Jump to content

வெளி அழுத்தங்கள் வெற்றி தருமா?


Recommended Posts

வெளி அழுத்தங்கள் வெற்றி தருமா? – வீரகேசரி

 

 
Mahinda-Rajapaksa-and-Basil-Rajapaksa-30
தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருக்கின்றன. நாளாந்த வாழ்க்கையில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கோ அல்லது புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கோ உரிய சாதகமான நிலைமைகளைக் காணமுடியவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய திசையை நோக்கிய அரசியல் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்குரிய அறிகுறிகளும் தென்படவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறிக்கொண்டிருக்கின்றது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் மட்டுமே தீர்வுக்கான பேச்சுக்கள் நடத்தப்படும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வெளியில் எந்தப் பேச்சுவார்த்தைகளும் கிடையாது என்று திட்டவட்டமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஓர் அரசியல் பொறியாகவே இருக்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
 
அரசாங்கம் கூட்டமைப்புடன் பிரச்சினைகள் குறித்து நேரடியாக முதலில் பேச வேண்டும். அந்தப் பேச்சுக்களில் என்னென்ன பிரச்சினைகளுக்கு எந்தெந்த வகையில் தீர்வு காணலாம் என்று இரு தரப்பினரும் ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டும். அந்த உடன்பாட்டின் அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்தி ஓர் இறுதி முடிவுக்கு வரலாம் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பி;ன் நிலைப்பாடாகும்.
 
ஆனால், கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தே ஆக வேண்டும் என்று  அரசாங்கம் அழுங்குப் பிடியாக நிற்கின்றது. பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பது தொடர்பில் முன்கூட்டிய ஒரு தீர்மானம் இல்லாமல் – ஓர் உடன்பாடு இல்லாமல் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்துவதென்பது காலத்தைக் கடத்துகின்ற ஒரு செயலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
அதேநேரம் தெரிவுக்குழுவில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விடயத்தில் உண்மையான அக்கறை கொண்டிருப்பவர்களாகத் தெரியவில்லை. அவர்களிடையே உள்ள தீவிர போக்குடைய பேரினவாதிகள் இனப்பிரச்சினையென்ற ஒன்று நாட்டில் இல்லையென்று சாதிக்கின்ற போக்குடையவர்களாகவே இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் மனப்பாங்கு கொண்டிருப்பவர்கள் அங்கம் வகிக்கின்ற ஒரு குழுவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் அரசியல் தீர்வு குறித்து பேச்சுக்கள் நடத்துவதென்பது நடவாத காரியமாகவே இருக்கும்.
 
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இன மக்கள் அனுபவிக்கின்ற அதே உரிமைகள், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் திறந்த மனதுடன் பேச்சுக்களில் ஈடுபடத்தக்க பிரதிநிதிகள் அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருப்பதாகத் தெரியவில்லை.
 
தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்ற பிரதிநிதிகள் திறந்த மனதுடனும், தாராள சிந்தையுடனும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பேச்சுவார்;த்தைகளின்போது அணுகுவார்களா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, அதிகார பலம் கொண்டுள்ள அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று உளப்பூர்வமாக, நேர்மையாக சிந்திக்கின்றதா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.
 
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு அவசியமி;ல்லை என்ற போக்கிலேயே அரசாங்கத்தின் அரசியல் சிந்தனையோட்டம் காணப்படுகின்றது. தமிழ் மக்களை இந்த நாட்டுப் பிரஜைகளாகக் கணித்து, அவர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற தாராள சிந்தனையை அரசாங்கத்திடம் காண முடியவில்லை.
 
சரியோ, பிழையோ தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தி;ல் ஈடுபட்டிருந்தார்கள், அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு வகையில் வெற்றிகரமாக முடித்துவிட்டோம். பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்ட – அதேநேரம் வெல்ல முடியாதவர்கள் என நம்பப்பட்ட விடுதலைப்புலிகளை அழித்தாகிவிட்டது. விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஏதோ காரணங்களுக்காக, தமிழ் மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தமைக்கான தண்டனையாக இந்த அழிவுகள் இருக்கட்டும். அதேநேரம் அதிகார பலம் கொண்ட பேரினவாத கொள்கையுடைய எங்களுடன் மோதுவதற்கு முயற்சிக்கக் கூடாது. அதற்கு இதுவே அவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையட்டும் என்ற வகையில் சிந்தித்து, தமிழ் மக்களுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அரசியல் தீர்வு ஒன்றின் மூலமாக பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவோம் என்று அரசாங்கம் ஒரு நல்ல தீர்மானத்திற்கு வருவதற்கும் தயாராக இல்லை.
 
இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பது பகல் கனவாகவே தெரிகின்றது.
 
எனவே, தனது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் முன்கூட்டியே ஒரு நம்பிக்கையை உருவாக்க முடியாமல் போயுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பங்கு பற்றும் என்று கூறுவதற்கில்லை.
 
முட்டுக்கட்டை நிலைமைகள் 
 
எனவே, தெரிவுக்குழுவுக்கு வரத்தான் வேண்டும் என்கிறது அரசாங்கம். வரவே மாட்டேன் என்கிறது கூட்டமைப்பு. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சி என்பது மோசமான ஒரு முட்டுக்கட்டை நிலைமையில் இப்போது வந்து நிற்கின்றது.
 
இத்தகையதோர் இடர்ப்பாடான நிலையில், அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் ஓர் அரசியல் உறவென்பதையே காண முடியவில்லை. அரசியல் விடயங்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆயினும், அரசியல் நிறுவன ரீதியான உறவு நிலைமையும் இரு தரப்பினரிடையேயும் அற்றுப் போயிருக்கின்றது.
 
யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும், மாகாண சபை தேர்தல்களையும் நடத்தியதாக அரசாங்கம் பெருமைபட்டுக் கொள்கின்றது. ஆனால், ஜனநாயக வழிமுறையில் தெரிவு செய்யப்பட்ட அந்த சபைகளை – குறிப்பாக மாகாண சபைகளை சீராகச் செயற்படுவதற்குரிய வழிவகைகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக உள்ள மாகாகண சபைகள் அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அழிந்து போயுள்ள அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதிலும், சட்ட வரையறைக்கு உட்பட்ட வகையில் சுயமாக இயங்கட்டும் என்று விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை.
 
அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அந்த சபையினர் பயன்படுத்துவதை அரசாங்கம் விரும்பாத ஒரு போக்கையே கொண்டிருக்கின்றது. அத்துடன் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படியாவது மத்திய அரசாங்கத்தின் கையில் திரும்பவும் பெற்றுவிட வேண்டும் என்பதிலேயே அரசாங்கம் குறியாக இருக்கின்றது.
 
இதனால், அரசாங்கம் கூறுவதைப்போன்று, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்ட தேர்தல்களில் சட்ட ரீதியாக வெற்றிபெற்று ஆட்சியமைத்திருப்பவர்களும், அந்த சபைகளுக்கு மக்களால் தெரிவ செய்யப்பட்டவர்களும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். பெயரளவில் பதவிகளில் இருந்து கொண்டு நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டிருக்கின்ற பொது மக்களுக்கு சேவை செய்ய முடியாதிருக்கின்றதே என்று அவர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
 
அதேநேரம் தேர்தல்களில் நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்கள், தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், மாகாணசபை முறைமையின் கீழ் அதிகாரங்களைப் பெற்றிருந்தும்கூட, தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்களில்லையே, என்று சலித்துப் போயிருக்கின்றார்கள்.
 
இந்த இரு தரப்பினருடைய அங்கலாய்ப்பும், சலிப்பும் இணைந்து, அரசு மீது நம்பிக்கையற்ற நிலைமையொன்றையே ஏற்படுத்தியிருக்கின்றது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய தேவைகள் அதிகம். அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டியது அந்த யுத்தத்தில் அமோக வெற்றியீட்டி பெருமையடைந்துள்ள அரசாங்கத்தின் கடமை என்பது மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.
 
ஆனால் வெறுமனே உட்கட்டமைப்பு வசதிகளை மாத்திரம், அதிலும் குறிப்பாக பார்வையைப் பற்றி, கவர்ந்து இழுக்கத்தக்க வகையில் வீதிகளையும் அரச கட்டடங்களையும் மொழுமொழுவென அரசாங்கம் அழகாகக் கட்டி முடித்திருக்கின்றது. நிலையான, நிம்மதியான வாழ்க்கைக்குரிய சொந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியிருக்கவும், நிரந்தரமான வருமானத்தைக் கொண்ட வாழ்வாதார வசதிகளையும், அரசாங்கம் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களின் ஏக்கமாக இருக்கின்றது.
 
யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ள தமது வாழ்க்கையை மீளவும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாகக் கண்துடைப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது, அதேநேரம் தேவையற்ற தொல்லைகளுக்குத் தங்களை உள்ளாக்கி, கஸ்டப்படுத்துகின்றது என்றே அந்த மக்கள் கூறுகின்றார்கள். இதனால், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் ஜனநாயத்தை நிலைநாட்டியுள்ளோம் என்ற அரசாங்கத்தின் கூற்றும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு நிதி முதலீட்டின் மூலம் கட்டியெழுப்பியுள்ளோம் என்ற அரசாங்கத்தி;ன் பிரசாரமும் பொய்த்துப் போயிருக்கின்றன.
 
இந்த வகையில் மாகாண சபைகளின் ஊடாக, அரசியலமைப்பு ரீதியாக, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதனால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் தலையெடுத்திருக்கின்றன.
 
யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையில், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை விலக்காமல் வைத்திருப்பதுவும், சிவில் நடவடிக்கைகளிலும் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளிலும் மட்டுமல்லாமல் அரச சார்பான அரசியல் நடவடிக்கைகளிலும் அவர்களை ஈடுபடுத்தி வருவதுவும், அங்கு இன்னும் பிரச்சினைகளை அதிகரிப்பதற்கே வழிவகுத்திருக்கின்றன.
 
இதனால் மோசமான யுத்தம் ஒன்று முடிவுக்கு வந்து காலம் கடந்துள்ள போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சீரான ஒரு வாழ்க்கைக்குத் திரும்புவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
வெளி அழுத்தங்களும் இல்லை
 
அரசியல் தீர்விலும்சரி, யுத்தத்திற்குப் பின்னர் எழுந்துள்ள அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலும்சரி, உள்ளுரில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அரசியல் சூழ்நிலைகள் காணப்படவில்லை. அத்துடன் அந்தப் பிரச்சி;னைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், அரசியல் முன்னெடுப்புக்களோ அல்லது தொடர்ச்சியாக வலுவான அழுத்தம் கொடுக்கத்தக்க வகையிலான மக்கள் போராட்டங்களோ அல்லது உசிதமான அரசியல் செயற்பாடுகளோ முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூற முடியாதிருக்கின்றது.
 
அதேநேரம், கூட்டமைப்பின் மீது அரசாங்கம் பாராமுகமாக இருப்பதனால், தொட்டதற்கெல்லாம், ஐநா மன்றத்தையும், அயல் நாடாகிய இந்தியாவையும், சர்வதேச நாடுகளையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அவர்கள் தமது பிரச்சி;னைகளைப்பற்றி பேசுவதிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் வெளியாரைச் சார்ந்திருக்க வேண்டிய அவல நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகின்றது. எனினும், அரசியல், சமூக, பொருளாதார, நிலைமைகளிலும், யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புனர்வாழ்வு மற்றும் வாழ்க்கை மறுசீரமைப்பு போன்ற செயற்பாடுகளில்  ஏற்பட்டிருக்க வேண்டிய முன்னேற்றமும் இன்னும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது.
 
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம், அதன் இறுதிக்கட்டமாகிய முள்ளிவாய்க்காலில்  இடம்பெற்ற ஊழிக்கால அழிவு, இழப்பு, உளரீதியான பாதிப்பு என்பவற்றில் ஒப்பீட்டளவில் ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் போதாது என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.
 
இந்த நிலையில் உள்ளுர் அரசியல் நிலைமைகளைச் சீர் செய்வதற்கு, பாதிக்கப்பட்ட மக்கள் நம்பியிருக்கின்ற – அல்லது எதிர்பார்த்திருக்கின்ற ஐநா மன்றம், இந்தியா மற்றும் சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்களும் சரியான முறையில் அரசு மீது பிரயோகிக்கப்படுவதாகத் தெரியவில்லை.
 
ஐநா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இலங்கை அரசுக்கு எதிராக, மூன்று பிரேரணைகளைக் கொண்டுவந்து வெற்றிகரமாக நிறைவேற்றியதன் விளைவாக ஐநா மனித உரிமைப் பேரவை முன்னெடுத்துள்ள சர்வதேச விசாரணையொன்றுக்கு அரசு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த சர்வதேச அழுத்தமானது தமிழ் மக்களின் அரசியலில் பெரியதொரு விடயமாக நோக்கப்படுகின்றது. பேசப்படுகின்றது. அந்த வகையில் இந்த நடவடிக்கை தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பையே பலரும் கொண்டிருக்கின்றார்கள்.
 
இறுதி நேர யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவை தொடர்பிலேயே இந்த சர்வதேச விசாரணையின் கவனம் குவி மையம் கொண்டிருக்கின்றது. இந்த விசாரணையின் மூலம், உரிமை மீறல் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விசாணையின் ஊடாகக் கிடைக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே.
 
அதேநேரம், யத்தத்தின் பின்னர் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கும், அன்றாடப் பிரச்சினையில் மக்கள் மோசமான அரச அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுக்கும் இந்த சர்வதேச விசாரணை வழி வகுக்குமா என்பது தெரியவில்லை.
 
அது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் நாட்டில் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களினதும். முஸ்லிம் மக்களினதும் நிலைமைகள் மோசமடைந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட அப்பட்டமாக மீறப்படுகின்றது. அரச நிழல் சார்ந்த வன்முறைகள் பகிரங்கமாக மேடையேற்றப்படுகின்றன. இத்தகைய நிலைமைகளின் உண்மைத் தன்மைகள் வெளியில் தெரியவராத வகையில் இறுக்கமான, மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் அதிகாரக் கட்டமைப்புக்களின் ஊடாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இத்தகைய ஒரு சூழலில் தமிழ் மக்களும், தமிழ்த்தலைவர்களும் எதிர்பார்த்திருக்கின்ற வெளி அழுத்தங்கள். அரசாங்கத்தின் மீது செல்வாக்கைப் பிரயோகிப்பதாகத் தெரியவில்லை. தமிழர் தரப்பு எதிர்பார்த்திருக்கின்ற அல்லது நம்பியிருக்கின்ற வெளி அழுத்தங்களைக் கொண்டு வருவதற்குரிய முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா என்றால், அதுவும் இல்லையென்றே கூறவேண்டியிருக்கின்றது.
 
மொத்தத்தில் தமிழ் தரப்பின் போராட்டமும் சரி, நியாயமான உரிமைகளைப் பெறுவதற்குரிய முன்னெடுப்பு நடவடிக்கைகளும் சரி மந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
 
இதனால், இப்போது -
 
இந்த மந்த நிலையைப் போக்குவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையில் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது? தமிழர் தரப்பின் நலன்களுக்காகச் செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்ன செய்யப் போகின்றது? – என்ற கேள்விகள் விசுவரூபமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
 
இவற்றுக்குப் பதில் சொல்லப் போவது யார்? 
 
இந்த மந்த நிலையை மாற்றி நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போவது யார்?
http://tamilleader.com/?p=38105

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.