Jump to content

குழந்தையை வளர்க்கத் தெரியுமா?


Recommended Posts

 

 
குழந்தைகளுக்கான மனோவியல் ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. யதேச்சையான சந்திப்பு இல்லை. நண்பர் ஒருவர் ஆலோசகரைப் பற்றிச் சொல்லியிருந்தார். வெகு காலமாகவே இந்த சப்ஜெக்டில் எனக்கு குழப்பம்தான். அதுவும் இந்த ஃபேஸ்புக் வந்த பிறகு எக்கச்சக்கம். 
 
முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைகளுக்காக இந்தத் தலைமுறையினர் அளவுக்கு excite ஆகவில்லையென்றுதான் நினைக்கிறேன். ‘என் மகன் அதைச் செய்கிறான்; என் மகள் அறிவாளியாக இருக்கிறாள்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அடுத்தவர்களை பதற்றமடையச் செய்யவில்லை. அப்படியே அறிவாளியாகவும், திறமையாளனாகவும் இருந்தாலும் கூட அதை அப்பட்டமாக வெளியில் பேசியதில்லை. ஆனால் நம் தலைமுறை மாறிவிட்டது. தம் மகன் ஒன்றுக்கடிப்பதைக் கூட படம் எடுத்து போட்டுவிடுகிறார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன- வெளிப்படுத்துகிறார்கள். ஆளாளுக்கு தங்களின் பிள்ளைகளைப் பற்றி எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது ‘நாம்தான் சரியாக இல்லையோ’ என்ற குழப்பத்தை உருவாக்கிவிடுகிறது.
 
அப்படியெல்லாம் எதுவும் இல்லை- குழம்பத் தேவையில்லையாம். நான் சொல்லவில்லை. அந்த ஆலோசகர்தான் சொன்னார். அவர் மராத்திவாலா. பெங்களூரில்தான் பல வருட வாசம். பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். கார்பொரேட் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கிறார். அது போக சில மருத்துவமனைகளில் கவுன்சிலிங் செய்கிறார். அத்தகைய பெரிய மனிதர் மணிக்கணக்கில் பேசினார் - முக்கியமான விஷயம்- பைசா இல்லாமல். இந்த மாதிரி சரக்குள்ள ஆட்கள் யாராவது  ஓசியில் பேசினால் வஞ்சனையே இல்லாமல் காதுகளை நீட்டிவிடுவேன். நாலு விழுந்தால் ஒன்றாவது பயன்படுமல்லவா?
 
அவர் சொன்னதன் சாராம்சம் ஒன்றுதான் - குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று- நம்மையும் அறியாமல் நமது குழந்தைகளின் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகமாக்கிக் கொள்கிறோம். இரண்டாவதாக  நாம் எதிர்பார்க்கிறோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியவரும் போது தம் மீதான அழுத்தத்தை அவர்களும் உணரத் துவங்குகிறார்கள். subconscious pressure. அவர்களுக்கே தெரியாத அழுத்தம் இது.
 
ஒரு வகையிலான பாலிஷ்ட் சித்ரவதை. 
 
நமது கல்வி முறையே அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கல்விமுறைதானே? ஒரு மாணவனுக்கு பூகோளம் பிடித்திருக்கலாம். இன்னொருவனுக்கு மொழிப்பாடம் பிடித்திருக்கும். இன்னொருவனுக்கு கணிதம் விருப்பமாக இருக்கக் கூடும். இன்னொருவனுக்கு விளையாட்டு பிடித்திருக்கும். ஆனால் பத்தாம் வகுப்பு தாண்டும் வரையில் அவனவன் தனித்துவத்தை வெளிக் கொணரும்படி எது இருக்கிறது? எல்லோருமே ஒரே குட்டைதான். குரங்காக இருந்தாலும். யானையாக இருந்தாலும், முதலையாக இருந்தாலும் நாற்பது அடி மரத்தின் உயரத்தை அடைவதுதான் இலக்கு. எதில் திறமை இருந்தாலும் தொண்ணூற்றைந்து சதவீத மதிப்பெண்ணைத் தாண்டுவதுதான் குறிக்கோள். எல்லா பாடத்தையும் நெட்டுரு போட்டாக வேண்டும். பாடத்திட்டம்தான் இப்படி நேரடியாக அழுத்தம் கொடுக்கிறது என்றால் ‘என் பிள்ளை அதைச் செய்கிறான்; இதைச் செய்கிறான்’ என்று நாமும் ஏன் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்? ஒன்று குழந்தைகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட பாரத்தை பொறுத்துக் கொண்டு திணறுவார்கள் அல்லது ‘இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸூ’ என்று நமது அபிலாஷைகளை உதாசீனப்படுத்தத் துவங்குவார்கள். கடைசி காலத்தில் ‘எம்பையன் என்னை மதிக்கவே மாட்டேங்குறான்’ என்பது வரைக்கும் போய் நிற்கும்.
 
இது டூ மச்சாகத்தான் தெரியும். ஆனால் சிக்மண்ட் ஃப்ராய்ட் அப்படித்தானே சொல்கிறார்? ஒரு மனிதனின் எந்தவொரு குணாதிசயத்தையும் அவனது குழந்தைப்பருவ பாதிப்புகளோடு இணைக்க முடியும். . அப்படித்தான் ஒருவன் அம்மா அப்பாவை மதிக்காததையும் கூட அவனது குழந்தைப்பருவத்து நிகழ்வுகளோடு இணைக்கலாம். 
 
சரி. இதற்கு மேலும் பேசி நிறையப்பேரின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது. அவரவர் பிள்ளை; அவரவர் பாடு.
 
ஆனால் இந்த டிப்ஸ் உபயோகமானதாக இருக்கக் கூடும்.
 
பெற்றோர்களில் மூன்று வகை உண்டு. சர்வாதிகாரி சண்முகம் (Authoritarion), அசால்ட் ஆறுமுகம் (Permissive), ஜனநாயகவாதி ஜம்புலிங்கம் (Democratic). 
 
சர்வாதிகாரி என்றால் ‘நீ அதைச் செய்யக் கூடாது’ ‘அங்கே போகக் கூடாது’ என்று மறுப்பவர். மீறிச் செய்தால் கடும் தண்டனை இருக்கும். எந்தவொரு சூழலிலுமே அப்பா திட்டுவார், அம்மா திட்டுவார் என்று குழந்தைகள் பயந்து நடுங்குவார்கள். வளரும் போதும் பெற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து குற்றங்களைச் செய்யத் துவங்குவார்கள். 
 
அசால்ட் ஆறுமுகம் நேரெதிர். ‘நீ செய்யுடா ராஜா’ ‘உன் இஷ்டம் கண்ணு’ வகையறா. இப்பொழுது வேண்டுமானால் ‘எம்பையனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கேன்’ என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிக அபாயகரமானது. பதின்பருவ பிள்ளைகளின் பெரும்பாலான சிக்கல்களுக்கு இந்த வளர்ப்பு முறைதான் காரணமாகிறது. வளர்பருவத்தில் தங்களின் ஒவ்வொரு தவறுக்கும் இதை அட்வாண்டேஜாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 
இந்த மூன்று முறைகளில் ஜனநாயகவாதிதான் பெஸ்ட் என்கிறார்கள். ‘நீ ஆசைப்பட்ட மாதிரியே சினிமாவுக்கு போயிட்டு வா. ஆனா நாம ஏற்கனவே முடிவு செஞ்ச மாதிரி இந்த மாசத்துக்கான கோட்டா இதோடு முடியுது. ஓகேவா?’ என்பவர்கள். தடியும் முறியவில்லை. பாம்பும் சாகவில்லை க்ரூப். 
 
தேடினால் இன்னமும் ஏகப்பட்ட குழந்தை வளர்ப்பு முறைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் இந்திய வளர்ப்புமுறையில் நாம் பெரும்பாலும் இந்த மூன்றையும்தான் கலவையாக பயன்படுத்துகிறோம். இதில் எதை அதிக விகிதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் குழந்தைகளின் வெற்றி தோல்விகள் மட்டுமில்லை- நம்முடைய வெற்றி தோல்வியும் அடங்கியிருக்கிறது. அவர் மிகத் தெளிவாக புரிய வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
 
கிளம்பும் நேரம் ஆகியிருந்தது. 
 
கடைசியாக ஒரு கேள்வி ‘நீங்க குளிச்சுட்டு வரும் போது வித்தியாசமா பார்க்கிறானா?’ என்றார். 
 
‘கவனிச்சதில்லையே’ என்றேன். 
 
‘பார்ப்பான். இனிமேல் கவனிச்சு பாருங்க’ என்றார். 
 
கிளம்பும் போது குழப்பிவிட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவர் சொல்ல வந்தது எளிமையான விஷயம். குழந்தைகள் நம்மைவிட விவரமானவர்கள். நாம்தான் நினைத்துக் கொண்டிருப்போம்- அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று; ஆனால் நாம் அறியாமலே அவர்கள் கவனிப்பார்களாம்.
 
‘குழந்தைகள் தூங்கும் போது மனைவியோடு சண்டையிட்டுப் பாருங்கள். அடுத்த நாள் பகலில் குழந்தைகளிடம் வித்தியாசத்தை உணரலாம்’ என்றார்.
 
‘ஏன்?’
 
‘அவர்களது காதுகள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கும்’.
 
அடுத்தநாள் தெளிவாக ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் முந்தின இரவில் என்னவோ வித்தியாசமாக நடந்திருக்கிறது என்பதை அவர்கள் மனம் தெரிந்து வைத்திருக்கும். சண்டைக்கு மட்டுமில்லை கொஞ்சல், மிஞ்சல் இத்யாதி இத்யாதி எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். இதெல்லாம் மூன்றிலிருந்து ஒன்பது வயதிலான குழந்தைகளுக்கு. அதைத் தாண்டிய குழந்தைகளைப் புரிந்து கொள்வது இன்னொரு கலையாம். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு முதலில் இவனை புரிந்து கொள்கிறேன். பிறகு அடுத்த கலையைப் பார்க்கலாம்.
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.