Jump to content

முள்ளிவாய்க்கால் மே 2009 தமக்கு நடந்தவை


Recommended Posts

முள்ளிவாய்க்கால் மே 2009 தமக்கு நடந்தவை குறித்து எனக்கு நெருக்கமானவர்கள் சிலரது வாக்குமூலங்கள்:

1. செல்வம் (சித்தப்பா முறையானவர்):

//அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது//

'குண்டுவீச்சுக்கள், உறவுகளின் உயிர் இழப்புகள் தாண்டி ஒரு வழியாக முகாமுக்கு வந்தோம். முதல் மூன்று நாட்கள் நீர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டும் உணவுப்பொட்டலங்கள் வந்தன. அதனைப்பெறுவதற்காக வரிசையில் நிற்கவேண்டும். வந்த உணவுப் பொட்டலங்கள் பாதி வரிசை முடியும் முன்பே முடிந்துவிடும். உணவு கொண்டுவந்தவர்கள் போய் விடுவார்கள். மீதிப்பேர் அன்று பட்டினிதான். இப்படித்தான் நாட்கள் ஓடின. இப்படியான நிலையில் என் மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஏறக்குறை 7 மாதங்களாக சரியான உணவு கிடைக்காததால் மிகவும் வாடிப்போய் இருந்தான். அது போதாதென்று வயிற்றுப்போக்கும் வந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இரவு பகலாக அவனை அணைத்தபடி அழுதோம். மருத்துவரிடம் காட்ட அனுமதிக்கும்படி இராணுவத்தினரிடம் மன்றாடினோம். அப்படிச் செல்வதாயின் குழந்தையைத் தனியே தங்களுடன்தான் விடவேண்டும் என்றார்கள். அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந்தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம். அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அன்று எங்களுக்கு இருந்த ஒரே ஊக்க சக்தி எங்கள் குழந்தைதான். அதனால் அவனை நாங்களே வைத்திருந்தோம். கம்பி வேலிக்கு அருகில் வெளியில் இருந்து பார்க்க வருவோர் வரும்வேளை, எங்கள் மகனைத் தூக்கி எறிகிறோம். கொண்டுசெல்லுங்கள். எங்கள் உறவினர்களுக்கு அறியத் தாருங்கள் என்று கதறுவோம். எங்களைப்போன்றே பல பெற்றோர்கள் கதறி அழுவார்கள். வருபவர்களும் கண் கலங்கி அழுவார்கள்.

ஆனால் இராணுவத்தினர் அவர்கள் நெருங்கமுடியாதபடி விரட்டுவார்கள். வெளிநாடு வாழ் உறவினர்கள் பணம் அனுப்பி கருணா கும்பல் மூலமாக இராணுவத்தினருக்கு பணம் கொடுக்கப்பட்ட செட்- அப் செய்யப்பட்டிருந்தால் மாத்திரம் குழந்தைகள் கம்பி வேலிகளுக்கு மேலாகத் தூக்கிக்கொடுக்கப்படும்போது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். கம்பிவேலிக்கு அருகில் வந்துபார்த்த யாரென்று இன்றுவரை அறியாத உறவொன்று மருத்துவரைப் பார்த்து எங்கள் குழந்தையின் நோயைக் கூறி, தானே கடையில் மருந்தும் வாங்கிவந்து இராணுவத்தினர் அறியாமல் கொடுத்தார். அதன்பின்னர், எங்கள் மகன் குணமடைந்தான். வெளிநாட்டில் இருந்த என் அண்ணி இராணுவத்தினருக்கு டக்ளசின் ஆட்கள் மூலமாகப் பணம் கொடுத்துப் பின்னர் நாம் வெளியே வந்தோம்'.

2 . வா. சண்முகநாதன்: (வயது 13 - எனக்கு மாமி உறவான ஒருவரின் மகள் )

//அம்மா நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில் இரத்தம் வடிந்திருந்தது. அனைவரது உடல்களையும் உடனடியாகப் புதைக்கமுடியவில்லை. இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தனர். எறிகணை வீச்சுத் தொடர்ந்தது. அம்மாவின் உடலை அணைத்தபடி பங்கருக்குள் இருந்து அப்பா அழுதார். நாங்களும் அழுதோம்//

'அன்று என் அம்மா, சின்னம்மா இருவரும் இயலாமல் இருந்த எங்கள் அம்மம்மாவுக்கு காலைக்கடன் முடிக்க உதவிசெய்வதற்காய் பங்கருக்கு வெளியே வந்தனர். நான் (எனக்கு வயது 13), என் தங்கை (10), தம்பி (6), மற்றும் சின்னம்மாவின் மகன் (4), மகள் (1), எங்கள் அப்பா ஆகியோர் பங்கருக்குள்ளாகவே இருந்தோம். சின்னம்மாவின் சித்தப்பா சென்ற ஆண்டு வட்டக்கச்சியில் சிறீலங்கா விமானப்படை குண்டுவீசியதில் இறந்துபோனார். பல நாட்கள் சரியான உணவு இல்லை. பசி மயக்கம், களைப்பு, எறிகணை, விமானக்குண்டுவீச்சு என்று தொடர்ந்தபடி இருந்ததால் பயமாக இருந்தது. அப்போது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அப்பா பங்கரைவிட்டு எட்டிப்பார்த்து அம்மாவைக் கூப்பிட்டார். அம்மாவும், சின்னம்மாவும் உடனடியாக ஓடி வராமல், நடக்க இயலாமல் இருந்த அம்மம்மாவைத் தூக்கியபடி ஓடிவந்தார்கள். அப்போது மற்றொரு செல் வீழ்ந்து வெடித்தது. எறிகணைவீச்சு ஓய்ந்தபின் ஓடிச்சென்று பார்த்தால், எங்கும் சதைகளும், உடல் உறுப்புகளும்... அம்மா நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில் இரத்தம் வடிந்திருந்தது. அனைவரது உடல்களையும் உடனடியாகப் புதைக்கமுடியவில்லை. இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தனர். எறிகணை வீச்சுத் தொடர்ந்தது. அம்மாவின் உடலை அணைத்தபடி பங்கருக்குள் இருந்து அப்பா அழுதார். நாங்களும் அழுதோம். அப்பாவுடன் தனியாக இப்போது நாங்கள் ஐவரும். 4 மணிநேரத்துக்குப் பின்னர், வெளியே வந்து, ஒரு இடத்தில் மூவரது உடல்களையும் புதைத்தோம். போர் முடியும் நேரம் முகாமுக்கு வந்து சேர்ந்தோம். முகாம் என்று ஒன்றும் அப்போது இருக்கவில்லை. வெட்ட வெளியில்தான் படுத்தோம். எழுந்தோம். என்னால் முடியவில்லை. ஆனால் அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் பதிலாக நான்தானே என் சகோதரர்களைப் பார்க்கவேண்டும் என்று தைரியத்தோடு இருந்தேன். ஒரு வாரமாக மிகவும் முடியாமல்போனது. காய்ச்சலோடு படுத்திருந்தேன். அப்போது அங்குவந்த இராணுவத்தினர் என் தங்கையை விசாரிக்கவேண்டும், அனுப்புங்கள் என்று இழுத்தார்கள். அப்பா விட மாட்டார். அவள் குழந்தை, அவளை விடுங்கள் என்று கெஞ்சுவார். ஒரு சில நாட்கள் இப்படி நடந்தது. வேறு பெண்பிள்ளைகள் பலரையும்கூட இப்படி வந்து இழுத்தார்கள். சிலரை இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெற்றோர்கள் இல்லாதவர்கள் போனவர்கள் போனவர்கள்தான். திரும்பிவந்த பிள்ளைகள் பலரும் நடைபிணங்களாய்த்தான் வந்தனர். சிலர் பின்னர் முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அடுத்த நாளும் அவர்கள் வந்தால் என்ன செய்வது என்று அப்பா கவலையோடு இருந்தார். எங்களருகில் இருந்த மற்றொரு குடும்பத்தினரது மகளையும் இப்படித்தான் இழுக்க வந்தார்கள். அவர்களும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். அடுத்த நாள் மருத்துவ உதவிசெய்ய வந்த தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் என் தங்கையையும், பக்கத்தில் இருந்தவர்களது மகளையும் கொடுத்து அவர்களுக்கு உடல் நலமில்லையாதலால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்று கூறினார். மருத்துவமனைக்கு அருகில் ஒரு கிறித்தவ தேவாலயம் இருப்பது அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. மருத்துவமனையில் இராணுவ வண்டி நோயாளர்களை இறக்கியதும் எப்படியாவது தப்பித்து அந்த தேவாலயத்துக்குச் சென்று பாதிரியாரின் உதவியைக் கோருங்கள் என்று என் தங்கைக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. அப்படியே அவர்கள் இருவரும் எப்படியோ தப்பித்து பாதிரியாரிடம் உதவிகோரி, அவரும் அவர்களைப் பாதுகாப்பாய் மன்னாருக்கு அனுப்பிவிட்டார். இப்போது என் தங்கை அங்குதான் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள். என் தம்பி, சின்னம்மாவின் 4 வயது, 1 வயதுக் குழந்தை ஆகிய அனைவரையும் கவனித்தபடி நான் இன்றும் முகாமிலேயே இருக்கிறேன். சின்னம்மாவின், சித்தப்பா வழி உறவினர்கள், எத்தனையோ தடவை சின்னம்மாவின் குழந்தைகளைத் தங்களிடம் தந்துவிடும்படி இராணுவத்தினரிடம் மன்றாடிவிட்டனர். அவர்கள் மறுத்துவிட்டனர். அந்த இரு குழந்தைகளையும் தனியே விட்டு நாங்கள் மட்டும் வெளியே செல்ல விரும்பாததால் நாங்களும் இங்கிருக்கிறோம். வெளிநாட்டில் வாழும் என் மாமாவும் மாமியும் கருணாவின் ஆட்களுக்குப் பணம்கொடுத்து எங்களை வெளியே எடுக்கமுயன்றனர். ஆனால் அவர்கள் பணத்தையும் வாங்கிப்பின் ஏமாற்றிவிட்டனர். இப்போதும் அவர்கள் வேறுவழிகளில் முயன்றபடி உள்ளனர். நான் ஐந்தாம் வகுப்புத் தேர்வில் மிகுந்த மதிப்பெண்கள் பெற்று புலமைப் பரிசிலும் பெற்றேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வியே இல்லை. எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை'.

3. திரு. சத்தியன் (நெருங்கிய நண்பர்):

//என் முகாமில் இருந்து வெளியேற்றப்படுவது எப்படி என்றால், நாள்தோறும் சித்திரவதை, நோய், பாலியல் வல்லுறவு கெர்டுமைகளால் இறந்த உடல்களை மாட்டுவண்டியில்போட்டு வெளியே கொண்டுபோவார்கள். அந்த உடலங்களோடு வெளியே தப்பிக்க ஏற்பாடுசெய்யப்பட்டவர்களையும் கொண்டுபோய்ப் போடுவார்கள். சடலங்களோடு சடலங்களாகக் கிடப்போம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி ஓடச்சொல்வார்கள். அப்படித்தான் நான் தப்பித்தேன்//

'நான் பல ஆண்டுகள் என்னைப் போராட்டத்தோடு இணைத்திருந்தேன். அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவென தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட செஞ்சோலை இல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத்தான் நான் காதலித்துத் திருமணம் செய்தேன். ஒருவயதுக் குழந்தை இருந்தாள். களமுனையில் நின்றிருந்தேன். அடுத்த நொடி எனக்கு என்ன ஆகுமோ என்று தெரியாது. என் மனைவியும், மகளும் எங்கிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எப்படியோ இறைவன் அருளால் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம். நாங்கள் மூவரும் இன்னும் சந்திக்கவில்லை. நான் வேறொரு முகாமில் அடைபட்டு, சித்திரவதைபடுத்தப்பட்டேன். அவர்கள் இருவரும் வேறு முகாமில். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று எனக்கும், நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர்களுக்கும் நாங்கள் முகாம்களுக்கு வந்தபிறகுதான் தெரியவந்தது. வெளிநாட்டில் வாழும் என் சகோதரர்கள் பெருந்தொகைப்பணத்தை இராணுவத்தினருக்குக் கொடுத்து என்னை வெளியே எடுத்துவிட்டனர். என் முகாமில் இருந்து வெளியேற்றப்படுவது எப்படி என்றால், நாள்தோறும் சித்திரவதை, நோய், பாலியல் வல்லுறவு கெர்டுமைகளால் இறந்த உடல்களை மாட்டுவண்டியில்போட்டு வெளியே கொண்டுபோவார்கள். அந்த உடலங்களோடு வெளியே தப்பிக்க ஏற்பாடுசெய்யப்பட்டவர்களையும் கொண்டுபோய்ப் போடுவார்கள். சடலங்களோடு சடலங்களாகக் கிடப்போம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி ஓடச்சொல்வார்கள். அப்படித்தான் நான் தப்பித்தேன். உடனடியாக என்னை என் உறவினர்கள் அயல்நாடு ஒன்றுக்கு எடுத்துவிட்டனர். இங்கிருந்தபடி முகாமுக்குச் சென்ற உறவினர் ஒருவரது தொலைபேசி மூலமாக என் மனைவியிடம் பேசினேன். போர் உச்சகட்ட நேரத்தில், ஆயிரமாயிரமாய்ப் பிணங்கள் விழுந்துகொண்டிருக்க, எந்த நொடி தான் சாவேனோ என்று அறியாது தவித்து, அப்படி ஏதாவது தனக்கு நடந்துவிட்டால் எங்கள் ஒரு வயதுக்குழந்தையின் கதி என்ன என்று நினைத்து பல நாட்கள் அழுததாகவும், குழந்தையையும் கொன்று தானும் இறந்திடலாமா என்று பலமுறை யோசித்ததாகவும் கூறி அழுதாள்'.

4. பத்மன் (எனக்கு தம்பி முறையானவர்):

//'அண்ணா எனக்குத்தான் இரு கால்களும் இல்லை.. என்னால் வர முடியாது. உங்களால் முடியும். முயற்சிசெய்து ஊர்ந்து போங்கள் அண்ணா..." என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பிய ஒரு சின்னத்தம்பியின் முகம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.//

எறிகணை வீழ்ந்து வெடித்தது. எழுந்தபோது அருகில் இருந்த தோழர்கள் இருவரும் இறந்துகிடந்தார்கள். எழ முயற்சித்தேன். முடியவில்லை. வயிற்றில் ஏதோ பிசுபிசுப்பாய் உணர்ந்தேன். தொட்டுப்பார்த்தால் குழாயால் நீர் கொட்டுவது போல் குருதி குபுகுபுவென்று வந்தது. அருகில் ஆள் அரவம் இல்லை. எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாய் இருந்தது. மெதுவாய் ஊர்ந்து ஊர்ந்து சென்றேன். வீதி ஒன்றில் மயங்கிவிட்டேன். லேசாக மயக்கம் தெளிந்தபோது தமிழீழ மருத்துவத்துறை இளையவர்கள் இருவர் பேசுவது கேட்டது. எங்கும் கதறல் சத்தம். 'ஈரலில் காயம்போலிருக்கு.. ஒன்றும்செய்ய முடியாது" என்று ஒருவர் சொல்ல, மற்றவர்-ஒரு பெண் பிள்ளை, 'இல்லை...மூத்திரப்பையில்தான் காயம்போலுள்ளது சிகிச்சை அளி" என்றார். நான் மீண்டும் மயங்கிவிட்டேன். எழுந்தபோது எல்லாம் அடங்கியிருந்தது. மருத்துவ இடம் முழுதும் பிணக்காடாய் இருந்தது. அங்கு எதுவும் இருக்கவில்லை. மருத்துவம் அளிக்கப்பட்ட அந்தத் தற்காலிக இடமே எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. எங்கும் இரத்தமும் சதைத்துண்டங்களும். என்னால் எழும்ப முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்து ஒரு பங்கருக்குள் வந்தேன். அங்கு அருகருகே இருந்த பல பங்கர்களுக்குள் ஆயிரக் கணக்கான காயப்பட்ட மக்களும், போராளிகளும் இருந்தனர். எறிகணைகள் பங்கர்களுக்குள்ளும், அருகாலும் வீழ்ந்து வெடித்தபடி இருந்தது. மக்கள் கூட்டமாய் போகும் இடத்தை நோக்கி கொஞ்சம் நகர முடிந்தவர்கள் நகர ஆரம்பித்தோம். கால் இல்லாதவர்கள், நகர முடியாதவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கர்களுக்குள்ளாகவே இருந்தனர். நான் முகாம் வந்து, அங்கிருந்து மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அங்கு மக்களைப் பார்வையிடவந்த ஒரு தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் உதவியால், அவரது அடையாள அட்டையைக் காட்டி வெளியே வந்துவிட்டேன். அன்று அந்த நாள், வரமுடியாமல் இயலா நிலையில் பங்கர்களுக்குள் இருந்தவர்களை இராணுவம் ஒவ்வொருவராய்ச் சுட்டுக்கொன்று, குற்றுயிராய் இருந்தவர்களை அப்படியேவிட்டு பங்கர்களை மண்போட்டு மூடியதாக இன்று அறிந்து தூக்கமின்றித் தவித்து அழுகிறேன். நான் பங்கரைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தபோது, 'அண்ணா எனக்குத்தான் இரு கால்களும் இல்லை.. என்னால் வர முடியாது. உங்களால் முடியும். முயற்சிசெய்து ஊர்ந்து போங்கள் அண்ணா..." என்று என்னை ஊக்கப்படுத்தி அனுப்பிய ஒரு சின்னத்தம்பியின் முகம் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

5. திருமதி. பரராசசிங்கம்: (முள்ளிவாய்க்காலில் இருந்தபோது சொன்னது)

//எனக்கு ஐந்து குழந்தைகள். ஒவ்வொரு இடத்திலும் நடந்த எறிகணை வீச்சிலும், வான்குண்டுத்தாக்குதலிலும் என் குழந்தைகளை ஒவ்வொருவராய் இழந்துவிட்டேன். இன்று மிச்சமிருப்பது இரண்டுபேர் தான். பல ஆண்டுகளுக்கு முன்னரே இராணுவத்தினர் பிடித்துக்கொண்டுசென்ற என் கணவர் பின்னர் வரவேயில்லை. குடும்பத்தில் வேறு பலரை இழந்துவிட்டேன்//

என் சொந்த இடம் மன்னார். அங்கிருந்து இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து, ஒவ்வொரு இடமாய்த் திரிந்தோம். 11 முறை இடம்பெயர்ந்துவிட்டோம். எனக்கு ஐந்து குழந்தைகள். ஒவ்வொரு இடத்திலும் நடந்த எறிகணை வீச்சிலும், வான்குண்டுத்தாக்குதலிலும் என் குழந்தைகளை ஒவ்வொருவராய் இழந்துவிட்டேன். இன்று மிச்சமிருப்பது இரண்டுபேர் தான். பல ஆண்டுகளுக்கு முன்னரே இராணுவத்தினர் பிடித்துக்கொண்டுசென்ற என் கணவர் பின்னர் வரவேயில்லை. குடும்பத்தில் வேறு பலரை இழந்துவிட்டேன். வாழ்வதற்கு வழியில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கஞ்சி கொடுத்தால் மட்டுமே கொஞ்சம் பசி தீர்க்கப்படும். இன்று முள்ளிவாய்க்காலில் இருக்கிறேன். நாளை என்ன ஆகுமோ தெரியாது.'

6. குணரட்னம்: (நெருங்கிய தோழரின் அண்ணன்)

// என் தம்பியின் மூன்று வயதுக்குழந்தை, மற்றும் பிறந்த பச்சிளம்குழந்தை ஆகியோரின் கதி என்னவென்று தெரியாமல் இன்றும் வெளிநாடு ஒன்றில் இருந்து இரவு பகலாய் அழுகிறேன. //

எனது தம்பி சிறீலங்கா விமானப்படையின் குண்டுவீச்சில் மார்ச் மாதம் உயிரிழந்தான். அவனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. மூன்று வயது மகன் இருந்தான். அவனது மனைவி மீண்டும் கர்ப்பம் தரிந்திருந்தார். இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து என்னுடன் தொலைபேசியில் பேசினார் என் தம்பியின் மனைவி. மே மாதமளவில் என் தம்பியின் இரண்டாவது குழந்தை பிறந்திருக்கவேண்டும். சிலர் வாய்வழியாகக்கூறிய தகவல்கள் மூலமாகக் குழந்தை பிறந்ததை அறிந்தேன். ஆனால் பின்னர் பேரிடியாக ஒரு செய்தி வந்தது. அது என்னவென்றால் தொடர்ந்த எறிகணை வீச்சில் என் தம்பியின் மனைவி கொல்லப்பட்டார் என்பதே. என் தம்பியின் மூன்று வயதுக்குழந்தை, மற்றும் பிறந்த பச்சிளம்குழந்தை ஆகியோரின் கதி என்னவென்று தெரியாமல் இன்றும் வெளிநாடு ஒன்றில் இருந்து இரவு பகலாய் அழுகிறேன். பெற்றோரற்ற குழந்தைகள் பலரை இறுதிக் கட்டத்தில் அவ்விடத்திலேயே கொன்றதாகவும், பலரை முகாமுக்குக் கொண்டுவந்து பின்னர் இடம் அறியாத, மொழி புரியாத சிங்களப் பகுதிகளில் உள்ள சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், பத்துவயதைக் கடந்த பலரை கருணா கும்பல், டக்ளஸ் கும்பல் ஆட்களிடம் கொடுத்ததாகவும், பெரும்பாலானோரை பௌத்த பிக்குகளிடம் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். தமிழ் கத்தோலிக்கத் திருச்சபையினர் கெஞ்சிக் கேட்டும் அந்தப் பிஞ்சுகளை அவர்களிடம் தர மறுத்து பௌத்த மத பீடங்களில் இராணுவத்தினர் சேர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. என் தம்பியும், அவன் துணைவியும் தாய் மண்ணை நேசித்தவர்கள். எத்தனையோ முறை இங்கு வா என நான் அழைத்தும் அம்மண்ணைவிட்டு வர மறுத்தவர்கள் அவர்கள். அவர்களது குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. உயிரோடு இருந்தாலும் உறவுகள், சொந்தங்கள், வேர் எதுவும் அறியாது சிங்களவர்களாக, பௌத்தர்களாகவே அவர்கள் வளரப்போகிறார்கள் என்பதை நினைக்கையில் நெஞ்சு துடிக்கிறது. துக்கம் அடைக்கிறது.

7 . கேதா (நெருங்கிய நண்பர்):

//அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள், தம்பியின் குழந்தைகள், என் பெரியப்பா, பெரியம்மா என அனைவரும் இருந்த பங்கருக்குள்ளயே எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அனைவரும் சிதறிப்போனார்கள்//

என் குடும்பத்தினர் பலமுறை இடம்பெயர்ந்து இறுதியாய்ப் பேசியபோது முள்ளிவாய்க்காலில் இருந்தனர். அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள் இருவர். போராளிகளாய் இருந்து வீரச்சாவைத் தழுவி இருந்தார்கள் எனது தம்பியும் அவர் மனைவியும். அவர்களது குழந்தைகள் இருவரும் என் அண்ணா, அண்ணியுடன்தான் இருந்தார்கள். இவர்களோடு எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தார்கள். கனடாவில் உறைபனிக் குளிர்காலம். வீதிகள் எங்கும் எங்கள் மக்கள் போராட்டங்கள் நடத்தியபடி இருந்தார்கள். அமெரிக்கத் தூதரகம் முன்பு தொடர்ந்து மூன்று மாதங்களாக 24மணிநேரமும் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியபடி இருந்தார்கள். வெளியே நீரைக்கொட்டினால் ஒரு மணிநேரத்தில் அது உறைந்துவிடும். அப்படியான கடுங்குளிரிலும் கால்கள், கைகள் விறைக்க 8 மணிநேரத்துக்கு ஒரு முறை மக்கள் கூட்டம் மாற 24மணிநேரமும் நின்று தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் எம் உறவுகளுக்காய் குரல் கொடுத்தோம். மே 09ஆம் நாள், இப்படித்தான் வேலை முடிந்து, போராட்டத்தில் கலந்துவிட்டு வீடுவந்தேன். நான் கதவைத் திறக்க, என் மனைவி தொலைபேசியில் கதறும் சத்தம் கேட்டது. என்னைக்கண்டதும் ஓடிவந்து எதுவும் சொல்லமுடியாமல் ஒரு நொடி விறைத்து நின்றாள்.. பின்னர் கதறல்களுக்கு மத்தியில் 'எல்லோரும் போயிற்றினமாம்...எல்லாரும்..' என்று சொன்னாள். ஆம்.. என் அண்ணா, அண்ணி, அவர்களது குழந்தைகள், தம்பியின் குழந்தைகள், என் பெரியப்பா, பெரியம்மா என அனைவரும் இருந்த பங்கருக்குள்ளயே எறிகணை வீழ்ந்து வெடித்ததில் அனைவரும் சிதறிப்போனார்கள். நானும்தான்.

8 . ஜீவன் (எனக்கு அண்ணனானவர், நெருங்கிய நண்பர்):

//பார ஊர்தி வந்த வழியெங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. கொல்லப்பட்டுக் கிடந்த மக்களது உடல்களின்மீது ஏறி இறங்கும்போது பார ஊர்தியின் டயர்கள் பலமுறை அசைய மறுத்ததாம்//

எனது தம்பி கிறித்தவப் பாதிரியாராக இருந்தார். ஆதரவற்ற குழந்தைகள் பலர் அவரது பாதுகாப்பில் இருந்தனர். அனாதைகள் இல்லம் ஒன்றை கிளிநொச்சியில் நடத்திவந்தார். அவ்வில்லத்தில் 43 குழந்தைகள் இருந்தன. இறுதிக்கட்டப் போரின்போது, பெற்றோர் இல்லாத அனாதைப் பெண் குழந்தைகளுக்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைச்சேர்ந்த குழந்தைகளும் இவரது பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தனர். மொத்தம் 157 குழந்தைகள் இவருடன் இருந்தனர். என் தம்பியுடன் மற்றொரு பாதிரியாரும் சேவைபுரிந்தார். மே மாதம் தொடங்கியதில் இருந்தே இவர்கள் ஒருவருக்கும் உணவு இல்லை. எப்போதாவது செல் தாக்குதல் நிறுத்தப்படும்போது, தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் உடனடியாகக் கஞ்சி காய்ச்சி, தம் உயிர்கள் குறித்தும் கவலைப்படாமல் பங்கர், பங்கராகச் சென்று அதனை மக்களிடம் கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கப்படும்போது மட்டும்தான் இந்தக் குழந்தைகளுக்கும் உணவு கிடைக்கும். அப்படிக் கொடுத்துவந்த தமிழர்புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் நூற்றிப் பன்னிரண்டுபேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார்கள். மே 13ஆம் நாள், இப்படிக் கஞ்சிகொடுக்க வந்த தொண்டர்களிடம் இருந்து கஞ்சியை வாங்க எத்தனித்தபோது என் தம்பியுடன் கூட சேவையாற்றிவந்த பாதிரியார் கொல்லப்பட்டார். பல தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்களும், செஞ்சோலைச் சிறார்கள் மூவரும் கொல்லப்பட்டனர். ஏனையோரை பங்கருக்குள் விட்டுவிட்டு வெளியேவந்த என் தம்பி, உணவு, தண்ணீர் இல்லாத நிலையில் மிகவும் பலவீனமாக இருந்திருக்கிறான். இருந்தும் சக பாதிரியாரது உடலைப் புதைப்பதற்காய்த் தானே குழிவெட்டி அவரைப் புதைத்துவிட்டு பங்கருக்குள் வந்தாராம். சாப்பாடு, நீர் இல்லாத நிலையில் குழந்தைகள் ஒவ்வொருவராய் மயக்கம் அடைய, இனியும் உள்ளேயே இருக்க முடியாத என்ற நிலையில் துப்பாக்கிச் சூடுகளுக்கும், எறிகணைவீச்சுக்கும் நடுவே அனைவரையும் கூட்டியபடி நடக்க ஆரம்பித்துள்ளார். அவ்வேளை பாய்ந்து வந்தது ஒர் எறிகணை. குழந்தைகளைக் கூட்டி அணைத்தபடி அருகே இருந்த பங்கருக்குள் இறங்கியிருந்திருக்கிறார். பல குழந்தைகளை உடனடியாகப் பங்கருக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகையால் அவர்கள் அங்கு நின்றிருந்த பார ஊர்தி ஒன்றின் மறைவில் பதுங்கியிருக்கிறார்கள். அவ்வேளை அந்தப் பார ஊர்தியிலேயே செல் வீழ்ந்து வெடித்ததில் 56 குழந்தைகள் அவ்விடத்திலேயே சிதறிப்போனார்கள். உயிர்ப்பயம், அச்சம், நடுக்கம் எல்லாவற்றோடும் மீதமிருந்த குழந்தைகளோடு நடக்க ஆரம்பித்தார் என் தம்பி. வழியெங்கும் பிணங்கள். பல குழந்தைகளது உடல்கள். என் தம்பியையும் அவரோடு வந்த குழந்தைகளையும் இராணுவத்தினர் கண்டதும், துப்பாக்கியை இவர் முகத்துக்கு நேரே நீட்டிச் சுட முயன்றுள்ளனர். அவர் கொஞ்சம் சிங்களம் பேசத் தெரிந்தவர். பாதிரியார் என்பதால் முன்னர் அடிக்கடி இராணுவ காப்பரண்களைக் கடந்து கொழும்பு போய் வந்தவர். அதனால் அவருக்கு ஒரு அதிகாரியைத் தெரிந்திருந்தது. அவர் பெயரை மீண்டும் மீண்டும் சொல்ல, கொஞ்சம் கோபம் தணிந்தவர்களாய் அந்த இராணுவத்தினர் தமது பாரஊர்தியில் ஏறுங்கள் என்று கூறியுள்ளனர். பார ஊர்தி வந்த வழியெங்கும் மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. கொல்லப்பட்டுக் கிடந்த மக்களது உடல்களின்மீது ஏறி இறங்கும்போது பார ஊர்தியின் டயர்கள் பலமுறை அசைய மறுத்ததாம். பல நூற்றுக்கணக்கான குழந்தைகளது உடல்கள் மீது பார ஊர்தி ஏறி இறங்கும்போது 'தன்னால் முடியவில்லை...முடியவில்லை....ஏன் இதெல்லாம் நடக்கிறது..கடவுளே' என்று கதறி அழுதுள்ளார் என் தம்பி. கொண்டுவந்தவர்களை ஒரு இடத்தில் இறக்கிவிட்டபோது, அங்கிருந்த எங்கள் உறவினர் ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லி அழுதிருக்கிறார். மிகவும் பலவீனமாக அவர் இருந்தார் என்று அந்த உறவினர் எனக்கு சொன்னார். இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த இராணுவத்தினர் என் தம்பியை விசாரிக்கவேண்டும் என்று சொல்லித் தனியே இழுத்திருக்கிறார்கள். அப்போது அவர் பாதுகாப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் அவரைக் கட்டி அழுதிருக்கிறார்கள். அவரைவிடச்சொல்லிக் கதறியிருக்கிறார்கள். இருந்தும் இராணுவத்தினர் அந்தக் குழந்தைகள் எதிரிலேயே என் தம்பியை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அன்றிரவு என் தம்பி மாரடைப்பில் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இறுதிவரை உடலைத் தரவே இல்லை. பல நாட்கள் உணவு, ஆகாரம் இல்லாதிருந்ததால் ஒரு சில அடிகள் பட்டாலே இறந்துவிடும் நிலையிலேயே பலரும் இருந்தனர். ஆக, என் தம்பியும் அவர்கள் அடித்ததால்தான் இறந்திருப்பான் என்று உறவுகளும், நண்பர்களும் சொல்கின்றனர். என் தம்பியின் பாதுகாப்பில் இருந்த மிச்சக் குழந்தைகளை சிங்களப் பகுதி ஒன்றில் உள்ள அனாதைகள் இல்லத்தில் வைத்திருப்பதாக என் தம்பியின் திருச்சபையைச் சேர்ந்த பிற பாதிரிமார்கள் கூறுகின்றனர். மன்னார் கத்தோலிக்க திருச்சபையினர் எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் அந்தக் குழந்தைகளை இராணுவத்தினர் தம்மிடம் தர மறுத்துவிட்டதாக இவர்கள் தெரிவித்தார்கள்.

9 . சியாமளா (எனக்கு தங்கை முறையானவர்)

//பித்துப் பிடித்தவர்களாய் உயிரற்ற குழந்தைகளின் உடல்களைத் தோளில்போட்டு இறுக அணைத்தபடி இருந்தார்கள் சில பெற்றோர். சிலர் உயிரற்ற உடல்களைக் கீழே கிடத்திவிட்டு, அவர்கள் தூங்குகிறார்கள் என்று நினைத்தபடி தடவிக்கொண்டே இருந்தார்கள். முகாம் எனப்படும் கம்பி வேலிகளுக்குள் போகவேண்டுமானால், தோளில் கிடக்கும் சடலத்தை எறிந்துவிட்டு வா என்று இராணுவத்தினர் கூறவும், 'இல்லை என் குழந்தை சாகவில்லை"//

முல்லைத்தீவில் இருந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு முட்கம்பி வேலிகளுக்குள் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம். அதில் தண்ணீர் ஏதோ ஒரு மூலையில் தருகிறார்களாம் என்பதை அறிந்த இரவிரவாக அவ்விடத்துக்கு தண்ணீர் பெறச் சென்றேன். அங்கு தண்ணீர் முடிந்திருந்தது. பல நாட்களாய் உணவு இல்லை. நீர் இல்லை. இதே நிலையில்தான் அந்த ஆயிரக் கணக்கான மக்களும் இருந்தனர். பாதி மயக்கமும், பல மைல்கள் நடந்த களைப்பிலும் படுத்திருந்தனர் அவர்கள். பித்துப் பிடித்தவர்களாய் உயிரற்ற குழந்தைகளின் உடல்களைத் தோளில்போட்டு இறுக அணைத்தபடி இருந்தார்கள் சில பெற்றோர். சிலர் உயிரற்ற உடல்களைக் கீழே கிடத்திவிட்டு, அவர்கள் தூங்குகிறார்கள் என்று நினைத்தபடி தடவிக்கொண்டே இருந்தார்கள். முகாம் எனப்படும் கம்பி வேலிகளுக்குள் போகவேண்டுமானால், தோளில் கிடக்கும் சடலத்தை எறிந்துவிட்டு வா என்று இராணுவத்தினர் கூறவும், 'இல்லை என் குழந்தை சாகவில்லை" என்று கதறி அழுது பிரற்றிய பெற்றோர் பலரைக் கண்டிருக்கிறேன். அவ்விடத்தில் நடக்கவேண்டுமானால் மிக அவதானமாக இருக்கவேண்டும். மிக நெருக்கமாய் மக்கள் இருந்தனர். காலடி எடுத்து வைக்கும்போது மற்றொருவர் உடலையோ, காலையே மிதித்துவிடத்தான் வேண்டும். இருட்டும் நெருக்கமும். நான் அதற்குள் நடந்தபோது, இப்படித்தான் ஒரு பெற்றோர் இறந்துவிட்ட தங்கள் மகளின் உடலோடு... அவள் இறக்கவில்லை... என்று அழுது பிரற்றியபடி இருந்தனர். அவ்விடத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோது தடுமாறி, அந்தக் குழந்தையின் கை விரல்களை தற்செயலாக மிதித்துவிட்டேன். அதற்காய். அந்தப் பெற்றோர் என்னைப் பிடித்து அடித்தபோது உள்ளத்தில் ஏற்பட்ட வலி மிகவும் அதிகமாக இருந்தது.'

10. நிலா (நெருங்கிய தோழி):

//அத்துடன் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானம் எனது வீட்டுக்கு மிக அருகில் குண்டுவீச்சை நடத்தி பல மக்களைக் கொன்றது. அப்போது நான் அதிர்ந்துபோனேன். கிபீர் விமானங்கள் வருவது மிகவும் அரிதாகவே கேட்கும். குண்டை வீசிய பின்னர்தான் அதன் பறப்பு ஒலி எமக்குக் கேட்கும். அதனால் நாங்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு எங்கள் வீட்டில் அப்போது பதுங்கு குழிகளும் அமைக்கப்படவில்லை. அன்றுதான் என்னுடைய ணீர்க்குடம் உடைந்திருக்கவேண்டும்//

'திருமணமாகி எனது முதலாவது குழந்தையை எதிர்பார்த்து நாங்கள் விசுவமடுவில் வசித்து வந்தோம். 2008ம் ஆண்டு மார்கழி மாதம் கடுமையான மழை வன்னியைத் தாக்கி வெள்ளத்தில் ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களின் கொட்டகைகளும் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. நெத்தலியாற்றுப் பாலம், விசுவமடு பாலம் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தன. கிளிநொச்சியை கூடுதலாகக் கைப்பற்றி மிகவும் வேகமாக மழையாக எறிகணையை வீசியபடி இராணுவத்தினர் கிழக்குநோக்கி நகரத்தொடங்க மக்கள் அலை அலையாய் வாகனங்களில் சுதந்திரபுரம், விசுவமடு, புதுக்குடியிருப்பு நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். எறிகணை வீச்சுக்கள் சற்றுக் குறைவாக இருக்கும்போதுதான் பயணம் செய்யமுடியும். கருவுற்றிருந்த நான் மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிகவும் அதிக நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. விசுவமடு பாலத்தைக் கடப்பதற்கு ஒரு டரக்டரில் ஏறித்தான் கடக்க வேண்டும். இல்லையெனின் இடுப்பு மட்டத்து நீரில் நடந்து கடக்கவேண்டும். அப்படிக் கடந்து அடுத்த பக்கம் சென்றபோதும் ஏமாற்றம்தான். மேற்கொண்டு போக இயலாதவாறு அனைத்து வகையான போக்குவரத்தும் தடைபட்டு இருந்தன. வீதி நிரம்ப மக்கள் அலை அலையாய் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். மழையிலும் கூட எறிகணை வீச்சுக்கள் நிற்கவில்லை. அத்துடன் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானம் எனது வீட்டுக்கு மிக அருகில் குண்டுவீச்சை நடத்தி பல மக்களைக் கொன்றது. அப்போது நான் அதிர்ந்துபோனேன். கிபீர் விமானங்கள் வருவது மிகவும் அரிதாகவே கேட்கும். குண்டை வீசிய பின்னர்தான் அதன் பறப்பு ஒலி எமக்குக் கேட்கும். அதனால் நாங்கள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு எங்கள் வீட்டில் அப்போது பதுங்கு குழிகளும் அமைக்கப்படவில்லை. அன்றுதான் என்னுடைய ணீர்க்குடம் உடைந்திருக்கவேண்டும். அதன் பின் ஐந்து நாட்களின் பின்னர் எனக்கு வலி ஏற்பட நான் ஒருவாறு மருத்துவமனையைச் சென்றடைந்தேன். ஐந்து நாட்களுக்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்கள். உயிரற்ற உடலாய் எனக்கு ஒரு மகன் பிறந்தான். எனது முதற் குழந்தை இறந்தே பிறந்திருந்தது. மகனின் உடலை மருத்துவமனையிலேயே அடக்கம் செய்தோம்.

- முகநூலில் இருந்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.