Jump to content

வெளியாக இருக்கும் எம்மவர் படைப்புகள்..


Recommended Posts

vinod1s.jpgபிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது...

புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்!

''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றில் இருந்து மாறுபடுகிறது. ஆசிய உற்பத்தி முறை அன்றைய காலத்தில் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கோசாம்பி விவரித்திருக்கிறார். இதை

vinod3.jpg

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவர் சிங்கராயர். அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

அடுத்து பிடல் காஸ்ட்ரோவின் சுயசரிதம் 'என் வாழ்க்கை' என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. அதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் நா.தர்மராஜன். 'நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில்' இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் அவர்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய புத்தகம், விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கேப்டன் மலரவன் (லியோ) என்று அழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயணக்குறிப்புகளைக் கொண்ட 'போர் உலார்' எனும் நூல். 1992ல் கேப்டன் மலரவன் பலாலி சிங்களப் படைத்தளத்தின் கிழக்குப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்பு அவரது உடைப் பையிலிருந்து எடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி 1993-ல் 'போர் உலா' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் என்பதை விடுதலைப்புலிகள் எப்படி உள்வாங்கப்பட்டது என்பதை நமக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது இது!'' என்கிறார் 'விடியல்' சிவா.

குழந்தைகள் இலக்கியம், எளிய தமிழில் அறிவியல் புத்தகங்கள் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் பாரதி பதிப்பகம் இந்த வருடமும் அறிவுப் பசிக்குக் குறை வைக்கவில்லை. அது பற்றி 'பாரதி புத்தகாலயம்' நாகராஜனிடம் கேட்டபோது, ''அல்பேனிய எழுத்தாளர் கிகோ புளூசி எழுதிய 'பெனி எனும் சிறுவன்' என்கிற நாவல் குழந்தைகளின் மன உலகத்தைப் பற்றிப் பேசுகிறது.

vinod4.jpg

பெனி எனும் சிறுவனை முன்வைத்து குழந்தைகளின் ஆளுமை எப்படி எல்லாம் வடிவமைக்கப்படுகிறது என்பது பற்றி சொல்கிறார் நூலாசிரியர். பெற்றோரிடம் இருந்து திணிக்கப்படும் கருத்துக்கள், கட்டுப்பாடுகள் குழந்தைகளிடத்தில் உருவாக்கும் பாதிப்புகள், குழந்தைகள் எதையும் அச்சமற்று அணுகுவது எப்படி, பிறருடன் தோழமை கொள்வது எப்படி என்பன போன்ற பல விஷயங்களை உரையாடுகிறது இந்தப் புத்தகம்.

அடுத்து, இரா.நடராசன் எழுதிய 'நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டுமா?' என்கிற நூல். இது அறிவியலின் வரலாற்றை எளிய முறையில் கதை போல் எளிமையாக எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்புகளின் போதும் அதற்காக விஞ்ஞானிகள் செய்த தியாகத்தையும், மதம் மற்றும் ஆட்சியாளர்களின் எதிர்ப்பையும் பற்றி சுவாரஸ்யமான மொழிநடையில் சொல்கிறார் ஆசிரியர்!''.

சமகால அரசியல், சமூக நிகழ்வுகளை கனமான உள்ளடக்கத்துடன் புத்தகங்களாகக் கொண்டு வரும் கருப்புப் பிரதிகள் இந்த வருடமும் அப்படியான புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறார்கள். 'கருப்புப் பிரதிகள்' நீலகண்டனிடம் கேட்டபோது,

'' 'vinod6.jpg

ஜாதியற்றவளின் குரல்' என்ற தலைப்பில் சுமார் 320 பக்கங்களில் ஒரு கட்டுரைத் தொகுப்பு வெளியிடுகிறோம். பத்திரிகையாளர் ஜெயராணி கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள் இதில் அடங்கி இருக்கின்றன. தலித் பிரச்னைகள், மனித உரிமை, பெண்கள் பிரச்னைகள் பற்றியெல்லாம் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிற தொகுப்பாக இது இருக்கிறது.

அடுத்ததாக, ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்று தற்போது கனடாவில் வசிக்கும் நெலிஞ்சிமுத்தன் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து 'பிறண்டை ஆறு' என்ற தலைப்பில் கொண்டு வர இருக்கிறோம். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றி இதுவரை இலக்கிய ரீதியாக எந்தப் பதிவும் இல்லை. முதன் முதலாக அந்த நிகழ்வு பற்றி 'இல்ஹம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. பிறகு, ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணங்கள், அதன் பின் இருக்கும் அரசியல், ஐரோப்பிய வங்கிகள் போர்க் கருவி செய்யும் நிறுவனங்களில் செய்திருக்கும் முதலீடு இவை பற்றியெல்லாம் மிக விரிவாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், நார்வே நாட்டில் வசிக்கும் கலையரசன். புத்தகத்தின் தலைப்பு 'காசு ஒரு பிசாசு!'."

தனித்த அடையாளத்துடன் வருவது 'அடையாளம்' பதிப்பகத்தின் பாணி. 'அடையாளம்' சாதிக்கிடம் இந்த வருடம் கொண்டு வர இருக்கிற புத்தகங்கள் பற்றிக் கேட்டதும், ''சீரியஸ் டைப் மட்டுமல்லாது கொஞ்சம் ஜனரஞ்சகமான வாசகர்களுக்காக இந்த வருடம் சில புத்தகங்களைக் கொண்டு வர இருக்கிறோம். ஆங்கிலத்தில் 'மை லைஃப் - எ ஹிஜ்ராஸ் ஸ்டோரி' என்கிற தலைப்பில் தன்

vinot5.jpg

கதையை விவரித்த திருநங்கை ரேவதியின் அந்தப் புத்தகம் தமிழில் 'வெள்ளை மொழி' என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பாக வர இருக்கிறது. இதில் ஒரு சுவாரஸ்யம் முதலில் அந்தப் புத்தகம் ரேவதியால் தமிழில்தான் எழுதப்பட்டது. ஆங்கிலத்தில் அதை வ.கீதா மொழிபெயர்த்திருந்தார். பிறகு கன்னடத்திலும் வெளியானது. வெவ்வேறு ஹிஜ்ரா குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம், சமூகம் தன்னைப் பார்க்கும் விதம் போன்றவை பற்றி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்து, மனநல மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உலகிலேயே முன்னணி நிறுவனமான லண்டன் 'ராயல் காலேஜ் ஆஃப் சைக்கியாட்ரிஸ்ட்' கல்லூரி ஆங்கிலத்தில் 'லிவிங் வித் ஸ்ட்ரேஞ்சர்' என்கிற தலைப்பில் மனநல பாதிப்பு உள்ள ஒருவருடன் நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை 'உங்களுடன் ஒரு அந்நியன்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம். அடுத்து, குட்டி ரேவதியின் 'யானுமிட்ட தீ' எனும் கவிதைத் தொகுப்பும், தமிழவன் எழுதி 'இரட்டைச் சொற்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வருகிறோம்'' என்றார்.

கலை, இலக்கியம், சுயசரிதம் என கலந்துகட்டி வெளியிடும் சந்தியா பதிப்பகம் இந்த முறை சில முக்கியமான கள ஆய்வுகளைப் புத்தகமாகக் கொண்டு வர இருக்கிறார்கள். ''வட இந்தியாவின் பாட்டியாலா ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர் திவான் ஜர்மானி தாஸ். அந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மன்னர்கள், அவர்களின் கலாசாரம், ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியப் பெண்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு ஆகியவை பற்றி இருபது வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் 'மகாராஜா' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருந்தார்.

அதை தமிழில் அதே தலைப்பில் மொழிபெயர்த்து கொண்டு வருகிறோம்.

'இயற்பியலின் தாவோ', 'யுவான் சுவான் பயணக் குறிப்புகள்' போன்ற புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்த பொன்.சின்னத்தம்பி முருகேசன் தான் இதையும் மொழிபெயர்த்திருக்கிறார்.

அடுத்ததாக, உசிலம்பட்டியில் வாழ்ந்து வருகிற பிரமலைக் கள்ளர் எனும் சமூக மக்களைப் பற்றி பல ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து அதை 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும், வரலாறும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார் இர.சுந்தர வந்தியத் தேவன். வழக்கறிஞராக இருக்கும் அவரும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். நிச்சயம் இது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும்.

'சில இறகுகள், சில பறவைகள்' என்ற தலைப்பில் வண்ணதாசன் மற்றவர்களுக்கு எழுதிய சமீபத்திய கடிதங்கள் ஒரு தொகுப்பாகவும், 'மணல் உள்ள ஆறு' எனும் தலைப்பில் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பையும் கொண்டு வருகிறோம். நான்காவதாக, ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவரின் சுயசரிதை 'நினைவலைகள்' என்ற தலைப்பில் வெளிவருகிறது. வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்ட போது, திருச்சியில் இருந்த இவர் வீட்டில் இருந்துதான் அந்தப் பயணம் துவங்கப்பட்டது. தமிழில் வந்த முக்கியமான சுயசரிதங்களில் ஒன்று என க.நா.சு. இதைச் சொல்வார்!'' ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் 'சந்தியா பதிப்பகம்' சௌந்தரராஜன்.

தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட 'உயிர்மைப் பதிப்பகம்' இந்த வருடமும் கலக்க இருக்கிறது. என்ன புத்தகம்... என்ன விசேஷம் என்று 'உயிர்மை' மனுஷ்யபுத்திரனிடம் கேட்ட போது, ''வா.மு.கோமுவின் இரண்டு நாவல்கள் வர இருக்கின்றன. அதில் ஒன்று 'மங்கலத்து தேவதைகள்'. கிராமப்புறங்களில் உள்ள ஆண் பெண் உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இதுவரை யாரும் சொல்லாத வகையில் இதை எழுதி இருக்கிறார். அடுத்து, ஆர்.அபிலாஷ் எழுதிய 'கால்கள்' எனும் நாவல். இது நடக்கமுடியாத ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துயரத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்த துறையில் இதுவரை எந்த நூலும் தமிழில் எழுதப்படவில்லை. அந்த அடிப்படையில் இது சிறப்பு வாய்ந்தது.

மூன்றாவதாக, சுப்ரபாரதி மணியன் எழுதிய 'நீர்த்துளி' எனும் நாவல். திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகள், அங்கு நிலவும் வாழ்க்கை, மக்களின் துயரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய 'பசித்த பொழுது' கவிதைத் தொகுப்பும் வருகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனநெருக்கடிகளைப் பேசும் 236 கவிதைகள் அதில் இருக்கின்றன!'' என்றார்.

வழக்கம் போல 'காலச்சுவடு' பதிப்பகம் கிளாஸிக் வரிசை படைப்புகளோடு சில புதிய புத்தகங்களையும் கொண்டு வர இருக்கிறது. அது தொடர்பாக, 'காலச்சுவடு' கண்ணனிடம் கேட்டதற்கு, '' 'தமிழர் உணவு' என்ற புத்தகத்தைக் கொண்டு வர இருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பற்றி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி பல ஆண்டுகளாக 'காலச்சுவடு' இதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.

இரண்டாவதாக, டாக்டர் பினாயக் சென் பற்றி ஆங்கிலத்தில் மின்னி வைத் என்ற பத்திரிகையாளர் எழுதிய 'எ டாக்டர் டு டிஃபென்ட்' என்கிற புத்தகத்தை, தமிழில் க.திருநாவுக்கரசு மொழிபெயர்க்க 'நீதி மறுக்கப்பட்ட கதை' என்கிற தலைப்பில் கொண்டு வருகிறோம். அடுத்து, இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் பற்றி 'கூண்டு' என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் நோக்காளராக இருந்த கார்டன் வைஸ் என்பவரின் எழுத்தில் இது படைக்கப்பட்டிருக்கிறது!'' என்று முடித்தார்.

தன்னம்பிக்கை புத்தகங்கள், ஆங்கில க்ரைம் த்ரில்லர்களை தமிழில் கொண்டு வருவது எனப் பல புதுமைகளைச் செய்யும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு என்ன விசேஷம் என்று கேட்ட போது, '' 'டாக்டர் நோ' என்கிற புத்தகத்தைக் கொண்டு வருகிறோம். ஜேம்ஸ்பாண்ட் படம் பற்றிய புத்தகம் அது. 'டாக்டர் நோ' என்கிற தலைப்பில் 1958-ம் ஆண்டு இயான் ஃபௌமிங் ஒரு டிடெக்டிவ் நாவல் எழுதினார். பிறகு அது 1962-ல் ஷான் கானரி நடித்து வெளிவந்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமாக திரையில் விரிந்தது. இந்த வருடத்துடன் அந்தப் படம் வந்து 50 வருடங்கள் ஆகின்றன. அதன் நினைவாக அந்தப் படம் தமிழில் மீண்டும் நாவல் உரு பெற்றிருக்கிறது.

அடுத்து, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் தன்னுடைய ஆட்களை அனுப்பி இங்கிலாந்தில் இருந்து சர்ச்சிலைக் கடத்திக் கொண்டு வர திட்டம் போடுகிறான். இந்தத் திட்டத்தை கர்னல் ஸ்டைனர் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து ஜாக் ஹிக்கின்ஸ் 1975-ல் 'தி ஈகிள் ஹேஸ் லேண்டட்' என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதினார். அதை இப்போது தமிழில் 'கழுகு தரை இறங்கிவிட்டது' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறோம். வாசகர்கள் தவறவிடக் கூடாது!'' என்று சிரிக்கிறார் காந்தி கண்ணதாசன்.

புத்தகங்கள் நல்ல புதையல்கள்... தேடிப் பிடித்து படித்து அனுபவிப்போம் வாருங்கள்!

http://news.vikatan....ex.php?nid=5892

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த புத்தகக் கண்காட்சிக்கு ஒரு தடவை போக வேண்டும் என ஆசை அடுத்த வருடமாவது சரி வருமோ என்று பார்ப்பம்

எனக்கும்தான் ரதியக்கா..ஒருக்கா வெளிக்கிடத்தான் வேணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.