Jump to content

சத்திரசிகிச்சை வெற்றி - நோயாளி மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போது இனப்பிரச்சினையில் இருந்து மதப் பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. மிகவும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் ஆதாரமாக ஜெனீவா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் சிறீலங்கா மீதான (இதனைச் சிறீலங்காவிற்கு எதிரானது என்று சொல்வதுதவறு) பிரேரணை அமையவுள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி வெள்ளிக்கிழமை இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த 25 நாடுகள் இம்முறையும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருனும் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்திற்கு முழு அளவில் ஆதரவளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவித்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். பிரேரணையில் தாங்கள் தோல்வியடையப் போவதைச் சிறீலங்கா தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை ஒத்துக்கொண்டிருக்கின்றார். தமது நாட்டிற்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், தாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறியுள்ள ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக் கையளிக்க முடியாது என்றும் பிரேரணை நிறைவேறினாலும் - சர்வதேசத்தின் அழுத்தம் தொடர்ந்தாலும், எவருக்கும் சிறீலங்கா அஞ்சாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் சிறீலங்காவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற போதிலும், அவை அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ளதனாலேயே பிரேரணையை நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு அந்நாடுகள் உள்ளாகியிருக்கின்றன என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எனவே, அமெரிக்காவின் பிரேரணை வெற்றியடைவது உறுதியாகியுள்ளது. எனினும், சத்திரசிகிச்சை வெற்றி - நோயாளி மரணம் (operation success but patient died) என்பதுபோல அமெரிக்காவிற்கு இது வெற்றி என்ற போதும், தமிழ் மக்களுக்கு ஆபத்தான ஒரு பிரேரணையாகவே இது பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையினால் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனீவாவில் வெளிப்படுத்தியுள்ளார். ஜெனீவா ஊடக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த ஆபத்துக்களை அவர் அம்பலப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அங்கு அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்களும் யுத்தக்குற்றங்களும் இடம்பெற்றதற்கான நேரடிச்சாட்சியங்கள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் வைத்துப் பார்க்கையில் இறுதியுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பின்னருமான தருணங்களில் தமிழ் மக்கள் மீது நிகழ்ச்சிநிரலிடப்பட்ட ஓர் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

ஆகவே தான் நாம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றோம். மேலும் இறுதி யுத்தத்திற்கு முகங்கொடுத்த எத்தனையோ நேரடிச் சாட்சியங்கள் அவ்விடயங்கள் தொடர்பில் மௌனமாக வேண்டியதொரு நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக எம் போன்ற மக்களுடன் நெருக்கமானவர்களுக்கு கூட அவர்கள் அச்சத்துடனேயே தமது நெருக்கடியான நிலைமைகளைத் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வையோ அல்லது குறைந்தபட்சம் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை. மாறாகத் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் ஆட்சி செய்வதற்காகத் திட்டமிட்ட குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு, பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகள் இவற்றுக்கெல்லாம் மேலாக இராணுவ ஆக்கிரமிப்பு ஆகிய செயற்பாடுகளை நன்கு திட்டமிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக இங்கு வருகைதந்து தமிழர்களின் நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் அனைத்து தரப்பினரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர். ஆகவே இவ்வாறான கட்டமைக்கப்பட்டதொரு இனவழிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கு இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டியது அவசியமாகும்.

தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் பிரேரணையன்று சமர்ப்பிக்கப்பட்டு சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இப்பிரேரணை தமிழர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றமை துர்ப்பாக்கியமானதொன்றாகும். இப்பிரேரணையை கூர்மையாக பார்க்கையில் குறிப்பாக எந்வொரு இடத்திலும் ‘சர்வதேச விசாரணை’ என்ற சொற்பிரயோகம் காணப்படவில்லை. தற்போது திருத்தப்பட்டுள்ள சரத்தின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் விடயங்களை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தொடரில் வாய்மொழி மூலமான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும் என்பதோடு அதற்கு அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலேயே அறிக்கையிடலை முன்வைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

60 வருட காலமாகத் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடி வருகின்றனர். வெவ்வேறான நிலையில் அப்போராட்டத்திற்கென பாரிய வரலாறுகள் காணப்படுகின்றன. உயிர்கள் உடமைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான இழப்பீடுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே இவை தொடர்பில் ஒரு விடயம் கூட உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரியதாகும். 60 வருட கால தமிழர் போராட்டத்தின் பரிமானம் மாற்றப்பட்டு பெரும்பான்மை மதத்தினரால் சிறுபான்மை மதங்களான இஸ்லாம், கிறிஸ்தவம், மற்றும் இந்து மதங்கள் தாக்கப்படுவதாக மட்டும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறுபான்மை மதங்கள் தாக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. இருப்பினும் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

இலங்கையில் காணப்பட்ட இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளின் வரலாற்றினை அறியாதவொரு நபர் இப்பிரேரணையை தற்போது வாசிக்கும் நிலைமையேற்பட்டால் அவரால் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான எந்தவிதமான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றிருக்காதிருக்கின்றது. இந்தப் பிரேரணையில் எங்குமே ‘தமிழ்’ என்றொரு சொற்பதமே காணப்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆட்சியாளர்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்பில் எமக்கு கடுமையான விமர்சனம் இருக்கின்றது. அதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று கூறிவிடமுடியாது. ஆனால் இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இனங்களுக்கிடையலான பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற தொனியை வெளிப்படுத்துகின்றதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. ஆகவே நாம் இப்பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பேராடிக்கொண்டிருக்கின்றோம். எமது உரிமைகளை பெற்று தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழ்வதற்கும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இடைக்கால நிர்வாகமொன்று அமைக்கப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாகச் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்த தீர்வொன்று வழங்கப்படவேண்டும். இதனை சர்வதேச சமூகத்தினரும் குறிப்பாக பிரேரணையை முன்வைத்திருக்கும் அமெரிக்க தரப்பினர் கருத்திற்கொண்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பிரேரணையில் இவ்விடயங்களையும் உள்வாங்குவதற்கு ஆவன செய்யவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகவிருக்கின்றது. இவ்வாறு தனது உரையில் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராகத் தமிழ் நாட்டிலும் போராட்டங்கள் முனைப்புப் பெற்றுள்ளன. தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர்.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து, அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்பது உள்ளிட்ட இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். காணாமல் போன தன் அண்ணனை மீட்பதற்காகத் தொடர்ச்சியாக போராடி வந்த சிறுமி விபூஷிகா சிறீலங்கா அரசால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அவர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்தை எரித்தும், அமெரிக்க பொருட்களை சாலையில் கொட்டி உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட பெண்கள் கருத்துத் தெரிவித்தபோது, தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து, குறிப்பாக தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகளை மற்றும் படுகொலைகளை மறைத்து, தமிழர்களுக்கு நியாயமான முறையில் கிடைத்திருக்க வேண்டிய நீதியை மறுத்து ஐ.நா. மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் அமெரிக்க ‘அயோக்கிய’த் தீர்மானத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சிறீலங்கா அரசுக்கு எதிரானது என்ற பெயரில் வெறும் ‘உள்நாட்டு’ விசாரணையைக் கோரும் தமிழீழ விடுதலைக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான இந்த அயோக்கிய தீர்மானத்தை தொடர்ந்து எதிர்ப்போம், எரிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.  

நன்றி: ஈழமுரசு

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.