Jump to content

கண்ணாடித் தாத்தா!


Recommended Posts

"இது தாண்டா லவ்!"

சக்கர நாற்காலியில் மனைவியை இருத்தி கடற்கரையோரம் உலாவச் சென்ற அந்தத் தாத்தாவைப் பார்த்து நண்பன் சொன்னான் - சில வருடங்களுக்குமுன்.

'இவர்கள் காதல் திருமணம் செய்திருப்பார்களா?' 'உண்மையான காதலன் இப்படித்தான் இருப்பான்' தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். எனக்குக் கண்ணாடித் தாத்தாவின் ஞாபகம் வந்தது.

‘எனக்கும் கூட ஒரு உண்மையான காதலைத் தெரியும்' என்றேன்.

gf6.jpg

 

 

 

 

 

 

 

 

கண்ணாடித்தாத்தா நல்லதோர் கதைசொல்லி. கதை கேட்பது எப்போதும் எங்களுக்குப் பிடித்தமான விசயமாகவே இருக்கிறது. நமது குழந்தைப் பருவத்தில் நம் முதற்செயல் கவனித்தலும், கதை கேட்பதுமாகவே ஆரம்பிக்கிறது. அதுவே முதல் தேடல். அப்போது தொற்றிக் கொண்ட ஆர்வம் இறுதிவரை குறைவதில்லை.

கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. கேட்பவர்களுக்கு சுவாரஷ்யம் குன்றாமல், அநாவசியமாக வளர்த்தாமல் சொல்வது சிலருக்கு மட்டுமே சாத்தியம். கேட்பவர்களும் ஆர்வமாக இருக்கவேண்டும் என்பது, எப்போதும் அவசியமில்லை. கேட்கும் யாரையும் தமது வார்த்தைகளால் கட்டிப்போடும் கதைசொல்லிகள் இருக்கிறார்கள். கண்ணாடித் தாத்தாவும் அப்படித்தான். அவர் குழந்தைகள் எல்லோருக்கும் பிடித்தமானவராக வேறு இருந்தார். தெரிந்த கதைகளையே கூட பிடித்தவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்பது கூட குழந்தைப் பருவத்தின் சுவாரஷ்யங்களில் ஒன்றல்லவா? அவர் கதை சொல்லக் கேட்டுக் கொண்டிருப்பது சிறுவயதில் எப்போதுமே பிடித்திருந்தது. இப்போதும்கூட!

குழந்தைப் பருவத்தில் தாத்தாக்களின் அன்பில், அருகாமையில் வாழக் கிடைத்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். அப்பாவுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவைவிட, ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவு தனித்துவமானது. தோழமை மிக்கது. அதுவும் தவிர, பெரும்பாலான நம் அப்பாக்கள், தாத்தாவான பின்பே ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது எனத் தெரிந்துகொள்கிறார்கள். வயோதிபப் பருவத்தை இரண்டாவது குழந்தைமை என்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, குழந்தைகளும், தாத்தாக்களும் இலகுவில் நெருக்கமாகிவிடுகின்றனர். நம்மில் பலருக்கும் நம் தாத்தாக்களை புகைப்படத்தில் மாத்திரமே காணக் கிடைத்திருக்கிறது. தாத்தாவின் அன்பு கிடைக்காத நம் ஏராளமானோரைத் தத்து எடுத்துக் கொண்டவர் போலவே கண்ணாடித்தாத்தா இருந்தார்.

யாழ்ப்பாணத்தின் இந்திய இராணுவக் காலப்பகுதி. தூர்தர்ஷனில் ஹிந்தியில் மகாபாரதம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தாத்தாவிடம் மகாபாரதக் கதை கேட்டது நினைவிருக்கிறது. பூக்கன்றுகளுக்கு நீர்விட்டவாறோ, ரோஜா செடிகளுக்குப் பாத்தி கட்டிக் கொண்டோ, புற்களைப் பிடுங்கியவாறோ இயல்பாகத் தன் வேலையைப் பார்த்தவாறே சொல்லிக் கொண்டிருப்பார். ஒவ்வொரு நாளும்  கொஞ்சம் கொஞ்சமாக, தொடர் கதை எழுதுவதுபோல ஒவ்வொரு  பகுதியின் முடிவிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவது போன்ற உத்தி கையாளப்படவேண்டும் என்பார்கள், அதுபோலவே அவர் கதை சொல்லும் பாணி அமைந்திருந்ததா என்பது சரியாக நினைவில்லை. ஆனாலும், நாளை எப்போது கதை நேரம் வரும்? என்ற மறுநாள் கதை  கேட்பதற்கான ஆவல் மனதை நிறைத்திருக்கும்.

 

gf3.jpg

 

இடையிடையே பாட்டி யார் என விசாரிப்பார். பாட்டி சமீபத்தில்தான் ஒரு விபத்தில் அடிபட்டதில், ஓர் குழந்தையைப் போல மாறியிருந்தார். அடையாளம் தெரிந்ததுபோல, ஞாபகம் வந்துவிட்டது போல ஓரிரு வார்த்தைகள் தொடர்ந்து பேசுவார். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு பாராட்டுவார். அழகாக சிரிப்பார். இளமையில் மிக அழகாக இருந்தாராம். அப்போதெல்லாம் தாத்தா சமைக்கும்போதும், வீடு பெருக்கும்போதும் தானும் செய்யப்போவதாக அடம்பிடிப்பது, சாப்பிட அழைத்தால் வராமல் அலைய விடுவது என பாட்டி குழப்படி செய்துகொண்டிருந்தார். இடையிடையே கார் ஓட்டுவதுபோல கைகளால் சுற்றிக் கொண்டே வீட்டிற்குள் நடந்து திரிவார். அப்போது கூப்பிட்டால் ரிவேர்ஸ் எடுத்து, அதே பாவனையுடன் திரும்பி வருவார். எங்களைப் போலவே பாட்டியுமிருந்தார்.

சற்று வளர்ந்த, பதின்பருவத்துக்கு முந்தைய வயதில் பள்ளி விடுமுறை நாட்களின் காலை  வேளைகளில் அவ்வப்போது வீட்டுக்கு வரும் தாத்தா, அம்மாவிடம் அனுமதி கேட்டு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். சைக்கிள் ஹாண்டிலில் சந்தைக்குச் சென்று வாங்கிய காய்கறிகள் நிறைந்திருக்கும் பெரிய பை மாட்டப்பட்டிருக்கும். அன்றைய தன் வீட்டின் குட்டி விருந்தாளியை வரவேற்பறையில் அமரவைத்து, பிஸ்கட், தின்பண்டங்கள் கொடுத்துவிட்டு, சமையலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளில் இறங்குவார். தாத்தா மிக நன்றாகச் சமையல் செய்வார். நளபாகம் என்றதுமே எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வரும். இன்றுவரை அதில் மாற்றமேதுமில்லை.

gf2.JPGவரவேற்பறையில் சிறிய புத்தக அலுமாரியில் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களிலிருந்து ஒன்றை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன். முதன்முறையாக எனக்கு ஆனந்த விகடன் பரிச்சயமானது தாத்தா வீட்டில்தான். பாட்டி வந்து எட்டிப் பார்த்துப் புன்னகைப்பார். யாரையும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அமைதியாகிவிட்டார். குழந்தைத்தனம் குறைந்து தாத்தா சொல்பேச்சுக் கேட்டு நல்ல பிள்ளையாக இருந்தார். சில வேளைகளில் 'யார் வந்திருக்கிறது?' தாத்தாவிடம் கேட்பார். அபூர்வமாகச் சில சமயங்களில் பரிச்சயமானவர் போல ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அப்போதெல்லாம் சற்றுக் குழப்பமாகவே இருக்கும், 'பாட்டி தெரிந்துதான் பேசுகிறாரா?வேறு யாரையாவது மனதிற்கொண்டு பேசுகிறாரா' என. இருந்தாலும் பாட்டியின் முகத்தில் எப்போதும் அன்பு ததும்பும் புன்னகை பரவியிருக்கும்.

 

 

 

 

தாத்தாவின் அப்பா மிக வசதியானவராக வாழ்த்திருக்கிறார். ஊரின் முதலாவது கார் தாத்தாவின் தந்தையுடையது. வெள்ளைக்கார அரசாங்க அதிபரிடமிருந்து வாங்கியதாம். வீட்டில் வில்வண்டி என அழைக்கப்பட்ட இரண்டு மாட்டுவண்டிகள் இருந்தன. ஒன்று ஒற்றை மாட்டுவண்டி, மற்றையது இரட்டை மாட்டுவண்டி. உள்ளே சொகுசாக பஞ்சு மெத்தை இடப்பட்டிருக்குமாம். தமிழ் சினிமாவில் மட்டும் பார்த்த கிராமத்துப் பணக்காரக் காதாநாயகி வீட்டு மாட்டுவண்டி நினைவுக்கு வர, மாட்டின் கழுத்தில் கட்டப்பட சலங்கை ஒலிக்க அந்தக்காலத்து மண்வீதியில், வயல் வெளிகளில் மாட்டுவண்டியில் செல்வது போன்ற கற்பனைகளைக் கொடுக்கும் தாத்தா சொல்லும் அவரது சிறுவயது அனுபவங்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தாத்தாவைச் சந்தித்தபோது, பாட்டி இறந்து சில மாதங்களாகியிருந்தன. சற்றுக் களைத்துப் போனவர்போல இருந்தார். பதினைந்து வருடங்களுக்கு மேலாக பாட்டியின் வாழ்க்கையையும் சேர்த்து வாழ்ந்துகொண்டிருந்தார் தாத்தா. பாட்டியை மிக அன்பாகக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். அதுவே அவரை சலிப்பில்லாமல் தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்கவைத்தது. அவ்வப்போது பேச்சை நிறுத்தி எங்கோ வெறித்துப் பார்க்கையில் பாட்டியின் இழப்பு தெரிந்தது. தான் இருக்கும்போதே பாட்டி போய்விட்டதில் கொஞ்சம் நிம்மதியும்  இருந்தது. இறுதிவரை பாட்டி சிறுபிள்ளைத்தனமாக அடம்பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டிற்கு மருமகள் வந்த பின்பும், தாத்தா சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்ற தனது உறுதியான கொள்கையை எப்போதுமே பாட்டி மாற்றிக் கொள்ளவில்லை. இறுதிநாட்களில் பாட்டி செய்த அட்டகாசங்கள், குழப்படிகள் பற்றி சிறு சிரிப்புடன், உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். தன் சின்ன மகளின் குறும்புகளைப் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் தந்தை போலவே தோன்றினார்.

அவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாரா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் காதலித்தார். புரிந்துகொள்ளப்படாத காதல் மிக சோகமானது. தாத்தாவின் காதலைப் பாட்டி புரிந்து கொண்டிருப்பாரா? அவரால் புரிந்து கொள்ளமுடிந்த காலத்தில் தன் காதலை தாத்தா சரியாக வெளிப்படுத்தியிருப்பாரா? என்பதும் எனக்குத் தெரியாது.

senior-couple.jpgதாத்தாவைச் சந்திக்கும்போதும் பேசித்தீர்ந்துவிடாத ஏராளமான விஷயங்கள் இருந்திருக்கின்றன. தாத்தா ஓர் தமிழாசிரியராக பணியாற்றியிருந்தார். தாத்தாவுடன் சேர்த்து அண்ணன் தம்பிகள் ஐந்துபேராம். ஒவ்வொருவரும் மேற்படிப்புக்குச் செல்லும்போது, தாத்தாவின் அப்பா எல்லோரையும் அழைத்து என்ன படிக்கப் போகிறீர்கள்? எனக் கேட்பது வழக்கமாம். அவரவர் தமக்குப் பிடித்த துறையைத் தேர்ந் தேடுத்தார்களாம். மற்றவர்கலேல்லோரும் ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுக்க கண்ணாடித் தாத்தா மட்டும் தமிழ்மொழியை விரும்பிப் படிக்க ஆசைப்பட்டாராம். தாத்தாவின் அப்பாவுக்கும் தமிழ் பிடித்திருந்ததுபோல. ‘நீ ஒருத்தனாவது தமிழ் படிக்கிறியே’ என மிகுந்த மகிழ்ச்சியடைந்தாராம்.

 

 

 

 

தாத்தா நிறையப் படிப்பார். ஆனந்தவிகடனிலிருந்து ரீடர்ஸ் டைஜஸ்ட் , டானியல் ஸ்டீல் நாவல்கள் என எல்லாமே அவர் மேசையில் இருக்கும். நாள் தவறாமல் அதிகாலையில் எழுந்து, குளித்து யோகா செய்வார். எல்லோரிடத்திலும் மிகுந்த அன்பு பாராட்டுபவர்.

எப்போதாவது அவர் வீட்டுக்குச் செல்லும்போது அவர் கேட்கும் முதல் கேள்வியே "சாப்பிட்டுப் போறியா?" தன்னைப் பார்க்கவரும் எல்லோரையும் அவர் அப்படித்தான் கேட்பார். வாழ்வில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியது அப்போது சம்மதித்து விடுவதுதான். இந்த உலகத்தில், அவருக்கு அதைவிட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது வேறு எதுவுமில்லையோ என்பது போலிருக்கும் அவர் உற்சாகம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை சென்றிருந்தபோதும் அப்படித்தான். தனியாக ஒருத்தனுக்கு மட்டும் சமையல் செய்வது சில சமயங்களில் மிகுந்த சலிப்பாய் இருப்பதாகச் சொன்னார். யாராவது வந்தால், உணவு கொள்ளச் சம்மதித்தால் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுப்பதாகவும் சொன்னார்.

அவர் சமையல் செய்வதைப் பார்ப்பதே அலாதியான அனுபவம். மிக நிதானமாக, நேர்த்தியாக ஓர் கலைஞனைப் போல மிக ரசித்து பொறுமையாக சீரான வேகத்தோடு, கூடவே பழைய கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார். ஒத்தாசையாக சிறுவேலைகள் சொல்வார். அதில் ஒரு குட்டிப் பயிற்சி வகுப்பே எடுத்துக் கொள்ளலாம். சிறியதும் பெரியதுமாக வகைவகையான கத்திகள் இருந்தன. அவ்வப்போது கூராக்கிக் கொள்ள வசதியாக அதற்கான சாதனமும் இருந்தது. ஒரு முள்ளங்கிக் கிழங்கை வெட்டித் தரும்படி கேட்டார். அதற்கென்று ஒரு சிறிய கத்தியும் கொடுத்து முதலில் 'டெமோ' காட்டினார். மிக மெல்லியதாக பென்சில் சீவுவது போல வெட்டும்படி கேட்டுக் கொண்டார். 'முள்ளங்கி இவ்வளவு சுவையானதா?' அதற்குப் பின்னரும் ருசித்ததில்லை. பருப்பு, பாற்கறி, உறைப்பு, துவையல், சுண்டல், குழம்பு என வகைகள். கூடவே தயிர், ஊறுகாய், மூன்று வகையான பொரியல் என விருந்து களை கட்டியிருந்தது. அன்று என் இயல்புக்குமாறாக மூக்குமுட்ட சாப்பிட்டேன். தேவாமிர்தம் எப்படியிருக்கும் என்பது பற்றிய கேள்விகளோ, சந்தேகங்களோ இன்றளவும் எனக்கில்லை.

gf.jpg

சிறுவயதில் இருந்த நல்ல குணவியல்புகளை வளர வளர தொலைத்து விடுகிறோமா? எனத் தோன்றுவதுண்டு. அதில் முக்கியமானது அன்பை வெளிப்படுத்துவது. தெரியவில்லையா, தயக்கமா எனப் புரிவதேயில்லை.  வெளிநாடு செல்லும் வரையில் தாத்தா தனியாக நான்கு வருடங்கள் அருகில் வசித்திருந்தாலும் நான் அவருடன் பொழுதைச் செலவிட்டது வெறும் நான்கைந்து நாட்கள் மட்டுமே என்பது இப்போது யோசிக்க அதிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவாக யாரிடமும் ஒட்டாத என் இயல்பு, மிக நேசிக்கும் ஒருசிலரிடம் கூட விலகியிருக்க வைத்துவிடுகிறது. மனதிற்கு நெருக்கமானவர்களின் இழப்பும், பிரிவும் தீராத குற்றவுணர்ச்சியையும் கொடுத்துவிடுகிறது. ஆனாலும் 'வேலை' என்று காரணம் இலகுவாகக் கிடைத்துவிடுவதால், அது தெரிந்துகொண்டே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுபற்றித் தாத்தாவுக்கு வருத்தங்கள் இருக்கப்போவதில்லை. அவர் எப்போதும் அன்பு செலுத்துபவராகவே இருந்திருக்கிறார். எதிர்பார்த்ததில்லை. அவரால் நேசிக்கப்பட்ட எல்லோருமே அவரைப் புரிந்து கொண்டார்களா? அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டு, திட்டமிட்டு யாரும் அன்பு கொள்வதில்லையே! அதுவே அவர் இயல்பு!

 

gf5.jpg

 

அன்று நண்பனுக்குச் சொன்னதுபோல இன்றும் கூடக் காதல் என்று சொன்னவுடன் கண்ணாடித்தாத்தாதான் நினைவில் ஒரு மகத்தான காதலனாகத் தெரிகிறார். ஓர் பெண்ணைக் காதலிப்பவன் மட்டும்தான் காதலனா? காதலியையும், மனைவியையும் மட்டும்தான் காதலிக்க வேண்டுமா? வாசிப்பை, சமையலை, தியானத்தை, இசையை, ஓவியத்தை  எனத் தாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் முழு ஈடுபாட்டுடன் ஒன்றிப்போகும் தருணத்தில் ஒவ்வொருவரும் காதலர்களே! வாழ்க்கையை அதன்போக்கிலேயே காதலிப்பவர்கள் இவ்வுலகில் ஏராளமானோர் இருக்கிறார்கள். வாழ்க்கையைக் காதலிப்பவர்களால் மட்டுமே ஏமாற்றங்களையும், தோல்விகளையும் படிப்பினைகளாக எடுத்துக் கொண்டு, மேலும் தீவிரமாக காதலிக்க முடிகிறது. அதனால் என்ன சாதிக்க முடிந்தது, முடியும்? என்ற கேள்விகள் அர்த்தமற்றவை. எதிர்பார்ப்புகளின்றி எல்லாவற்றையும் காதலிப்பதைவிட வேறென்ன சாதனை இருக்கமுடியும்?

இதோ இந்தக் காலை வேளையில், எங்கோ தொலைதேசத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில், குளித்து முடித்து, யோகா செய்து, தியானத்தில் அமர்ந்திருப்பார் கண்ணாடித்தாத்தா!

 

http://4tamilmedia.com/social-media/google-plus/24250-2014-07-09-08-35-26

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.