Jump to content

வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TN 00 E - 1111 

குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன்

பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்!

- ஜென் கவிதை

னி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே’ செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ’ செக்ஷன் வந்திருக்கிறான்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும்.

'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?’

'அய்யோ மறந்திட்டேன் ராஜா!’

'போச்சு. நல்லா மாட்டிக்கிட்டீங்க... உங்க வேணு மிஸ் உங்களை பெண்டு எடுக்கப்போறாங்க!’

'அதுசரி... நீ ஹோம் வொர்க் பண்ணிட்டியா?’

'நான் நேத்தே பண்ணிட்டேம்பா. எங்க பானு மிஸ் வெரி குட் சொல்லுவாங்க.’

'என்னடா பண்ணலாம்? அப்பாவுக்கு பயம்மா இருக்குடா!’

'போற வழியில ஏதாவது பார்க்ல உட்கார்ந்து எழுதிட்டுப் போங்கப்பா. இல்லன்னா ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்ல ஏத்தி, ஸ்கேலால புட்டாச்சுல அடிப்பாங்க!’

இவன், மகன் பார்க்கும்படி தன் புட்டாச்சைத் தடவிக்கொள்வான்.

p36.jpg

 

நீ சொல்றதும் கரெக்ட்தான்டா!’

'பார்த்துப்பா... இந்த வருஷமும் ஃபெயிலாயிடப்போறீங்க!’

இதற்குள் மகன் படிக்கும் பள்ளி வந்து, இவனுக்காக ஓர் ஆறுதல் பார்வையை வீசிவிட்டு டாட்டா காட்டியவாறு மகன் உள்ளே செல்வான்.

ப்போது இவன் யோசித்துப்பார்க்கிறான். இந்த பானு மிஸ்ஸும், வேணு மிஸ்ஸும் எப்படி இவன் வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் பெங்களூரு சென்றிருந்தான். நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். பார்க், தீம் பார்க், வாட்டர் தீம் பார்க் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு. கம்பனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 'அலகிலா விளையாட்டு’. இவனது மகனுடன் நண்பரின் குழந்தைகளும் சேர்ந்துவிட, வானர சேனை ஊருக்குள் வந்ததுபோல் இருந்தது. மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்ற டார்வின் தியரியின் வெளிச்சத்தை அப்போதுதான் முழுமையாகக் கண்டுகொண்டான். மூத்த குரங்குகளுக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன வழி?

விடுமுறை முடிந்து சென்னை வந்து, வீட்டைத் திறக்க சாவியைத் திணிக்கையில், இவன் மகன் இவனை மிரட்சியுடன் பார்த்தான்.

'வேணாம்பா.. நாம திரும்பவும் பெங்களூருக்கே போயிடலாம்!’

'ஏன்டா?’

p36a.jpg'நாளைக்கு ஸ்கூல் திறக்குறாங்க. இந்த வருஷம் பானு மிஸ் கிளாஸ் டீச்சரா வரப் போறாங்களாம். போன வருஷம் எனக்கு ஈ.வி.எஸ். எடுத்தவங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுப்பா. நான் ஸ்கூலுக்குப் போகவே மாட்டேன்’ என்றபடி இவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டான். அந்தக் கைப்பிடியில் இருந்த அச்சமும் பதட்டமும் இவனை பல வருடங்களுக்கு முன்னே கூட்டிச்சென்று, இவன் தான் படித்த பள்ளியின் வாசலில் தன் தகப்பனின் கைவிரல் பிடித்து அழுதபடி கெஞ்சிய அந்தக் காலத்தில் நிறுத்தியது.

'சரிடா... இனிமே நீ ஸ்கூலுக்குப் போக வேணாம்’ என்று சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிச்சென்றான்.

இரவு உணவு முடிந்து படுக்கை அறையில் மகனுக்கு கதை சொல்லும் படலம் தொடங்கியது. பொய்யில் தோய்ந்த ஒரு பேருண்மையை மகனுக்கு இவன் சொல்லத் தொடங்கினான்.

'உன்னை மாதிரிதான்டா அப்பாவும் தினமும் ஸ்கூலுக்குப் போறேன்.’

மகன் ஆச்சர்யத்துடன், 'அப்படியா! உங்க மிஸ் பேரு என்ன?’

'என் மிஸ் பேரு இருக்கட்டும். உங்க மிஸ் பேரு என்ன?’

'பானு மிஸ்.’

'அப்ப எங்க மிஸ் பேரு வேணு மிஸ்.’

'வேணு மிஸ் எப்படி இருப்பாங்க?’

'முதல்ல உங்க பானு மிஸ் எப்படி இருப்பாங்கனு சொல்லு.’

'நல்லா அழகா இருப்பாங்க! கலர் கலரா சேலை கட்டிட்டு வருவாங்க. மழை பேஞ்சா தானே குடை பிடிப்பாங்க? எங்க பானு மிஸ், மழை இல்லேன்னாலும் டெய்லி குடை பிடிச்சுட்டு வருவாங்க.’

p36b.jpg'நல்ல மிஸ்ஸா இருக்காங்களே...’

'நல்ல மிஸ்தான்ப்பா. ஆனா, டெய்லி டெய்லி படிக்கச் சொல்வாங்க. ஹோம்வொர்க் எழுதச் சொல்வாங்க.’

'நல்ல விஷயம்தானப்பா... படிச்சாதான

நீ பெரியாளா ஆக முடியும்?’

'சரிப்பா... உங்க வேணு மிஸ் பத்தி சொல்லுங்க?’

'ம்... பெருசா கொண்டை போட்டிருப்பாங்க... அதைவிட பெருசா கண்ணாடி போட்டிருப்பாங்க. அதையும்விட பெருசா கைல ஒரு ஸ்கேல் வெச்சிருப்பாங்க. எப்பவுமே கோவமா இருப்பாங்க. சிரிக்கவே மாட்டாங்க!’

'சிரிக்கவே மாட்டாங்களா... செம காமெடிப்பா. வேற என்ன பண்ணுவாங்க?’

'ஹோம்வொர்க் பண்ணலைனா, ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்சுல ஏத்தி ஸ்கேலால புட்டாச்சுலயே அடிப்பாங்க.’

'புட்டாச்சுல அடிப்பாங்களா? உட்காரும் போது வலிக்குமே... பாவம்பா நீங்க. உங்க வேணு மிஸ்ஸைவிட எங்க பானு மிஸ் ரொம்ப நல்லவங்க. நாளையில இருந்து நான் ஸ்கூலுக்குப் போறேம்ப்பா’ என்று சொல்லிவிட்டு இவன் புட்டாச்சியைத் தன் பிஞ்சு விரல்களால் தடவிவிட்டபடி மகன் தூங்கிப்போனான்.

அன்றிலிருந்து தினமும் பானு மிஸ்ஸின் சாதனைகளும், வேணு மிஸ்ஸின் வேதனைகளும் இவன் படுக்கை அறையின் சுவற்றில் ஓவியங்களாக வியாபிக்க ஆரம்பித்தன.

ர் ஞாயிறு அதிகாலையில் பாடல் பதிவை முடித்துவிட்டு இவன் வீட்டுக்கு வந்து படுத்தான். உறக்கத்தின் ஆழத்தில் யாரோ எழுப்புவதுபோல் இருந்தது. விருப்பமின்றி கண் இமைகளைப் பிரித்தான். எதிரில் இவன் மகன்.

'அப்பா ஹாலுக்கு வாங்க... யாரு வந்திருக்காங்க பாருங்க?’

'யாருடா?’

'வந்து பாருங்கப்பா’ என்று இவன் கையைப் பிடித்து ஹாலுக்கு அழைத்துச் செல்ல, ஹாலில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

'யாரு தெரியுதப்பா?’

p36c.jpgதூக்கக் கலக்கத்துடன் 'யாருடா?’ என்றான். 'உங்க வேணு மிஸ்ஸுப்பா’ என்று மகன் சொல்ல, இவன் தூக்கம் கலைந்தேபோனது. வந்த பெண்ணை உற்றுப்பார்த்தான். பெரிதாக கொண்டை போட்டு, அதைவிடப் பெரிதாக கண்ணாடி போட்டு, அதையும்விடப் பெரிதாக கையில் ஒரு ஸ்கேலைப் பிடித்தபடி, இவன் தன் மகனுக்கு கதையில் சொன்ன அதே வேணு மிஸ்.

'முத்துக்குமரன்... நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரல? ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்’ என்று வேணு மிஸ் அதட்ட, 'பாரும்மா நேத்து ஸ்கூலுக்குப் போகாம நம்மளை ஏமாத்திட்டு அப்பா எங்கேயோ போயிருக்காரு’ என்று மகன் எடுத்துக்கொடுக்க, இவன் மனைவி, வேணு மிஸ்ஸின் கையில் காபி டம்ளரை கொடுத்து கோபத்தைத் திசை மாற்றிக்கொண்டிருந்தாள்.

இது கனவா, நிஜமா என்று கையைக் கிள்ளிப் பார்ப்பதற்குப் பதிலாக, இவன் தன் புட்டாச்சியைத் தடவிக்கொண்டிருந்தான்.

'நாளையிலிருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு வரணும். ஓ.கே’ என்றபடி வேணு மிஸ் விடைபெற, இவன் வேணு மிஸ்ஸுடன் லிஃப்ட்டை நோக்கி நடந்தான். லிஃப்ட்டுக்காகக் காத்திருந்த இடைவேளையில், 'இங்க பாருங்க மேடம். நீங்க யாருனே எனக்குத் தெரியாது. நான் ஒரு கவிஞன். சினிமாவில நான் எழுதின பாட்டெல்லாம்கூட நீங்க கேட்டிருப்பீங்க. என் பையன் நல்லாப் படிக்கணுங்கிறதுக்காக, வேணு மிஸ்னு சும்மா பொய்யா ஒரு கதை சொன்னேன். அதுக்காக இப்படிக் கிளம்பி வந்துடுறதா?’ என்றான் கோபத்துடன்.

லிஃப்ட் வந்து நின்று உள்ளே ஏறியதும், அந்தப் பெண் இவனைப் பார்த்து சொன்னாள். 'இங்க பாரு முத்துக்குமரன், உண்மையிலேயே நான் உன் வேணு மிஸ்தான். நீ கவிஞனா இருக்கலாம். ஆனா, நீ சொல்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓர் உயிர் இருக்கு. நீ சொல்லும்போதே அது கை காலு முளைச்சு வளர ஆரம்பிச்சிடுது. இப்பவும் நீ என் ஸ்டூடன்ட்தான். அதே தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன்ல படிக்கிற மக்கு ஸ்டூடன்ட். இனிமேலாவது உன் பையனுக்கு இந்த மாதிரி அபத்தமான கதைகளைச் சொல்லாதே. ஏன்னா... கதைகள் பொய்தான். ஆனா, அது சொல்லப்படும் போதும், மத்தவங்களால கேட்கப்படும்போதும், கை-கால் முளைச்சு நிஜமா மாறிடுது’ என்றபடி பார்க்கிங்கில் தன் ஸ்கூட்டியைத் தேடி அதில் ஏறி காணாமல் போனாள். இவன் அதை அதிர்ச்சியுடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். அந்த ஸ்கூட்டியின் எண் இவன் தன் மகனுக்கு கதையில் சொன்ன அதே TN 00 E - 1111.

இப்போதெல்லாம் இவன் தன் மகனுக்கு கதை சொல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறான். காட்டைவிட்டு இவன் வீடு மிகத் தொலைவில் இருந்தாலும் சிங்கம், புலி, யானை, நரி, கரடி வரும் கதைகளைச் சொல்வதே இல்லை!

- வேடிக்கை பார்க்கலாம்...

 
 
  •  
  •  
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.