Jump to content

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்


Recommended Posts

 
சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள்
by RV மேல் நவம்பர் 4, 2010

sujatha.gif?w=150&h=111இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

படித்தவை:
  1. புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் :கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  3. தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு : ரயிலில் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் ஏழை சிறுமிக்கு பற்றாக்குறை குடும்பத்தின் சின்னப் பையன் பழம் வாங்கிக் கொடுக்கிறான். மிக நன்றாக எழுதப்பட்ட கதை.
  4. கு. அழகிரிசாமி – அன்பளிப்பு : மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.
  5. சுந்தர ராமசாமி – பிரசாதம் : புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைவிகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் கதைகளும் நினைவு வருகின்றன.
  6. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  7. அசோகமித்திரன் – புலிக்கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றன. அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு.பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  8. தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.
  9. பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.
  10. கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  11. திலீப்குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப்குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது.இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவுஎன்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
    கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  12. வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  13. ஜெயமோகன் – பல்லக்கு: வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போது ஒரு முன்னாள் “வேலைக்காரன்” மூலம் இருப்பவற்றை விற்று காலத்தை ஓட்டுகிறது. அந்த வேலைக்காரனின் சுயரூபம் தெரியும்போது… பிரமாதமான கதை.
  14. வண்ணதாசன் – நிலை: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  15. ஆ. மாதவன் – நாயனம்: நல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  16. பாமா – அண்ணாச்சிநல்ல கதை. கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம்.
  17. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள் – நல்ல denouement, ஆனால் என் கண்ணில் நாஞ்சில் இதை விட பிரமாதமான கதைகளை எழுதி இருக்கிறார்.
  18. சுஜாதா – மகாபலி – என் கண்ணில் சுமாரான கதைதான்.
படிக்காதவை:
  1. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  2. இரா. முருகன் – உத்தராயணம்
  3. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. ரா.கி. ரங்கராஜன் – செய்தி
  6. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  7. ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
  8. சிவசங்கரி – செப்டிக்
  9. சோ. தருமன் – நசுக்கம்
  10. சுந்தர பாண்டியன் – கனவு
  11. சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

 

http://siliconshelf.wordpress.com/2010/11/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/

Link to comment
Share on other sites

மனித யந்திரம்-புதுமைப்பித்தன்
modern-art-blacklove_thumb%5B4%5D.jpg?im
 
புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 )
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர்.  
அவருmodern-art-blackloveக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கரை வேஷ்டிதான். கடைக்கு முன்னால் இருந்த காறையும் கூரையும் போய் 'ரீ-இன்போர்ஸ்ட் காங்க்ரீட், எலெக்ட்ரிக் லைட், கௌண்டர்' முதலிய அந்தஸ்துகள் எல்லாம் வந்துவிட்டன. கடையும் பிள்ளையும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவு செலவு வளர்ந்தது; பிள்ளையவர்களுக்குக் கவலையும் வளர்ந்தது. 
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்று வரவு கணக்குகளில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்து வைப்பார். அந்தக் காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்துவிளக்கடியில் இரவு பன்னிரண்டு மணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட்டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை; ஆனால் இப்பொழுது மின்சார விளக்கும் விசிறியும் உடன் விழித்திருக்கும். அவரது சம்பளமும் ஆமை வேகத்தில் 'ஓடி' மாதத்துக்கு ரூ.20 என்ற எல்லையை எட்டிவிட்டது. பற்று வரவு கணக்கு நிபுணர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திறமையெல்லாம் அந்த ஸ்டோ ர் கடையுடன் தான். வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் அவருடைய இந்திர ஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகப் பரந்து கிடக்கிறது; பரந்து கொண்டு வருகிறது. 
காலை ஐந்து மணிக்கு ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம். 
மழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும். 
ஆறு மணியாகிவிட்டால் நேற்றுத் துவைத்து உலர்த்திய வேஷ்டியும் துண்டுமாக, ஈரத் தலையைச் சிக்கெடுத்த வண்ணம் ஸ்டோ ர் கடையை நோக்கி நடப்பார். மறுபடியும் அவர் இரவு பத்து அல்லது பன்னிரண்டு மணிக்கு கடையைப் பூட்டிக் கொண்டு திரும்புவதைப் பார்க்கலாம். 
'மீனாட்சி', கணக்குப்பிள்ளை அந்தஸ்தை எட்டுவதற்கு முன்பே நாலைந்து குழந்தை - மீனாட்சிகள் தெருவில் புழுதி ரக ஆராய்ச்சியில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. 
பிள்ளையவர்கள் பொறுமைசாலி - ஆதிசேஷன் ஒரு பூமியின் பாரத்தைத்தான் தாங்குகிறானாம் - ஆனால் பொறுப்பு, ஏமாற்று, சுயமரியாதை, நம்பிக்கை என்ற நியதியற்றுச் சுழலும் ஒரு பெரிய கிரக மண்டலத்தையே தூக்கிச் சுமக்கிறார் அவர். ஏறு நெற்றி, வழுக்கைத் தலை, கூன் முதுகு, பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு - இவைதான் இச்சுமைதாங்கி உத்தியோகத்தால் ஏற்பட்ட பலன்கள். 
பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோ பம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியவற்றின் உதைகளையும் குத்துகளையும் ஏற்று ஏற்று மனமும் செயலும் எதிர்க்கும் சக்தியையும் தன்னம்பிக்கையையும் அறவே இழந்துவிட்டன. தாம் கீழ்ப்பட்டவர், விநயமாக இருக்க வேண்டும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை, நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று உறுதிப்பட்டவர். ஆனால் அவர் உள்ளத்தில், அந்தப் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கும் உள்ளத்தில், அல்லாவுத்தீன் ஜீனியைப் போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமையிழந்தவன் செய்வது போல் ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது. 
இந்த மனம் இருக்கிறதே, அப்பா! ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். 'மீனாச்சியா! அந்த அப்பாவிப் பயல்!' என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட 'அப்பாவி'ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க - ஏன், பால் விற்று நாலு காசும் சம்பாதிக்க - மாடும் கன்றும் வாங்க வேண்டும்! தெற்குத் தெரு மாவன்னாவுக்கு 'மேடோ வர்' செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா? கால் மேல் கால் போட்டு, 'ஏ மீனாட்சி!' என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோ ர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் 'அண்ணாச்சி சௌக்கியமா?' என்று கேட்க வேண்டும்! ஊரில் நடைபெறும் கலியாணமும் சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் தம் பாதையில் செல்லவேண்டும்...! 
இன்னும் எத்தனையோ எண்ணங்கள்! தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில் தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக்கும்பொழுதே பிள்ளையவர்களுக்கு அவன் கை தோளில் விழுவது போலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார். 
சிலர் நேரத்தைத் தெரிந்து கொள்ளக் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளுவார்கள். வேறு சிலர் நிழலின் குறியை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் ஒடிவதற்கு ஹேது உண்டு. சூரியனை மேகம் மறைத்தால் நிழலின் குறியெல்லாம் அந்தரடித்துக்கொண்டு போக வேண்டியதுதான். அதனால்தானோ என்னவோ, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கொக்கிரகுளத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சாவி கொடுக்காத கடிகாரமாய், மேகத்தால் மறையாத சூரியனாய், என்றும் பழுதுபடாத நித்திய வஸ்துவாய் இருந்து வருகிறார். 
பிள்ளைக்கு எதிலும் நிதானம். இயற்கையின் நியதியைப் போல் இருக்கும் அவர் நடவடிக்கையெல்லாம் - நேற்று இருந்த மாதிரித்தான் இன்றும், நாளையும், இனியும். ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். கொக்கிரகுளத்தில் உள்ள மிகவும் முதிர்ந்த கிழவருக்கும், அவர் தம் சன்னக் கம்பிக் கறுப்புக் கரை நாட்டு வேஷ்டியுடன் தான் காட்சியளித்து வருகிறார். இந்த ஒழுங்கிலிருந்து அவர் விலகியதும் கிடையாது; விலக முயன்றதும் விரும்பியதும் கிடையாது.
ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து, புகையூடு தெரியும் விளக்கைப் போன்ற ஒரு மங்கிய சித்தாந்தத்தை உபதேசித்தது.
மூலைத் தெரு லாந்தல் கம்பங்கூடச் சோர்ந்துவிட்டது. கொக்கிரகுளத்திலுள்ள லாந்தல் கம்பங்களுக்கு இரவு பத்து மணிக்குள்ளாகவே சர்வ சாதாரணமாக ஏற்படும் வியாதி இது. 
மூலைத் தெருவில் மற்ற இடங்களெல்லாம் ஒடுங்கிவிட்டன. ஸ்டோ ரில் பெட்டியடி மேல் ஒற்றை மின்சார விளக்குப் பிரகாசிக்கிறது. பிள்ளையவர்கள் ஓலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப் புத்தகத்தில் ஏதோ பதிந்து கொண்டு இருக்கிறார். 
"சுப்புப் பிள்ளையா? நாலு, நாலரை, நாலரையே மாகாணி, நாலரையே மாகாணியும் ஒரு சல்லியும், நாலரையே மாகாணி ஒரு சல்லி, ஒரு துட்டு, நாலு, ஒம்பது, அஞ்சு சல்லி!... சவத்துப் பயலுக்கு குடுத்துக் குடுத்துக் கட்டுமா? நாளைக்கு வரட்டும் சொல்லறேன். கோவாலய்யனா? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது! என்ன செய்யறது? பிள்ளையவாள் பாடு அவன் பாடு..." ஏடுகளைப் புரட்டுகிறார். நெற்றியில் வழியும் வேர்வையைத் துடைத்து விட்டு ராமையாப் பிள்ளை பேரேட்டைத் திருப்பிக் கூட்ட ஆரம்பித்தார். "வீசம், அரைக்கால், அரையேரைக்கால்..." 
"என்ன அண்ணாச்சி, இன்னங் கடையடைக்கலே? என்னத்தெ விளுந்து விளுந்து பாக்கிய?" என்று கொண்டே வந்தார் மாவடியாபிள்ளை. "வாரும், இரியும்!" என்று சொல்லி, மறுபடியும் கணக்கில் ஈடுபட்டார் பிள்ளை. 
"என்னய்யா, வண்டி போயிருக்குமே! இன்னமா? உமக்கென்ன பயித்தியம்?" 
"தம்பி, நீங்க ஒரு மூணு வீசம் அரை வீசம் கொடுக்கணுமில்லெ; நாளாயிட்டுதே! கொஞ்சம் பாருங்க, கடைலே பெரண்டாத்தானே முடியும்?" 
"அதுக்கென்னயா வார வியாழக்கிழமை பாக்கிறேன். நீங்க வீசம்படி "பின்னைக்கி எண்ணை குடுங்க; எல்லாத்தையும் சேர்த்துக் குடுத்திடுவேன்!" 
(*பின்னைக்கி எண்ணை - புன்னைக்காய் எண்ணெய்) 
"பாத்துச் செய்யுங்க!" என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை எடுத்து ஒரு தோளில் போட்டுக் கொண்டு எழுந்தார். கொட்டாவி வந்துவிட்டது. வாய்ப் பக்கம் விரலால் சுடக்கு விட்டுக்கொண்டே 'மகாதேவ, மகாதேவ' என்று முணுமுணுத்தவண்ணம் நெடுங்காலக்களிம்பால் பச்சை ஏறிப்போன புன்னைக்காய் எண்ணெயிருக்கும் செப்புப் பாத்திரத்தண்டை சென்றார். குனியுமுன் தலையை விரித்து உதறி, இடது கையால் அள்ளிச் சொருகிக்கொண்டு, கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்து வீசம் படியில் எண்ணெயை எடுத்துக் கொண்டு திரும்பினார். 
"தம்பி!" என்று கொண்டே நீட்டினார். 
மாவடியா பிள்ளை கையில் இருந்த சிறு பித்தளை டம்ளரில் வாங்கிக் கொண்டார். 
பிள்ளையவர்கள் மறுபடியும் ஒழுங்காக மேல்துண்டை மடித்துப் பெட்டியடியில் போட்டுக் கொண்டு, 'மகாதேவா!' என்று வாய்விட்டு ஓலமிட்டவண்ணம் ஒற்றைக் கையைப் பெட்டியின் மேல் ஊன்றிய படி மெதுவாகச் சம்மணமிட்டு உட்கார்ந்தார். 
மாவடியா பிள்ளை புறப்படுவதாகத் தோன்றவில்லை. 
"என்ன அண்ணாச்சி, இன்னந் தேரமாகலியா!" (*தேரம் - நேரம்) என்று, பெட்டியடிப் பக்கத்தில் இருந்த தட்டில் உள்ள பொரி கடலையை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தார். 
"இன்னம் ரெண்டு மூணு புள்ளியைப் பாத்துவிட்டுத்தான் கடையெடுக்கணும். எனக்குச் செல்லும். (*செல்லும் - நேரம் போகும்) வார வைகாசிலே ராதா வரத்துப் பிள்ளை என்னமோ காசுக் கடை வைக்ராஹளாமே; ஒங்கிளுக்கென்னய்யா!"... என்று சிரித்தார் பிள்ளை. 
"அவாளுக்கென்ன! காசுக் கடையும் வைப்பாஹ, கும்பினிக்கடையும் வைப்பாஹ. கையிலே பசை இருந்தா யார்தான் என்னதான் செய்யமாட்டாஹ? வார வைகாசிலையா? யார் சொன்னா?" என்று வாயில் உப்புக் கடலை ஒன்றை எடுத்துப் போட்டபடியே கேட்டார். 
"என்னய்யா, ஒரேயடியா கையை விரிக்கிய? ஒங்களுக்குத் தெரியாமலா பிள்ளைவாள் வீட்லெ ஒண்ணு நடக்கும்? யாருகிட்டெ ஒங்க மூட்டையெ அவுக்கிய?" என்று கையில் எடுத்த பென்ஸில் முனை மழுங்கியிருந்தால் நகத்தால் கட்டையை உரித்துக் கொண்டே சொன்னார். 
மாவடியா பிள்ளை அப்படி இலகுவில் 'மூட்டையை அவிழ்த்து' விடுபவரல்லர். "ஊர்க் கதை எல்லாம் நமக்கெதுக்கு? நான் வாரேன். நேரமாகுது!" என்று எண்ணெயை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். 
"தம்பி! விசாளக்கெளமையை மறக்காமே!" என்றார் பிள்ளை. 
"மறப்பனா!" என்று கொண்டே இருட்டில் மறைந்தார் மாவடியா பிள்ளை. 
பிள்ளையவர்களுக்கு அப்புறம் கணக்கில் மனம் லயிக்கவில்லை. ராதாபுரத்துப் பிள்ளை ஆரம்பிக்கப்போகும் காசுக் கடையிலும், அதில் மாவடியா பிள்ளைக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானத்தையும் பற்றி விஸ்தாரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டார். 
'மாவடியா பிள்ளைக்கென்ன! கையிலே பணம் புரண்ட வண்ணந்தான். இப்பவே ஒரேயடியாக முழுங்கரானெ. ஆளைக் கையிலே பிடிக்க முடியுமா?...' 
அவர் மனம் காசுக் கடைப் பெட்டியடியில் உட்கார்ந்திருக்கும் கற்பனை - மாவடியா பிள்ளையைக் கண்டு பொறாமைப்பட்டது. 'என்னதான் இருந்தாலும் நாணயமா ஒரு இடத்தில் இருக்கிறவன் என்று பேர் வாங்கப் போறானா! நாற்பத்தைந்து வருஷங்கள் ஒரே இடத்தில் இருந்து பேர் வாங்கினால் அல்லவா தெரியும்?...' உடனே மனம் நாற்பத்தைந்து வருஷங்களையும் தாவி, ஏதோ அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்திற்குப் போக மறுத்ததினால் ஏற்பட்ட இந்த மாறுதலை நினைத்தது. அந்தக் காலத்தில் அது பிரமாதமாகப் படவில்லை. அப்புறம் பிள்ளையும் குட்டியும் வந்து, அது இது என்று ஆக ஆகச் சந்தர்ப்பம் தவறாக மாறிப் பெரிய தவறாக உருவெடுத்தது. வக்கீல் பிள்ளையும் உடன்படித்தவர்தான். இப்பொழுது அவரை 'ஏலே ஆறுமுகம்!' என்று கூப்பிட முடியுமா? 
பிள்ளையவர்களுக்கு மனம் கணக்கில் லயிக்கவில்லை. பெட்டியில் மூடிவைத்தார். 'தூத்துக்குடி வண்டி இன்னும் புறப்படவில்லையே!' என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. 'சவத்தைக் கட்டி எத்தனை நாள் தான் மாரடிப்பது!' என்று முணுமுணுத்தார். நெற்றியில் குபீர் என்று வியர்வை யெழும்பியது. பெட்டிச் சொருகை அனாவசிய பலத்தை உபயோகித்து வெளியே இழுத்தார். உள்ளேயிருந்த சில்லறையும் ரூபாயும் குலுங்கிச் சிதறின. செம்பு, நிக்கல், வெள்ளி என்று பாராமல் மடமடவென்று எண்ணினார். நாற்பதும் சில்லறையும் இருந்தது. அவசர அவசரமாக எடுத்து மடியில் கொட்டிக் கொண்டு, விளக்கை அணைத்து, மடக்குக் கதவுகளைப் பூட்டினார். 
சாவிக் கொத்து கையில் இருக்கிற உணர்வு கூட இல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார். நாற்பத்தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன்? நாக்குக்கு ருசியாக சாப்பிட முடிந்ததா? என்ன பண்ணிவிடுவான்? கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் செருப்பைக் கூடக் கடையிலேயே வைத்துவிட்டு வந்து விட்டார் என்ற உணர்வு தட்டியது. 
நல்ல காலமாக எதிரில் யாரையும் காணோம். 'பார்த்தால்தான் என்ன? கடையைப் பூட்டின பிறகு நேரே வீட்டிற்குத்தான் போக வேண்டுமா? நம்ம நினைப்பு அவனுக்கெப்படி தெரியும்?' 
ஸ்டேஷனுக்கு வந்தாய்விட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கடியில் தூங்கும் சில்லறைச் சிப்பந்திகள், பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் வாயடி யடிக்கும் போர்ட்டர்கள்! வெளி கேட்டில் அவ்வளவு கூட்டம் இல்லை. ரயிலுக்குக் கூட்டம் இருக்காததும் நல்லதுதான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டார் பிள்ளை. 
டிக்கட் கவுண்டரில் பத்தேகாலணாவை வைத்துவிட்டு, "தூத்துக்குடி!" என்றார் பிள்ளை. அதற்குள் நா வரண்டுவிட்டது. 
"எங்கே?" என்றார் டிக்கட் குமாஸ்தா. 
பிள்ளை திடுக்கிட்டார். "தூத்துக்குடி!" என்றார் மறுபடியும். 
"வாயில் என்ன கொழுக்கட்டையா? தெளிவாகத்தான் சொல்லேன்?" என்று கொண்டே ஒரு டிக்கட்டைப் 'பஞ்ச்' செய்து கொடுத்தார் குமாஸ்தா. 
அப்பாடா! 
பிள்ளையவர்கள் நிம்மதியடைந்தவர் போல் மூச்சை உள்ளுக்கு வாங்கி மெல்ல விட்டுக்கொண்டு பிளாட்பாரத்தில் நுழைந்தார். வண்டி வந்து நின்று கொண்டிருக்கிறது. புறப்பட இன்னும் பத்து நிமிஷம். ஒரு சோடா விற்பவனும், ஆமவடை - முறுக்கு - போளி - ஐயரும் குரல் வரிசையைப் பிளாட்பாரத்தின் மேலும் கீழுமாகக் காண்பித்து நடந்தனர். லக்கேஜ் தபால் வண்டிப் பக்கத்தில்தான் ஸ்டேஷன் மாஸ்டரும், ஸ்டேஷன் சிப்பந்திகளும்! தொடரின் பின்புறத்தில், ஒருவரும் இல்லாத தனி வண்டியில் ஏறி, கூட்ஸ் ஷெட் பக்கம் பார்த்த ஜன்னல் அண்டையில் உட்கார்ந்தார். ஜன்னல் பக்கம் இருந்த நிம்மதி இவரது மனத்தைத் துருதுரு என்று வாட்டியது. எழுந்து பிளாட்பாரத்தின் பக்கத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு, வண்டி எப்பொழுது புறப்படும் என்பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். 
"பிள்ளைவாள்! ஏது இந்த ராத்திரியில்!" என்றது கம்பீரமான ஒரு குரல். வேறு ஒருவரும் இல்லை, ரயில்வே போலீஸைச் சேர்ந்த அவரது நண்பர் கலியாணசுந்தரம் பிள்ளை. திடுக்கிட்டுத் திரும்பினார். 
போலீஸ்காரன்! பிள்ளையவர்கள் நண்பரைப் பார்க்கவில்லை; காக்கி உடையைத்தான் பார்த்தார்! 
தன்னையறியாமல் அவரது வாய், "தூத்துக்குடி வரை!" என்றது. 
"என்ன அவசரம்! நான் உங்களை மணியாச்சியில் பார்க்கிறேன்!" என்று சொல்லி, அளவெடுத்து வைக்கும் பெருமிதமான நடையுடன் லக்கேஜ் வான் பக்கம் நிற்கும் ஸ்டேஷன் மாஸ்டரை நாடினார் கலியாணசுந்தரம் பிள்ளை. 
மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நுனிநாக்கு முதல் அடித்தொண்டை வரை ஒரே வறட்சி; கண்கள் சுழன்றன. 
"கலர்! சோடா!" என்று நீட்டினான் ஸோடாக்காரன். 
"ஏ, ஸோடா! கலர் ஒன்று உடை!" என்றார் பிள்ளை. 
'டஸ்!' என்ற சப்தம்; 'ஸார்' என்று நீட்டினான் சோடாக்காரன். வாங்கிக் குடித்தார். 'பூப்!' என்று ஏப்பமிட்டுக்கொண்டே ஓரணாவை அவன் கையில் கொடுத்துவிட்டுப் பலகையில் சாய்ந்து கண்ணை மூடினார் பிள்ளை. 'கலியாணி பார்த்துவிட்டானே! நாளைக்கு நம் குட்டு வெளிப்பட்டுப் போகுமே!' 
துறைமுகத்தில் கலியாணசுந்தரம் பிள்ளை தமக்காகக் காத்துக் கொண்டிருப்பதை மனக் கண்ணால் பார்த்தார். 
ரயில் விஸில் கிரீச்சிட்டது. பிள்ளையவர்கள் அவசர அவசரமாகக் கதவுப் பக்கம் வந்து இறங்கினார். 
பிளாட்பாரத்தில் கால் வைத்ததுதான் தாமதம். வண்டி நகர ஆரம்பித்தது. 
"என்ன பிள்ளைவாள் இறங்கிட்டிய!" என்ற வேகம் அதிகரித்து ஓடும் ரயில் சாளரத்திலிருந்து ஒரு குரல். கலியாணசுந்தரம் பிள்ளை தான். 
"அவாள் வரலை!" என்று கத்தினார் பிள்ளை. 
மெதுவாக, நிதானமாக ஸ்டேஷனைவிட்டு வெளியேறி ஸ்டோ ர் பக்கமாக நடந்தார் பிள்ளை. வழியில் சிறிது தூரம் செல்லுகையில் தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது பிள்ளைக்கு. 'புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்!' என்று சொல்லிக் கொண்டார் பிள்ளை. அவருக்குத் தமது ஆபத்தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்று. உடல் நடுங்கியது. 
'யார் செய்த புண்ணியமோ!' என்று மடியில் இருந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு, 'மகாதேவா!' என்றார் வாய்விட்டு. 
ஸ்டோ ருக்கு வந்துவிட்டார். சாவதானமாகக் கதவைத் திறந்து, விளக்கை ஏற்றினார். மடியில் இருந்த சில்லறையைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, சிட்டையை எடுத்து, 'மீனாட்சி பற்று பதினொன்றே காலணா' என்று எழுதினார். 
மறுபடியும் விளக்கு அணைந்தது. காலில் செருப்பை மாட்டிக் கொள்ளும் சப்தம்; பூட்டு கிளிக் என்றது. 
முதலாளி வீட்டை நோக்கி சருக்சருக்கென்ற செருப்புச் சப்தம். 
பிள்ளை வழியில் துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். தலையை உதறிச் சொருகிக் கொண்டார். 
முதலாளி காற்றுக்காக வெளியே விசிப்பலகையில் தூங்குகிறார். 
"ஐயா! ஐயா!" என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 
"என்ன வே, இவ்வளவு நேரம்!" என்று புரண்டுகொண்டே கொட்டாவிவிட்டார் முதலாளி ஐயா. 
"இல்லே, சோலி இருந்தது. எம் பத்துலே இண்ணக்கி பதினொண்ணே காலணா எழுதியிருக்கேன்!" என்றார் பிள்ளை. அப்பொழுதும் அந்த நாவறட்சி போகவில்லை. 
"சரி! விடியனெ வரப்போ மூக்கனெ வண்டியைப் போட்டுக் கிட்டு வரச்சொல்லும். சந்தைக்குப் போக வேண்டாம்!" என்றார். சொல்லிவிட்டு, கொடுங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டார். 
மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலாளி ஐயாவைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்றார். அப்புறம் மெதுவாகத் திரும்பி நடந்தார். 
 
மணிக்கொடி, 25-04-1937

http://azhiyasudargal.blogspot.ch/2009/07/blog-post_63.html


விடியுமா? - கு.ப.ரா.

 

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.

‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல்kupara_thumb2.gif?imgmax=800ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.
என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.
ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?
ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?
என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.
புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.
குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.
அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.
‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.
‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.
‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’
எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.
‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’
’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’
‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’
’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’
‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.
‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘
‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.
‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’
‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’
‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.
‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?
‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.
சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?
ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.
துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.
சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.
எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.
குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.
சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.
வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.
‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’
இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.
நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.
சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.
வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.
என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.
’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.
என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.
‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.
ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.
துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?
வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.
‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.
‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.
‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.
எழும்பூர் வந்தது கடைசியாக.
ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.
வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.
உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!
ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.
‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.
’ஆமாம்-’ என்றேன்.
‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.
’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.
‘சிவராமையர்-?’
’ஆமாம், ஸார்!’
‘ஒருவேளை-’
‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.
அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-?
விடிந்துவிட்டது.
*****
 

சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

 

திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும்காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. பங்களூர் எக்ஸ்பிரஸில் இறங்கி வந்த குடும்பம் ஒன்று இரண்டாம் வகுப்பில் சாமான்களைப் போட்டுக் காவல் வைத்து எங்கேயோ போய்விட்டது. எக்ஸ்பிரஸ் வண்டி சென்றால் என்ன கூட்டம். வரும்போது என்ன வரவேற்பு, என்ன உபசாரம்! போகும்போது எவ்வளவு கோலாகலம்! இது நாதியில்லாமல் அழுது வழிந்தது. ஷட்டிலும் கேடுகெட்ட ஷட்டில், ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது.

நான் தனியாக கடைசிப் பெட்டிக்கு முன் பெட்டியில் உட்கார்ந்திருந்தேன். பக்கத்தில் என் பையன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் கையிலிருந்து நழுவிய ஆரஞ்சு உருண்டு கிடந்தது. அதைப் பார்க்கும்போது சிரிப்பு வந்தது எனக்கு. பையனை பங்களூரிலிருந்து அழைத்து வருகிறேன். மாமா சம்சாரம் ஊருக்கு வந்திருந்தபோது அவனை அழைத்துப் போயிருந்தாள். நான் காரியமாக பெங்களூர் போனவன் அவனை அழைத்துக் கொண்டு வந்தேன். பெங்களூர் ஸிட்டி ஸ்டேஷனில் மாமா ரெயிலேற்றி விட வந்திருந்தான். ரெயில் புறப்பட ஐந்து நிமிஷம் இருக்கும்போது ஆரஞ்சுப் பழக்காரனைப் பார்த்து, “”ஆரஞ்சுப்பா, ஆரஞ்சுப்பா” என்று பையன் முனகினான். மாமா காதில் விழாததுபோல அந்தண்டை முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டான். பையனைச் சுடுகிறாப்போல ஒரு பார்வை பார்த்தேன். அவன் வாய் மூடிக் கொண்டது. ஆனால், வண்டி புறப்பட்டதுதான் தாமதம்; ஆரம்பித்து விட்டான். ஆறு வயசுக் குழந்தை; எத்தனை நேரந்தான் அடக்கிக் கொண்டிருப்பான்.

“”யப்பா, யப்பா!”

“”ஏண்டா கண்ணு!”

“”பிச்சி மாமாவுக்கு வந்து, வந்து, தொளாயிர ரூபா சம்பளம். பணக்காரர். இவ்வளவு பணக்காரர்ப்பா!” என்று கையை ஒரு கட வாத்திய அளவுக்கு அகற்றி, மோவாயை நீட்டினான் – குறை சொல்லுகிறாற்போல.

“”அதுக்கு என்ன இப்ப?”

“”வந்து, செத்தே முன்னாடி ஆரஞ்சு கேட்டேனோல்லியோ, வாங்கிக் குடுக்காம எங்கேயோ பாத்துண்டு நின்னார்ப்பா.”

“”அவர் காதிலே விழுந்திருக்காது. விழுந்திருந்தா வாங்கியிருப்பார்.”

“”நான் இரைஞ்சுதான்பா சொன்னேன்”.

“”பின்னே ஏன் வாங்கிக் கொடுக்கலை?” கேள்வியை நானே திருப்பிக் கேட்டுவிட்டேன். பையன் திணறினான்.

“”வந்துப்பா, வந்து, பிச்சி மாமாவை வந்து ஒரு மூணு கால் சைக்கிள் வாங்கித் தான்னேன். வந்து, தரேன் தரேன்னு ஏமாத்திப் பிட்டார்ப்பா…”

“”அவர் என்னத்துக்குடா வாங்கணும்? நான் வாங்கித் தரேன்.”

“”நீ எப்படி வாங்கித் தருவியாம்?”

“”ஏன்?”

“”உனக்கு நூறு ரூபாதானே சம்பளம்?”

“”உனக்கு யார் சொன்னா?”

“”வந்து, பிச்சி மாமாதான் சொன்னா.”

“”உங்கிட்ட வந்து சொன்னாரா, உங்கப்பாவுக்கு நூறு ரூபாதான் சம்பளம்னு?”

“”வந்து எங்கிட்ட இல்லேப்பா. மாமிகிட்டச் சொன்னா. நீ வந்து மெட்ராஸ்லேந்து லெட்டர் எழுதியிருந்தே பாரு, புள்ளையார் பூஜையன்னிக்கி; அப்பச் சொன்னா மாமிகிட்ட. வெறுமெ வெறுமே நீ மெட்ராஸ் போறியாம். உனக்கு அரணாக்கொடி வாங்க முடியாதாம்.”

இது ஏதுடா ஆபத்து!

“”சரி நாழியாச்சு. நீ படுத்துக்கோ.”

“”எனக்கு மோட்டார் வாங்கித் தரயா?”

“”தரேன்.”

“”நெஜ மோட்டார் இல்லே. கீ கொடுக்கிற மோட்டார், இவ்வுளூண்டு இருக்குமே, அது.”

“”அதான் அதான். வாங்கித் தரேன்.”

“”யப்பா, ஆரஞ்சுப்பா.”

“”நீ தூங்கு. திருச்சினாப்பள்ளி வந்தவுடனே வாங்கித் தந்துடறேன்.”

“”போப்பா!”

“”இப்ப எங்கடா வாங்கறது, ரெயில் போயிண்டிருக்கிற போது?”

“”அப்பன்னா ஒரு கதை சொல்லு.”

“”அப்படிக் கேளு. நல்ல கதையாச் சொல்றேன். ஒரே ஒரு

ஊரிலே…” பாதிக் கதையில் பையன் தூங்கிவிட்டான்.

“”குழந்தை நல்ல சமத்து ஸôர். ஷ்ரூடா இருக்கான். ஆளை எப்படி “ஸ்டடி’ பண்றான்!” என்று திடீரென்று எதிரே இருந்தவர் மதிப்புரை வழங்கினார்.

“”அதுதான் தலை பெரிசா இருக்கு!” என்று பையனைப் பார்த்தேன். தலை சற்றுப் பெரிதுதான் அவனுக்கு. எடுப்பான முகம். மூக்கும் முழியுமான முகம். மொழு மொழு வென்று சரீரம். தளதளவென்று தளிரைப் போன்ற தோல். கன்னத்தில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த பூனை மயிர் ரெயில் வெளிச்சத்தில் மின்னிற்று. தலைமயிர் வளையம் வளையமாக மண்டி, அடர்ந்து பாதி நெற்றி வரை விழுந்திருந்தது. அழகில் சேர்க்க வேண்டிய குழந்தைதான். நாளை மத்தியானம் அம்மாவைப் பார்க்கத்தான் போகிறான். அதுவரையில்? யாரோ அநாதையைப் பார்ப்பது போல் இருந்தது எனக்கு. தாய் பக்கத்தில் இல்லாவிட்டால் குழந்தைக்குச் சோபை ஏது? குழந்தையை இரண்டு மூன்று முறை தடவிக் கொடுத்தேன். கபடமில்லாத இந்தக் குழந்தையை எப்படி ஏமாற்றத் துணிந்தது பிச்சி மாமாவுக்கு. கிருபணன், கிருபணன் என்று வேலைக்குப் போன நாள் முதல் வாங்கின பிரக்யாதி போதாதா? குழந்தையிடங் கூடவா வாங்க வேண்டும்? சரிதான், போனால் போகிறது என்று விட்டுவிடக்கூடிய வலுவும் எனக்கு இல்லை. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் துன்பம் கிளர்ந்தது. சிறிய அற்பமான நிகழ்ச்சி. ஆனால் எனக்குத் தாங்கவில்லை. பிச்சி மாமா எத்தி எத்திப் பிழைக்கிற வித்தைகள், பிறந்தது முதல் உள்ளும் புறமும் ஒன்றாமல் அவன் நடத்தி வருகிற வாழ்க்கை, பெண்டாட்டியிடங்கூட உண்மையில்லாமல் அவன் குடும்பம் நடத்துகிற “வெற்றி’- எல்லாம் நினைவில் வந்து, திரண்டு சுழல் வண்டுகளைப் போலச் சுற்றிச் சுற்றி வந்தன. ராத்திரி முழுவதும் அதே தியானம். தூக்கமே இல்லை.

திருச்சி வந்ததும் ஆரஞ்சு வாங்கினேன். “”யப்பா, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா. அம்மா உரிச்சுக் கொடுப்பா கையிலே, வாங்கித் திங்கறேம்பா” என்று கெஞ்சினான்.

“”ஆல் ரைட், அப்படியே செய்.”

வண்டி புறப்பட இன்னும் அரை மணி இருந்தது. தாகம் வறட்டிற்று. இறங்கிப் போய்த் தண்ணீர் குடித்துவிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு வந்தேன்.

திரும்பி வரும்போது யாரோ ஓர் அம்மாள் என் பெட்டியில் ஏறிக்கொண்டிருந்தாள். கூட ஒரு பெண். எதிர்த்த பலகையிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

“”இதுதானே மாயவரம் போகிற வண்டி?”

“”இதேதான்.”

“”எப்பப் புறப்படும்?”

“”இன்னும் இருபத்தைந்து நிமிஷம் இருக்கு.”

“”நீங்கள் எதுவரையில் போறேள்.”

“”நான் கும்பகோணம் போறேன்.”

“”உங்க குழந்தையா?”

“”ஆமாம்”

“”அசந்து தூங்கறானே.”

“”பங்களூரிலிருந்து வரோம். அலுப்பு; தூங்கறான்.”

“”நீயும் படுத்துக்கறயா?”

“”இல்லே மாமி, தூக்கம் வரலே” என்றது அந்தப் பெண்.

“”கொஞ்சம் தூங்குடி குழந்தை. ராத்திரி முழுக்கப் போயாகணும். நாளைக்கு வேறே, நாளன்னிக்கி வேறே போகணுமே.”

“”இல்லே மாமி, அப்பறம் தூங்கறேன்.”

அம்மாளுக்கு நாற்பது வயது இருக்கும். இரட்டை நாடி. ருமானி மாம்பழம் மாதிரி பளபளவென்று இருந்தாள். காதில் பழைய கட்டிங்கில் ஒரு பெரிய ப்ளூ ஜாக்கர் தோடு. மூக்கில் வைர பேஸரி. கழுத்து நிறைய ஏழெட்டு வடம் சங்கிலி. கையிலும் அப்படியே. மாம்பழ நிறப் பட்டுப்புடவை. நெற்றியில் பளீரென்று ஒரு மஞ்சள் குங்கும வட்டம். பார்க்கப் பார்க்கக் கண்ணுக்கு நிறைவான தோற்றம், பக்கத்தில் ஒரு தோல் பெட்டி. ஒரு புதுக் குமுட்டி அடுப்பு.

அந்தப் பெண்ணுக்கு எட்டு வயது இருக்கும்; மாநிறம்; ஒட்டி உலர்ந்த தேகம்; குச்சி குச்சியாகக் கையும் காலும்; கண்ணை வெளிச்சம் போட்டுப் பார்க்க வேண்டியிருந்தது; எண்ணெய் வழிகிற முகம்; தூங்குகிறார்போல ஒரு பார்வை. கையில் ஒரு கறுப்பு ரப்பர் வளை; புதிதாக மொடமொடவென்று ஒரு சீட்டிப் பாவாடை; சிவப்புப் பூப்போட்ட வாயில் சட்டை; அதுவும் புதிதுதான்; கழுத்தில் ஒரு பட்டையடித்த கறுப்புக் கண்ணாடி மணிமாலை. பக்கத்தில் ஒரு சீட்டிப்பாவாடை, கொசுவி முறுக்கிச் சுருட்டிக் கிடந்தது. அதிலேயே ஒரு சட்டையும் திணித்திருந்தது.

அந்த அம்மாளுக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? எப்படிக் கேட்பது?

வண்டி புறப்படுகிற சமயத்திற்கு ஒரு மலைப்பழக்காரன் வந்தான். ஒரு சீப்பு வாங்கி ஒரு பழத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். பதில் பேசாமல் வாங்கிக் கொண்டது.

“”சாப்பிடு.”

“”சாப்பிடு” என்று அந்த அம்மாள் சொன்னதும் உரித்து வாயில் போட்டுக் கொண்டது.

“”இந்தப் பொண்ணு கல்கத்தாவுக்குப் போறது.”

“”கல்கத்தாவுக்கா!”

“”ஆமாம், நம்ம பக்கத்து மனுஷா ஒத்தர் அங்கே பெரிய வேலையிலே இருக்காராம். அங்கே போறது. ராத்திரி மாயவரத்திலே இருந்து அவாளுக்குத் தெரிஞ்சவா யாரோ போறா. அவாளோட சேர்த்துவிடணும். நல்ல பொண்ணு, சாதுவா, சமர்த்தாயிருக்கு.”

பிறகு நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

“”உம் பேரு என்னம்மா?”

“”காமாக்ஷின்னு பேரு. குஞ்சுன்னு கூப்பிடுவா.”

“”பேஷ், பேஷ்!”

“”என்ன பெரிய பேஷாப் போடறேள்?” என்று அந்த அம்மாள் சிரித்தாள்; “”இவ எப்படி இரண்டு பேரைச் சுமக்கிறாள்னா!”

எனக்கும் சிரிப்பு வந்தது.

“”அதுவும் சரிதான். ஆனால் நான் நெனைச்சது வேறே. எனக்குக் காமாக்ஷின்னு ஒரு தங்கை இருக்கா. இந்தச் சாயலாத்தான் இருப்பா. நல்ல தெம்பான இடத்துலேதான் குடுத்துது. ஆனா மாப்பிள்ளை ரொம்ப உபகாரி. யாருக்கோ மேலொப்பம் போட்டார் இருபதினாயிரத்துக்கு. அவன் திடீர்னு வாயைப் பொளந்துட்டான். அவர் குடும்பம் நொடிச்சுப் போயிடுத்து. ரொம்பக் கஷ்டப்பட்டார். இன்னதுதான்னு சொல்லி மாளாத கஷ்டம். இப்பத்தான் நாலஞ்சு வருஷமா அவர் ஒரு வேலைன்னு கிடைச்சுப் பிடுங்கலில்லாமெ இருக்கார். அவ கஷ்டம் விடிஞ்சுடுத்து. அவளுக்கு அடுத்தவ இன்னொரு தங்கை. குஞ்சுன்னு பேரு. அவளுக்குக் கல்யாணம் பண்ண அலையா அலைஞ்சோம். கடைசியிலெ எனக்கு அத்தை பொண் ஒருத்தி; அவளுக்குக் குழந்தை இல்லெ. சீக்குக்காரி. தன் புருஷனுக்கே அவளைக் கொடுத்துடணும்னு தலைகீழா நின்னா. அப்படியே பண்ணிட்டார், எங்கப்பா. ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவ பட்ட பாடு நாய் படாது. பத்து வருஷம் கழிச்சு ஒரு புள்ளைக் குழந்தை பிறந்திருக்கு. மூணாம் வருஷம். அதுக்குப் பிற்பாடுதான் அந்த வீட்டிலே அவளும் ஒரு மனுஷின்னு தலை தூக்கி நடமாடிண்டிருக்கா.”

“”ஆயிரம் இருக்கட்டும் பெண்ணிருக்கப் பெண் கொடுக்கலாமோ?”

“”என்ன பண்றது? பிராப்தம். இவ பேரைக் கேட்டவுடனே ஞாபகம் வந்தது. ரெண்டு பேரும் ஒரே இடத்திலே அமைஞ்சிருக்கேன்னுதான் பேஷ் போட்டேன்.”

அந்தப் பெண் எப்படி இந்தப் பேச்சை வாங்கிக்கொண்டது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அதே தூங்கும் பார்வையுடன் முகத்தில் ஓர் அசைவு, மாறுதல் இல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது.

“”குழந்தை, உனக்கு அப்பா அம்மா இருக்காளா?”

“”இருக்கா.”

“”அப்பா என்ன பண்றார்?”

“”ஒண்ணாவது வாத்தியார்.”

“”அக்கா, தங்கை, அண்ணா, தம்பியெல்லாம் இருக்காளா?”

“”இருக்கா… நாலு அக்கா… ரெண்டு அண்ணா, ஒரு தம்பி இருக்கான். அதுக்கப்புறம் ஒரு தங்கை.”

“”அக்காவுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுத்தா?”

“”மூணு பேருக்கு ஆயிடுத்து. ரெண்டாவது அக்கா, நாலு வருஷம் முன்னாடி குறைப்பட்டுப் போயிட்டா. எங்களோடே தான் இருக்கா.”

“”அண்ணா என்ன பண்றான்!”

“”பெரிய அண்ணா கிளப்பிலே வேலை செய்யறான். சின்ன அண்ணா சகிண்ட் பாரம் வாசிக்கிறான்.”

“”நீ வாசிக்கிலையா?”

“”இல்லை, அண்ணா ஒருத்தன்தான் வாசிக்கிறான். எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்க முடியலை, அப்பாவுக்கு.”

“”அதுக்காக நீ வேலைக்குப் போறயாக்கும்?”

“”ஆமாம். மத்தியானச் சாப்பாட்டுக்கே எல்லாருக்கும் காணமாட்டேங்கறது.”

“”உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்?”

“”பத்துப் பாத்திரம் தேய்ப்பேன். காபி, டீ போடுவேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். குழம்பு, ரசம் வைக்கத் தெரியும். குழந்தைகளைப் பாத்துப்பேன். கோலம் போடுவேன். அடுப்பு மெழுகுவேன். வேஷ்டி புடவை தோய்ப்பேன்.”

“”புடவை தோப்பியா! உனக்குப் புடவையைத் தூக்க முடியுமோ?”

“”நன்னாத் தோய்க்கத் தெரியும்.”

“”இதெல்லாம் எங்கே கத்துண்டே?”

“”ராமநாதையர்னு ஒரு ஜட்ஜி இருக்கார். அவாத்துலெதான் கத்துண்டேன்.”

“”ம்ஹ்ம், ஸர்வீஸ் ஆனவளா? அவாத்துலெ எத்தனை வருஷம் இருந்தே?”

“”மூணு வருஷமா இருக்கேன்.”

“”மூணு வருஷமா? உனக்கு என்ன வயசாறது?”

“”இந்த ஆவணிக்கு ஒன்பது முடிஞ்சு பத்தாவது நடக்கிறது.”

“”ஏழு வயசிலேயே உனக்கு வேலை கிடைச்சுட்டுது; தேவலை. என்ன சம்பளம் கொடுப்பா?”

“”சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.”

“”இந்தச் சட்டை யார் வாங்கிக் கொடுத்தா?”

“”அவாதான்.”

“”கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தையைப் பாத்துண்டு, தோசைக்கு அரைச்சு எல்லாம் பண்ணினத்துக்கு இந்த ஆறணாச் சீட்டிதான் கிடைச்சுதா அவாளுக்கு? கிழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்காளே.”

“”…………………..”

“”நீ நல்லதா வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்கப் படாதோ?”

“”…………………..”

“”ஜட்ஜ் வீட்டிலெ சாப்பிட்டிண்டு இருந்தேங்கறே. உன் உடம்பைப் பார்த்தா அப்படித் தெரியலியே! பஞ்சத்திலே அடி பட்டாப்பலே, கண்ணுகிண்ணெல்லாம் உள்ளே போயி, ஒட்டி உலர்ந்து, நாய் பிடுங்கினாப் போல இருக்கியே.”

“”பெரிய மனுஷாள்ளாம் தனி ரகம்னு உங்களுக்குத் தெரியாது போல் இருக்கு. அவா வத்தல் குழம்பு, சுட்ட அப்பளாம், மிளகு ரசம் இதைத்தான் பாதிநாள் சாப்பிடுவா. ராத்திரி பருப்புத் துகையலும் ரசமுந்தான் இருக்கும். ஆனா அவா உடம்பு என்னவோ நிகுநிகுன்னுதான் இருக்கும். அது தனி உடம்பு. நம்மைப் போல அன்னாடங் காய்ச்சிகளுக்குத்தான் இதெல்லாம் ஒத்துக்காது. ரெண்டு நாளைக்கு இப்படிச் சாப்பிட்டா, வாய் வெந்து, கண் குழிஞ்சு, சோர்ந்து சோர்ந்து வரும்” என்று அம்மாள் தன்னையும் என்னோடு சேர்த்துப் பேசினாள். மரியாதைக்குத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். உடனே ஏதோ தவறாகப் பேசிவிட்டவன் போல, “”நான் என்னென்னவோ பேசிண்டிருக்கேன்; நீங்க என்ன பண்ணிண்டிருக்கேள்?” என்று கேட்டாள்.

“”பயப்படாதீங்கோ. நானும் அன்னாடங் காய்ச்சிதான். தாலுகாவிலே குமாஸ்தா.”

தஞ்சாவூர் ஸ்டேஷன் வந்துகொண்டிருந்தது.

“”துண்டைப் போட்டுட்டுப் போறேன். கொஞ்சம் இடத்தைப் பார்த்துக்கோங்கோ; சாப்பிட்டு, குழந்தைகளுக்கும் சாப்பாடு பண்ணி அழைச்சிண்டு வந்துடறேன்.”

“”இன்னும் சாப்பிடலியா நீங்க? ஏம்மா, நீ என்ன சாப்பிட்டே காலமே?”

“”பழையது.”

“”எங்கே?”

“”ஜட்ஜியாத்திலே!”

“”பார்த்தேளா, பெரிய மனுஷாள்னா இப்படின்னா இருக்கணும்! ஊருக்குப் போற குழந்தைக்கு, மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்சிண்டிருந்த பொண்ணுக்கு, கொஞ்சம் நல்ல சாப்பாடாப் போட்டு அனுப்பிச்சாதான் என்ன? ஒன்பதே கால் மணிக்கு, நான் புறப்படறபோது கொண்டுவிட்டா. அதுக்குள்ளே

சமையல் பண்ண முடியாதா என்ன? நல்ல குளிர்ந்த மனசு! பழையது சாப்பிடற ஆசாரம் அத்துப் போயிடப் போறதேன்னு கவலைப்பட்டுண்டு போட்டா போல் இருக்கு. ஏன் குழந்தை, அவாத்துலே யாராவது பழையது சாப்பிடுவாளோ?”

“”நான்தான் சாப்பிடுவேன்.”

“”ம்…ஹ்ம்; சரி. இப்பப் பசிக்கிறதோ உனக்கு?”

“”இல்லை.”

“”ஏதாவது சாப்பிடும்மா.”

“”சரி மாமி.”

“”நீங்க ஒரு பொட்டலம் சாம்பார் சாதமும் ஒரு தயிர் சாதமும் வாங்கிண்டு வாங்கோளேன்.”

“”நானே அழைச்சிண்டு போயிட்டு வரேனே.”

“”ரொம்ப நல்லதாப் போச்சு. இந்தாருங்கோ.”

“”என்னத்துக்குக் காசு? நான் கொடுக்கிறேன்.”

“”வாண்டாம்னு நீங்க எப்படிச் சொல்ல முடியும்? நான்னா அவளை அழைச்சிண்டு வரேன்!”

தர்மசங்கடமாக இருந்தது. வாங்கிக்கொண்டேன். பையனை எழுப்பினேன். அவசரமாகக் கூட்டத்தில் புகுந்து இரண்டையும் இழுத்துச் சென்றேன்.

“”இது யாருப்பா?”

“”இந்தப் பொண்ணு மாயவரம் போயிட்டுக் கல்கத்தாவுக்குப் போறா. உன்னோட இவளும் சாப்பிடறதுக்கு வரா.”

இரண்டு அநாதைகளும் சாப்பிடும்போது எனக்கு இனம் தெரியாத இரக்கம் பிறந்தது. தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள்! ஆனால் எவ்வளவு வித்தியாசம்! ஓர் அநாதை இன்னும் இரண்டுமணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டே இருக்கப் போகிறது.

“”ஸ்ஸ்.. அப்பா, அப்பா!” என்று பையன் வீரிட்டான். மிளகாய்!

“”தண்ணியைக் குடி… ம்… ம்.”

அந்தப் பெண் உடனே எழுந்து போய்க் கவுண்டரிலிருந்து கை நிறையச் சர்க்கரையை அள்ளி அவளிடம் கொடுத்தது.

சற்றுக் கழித்து, “”அம்பி, தயிர்சாதம் கட்டி கட்டியாக இருக்கு. இரு பிசைந்து தரேன். அப்புறம் சாப்பிடலாம்” என்று சாப்பிடுவதை விட்டுக் கையை அலம்பிவந்து ரெயில்வே சாதத்தை நசுக்கிப் பிசைந்து பக்குவப்படுத்திக் கொடுத்தது.

அவள் பிசைவதைப் பார்த்துப் பையன் என் பக்கம் திரும்பிப் புன்சிரிப்புச் சிரித்தான்.

“”ஏண்டா சிரிக்கிறே?”

“”அவ பிசைஞ்சு கொடுக்கிறாப்பா!” அதற்கு மேல் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.

அவனுக்குக் கையலம்பி, வாய் துடைத்துவிட்டதும் அவள்தான்.

“”இந்தா, ஜலம் குடி” என்று அவனுக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

“”வாண்டாம்.”

“”ஜலம் குடிக்காட்டா ஜீரணமாகாது. இதைக் குடிச்சுடு.”

பாடாகப் படுத்துகிறவன், பதில் பேசாமல் வாங்கிக் குடித்துவிட்டான். ஏதோ வருஷக்கணக்கில் பழகிவிட்டதுபோல, அவனைக் கையைப் பிடித்து ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டு வந்தது அந்தப் பெண். அவனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து கொண்டிருந்தான்.

“”கல்கத்தாவுக்குப் போறேங்கிறியே. அவாளைத் தெரியுமோ?”

“”தெரியாது மாமா. பெரிய வேலையிலே இருக்காராம் அவர். மூவாயிர ரூபாய் சம்பளமாம். குழந்தையை வச்சுக்கணுமாம். அதுக்குத்தான் என்னைக் கூப்பிட்டிருக்கா.”

எந்தக் குழந்தையையோ பார்த்துக்கொள்ள எங்கிருந்தோ ஒரு குழந்தை போகிறது. கண் காணாத தேசத்திற்கு ஒரு தாய் அந்தக் குழந்தையை அனுப்புகிறாள். அதுவும் ஒரு பாவாடையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பிவிட்டது.

“”ரொம்ப சமர்த்தும்மா இந்தக் குழந்தை” என்றேன் அம்மாளிடம்.

“”நாதனில்லாட்டாச் சமர்த்துத் தானா வந்துடறது. ஒட்டி ஒட்டிண்டு பழகறது அது. கல்கத்தாவுக்குப் போகாட்டால் நானே இதை வச்சுண்டிருப்பேன். பாருங்களேன் பசிக்கிறது கிசிக்கிறதுன்னு நாமாக் கேட்கிற வரையில் வாயைத் திறந்ததோ? என்னவோ பகவான்தான்காப்பாத்தணும்.”

பையன் ஆரஞ்சை மறுபடியும் கையில் எடுத்து வைத்துக் கொண்டான்.

“”ஏண்டா குழந்தை, உரிச்சுத் தரட்டுமாடா?” என்றாள் அம்மாள்.

“”வாண்டாம். ஊரிலே போய் அம்மாவை உரிச்சுக் குடுக்கச் சொல்லப் போறேன்.”

“”நானும் அம்மாதாண்டா.”

பையன் சிரித்து மழுப்பிவிட்டான். ஒரு நிமிஷமாயிற்று. “”உனக்கென்ன வயசு?” என்று திடீரென்று பையன் குஞ்சுவைப் பார்த்து ஒரு கேள்வி போட்டான்.

“”பத்து.”

“”பத்து வயசா? அப்பன்னா நீ வந்து அஞ்சாவது படிக்கிறியா!” என்று விரலை எண்ணிக்கொண்டே கேட்டான்.

“”இல்லை”

“”ஏண்டா, பத்து வயசுன்னா அஞ்சாவது படிக்கணுமா?”

“”ஆமாம்பா. எனக்கு ஆறு வயசு. ஒண்ணாவது படிக்கிறேன். ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து. அவ அஞ்சாவது.”

“”அவ படிக்கலைடா.”

“”நீ படிக்கலை?”

“”வீட்டிலேயே வாசிக்கிறியா?”

“”ம்ஹ்ம்”

“”அவ கல்கத்தாவுக்குப் போறாடா. அதான் படிக்கலை.”

அங்க எதுக்குப் போறாளாம்?”

“”வேலை பாக்கப் போறா?”

“”போப்பா… ஏண்டி, நீ வேலை பார்க்கப் போறியா?”

“”ஆமாம்.”

பையன் அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் கேட்டான்;

“”உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?”

அந்தப் பெண் வாய்விட்டுச் சிரித்தது. முதல் முதலில் அது சிரித்ததே அப்போதுதான்.

“”எனக்கு எப்படி சைக்கிள் விடத் தெரியும்? தெரியாது.”

“”அப்படீன்னா எப்படி வேலைக்குப் போவியாம்?”

“”நடந்து போவேன்.”

மறுபடியும் அவளைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான் பையன். அவன் அப்பா  சைக்கிளில் வேலைக்குப் போகும்போது அவள் மட்டும் எப்படி நடந்து போக முடியும் என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு குழந்தைகளும் வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வண்டியின் வேகத்தை ரஸித்துக்கொண்டிருந்தன.

“”இந்தப் பொண்ணு யாரை நம்பி இப்படிப் போறது?… போகிற இடம் எப்படி இருக்கோ!” என்று கேட்டேன்.

“”இந்த ஜட்ஜுக்கு ஒன்றுவிட்ட மச்சினராம் அவர். மூவாயர ரூபாய் சம்பளம் வாங்கறாராம் ஏதோ கம்பெனியிலெ. நம்ம பக்கத்துக் குழந்தைன்னு விசுவாசமாத்தான் இருப்பா. என்னதான் இருக்கட்டுமே, நல்ல சாப்பாடு, துணிமணியெல்லாம் கொடுக்கட்டும்; எத்தனை பண்ணினாலும் அது பிறத்தியார் வீட்டுக் குழந்தை, வேலைக்கு வந்திருக்கிற குழந்தைங்கிற நினைவு போயிடுமா அவாளுக்கு? இதுதான் அவாளைத் தாயார் தோப்பனார்னு நெனச்சுக்கமுடியுமோ? ஆனா இது ஒட்டி ஒட்டிண்டு வித்தியாசமில்லாம பழகுறதைப் பாத்தா எங்கேயும் சமாளிச்சுண்டுடும் போல்தான் இருக்கு. இருந்தாலும் பெத்தவாகிட்ட இருக்கிற மாதிரி இருக்க முடியுமா, ஸ்வாமி? நீங்களே சொல்லுங்கோ.”

எனக்கு வயிற்றைக் கலக்கிற்று. நானே முகம் தெரியாத உற்றார் உறவினர் இல்லாத புது ஊருக்குப் போவதுபோல ஒரு சூன்யமும் பயமும் என்னைப் பற்றிக்கொண்டன.

“”கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான். இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதைவிட்டு விட்டிருக்கிறார்கள்?” என்றேன்.

“”கடவுள்தான் காப்பாத்தணும். வேறே என்ன சொல்லத் தெரியறது நமக்கு? சுத்திச் சுத்தி அதுக்குத்தான் வந்துடறோம். ஆனா, இப்படி அனுப்பும்படியான நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே. அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? அந்த வாத்தியாரோட குழந்தைகளுக்கெல்லாம் தலைக்கு இத்தனைன்னு பள்ளிக்கூடம் வச்சிருக்கிறவன் படி போட்டிருந்தான்னா இப்படிக் கண்காணாத தேசத்துக்கு இது போகுமா?”

“”அப்புறம் ஜட்ஜு வீட்டுக் குழந்தைகளை யாரு

பாத்துப்பா?”

“”அதுவும் சரிதான்.”

“”வீட்டுக்கு வீடு வாசல்படி. கொடுக்கிறவனும் வாத்தியார் மாதிரி ஆண்டியோ என்னமோ?” என்றேன்.

ஒன்றும் புரியவில்லை.

குழந்தையைப் பார்த்து எல்லார் நெஞ்சமும் இளகிற்று. பக்கத்தில் தஞ்சாவூர், ஐயம்பேட்டை என்று நடுவில் ஏறி உட்கார்ந்து கொண்டவர்களுக்கு அரைகுறையாகக் கேட்டாலும் நெஞ்சு இளகிற்று. அம்மாள் உட்கார்ந்திருந்த பலகையின் கோடியில் உட்கார்ந்திருந்தவர்- ராவ்ஜி மாதிரி இருந்தது. உதட்டைக் கடித்து ஜன்னலுக்கு வெளியே தலையைத் திருப்பிக்கொண்டார். நெஞ்சைக் குமுறி வந்த வேதனையை அடக்கிக்கொண்டு தைரியசாலியாக அவர் பட்ட பாடு நன்றாகத் தெரிந்தது.

கும்பகோணம் வந்துவிட்டது.

“”போயிட்டு வரேம்மா. குழந்தே, போயிட்டு வரட்டுமா?” என்று ஒரு ரூபாயை அதன் கையில் வைத்தேன்.

“”நீங்க எதுக்காகக் கொடுக்கறேள்?” என்று அம்மாள் தடுத்தாள்.

“”எனக்கும் பாத்யமுண்டு. நீங்களும் அழச்சிண்டுதானே போறேள்? இது வாத்தியார் குழந்தைதானே? உங்க குழந்தையில்லையே? நீங்க கொண்டாடற பாத்யம் எனக்கும் உண்டும்மா. நான் என்ன செய்யறது. எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு. எனக்கும் இதுக்கு மேலே வக்கில்லை.”

“”ஹ்ம்” என்று இரட்டைநாடிச் சரீரத்தில் ஒரு பெருமூச்சு வந்தது. “”வாங்கிக்கோடிம்மா. உங்களுக்கு ஒரு குறைவும் வராது, ஸ்வாமி” என்றாள் அம்மாள்.

“”யப்பா… இதைக் கொடுத்துட்டு வரேம்பா” என்று என் பையன் ஆரஞ்சைக் காண்பித்தான்.

“”கொடேன்டா, கேட்பானேன்?”

“”வாண்டாண்டா, கண்ணு. குழந்தை, பாவம். அம்மா உரிச்சுக் குடுக்கணும்னு சொல்லிண்டிருந்தது.”

“”யப்பா… வாங்கிக்கச் சொல்லுப்பா” என்று பையன் சிணுங்கினான்.

“”வாங்கிக்கோம்மா.”

பெண் வாங்கிக்கொண்டது.

“”ஸ்வாமி! நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்திருக்கேள். வாடா கண்ணு. எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுப் போ” என்று அம்மாள் அழைத்தாள். பையன் கொடுத்துவிட்டு ஓடிவந்தான்.

என் மெய் சிலிர்த்தது. முகத்தைக் கூடியவரையில் யாரும் பார்க்காமல் அப்பால் திருப்பிக்கொண்டு கீழே இறங்கி அவனைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அவனுக்கு நடக்கவா தெரியாது? எனக்கு என்னவோ வாரியணைத்துக் கொள்ளவேண்டும் என்று உடம்பு பறந்தது. தூக்கி எடுத்துத் தழுவிக்கொண்டே போனேன். உள்ளம் பொங்கி வழிந்தது. அன்பையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவுகிற ஆனந்தம் அது

 

http://thoguppukal.wordpress.com/2011/01/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/


அன்பளிப்பு – கு.அழகிரிசாமி

 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமைதாமே என்று, இரவு வெகுநேரம் கண்விழித்துப் படித்துக் 

கொண்டிருந்து விட்டேன். சனிக்கிழமை இரவு படுத்துக் கொள்ளும் போது மணி
இரண்டிருக்கும். எவ்வளவு காலதாமதமாகித் தூங்கப் போனாலும், தூக்கம் வருவதற்கு
மேற்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது எனக்கு ஆகும். எனவே இரண்டரைக்குத்தான் தூங்க
ஆரம்பித்திருப்பேன். சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது, முதுகில் நாலைந்து
கைகள் வந்து பலமாக அடிக்க ஆரம்பித்து விட்டன. அடிகளால் ஏற்பட்ட வலியை விட,
அவற்றால் ஏற்பட்ட ஓசை  மிகப் பெரியதாக இருந்தது. தூக்கம் கலைந்து கண்
விழிப்பதற்குள், வலதுபுஜத்தில் எறும்பு கடிப்பதுபோல இருந்தது.

“தூங்குமூஞ்சி மாமா!….”

“மணி ஏழரையாகிவிட்டது….”

“எழுந்திருக்கிறீர்களா, பலமாகக் கிள்ளவா”

“முகத்தில் ஜலத்தைக் கொண்டுவந்து தெளித்துவிடுவோம். இன்னும் இரண்டு
நிமிஷத்துக்குள் எழுந்துவிட வேண்டும்”…

இப்படியே பல குரல்கள் பேசிக் கொண்டிருந்தன. பேச்சின் நடுவே இரண்டு அல்லது
மூன்று பேர் சேர்ந்து ‘சிரிடா சிரி’ என்று சிரித்தார்கள். கண்
விழித்துவிட்டேன்.

“யார் அது? உம்! இதோ வருகிறேன். தூக்கத்திலே வந்து….” என்று அதட்டிக்கொண்டே
எழுந்து உட்கார்ந்தேன். ஒரு பையனைத் தவிர, அதாவது சாரங்கராஜனைத் தவிர, மற்ற
எல்லாக் குழந்தைகளும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

”கடிகாரத்தைப் பாருங்கோ மாமா! மணி எட்டு ஆகப் போகிறது! இன்னும் தூங்கு மூஞ்சி
மாதிரி தூங்கிக் கொண்டு….” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள் சித்ரா. “அது
இருக்கட்டும், விடிந்ததும் எங்கே இப்படிப் பட்டாள ‘மார்ச்’ பண்ண
ஆரம்பித்துவிட்டது?” என்று கேட்டேன்.

“இரவில் வெகு நேரம் கண் விழித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எங்கள் பாடப்
புத்தகத்தில் போட்டிருக்கிறது, மாமா” என்றான், இதுவரையில் மௌனமாக இருந்த
சாரங்கராஜன்.

”நான் படித்த பாடப் புத்தகத்திலும் அப்படித்தான் போட்டிருந்தது! என்ன செய்வது?”
என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் சிறுவன் சாரங்கனிடம் அவ்விதம்
சொல்லாமல், “நாளை முதல் சீக்கிரமாகவே தூங்கி விடுகிறேன். கண் விழிக்கவில்லை”
என்றேன். அவனுக்குப் பரம சந்தோஷம்… அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக்
கொண்டதற்காக..

மறு நிமிஷத்தில், எல்லோருமாகச் சேர்ந்து ஒருமிக்க, “என்ன புத்தகம் கொண்டு
வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

“ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை!”

“பொய், பொய், சும்மா சொல்கிறீர்கள்!”

”நிஜமாக, ஒரு புத்தகமும் கொண்டு வரவில்லை”

“நேற்று புத்தகம் கொண்டு வருவதாகச் சொன்னீர்களே!”

“நேற்றுச் சொன்னேன்…”

“அப்புறம் ஏன் கொண்டு வரவில்லை?”

”புத்தகங்கள் ஒன்றும் வரவில்லை. வந்திருந்தால் தான் கொண்டு வந்திருப்பேனே.”

”பிருந்தா! மாமா பொய் சொல்கிறார்; கொண்டு வந்து எங்கேயாவது ஒளித்து
வைத்திருப்பார். வாருங்கள், தேடிப் பார்க்கலாம்” என்றாள் சித்ரா.

அவ்வளவுதான், என்னுடைய அறை முழுவதும் திமிலோகப் பட்டது. ஒரே களேபரம். சித்ரா
மேஜையைத் திறந்து உள்ளே கிடக்கும் பெரிய காகிதங்களையும், துண்டுக்
காகிதங்களையும், கடிதங்களையும் எடுத்து வெளியே எறிந்தாள். துழாவித் துழாவிப்
பார்த்தாள். மேஜையில் புத்தகம் எதுவும் இல்லாது போகவே, அதிலிருந்து
சாவிக்கொத்தை எடுத்துப் பெட்டியைத் திறந்து தேட ஆரம்பித்துவிட்டாள்.

பிருந்தாவும், சுந்தரராஜனும் பீரோவைத் திறந்து புத்தகங்களை எடுத்துக் கண்டபடி
கீழே போட்டார்கள்.

சின்னஞ் சிறு குழந்தையான கீதா கீழே உட்கார்ந்து, இறைந்து கிடக்கும் ஆங்கிலப்
புத்தகங்களை அர்த்தமில்லாமல் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்ரா பெட்டியில் உள்ள சலவைத் துணிகளை எடுத்து வெளியே போட்டாள். என்னுடைய பழைய
டைரிகள், எனக்கு வந்த பழைய கடிதங்கள், இரண்டொரு புத்தகங்கள் – எல்லாம் ஒரே
குப்பையாக வந்து வெளியே விழுந்தன.

பீரோவைச் சோதனை போட்ட பிருந்தாவும் சுந்தரராஜனும் ஜன்னல்களில் அடுக்கியிருந்த
புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டார்கள்.

சாரங்கன் ஒருவன் தான் என்னோடு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன்
எப்பொழுதுமே குறும்பு பண்ணமாட்டான்; விளையாட மாட்டான். மற்றக் குழந்தைகள்
எல்லோரும் ஒரு விதம்; அவன் ஒருவிதம். என்னிடத்தில் பயபக்தியோடு நடந்து கொள்ளும்
சிறுவன் அவன் ஒருவன் தான்.

ஜன்னலில் இருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றாக வந்து விழும் போது, ஒரே சந்தடியும்
இரைச்சலுமாய்ப் போய் விடவே, சமையற் கட்டிலிருந்து என் தாயார் ஓடிவந்தாள். வந்து
பார்த்தால் எல்லாம் ஒரே கந்தர் கோளமாகக் கிடந்தது.

“என்னடா இது, இந்தக் குழந்தைகள் இப்படி அமர்க்களம் பண்ணுகிறார்கள், நீ பேசாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறாயே” என்று என்னைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாள்.

“நீ வீட்டுக்குள் போ அம்மா. இது எங்கள் விவகாரம். நீ எதற்கு வேலையைப்
போட்டுவிட்டு இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்?” சொல்லிவிட்டுச்
சிரித்தேன்.

”இவ்வளவு வயதாகியும் இன்னும் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிக்
கொண்டிருப்பது ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே அம்மா
உள்ளே போய்விட்டாள். பாதி தூரம் போனதும் அங்கே நின்ற வாக்கிலேயே, “ஏண்டா நீ
எப்போது ஸ்நானம் பண்ணப் போகிறாய்?” என்று இரைந்து கேட்டாள்.

“இரண்டு நிமிஷத்திலேயே வந்து விடுகிறேன்” என்று அம்மாவுக்குப் பதில் குரல்
கொடுத்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பும்போது, ஜன்னலிலிருந்து பத்துப் பதினாறு
கனமான புத்தகங்கள் ‘தட தட’ வென்று அருவி மாதிரி கீழே விழுந்தன. ஒரு பழைய தமிழ்
அகராதி அட்டை வேறு புத்தகம் வேறாகப் போய் விழுந்தது. குப்புற விழுந்த சில
புத்தகங்கள் மீது சில கனமான புத்தகங்கள் அமுக்கவே கீழே அகப்பட்ட புத்தகங்கள்
வளைந்து, ஒடிந்து, உருக்குலைந்து விட்டன. புத்தகங்கள் ஒரே மொத்தமாகக் கீழே
விழுந்துவிட்டதைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் பயந்ஹ்டு விட்டார்கள். கீழே
விழுந்து கிடக்கும் புத்தகங்களையும் என்னையும் திரும்பத் திரும்பப்
பார்த்தார்கள். கீழே விழுந்தவை மொத்தம் அறுபது புத்தகங்களாவது இருக்கும்.
குழந்தைகளின் முகத்தில் பயத்தின் சாயல் படர ஆரம்பித்துவிட்டது. நான் என்ன
சொல்லப் போகிறேனோ என்று எதிர்பார்த்துக் கொண்டு கண்ணிமைக்காமல் என் முகத்தையே
பார்த்தார்கள். மற்றக் குழந்தைகளின் பயத்தைப் பார்த்த ஐந்து வயது நிரம்பாத
கீதாவும் பயந்து போய் என்னைப் பார்த்தாள். நான் வேண்டுமென்றே மௌனமாக இருந்தேன்.
புத்தகங்களையும் குழந்தைகளையும் வெறித்த பார்வையோடு பார்த்தேன். மௌனம்
நீடித்தது. ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்… குழந்தைகளுக்கு என்
மௌனம் சித்திரவதையாக இருந்தது. ஒவ்வொரு குழந்தையும் மூச்சுப்
பேச்சிழந்துவிட்டது. சித்ராவின் முகத்தில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. பயம்
அறியாத சித்ராவே பயந்து விட்டாள். என்னை ஒட்டி உட்கார்ந்து இருந்த சாரங்கன்
நாலு அங்குலம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். என்னைத் தொடவே அவனுக்குப் பயமாகி
விட்டது. அவனுடைய சலனத்தால் தூண்டப்பெற்று, “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று
கிளம்பிவிட்டாள் பிருந்தா.

”பிருந்தா! இங்கே வா” என்று யாதொரு உணர்ச்சிப் பிரதிபலிப்பும் இல்லாமல்
சொன்னேன்.

நான் சொன்னபடி அவள் உள்ளே வந்தாள். இதற்கு மேல் குழந்தைகளை பயமுறுத்த நான்
விரும்பவில்லை.

எழுந்து நின்றேன். என் அறையின் மற்றொரு ஜன்னல் பக்கம் சென்றேன். அங்குள்ள
புத்தகங்களில் கை வைத்தேன். என் ஒவ்வொரு அசைவையும் குழந்தைகளின் கண்கள் சர்வ
ஜாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருந்தன. புத்தகங்களின் நடுவில் பெரிய
புத்தகங்களுக்குக் கீழே இருந்த பதின்மூன்று கதைப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு
திரும்பினேன். கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டு, “தோற்றுப் போய்விட்டீர்களா?
நீங்கள் தேடு தேடு என்று தேடினீர்களே, புத்தகங்கள் உங்களுக்குத் தட்டுப்பட்டதா?
வாருங்கள், வாருங்கள்” என்று ஒரே உற்சாகத்துடன் சொன்னேன். குழந்தைகளுக்கு உயிர்
வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஓடோடியும் வந்தன. சாரங்கன் என் பக்கம் நெருங்கி
உட்கார்ந்தான். என் இடது கையில் சாய்ந்தும் உட்கார்ந்து கொண்டான். சித்ராவுக்கு
ஏனோ என் மேல் கோபம் வந்துவிட்டது. வெகுநேரம் மௌனமாக இருந்து அவர்களைப் பயத்தில்
ஆழ்த்தி வைத்ததை எண்ணிக் கோபப் பட்டாளோ? அல்லது தான் பயந்ததற்காக வெட்கப்பட்டு,
தான் பயப்படவில்லை என்பதாகக் காட்டிக்கொள்ளுவதற்கும், அதன் மூலம் வெட்கத்தை
மறைப்பதற்குமாகக் கோபப்பட்டாளோ? ‘விறு விறு’ என்று கட்டிலில் ஏறினாள். எனக்குப்
பின்புறமாக வந்து, “பொய்தானே சொன்னீர்கள், புத்தகங்கள் கொண்டு வரவில்லை என்று?
உம், இனிமேல் பொய் சொல்லாதீர்கள், சொல்லவில்லை என்று சொல்லுங்கள்” என்று
சொல்லிவிட்டு, “சொல்லுங்கள், சொல்லுங்கள்” என்று எச்சரித்துக் கொண்டே முதுகில்
தன் பலங்கொண்ட மட்டும் அடித்தாள்.

“ஐயோ! ஐயோ! பொய் சொல்லவில்லை. இனிமேல் பொய் சொல்லவில்லை!” என்று வேதனையோடு
சொல்கிறவன் மாதிரி சொன்னேன். குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள்.

சுந்தரராஜன் வந்து, “சாரங்கா, அந்தப் பக்கம் நகர்ந்துக்கடா” என்று சொல்லி
அவனைத் தள்ளிவிட்டு எனக்கும் அவனுக்கும் நடுவில் வந்து உட்கார்ந்தான். என்
கையிலுள்ள அத்தனை புத்தகங்களையும் ‘வெடுக்’கென்று பிடுங்கிக் கொண்டு ‘விறுவிறு’
என்று ஒவ்வொன்றின் பெயரையும் உரக்க வாசித்தான். கடைசிப் புத்தகத்தின் பெயரை
வாசித்ததும் ‘பளிச்’ சென்று எழுந்து “இத்தனையும் எனக்குத்தான்” என்று சொல்லிக்
கொண்டே வெளியே கிளம்பிவிட்டான்.

குழந்தைகள் உடனே அழுவதற்கு ஆயத்தமாகி விட்டன. அப்பொழுது மௌனமாக இருந்தவன்
சாரங்கன்தான்.

“சுந்தர்! இதோ பார். இந்தப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஓடினால் அப்புறம்
உனக்குப் புத்தகங்களே கொண்டு வர மாட்டேன்” என்றேன்.

அவன் ‘கடகட’வென்று சிரித்துக் கொண்டே, “பாவம். மாமா பயந்து விட்டார்!” என்று
கூறிக் கொண்டு உள்ளே வந்தான்.

புத்தகங்களை என் கையில் வாங்கி ஏழு புத்தகங்களில், “என் பிரியமுள்ள
சித்ராவுக்கு அன்பளிப்பு” என்று எழுதி என் கையெழுத்தையும் போட்டுச் சித்ராவிடம்
கொடுத்தேன். மீதியுள்ள ஆறு புத்தகங்களிலும், ”என் பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு
அன்பளிப்பு” என்று எழுதி அவ்விதமாகவே கையெழுத்திட்டுச் சுந்தரராஜனிடம்
கொடுத்தேன்.

பிருந்தாவும் தேவகியும் “எனக்கு?” என்று ஏககாலத்தில் கேட்டனர்.

“சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். இதுவரையிலும்
நீங்கள் மற்றப் புத்தகங்களை எப்படி வாங்கிப் படித்தீர்களோ, அப்படியே
இப்பொழுதும் வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

அந்த இரண்டு பெண்களும் நான் சொன்னதை ஆட்சேபமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

“மத்தியானத்துக்குள் இந்த ஏழு புத்தகங்களையும் படித்து விடுவேன். படித்து
முடித்த பிறகு வருகிறேன், மாமா” என்று கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டாள்
சித்ரா. அவளைத் தொடர்ந்து, சாரங்கனைத் தவிர எல்லோரும் எழுந்து தத்தம்
வீடுகளுக்குக் கிளம்பினார்கள். சாரங்கன் இரண்டொரு தடவை என் முகத்தையே ஏறிட்டுப்
பார்த்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்
என்பதை அறிவிக்கும் சலனமும் முகத்தில் இல்லை. அப்பொழுது அவன் அவ்வாறு
பார்த்ததற்கு ஒரு முக்கியத்துவமோ, ஒரு அர்த்தமோ இருந்ததாக நான் கருதவும் இல்லை.
நான் எழுந்து குப்பையாகக் கிடக்கும் புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்து
அவையவை இருக்கவேண்டிய இடத்தில் வைக்க ஆரம்பித்தேன். சுருண்டு நசுங்கிக் கிடந்த
புத்தகங்களை நிமிர்த்துச் சரி பண்ணினேன். அவற்றின்மீது பெரிய புத்தகங்களைப்
பாரமாகத் தூக்கி வைத்தேன். இந்த வேலைகளைச் செய்யும்போது சாரங்கன் நான்
எதிர்பாராமலே எனக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.

“எந்த வகுப்பு பாஸ் பண்ணினால் இந்தப் புத்தகத்தைக் கஷ்டமில்லாமல் படிக்கலாம்?”
என்று ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான் சாரங்கன். அவன்
குரலில், மூச்சைத் திணற வைக்கும் சங்கோஜம் நிறைந்திருந்தது. அது மட்டுமின்ரி,
பயந்தவனைப் போல, முயற்சியில் தோல்வியடைந்து புண்பட்டவனைப் போல, அவன் பேசினான்.

“சாரங்கா! நீ கெட்டிக்காரப் பையன், உன் வயதில் நான் இவ்வளவு கெட்டிக்காரனாக
இருந்ததில்லை. அதனால் நீ எஸ். எஸ். எல். ஸி  வகுப்புக்கு வந்ததும் இந்தப்
புத்தகத்தைச் சிரமமில்லாமல் படித்துப் புரிந்து கொள்ளலாம் என்று பரிவோடு
சொன்னேன்.

அவன் கையில் வைத்துக் கொண்டிருந்தது வால்ட் விட்மனின் கவித் தொகுதி.

“அப்படியானால் இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறது” என்று அவன் தனக்குத்தானே
சொல்லிக் கொண்டான். பிறகு கையிலுள்ள புத்தகத்தை ஜன்னலில் கொண்டு போய்
வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தான்.

என் தாயார் கோபமாக என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கே வந்தாள். “ஏண்டா, நான்
எத்தனை தட்வை உனக்குச் சொல்லுகிறது? வெந்நீர் ஆறி அலர்ந்து ஜில்லிட்டுப்
போய்விட்டது” என்று சொல்லிவிட்டு “இந்தப் பொல்லாத குட்டிகளை இப்படி அமர்க்களம்
பண்ண விடலாமா? என்ன பிரியமோ இது? ஊரார் குழந்தைகளுக்கு இத்தனை சலுகை
காட்டுகிறவர்களை நான் பார்த்ததே இல்லை…. நீ ஸ்நானம் பண்ணப் போடா, நான்
எடுத்து வைக்கிறேன்” என்று வந்தாள் அம்மா.

“அம்மா! உனக்குப் புத்தகங்களை இனம் பிரித்து அடுக்கத் தெரியாது. நீ போ, நான்
ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.”

”இன்றைக்கு அடுக்கி வைக்கவேண்டியது; நாளைக்கு அவர்கள் வந்து குப்பையாக்க
வேண்டியது; அப்புறம் பழையபடியும் அடுக்கி வைக்க வேண்டியது. உனக்கு வேறு வேலை
என்ன?” என்று சொல்லிவிட்டு அவள் சமையற் கூடத்துக்குச் சென்றுவிட்டாள்.

நானும் வெகு சீக்கிரத்திலேயே ஸ்நானம் பண்ணக் கிளம்பிவிட்டேன். அப்பொழுது
என்னோடு நடுக்கூடம் வரையில் நடந்து வந்தான் சாரங்கன். அப்புறம் பளிச்சென்று மறு
பக்கமாகத் திரும்பி, “போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டான்.

“அம்மா! குழந்தைகளை இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறாயே! அதுகள் ஒவ்வொன்றும் ஒரு
பொக்கிஷம்!” என்று சொலிவிட்டு ஸ்நான அறைக்குள் சென்றேன். நான் சொன்னது புகை
மூட்டிய அடுப்பங் கரையில் திக்குமுக்காடும் அம்மாவுக்குக் கேட்டதோ என்னவோ?

***

ஒவ்வொரு குழந்தையும் ஒரு பொக்கிஷந்தான். மாம்பலத்துக்கு வீடு மாற்றிவந்ததை என்
பாக்கியம் என்றே நான் கருதினேன். இங்கே வந்திராவிட்டால் இந்தப் பொக்கிஷங்களை
நான் சந்தித்திருக்க முடியுமா? இங்கு வந்து நான்கு வருஷங்களாகின்றன. வீட்டில்
நானும் என் தாயாருந்தான். ஒரு பெரிய வீட்டில் ஒரு பகுதியிலே தான் எங்கள்
குடித்தனம். வந்து ஆறு மாதங்களாகும் வரையில் இந்தக் குழந்தைகளின் நட்பு எனக்கு
ஏற்படவே இல்லை. ஒரு நாள் திடீரென்று இரண்டு குழந்தைகள் சுந்தரராஜனும்
சித்ராவும் வந்தார்கள். அன்று வநதது போலவே தினமும் வந்தார்கள். சில
நாட்களுக்குள் சம்பிரதாய மரியாதைகள், நாசூக்குகள் எல்லாம் மறைந்தன. உண்மையான
மனப்பாசம் கொள்ளத் தொடங்கினோம். ஒன்றாக உட்கார்ந்து கதைகள் படிப்பது,
பத்திரிகைகள் வாசிப்பது, கதைகள் சொல்லுவது, செஸ் விளையாடுவது – இப்படிப் பொழுது
போக்கினோம். நான் வேலை செய்யும் பத்திரிகாலயத்துக்கு மதிப்புரைக்கு வரும்
புத்தகங்கள் சிலவற்றாஇ எடுத்து, விமர்சனம் எழுதும்படி தலைமையாசிரியர் என்னிடம்
கொடுப்பார். அப்படி மதிப்புரைக்காக வந்த புத்தகங்கள் என்னிடம் ஏராளமாக இருந்தன.
குழந்தைகளுக்கு அவை நல் விருந்தாக இருந்தன. ஒரே ஆவலோடு ஒரு சில தினங்களுக்குள்
அத்தனை புத்தகங்களையும் சுந்தரராஜனும் சித்ராவும் படித்துத்
தீர்த்துவிட்டார்கள். அவர்களுடைய புத்தகத் தேவையை என் மதிப்புரைப்
புத்தகங்களைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவ்வப்போது சில குழந்தைப்
புத்தகங்களை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பேன். அதனால், அவர்கள்
தினந்தோறும் நான் காரியாலயம் போகும்போது, “இன்று ஞாபகமாகப் புத்தகங்கள் கொண்டு
வரவேண்டும்” என்று சொல்லியனுப்புவார்கள். சாயங்காலத்தில் வெறுங்கையோடு வீடு
திரும்பினால் ஒரே கலாட்டாதான்.

சுந்தரராஜனும் சித்ராவும் நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்
குழந்தைகள்; பணக்காரக் குழந்தைகள். குழந்தை என்று சொன்னாலும் சுந்தரராஜனுக்குப்
பதின்மூன்று வயது; சித்ராவுக்கு ஒன்பது வயது. இந்த இருவரின் புத்திசாலித்தனம்,
களை நிறைந்த தோற்றம்,  எல்லாவற்றையும் விடச் சீரிய மனப்பாங்கு – எல்லாம்
சேர்ந்து என்னை வசீகரித்தன; என்னை ஆட்கொண்டு விட்டன. அவர்கள் மேல் நான்
வைத்திருந்த அன்பு இம்மட்டு அம்மட்டு என்றில்லை. தினந்தோறும் அவர்களுக்குப்
புதியதொரு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் துடித்துக்
கொண்டிருக்கும். இவர்களுடைய நட்பு தொடங்கி சில வாரங்கள் ஆவதற்குள்ளாக மற்றக்
குழந்தைகளின் பரிச்சயமும் எனக்கு ஏற்பட்டது. பிருந்தா, தேவகி, கீதா,
சாரங்கராஜன் ஆகியவர்களும் வர ஆரம்பித்தார்கள். பிருந்தாவும் தேவகியும்
சித்ராவுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சமவயதுக் குழந்தைகள். கீதா, தேவகியின்
தங்கை. சாரங்கராஜன் சுந்தரராஜனுடைய பள்ளித் தோழன். எல்லோருடைய வீடுகளும்
ஒன்றையடுத்து ஒன்றாக இருந்தன. இவர்களில் சாரங்கனுடைய வீட்டார் தான் வாடகை
வீட்டில் குடியிருப்பவர்கள். மற்றக் குழந்தைகள் சொந்த வீடு உள்ள பணக்காரக்
குழந்தைகள்.

எல்லோரிடத்திலும் நான் ஒன்று போலவே அன்பாக இருந்தேன். சுந்தரராஜனும் சித்ராவும்
எனக்கு முதலில் பரிச்சயமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்களிடத்தில் எனக்கு
ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. ஆனால் வெளிப்படையான பேச்சிலும் நடவடிக்கைகளிலும்
ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் நான் வித்தியாசம் காட்டி நடந்து
கொள்ளவில்லை. உள்ளன்பிலும் வேற்றுமை காட்டவில்லை. முன்னால் சொன்னதுபோல ஏதோ ஒரு
அலாதிப் பிரியம் சித்ராவிடமும் அவளது அண்ணனிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால்
குழந்தைகளோ என்னை ஒரே மாதிரி நேசித்தன. அவர்களுடைய பிரியத்தில் வேற்றுமை இல்லை.
ஒவ்வொரு குழந்தையும் தனக்காகவே இந்த உலகத்தில் பிறந்த நண்பன் என்று என்னை
நினைத்தது. ஒவ்வொன்றும் ஒரு மகத்தான நம்பிக்கையாக, ஒரு பெரிய ஆறுதலாக, ஒரு நல்ல
வழிகாட்டியாக என்னைக் கருதியது. எந்த விதத்திலும் தனக்குச் சமதையான ஜீவன் என்று
என்னைக் கருதியது. குழந்தைகள் என்னைப் பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல்,
நட்பு முறையில் கைகோத்துக் கொள்ள வந்தார்கள். இவர்கள் என்னோடு விளையாடினார்கள்;
என்னோடு சண்டை போட்டார்கள்; என்னை அடித்தார்கள்; என்னைக் கண்டித்தார்கள்; என்னை
மன்னித்தார்கள்; என்னை நேசித்தார்கள்.

உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது
விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு
விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப்
பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி
அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத
குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி
கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு
என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக்
குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன்.
உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்.
மாம்பலத்தில் எனக்கு இவர்கள்தான் நண்பர்கள். குழந்தைகளுடன் இம்மாதிரிப்
பழகுவதும் இம்மாதிரி விளையாடுவதும் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி மக்களுடன் குடித்தனம் செய்யும்
தகப்பனாகக் காணத்தான் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக்
கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?

பதின்மூன்று புத்தகங்களை எடுத்துக் கொடுத்த அந்தத் தினம், அந்த ஞாயிற்றுக்கிழமை
கழிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். பிருந்தா ஜுரத்தோடு படுத்துவிட்டாள்.
அவளுடைய பெற்றோர்களை எனக்கு நேரில் தெரியாது. அதனால் அவளைப்
போய்ப்பார்த்துவிட்டு வர எனக்கு சங்கோஜமாக இருந்தது. ஆனால் மற்றக்
குழந்தைகளிடத்தில், “பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?” என்று தினமும்
விசாரித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகள் அதற்கு எப்படிப் பதில் சொல்லும்!
ஜுரம் அதிகமாக இருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று அவர்களுக்குச் சொல்லத்
தெரியவில்லை. “பிருந்தா எப்போது பார்த்தாலும் படுத்துக் கொண்டே இருக்கிறாள்”
என்று மட்டும் தெரிவித்தார்கள்.

ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். வீட்டு முற்றத்தில் ஈஸிச்சேரைப் போட்டுக்
காற்றாட நிலா வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது தெரு வழியாகப்
போய்க் கொண்டிருந்த பிருந்தாவின் வீட்டு வேலைக்காரனை அழைத்து, “பிருந்தாவின்
உடம்பு எப்படி இருக்கிறது? ஜுரம் குறைந்திருக்கிறதா” என்று கேட்டேன்.

”இல்லை ஸார், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. எதுவும்
சாப்பிடுவதில்லை. இந்த நான்கு நாட்களில் குழந்தை துரும்பாக மெலிந்து
போய்விட்டது. தூக்கத்தில் உங்களை நினைத்துத்தான் என்னென்னவோ புலம்பிக்
கொண்டிருக்கிறாள்” என்றான் வேலைக்காரன்.

”என்னை நினைத்துப் புலம்புகிறாளா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“ஆமாம் ஸார். நேற்று ராத்திரிகூட ‘மாமா புத்தகம்’, ‘மாமா புத்தகம்’ என்று
என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள்” என்றான்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இந்த குழந்தையைப் போய்ப் பார்க்காமல்
இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். என் சங்கோஜத்தை மூட்டை கட்டி வைத்து
விட்டு மறுநாள் காலையில் அவசியம் போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று
தீர்மானம் செய்து கொண்டேன். “போய்வா” என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு,
தனியாகப் படுத்து என்னென்னவோ யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில்
என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது.
அவ்வளவுதான், உடனே எழுந்து வீட்டுக்குள்போய் சட்டையை மாட்டிக் கொண்டு ‘விறு
விறு’ என்று பிருந்தாவின் வீட்டுக்குச் சென்றேன். அவளுடைய பெற்றோர்கள் என்னை
உள்ளே வரும்படி சொன்னார்கள். பிருந்தா படுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப்
பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன். அவள் கண்களை வெறுமனே
மூடிக் கொண்டிருந்தாள்.

”பிருந்தா!” என்றேன்.

கண் விழித்து என்னைப் பார்த்தாள். அப்போது அவளுடைய முகத்தில் யாதொரு மாறுதலும்
ஏற்படவில்லை. அப்புறம் ஒருமுறை கண்களை மூடித் திறந்து என்னை நன்றாக உற்றுப்
பார்த்தாள். ஒரு நிமிஷம் இப்படியே பார்த்துவிட்டு, திடீரென்று ‘மாமா!’ என்று
உரக்கக் கூவினாள்; அப்படியே எழுந்து உட்கார்ந்து விட்டாள்.

“பிருந்தா! படுத்துக்கொள் அம்மா” என்று சொன்னேன்.

அவள் கேட்கவில்லை. எழுந்து என் பக்கம் வந்தாள். என்னைக் கட்டிக் கொண்டு, என்
தோள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவளுடைய உ டம்பு அனலாகச் சுட்டது.
அவளைத் தட்டிக்கொடுத்து, படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்தேன்.

“எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்றாள் பிருந்தாவின் தாயார்.

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. மௌனமாக உட்கார்ந்து
கொண்டிருந்தேன். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்து
விட்டு, வீட்டுக்கு வருவதற்காகப் புறப்பட்டு விட்டேன்.

”போகவேண்டாம் இங்கேயே இருங்கள் மாமா!” என்று பிடிவாதம் பிடித்தாள், பிருந்தா.
அப்புறம் அவளைப் பலவிதமாகச் சமாதானப்படுத்தி, “நாளைக் காலையில் வருகிறேன்”
என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவ்விதமே மறுநாள் காலையில் சென்றேன். வெகு நேரம் அங்கேயே இருந்தேன். அவள்
ஜுரத்தினால் கஷ்டப்படுகிறவள் மாதிரியே இல்லை. என்னோரு பேசிக்கொண்டு தான்
இருந்தாள். ஆபிசுக்கு நேரமாகி விட்டதென்று அவளிடம் கூறிவிட்டு வெளியே எழுந்து
வந்தேன். தெருவோடு வந்து கொண்டிருக்கும்போது சாரங்கன் தன் வீட்டு ஜன்னல் வழியாக
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த வாக்கிலேயே, “மாமா” என்று
கூபிட்டான். நான் திரும்பிப் பார்ப்பதற்குள்ளாகத் தெருவுக்கு ஓடி வந்து
விட்டான்.

”எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்” என்று கையைப் பிடித்து இழுத்தான்.

“உங்கள் வீட்டிற்கு எதற்கு?”

”பிருந்தா வீட்டுக்கு மட்டும்…”

“பிருந்தாவுக்கு ஜுரம். அதனால் போய்ப் பார்த்து விட்டு வந்தேன்.”

“ஊஹூம், எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.”

“சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையைவிடு. எனக்கு ஆபிசுக்கு நேரமாகி
விட்டது.”

நான் சொன்னபடியே கையை விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த இரண்டு
நெல்லிக் காய்களில் ஒன்றை எடுத்து “இந்தாருங்கள்” என்று எனக்குக் கொடுத்தான்.
நான் சிரித்து விட்டேன். “வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றேன். அவனோ
கட்டாயப்படுத்தி என்னிடம் கொடுத்தான். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. அந்த
நெல்லிக்காயை வாங்கிக் கொள்ளாவிட்டால் அவன் என் சிநேகிதத்தையே உதறித் தள்ளி
விடுவான் போல் இருந்தது. அதனால் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன். அவனுக்கு
அப்பொழுது சொல்ல முடியாத ஆனந்தம்.

நான் புறப்படும்போது, “எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்?” என்று
கேட்டுக்கொண்டே என்னைத் தொடர்ந்து நடந்து வந்தான்.

“அடுத்த ஞாயிற்றுக்கிழமை” என்று பேச்சுக்குச் சொல்லி வைத்தேன்.

“கட்டாயம் வர வேண்டும்”

“சரி”

அவன் வீட்டுக்குப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு நான் பிருந்தாவின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம்
”ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்; கட்டாயம் வர வேண்டும்” என்று எனக்கு
ஞாபகமூட்டிக் கொண்டே இருந்தான்.

பிருந்தாவுக்கு மூன்று நாட்களில் ஜுரம் குணமாகி விட்டது ஓர் ஆச்சரியமாகவே
இருந்தது. நான் தினமும் அவள் வீட்டுக்குப் போய் வந்தது தான் அவளுக்கு மருந்தாக
இருந்தது என்று அவளுடைய தகப்பனார் என்னிடம் கூறினார். நான் போய் வந்ததன்
காரணமாக ஒரு குழந்தையின் நோய் குணமாகிவிட்டது என்று அவர் சொன்னதைக் கேட்க
எனக்கு எப்படியோ இருந்தது.  “எப்படியாவது உடம்பு குணமாயிற்றே, அது போதும்”
என்றேன். அப்புறம், அவர் சொன்னது ஒரு வேளை உண்மையாக இருக்கலாமோ என்றுகூட
எனக்குத் தோன்றியது.

சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக் குழந்தைகளும்
என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புது வருஷம் பிறந்து இரண்டு மூன்று தினங்களே
ஆகியிருந்தன. நான் வாக்களித்தபடி சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் இரண்டு
டைரிகள் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். அவற்றில் வழக்கம் போல “அன்பளிப்பு”
என்று எழுதி அந்த இருவர் கையிலும் கொடுத்தேன். மற்றக் குழந்தைகள் தமக்கு டைரி
வேண்டுமென்று என்னிடம் கேட்கவில்லை. நான் எத்தனை புத்தகங்கள் கொண்டு வந்தாலும்,
என்ன பரிசு கொடுத்தாலும் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் தான் கொடுப்பேன்
என்று ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட
அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள், அவர்களுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்று
எல்லாக் குழந்தைகளும் ஒப்புக்கொண்ட பாவனையில் பேசாமல் இருந்தன. முதல் நட்பு
என்ற காரணத்தினால்தானோ என்னவோ, ஒரு அலாதிப் பிரியத்துடன் அவர்களுக்கு மட்டும்
நான் புத்தகங்களைக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. இந்த நெடுநாளைய வழக்கம்
மற்றக் குழந்தைகளுக்குப் பழகியும் போய்விட்டது.

டைரிகளை வாங்கிக்கொண்டு அந்த இருவரும் சாப்பிடப் போய் விட்டார்கள். அவர்கள்
போனபிறகு மற்றவர்களும் புறப்பட்டார்கள். ஆனால் அன்று சாரங்கன் மட்டும்
போகவில்லை. எல்லோரும் போன பிறகும் கூட அவன் உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான்.
என்னிடத்தில் அந்தரங்கமாக, “மாமா! நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா?
நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை” என்றான்.

”சரி சாரங்கா, எத்தனை தடவை சொல்லுகிறது? ஒரு தடவை சொன்னால் ஞாபகமிருக்காதா?”
என்றேன்.

அவன் எழுந்து, வால்ட் விட்மனின் கவித் தொகுதியைக் கையில் எடுத்தான்.

“இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கெஞ்சுதலாகக் கேட்டான். எனக்கு
அது வேடிக்கையாக இருந்தது. சிரித்துக் கொண்டே, “இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு?
அது உனக்கு இப்பொழுது புரியாது. நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ
எஸ்.எஸ்.எல்.ஸி வகுப்புக்கு வந்ததும் கேள்; தருகிறேன்” என்றேன்.

நான் சொன்னதை அவன் கேட்கவில்லை. பதின்மூன்று வயதுப் பையன் ஐந்து வயதுக்
குழந்தையைப் போல முரண்டு பண்ணிக்கொண்டு, அந்தப் புத்தகத்தை அவசியம் கொடுத்தாக
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.

”சாரங்கா! உனக்குப் புரியாது. சொன்னால் கேள்” என்று சொன்னேன். அப்புறம் அவன்
கையிலிருந்து புத்தகத்தை வாங்கி ஜன்னலில் கொண்டு போய் வைத்தேன்.

சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப்போய் விட்டது. வறண்ட பார்வையோடு
என்னைப் பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் எழுந்து வாசல் பக்கம் போனான். சரி,
வீட்டுக்குப் போகிறான் என்று நினைத்து, நான் என் வேலையைக் கவனிக்கலானேன்.
இரண்டு நிமிஷ நேரத்துக்குப் பிறகு, திடீரென்று ஒரு அழுகைக் குரல் கேட்டது.
அழுதது சாரங்கன்தான். “சாரங்கா! ஏன் அழுகிறாய்? சேச்சே, அழாதே ராஜா” என்று
சொல்லிக்கொண்டே அவன் பக்கத்தில் எழுந்து சென்றேன். ஆனால், நான் போகும் வரையில்
அவன் அங்கே நிற்கவில்லை, அழுகையை நிறுத்தினான். என்னைத் திரும்பிப் பார்த்துப்
பெருமூச்சு விட்டான். அவனுடைய வயிறு அசாதாரணமாக குழிந்து புடைத்தது. அப்பொழுது
முகம் ரத்தம் போலச் சிவந்துவிட்டது. இதெல்லாம் எதற்கென்றே எனக்குப்
புரியவில்லை. அவன் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தேன். என்னைப் பார்க்கவே
அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் போய் கையை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே
ஓட்டமாக ஓடிவிட்டான்.

“சாரங்கா!…. சாரங்கா!”

அவன் ஓடியே விட்டான். அன்று அவன் நடந்து கொண்ட விதம் எனக்கு ஒரு புதிராக
இருந்தது. எப்பொழுதும் அவன் பிடிவாதம் பண்ணமாட்டான். என்னிடத்தில் பேசுவதற்கே
கூசுவான். அப்படிப்பட்ட பையன் எதற்காகப் பிடிவாதம் பிடித்தான்? எதற்காக அப்படி
அழுதான்? எதற்காகத்தான் அழுதானோ? அவனைப் பின் தொடர்ந்து சென்று, அழுத
காரணத்தைக் கேட்காவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. ஆனால்,
அவன் வீட்டுக்குப் போகவும் என்னால் இயலவில்லை. அவனுடைய பெற்றோர்கள், பிற
பெற்றோர்களைப் போலவே எனக்குப் பரிச்சயமில்லாதவர்கள்.

பாவம்! ஏங்கி ஏங்கி அழுதான், அவமானப்பட்டவன் போல் அழுதான். பிற்பகலில்
குழந்தைகள் என் அறைக்கு வந்தால், அவர்களை அனுப்பி அவனை அழைத்துவர வேண்டுமென்று
தீர்மானித்தேன். மூன்று மணிக்கெல்லாம் முதல் ஆளாக சுந்தரராஜன் வந்து
சேர்ந்தான். அவனைச் சாரங்கனிடம் அனுப்பி வைத்தேன். சாரங்கன் தூங்கிக்
கொண்டிருப்பதாக சுந்தரராஜன் என்னிடம் வந்து தெரிவித்தான். அதற்குப் பிறகு அவனை
வரவழைக்கும் முயற்சியை நிறுத்தினேன். மறுநாள் காலையில் அவன் வந்தால்
பார்க்கிறது. இல்லையென்றால் நானே அவன் வீட்டுக்குப் போவது இதே தீர்மானத்துடன்
மற்றக் குழந்தைகளுடன் அன்றைய மாலைப் பொழுதைப் போக்கினேன்.

இரவில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு தான் என் மனம் மிகமிகக்
கஷ்டப்பட்டது. பக்கத்தில் யாருமில்லாத அந்தத் தனிமையில் மனத்துயரம் பெரிதாகிக்
கொண்டே இருந்தது. உள்ளத்தில் எத்தனையோ துயரம் படிந்த சிந்தனைகள்; ‘ஏன் அழுதான்?
நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக் குழந்தைகளையும் போலவே அவனையும் என்
கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன். வால்ட் விட்மன் கவித்
தொகுதியைக் கேட்டான், அது அவனுக்குப் புரியாது என்று வாங்கி வைத்துவிட்டேன்,
இதற்காகவா அவன் அழுதிருப்பான்? அவன் விபரம் தெரிந்த பையன். எப்போதும் நான்
சொல்வதை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்பவன். அப்படிப்பட்ட பையன் புத்தகத்தை நான்
திருப்பி வாங்கிக்கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது. நான் திரும்பி
வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை!
சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா”

ஞாயிற்றுக் கிழமை.

நேற்று பிற்பகலில் அவன் வராமல் இருந்து விட்டதால் இன்றும் வரமாட்டான் என்றே
எண்ணியிருந்தேன். சப்தரிஷி மண்டலம் போன்ற எங்கள் கூட்டத்தில் இந்த ஒரு
நக்ஷத்திரம் மறைந்து நிற்பதை மற்றக் குழந்தைகள் பொருட்படுத்தவில்லை. அத்துடன்
அவர்கள் கவலைப்படுவதற்கும் இங்கே என்ன இருக்கிறது? ஒருநாள் பிற்பகலில் அவன்
வராமல் இருந்தது அவர்களுக்கு ஒரு பிரிவாகத் தோன்ற நியாயமில்லை. எனக்கும் மற்றச்
சமயங்களில் இது கவனத்தைக் கவரத்தக்க விஷயமாக இல்லாமல், சகஜமான காரியமாக
இருந்திருக்கும். ஆனால், அவன் நேற்று எந்த நிலையில் என்னைப் பிரிந்து சென்றான்.
எந்த நிலையில் என்னை விட்டுவிட்டுச் சென்றான் என்ற விபரங்கள் எனக்கல்லவா
தெரியும்?

காலை பத்து மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழமையானதால் சாப்பாட்டைப் பகல் ஒரு
மணிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, காலையில் பலகாரம் பண்ணி நானும் என் தாயாரும்
சாப்பிட்டோம். அப்புறம் நான் என் அறைக்கு வந்து ஏதாவது படிக்கலாம் என்று
உட்கார்ந்தேன். மனம் என்னவோ அந்த வால்ட் விட்மனின் கவித் தொகுதியைத் தான்
படிக்க விரும்பியது. அதைக் கையில் எடுத்து விரித்ததும் என் கண்களுக்குக் கவிதா
வாசகங்கள் தென்படவில்லை; சாரங்கன் தான் காட்சியளித்தான்; அவனுடைய கண்ணீரும்
ஏக்கமும்தான் காட்சியளித்தன. இது சோதனையாக இருக்கிறதே! அவனாவது இங்கு
வரக்கூடாதா? அல்லது வேறு குழந்தைகளாவது வரக் கூடாதா என்று மறுகிக்கொண்டு
கிடந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு பிருந்தா வந்தாள். பாக்கிய தேவதை என ஒரு தெய்வ மகள்
உண்மையிலேயே இருந்து, ஒரு தரித்திரனின் வீட்டில் அடியெடுத்து வைத்தது போல
இருந்தது பிருந்தாவின் வரவு.

”வா பிருந்தா! பிருந்தா என்ற பெயரை மாற்றி ‘பிரியதர்சினி’ என்று பெயர் வைத்தால்
உனக்குப் பொருத்தமாக இருக்கும் பிருந்தா!” என்றேன்.

என் பரவசம் அவள் உள்ளத்தைத் தொடவில்லை. என் சொற்கள் அவள் செவிக்கு எட்டவும்
இல்லை.

”சுந்தரராஜனும் சித்ராவும் சினிமாவுக்குப் போய் விட்டார்கள்” என்று காரண
காரியமில்லாமல் சொன்னாள் பிருந்தா.

“சாரங்கன்?” என்று ஆவலோடு கேட்டேன்.

”நான் பார்க்கவில்லை” என்று சொல்லிவிட்டாள்.

மேற்கொண்டு நான் சாரங்கனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கும்போது, பிருந்தாவின்
வீட்டு வேலைக்காரன் வந்து, “அம்மா கூப்பிடுகிறார்கள்” என்று சொல்லி அவளை
அழைத்தான். பிருந்தா உடனே, “போய் வருகிறேன்” என்று சொல்லிக் கிளம்பிவிட்டாள்.
அவள் போன பிறகு பழையபடியும் அந்தக் கவித் தொகுதியை எடுத்து விரித்தேன். அப்போது
பிருந்தா வெகுவேகமாக ஓடிவந்தாள். வந்து, “சாரங்கன் வருகிறான்” என்று
சொல்லிவிட்டு அந்த க்ஷணத்திலேயே தன் வீட்டை நோக்கி ஓடிவிட்டாள்.

என் இதயம் ‘படபட’வென்று அடித்துக்கொண்டது. அதிவேகமாக வால்ட் விட்மனின்
புத்தகத்தை மறைத்து வைத்து விட்டேன். அதைப் பார்த்தால் சாரங்கனுக்குப்
பழையபடியும் அழுகை வந்துவிடுமோ என்று எனக்குப் பயம்.

சாரங்கன் வந்துவிட்டான்.

“சாரங்கா….”

“உம்.”

“ஏன் நீ இவ்வளவு நேர வரையிலும் வரவில்லை? நேற்றும் வரவில்லை?”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை, அவன் முகத்தில் துயரமோ, வேறு விதமான ஆழ்ந்த
உணர்ச்சிகளோ பிரதிபலிக்கவில்லை. ஒரே சந்தோஷமாகத்தான் இருந்தான். இது
மகிழ்ச்சிக்குரிய மாறுதல்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

“எங்கள் வீட்டுக்குப் போவோமா?”

”உங்கள் வீட்டுக்கா?”

“ஆம். நீங்கள் வருவதாக அன்றே சொல்ல வில்லையா?”

“சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன், சாரங்கா! உங்கள் வீட்டுக்கு எதற்கு?”

“எதற்கோ? நீங்கள் வாருங்கள்” என்று இரண்டு கைகளாலும் என் கையைப் பிடித்து
இழுத்தான்.

அவனுடைய வேண்டுகோள் எனக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அன்று பிருந்தாவின்
வீட்டிலிருந்து வரும்போது அவனுடைய கட்டாயத்தைப் பார்த்து, “ஞாயிற்றுக்கிழமை
வருகிறேன்” என்று சொல்லி வைத்தேன். அந்த விஷயத்தை அவன் இவ்வளவு தூரம்
வற்புறுத்துவான் என்று தெரிந்திருந்தால் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன்.
இந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்காக வேற்றார் வீட்டுக்குப் போவது எப்படி?
போவதற்குக் காரணமும் வேண்டுமே! பிருந்தா வீட்டுக்குப் போனதற்காவது அவளுடைய தேக
சௌக்கியம் காரணமாக இருந்தது. இங்கே போவது எதற்காக? இவனுடைய அப்பாவை வீதியிலும்
பஸ் ஸ்டாண்டிலும் ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறேன். ஒரு தடவைகூட நாங்கள்
பேசிக் கொண்டதில்லை. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள் என்று எவ்வித சைகை
ஜாடையின் மூலமாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை. அப்படியிருக்க அங்கு நான்
எப்படிப் போவது?

சாரங்கன் மிகவும் அதிகமாக வற்புறுத்தத் தொடங்கினான். அவசரப்படவும்
ஆரம்பித்தான். எனக்கு அது ஒரு தொந்தரவாகவே ஆகிவிட்டது. ’இத்தனை நாளும் இவன்
வாய்மூடி மௌனியாக இருந்தது போதும், இன்று பாடாய்ப் படுத்துவதும் போதும்’ என்று
சலித்துக் கொண்டேன்.

“வாருங்கள் மாமா. சொல்லிவிட்டு மாட்டேன் என்கிறீர்களே?” என்று கெஞ்சினான்.

“சாரங்கா! நீ சிறு பிள்ளை. உன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் வருவது எப்படி?
இந்த நாசூக்கு எல்லாம் உனக்குப் புரியாது. என்னை விட்டுவிடு” என்று
பொறுமையிழந்து சொன்னேன்.

“ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்?” என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டு
ஏக்கத்துடன் கேட்டான்.

“அங்கே எதற்கு?”

“அதென்னமோ, கட்டாயம் வரத்தான் வேண்டும்.”

நான் கோபப்பட்டவன் போல் நடித்து, “என்னால் வரமுடியாது. எனக்கு அவசரமான வேலை
இருக்கிறது. இன்னொரு நாளைக்கு வேண்டுமானால் பார்த்துக் கொள்வோம்” என்று
சொல்லிவிட்டு மறுபுறம் திரும்பிக் கொண்டேன். ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடுபவன்போல்
மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தேன்.

சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

ஒரு நிமிஷம் கழிந்திருக்கும். அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். நான்
பார்த்த மாத்திரத்தில் அவனும் ஒரு முறை பெருமூச்சு விட்டுக்கொண்டு
“வரமாட்டீர்களா” என்று தடுமாறும் குரலில் கேட்டான்.

அவனுடைய இந்தக் கடைசி முயற்சியைத் தகர்த்து விட்டால், பழையபடியும் அழ
ஆரம்பித்து விடுவான் என்பதற்குரிய அடையாளம் அவன் முகத்தில் தென்பட்டது.
சாரங்கனைத் திரும்பத் திரும்ப அழ வைத்துப் பார்க்க எனக்கு இஷ்டமில்லை. ‘தங்கமான
பையனை ஏன் இப்படிக் கஷ்டத்துக்கு ஆளாக்க வேண்டும்? போய்விட்டுத் தான் வருவோமே!
நம்மை வரவேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள்? அப்படியிருக்க ஒரு முறை போய்
வருவதில் என்ன நஷ்டம்?” என்று அதிசீக்கிரமாக யோசித்து முடிவு கட்டினேன். அவன்
கண்ணீர் சொரிவதற்குள் என் சம்மதத்தை தெரிவித்துவிட்டேன்.

“சாரங்கா! வா! உன் வீட்டுக்கே போகலாம்”

இருவரும் கைகோத்துக்கொண்டே சென்றோம். அவன் வீட்டுக்கு முன்னால் போனதும், என்
கையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே வேகமாக ஓடினான். அப்புறம் வெளியில் வந்து
வாசல் பக்கத்திலுள்ள அறையைத் திறந்து, “வாருங்கள், வாருங்கள்” என்று படபடப்பாக
இரைந்து சொன்னான். என்னுடைய தயக்கத்தையும், என்னுடைய சங்கோஜத்தையும் அளவிட்டுச்
சொல்ல முடியாது. வேறு வழியில்லாமல் அந்த அறைக்குள் சென்றேன். அறையின்
சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்று எளிதில் தீர்மானிக்க
முடிந்தது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பக்கத்தில் கிடந்த அவனுடைய
சரித்திரப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சாரங்கன்
வீட்டுக்குள்ளே ஓடிவிட்டான். அப்போது வெளியிலிருந்து வந்த அவனுடைய தகப்பனார்,
அறைக்குள் எட்டிப் பார்த்தார். என்னைப் பார்த்து “வாருங்கள்” என்று
சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். “என்ன விசேஷம்?” என்று என்னை அவர்
விசாரிக்காமல் விட்டது எனக்கு ராஜமரியாதை செய்தது போல் இருந்தது.

சாரங்கன் திரும்பி வரும்போது, ஒரு தட்டில் உப்புமாவும், ஒரு டம்ளரில் காபியுமாக
வந்து சேர்ந்தான். நான் திடுக்கிட்டு விட்டேன்; என் சுவாசம் அப்படியே நின்று
விட்டது.

“ஐயோ! இதெல்லாம் எதற்கு? நான் இப்போதுதானே சாப்பிட்டேன்?”

சந்தோஷப் படபடப்பில் ஒன்றுமே சொல்லாமல் வந்து அவன் என் வலது கையைப் பிடித்து
இழுத்து உப்புமாத்தட்டில் கொண்டு போய் வைத்தான். சாரங்கன் ரொம்பவும்
சிறுபிள்ளையாக இருக்கிறான். இனிமேல் இவனிடம் கொஞ்சம் கண்டிப்பாகத்தான் நடந்து
கொள்ளவேண்டும். இன்று மட்டும் ஏதோ கசப்பு மருந்தைச் சாப்பிடுவோம். வேறு
வழியில்லை என்று எண்ணிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன். சிறு பையன் பேச்சைக்
கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர் என்ன நினைப்பார்களோ என்ற
பயம் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு அதிர்ச்சி கொடுத்த வண்ணமாக இருந்தது.

ஒருவழியாகச் சாப்பிட்டு முடிந்தது. தட்டையும் டம்ளரையும் உள்ளே கொண்டுபோய்
வைக்கப் போனான் சாரங்கன்.

’இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற
அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து
என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன. ஆனால் இவனைக் கோபிக்கக் கூடாது. இவன் இப்போது
எனக்குக் கொடுக்கும் தொந்தரவே இவனுடைய அன்பை அளந்து காட்டுகிறது. ஏதோ ஒரு நாள்
என்னைக் கஷ்டப்படுத்துவதனாலவது, இவன் திருப்தியடையட்டும். என்னுடைய முயற்சி
எதுவும் இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும், திருப்தியும் கொள்ள
முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது. தடுக்க முயலுவது
அமானுஷிகம்’ என்று எண்ணித் தேற்றிக்கொண்டேன்.

சாரங்கன் வெளியே வந்தான். மேஜையைத் திறந்து ஒரு பவுண்டன் பேனாவை எடுத்தான். என்
முகத்துக்கு எதிரில் நிற்காமல் என் முதுகுப் புறமாக வந்து நின்று கொண்டான்.
அங்கே நின்ற வாக்கிலேயே, நான் கையில் வைத்திருந்த சரித்திரப் புத்தகத்தை
மெதுவாகப் பிடித்து இழுத்துத் தூரத்தில் வைத்தான். தூங்கும் குழந்தையின்
கையிலிருக்கும் கிலுகிலுப்பையை எவ்வளவு ஜாக்கிரதையாகத் தனியே எடுத்து
அப்புறப்படுத்துகிறோமோ, அது போல அதை அப்புறப்படுத்தினான். பிறகு அவன் வலது
கையால் தன் கால் சட்டையின் பையில் கையை விட்டு எதையோ எடுப்பதுபோல் எனக்கு
ஜாடையாகத் தெரிந்தது. அதை என் முன்பாக மேஜைமேல் வைத்தான்.

அது ஒரு டைரி. நான் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்த
டைரிகளைப் போன்ற ஒரு டைரி. அதே கம்பெனியில் செய்தது. அதே நிறமுடையது. அப்புறம்
பேனாவை என் கையில் கொடுத்து “எழுதுங்கள்” என்றான்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்டேன்.

“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”

**** 

 

http://thoguppukal.wordpress.com/2011/04/21/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Link to comment
Share on other sites

பிரசாதம் - சுந்தர ராமசாமி

 

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும்.
 
suracolourpage_thumb6.jpg?imgmax=800
 
ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு வந்தான். அதே ஜங்ஷன்தான்.
மெயின் ரஸ்தா ஓரத்தில் ஒரு புருஷனும் மனைவியும் ரஸ்தாவைத் தாண்டுவதற்குப் பத்து நிமிஷமாக இரண்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துகொண்டு நின்றார்கள். அவள் ஒக்கலில் ஒரு குழந்தை. கோயிலுக்குப் போய்விட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
’இப்படித்தான் நானும் அவளும் நாளை கோயிலுக்குப் போய் வரவேண்டுமென்று நினைக்கிறாள் அவள்’ என்று எண்ணினான் அவன். குழந்தையின் பிறந்தநாளை எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாட ஆசைப்படுகிறாள் அவள்! அன்று மாலை பொன்னம்மை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அவளுடைய ஆசையே விசித்திரமானதுதான். தெருவழியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து போகிற காட்சியை அவள் வியாக்கியானம் செய்ததை அவன் எண்ணிப் பார்த்துக்கொண்டான்.
‘நாளை விடியக் கருக்கலில் எழுந்திருக்க வேண்டும். சுடு தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். பட்டுச்சட்டை போட்டு, கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா - ஒன்றே ஒன்று - அதற்குத் தனி அழகு. நாம் இருவரும் குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறபொழுது தெருவில் சாணி தெளிக்கும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கித் தலைதூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலைதூக்கிப் பார்ப்பதை நான் பார்க்க வேண்டும். நான் பார்த்து, உங்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதைப் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும்.’
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தான் நிற்கும் இடத்தை மறந்து சிரித்தான். சட்டென்று வாயை மூடிக்கொண்டான். தம்பதிகள் ரஸ்தாவைத் தாண்டிப் போய்விட்டார்கள்.
ஆனால் பொன்னம்மை போட்ட திட்டமெல்லாம் நிறைவேறுவதற்கு இன்னும் ஐந்து ரூபாய் வேண்டும். ஐம்பது ரூபாய் செலவாகும்.  ஆனால் பொன்னம்மை அவனிடம் ஐந்து ரூபாய்தான் கேட்டாள். துணிமணி கடனாக வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். அதை இரவோடு இரவாகத் தைக்கவும் கொடுத்து விட்டாள். சீட்டுப் பணம் பிடித்து குழந்தைக்கு மாலை வாங்கி விட்டாள். பால் விற்று அதையும் அடைத்து விடுவாள். பிறந்தநாளை ஒட்டிய சில்லறைச் செலவுக்காகத்தான் அவள் பணம் கேட்டாள். ஐந்து ரூபாய்க் காசு. வீட்டில் காலணா கிடையாது. காலணா என்றால் காலணா கிடையாது. அன்று தேதி இருபத்தைந்து.
கைத்தடியை பூட்சில் தட்டிக்கொண்டே நின்றான் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு தடவை பார்த்தவர்கள் அவன் முகத்தை மறக்க முடியாது. முகத்தில் ஆறாத அம்மைத் தழும்பு. அடர்த்தியான புருவம். மண்டி வளர்ந்து இரு புருவமும் ஒன்றாக இணைந்து விட்டது. காது விளிம்பில் ரோமம். மூக்கிற்குக் கீழ் கருவண்டு உட்கார்ந்திருப்பதைபோல் பொடி மீசை.
அவன் பார்வை தாழ்ந்து பறக்கும் பருந்தின் நிழல் மாதிரி ஓடிற்று. நீளமாக ஓடிற்று. வட்டம் போட்டது. குறுக்கும் மறுக்கும் பாய்ந்தது.
‘ஒன்றும்’ அகப்படவில்லை.
கழுத்தில் வேர்வை வழிந்தது. முகத்தில் சோர்வு. அங்கமெல்லாம் அசதி.
சர்வீஸில் புகுந்த பின்பு இன்றுபோல ஒருநாளும் விடிந்ததில்லை. யார் முகத்தில் விழித்தோமென்று யோசித்தான். கண் விழித்ததும் எதிரே சுவர்க் கண்ணாடியில் தன் முகம் தெரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. சிரித்துக்கொண்டான்.
பகற்காட்சி சினிமா முடிந்து மனித வெள்ளம் தெருவெங்கும் வழிந்தது. நெரிசலிலிருந்து விலகி நின்றுகொண்டான். கூட்டம் குறைந்ததும் மீண்டும் நடந்தான்.
நாலு மணிக்கு ஆரம்பித்த அலைச்சல். மணி ஏழு அடித்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்களில் எட்டு அடித்துவிடும்.
பொழுது போய்க்கொண்டே இருந்தது. ‘ஒன்றும்’ அகப்படாமலேயே பொழுது போய்க்கொண்டிருந்தது.
அன்று சைக்கிளில் விளக்கில்லாமல் போவாரில்லை. சிறு நீர் கழிப்பதற்குப் பிரசித்தமான சந்துகள் ஒன்று பாக்கியில்லாமல் தாண்டி வந்தாகிவிட்டது. சந்துக்குள் நுழைபவர்களின் கண்களுக்குத் தென்படாமல், நின்று நின்று பார்த்தாகிவிட்டது. கால்வலி எடுத்ததுதான் மிச்சம். ஒரு குழந்தைகூட ஒன்றுக்குப் போகவில்லை.
முன்பெல்லாம் நம்மவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தார்கள். இப்பொழுது பிரஜைகளாகி விட்டார்கள். பொறுப்பு உணர்ச்சி கொண்ட பிரஜைகள் நீடுழி வாழ்க!
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
மீண்டும் ஜங்ஷனிலிருந்து கிளம்பி, வடதிசை நோக்கி நடந்தான். நின்று நின்று நடந்தான். சிறிது நடந்துவிட்டு நின்றான். நடந்தான். நின்றான்.
கோபம் கோபமாக வந்தது.
எதிரே வந்த டாக்சி கார்களை எல்லாம் பட்பட்டென்று கை காட்டி நிறுத்தினான். எல்லோரும் ஒழுங்காக லைசன்ஸ் வைத்திருக்கிறார்கள். ஐந்து பேர் போக வேண்டிய வண்டியில் மூன்றுபேர் போகிறார்கள். நாலுபேர் போகவண்டிய வண்டியில் டிரைவர் மட்டும் போகிறான்.
பேஷ்! இனிமேல் இந்த தேசத்தில் போலீஸ்காரர்கள் தேவையில்லை.
கூலிகள் யாரையாவது அதட்டிப் பார்க்கலாம். ஒருவரையும் காணோம். புது சினிமா ஆரம்பமாகிற நாள். ஒருவரையும் காணோம்.
எல்லாக் கழுதைகளும் சினிமாவில் காசைக் கரியாக்குகிறார்கள்.
அந்தி மயங்குகிற சமயம் ‘கூல்டிரிங்’ கடையில் ‘ஸ்பிரிட்’ வியாபாரம் ஆரம்பமாகும். மதுவிலக்கு அமுலிலிருக்கும் பிராந்தியம் இது. கடையின் வாசலில் போய் நின்றுவிட்டால் போதும். மாதாந்திரப்படி கையில் விழுந்துவிடும். பிறந்தநாளை ஜமாய்த்து விடலாம்.
ஆனால் கடை பூட்டியிருக்கிறது.
அவன் பாட்டிக்குக் குழந்தை பிறந்திருக்கும்! வியாபாரத்தைக் கண்ணுக்குக் கண்ணாகக் கவனிக்க வேண்டாமோ?
சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று. சாரதி சிறுபயல். மீசை முளைக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிறான்!
வண்டி அருகே வந்தது.
“லேய், நிறுத்து.”
குதிரை நின்றது.
“ஒங்கப்பன் எங்கலே?”
“வரலே.”
“ஏனாம்?”
”படுத்திருக்காரு/”
“என்ன கொள்ளே?”
‘வவுத்தெ வலி.”
“எட்டணா எடு.”
“என்னாது?”
“எட்டணா எடுலே.”
“ஒம்மாண இல்லை.”
“ஒங்கம்மெ தாலி. எடுலே எட்டணா.”
“இன்னா பாரும்” என்று சொல்லிக்கொண்டே பயல் நுகக்காலில் நின்றுகொண்டு வேஷ்டியை நன்றாக உதறிக் கட்டிக்கொண்டான்.
“மோறையைப் பாரு. ஓடுலெ ஓடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி. மனுசனாப் பொறந்தவன் இதிலே ஏறுவானாலே.”
குதிரை நகர்ந்தது.
தபால் ஆபிஸ் பக்கம் வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. எதிர்சாரி வெற்றிலைப் பாக்குக் கடை பெஞ்சில் அமர்ந்தான். தொப்பியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். தலையைத் தடவிவிட்டுக் கொண்டான். கையெல்லாம் ஈரமாகி விட்டது. எரிச்சல் தாங்க முடியவில்லை. தொடை நோவும்படி நிக்கரில் பிசைந்து பிசைந்து துடைத்துக் கொண்டான். மேற்கும் கிழக்கும் பார்த்தான்.
அப்பொழுது தபால் நிலையத்தை நோக்கி ஒரு கனமான உருவம் வருவது தெரிந்தது. எங்கோ பார்த்த முகம் போலிருந்தது. கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரோ?
கிருஷ்ணன் கோயில் அர்ச்சர் தபால் ஆபிசில் நுழைந்தார். கூர்ந்து கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் கையில் ஒரு நீள உறை. எழுந்து பின்னால் சென்றான். அர்ச்சகர் தபால் பெட்டியருகே சென்று விட்டார்.
“வேய்?”
சட்டென்று திரும்பினார்.
“இங்கே வாரும்.”
“இதெ போட்டுட்டு வந்துடறேன்.”
”போடாமெ வாரும்.”
அர்ச்சகர் ஸ்தம்பித்து நின்றார்.
“வாரும் இங்கே.” - ஒரு அதட்டல்.
அர்ச்சகர் தயங்கித் தயங்கி வந்தார்.
நல்ல கனமான சரீரம். மொழுமொழுவென்று உடம்பு. உடம்பு பூராவும் எண்ணெய் தடவியதுபோல் மினுமினுப்பு. வளைகாப்புக்குக் காணும்படி வயிறு.
அர்ச்சகர் முன்னால் வந்து நின்றார்.
“அதென்னது கையிலே?”
“கவர்.”
“என்ன கவரு?”
“ஒண்ணுமில்லை. சாதாக் கவர்தான். தபால்லே சேர்க்கப் போறேன்.”
“கொண்டாரும் பாப்பம்.”
வாங்கிப் பார்த்தான். உறையோடு ஒரு கார்டுமிருந்தது. கார்டு, யாரோ யாருக்கோ எழுதியது. நீள உறை உள்ளூர் டி. எஸ். பி. அலுவலகத்திற்குப் போகவேண்டியது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தை வெறிக்கப் பார்த்தான்.
அர்ச்சகர் முகம் சிவந்தது.
இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அர்ச்சகர் முகம் மேலும் சிவந்தது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு ஒரே சந்தேகம். ஒரே சந்தோஷம்.
அவனுடைய மகள் அதிருஷ்டசாலிதான்!
“இந்தக் கவர் உம்ம கையிலே எப்படி சிக்கிச்சு?”
குரலில் அதிகார மிடுக்கேறி விட்டது.
அர்ச்சகர் உதட்டைப் பூட்டிக்கொண்டு நின்றார். முகம் தொங்கிப் போய்விட்டது.
“வாயிலே கொளுக்கட்டையோ?”
அதற்கும் பதிலில்லை.
“மயிலே மயிலே எறகு போடுன்னா போடாது. நடவும் ஸ்டேஷனுக்கு.”
‘ஸ்டேஷனுக்கு’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும் உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது அர்ச்சகருக்கு.
அர்ச்சகர்  முதுகைப்பிடித்து இலேசாகத் தள்ளினான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் தட்டுத்தடுமாறிப் பேச ஆரம்பித்தார்.
“நான் சொல்றதெ கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி தயவாக் கேக்கணும். எனக்குப் போராத காலம். இல்லைன்னா...”
“இழுக்காமெ விசயத்துக்கு வாரும்.”
“எனக்குப் போராத காலம். இல்லென்னா இந்த ஸந்தி வேளையிலே, நட்ட நடுக்க ஏதோ திருடன் மாதிரி, ஏதோ கொள்ளைக்காரன்  மாதிரி, ரவுடி மாதிரி, ஜேப்படிக்காரன் மாதிரி...”
”அட சட்! விசயத்தை கக்கித் தொலையுமே. இளு இளுன்னு இளுக்கான் மனிசன்.”
“இதோ இந்த கார்டெ சேக்கப்போனேன். கோவிலுக்குப் பக்கத்திலெ தபால் பெட்டி தொங்கறது. தொங்கற தபால் பெட்டியிலே இந்தக் கார்டெ சேக்கப்போனேன்.”
“போற வளியில இந்தக் கவர் ரோட்டிலே படுத்துக்கிட்டு, அர்ச்சகரே வாரும் வாரும்னு கூவி அளச்சதாக்கும்!”
“நான் சொல்றத கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி தயவாக் கேக்கணும். தொங்கற தபால் பெட்டியிலே இந்தக் கார்டெ போடப் போனேன். போட முடியலெ.”
“கை சுளிக்கிடிச்சோவ்?”
“இல்லெ. இந்த நீளக்கவர் தொங்கற தபால் பெட்டியிலெ வாயெ மறிச்சுண்டிருந்தது.”
”ஆமாய்யா! அப்படி கொண்டாரும் கதெய.”
“கதை இல்லை. நெஜத்தெ அப்படியே சொல்றேன். தொங்கற தபால் பெட்டியிலே இந்த நீளக்கவர் வாயெ மறிச்சுண்டு வளஞ்சு கெடந்தது.”
“அட...டா...டா!”
“இந்தக் கார்டெ ஆனமட்டும் உள்ளே தள்ளிப் பார்த்தேன். தள்ளித் தள்ளிப் பார்த்தேன். உள்ளே போகமாட்டேன்னு சொல்லிடுத்து.”
“சொல்லும் சொல்லும்”
“தொங்கற தபால் பெட்டி வாய் நுனியிலே அப்படியே ரெண்டு விரலெ மட்டும் உள்ளே விட்டு நீளக்கவரெ வெளியிலே எடுத்தேன்.”
“அபார மூளெ!”
“சொல்றதெ கொஞ்சம் கேளுங்களேன். நான் ஒரு தப்பும் பண்ணலெ. தப்புத் தண்டாவுக்குப் போறவனில்லே நான். ஊருக்குள்ளெ வந்து விசாரிச்சா தெரியும். நாலு தலமொறயா நதீக்கிருஷ்ணன் கோவில் பூசை எங்களுக்கு. இன்னித் தேதி வரையிலும்....”
“அட விசயத்தை சுருக்கச் சொல்லித் தொலையுமெ அய்யா. செக்குமாடு கணக்கா சுத்திச் சுத்தி வாரான் மனுசன்.”
”தொங்கற தபால் பெட்டி வாயிலெ ரெண்டு விரல் மட்டும் விட்டுக் கவரை வெளியிலெ எடுத்து, கார்டையும் கவரையும் சேத்துப் போடப் பாத்தேன். முடியலெ.”
“முடியாது முடியாது.”
“தள்ளித் தள்ளிப் பார்த்தேன். கவர் மடிஞ்சு மடிஞ்சு வாயெ அடச்சது. என்ன சேறதுனு தெரியலெ. திருதிருன்னு விழிக்கறேன். மேலையும் கீழையும் பாக்கறேன். முன்னும் பின்னும் போகலெ எனக்கு. என்னடா சேறதுன்னு யோசிச்சேன். சரி, அந்த நதீக்கிருஷ்ணன் விட்ட வழின்னு மனசெ தேத்திண்டு, பெரிய தபாலாபீஸிலெ கொண்டு வந்து சேத்துப்புடறதுன்னு தீர்மானம் பண்ணிண்டு வறேன்.”
“அவ்வளவும் கப்ஸா, அண்டப் புளுகு!” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“ஒரே அடியா அப்படிச் சொல்லிடப்படாது. நான் சொன்னதெல்லாம் நெஜம். கூட்டிக் கொறச்சுச் சொல்லத் தெரியாது எனக்கு. மந்திரம் சொல்ற நாக்கு இது. பொய் வராது.”
“சரி சரி. ஸ்டேசனுக்குப் போவோம்.”
அர்ச்சகர் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அவர் அடைந்த கலவரம் பேச்சில் தெரிந்தது. ஸ்பரிசத்தில் தெரிந்தது. முகத்தில் பிரேதக்களை தட்டிவிட்டது.
”நான் பொய் சொல்லலெ; நான் ஒரு தப்பும் பண்ணலெ. நான் சொல்றது சத்தியம். நதீக்கிருஷ்ணன் கோவில் மூலவிக்கிரகம் சாட்சியாச் சொல்றேன். நான் சொல்றது பொய்யானா, சுவாமி சும்மாவிடாது. கண்ணெப் புடுங்கிப்புடும். கையெயும் காலையும் முடக்கிப்புடும்.”
“உடம்பெ அலட்டிக்கிடாதெயும். ஸ்டேஷனுக்கு வாரும்.”
அர்ச்சகர் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் அவன்.
அர்ச்சகர் மெதுவாகக் கையை இழுத்துக்கொண்டு பின் தொடர்ந்தார். அவருக்கு உடம்பெல்லாம் கூசியது. அவமானத்தால் உள்வாங்கி நடந்தார். அவருக்குத் தெரிந்த ஆயிரமாயிரம் பேர்கள் சுற்றிச் சூழ நின்றுகொண்டு வேடிக்கைப் பார்ப்பது போலிருந்தது. எல்லோரும் அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
பஜாரைத் தாண்டித்தான் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். எல்லா வியாபாரிகளையும் அவருக்குத் தெரியும். வியாபாரிகளின் ஜென்ம நக்ஷத்திரன்று கோயிலில் பூசை செய்து பிரசாதம் கொண்டுபோய் கொடுப்பார். எல்லோருக்கும் அவரிடத்தில் மதிப்பு. அவர்கள் முன்னால் நடந்துபோக வேண்டும். எல்லோரும் கடை வாசலில் நின்று பார்ப்பார்கள்.
அர்ச்சகருக்குத் தான் ஜெயில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பது மாதிரித் தோன்றிற்று. மனைவியும் குழந்தைகளும் முன்னால் நின்று நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறார்கள். போலீஸ் சேவகன் வந்து தடியால் அவர்களை வெளியே தள்ளுகிறான்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விடுவோமா என்று எண்ணினார் அர்ச்சகர். குய்யோ முறையோ என்று கத்தி கூட்டத்தைக் கூட்டுவோமா என்றும் எண்ணினார். நூறுபேர் கூடத்தானே செய்வார்கள். நூறுபேர் கூடினால் தெரிந்தவர்கள் பத்துபேர் இருக்கத்தானே செய்வார்கள். ‘இது என்ன அநியாயம்’ என்று முன்வந்து சொல்ல மாட்டார்களா?
ஆனால் வாயைத் திறந்தாலே முதுகில் அறை விழுமோ என்று பயந்தார். மேலும் அவருக்குத் தொண்டையை அடைத்தது. நிமிஷத்திற்கு நிமிஷம் வயிற்றிலிருந்து கனமான ஏதோ ஒன்று மேலெழும்பி நெஞ்சைக் கடைந்தது. துக்கத்தை விழுங்கி விழுங்கிப் பார்த்தார். ரோட்டிலேயே அழுதுவிடுவோமோவென்று பயந்தார்.
மெயின் ரஸ்தா இன்னும் வரவில்லை. இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமரங்கள் இருளைப் பெய்துகொண்டிருந்தன. அர்ச்சகர் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
சிறிதுதூரம் சென்றதும் நின்றார் அர்ச்சகர். தெரு விளக்கின் ஒளி அவர் முகத்தில் விழுந்தது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. அர்ச்சகர் துண்டால் மூக்கைத் துடைத்துக்கொண்டு சொன்னார்:
”நான் ஒரு தப்பும் பண்ணலெ. ஒரு தப்பும் பண்ணலெ.” இதைச் சொல்லும்போது அழுதுவிட்டார் அவர்.
“நான் என்ன வேய் செய்ய முடியும்? நான் என் டியூட்டியெ கரெக்டா பாக்கிற மனுஷன்.”
“நான் சொல்றது நம்பிக்கையில்லையா?”
“நம்பிக்கையெப் பொறுத்த விஷயமில்லே வேய் இது. ஸ்டேஷனுக்கு வாரும். இன்ஸ்பெக்டருக்கிட்டே விஷயத்தைச் சொல்லும். இன்ஸ்பெக்டரு விட்டா நானா பிடிச்சுக் கட்டப் போறேன்?”
“இன்ஸ்பெக்டர் விட்டுடுவாரோ?”
“எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்?”
“இன்ஸ்பெக்டர் வெறொண்ணும் செய்யமாட்டாரே?”
”என்னது?”
“இல்லே.... வந்து.... அடிகிடி இந்த மாதிரி...” அதைச் சொல்வதற்கே வெட்கமாயிருந்தது அவருக்கு.
இத்தனை பெரிய சரீரத்தில் அதைவிடவும் பெரிய கோழைத்தனம் குடிபுகுந்திருப்பதை எண்ணி மனதுள் சிரித்துக்கொண்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“அடிகிடியெல்லாம் கேஸைப் பொறுத்தது. அடிக்கப்படாதுன்னு சட்டமா? சந்தேகம் வந்திடிச்சின்னா எலும்பெ உருவி எடுத்துடுவாங்க. அதிலேயும் இப்ப வந்திருக்கிற இன்ஸ்பெக்டரு எமகாதகன். நச்சுப்புடுவான் நச்சு.”
”ஐயோ, எனக்கு என்ன செய்யணும் தெரியலையே” என்று அர்ச்சகர் பிரலாபித்தார். அந்தக் குரல் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் மனதைத் தாக்கிற்று.
“உம்மைப் பார்த்தா எனக்கு எரக்கமாகத்தான் இருக்குது.”
“அப்படீன்னா என்னெ விட்டுடுமே. உமக்கு கோடிப்புண்ணியம் உண்டு.”
”அது முடியுமா? கேஸிலே புடிச்சா விடமுடியுமா? வெளெயாட்டுக் காரியமா? உத்தியோகம் பணயமாயுடுமே.”
அர்ச்சகர் சிலைபோல் நின்றார்.
மீண்டும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான்.
“ஒண்ணு வேணாச் செய்யலாம்; அதும் பாவமேணு பாத்துச் செய்யணும்.”
“என்னது?”
“எச்.ஸீ. ட்டெச் சொல்லிக் கேஸை ஒரு மாதிரியா வெளிக்கித் தெரியாமெ ஓச்சுடலாம்.”
“அதாரு எச். ஸி?”
“ஹெட் கான்ஸ்டபிள்.”
“அப்படின்னாச் சொல்லும். நீர் நன்னா இருப்பேள். நதீக்கிருஷ்ணன் ஒம்மைக் கண் திறந்து பாப்பன்.”
”எஸ். ஸி. முன்னாலெ போய் இளிக்கணும். அதிலேயும் பெரிய சீண்ட்றம் புடிச்ச மனிசன் அவன். உடனே கொம்புலெ ஏறிடுவான். கால் மேலே காலெப் போட்டுக்கிடுவான்.”
“நீர் எனக்காகச் சொல்லணும். இல்லைன்னா நான் அவமானப்பட்டு அழிஞ்சி போயுடுவேன். இது பணத்தாலெ காசாலெ நடத்தற ஜீவனமில்லெ. கேஸுகீஸுன்னு வந்துடுத்தா உத்தியோகம் போயுடும். நான் சம்சாரி. அன்னத்துக்கு லாட்டரியடிக்கும்படி ஆயுடும். ஒரு மனுஷன் முகத்திலே முழிக்க முடியாது. நீர் எச். ஸிட்டெ சொல்லும். இந்த ஆயுஸு பூராவும் நதீக்கிருஷ்ணனோட சேத்து உம்மையும் நெனைச்சுப்பேன்.”
“அது சரிதான் வேய். உம்ம வயித்திலே மண்ணடிக்கணுங்கற ஐடியா கெடயாது எனக்கு. எச். ஸி. ஒரு மாதிரி ஆளு. ஈவு இரக்கம் அவன் போன வளியிலே கிடையாது. மேலும் பெரிய துட்டுப்பிடுங்கி.”
”என்னது?”
“துட்டுப்பிடுங்கி. காணிக்கை வச்சாத்தான் சாமி வரம் தரும். இந்த எளவுக்காகச் சுட்டித்தான் அந்த மனுசங்கிட்டே வள்ளிசா சிபாரிசுக்கு போறதில்லை நான்.”
“என்ன கொடுக்கணும்?”
“அஞ்சு பத்து கேப்பான்.”
“அஞ்சா? பத்தா?”
“பத்து ரூபாய்க் காசில்லாமெ ஒரு கேஸெ ஓய்ப்பானா?”
“பத்து ரூபாயா!”
“ஏன் வேய்?”
“பத்து ரூபாய்க்கு இப்போ நான் எங்கே போறது?”
”வேணும்னா செய்யும். இல்லைன்னா வருது போலே பாத்துக்கிடணும்.”
அர்ச்சகர் வாய் திறவாமல் நடந்தார். மீண்டும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன? என்ன சொல்லுதீரு?”
“ஊஹூம். நான் எங்கே போவேன் பத்து ரூபாய்க்கு?” கணீரென்ற குரலில் சொன்னார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு கோபம்தான் வந்தது.
“இப்போ யாரு வேய் தரணும்னு களுத்தெப்புடிக்கா? யாரோ லஞ்சம் புடுங்குதாப்லெ படுதீரே. துரிசமா நடவும். இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போகுதுக்கு முன்னாடி போயுடணும். கொஞ்சம் கஷாயம் குடிச்சாத்தான் உடம்புக்கு சரிப்பட்டு வரும் உமக்கு.”
”ஒடனெ கத்தரிச்சுப் பேசறேரே.”
“கத்தரியுமில்லெ இடுக்கியுமில்லெ. வாய் பேசாமெ நடவும்.”
சிறிது நேரம் சென்றதும் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“இப்பம்தான் ஞாபகம் வருது. அன்னைக்கு டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து ஒரு கடிதாசி வந்துச்சு. டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து காயிதமெல்லாம் மாயமா மறஞ்சு போகுதாம். காக்கிச் சட்டைக்காரங்க நாந்துக்கிட்டு சாகப்படாதாங்கற தோரணையிலே எழுதியிருந்தாங்க. இப்பம்தாலா விஷயம் தெரியுது?”
”என்ன தெரியுது?”
“சட், வாயெ மூடிட்டு வாரும். வாயைத் தொறந்தீர்னா பொடதிலே வச்சிடுவேன். ஸ்டேஷனுக்கு உள்ளே ஏத்தினம் பெறவுல்லா இருக்கு.”
“பகவான் விட்டது வழி.”
இருவரும் ஸ்டேஷன் பக்கம் வந்துவிட்டார்கள். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
“நல்ல மனுசங்களுக்கு இது காலமில்லே. எத்துவாளி பயகளுக்குத்தான் காலம். ஈவு இரக்கம் இருக்கப்படாது.”
“ஏனாம்?”
“பாருமே, மலைமாதிரி குத்தம் பண்ணிப்புட்டு நிக்கேரு. நீரு உடற கதெயெல்லாம் ஒரு பயவுளும் நம்பப்போவதில்லை. கோயில் குளிக்கற மனுசன் தெரியாத்தனமா ஆம்பிட்டுக்கிட்டு முளிக்காரு. அடியும் உதையும் பட்டு, அவமானமும் பட்டு அலக்களிஞ்சிப் போகப் போறார்னு ஐடியா சொன்னா, காதிலெ ஏறமாட்டேங்குது. உம்ம கூட்டாளிக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும். உம்மெச் சொல்லிக் குத்தமில்லெ, காலம் அப்படி.”
அர்ச்சகருக்குச் சிரிப்பு வந்தது.
”உம்மெ நைஸா கை தூக்கிவிட்டுப் போடணும்னு நெனச்சேன் பாரும். அந்தப் புத்தியெ செருப்பாலே அடிக்கணும்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“நீர் சொல்றது சரி. என்னெக் காப்பாத்தணுங்கற நெனப்பு ரொம்ப இருக்கு உமக்கு. அந்த எச்.ஸி.தான் பெரிய பேராசைக்காரனா இருக்கான். அவன் பேராசைக்காரனா இருக்கட்டும். நான் அஷ்டதரித்திரமா இருக்கணுமோ?”
“ஆசாமியெ ஸ்டேஷனுக்கு உள்ளே விட்டுப் பூட்டாத் திருகித்திருகி எடுத்தால்ல தெரியும் அஷ்டதரித்திரம் படறபாடு.”
“பகவான் விட்டது வழி. பதனஞ்சு வருஷமா தினம் தினம் அவனெக் குளுப்பாட்டறேன். விதவிதமா அலங்காரம் பண்ணிப் பாக்கறேன். சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிப்பண்ணி நெத்தியிலே தழும்பு விழுந்துடுத்து. அந்த நன்னிகெட்ட பயல் அடி வாங்கித் தறதுன்னா தரட்டும். கம்பி எண்ண வச்சான்னா வைக்கட்டும்.”
அர்ச்சகர் அமைதியாகப் பேசினார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். அவர் முகத்தில் பயத்தின் சாயலே இல்லை. அவர் இப்பொழுது வேகமாக நடந்தார். கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தார்.
“அப்பம் ஒரு காரியம் செய்வமா?” என்று கேட்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“என்ன?”
“நீரும் அப்படியொண்ணும் டாட்டாவுமில்லே பிர்லாவுமில்லே. ஏதோ ஒரு மாதிரியா காலத்தைத் தள்ளிட்டிருக்கீரு. உமக்காகச்சுட்டி  ஒண்ணு வேணாச் செய்யலாம்.”
“விஷயத்தைத் தெளிவாச் சொல்லலாமே. ஏன் சுத்திச்சுத்தி வளைக்கணும்?” என்று கேட்டார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு பிடரியெத் தாக்கிற்று. “எச்.ஸீட்டெ ஒம்ம நெலமெயெ எடுத்துச் சொல்லி சுளுவா முடிக்கப் பாக்கறேன். அஞ்சு ரூபா எடும். சட்னு எடும். எனக்கு வேற வேல இருக்கு.”
அர்ச்சகர் முன்பின் யோசிக்கவிடாமல் பணத்தை வாங்கி விட எண்ணினான் அவன்.
அர்ச்சகர் முன்னைவிடவும் அமைதியாகச் சொன்னார்:
“இதென்ன பேச்சு இது! அஞ்சு ரூபாய் தரலாம்னா பத்தாத் தந்துடப்படாதா? அம்புட்டுக்கெல்லாம் இருந்தா நான் ஏன் நதீக்கிருஷ்ணனெ குளுப்பாட்டப் போறேன். மேலும் இப்போ நான் என்ன திருடினேனா, கொள்ளையடிச்சேனா, இல்லெ ரோட்டிலெ போறவ கையைப் புடிச்சு இழுத்தேனா - என்ன தப்புப் பண்ணிப்பிட்டேன்னு சொல்லட்டுமே, உம்ம எச்.ஸி. தலையெ சீவறதுன்னா சீவட்டுமே.”
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு அந்த இடத்திலேயே அர்ச்சகரைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிடலாம் போலிருந்தது.
”மகா பிசுநாறி ஆசாமியா இருக்கீரே!” என்றான்.
“என்ன சேறது? அப்படித்தான் என்னெ வச்சிருக்கான் அவன்.”
“அவன் யாரு அவன்?”
“மேலே இருக்கான் பாரும், அவன்.”
இருவரும் ஸ்டேஷன் முன்னால் வந்துவிட்டார்கள். ஸ்டேஷனுக்கு முன்னாலிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில், கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தவரை, ‘அண்ணாச்சி’ என்று கூப்பிட்டுக் கொண்டே அவரிடம் வலியப் பேச ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அண்ணாச்சியிடம் சளசளவென்று பேச்சை வளர்த்திக்கொண்டிருதான் அவன். அர்ச்சகர் நின்றுகொண்டிருந்த இடத்தை அவன் அசைப்பிலும் திரும்பிப் பார்க்கவில்லை. அவர் போவதானால் போகட்டும் என்ற தோரணையில் நிற்பது போலிருந்தது. ஆனால் அவர் கற்சிலை மாதிரி அங்கேயே நின்றார்.
அண்ணாச்சிக்குப் பேச்சு சலித்துவிட்டது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் பக்கம் திரும்பி, “சாமி, நீங்க போறதுன்னாப் போங்க, பின்னலே பாத்துக்கிடலாம்” என்றான்.
“கையோட காரியத்தை முடிச்சுடலாமே” என்றார் அர்ச்சகர்.
“அட போங்க சாமி, நான்தான் சொல்லுதேனே பின்னாலெ பாத்துக்கிடலாம்னு, உடாமெ பிடிக்கீரே.”
“என்னப்பா விஷயம்?” என்று கேட்டார் அண்ணாச்சி.
“ஒண்ணுமில்லெ. என் கொளந்தெக்குப் பொறந்த நாளு நாளைக்கு. பூசை கீசை பண்ணி கொண்டாடணும்னு சொல்லுது அது. அதுதான் இவரிட்டே கேட்டுக்கிட்டே வாறேன். சாமான் கீமான் வாங்கணுங்காரு. ஆனா பணத்துக்கு எங்கே போகுது?”
‘அடி சக்கே’ என்று மனதில் சொல்லிக்கொண்டார் அர்ச்சகர்.
பணம் சம்பந்தமான பேச்சு வந்ததாலோ என்னமோ அண்ணாச்சி சட்டென்று விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழும் அர்ச்சகர் நின்ற திசைக்கு நேர் எதிர்திசை நோக்கி மடமடவென்று நடக்க ஆரம்பித்தான்.
அர்ச்சகர் பின்னால் ஓடிஓடிச் சென்றார்.
“இந்தாரும் ஓய், கொஞ்சம் நில்லும். என்ன இது? நடுரோட்டிலெ நிக்கவச்சுட்டு நீர் பாட்டுக்குக் கம்பியெ நீட்டறேரே?”
“அட சரிதான், போமய்யா.”
”என்னய்யா இது, எனக்கு ஒண்ணும் புரியலையே.”
“வீட்டெப் பாத்துப் போமய்யா. போட்டு பிராணனெ வாங்குதீரே.”
“என்னன்னமோ சொன்னேர். ஆ ஊ ஆனை அறுபத்திரெண்டுன்னு சொன்னீர். இப்போ போ போன்னு விரட்டறேரே.”
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. கண்கள் சிவந்தன. நெற்றிப் பொட்டில் நரம்புகள் புடைத்தன. அர்ச்சகர் முகத்தையே இமைக்காமல் பார்த்தான். அர்ச்சகரும் இமைக்காமல் பார்த்தார். அவருக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது. இலேசான புன்னகை உதட்டில் நெளிந்தது. அர்ச்சகர் சிரிப்பை அடக்குவதையும் அவர் உதட்டில் சிரிப்பு பீறிட்டு வழிவதையும் கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு கடகடவென்று சிரித்தான். சப்தம் போட்டு சிரித்தான். வாய்விட்டுச் சிரித்தான். குழந்தைபோல் சிரித்தான்.
அர்ச்சகரும் அவனுடன் சேர்ந்து அட்டகாசமாகச் சிரித்தார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகரிடம் மிக நெருங்கி நின்றுகொண்டு, அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்:
“வீட்டுக்குப் போம். நானும் வீட்டுக்குத்தான் போறேன்.” குரல் மிக அமைதியாக இருந்தது. அர்ச்சகர் அவன் முகத்தைப் பார்த்தார். சற்று முன்னால், அவர் முன் நின்ற ஆள் மாதிரியே இல்லை.
“நானும் அந்தப் பக்கம்தானே போகணும். சேர்ந்தே போறது” என்று கூட நடந்தார் அர்ச்சகர்.
“ஆமாம், அந்த ஆசாமீட்டே ஏதோ ஜென்ம நக்ஷத்திரம்னு சொன்னீரே. வாஸ்தவம் தானா? இல்லெ எங்கிட்டெக் காட்டின டிராமாவுக்கு மிச்சமோ?” என்று கேட்டார் அர்ச்சகர்.
“உண்மைதான் வேய், நாளைக்குப் பொறந்த நாள்.”
“என்ன கொழந்தே?”
“பொம்புளெப் புள்ளே.”
“தலைச்சனா?”
“ஆமா, கலியாணம் முடிஞ்சு பதினொண்ணு வருசமாவுது.”
“ஓஹோ, பேரென்ன?”
”கண்ணம்மா.”
“நம்ம ஸ்வாமிக்கு ரொம்ப வேண்டிய பெயர்” என்றார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சிரித்துக் கொண்டான்.
“ஆமாம், அதுக்கு என்ன பண்ணப்போறீர்?”
“வீட்டுக்காரி எதை எதையோ செய்யணும்னு சொல்லுதா. நான்தான் இளுத்துக்கிட்டிருக்கேன்.”
”ஏன் இளுக்கணும்? தலைச்சன் கொழந்தே. ரொம்ப நாளைக்கப்பறம் ஸ்வாமி கண் திறந்து கையிலெ தந்திருக்கார். அதுக்கு ஒரு குறைவும் வைக்கப்படாது; வைக்க உமக்கு அதிகாரம் கிடையாது” என்று அடித்துப் பேசினார் அர்ச்சகர்.
“அது சரிதாய்யா. யாரு இல்லைன்னு சொல்லுதா? ஆனா கைச்செலவுக்கில்லா திண்டாட்டம் போடுது.”
“போயும் போயும் ராப்பட்னிக்காரன், ஸ்வாமி குளுப்பாட்டறவனைப் பிடிச்சா என்ன கெடைக்கும்? பிரசாதம் தருவன். கொழச்சுக் கொழச்சு நெத்தியிலே இட்டுக்கலாம். ஜரிகைத் துப்பட்டா, மயில்கண் வேஷ்டி, தங்கச்செயின் இந்த மாதிரி வகையாப் பிடிச்சா போட் போட்னு போடலாம். என்ன ஆளய்யா நீர், இதுகூட  தெரிஞ்சுக்காமெ இருக்கேரே” என்றார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு வாய்விட்டுச் சிரித்தான். “ஒரு பயலும் கையிலெ சிக்கலெ. நாயா அலஞ்சு பார்த்தேன். பிறந்தநாள் அயிட்டம் வேறே மனசிலே உறுத்திட்டு இருந்தது. அர்ச்சகரானா அர்ச்சகர்னு பாத்தேன். கையெ விரிச்சுட்டீரே! பொல்லாத கட்டைதாய்யா நீரு.”
“நானும் விடிஞ்சு அஸ்தமிச்சா பத்து மனுஷாளிடம் பழகுறவன்தானே? எழுபத்திமூன்று நாற்பத்தியேழு என்ன துள்ளுத்தான் துள்ளிருவான்னு தெரியாதாக்கும்.”
“அடி சக்கையின்னானாம்! கொஞ்ச முன்னாலே யாரோ அழுதாளே, அது யாரு? யாருக்கோ பல்லு தந்தி அடிச்சுதே, யாருக்கு? யாருக்குக் கையும் காலும் கிடுகிடான்னு வெறச்சுதாம்?”
“மொதல்ல கொஞ்சம் பயந்துதான் போனேன். ஏன் பொய் சொல்லணும். இருந்தாலும் என்ன உருட்டு உருட்டிப் புட்டீர்!”
“என்ன செய்யுது சாமீ? இந்த சாண் வயத்துக்காகத் தானே இந்த எளவெல்லாம். இல்லாட்டி மூக்கெப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திரலாமே.”
“சந்தேகமா? நான் என்ன பாடுபடறேன் கோவில்லே? கோவிலுக்குள்ளே ஏறி வந்தாலே புண்ணியாசனம் பண்ணனும். ஸ்வாமி எழுந்திருந்து பின்புறம் வழியா ஓடியே போயுடுவா. அந்தமாதிரி பக்த சிகாமணிகள்ளாம் வருவா. அவாளிடம் போய் ஈ ஈன்னு இளிச்சுட்டு நிக்கறேன். உங்களெ விட்டா உண்டா என்கிறேன். ஆழ்வார் நாயன்மார்கள் கெட்டது கேடு என்கிறேன். கடைசியா, போறத்தே ரெண்டணா வைக்கிறானா, நாலணா வைக்கிறானான்னும் கவனிச்சுக்கறேன். அணாவெ தீர்த்தத்தில அலம்பி இடுப்பிலெ சொருகிக்கறேன்” என்றார் அர்ச்சகர்.
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
இரண்டு பேரும் நடந்து நடந்து போஸ்டாபீஸ் ஜங்ஷனுக்கு வந்துவிட்டார்கள்.
”இந்த லெட்டரே போட்டுட்டு வந்துடறேன்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“பாத்துப் போடும். யாராவது காக்கிச் சட்டைக்காரன் வந்து புடிச்சுக்கப் போறான். யார் வீட்டிலெ நோவு எடுத்திருக்கோ?” என்றார் அர்ச்சகர்.
கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டு எதிர் சாரியிலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்கு வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. மட்டிப்பழக் குலையிலிருந்து நாலைந்து பழங்களைப் பிய்த்தான். “இந்தாரும், சாப்பிடும்” என்று அர்ச்சகரை நோக்கி நீட்டினான்.
அர்ச்சகர் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். இரண்டு பேரும் வெற்றிலை போட்டுக்கொண்டார்கள்.
“கணக்கிலே எளுதிக்கிடுங்க” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு, கடைக்காரரை நோக்கி.
“எழுதிக்கிட்டே இருக்கேன்” என்றார் கடைக்காரர்.
“சும்மா எழுதுங்க. ரெண்டுநாள் களியட்டும். செக்கு கிளிச்சுத் தாறேன்.”
நடந்து, இரண்டு பேர்களும் பரஸ்பரம் பிரியவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார்கள்.
”சாமி, அப்பொ எனக்கு விடைகொடுங்க. ஒண்ணும் மனசிலே வச்சுக்கிடாதீங்க” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“என்ன நெனக்கிறது. காக்கி ஜாதியே இப்படித்தான்” என்றார் அர்ச்சகர்.
“எல்லாம் ஒரே ஜாதிதான்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“அதுசரி, நாளைக்கு என்ன செய்யப்போறேர்?”
“என்ன செய்யுதுனு விளங்கெலெ. அதுக்கு முகத்திலே போய் முளிக்கவே வெக்கமாயிருக்கு. ஆயிரம் நெனப்பு நெனச்சுக்கிட்டு இருக்கும். சரி, நான் வாறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“ஓய், இங்கே வாரும்” என்றார் அர்ச்சகர்.
வந்தான்.
அர்ச்சகர் அரை வேஷ்டியை இலேசாக அவிழ்த்துவிட்டுக் கொண்டார். இப்பொழுது வயிற்றில் ஒரு துணி பெல்ட் தெரிந்தது. துணி பெல்ட்டில் ஒவ்வொரு இடமாகத் தடவிக் கொண்டே முதுகுப்புறம் வந்ததும் சட்டென்று கையை வெளியில் எடுத்தார்.
ஐந்து ரூபாய் நோட்டு!
“இந்தாரும், கையெ நீட்டும்” என்றார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு கையை நீட்டி வாங்கிக் கொண்டான்.
”கொழந்தை பிறந்தநாளுக்கு குறை ஏற்படாதுன்னு தறேன்” என்றார் அர்ச்சகர்.
“சாமி, ரொம்ப உபகாரம், ரொம்ப உபகாரம்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அவன் குரல் தழதழத்தது.
“ஆனந்த பாஷ்பம் ஒண்ணும் வடிக்க வேண்டாம். ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கினதும் திருப்பித் தந்துடணும்” என்றார் அர்ச்சகர்.
“நிச்சயமா தந்துடுதேன்.”
“கண்டிப்பாத் தந்துடணும்.”
“தந்துடுதேன்.”
“தரலையோ, எச். ஸிட்டெச் சொல்லுவேன்.”
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
“நாளைக்கு நம்ம கோயிலுக்கு கூட்டிண்டு வாரும் கொழந்தெயெ. கண்ணம்மா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவன் நதீக்கிருஷ்ணன். நானே கூடயிருந்து ஜமாய்ச்சுப்புடறேன்.”
“சரி, அப்படியே கூட்டிட்டு வாறேன்.”
“அப்பொ நான் வறேன். முதல் தேதி ஞாபகமிருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருட்டில் நடந்தார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் மறைவதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
நன்றி: சரஸ்வதி, 1958
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.