Jump to content

அமெரிக்கா, இலங்கையில் ஓர் இராணுவத் தளத்தை நிறுவ முற்படுகிறதா? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Indian%20Ocean%20map.jpg

கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி, ஜக்கிய நாடுகள் சபையின், இலங்கைக்கான முன்னைநாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான தாமரா மணிமேகலை குணநாயகம், அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளின் மீது உண்மையான ஆர்வம் எதனையும் கொண்டிருக்கவில்லை மாறாக, தங்களது மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான ஒரு கருவியாகவே மனித உரிமை விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார். 

அமெரிக்காவின் இறுதி இலக்கு மனித உரிமைகளோ அல்லது தமிழ் மக்களுக்கான உரிமைகளோ இல்லை மாறாக, அவர்களது உண்மையான இலக்கு இப்பகுதியில் காலூன்றுவதேயாகும் என்று குறிப்பிட்டிருக்கும் தாமரா மேலும், ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு பிராந்திய ரீதியான இராணுவ தளங்களின் தேவைப்பாடுள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கையை மாலைதீவு நிராகரித்துவிட்டது. இந்த நிலையிலேயே அமெரிக்கா அதற்கான சாத்தியப்பாடுகளை இலங்கையில் ஆராய்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார். 

இது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் முன்னெடுக்கப்படும், சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்குவது அத்துடன், இந்திய மற்றும் சீனாவிற்கிடையிலான மேலாதிக்க கூட்டுக்களை தடுக்கும் நோக்கிலான ஆசிய மையக் கொள்கையின் இலக்காகும் [barak Obama's Pivot to Asia Policy 2012, which seeks to contain China and prevent a hegemonic alliance between China and India] என்றும் தாமரா குறிப்பிட்டிருக்கின்றார். 

இலங்கையை ஒரு தோல்வியடைந்த நாடாக காட்டுவதன் ஊடாக, தங்களுக்கான சலுகைகளை அதிகரித்துக்கொள்ள முடியுமென்பதே அமெரிக்காவின் திட்டம் என்றும் தாமரா தனது நேர்காணலில் தெரிவித்திருக்கின்றார். 

தாமரா குணநாயகம் தற்போதைய மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செல்வாக்கை, அனைத்துலக அரங்கில் தூக்கிநிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் ஒருவர். அந்த வகையில் அவரது கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் ஊன்றி கவனிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் ஆசியாவின் பக்கம் உலகம் தன் கண்களை திருப்பியிருக்கின்ற சூழலில், அமெரிக்காவின் ஆர்வங்கள் அதிகரித்து வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. 

கடந்த சில வருடங்களாக உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் புவிசார் அரசியல் விவாதங்களில், இந்திய மாக்கடல் பிராந்தியம் தொடர்பான கரிசனை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆசியாவில் எழுச்சியடைந்து வரும் சீனா தொடர்பான வாதப்பிரதி வாதங்களே, மேற்படி விவாதங்களில் காணப்படும் பொதுத் தன்மையாகும். 

அமெரிக்காவினதும் அதன் முக்கிய மூலோபாய பங்காளிகளான பிரித்தானியா, யப்பான், அவுஸ்திரேலியா அரசுகளின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அனைத்திலும், இந்த விடயத்தை தெளிவாக அவதானிக்க முடிகிறது. பென்ரகனின் நான்காண்டுகால பாதுகாப்பு மீளாய்வு [Quadrennial Defense Review - QDR] 2009 இற்கான அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு வெள்ளை அறிக்கை [Australia’s 2009 Defence White Paper] யப்பானின் 2011ம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பிற்கான கொள்கை வழிகாட்டி [Japan’s 2011 National Defense Policy Guidelines] ஆகிய அனைத்திலும் இந்திய மாக்கடல்பிராந்தியத்தின் பாதுகாப்பே முக்கிய விடயமாக நோக்கப்பட்டிருக்கின்றது. 

இந்திய மாக்கடல் பிராந்தியம் என்பது, பிரதான கடற் பாதைகளான மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா ஆகியவற்றை ஜரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் பகுதியாகும். இது பொருளாதார அரசியல் மற்றும் மூலோபாய ரீதியாக உலகின் முக்கியமான கடல் பகுதி. இரண்டு பில்லியன் மக்களை தொடர்புபடுத்தும் வகையில் 36 நாடுகளின் எல்லையை இணைக்கும் ஒரு கடல் மார்க்கமாக, இப்பிராந்தியம் விளங்குகின்றது. மேலும் 11 கரையோர (hinterland) நாடுகள் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆர்வங்களின் அடிப்படையில், இப்பிராந்தியத்துடன் இறுக்கமான தொடர்பை கொண்டிருக்கின்றன. பெருந்தொகையான இயற்கை வளங்கள், பெறுமதியான தாதுப் பொருட்கள், ஆடை உற்பத்தி மற்றும் கடல் உணவு ஆகியவற்றுக்கு இப்பிராந்தியம் சொந்தமானது. 

அந்த வகையில் உலகின் 80 வீதமான தங்கம் 52 வீதமான தகரம், 28 வீதமான மாங்கனிசு (manganese)> 25 வீதமான நிக்கெல் (Nickel), 18 வீதமான பக்சைட் (bauxite), 12 வீதமான சினிக் (zinc), மேலும் 77 வீதமான இயற்கையான இறப்பர் உற்பத்தி ஆகியன இப்பிராந்தியத்தில் இருந்து கிடைப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. 

பல அணுவாயுத பலமுள்ள அரசுகள் மற்றும் அணுவாயுத ஆற்றலை பெறவேண்டுமென்னும் இலக்குடைய நாடுகளை உட்கொண்டிருக்கும் இப் பிராந்தியமானது, உலகின் 40 வீதமான எண்னை உற்பத்தி பரிமாறப்படும் பாதையாகவும் இருக்கின்றது. அதே வேளை உலகின் 50 வீதமான எண்ணை மற்றும் எரிவாயு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடமாகவும் இருக்கிறது. யப்பானின் 80 வீதமான எண்ணை விநியோகமும், சீனாவின் 60 வீதமான எண்ணை விநியோகமும் மேற்படி, இந்திய மாக்கடல்கடல் வழியாகவே இடம்பெறுகின்றது. மேலும், தோல்வி அடைந்த நாடுகள், பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் ஆகிவற்றுக்கான இல்லமாகவும், இப்பிராந்தியமே நோக்கப்படுகிறது. 

எனவே இத்தகையதொரு பிராந்தியத்தில், இரண்டாம் உலக யுத்தத்தின் போது முக்கிய தொடர்பாடல் மையமாக பயன்படுத்தப்பட்ட இலங்கையின் மீது, உலக வல்லரசுகள் ஆர்வம் கொண்டிருக்கும் என்னும் வாதம் நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல. அந்த வகையில், தாமரா குணநாயகம் குறிப்பிடுவது போல் அமெரிக்கா இராணுவ விரிவாக்கத்திற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்கின்றதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால், அதற்கான சாத்தியப்பாட்டை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. 

அந்த வகையில் அதற்கான புற நிலைமைகளையே இக்கட்டுரை ஆராய விளைகிறது. 

இவ்வாறு தாமரா குணநாயகம் குறிப்பிடுவதற்கு பிறிதொரு காரணமும் உண்டு. இந்திய மாக்கடல் பிராந்தியத்தை கண்காணிப்பதற்கான அமெரிக்காவின் மிக முக்கிய கடற்படைதளமான டியாகோகார்சியா தளத்திற்கான (Diego Garcia base) உடன்பாடு 2016ம் ஆண்டுடன் நிறைவுபெறுகிறது. 1966ல் பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு அமைவாக. அமொரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுவரும் முக்கிய கடற் படைத்தளமான டியாகோகார்சியா தளம், அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுக்கு மாற்றப்படலாம் என்றும் சில அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவானது, 27 சிறிய பவளத் தீவுகளை (Small coral islands) உள்ளடக்கியிருக்கிறது. டியாகோகார்சிகா தீவிற்கு கிழக்காக, 2700 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மேற்படி தீவுகள், அவுஸ்திரேலிய - இலங்கை கடற்பரப்பின் அரைப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 

இந்த பின்னனியில்தான் சமீப காலமாக அமெரிக்க - அவுஸ்திரேலிய மூலோபாய நெருக்கம் அதிகரித்து வருவதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இது பற்றி பதிவிட்டிருக்கும் வோசிங்டன் போஸ்ட், இத்தளம், மனிதர்கள் ஊடாக கண்காணிக்கப்படும் விமானங்களை பயன்படுத்துவதற்கு மட்டுமன்றி, அதியுயரத்தில் பறந்து கண்காணிக்கும் ஆளில்லாத உளவு விமானங்களை பயன்படுத்துவதற்கும் ஏற்றவாறான ஒரு சிறந்த தளமாகும் (Ideal site) என்று அழுத்தியிருக்கிறது. இந்த பின்னணியில்தான் அமெரிக்கா இலங்கையில் ஒரு தளத்தை உருவாக்கிக்கொள்ளவும் முயற்சிக்கலாம் என்னும் கருத்து சிலர் மத்தியில் தோன்றிருக்கிறது. 

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை நோக்கும் போது, இவ்வாறான கருத்துக்களை எழுந்தமானமாக புறம்தள்ள முடியாது. இலங்கை அதன் புவியமைவிட அர்த்தத்தில், இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையிலான கடல்சார் நகர்வுகளில் முக்கிய பங்குவகிக்கக் கூடிய ஒரு நாடாகும். 

இலங்கையின் அமைவிடம் கொமூஸ் நீரிணைக்கும் (Strait of Homuz) மலாக்கா நீரினைக்கும் (Strait of Malacca) அண்ணளவாக 2000 கிலோமீற்றரில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இலங்கை இந்தோனேசியாவிற்கும் பாரசீக வளை குடாவிற்கும் இடையிலான மிக முக்கிய மத்திய கடற்போக்குவரத்துப் பகுதியில் அமைந்திருக்கிறது. மேலும், இந்திய மாக்கடலின் பிரச்சனைக்குரிய பகுதிகள் சந்திக்கும் மிக முக்கிய மையப்பகுதியிலும் இலங்கையின் அமைவிடம் பொருந்திப்போகிறது. 

1991ன் வளைகுடா (Gulf war) யுத்தத்தின் போதும் பின்னர், 1980 இல் ஈரான் - ஆப்கானிஸ்தான் நெருக்கடியின் போதும், ஏனைய பகுதிகளில் இருந்து இராணுவ தளபாடங்கள் நகர்த்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இலங்கையில் ஒரு கடற்படை நிலைகொண்டிருந்தது. இந்த பின்னணியில் நோக்கினால், இலங்கை உலக வல்லரசுகளின் இராணுவ தந்திரோபாய வட்டத்திற்குள் உள்ளடக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

வரலாற்று ரீதியாக நோக்கினாலும் 17ம் நூற்றாண்டிலிருந்து இலங்கை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்சியர், ஆங்கிலேயர் என பல அதிகார விரிவாக்கல் போட்டியாளர்களின் பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க –  சோவியத் பனிப்போர் காலத்திலும் இலங்கை இராணுவ பயன்பாட்டின் பொருளில் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றிருந்தது. 

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தமது கடற்படை மோலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கான போட்டியில் சோவியத்தும், அமெரிக்காவும் போட்டியிட்டுக் கொண்டிருந்த காலத்தில், இலங்கையில் தங்களுக்கென கடற்படை தளங்களை உருவாக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் ஈடுபட்டிருக்கின்றனர். எனினும் இந்திய அழுத்தம் அத்துடன் இலங்கையின் அணிசாரா கொள்கை ஆகியவற்றின் மூலம் அம் முயற்சி தடுக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. 

காலணித்துவத்திற்கு பிந்திய இலங்கையின் மீது இடம்பெற்ற முதலாவது அன்னியத் தலையீடான, இந்தியாவின் நேரடி தலையீடு என்பது, முற்றிலும் மேற்படி பனிப்போர்கால புவிசார் அரசியலில் விளைவு என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு தமிழர்களின் உரிமைசார் அரசியல் ஒரு கருவியாக்கப்பட்டது. 

அன்றைய சூழலில் இந்தியாவை கோபப்படுத்திய சில காரணிகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள, இலங்கையின் கடற்படைத் தளத்தை, அமெரிக்க கடற்படையின் பாவனைக்கு கொடுக்கும் நடவடிக்கைளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டிருந்தமையானது இந்தியாவை கோபப்படுத்தியது. 

திருகோணமலை இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது மிக முக்கிய பங்கு வகித்த ஒரு துறைமுகமாகும். யப்பானுக்கு எதிரான கூட்டுப்படையினர் சிங்கப்பூர் தளத்தை இழந்த பின்னர், திருகோணமலை துறைமுகமே, யுத்தத்தில் பிரதான பங்குவகித்திருந்தது. இந்த பின்னனியிலேயே, 1942ம் ஆண்டு யப்பான் திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது தற்கொலை விமானத் தாக்குதலை மேற்கொண்டது. 

இலங்கையின் திருகோணமலை மற்றும் கட்டுநாயக்க துறைமுகம் ஆகிய இரண்டும், இராணுவ, பொருளாதார அர்த்தத்தில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் முக்கிய துறைமுகங்களாக கணிக்கப்படுகின்றன. உலக துறைமுக அட்டவணையின் படி (World Port Index) கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு துறைமுகங்களும் கடற்படைத்தள அமைவிற்கு மிகவும் உகந்த புவியமைவைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே மேற்படி இரண்டு கடற்படை தளங்களையும், பிரித்தானிய றோயல் நேவி, தங்களுக்கான பிரதான கட்டளைபீடமாகப் பயன்படுத்தியிருந்தது. 

திருகோணமலையின் மீதான, ஏனைய நாடுகளின் அதீதசெல்வாக்கை, இந்தியா தொடர்ந்தும் எதிர்த்து வந்திருக்கிறது. இதற்கு திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவமே காரணம் ஆகும். 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் திருகோணமலை துறைமுகத்தின் எண்ணை குதங்கள் சிலவற்றை இந்தியா பயன்படுத்தி வருகின்றது. சமீப காலமாக இந்த ஒப்பந்தத்தை மீள் பாசீலனை செய்ய வேண்டுமென்னும் வாதமும் தெற்கில் எழுந்திருக்கின்றன. 

இந்தியா மேற்படி ஒப்பந்தத்தை செய்த காலத்தில் சோவியத் முகாமுடன் இணைந்திருந்தது. ஆனால் இன்று, இரு நாடுகளின் நலன்களும் சந்தித்துக்கொள்ளுவதற்கு (convergence of interests) ஏற்றவாறு பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து இயங்கும் உபாயத்தை இந்தியா கடைப்பிடித்து வருகின்றது. 

இத்தகையதொரு உலக ஒழுங்கின் கீழ்தான் அமெரிக்கா, யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. இந்த அழுத்தங்கள், வெறுமனே மனித உரிமைகள் தொடர்பானதுதானா? இப்படியொரு கேள்விக்கு பதில் தேட விளைவோரின் ஒரு அபிப்பிராயம்தான், அமெரிக்கா இராணுவ நோக்கில் இலங்கையில் காலூன்ற விளைகின்றது என்னும் வாதமாகும். 

அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலும் அத்துடன் வரையறுக்கப்பட்டளவில் இராணுவ ரீதியாகவும் சிறந்த உறவே நிலவி வந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வந்திருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு வியாபாரத்தில் அண்ணளவாக 40 வீதமான சந்தை வாய்ப்பை அமெரிக்கா வழங்கிவருகிறது. சுனாமி அனர்த்தத்தின் போது 135 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை வழங்கியிருந்தது. 

முன்னர் 'அமெரிக்காவின் குரல்' என்று அழைக்கப்பட்ட வானொலி பரிவர்த்தனை நிலையத்தை, அமெரிக்காவின் அனைத்துலக பரிவர்த்தனைக்கான நிலையம் (International Broadcast Bureau of the US) என்று பெயர்மாற்றி மீளமைத்துள்ளது. மேலும் அமெரிக்க படையினர், இராணுவநிலைத் தொடர்புகள் என்னும் வகையில் மட்டுப்பட்ட தொடர்புகளை இலங்கை இராணுவத்துடன் பேணிவருகின்றனர். இத்தகையதொரு சூழலில் அமெரிக்கா ஒரு இராணுவ தளத்தை இலங்கையில் அமைக்கும் முயற்சியில் இறங்குவதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு மதிப்பிடலாம்? 

இது குறித்து எழுதியிருக்கும் பேராசிரியர் டேவிட் அன்டர்சன் (U.S. Army Command and General Staff College) மற்றும் இலங்கை இராணுவ கல்லூரியின் விரிவுiயாளர் அன்ரன் விஜயசேகர ஆகியோர், இந்திய மாக்கடல் பிராந்திய பாதுகாப்பிற்கான (Indian Ocean defense) இதயமாக இருக்கும் இலங்கையானது இந்தியாவின் செல்வாக்கு வளையத்திற்குள் இருக்கின்றது. இந்தப் பின்னணியில், இலங்கையுடனான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும், இந்தியாவின் ஒத்துழைப்புடன்தான் வெற்றிபெற முடியும். ஆனால் இவர்கள் இருவரும் இலங்கை, அவ்வாறானதொரு கடற்படை தளத்திற்கான சிறந்த இடம் என்பதை மறுக்கவில்லை. 

அமெரிக்காவின் ஆர்வங்களுக்கு மட்டுமல்ல அவ்வாறானதொரு தளம் இந்தியா மற்றும் இலங்கைக்கும் நன்மையான ஒன்றாகவும் அமையும் என்றே மேற்படி இருவரும் வாதிடுகின்றனர். கடற்பாதுகாப்பு, அணுவாயுத பெருக்கத்தை கண்காணிப்பது, சீனாவின் செல்வாக்கை குறைப்பது, தீவிரவாத முறியடிப்பு மற்றும் கடற்கொள்iயை கட்டுப்படுத்துவது ஆகிய அனைத்தையும் ஒருங்கே மேற்கொள்வதற்கு ஏற்றவகையான ஒரு கடற்படைத்தளத்தை நிறுவவதற்கு இலங்கை ஒரு சிறந்த இடம் என்பதில் மேற்படி இருவரும் உடன்படுகின்றனர். 

அமெரிக்கா இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபடுகின்றதா இல்லையா என்பதற்கு அப்பால், ஏன் இவ்வகையானதொரு விடயம் விவாதிக்கப்படுகின்றது? இதனை தமிழர் தரப்பு எவ்வாறு நோக்கப் போகின்றது? இந்த கேள்விகளின் அடிப்படையில் சிந்திப்பது முக்கியமானது. 

அமெரிக்காவின் டியாகோகார்சியா தளத்திற்கான ஒப்பந்தம் நிறைவு பெறுகின்றது. இதனைத் தொடர்ந்து அதனை அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவிற்கு இடமாற்றுவதற்கான வாய்ப்புக்கள் அவதானிக்கப்படுகின்றன. இத்தகையதொரு சூழலில்தான் அண்மைக்காலமாக மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்குள், அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. 

ஆனால் அமெரிக்காவின் மூலோபாய பங்காளியான அவுஸ்திரேலியாவோ, இலங்கை தொடர்பில் மென் போக்கொன்றை வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்க பிரேரணை தொடர்பிலும் பெரியளவில் அவுஸ்திரேலியா நாட்டம் கொள்ளவில்லை. 

இந்த நகர்வுகள் அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏதாவது தென்படுகிறதா? மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டால் எல்லா அறிவும் தங்களுக்குள் சித்தித்து விடுவதாக நம்பும் தமிழ் அரசியல் தலைவர்கள் என்போர் இதனை கண்டுபிடித்து உதவினால், அது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140411110308

 

Link to comment
Share on other sites

யதீந்திராவும் நிலாந்தனும் வந்து எழுதினால் தான் மக்களுக்கு அரசியல் என்றாலே என்னவென்று விளங்குது. இவர்கள் இருவரும் அரசியல் புல நாய்வுகளை எழுதுவதை விட சிவகார்த்திகேயன் படங்களுக்கு காமடி கதை வசனம் எழுதி பிழைக்கலாம்.  :D  :D  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தேடுதலில் யார் இந்தத் தாமிரா குணநாயகம் என்றால் சுண்டுக்குளியில் பிறந்த, ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ தேவாலையத்தைச் சேர்ந்த குணநாயகம் என்பவருக்குக் கொழும்பில் பிறந்த மகள். தாயார் ஒரு இந்திய வம்சாவளி குணநாயகத்தின் மனைவியின் தந்தையார் பதுளையில் வியாபாரம் செய்திருக்கிறார். அதுதவிர அவர் ஒரு இந்திய தேசிய கங்கிரஸ் அனுதாபியுமாவர் என செய்தி கிடக்குது.

 

குணநாயகம் லங்கா சமசமாயக்கட்சியில் ஒரு உறுப்பினராகவும் இலங்கை இலிதர்கள் சங்கத்தில் அங்கத்துவராக இருந்திருக்கிறார் எனப் பினாத்தப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு கட்சியிலோ அன்றேல் சங்கத்திலோ அங்கத்தவராக இருப்பது ஒன்றும் அல்கைதாவில் உறுப்பினராக இருப்பதாகக் கருதுவதற்கு சமமனதல்ல இது ஒரு யுயுபி மேட்டர்.

 

இந்தப் பெண் வேம்படி மகளிர் கல்லூரியிலும் குப்பை கொட்டியிருக்கு என கூறப்பட்டுள்ளது.

 

ஆக யாழ்ப்பாணத்தில் சுத்துமாத்துப் பண்ணுறவங்களைக் கண்டால் "இந்தக் கொழும்பு றிக்ஸ் எல்லாம் எங்களிட்ட விடாத" எனக்கூறுவது வழக்கம். ஆக கொழும்பிலேயே பிறந்துவளர்ந்து. தமிழர்களது வரலாறு நாலாம் குறுக்குத் தெருக்களிலும் வெள்ளவததையிலுமே முடியுது எனக் கருதும் கொழும்புவாசிக்கு தமழர்களௌ அபிலாசைகளை அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

 

சிங்களவனுக்குக் கழிவியே சீவிச்சுப்பழகிய குடும்பம் தமிழர்கட்கு கெடுதல் செய்யாது என்ன செய்யும்.

 

தமிழகளது அரசியல் மற்றும் இருப்புக்காகப் பாராடும் பிரச்சனையை அறியவேண்டுமாகவிருந்தால் வடக்குக் கிழக்கில் வாழவேண்டும் அன்றேல் வாழ்ந்திருக்கவேண்டும்.

 

விக்கு ஐயா இப்போது வந்து நிண்டுகொண்டு குத்துதே குடையுதே என்கிறார் பாருங்கள். இந்த அனுபவங்கள் தமிழர்கட்கும் தமிழ் மண்ணுடன் வாழும்போதே வரும்.

Link to comment
Share on other sites

மச்சான் ஜதீந்திரா தனது இந்திய எஜமானர்களுக்காக குத்தி முறியிறார். வேறு ஒன்றுமில்லை. இவரது இந்தியாவைவிட சிங்களவர் ஆயிரம் மடங்கு மேல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.