...?! என்றாலும் அவளைப்பற்றி விசாரிக்கவேண்டும். சில நாட்களாக அவளே அவனுள் சுற்றிச்சுற்றி வந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை.... முருகன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தான்.

பின்னால் ஏதோ அரவம்... திரும்பிப் பார்த்தான். அவள்தான்.... பாவாடைத் தாவணியில்.... பயத்தால் முகம் வியர்த்தது.

"ஒருவேலைக்கு இருவேலை பாப்பீங்கள்போலை...." மெதுவாகச் சிரிப்புடன் கூறியவாறு விறுவிறென்று போய்க்கொண்டிருந்தாள். 'கோழிக்கு விளக்குமாற்றால் எறிந்ததைத்தான் சொல்லுகிறாள்...' ஏளனம் செய்கிறாளா? அல்லது அறிமுகத்துக்காக அதைக் கூறினாளா? 'என்ன பெயரெண்டு கேட்டிருக்கலாம்...'

சரி... மூர்த்தியிடமே கேட்டுவிடலாம்.சற்றுத் துணிவு வந்தது. எனினும் தயக்கமாகவும் இருந்தது. எனினும் கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானிப்பதற்கிடையில் மேலும் ஒரு வாரம் கழிந்தது. விடிய எழுந்து 'இன்று எப்படியாவது அவளுடைய பெயரை அறியவேண்டும்' என்று முடிவெடுத்தபோது, பக்கத்து வீட்டில் இருந்து கூக்குரல் எழுந்தது. என்னவோ ஏதோவென்று மீனாட்சியும் அவனும் அயலவர்களும் சின்னத்தம்பியர் வீட்டில் நிறைந்தார்கள்.

அவள்... அந்தக் கறுத்த நிலா... பெயர் சாந்தாவாம். சாந்தா நாட்டின் விடுதலைக்காகப் போராடச் சென்றுவிட்டாளாம். பிரிவுத் துயர் தாங்காமல் பெற்றவர் கதறிக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு சந்திரனுக்கு வெகுநேரமாகத் தூக்கம் வரவில்லை. சாந்தா பாவாடைத் தாவணி... இராணுவச் சீருடை என்று மாறிமாறி வந்துகொண்டிருந்தாள். அதற்குப் பிறகு தற்போது இந்த ஜேர்மனியில் தூக்கமின்றிப் புரண்டுகொண்டிருந்தான்.

அப்போது அறைக் கதவுக்கு வெளியே யாரோ சிலர் நடமாடுவதுபோலிருந்தது. கூடவே மெல்லிய பேச்சொலிகள்.... 'யாராயிருக்கும்....' என்று எழும்புவதற்குள் திடீரெனக் கதவை உதைத்துத் திறந்துகொண்டு நான்கைந்து உருவங்கள் அந்தக் காரிருளில் அவர்கள்மேலே பாய்ந்தன. 'என்ன, ஏது' என்று நிலைமையைப் புரிந்துகொள்வதற்குள் அவனது முகத்திலும் வயிற்றிலும் குத்துகள் மாறிமாறி விழுந்தன. வெகுநேரமாக அந்த அறைத் தமிழ் இளைஞர்களின் அவலக் குரல்கள் அந்தச் செங்கல் கட்டிடமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

ööö

தொலைபேசி மணி ஒலித்தது.

"ஹலோ.... நான் சோதி..."

"அண்ணை! நான் சண்முகம் கதைக்கிறன்..." சோதியின் கண்கள் அவனையும் அறியாமல் கலங்க ஆரம்பித்தன.

எதை மறக்க முயன்றானோ, அதை மீண்டும் நினைவூட்டும் வகையில் சண்முகத்தின் தொலைபேசி அழைப்பு....

"அண்ணை! சந்திரன்ரை தொண்ணூறாவது நாள் வரூது...."

"ம்...."

"அதுதான் உங்களுக்குத் தெரிஞ்சாக்கள் ஆரிட்டையாலும் 'கொம்பியூட்டர்' இருந்தால் ஒரு நினைவாஞ்சலி அடிக்கவேணும்...."

நேற்றிருந்தமாதிரி இருக்கிறது. அதற்கிடையில் சந்திரன் மறைந்து தொண்ணூறு நாட்களாகப் போகிறது. அவன் இறந்ததை இப்பொழுதும்கூட நம்பமுடியவில்லை. அந்தக் கரிய நெடிய உருவம்.... அதற்குள் உள்ள பயந்த குழந்தைத்தனமான சுபாவம்.... அவனுக்கா அப்படி ஒரு முடிவு?! அப்படியான பயங்கரமான உயிர்த்துறப்பு...?!

"அம்மாவைக் கடைசிக் காலத்திலையாவது கண்கலங்காமை, கஸ்டப்படாமைக் காப்பாத்த வேணும்" என அடிக்கடி சொல்லுவானே.... சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டானே....

அந்தச் சந்திரன் இன்று இல்லை. புலம்பெயர்ந்து வந்த நாடு அவனது அஸ்தியைத் தாங்கிவிட்டது. 'சந்திரன் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டான்!' எவ்வளவு பயங்கரமான செய்தி?! ஏன் அவ்வாறானதொரு முடிவைத் தேடினான்? வாழ வழி தெரியாமலா? பொறுப்புகளைக் கண்டு அஞ்சியதாலா? மீண்டும் தாயகத்தைச் சந்திக்கப்போகும் பயத்தினாலா? அல்லது இத்தனைக்கும் மேலாகத் தனது முடிவு ஏனைய தமிழர்களுக்கு இந்த நாட்டில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினாலா? தெரியவில்லை.

"என்ன அண்ணை யோசிக்கிறியள்...?"

"ம்... அஞ்சலி எழுதி என்ன வரப்போகுது.... எல்லாம் முடிஞ்சு போன கதையான பேந்து உதுகள் எல்லாம் எதுக்கு?"

"அவனுக்காக என்னவாலும் செய்யவேணும்போலை இருக்கண்ணை.... எங்களிட்டைக் காசு பணம் இல்லை… உப்பிடியாலும் ஒரு திருப்திக்குத்தான்...."

"காசிருந்தால்போலை.... எவ்வளவு காலத்துக்கு அவன்ரை குடும்பத்தைக் கவனிக்கேலும்?"
பெருமூச்சுடன் கூறினான் சோதி.

"அண்ணை.... உங்களிட்டை சந்திரன்ரை நல்ல படம் ஏதாலும் இருக்கே...."

அப்போதுதான் சந்திரனும் தானும் சேர்ந்து ஒரு 'போட்டோ'வாவது எடுக்காதது சோதியின் நினைவுக்கு வந்தது.

(நிறையும்.)
(2000)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கொஞ்சம் நீளமாய்க் கிடக்குது! கொஞ்சம், கொஞ்சமாய் வாசிப்பம் எண்டு தொடங்கி, நிறுத்த முடியாமலே வாசித்து முடித்துவிட்டேன்!

 

இஞ்சையும் கொஞ்ச 'முழி பெயர்ப்பாளர்கள்' இப்பிடித் தான்! ஏதோ, தங்கட நாடு மாதிரியும், ஒரு குற்றவாளியைக் குறுக்கு விசாரணை செய்பவர்கள் மாதிரியும் தான் நடந்து கொள்வார்கள்!

 

சந்திரனின் முடிவு, சிறுவயதில் தலைமீது சுமத்தப்படும் சுமைகளின் பாரத்தால் ஏற்பட்டதா,அல்லது சொந்தங்களைத் தொலைத்து விட்டு வாடும் தனிமையால் ஏற்பட்டதா, அல்லது எல்லாமே கலந்ததன் விளைவா என்று தெளிவாகக் கூறமுடியாவிட்டாலும், பொதுவாக 'அகதி' என்ற வார்த்தைக்குள் அடங்கும் அனைவருக்குமே, உங்கள் கதை பொருந்துகின்றது!

 

எனக்கு ஒரு சின்னப்பிரச்சனையையும் உங்கள் கதை விட்டுச்செல்கின்றது, சோழியன்!

 

'சந்திரன்' நான் எழுதும் கதைகளின் கதாநாயகனாக இதுவரை இருந்தான்!'

 

இனி நானும் ஒரு கதாநாயகனைத் தேட வேண்டும்! :D

Link to comment
Share on other sites

கதை நீளமாக இருப்பதால் பொறுமையாக வாசிப்பார்களோ என்ற சந்தேகத்துடன்தான் இங்கே பதிந்துள்ளேன்.  :D

 

எனினும் புங்கையூரானின் முதல் கருத்தால் ஏனைய உறவுகளும் வாசித்து கருத்தளிப்பார்கள் என நம்புகிறேன். மிக்க நன்றி புங்கையூரான்.  :)

Link to comment
Share on other sites

அகதி வாழ்வின் அனைத்து அத்தியாயங்களையும் அலசுகின்றது கதை. புலம்பெயர்ந்து வந்த பெரும்பாலானோர்

இப்படியான சம்பவங்களை நிச்சயம் கடந்திருப்பார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அதனாலோ என்னவோ... இக்கதை  எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

கதையின் நகர்வும் எழுதப்பட்ட விதமும் பொறுமையாக கதையைப் படித்து முடிக்கத் தூண்டுகின்றது.

 

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சோழியன் :)

Link to comment
Share on other sites

நன்றி கவிதை.

ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க, ஜேர்மனியில் தஞ்சம் கோருவோரது அனுபவங்கள் வித்தியாசமானவை என நினைக்கிறேன். அதிலும், கிழக்கு மேற்கு ஜேர்மனிகளின் இணைப்பின் பின்னர் புதிதாக வரும் அகதிகள் புதுப் புதுப் பிரச்சினைகளுக்கும் ஆளானார்கள். அவைகளையும் பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கில் விளைந்ததே இக்கதை ஆகும்.

 

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக மிக நன்றி!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடியான கதைகள் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போனதில இதை இரசிச்சுத் தொடர்ந்து வாசிக்க முடியாது போய் விட்டது சோழியன். பழையனவற்றைப் போடாது புதிதாக எழுதுங்கோவன். எழுதத் தெரிந்தவருக்கு என்ன பஞ்சி??????

Link to comment
Share on other sites

கதை, கவிதை என்றால் கொஞ்சம் பின்னுக்கு நிற்பேன்.. ஆனால் இதை ஒரே மூச்சில் படிக்க வைத்துவிட்டன இந்தக்கதையின் கருப்பொருளும், உங்கள் எழுத்துக்களும்.. சந்திரன் தனக்குத்தானே தீமூட்டி தனது உறவுகளின் நம்பிக்கைகளுக்கும் தீமூட்டிவிட்டானே என்பது அதிர்ச்சி..!

Link to comment
Share on other sites

புதிதாக எழுதினாலும் அவைகளும் அனுபமாகத்தானே இருக்கும்.  :D  புதிய கதைகளை எழுத ஆசைதான். முயற்சிக்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!!  :D

Link to comment
Share on other sites

கதை, கவிதை என்றால் கொஞ்சம் பின்னுக்கு நிற்பேன்.. ஆனால் இதை ஒரே மூச்சில் படிக்க வைத்துவிட்டன இந்தக்கதையின் கருப்பொருளும், உங்கள் எழுத்துக்களும்.. சந்திரன் தனக்குத்தானே தீமூட்டி தனது உறவுகளின் நம்பிக்கைகளுக்கும் தீமூட்டிவிட்டானே என்பது அதிர்ச்சி..!

 

இந்தக் கதையின் முடிவில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், இப்படியான முடிவு சுவிஸ் நாட்டில் முன்னர் ஏற்பட்டதுதான். இது நான் கேள்விப்பட்ட பல சம்பவங்களின் தொகுப்புத்தான்.  வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் சோழி. நான் அப்போதிருந்த மனநிலையில் கதையை முழுவதும் வாசிக்கவில்லை. இப்ப வாசித்துவிட்டேன்.முதல் எழுதிய கருத்துக்காக வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் சோழி. நான் அப்போதிருந்த மனநிலையில் கதையை முழுவதும் வாசிக்கவில்லை. இப்ப வாசித்துவிட்டேன்.முதல் எழுதிய கருத்துக்காக வருந்துகிறேன்.

 

இதில் மன்னிப்பு கேட்க எதுவுமே இல்லை. அறிந்த விடயங்களை எழுத்தில் வாசிக்கும்போது சலிப்பு ஏற்படுவது இயற்கைதான். எனது ஆசை என்னவென்றால் எங்கள் வாழ்வை எதிர்காலத்தில் அறிய முற்படுபவர்களுக்கு எனது கதைகளும் உதவ வேண்டும் என்பதுதான். அதற்கு உங்களைப் போன்ற தமிழ் வாசிப்பில் அக்கறையுள்ளவர்களது கருத்துகள்மட்டுமே உற்சாகமளிப்பவை. அதனால் மீண்டும் நன்றி!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை யை அடுத்தது என்ன என்ற உயிரோட்டத்தோடு வாசிக்க வைத்து  விட்டது  புதிய இடமும் தனிமையும் எம்மவர்களை மிகவும் வாட்டியது .இப்படியானவர்களின் மன  நிலை பலரை மன  நோயாளிகள் ஆக்கியது . அதிலும் வென்று வாழ்கிறார்கள் பலர் ...கதை ப் பகிர்வுக்கு   நன்றி

Link to comment
Share on other sites

சோழியனின் கதை என்றால் நான் முன்பு விரும்பிப் படிப்பது வழக்கம் . இந்த நாவல் புலம் பெயர் அவலங்களை நன்றாகவே படம் பிடித்துக் காட்டி நிற்கின்றது . ஒவொரு நாட்டிலும் புலம் பெயர் அனுபவங்கள் பல உண்டு . அதை அனுபவப் பதிவாக வெளிக்கொண்டு வருவது அவசியம் .  எனக்கு நல்ல கதை படித்ததில் முழுத் திருப்தியே ஏற்பட்டது . வாழ்த்துக்கள் சோழியன் .

 

Link to comment
Share on other sites

கதை யை அடுத்தது என்ன என்ற உயிரோட்டத்தோடு வாசிக்க வைத்து  விட்டது  புதிய இடமும் தனிமையும் எம்மவர்களை மிகவும் வாட்டியது .இப்படியானவர்களின் மன  நிலை பலரை மன  நோயாளிகள் ஆக்கியது . அதிலும் வென்று வாழ்கிறார்கள் பலர் ...கதை ப் பகிர்வுக்கு   நன்றி

 

80களில் மேற்கு ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியவர்களது அனுபவத்துக்கும், 90களில் ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி கிழக்கு ஜேர்மனியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களது அனுபவத்துக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. பல நாட்டு அகதிகளுடன் முரண்படும் நிலமைமட்டுமல்ல, கிழக்கு ஜேர்மனி மக்களது நிறத்துவேசத்துக்கும் ஆளாகவேண்டிய நிலையில் அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருந்தது.

 

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சகோதரி!!

Link to comment
Share on other sites

சோழியனின் கதை என்றால் நான் முன்பு விரும்பிப் படிப்பது வழக்கம் . இந்த நாவல் புலம் பெயர் அவலங்களை நன்றாகவே படம் பிடித்துக் காட்டி நிற்கின்றது . ஒவொரு நாட்டிலும் புலம் பெயர் அனுபவங்கள் பல உண்டு . அதை அனுபவப் பதிவாக வெளிக்கொண்டு வருவது அவசியம் .  எனக்கு நல்ல கதை படித்ததில் முழுத் திருப்தியே ஏற்பட்டது . வாழ்த்துக்கள் சோழியன் .

 

மிக மிக நன்றி கோமகன்!!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.