Jump to content

மாவீரர்நாள் உரை 2007 - அதனை எப்படி புரிந்து கொள்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

மாவீரர்நாள் உரை 2007

- அதனை எப்படி புரிந்து கொள்வது?

எழுதியவர்: உ. துசியந்தன்

நவம்பர் 27. மாவீரர் நாள்.

விடுதலையின் திறவுகோல்களை நினைவுகூரும் ஓர் நாள்.

அன்று, உலகத்தின் சிறு மூலையில் இருந்து ஒரு குரல் ஒலிக்கும்.

அது ஒரு தேசத்தின் குரலாய், தேசியத்தின் குரலாய்,

விடுதலையின் குரலாய், தமிழீழ வேட்கையின் குரலாய் ஒலிக்கும்.

அதனை சர்வதேசம் செவிமடுக்கும்.

விடுதலை வேண்டிநிற்கும் தமிழினம் மட்டுமல்ல,

பேரினவாதம் கக்கும் சிங்களத் தேசம் மட்டுமல்ல,

அகில உலகும் அந்த நாளுக்காய் காத்திருக்கும்.

ஆயிரம் கற்பனைகள், ஆயிரம் எதிர்பார்ப்புகள்,

அரசியல் ஆய்வுகள், எதிர்வுகூறல்கள்

என்று உலகமே அந்த உரையைச் சுற்றிவரும்.

"உலகத்தின் தூக்கம் கலையாதோ?

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?"

என்று ஈழத் தமிழினம் ஏங்கிக் கிடக்கும்.

சர்வதேசமோ தூங்கிக் கிடக்கும்.

"நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்,

நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே."

என்று ஒருவன் முழங்குவான்.

அவன் குரல் கேட்க சர்வதேசம் விழித்துக் கொள்ளும்.

ஓம். தமிழீழத் தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரை தான் அது.

ஆண்டுக்கு ஒரு முறை அவன் ஆற்றும் உரை.

அது தமீழீழ போராட்ட செல்நெறியை உலகுக்கு அறிவிக்கும் உரை.

ஓம் இந்த ஆண்டும் பேசினான்.

அழுத்தமாய், மிக நுணுக்கமாய்.

இந்த ஆண்டு ஆற்றப்பட்ட மாவீரர்நாள் உரையானது, கடந்த ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளிலிருந்து மாறுபட்டதாய், புதிய வடிவம் கொண்டதாய் அமைந்திருக்கிறது. இது நுண்ணிய அரசியல் வெளிப்பாடுடைய, அழுத்தமும் ஆழமும் நிறைந்த இராஜதந்திர மொழியாக பரிணமித்துள்ளது. தமிழிலும் இராஜதந்திரரீதியாக பேசமுடியும்/உரையாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ள உரையாக இது அமைந்துள்ளதென்றால் மிகையாகாது.

அந்தவகையில், இக் கட்டுரையானது மாவீரர்நாள் உரைக்கான விளக்கவுரையோ, பொழிப்புரையோ அல்ல. மாறாக, இவ்வுரையை நாம் எவ்வாறாகப் புரிந்துகொள்ளலாம் என்பது பற்றிய ஒரு பார்வை மட்டுமே.

மாவீரர்நாள் உரை ஆற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகும் நிலையில், இதுவரையும் தமிழர் மட்டத்தில் எதுவித ஆழமான ஆய்வோ அலசலோ வெளிவரவில்லை என்பது கவலைக்கிடமானது. அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இருந்தவரை, அவரூடாக உரைபற்றிய மிகத் தெளிவான புரிதல் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவரின் மறைவுக்கு பின்னான முதலாவது உரையாக இந்த ஆண்டின் மாவீரர்நாள் உரை அமைந்திருக்கிறது என்பதுவும், தேசியத் தலைவனின் உரை தொடர்பாக தமிழ் மக்களுக்கு சரியான புரிதலை எவரும் ஏற்படுத்தவில்லை என்பதுவும், இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

இந்நிலையில்தான் அன்ரன் பாலசிங்கம் என்கிற தத்துவாசிரியனின் இழப்பு எத்தகைய பாரிய இழப்பு என்பது புரிகிறது. அத்துடன் இவ்வாறான சூழலில் தான் அந்த மதியுரைஞனின் தேவைபற்றியும் தெளிவாக உணரப்படுகிறது. அத்தோடு, ஈழத்தமிழரின் அறிவுஜீவி மட்டம் வறண்டு கிடக்கிறது என்கிற கசப்பான உண்மையும் வெளிப்படுகிறது. ஒரு தேசியத் தலைவனின் உரையை மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் தமிழர் தரப்பில் இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது.

இது ஒருபுறமிருக்க, மாவீரர்நாள் உரை ஆற்றப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா ஊடகங்களின் ஊடாகவும், புலம்பெயர்ந்த தமிழர் ஊடகங்களூடாகவும் சில எதிர்பார்ப்புகள் விதைக்கப்பட்டன. "மாவீரர்நாள் அன்று தனிநாட்டுப் பிரகடனம் செய்யப்படப் போகின்றது - இதை தனது மாவீரர்நாள் உரையில் பிரபாகரன் அறிவிப்பார்" என்கிற ஒரு செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. சிறிலங்கா அரச/ஊடகத் தரப்பால் உருவாக்கப்பட்ட இச்செய்தியை, புலம்பெயர்ந்த தமிழர் தரப்பு ஊடகங்களும் அழகுபடுத்தி மக்கள் மத்தியில் அலங்கார ஊர்வலம் விட்டன.

இந்தத் தனிநாட்டுப் பிரகடனச் செய்தியை இரண்டு வகையாக நோக்கலாம்:

ஒன்று: தனிநாட்டுப் பிரகடனம் தொடர்பான சிறிலங்கா அரசின் பயமும், அதனால் சர்வதேசத்தை புலிகளுக்கு எதிராக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வண்ணம் திசைதிருப்பும் நோக்கோடு பரப்பப்பட்ட செய்தியாக இருக்கலாம்.

இரண்டு: தமிழ மக்களிடத்தில் ஆசையையும் எதிர்பார்ப்பையும் தூண்டி உச்சநிலைக்குக் கொண்டு சென்று, கடைசியில் அப்படி ஒரு அறிவிப்பு வராத நிலையில் அது புலிகள் மீதான எதிர்ப்பாகவும், ஏமாற்றமாகவும் மாறும் என்கிற உளவியல் ரீதியான திட்டமிட்ட முன்னெடுப்பாக இருக்கலாம்.

எது எப்படியாக இருந்தாலும், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூக மட்டத்தில் ஓரளவேனும் உணரக்கூடியதாக இருக்கிறது. அது எதிர்ப்பாக இல்லாதுவிட்டாலும், ஒருவகை ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. இதனை மாவீரர்நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மக்களின் கருத்துக்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. இந்நேரத்தில் தான் புலம்பெயர்ந்த ஊடகங்களினதும், அறிவுஜீவி மட்டத்தினரதும் பணி மிகப்பெரியதாக இருத்தது. ஆனால், அவர்கள் அந்தக் கடமையை இதுவரைக்கும் செய்யவில்லை என்பது ஏமாற்றமே.

அடுத்து, சர்வதேச மட்டங்களில் இருந்து மாவீரர்நாள் உரை பற்றிய கருத்துக்கள் எவையும் உத்தியோகபூர்வமாக வரவில்லை என்பதும் இன்னொரு முக்கிய செய்தி. எழுத்துக்களாகவும், பேச்சுக்களாகவும் நேரடியாக எதிர்வினை நிகழவில்லையே ஒழிய, மாவீரர்நாள் உரையைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளில் அவை வெளிப்படுகிறது, தொடர்ந்தும் வெளிப்படும் என்பதே உண்மை. உதாரணத்தி்ற்கு மாவீரர் நாள் உரை முடிந்த இரண்டு வாரங்களின் பின்னர்தான் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மாவீரா் நாள் உரையினை தொட்டு பதிலிறுத்தார். இது தான் இந்த முறை மாவீரர்நாள் உரையின் இராஜதந்திர வெற்றி. இதனால் தான் இந்த முறை ஆற்றப்பட்ட உரை, ஆழமான அர்த்தமுள்ள இராஜதந்திர உரையாக அமைந்திருந்தது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.

இலக்கியமாக இருந்தாலும், இயந்திரமாக இருந்தாலும், அரசியல் உரையாக இருந்தாலும் அது யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பது முதன்மையான விடயங்களில் ஒன்று. அந்தவகையில் இந்த மாவீரர்நாள் உரை யாரை நோக்கியது என்பது பற்றி முதலில் பார்ப்பது முக்கியமானது. அதில் இந்த உரையின் முதன்மையானதும், வெளிப்படையானதுமான இலக்கு சர்வதேச சமூகமே. ஓம் - முழுக்க முழுக்க சர்வதேச சமூகத்தை நோக்கியே இந்த உரை அமையப்பெற்றுள்ளது. அதனால் தான் இந்த உரை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளும் மொழியில் உரையாற்றப்பட்டது.

யாரை நோக்கி உரையாற்றப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அதை புரிந்துகொள்வார்கள். புரிந்துகொண்டுள்ளார்கள்.

சாதாரண மக்களுக்கு, அதாவது சாதாரணமாக இந்த உரையை நோக்குபவர்களுக்கு அது ஒரு சலனமும் இல்லாத அமைதியான நீரோட்டமாகவே இருக்கும். நீருக்கடியில் ஒரு பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருப்பதையும், அது ஒரு சுனாமிப் பேரலையை உருவாக்கும் வல்லமை கொண்டது என்பதையும் கடலின் மேல்மட்டத்தைப் பார்க்கும் சாதாரணர்களால் புரிந்துகொள்ள முடியாதுதான். அதனால் தான் 'என்ன தலைவர் ஒண்டும் சொல்லேல' என்பது போன்ற குரல்களை பல இடங்களில் கேட்க முடிகிறது. அலை எழும்போது தான் உண்மை உணரப்படும். அந்தச் சுனாமிப் பேரலை சிங்களப் பேரினவாதத்தை விழுங்கப் போகிறது என்பதுவும் உணரப்படும்.

இதனடிப்படையில், இனி இந்த மாவீரர் நாள் உரைபற்றிப் பார்ப்போம்: மாவீரர்நாள் உரையை மூன்று முக்கிய அடுக்குகளாக பிரித்து அணுகலாம்:

1. சிங்களப் பேரினவாதத்தின் நிலை

2. சர்வதேச சமூகத்தின் நிலை

3. தமிழர் தரப்பின் நிலை (தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை)

முதலாவது: சிங்களப் பேரினவாதத்தின் நிலை:

அ) தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆ) இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.

இ) ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

இரண்டாவது: சர்வதேச சமூகத்தின் நிலை:

அ) இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

ஆ) அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன. இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது.

இ) இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது. இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது.

ஈ) சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான். சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது. சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன.

உ) அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது.

ஊ) எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மூன்றாவது: தமிழர் தரப்பின் நிலை:

அ) நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்.

ஆ) பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம். எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்.

இ) புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு" சமரிற் கற்றறிந்திருக்கலாம். ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது. நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.

ஈ) அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சயம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

முடிவுரை:

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

[*இவை தலைவரின் உரையில் இருந்து தொகுக்கப்பட்டவையாகும்.]

இந்தவகையாக, தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரையை பகுத்து, புரிதலை உண்டுபண்ணமுடியும். மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே பல்வேறு செய்திகளைச் சொல்லி நிற்கின்றன. பல பரிமானங்களைக் கொண்டவை அவை. அவற்றை தனித்தனியாக பிரித்து அலச முடியும். அவற்றின் அர்த்தமும், ஆழமும் மிகப்பெரியது.

தொடர்பாடற்துறையில் மிகவும் பிரபலமானதும், அண்மைக்காலங்களில் பரந்துபட்டு கையாளப்படுகிறதுமான ஒரு வடிவம் Friedemann Schulz von Thun என்பவரின் "நான்கு காதுகள்" என்கிற வடிவம். Friedemann Schulz von Thun ஒரு தொடர்பாடல்துறை விஞ்ஞானி. அவர் யேர்மனியர். உளவியல் துறை பேராசிரியராக Hamburg பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவருடைய இந்த "நான்கு காதுகள்" என்கிற வடிவம் மூலம் தமிழீழத் தேசியத் தலைவனின் மாவீரர்நாள் உரையை அணுகி, இன்னும் தெளிவான ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ள நாம் முயற்சிக்கலாம்.

'நான்கு காதுகள்' வடிவம் பற்றி முதலில் சுருக்கமாகப் பார்ப்போம்:

நாம் ஒரு விடயத்தை (இன்னொருவருக்கு) சொல்கிற போது, அது நான்கு விதமாக அர்த்தப்படுகிறது. ஒவ்வொரு என்னுடைய வெளிப்பாடும் (நான் விரும்புகிறேனோ விரும்பவில்லையோ, எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ) நான்கு அடுக்குகளை/தளங்களைக் கொண்டுள்ளது.

1. உள்ளடக்கத் தளம்

நாம் சொல்கிற விடயத்தில் உள்ள விபரங்களை, தரவுகளை உள்ளடக்கியது. சரி பிழை, ஓம் இல்லை, பொருத்தமானது பொருத்தமற்றது, காணும் காணாது போன்ற குறிப்புகளையும் உள்ளடக்கியது.

2. 'எனது நிலை'த் தளம்

நாம் ஒரு விடயத்தை சொல்கிறோம் என்றால், அதில் எமது நிலைப்பாடு என்ன, எமக்குள் என்ன நினைக்கிறோம் போன்ற எம்மைப் பற்றியவற்றை உள்ளடக்கியது.

3. உறவுத் தளம்

நாம் ஒரு விடயத்தை யாருக்கு சொல்கிறோமோ, அவருக்கும் எமக்குமான உறவுநிலை என்ன, அவர் எமக்கு யார் என்ற உறவுநிலை பற்றியவற்றை உள்ளடக்கியது.

4. எதிர்பார்ப்புத் தளம்

நாம் ஒரு விடயத்தை சும்மா சொல்வதில்லை. அதன்மூலம் எதனை அடையவிரும்புகிறோம், என்ன நடக்கவேண்டும் என்று விரும்புகிறோம் போன்ற எதிர்பார்ப்புகள், ஆசைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

உதாரணம்:

செய்தி: "பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்."

உள்ளடக்கத்தளம்:

உலகமெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்கிறார்கள். தமிழருக்கென தனிநாடு இல்லை.

"எனது நிலை"த் தளம்:

1) (சிங்கள அரசுக்கானது) நாங்கள் 30 இலட்சம் பேர், அடக்கிவிடலாம் என்று நினைக்காதீர்கள். இலங்கைத் தீவில் தான் நாம் சிறுபான்மை இனம். ஒட்டுமொத்தத் தமிழினமும் சேர்ந்தால், சிங்களம் தான் சிறுபான்மை இனம்.

2) (உலகத் தமிழினத்துக்கானது) தமிழீழம் அமைந்தால் அது உலகத்தமிழருக்காய் என்றும் ஆதரவுக்குரல் கொடுக்கும். தமிழர் மீது அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் அதிகார பலத்தோடு அந்தத் தமிழர் அருகில் நிற்கும்.

3) (சர்வதேசம்) எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கெல்லாம் நாடு இருக்கிறது. அதை அங்கீகரிக்கிறீர்கள். ஆனால், 80 மில்லியன் உலகத் தமிழர் பலம் இருக்கிற எமது நாட்டை இன்னும் அங்கீகரிக்கவில்லை. உலகெங்கும் தமிழர் வாழ்கிறார்கள். உங்கள் நாடுகளிலும் தமிழர் வாழ்கிறார்கள். அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்கள். தேர்தலில் வாக்களிக்கிறார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கை வாக்கு தமிழர்களிடம் இருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள்.

உறவுத் தளம்:

நாம் தமிழர்கள். தனித்துவமான ஒரு இனம். தொப்புள்கொடி உறவுகள்.

எதிர்பார்ப்புத் தளம்:

1) (உலகத் தமிழர்) தமிழர்கள் ஒன்றிணையவேண்டும், உணர்வோடு கிளர்ந்தெழ வேண்டும். தமிழீழம் அமைய செயலாற்றவேண்டும்.

2) (சர்வதேசம்) தமிழர் தேசத்தை அங்கீகரியுங்கள்.

இதேபோன்று மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு விடயங்களையும் புரிதலுக்குட்படுத்தலாம். அப்படி உட்படுத்துகிறபோது, உள்ளே பொதிந்து கிடக்கிற பல நுண்ணிய அரசிய் வெளிப்பாடுகளும், இராஜதந்திர நகர்வுகளும் புரியும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். உங்கள் புரிதல்களையும் எழுதுங்கள். அரசியல் ஆய்வாளர்களை மட்டும் நம்பியிராதீர்கள்.

Link to comment
Share on other sites

உ) அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது.

ஊ) எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.