Jump to content

நஞ்சுண்ட காடு : க.வே. பாலகுமாரன் எழுதிய முன்னுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவியழகனின் நஞ்சுண்ட காடு நாவலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் க.வே.பாலகுமாரன் எழுதிய முன்னுரையை இங்கு வெளியிடுகின்றோம். 4ம் கட்ட ஈழப்போர் காலத்தில் வன்னியில் போராளியாகவிருந்த கவியழகனால் ஏணைப்பிறை என்ற பெயரில் இந்நாவல் எழுதப்பட்டது. நீண்ட காலத்தின் பின்னர் தற்போது அகல் பதிப்பக வெளியீடாக நஞ்சுண்ட காடு என்னும் பெயரில் வெளியாகியுள்ளது – எனில்

 

அறிய மனமுள்ள அனைவரிற்கும் ஏணைப்பிறையை அறிமுகம் செய்கின்றோம். இதில் பெரும் மனநிறைவும் அடைகின்றோம். புவி ஏதோவொரு அச்சில் சுழல்வதாகச் சொல்கின்றார்கள். இந்த மனிதகுலம் எந்த அச்சில் சுழல்கின்றது. ஏணைப்பிறையில் விடையுள்ளது. ஏணைப்பிறையை யாரும் வாசிக்க முடியாது. அதற்குள் வாழத்தான் முடியும்.

வாழத்துடிக்கின்ற, ஆனால் வாழமுடியாத, ஆனாலும் வாழ முயல்கின்ற மக்கள் கதைதான் இது. ஒவ்வொரு காலகட்டத்தின் முடிவும் இன்னொன்றின் தொடக்கமும் ஏதோ ஒரு விடுதலையை நோக்கிய போராட்டத்தின் விளைவே. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் உலகிற்களித்த கொடை, என்றும் உயிர் வாழும் இலக்கியங்கள்தான். இவ்விலக்கியங்களுள் என்றும் உயிர்வாழும் மனிதர்களைத்தான். அவ்விலக்கியங்களுள் முற்றிலும் இருள் சூழ்ந்து பாதைகள் யாவும் மூடுண்ட நிலையிலும், வதைபட்டும், குருதி சிந்தியும், தாக்குப் பிடித்தும் நம்பிக்கை எனும் நாட்களில் மக்கள் வாழ்கின்றார்கள். சோவியத், சீன, வியட்நாமிய, லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, பாலத்தீன மக்களின் இலக்கிய வரிசையில் இறுதியாகச் சேர்வது ஈழ விடுதலைப்போராட்ட இலக்கியங்கள். இதிலும் இப்போது இணைவது ஏணைப்பிறை.

எதனையும எதனோடும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் அதுவது அதற்குரிய சிறப்பியல்போடு இருக்கும். ஆனால் எம்மால் ஒப்பிடாமலும் அளவுகோல் இல்லாமலும் வாழமுடியாது. ஏணைப்பிறையில் பக்கம் 70வதில் வருவதுபோல “வாழ்க்கையில் அதுவொரு போலி ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலியாக அது இருக்கு”

உலகில் உள்ள அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும், அவ்வாறு மாறமுடியாத போராளி உணர்வுள்ளவர்களுக்கும் நிச்சயமாக ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவர்கள் நிச்சயமாக மக்சிம்கோர்க்கியின் “தாயை” வாசித்திருப்பார்கள். வாசித்தவர் மனதிலே பாவெல்லும் அவனது தாயும் என்றும் இடம்பிடித்திருப்பார்கள்.

ஏணைப்பிறையை வாசித்த பின் சுகுமாரும் பெயர் அறியப்படாத அவனது அக்காவும் இடம்பிடித்துக்கொள்வார்கள். தாய் நாவலிலும் (தாயின் பெயர் சரிவரத் தெரியாது) பொறுப்பற்ற குடிகாரத் தந்தை ஏணைப்பிறையிலும் அவ்வாறே. ஆனால் இங்கு தாய்க்குப் பதில் அக்கா. ஏணைப்பிறையில் ஒரு கட்டத்தில் அம்மா செயலற்றுப் போகின்றார். அக்காவே எல்லாச் சுமையையும் சுமக்கின்றார். (‘அம்மாவிற்கு இரண்டு காலும் இழுத்திற்று நாரிக்குக் கீழே உணர்வில்லை்’ பக்கம் 100) தாயில் தாய்க்கும் மகனுக்குமான உறவே அடிநாதமாகப் பரவுகின்றது. இங்கு சுகுமாருக்கும் அக்காவிற்குமான உறவு.

kaviazhagan-wrapper1.jpgவதைக்கப்படுவதானால் விடுதலைவேண்டிப் போராடும் அனைத்து மக்களும் போராட்டத்தின் பொழுதும் பெரிதும் வதைக்கப்படுகின்றார்கள். அக்கொடிய வதையும் அதிலிருந்து பிறக்கும் ஓர்மமும் மானிடத்தின் உயரிய பண்புகளாகக் கற்பனையே செய்யமுடியாத சாதனைகளாகின்றன. இதுவே முதல் விடுதலைப்போராட்டமாகக் கருதப்படும் ஸ்பாட்டகசின் அடிமைகள் எழுச்சியிலிருந்து பிரான்சியப் புரட்சிவழி தொடர்ந்து ருஸ்ய, சீன புரட்சிகள், வியட்நாமிய, கியூபா விடுதலைகள் வழி உலகறிந்தது. இதற்கு ஈழவிடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இங்கே ஒரு பெருத்தவேறுபாடு உள்ளது. இதுவே பிறர் இன்று புரியவேண்டியது. இவ்விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவும் அதுவே. ஆயினும் அதுவே பலருக்கு வியப்பூட்டும் அதிர்ச்சிதரும் புரியமுடியாத மர்மம். இதைப் புரியவைப்பதே ஈழவிடுதலைப் போராட்ட இலக்கியங்கள் வழி இன்று பிறப்பெடுத்திருக்கும் போரிலக்கியங்களின் இலக்கு. இதனை உணர ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழினம் பட்ட அவமானத்திலும் கடைநிலை அவமானத்தின் தாக்கத்தினை எவராலும் புரியமுடியும்.

ஏனெனில் இன்றைய வீரம் செறிந்த ஈழத்தேசிய விடுதலைப்போராட்டம் இவ்வரலாற்றின் விளைபொருளே. சுயம்புவாகவே தோன்றி சுயம்புவாகவே நகரும் போராட்டம் இது.

ஆங்கிலேயர் ஆண்டபொழுது (1789 – 1948) 1833ல் தமிழ் தாயகத்தையே முற்றாக இழந்த ஈழத்தமிழினம் 1930ன் பின் படிப்படியாக தாய் நிலத்தையே இழக்கத் தொடங்கியது. 1948ல் சுதந்திரம் என்கின்ற பெயரில் சிங்களவர்கள் பெற்ற உரிமைகளை பெறாமலே இழக்கத்தொடங்கியது. 1956இன் முதன் இனக்கொலை நிகழ்வின் பின் உடமை, உறவு, உயிர் என எல்லாவற்றையும் இழக்கத்தொடங்கியது. எனவே இவற்றிற்கெதிராக (ஆங்கிலேயர் காலத்தில் காந்தி காட்டிய காங்கிரசு வழியில் சிங்களவர்களுக்கும் சேர்த்து சுயராச்சியம் வேண்டிய) தமிழினம் 1948இன் பின் இணைந்து வாழ இணைப்பாட்சி வேண்டியது.

ஆனால் சிங்களமோ பிரிந்துபோவென அரசியல், பொருண்மிய இராணுவ அடக்குமுறைகளை வேண்டியபொழுது பொறுக்கமுடியாத நிலையில் 1970 வரை மென்முறை வழியிலே போராடிய தமிழினம் தனக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப்போராட பாரிய முடிவினை எவரையும் வேண்டிநிற்காமல் தானே எடுத்தது.

எனவே இயல்பாகவே ஈழத்தமிழிலக்கியப் போக்கும் பாரிய மாற்றம் கண்டது. இம்மாற்றம் ஏற்பட்ட முறைமை கூர்ந்து நோக்கப்படவேண்டியது. ஏற்கனவே 1950களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்த முற்பட்ட முற்போக்கு இலக்கிய இயக்கம் (மாக்சியச் சித்தாந்த அடிப்படையிலான புதிய சமூக முறைமையினை இலங்கை முழுவதும் உருவாக்க விரும்பியோரின் இலக்கிய இயக்கம்) பெரும் பின்னடைவு காண நேரிட்டது. வரலாற்றில் தவிர்க்கமுடியாத மாற்றம் இது.

இலங்கைத் தேசியத்தின் வீழ்ச்சி – தமிழ்தேசியத்தின் எழுச்சி, சிங்கள முற்போக்காளர்களின் அதி பிற்போக்குவாத நிலை என்கின்ற இரு காரணங்கள் இலக்கியப் பாங்கினை முற்றாக மாற்றியமைத்தன. எனினும் இக்காலகட்ட முற்போக்கு எழுத்தாளர்களை ஈழத்தமிழிலக்கியம் தனது முன்னோடிகளாக பதிவுசெய்தே வைத்துள்ளது.

அதேவேளை 1960களிலேயே இந்நிலைமைகளைத் தம் பட்டறிவால் உணர்ந்து இலக்கியப் போக்கிலே இம்மாற்றத்தினை நிகழ்த்திய முன்னோடிப் படைப்பாளிகள் இன்றைய ஈழத்துப்போராட்ட – போரிலக்கியத்தின் முன்னோடிகள் ஆவர்.

1950களின் பிற்பகுதிகளிலே புதிய நிலைப்பாடொன்றை முன்வைத்த மு.தளயசிங்கம் எழுதிய நாவலான ஒரு தனிவீடு, தமிழன் கனவினை எழுதிய காசி ஆனந்தன், ‘வெளியார் வருகை’ என 1968ல் நெடுங்கவிதை எழுதிய சண்முகம் சிவலிங்கம், சிறுகதை ஆசிரியர்களான பிரான்சிஸ் சேவியர், அண்மையில் காலமான வரதர், அ.செ.முருகானந்தன், வ.அ.இராசரத்தினம் போன்றோரோடு முருகையன், வில்வரத்தினம், சேரன், ஜெயபாலன், கே.ஆர்.டேவிட், சாந்தன், சோ.பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான் எனத் தொடரும் இவ்வரிசை ஆரோக்கியமான தடத்தில் கவிதை, புனைகதைத்துறையில் இப்பொழுது பயணிக்கின்றது. (பட்டியல்கள் பூரணமானவையல்ல, வெறும் குறியீட்டுக்காகவே. பட்டியல்கள் ஒருபோதும் எப்போதும் எவராலும் பூரணப்படுத்த முடியாதவை)

02_02_07_family_05எனவே இவ்வாறாக 1970களின் பின்னான இம்மாற்றம் 1983யூலை இனவழிப்பின் பின் மிகத்தெளிவான பிரிகோட்டை உருவாக்கியது. தாமும் தமது சந்ததியும், சந்ததி சந்ததியாகப் பட்ட கொடும் வடு சுமந்த அவமானப் பழு அனைத்தையும் நீக்க இளைய தலைமுறை தீர்க்கமான முடிவெடுத்தது. இம் முடிவின் பின்னான வரலாற்றின் இலக்கியத் தொகுப்பே இன்றைய ஈழப்போராட்ட – போரிலக்கியம். எனவே இப்போது போராளிகளே படைப்பாளிகள் ஆகினர். தமது கதையைத் தாமே எழுதினர். இது இவ்வாறுதான் தொடங்கியது. இப்போது ஏணைப்பிறையிலும் அது நிகழ்கின்றது.

வழிகாட்ட, துணைநிற்க, எவருமற்றும் எதுவித ஆயத்தமற்றும் கையில் எதுவுமற்ற நிலையிலும் தமிழீழத்தாயின் புதல்வர்கள் போருக்குக் கிளம்பினர். எவருமற்ற வெளிகளிலே அலைந்தனர். அருகில் அணைந்து படுத்துக்கிடந்த பிள்ளைகளைக் காணாமல் தாய்மார்கள் ஓவென அலறினர். வயிற்றிலே நெருப்பைக் கட்டியது போல் பதறினர். இவ்வாறாகத்தான் ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது.

இவ் வரலாறு மிக அற்புதமாகப் பதியப்பட்ட கதைதான் ரஞ்சகுமாரின் கோசலை. உலக இலக்கியங்களுள் சேர்த்துவைத்துப் பார்க்கப்படவேண்டிய சிறுகதை இது. தமிழ் தாயினதும் அவளது புதல்வர்களினதும் விசும்பல், அலைதல், படுகாயமுற்று அவயம் இழந்து குற்றுயிராதல், மண்டையோடுகள் சிதறிக்கிடத்தல், பயிற்சிக்காக கண்காணாத தேசம் போதல், பிரிவுத்துயர், அலைந்துழழல், போராட்ட ஓர்மம் கோசலையின் வரிகளின் வழி காணலாம். சிறுவயதில் இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே பிசாசுகளும் உலாவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எவ்வாறு பழகினர்? இந்தப் பயங்கரச் சத்தங்களை எவ்வாறு தாங்குகின்றனர். இந்த ஆபத்துக்களை எவ்வாறு விருப்புடன் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்வளவு வேகத்தையும் பெரும் சினத்தையும் இவர்களில் விதைத்தது யார்?

1970, 1980களின் பின்னே கோசலையில் தாயின் குரல் ஒலித்ததுபோல ‘என்ர பிள்ளைகள் எங்கே’ என்ற குரல் தமிழ்த் தேசம் முழுவதும் ஒலித்தது. கோசலைக்குப் பிறகு ரஞ்சகுமாரால் எழுதவே முடியவில்லை என்றே நினைக்கத்தோன்றுகின்றது. 1983களிற்குப் பின்னான மாற்றங்களை அவர் பதிவாக்கினார். 1989ல் கோசலை அடங்கிய மோகவாசல் தொகுப்பு வெளிவந்தது.

இவ்வாறாக அன்னை மடியின் இதமான சூட்டில் இருந்து விலகியவர்கள் என்னவானார்கள்? எங்கு போனார்கள்? என்ன செய்தார்கள்? என்ன எண்ணினார்கள்? எவ்வாறு கொடிய தனிமை நிரம்பிய எவ்வித முற்பட்டறிவுமற்ற வாழ்விற்கு முகங்கொடுத்தார்கள். இவ்விலக்கியப் பதிவுகளே தமிழ்கூறும் நல்லுலகிற்குப் புத்தம் புதிய வரவாக போரிலக்கியமாக விரிகின்றது.

இதுவரை எழுதியவர்களைவிட எழுதப்பட்டதைவிட இவை வேறுபட்டவை. போராட்டத்தின் ‘மறுபக்கம்’ ‘ இன்னொரு முகம்’ ‘முழுமையொன்றின் இன்னொரு பகுதி இவை. ஏனென்றால் இவை போருக்குள் இருந்து போர் செய்தவர்களால் போர் செய்யப்படும்பொழுது எழுதப்பட்டவை. எழுதப்படுகின்றவை.

கோசலை பற்றிக் குறிப்பிடும்பொழுது பேராசிரியர் சிவத்தம்பி ‘தமிழ் புனைகதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது’ என்றார். இப்பொழுது கவியழகனின் ஏணைப்பிறையும் இன்னொரு புதிய அத்தியாயம்தான். ஆயினும் ரஞ்சகுமாருக்கும் கவியழகனுக்கும் இடையில் நடந்தவை, மிகமுக்கியமானவை (ஏணைப்பிறை இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு எழுத்துப்படியாக சிலகாலம் தவம் இருந்தது.)

பொதுவில் இப்போர்க் காண்டத்தின் தொடக்க நிலையாக சுபாஸ் (முன்னாள் போராளி தா.பாலகணேசன்) எழுதிய கொக்குளாய் படைமுகாம் தாக்குதல் பற்றிய கதையான ‘விடிவிற்கு முந்திய மரணங்கள்’ என்கிற குறுநாவல் கருதப்படுகின்றது. எனினும் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாக கப்டன் மலரவன்

(23.11.1992ல் இன்னொரு தாக்குதலில் இவர் வீரச்சாவடைந்தார்) எழுதிய நெடுங்கதையான (100 பக்கங்களுக்கு மேல்) போருலா உள்ளது.

வனத்தின் வனப்பும் வனத்திடை வாழ்வுமாக ஒரு பயணக்குறிப்பாக மணலாறு எனும் இடத்திலிருந்து மாங்குளம் சென்று அங்கிருந்த படைமுகாமைத் தாக்கியழித்த கதை அற்புதமாகப் பதியப்பட்டு ஒரு புதிய போரிலக்கிய வரவின் குறிகாட்டியானது. இதனைத் தொடர்ந்து பலவாக இல்லாவிட்டாலும் சிலவாக இலக்கியங்கள் வெளிவரத்தொடங்கின. இதேவேளை 1985ல் கோவிந்தன் (இவரும் ஓர் இயக்கத்தின் போராளியே) எழுதிய ‘புதியதோர் உலகம்’ விடுதலைப் போரின் மற்ற முகத்தினை தமிழகம் பயிற்சிபெறச் சென்று பரிதவித்தோர் துயரக்கதையை (இயக்கம் ஒன்றின் உள் முரண்பாடுகளை) பதிவுசெய்கின்றது. ஈழத்தமிழ் போராட்ட இலக்கியத்தில் இவ்வாறாக எதிர் மறையில் முரண்பாடுகளின் உள்முகத்தைப் போரின் மறுபக்கமாக வேறு கோணத்தில் தமது மனநிலைக்கேற்ப விபரிக்கும் இலக்கியத் தரமுள்ள சிறுகதைகளும் நெடுங்கதைகளும் தோன்றி பரவலான வாசிப்புத் தளத்தினைப் பெற்றன.

மலரவனின் பின் பல கதைசொல்லும் போராளிகள் தோன்றினர். தூயவன், மலைமகள், தமிழ்கவி, என சிலரைக் குறிப்பிடலாம். தூயவன் ஒரு மருத்துவப் போராளி. இதனால் இவரது ஆக்கங்கள் போரின் மருத்துவப் பக்கத்தையும் இராணுவ நுட்பங்களையும் கதையாகச் சுவைபட விபரிக்கும் விதமாக அமைந்தன.

பெரும் விமானப்படைத் தளமொன்றில் எவ்விதம் தற்கொடைப் போராளிகளால் வேவுப் புலிகள் உதவியோடு தாக்குதல் நடத்தப்பட்டது என்கிற உண்மைக் கதை ‘இன்னொரு போர் முகம்’ ஆனது.

இவ்விதமாக மலைமகள், தமிழ்கவி போன்றோர் பெண்புலிகள் போரின் நடுவே நின்று போர் செய்த கதை, சமூகத்திரையைக் கிழித்துக்கொண்டு வெளிவந்த விதம், எல்லாவற்றையும் உயிரோட்டமாக எழுதுகின்றனர். மலைமகளின் சொற்செட்டும் அது சிக்கனமாகக் கட்டமைக்கப்படும் விதமும் அவரை ஒரு தரமான சிறுகதை ஆக்கியாக்கி உள்ளது. முன்னர் போராளியாக இருந்து எழுதத்தொடங்கிய யோ.கர்ணனின் வளர்ச்சி வியக்கத்தக்கது. இவ்வாறாக இக்கதை நீளும்.

இப்பின்னணியில்தான் இப்போது கவியழகன் வருகை தருகின்றார். ‘ஏணைப்பிறை’ இவரது முதல் ஆக்கம் என்றால் எவரும் நம்பார். பலகாலமாக எழுதியவர் போல வெகு இயல்பாக தங்குதடையின்றி தனது தனித்த அடையாளங்களை கதையெங்கும் தூவி ஏணைப்பிறையை ஆக்கியுள்ளார். ஏணைப்பிறை என்கிற தலைப்பே மிக வித்தியாசமானது.

பயிற்சி முகாம் இருந்த காட்டின் நடுவே ஒரு பக்கமாக இருந்து வரிச்சுத் தடியில் (மரத்தடிகளால் செய்யப்பட்ட இருக்கை) இருந்து சுகுமாரும் எழுத்தரும் கதைப்பன மிக ஆளமான மன விசாரங்களைக் கொண்டவை. ‘இங்கிருந்து பார்க்கும்பொழுது வானத்தில் நிலா குழந்தையின் ஏணையைப் போல தெரிகின்றது. எல்லோரையும் தாலாட்ட வானம் ஏணைகட்டி வைத்திருக்கின்றது. வானத்தில் நிலவு ஏணைபோலத் தெரியுது. இதில் ஏறிப் படுத்துத் தூங்க எத்தனை பேருக்குத் தெரியும்.’ என வினா எழுப்புகின்றார்.

மிக இளைய வயதிலேயே முதிர்ச்சியான மனமொன்றை கவியழகன் பெற்றிருக்கின்றார். பிறர் அனுபவங்களை, அவர்களின் குணவில்புகளை, நடையுடை பாவனைகளை ஒரு பகுத்தாய்வு செய்யும் ஒரு பகுப்பாளனாக பயிற்சி முகாமில் இருந்த போராளிகளை, அதன் பொறுப்பாளர்களை வருணிக்கும், மெல்லிய நகைப்புடன் அவர் விபரிக்கும் பாங்கு மிக நேர்த்தியாக உள்ளது. அதேவேளை எத்தகைய பல்வேறுபட்ட பின்புலங்களிலிருந்து போராளிகள் வருகின்றனர் என்கின்ற கதையையும் வெளிவரச் செய்துவிடுகின்றார்.

kaviazhagan wrapperவனத்தின் வனப்பையும் அதன் தனிமையையும் – கத்தியால் வெட்டி எடுக்கக்கூடிய இருள் – என்றும் – காட்டின் மௌனமும் அந்த மௌனத்தின் ஒலியும், காட்டின் இருளும் அந்த இருளின் ஒளியும் – என்றும் அவர் சொற்களில் இட்டுக்கட்டும் விதம் இதுவரை காடுகள் பற்றி எழுதிய எழுத்தாளர் வரிசையிலேயே அவரையும் சேர்த்துவிடத் தூண்டுகின்றது. ஏணைப் பிறை முழுவதும் ஒரு வலி பரவிக்கிடக்கின்றது. வாழ்வின் இருண்ட பக்கங்கள், வறுமை, இல்லாமை என்கின்ற பெரும் துயர், இதற்குள் வாழத்துடிக்கும் மனிதர்கள் என வெகு யதார்த்தமான பதிவுகளின் தொகுப்பாகின்றது. மனிதத் தேடலின் ஒரு பகுதிதான் ஏணைப்பிறை. ஏணைப்பிறை முழுவதும் இழையோடும் தத்துவ விசாரங்கள் வாசிப்பாளனை பலவித கேள்விகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அந்தரத்திற்கும் உட்படுத்தி விடுகின்றன. ஏதோவொரு வகையான குற்றவுணர்வு பரவுகின்றது.

‘புற மெய்மைகளை படிமங்களாக்கி நிஜஉலகின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை வன்மையுடனும் இரத்தத்துடனும் சதையுடனும் உண்மைசொட்ட யதார்த்தமாகத் தரும்போதே ஒரு படைப்பாளியின் படைப்பாளுமை, ஆக்க ஆளுமை தெரியவரும்.’ (பேராசிரியர் சிவத்தம்பி) என்பதற்கு கவியழகன் ஏணைப்பிறையில் சான்றாகின்றார்.

130 பக்கங்கள் கொண்ட ஏணைப்பிறையில் இரண்டாம் பகுதி (கதையில் அவ்வாறில்லை) 104லில் இருந்தே தொடங்குகின்றது. அதுவே கதையின் முதன்மைப் பகுதி. முதன்மைக் கரு. ஏணைப்பிறையின் உயிரோட்டமான அக்கா எமக்கு நேரடியாக 17ஆம்ப க்கத்திலேயே அறிமுகமாக்கப்படுகின்றார். அதிலிருந்து நூல் முடியும்வரை அக்காவின் கதை வளர்த்தெடுக்கப்படும் விதம் கவியழகனின் கதை சொல்லும் திறனை வெளிப்படுத்துகின்றது. குறுந்துயரக் காவியமாக இருள் படர்ந்து, தூசு மண்டி மங்கலாகத் தெரியும் அக்காவின் மெலிந்த உயரமும் அதனுள் படர்ந்து இருக்கும் துயரமும் நிழற்படமாக மனதில் படிகின்றது. கதை முடிந்தவுடன் கனத்த இதயமே எமக்கு மிஞ்சுகின்றது. பெரும் துயர் கலந்த மௌனமே நீடிக்கின்றது. இம்மௌனத்தைச் சுரம்பிரிக்குமாறு அன்பு வாசகர்களை வேண்டுவதே எம் பணி. ஈழப்போராட்ட இலக்கியங்களுள் உறையும் சோகம், ஓர்மம், ஈகம் இவையே அறியவேண்டியவை.

கொழுந்துவிட்டெரியும் துயரக்கொந்தளிப்புக்கள், அவமதிப்புக்களிலிருந்து பிறக்கும் கடும் சீற்றம், உயரிய ஈகங்களை உயிரைத் தற்கொடையாக்கி நிகழ்த்தும் அற்புத மனநிலைகள், விடுதலைப் போரின் உயிர்ப் பக்கங்கள், துணிகரப் போரின் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இவற்றின் பிழிவாக ஈழத்தமிழிலக்கியம் இன்று தமிழ் கூறும் நல்லுகம் முன் விரிகின்றது. இன்னமும் எழுதப்படாத பல ‘உண்மை மனிதர்கள்’ கதைகள் உள்ளன. இவற்றினை அறியவும் ஆயத்தமாகுமாறு உங்களை வேண்டுகின்றோம்.

ஏணைப்பிறையின் ஒரு வரியோடு இத்தொடர்புரையை நிறைவாக்குகின்றோம். மானிட விடுதலைக்காகப் போராடும் ஆதரவளிக்கும் அனைவரையும் இக்கணத்திலே நினைவில் கொள்கின்றோம்.

நேசம் உறவுறுவதால் வருவதில்லை

அது நினைவுறுவதால் வருவது

க.வே.பாலகுமாரன்,

மணியரசன் தங்ககம்,

கிளிநொச்சி

 

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் காணப்பட்ட கலை இலக்கியப் போக்கெனப்படுவது யுத்த களச் சாதனைகளுக்கு நிகரானதாக இருக்கவில்லை என்பதே மெய் நிலையாகும். இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த படைப்பாளிகள் இவர்கள். கூட்டுப் பொறுப்பு, விசுவாசம், இராணுவ இரகசியங்களைப் பாதுகாப்பது, இறுதி வெற்றிக்காக உண்மைகளைத் தியாகம் செய்வது என்பவற்றின் அடிப்படையில் இவர்களது படைப்புகள் உண்மையின் ஒரு பகுதியைத்தான் வெளிக் கொணர்ந்தன. எனவே, அவை அவற்றுக்கேயான சுயவரையறைகளைக் கொண்டிருந்தன. வீரம், தியாகம் என்பவற்றுக்கும் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய புதிரான இடைவெளி காணப்பட்டது. அறிவுக்கும் வீரத்துக்கும் இடையிலான அபூர்வமான ஒரு சமநிலையைக் கண்டுபிடிக்க முடியாமல்போனது போலவே வீரத்துக்கும் படைப்புக்கும் இடையிலாhன ஒரு கலா பூர்வமான சமநிலையையும் கண்டுபிடிக்க முடியாது போயிற்று. இந்த இடத்தில் ஏணைப் பிறை நாவலை எடுத்துக் காட்டலாம். அதை எழுதியவர் கவியழகன். 4ஆம் கட்ட ஈழப்போரின்போது தன்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு அவர் அதை வாசிக்கக் கொடுத்தார். அதைப் பிரசுரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இடையில் நிறுத்தப்பட்டன. ஏணைப் பிறை நாவலானது அங்கிருந்து வெளிவந்த படைப்புகளிலிருந்து துலக்கமாக வேறுபட்டு நின்றது.. அதனாலேயே அது சர்ச்சைக்குரியதாக காணப்பட்டது –

- ஞானம் 100வது இதழில் நிலாந்தன்

 

http://www.eanil.com/?p=213

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நஞ்சுண்ட காடு

சயந்தன்

ஈழப்போரிலக்கியத்தில் புலிப்போராளிகளின் படைப்புக்கள்

ஈழப்போரிலக்கியங்களை ஈழத்தின் சகல இயக்கங்கள் சார்ந்தும், மூன்று பெரும்பாகத்தினுள் குறிப்பிடமுடியும்.

1. போராளிகள் , களமாடும் சமகாலத்திலேயே எழுதிய படைப்புக்கள்

2. போராட்டத்தின் நேரடிப்பங்காளர்களாக அல்லாத அதனுடைய ஆதரவாளர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்.

3. போராட்ட அமைப்புக்களிலிருந்து விலகிய பின்னர் அதிருப்தியடைந்த அல்லது அதிருப்தியடைந்த பின்னர் விலகியவர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள்,

இங்கே, நஞ்சுண்டகாடு நாவலுக்கு நெருக்கமான பரப்பாக, களத்திலாடும் போதே போராளிகளால் எழுதப்பட்ட நாவல்களை மேலும் குறுக்கி புலிப்போராளிகளால் எழுதப்பட்ட ஒருசில நாவல்கள் பற்றிய குறிப்புக்களோடு நஞ்சுண்டகாடு நாவலுக்குள் நுழைகின்றேன்.

புலிகள் இயக்கப்போராளிகளால் சிறுகதைகள், கவிதைகள் பலநூற்றுக்கணக்கில் எழுதப்பட்டிருந்தபோதும், நாவல்கள் சொற்ப அளவிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதுவதற்கான, நேரமும் பொழுதும் யுத்தத்தையே தம்முடைய பிரதான இலக்காகக் கொண்டவர்களுக்கு வாய்த்திருக்காது என்பதையும் இங்கே மனம்கொள்ள வேண்டும். அவ்வாறாக எழுதப்பட்ட சில நாவல்கள்..

1. பாலகணேசன் எழுதிய விடியலுக்கு முந்தைய மரணங்கள், 1986 இல் இது புலிகளால் வெளியிடப்பட்டது, ஈழத்தின் முதலாவது யுத்த நாவலும் கூட. கொக்கிளாய் ராணுவ முகாமினைத் தாக்கியழித்த நடவடிக்கையினை இலக்கிய அழகியலோடு இந்நாவல் பதிவுசெய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

2. மலரவனின் போருலா, 1993ல் வெளியிடப்பட்டது. இதுவும் மாங்குள ராணுவமுகாம் தகர்ப்பையும் அதில் பங்குபற்றிய போராளிகளின் அனுபவங்களையும் மனவிசாரணைகளையும் பதிவு செய்த ஒரு படைப்பு.

3. போராளியாகவிருந்த தமிழ்க்கவி எழுதிய இருள் இனி விலகும் 2004இல் வெளியானது. யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரால் கைப்பற்றபட்ட பின்னர் அங்கு அனுப்பப்படுகின்ற பிஸ்ரல் குழு என்று அறியப்படுகின்ற பெண் போராளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அவர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சிப்பாய்களை நேராகச் சந்திக்கும் தருணங்கள், சண்டைகள், அடைந்த சாவுகளென அந்தக் குரூப் மறுபடியும் வன்னிக்க மீள்வதுவரை இது பதிவு செய்துள்ளது.

4. இதைவிட மருத்துவப்போராளியாகவிருந்த தூயவன் 3 நாவல்களை எழுதியுள்ளதாக அறியமுடிகிற போதும், வேறு தகவல்களைப் பெறமுடியவில்லை.

5. இறுதியாக நஞ்சுண்டகாடு, இந்நாவல் வெளியாகின்ற இக்காலத்தில் இதனுடைய ஆசிரியர் ஒரு போராளியாக இல்லாதபோதும், எழுதப்பட்ட 2004 காலத்தில் ஒரு செயற்படுபோராளியாகவிருந்தார்.

உண்மைகளும் அனுபவங்களும் பிரச்சாரங்களும்

இங்கேயொரு கேள்வி எழுகிறது. போராட்டத்தை நடத்துகின்ற, அதனுடைய வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட ஓா அமைப்பிலிருந்து பிரச்சாரமில்லாத ஒரு படைப்புச் சாத்தியமா என்பதுதான் அது. உண்மைக்குச் சாட்சியாகவிருப்பதே இலக்கியமென்றால், யுத்தகளத்தில் உண்மை எந்தளவிற்கு அனுமதிக்கப்படும்.? அல்லது இன்னொருவிதத்தில், ஒரு பிரச்சாரமென்பது பொய்யையும் கொண்டிருக்குமென்று கருதினால், அப்படிப் பொய்யைக் கொண்டிருக்காத, அதே நேரத்தில், சில உண்மைகளையும் கொண்டிராத பிரதிகளையும் பிரச்சாரமென்று கருதவேண்டுமா என்பதெல்லாம் கேள்விகள்..இந்தப்பின்னணியிலேதான், மேற்சொன்ன நாவல்களையும் நஞ்சுண்ட காட்டையும் பார்க்க வேண்டும்.

முதலாவதாகக்குறிப்பிட்ட விடியலுக்கு முந்தைய மரணங்கள் நாவலை நான் படித்ததில்லை, ஆனால் அதுபற்றி காலம் இறுதி இதழில் மு.புஸ்பராஜன் இவ்வாறு குறிப்பிடுகிறார். – இயக்கத்தின் வெளியீடு என்பதில் பிரச்சாரம் வெறுப்பூட்டும் அளவிற்குத் தலைதுாக்கியிருக்கும் என்ற கற்பிதத்தை இக்குறுநாவல் மிறீயிருக்கிறது என்கிறார் அவர்.

என்னுடைய வாசிப்பில் நஞ்சுண்டகாடும் அவ்வாறானதுதான். இன்னமும் சொன்னால், இந்த நாவல், தாம் சார்ந்த போராட்டத்திற்கு ஒரு நியாயமுண்டு, தம்முடைய நிலைப்பாட்டிற்கு ஒரு நியாயமுண்டு என்பதைக் கூட நேரடியாகச் சொல்ல முயலவில்லை. ஆகக்குறைந்தது ஒரு மென்தீவிரத்தோடு கூடத் தொடவில்லை. மாறாக நாவலின் மாந்தர்களிடையே ஊடுபாவியிருக்கின்ற மன உணர்வுகளிடையேயும், போராட்ட வாழ்வுச் சித்தரிப்பின் பின்னாலும், தமிழர்களுடைய அரசியல் நியாயப்பாடு மௌனமாகப் பயணிக்கின்றது என்பதைத் தேர்ந்த வாசகனால் கண்டுகொள்ள முடியும்.

குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு நான் ஒன்று சொல்வதுண்டு.

ஏதேனும் ஒரு தருணத்தில் புலிகள் இயக்கம் தொடர்பாக அவர்கள் கற்பனை செய்கின்றபோது, அதன் தலைவர் பிரபாகரனைத்தான் முதலில் கருதிக்கொள்கிறார்கள். ஆதரவளிப்பதாக இருந்தாலும் சரி, எதிர்ப்பதாகவிருந்தாலும் சரி தலைமை மீதான மதிப்பீடுகளின் வழியாகத்தான் புலிகள் இயக்கத்திற்குள் இறங்குகிறார்கள். ஆனால் தொன்னூறுகளின் தொடக்கத்தில் நினைவுதெரியத் தொடங்கிய என்னுடைய தலைமுறைக்காரர்களுக்கு அப்படியல்ல.. ஒன்றாகப் படித்தவர்கள், விளையாடியவர்கள், நீச்சலடித்தவர்கள், வகுப்பறைகளில் அழி றப்பருக்காகச் சண்டைபிடித்தவர்கள், இவ்வாறான மிகச் சாதாரண மனிதர்களுக்கு ஊடாகத்தான் புலிகள் இயக்கம் அறிமுகமானது. அதாவது கீழிலிருந்து மேலாக..

முதலில் குறிப்பட்டவர்களைப் பொறுத்தவரை தலைமை மீதான பிம்பம் உடைகிற தருணமொன்று ஏற்படுகின்ற அதே கணத்திலேயே புலிகள் மீதான பிம்பமும் உடைந்துவிடும். எங்களுக்கு அப்படியல்ல.. இந்தச் சாதாரண மனிதர்களுடைய நினைவுகளும், அவர்கள் இல்லையென்ற நிதர்சனமும், அதுவேற்படுத்துகின்ற குற்ற உணர்ச்சியும், சட்டென்று வெட்டமுடியாத ஒரு ஒட்டுறவாக அந்த இயக்கம் சார்ந்து நீண்டு கொண்டேயிருக்கும்.

நான் குறிப்பிட்ட சாதாரண மனிதர்களின் கதைதான் நஞ்சுண்டகாடு.

இந்நாவலில், விசித்திரன், சுகுமார்,கோபி, வேதநாயகம், நாகேந்திரன் முதலான மனிதர்கள், மிகச்சாதாரண குடும்பங்களிலிருந்து இணைந்தவர்கள் ஒரு பயிற்சி முகாமில் ஒன்றாகிறார்கள். அவர்கள் எவ்விடத்திலும்கூட தாங்கள் இணைந்துகொண்டதற்குத் தத்துவார்த்தமானதும் புரட்சிகரமானதுமான காரணங்களைச் சொல்லவில்லை.

காதலிலும் தோற்று வெளிநாடு செல்லவும் இயலாமல் போதைக்கு அடிமையான இந்நாவலின் பாத்திரமொன்று “ என்ர கெட்ட பழக்கங்களை விட எனக்கு விருப்பம் இருந்தாலும் விட ஏலாமல் தவிச்சன். இயக்கத்துக்குப் போனா அதுகளை எப்படியும் விட்டிடுவன். என்னில் எனக்கிருக்கிற வெறுப்பாவது இல்லாமல் போகும். வெளிக்கிட்டு வந்திட்டன்.” என்று சொல்கிறான்.

இன்னுமொருவன், எல்லா வீரமரண ‘உடல்களும்’யும் கோப்பாயில் அடக்கம் செய்ய எங்கட ரோட்டாலதான் போகுது. பெடிபொட்டையள், கிழவிகூட கொண்டுபோய்ப் பூப்போடுகிறார்கள். ஒரு நாளைக்கு அஞ்சுதடவையும் போகும். ஒவ்வொருக்காலும் நானும் பூக்கொண்டுபோய் போட்டுட்டுவந்து சாப்பிடச் சொல்லுறியே? அப்படிச் சாப்பிடேலாமல் தான் வந்தனான்” என்கின்றான்.

பல்கலைக்கழகத்திலிருந்து போனவனுடைய காரணம் வேறு. “கஷ்டப்பட்டுப் படிச்சன். எஞ்சினியரிங்க் கிடைக்கல. physical சயன்ஸ்தான் கிடைச்சுது. ரெண்டாம் வருசத்தோட கம்பசில படிச்சு வாழ்க்கையில் புதுசா ஒண்டும் பண்ணேலாதெண்டு தெரிஞ்சிட்டுது. அதைவிட இயக்கம் இன்ரலீயண்டாயும் மதிநுட்பமாயும் அக்ரிவாயும் செயல்முனைப்பாயும் இருக்கிறதாப் பட்டிது. இதுதான் சரியான இடமெண்டு வெளிக்கிட்டு வந்திட்டன்”

இந்த நாவலில் கதைசொல்லி விவரிக்கின்ற சுகுமார் என்ற பாத்திரம், மிகுந்த சிந்தனைத் தெளிவு மிக்கது. வறுமையான குடும்பத்திலிருந்து பாசமான அக்காவையும், முகிழ்த்த சிறு காதலையும் துறந்து அவன் இயக்கத்தில் இணைந்து கொள்கின்றான்.

அவனுடைய உரையாடல்கள், மனித மனங்களையும், வறுமையையும், ஏழை பணக்காரனென்ற வர்க்க வேறுபாடுகளையும், குடும்ப உறவுகளையும் விசாரணை செய்கின்றன. உதாரணமாக, வேதக்குடும்பத்தில பிறந்தா வேதச் சமயம், சைவக்குடும்பத்தில பிறந்தா சைவச் சமயம், எண்டமாதிரி கஸ்ரப்பட்டவன் குடும்பத்தில பிறந்தா கஸ்ரப்பட்டவன்தானே.. என்பதுவும், சிவனும், தேவியும் உலகத்தைச் சுத்தி வந்தாத்தான் மாம்பழமெண்டு சொன்னவை, அவையளுக்குத் தெரியும் ஒருத்தராலயும் சுத்தேலாதெண்டு, பின்னை தாங்கள் தின்னத்தானே அப்படிச் சொன்னவை, என்பதுவும், மனிதன் ஒரு மதிப்புத்தின்னி, அவன் உருவாக்கிய கடவுள்கதைகளும் அப்படித்தானிருக்கும் என்று சொல்லுவதும், சொந்தபந்தமெல்லாம் வாழ்க்கையில் ஒரு போலி, ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலி என்பதுவுமான கூர்மையான உரையாடல்களை அவன் நிகழ்த்துகிறான்.

இவ்வாறு மனித விசித்திரங்கள் ஒன்றிணைந்து போராளிகளாக மாறும் காலகட்டத்தில் ஏற்படுகின்ற உளச்சிக்கல்களை வெளிச்சொல்வது நாவலின் இன்னொரு பரிணாமம்..

அவர்கள் தமக்குள் மோதுப்படுகிறார்கள், பொறுப்பாளரிடம் காட்டிக்கொடுக்கிறார்கள், காட்டிக்கொடுத்தவனையும் காட்டிக்கொடுக்கிறார்கள். (இப்படிக்காட்டிக்கொடுக்கிற சந்தர்ப்ப உரையாடல்கள் எனக்குச் சுவாரஷியமாயிருந்தன. இவர் மாஸ்ரர்… அங்க மாஸ்ரர்…ஓம் மாஸ்ரர்..செய்தவர் மாஸ்ரர் ..” என்றோ அல்லது “ஓமண்ணை..அவரண்ணை..அதுவண்ணை..அப்பவும் சொன்னான் அண்ணை” இந்த உரையாடல்கள் எனக்க ஓம் ரீச்சர், இவர் ரிச்சர், என்றமாதிரித் தோன்றுகிறது) பட்டப்பெயர்கள் சூட்டுகிறார்கள், ஒருவரையொருவர் ஒதுக்கி வைக்கிறார்கள், பிறகு ஒன்றாகச் சேர்கிறார்கள், வருத்தக்காரனில் பரிவு கொள்கிறார்கள், அவனைத் தூக்கிக்கொண்டு கழிவறைக்குச் செல்கிறார்கள்.. இவற்றைப் படிக்கின்றபோது ஓர் இராணுவ இயக்கமென்ற தரிசனம் மனதில் தோன்றவில்லை. மாறாக நெருக்கமான நண்பர் குழாமொன்றினையொத்த உணர்வு ஏற்படுகிறது. அதிலொரு உண்மையும் இருக்கிறது.

போராளியாக்குகின்ற நடைமுறை விவரிப்புக்கள்

உடலை வருத்துகின்ற பயிற்சியும், பயிற்சியிலிருந்து தப்புவதற்காக பொய்யாக மயங்கும் போராளிக்கு முதுகில் விளாசும் பொறுப்பாளரும், பயிற்சிக்குக் கள்ளமொளிக்க, நல்லெண்ணையைக் குடித்து வயிற்றாலடிக்கச் செய்வதும், புண்ணில் புழுப்பிடித்து மணப்பதுவும், காய்ச்சலடிப்பதுவும், கால்வீங்குவதும், துப்பாக்கிக்குரிய மரியாதையை கொட்டான் என்ற பொல்லுக்கு வழங்குவதும், தவறும்பட்சத்தில் தண்டனை பெறுவதும், நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் பொறுப்பாளர்களின் அதிகாரம் பற்றிப்பேசவேண்டும். நாவல் வாசிப்பில், பொறுப்பாளர்கள் தங்களுடைய அதிகாரங்களை மிகக் கடுமையாகப் பிரயோகிப்பதான, தோற்றப்பாடு இயல்பாக ஏற்படுகிறது. எனக்கு நம் சமூகத்தின், இயல்பான ஆசிரியர் மாணவர் உறவும், அதிலிருக்கின்ற வன்முறைப் பிரயோகங்களும், அதிகாரமுமே நினைவுக்கு வருகின்றன. இது இந்தச் சமூகத்திலிருந்து எழுந்த இயக்கமென்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்கின்றேன்.

இதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.

குறிப்பாக இங்கேதான் போராளிகளுக்கும் மேல்மட்டத்தினருக்கும் அதிகாரங்கள் உருவாகின்றன என்று முகப்புத்தகத்தில் யமுனா குறிப்பிட்டதாக நினைவு. இதனைத் தனிப்பரப்பாகவும் உரையாடலாம். ஆனால் தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைக்காத போராளியைத் திட்டும்போது அந்த அதிகாரத்திலிருக்கிற கரிசனையையும் எவ்வாறு புரிந்துகொள்வதென்பதுவும் ஒரு கேள்வியல்லவா..

இவ்வாறு போர்ப்பயிற்சியின் கடினமும், அந்த வலியும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்ற பின்னணியில்தான் இந்த நாவல் வெளியாவது இரண்டுமுறை புலிகளால் நிறுத்திவைக்கப்பட்ட செய்தியையும் நாம் பார்க்க வேண்டும்.

புலிப்போராளியால் எழுதப்பட்டு, க.வே பாலகுமாரனால் முன்னுரை வழங்கப்பட்டு, அச்சுக்குத் தயாரான நேரத்தில், 2 தடவைகள் தடையுத்தரவுகள் கிடைத்ததாக நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போராட்ட வாழ்வென்பது எவ்வளவு வலி மிகுந்தது என்பதையும், பயிற்சியின் கடினத்தையும் இந்நாவல் விரிவாகப் பதிவுசெய்வதானது ஆட்சேர்ப்பைப் பாதிக்கக்கூடுமென்று கருதியிருக்கலாம்.

இன்றைக்கு ஈழப் போரைக் குறித்த இலக்கியங்கள், பெரும்பாலும், ஈழப்போர் பயணித்த பாதை பற்றியும், அதனுடைய தடம்புரள்வையும், விமர்சனத்தோடும், சிலநேரங்களில் வன்மமும் வெறுப்பும் நொதிக்க நொதிக்கவும், வெளியாகிக்கொண்டிருக்கற இக்காலச் சூழலில் அந்தப்போராட்டத்தின் பங்காளர்களாகிய சாதாரண மனிதர்களின் கதையை, தூயதும், கொச்சைப்படுத்தமுடியாததுமான தியாகத்தை, அவர்களுடைய பேரன்பையும் மானுடத்தையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய ஆன்மாவை, இந்நாவல் ரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது.

எல்லோர் முதுகிலும் விழுந்த ஈழயுத்தம் என்ற பிரம்படியை, வாய்ப்புக்களாக மாற்றும் தந்திரமும், விச்சுழித்தனமும் இல்லாத இந்த உண்மை மனிதர்களின் கதையைப் படித்து முடிகின்ற போது, குற்ற உணர்ச்சி நம்மைக் கவ்விக்கொள்கிறது.

(லண்டனில் 30 ஓகஸ்ற் 2014 நடந்த அரசியல் நாவல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

http://sayanthan.com/?p=1051

Link to comment
Share on other sites

சயந்தன் தங்கள் விமர்சனம் நஞ்சுண்டகாடு பற்றியதாக அமையாமல் போராட்டகால எழுத்துக்களையும் தொட்டுச் சென்றுள்ளது. கவியழகன் அவர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்க ஒரு மனிதன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவர் மக்களுடன் கூட பணிபுரிந்த போராளி. எனது மதிப்புக்கு உரியவர்களில் இவரும் ஒருவர். 
 
ஒரு கட்டத்தில் போராடுதலே சரியென்று போராடப்போய் பின் அதிலிருந்து பட்டறிந்த பட்டறிவு சில கசப்புகளை வெறுப்புகளை பலருக்கு கொடுத்தது அனுபவம். அத்தகைய கசப்பு இந்தப்படைப்பாளிக்கும் நேர்ந்தது துயரம்தான்.
 
விடியலுக்கு முந்திய மரணங்கள் 90களின் தொடக்கத்தில் வாசித்திருக்கிறேன். பலநாட்கள் அந்த நூலோடு வாழ்ந்திருக்கிறேன். காரணம் அந்த நூல் வெளியாகிய காலத்தில் வாழ்ந்த பலரை அந்த நூல் கண்முன் கொண்டு வந்து வாழவைத்தது. 
 
அதுபோல போருலா , மற்றும் தூயவனின் யுத்தகாண்டம் நாவல் கூட மருத்துவப்போராளிகளின் பணி உட்பட ஒவ்வொரு போராளியின் மன அந்தரம் யாவும் பதிவு செய்யப்பட்ட நாவல். கதைக்களமானது 1997 ஜெயசிக்குறு சமரில் ஆரம்பித்து அச்சமிரிலேயே கதையும் முடிகிறது. அந்தக்கதையை படித்த பிறகு ஏ9வீதியால் பயணித்து போது யுத்தகாண்டம் நாவலே கண்ணில் நின்றது.
 
2002இன் பின்னர் பயிற்சிப் பாசறைகளில் அதி கடுமையான தண்டனைகள் இல்லாமலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டது.போர்ப்பயிற்சியும் அதன் கடுமையும் உலகில் மென்மையானதல்ல.
 
புலிகளால் வெளியிட 2முறை தடையிடலுக்கான காரணம்  ஆட்சேர்ப்புக்கு இந்த நூல் தடையாகியிருக்குமென்பதெல்லாம்  தங்கள் கற்பனைக்கு ஏற்ற வகையில் விரிக்கப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • 2 months later...

இயக்குனர் ராம் நஞ்சுண்டகாடு நூல் பற்றி இயக்குனர் ராம் கருத்தும் ,கதையில் சிலபக்கங்களும் :-
Director Ram

படித்ததில் பிடித்தது – 08.

”நஞ்சுண்டகாடு”

குணா கவியழகன்.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று.

எது தீவிரவாதம்? யார் தீவிரவாதி? எது போர்?

எது விடுதலை? எது தியாகம்? என

எல்லோரும் அவர் அவர் வீட்டிலிருந்து

அவர் அவர் வசதிக்கேற்ப பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஒருவேளை இந்நாவல் மேற்கண்ட கேள்விகளுக்கான

பதிலை உங்களுக்குத் தரலாம் நீங்கள்

கேட்பதற்குத் தயாராக இருந்தால்.

பிரியங்களுடன்

ராம்..

"நஞ்சுண்டகாடு"

குணா கவியழகன்.

வெளியீடு : அகல்

தொடர்புக்கு: agalpathipagam@gmail.com

09884322398

நாவலில் இருந்து சில பக்கங்கள்...

சுத்திவிட்டு மீண்டும் வந்து வரிச்சுக் கதிரையில் இருந்தம். அவன்தான் தொடங்கினான்.

”நாந்தான் சொன்னேனே என்ர குடும்பம் கஸ்ரப்பட்ட குடும்பந்தானெண்டு…” அவன் கதைக்க விரும்பினான் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், எங்களுடைய காவற்கடமை முடிய இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. அதோட அவன் இன்னும் நித்திரையே கொள்ளேல்ல. ஆனாலும் அவன் இப்ப நித்திரையைவிட என்னோட மனம் விட்டுக் கதைக்க விரும்பிறான் என்பதை விளங்கினேன். அதைக் குழப்ப வேண்டாமே என்று பேசாமல் இருந்தேன்.

”…அப்பாக்கு இன்ன வேலையெண்டு இல்லை. கூலிவேலைக்குப் போவார். சுறுட்டுசுத்தப் போவார். மனிசன் குடியும். ஊரில செத்தவீடெண்டால் பட்டினத்தார் பாட்டுபடிக்க இவரைத்தான் கூப்பிடுகிறது. இப்ப அவருக்கு ஏலாது. பாரிசவாதத்தில கால் இழுத்திட்டுது. மூத்தது அக்கா. மற்றது அண்ணா. இரண்டு தம்பி சின்னாக்கள். அண்ணை பொறுப்பில்லாதவன். ஊர் சுத்துறதுதான் தொழில். நான் படிச்சுக்கொண்டிருந்தன். அம்மா சந்தையில காய்கறி வித்தா. கொஞ்ச வருமானம். சாப்பிடறதே பெரும்பாடு. அதில படிக்கிறதென்னெண்டு. நான் பின்நேரத்தில சைக்கிள் கடையில உதவிக்கு நிண்டன். வகுப்பில பத்துக்கும் இருவதுக்கும் இடையில வருவன். அதுக்கு மேல வர ஏலாது. பணமில்லை. ரீயூசனில்லை. பணமில்லை. அதால வீட்ட படிக்கவும் மனமில்லை. பணமில்லாததால் படிப்பு ஒரு பிரச்சினையாயுமில்லை. வீட்டில அதவிடப் பெரிய பிரச்சினைகள் முக்கியமானதாக இருந்திது..”

”பள்ளிகூடத்துக்குப் போறது குறைஞ்சிது. பிறகு பரீட்சைக்குப் போகாமல் விட்டன். இடைக்கிடை மட்டும் போனதில படிப்பு மண்டையில ஏறயில்லை. அதால போறநேரங்களிலயும் ஒதுங்கியிருக்க வேண்டியிருந்திது. வெக்காமாயிருந்திது. இந்த அவஸ்த்தை வேண்டாமெண்டு ஒரேயடியா நிண்டுட்டன். நானுழைத்தால் தம்பியாக்களாவது படிக்கலாம். நானும் படிச்சால் ஒருத்தரும் படிக்கேலாது எண்டு அனுபவத்தில பட்டுது. பிறகு முழுநேரம் சைக்கிள்கடைதான். முதல் கொஞ்ச நாள் என்னோட படிச்ச பெட்டையளே காலமை பள்ளிக்கூடம் போகேக்க சைக்கிளுக்கு காத்தடிக்க. ஒட்ட எண்டு வர நெஞ்சுக்க வலியாயிருந்திது. வெக்கமாயிருந்திது. பிறகு அதை பகிடிவிட்டு பம்பலாக்கி எனக்கு நானே பழக்கப்படுத்திக்கொண்டன். முதல்ல அப்படி நடிச்சன். பிறகு அதுவே இயல்பாயிற்று…

”நாலு பெடியளுக்கு ஒரேயொரு பொம்பிளைச் சகோதரம் அக்கா. அதால அக்காவிலதான் பாசம். அவளுக்கும் என்னில பாசம்தான். சைக்கிள் கடைக்காரன் தொடக்கத்தில முப்பதுரூபா தருவார். சொந்தமா உழச்சதில அதே பெரிய காசாதான் இருந்திது. தம்பியாக்களுக்கு கொப்பி பென்சில் எண்டு எதிலும் குறைவிடுறதில்லை. அம்மாட்டக் காசைக் குடுப்பன். கொஞ்சநஞ்சம் வாற சில்லறைக் காசை அக்காட்ட உண்டியலுக்க போடக் குடுப்பன். அதுக்கு உண்டியலுக்குப் போட காசு கொடுத்தா படு புழுகம். அது ஆறாம் வகுப்போட படிப்பைவிட்டுட்டு. அம்மா சந்தைக்குபோறதால சமையல் வீட்டலுவல் எல்லாம் அக்காதான். அக்கா கோழி வளத்திது. முட்டை விக்கும். எனக்கும் இரகசியம்மா அவிச்சுத்தரும். சிலவேளை அதை நான் இரகசியமா தம்பியாக்களுக்குப் பாதிப்பாதி குடுப்பன். என்ர உழைப்புப் பெரிய உழைப்பில்லை. ஆனாலும் இப்ப குடும்பத்தில மதியானச் சாப்பாடு, இரவுச்சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. காலமையில தம்பியாக்களுக்கு ஒவ்வொரு சங்கிலி பணிஸ் அக்கா குடுக்கும். ஆடு வளத்தம். ஆட்டுப்பாலில ஒரு தேத்தண்ணி. அதுதான் மற்றாக்களுக்குச் சாப்பாடு. பழசு ஏதாவது மிஞ்சியிருந்தால் அத குழைச்சு ஒரு திரணை தின்னுவம்.

”அக்காக்கு உண்டியலில காசு போடுறது ஒரு புழுகம். எனக்கு அதுகின்ர புழுகத்தப் பாக்கிறதில ஒரு புழுகம். சில்லறை குடுக்கிற நேரத்திலயெல்லாம் நினைப்பன்: தாள்க் காசா நூறு ஆயிரமா குடுக்கவேணுமெண்டு. இப்போதைக்கு இரண்டும் அஞ்சும்தான் குடுத்தன். உண்டியல் காசை அக்கா என்ன செய்யும்? இப்படி அடிக்கடி நான் நினைப்பன். ஆனாலும், எனக்குத் தெரியும்: அது ஒண்டில் எங்கட அம்மன் கோவில் திருவிழாவுக்காக. இல்லாட்டி தைப்பொங்கல் அண்டைக்கு வாற மருதடிபிள்ளையார் கோவில் தேருக்காக எண்டு. இந்த இரண்டும்தான் அக்கா புழுகமா எடுபடுற கொண்டாட்டம். அக்கா எடுப்பா வெளிக்கிடுற நாட்களும் இவை தான். எடுப்பென்றால் சும்மா இலேசுப்பட்ட எடுப்பில்லை. எக்கச் சக்கமான எடுப்பு. அக்கா வீட்டவிட்டு வெளியில வெளிக்கிடுற நாட்களும் அம்மன்கோவில் திருவிழாவும் மற்றது மருதடித்தேரும்தான். அக்காவைப் பொறுத்தவரை வெளியுலகமெண்டா அநேகமா இந்த இரண்டும்தான். இல்லாட்டிக்கு, அருமை பெருமையா எப்பையாவது இருந்திட்டு மானிப்பாய் ஆஸ்பித்திரிக்கு. இதவிட வெளியுலகம் இருந்ததா இல்லை. இதால இந்தத் திருவிழாவுக்கு வெளிக்கிடுறதெண்டால் வீட்டுல அக்காவின்ர அமளிதுமளி பெரிய திருவிழா…

”மூன்றுநாலு சட்டைகளைக் கொண்டுவந்து அம்மாட்டை ஒரு நூறுதரம், என்னட்ட ஒரு இருநூறுதரம், போகிறபோக்கில் தம்பியாக்களிட்டயும் ‘எப்படியடா இருக்கு’ எண்டு பத்துத்தரம், இப்படி ஆளைவிடாது. அதுக்கு நல்லாயிருக்கு சொல்லுறதிலேயே எனக்கு விசர் வந்திடும். நான் நல்லாயிருக்கெண்டு சொன்னால் பத்தியப்படாது. இது நல்லாயில்லையோ எண்டுசொல்லி இன்னொண்டைப் போய்ப்போட்டுக்காட்டும். பிறகு அம்மாட்டப் போய்க் காட்டும். அம்மா வேறொண்டை நல்லாயிருக்கொண்டு சொல்லுவா. ‘உனக்கொண்டும் விளங்காதணை இது பெரிசா இப்ப ஸ்ரைல் இல்லை. சனங்கள் போடுறதில்லை’ எண்டு சொல்லும். அம்மா புறுபுறுப்பா; ‘பின்னையேன் அதைப்போட்டுக்காட்டுற’ எண்டு. அக்காவால தெரிவுசெய்ய முடியிறதில்லை. நான் சொல்லுவன். ‘சாமி சுத்தி முடியப்போகுது; உன்ர சாத்துப்படி இன்னும் முடியேல; சனங்கள் வீட்ட போகப் போகுதடி; ஐயர் போக முன்னமாவது போ’ எண்டு. அது நேரத்தப் பார்த்துப்பார்த்து ஓடித்திரியும்.

”பிறகு நகைபோடுற பிரச்சினை. அது அவ்வளவு மோசமா இருக்காது. பிறகு செருப்பு, ‘கோயிலுக்குப் போறாய் பிறகேன் செருப்பு’ எண்டு நான் கிண்டுவன். அது கேளாது. ‘விசரே கோயில்வரைக்கும் செருப்புப்போடாம றோட்டால போறதே’ எண்டு அது என்னைப் பேசும். அதுக்கு றோட்டு எண்டதே ஒரு வைபவம்தான். செருப்புப் போடாட்டி தன்ர வடிவில ஒரு பெரிய விழுக்காடு குறைஞ்சுபோகும் எண்டதுதான் உண்மையான நோக்கம். இப்படி பெரிய ரகளை பண்ணும் அக்கா. ஆனாடா, நகைநட்டு, சட்டை, செருப்பு இருக்குதே இதெல்லாம் ஆற்றையெண்டு நினைக்கிறாய்….”

அவன்ர குரல் தணிந்தது. தழுதழுத்தது. கதைசொல்லிவந்த வேகமும் உற்சாகமும் இந்த இடத்தில நின்றுபோச்சு. எனக்கு மனதைப் பிசைந்தது. இருட்டில அவனது முகம் சரியாத் தெரியேல்லை. நிலவு மரக்கிளைகளுக்கிடையே ஆங்காங்கே விழுந்தது. ஆனாலும், அவன் அழுகிறான் என்று எனக்குத் தெரிந்தது. எனக்கும் தொண்டை கட்டுவதுபோல இருந்தது. நான் திரும்பிப் பார்த்தபடி மெளனமாயிருந்தேன். அவன் விறைப்பாய் மற்றப் பக்கம் திரும்பி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பாதியில் உட்குழிந்திருந்த நிலவு வானத்தில் வெறும் சட்டியாய் மரக்கிளைகளுக்கிடையே தெரியாமற் தெரிந்தது.

”அந்தச் சட்டைகளெல்லாம் அக்கா அக்கம்பக்கத்தில வாங்கினதுதான்… நகைநட்டும் அப்பிடித்தான்… செருப்பும்கூட அப்பிடித்தான்ரா….”

அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடயிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.

”…அக்காட்ட நல்லதெண்டு இருந்தது. நாலஞ்சு வருசத்துக்கு முன்னம் வாங்கின ஒரு றோஸ்கலர் சட்டைதான். சுருக்கு வைச்ச பொம்மலான சட்டை. அப்பயெல்லாம் அதைதான் அடிக்கடி போட்டா. இப்ப இதை, வேறு அக்கம்பக்கத்துப் பெட்டையள் வந்து எடுத்துக்கொண்டு போயினம். அக்காக்கு இதில ஆர்வமில்லை. பக்கத்து வீட்டுப் பெட்டையளிட்ட வாங்கிவாற சட்டையளில கடைசியா ஒண்டைபோடும். நகைநட்டும் அப்படித்தான். நகையளப் பொறுத்தவரைக்கும் மாறுறது பெரிய கஸ்ரம்தான். செத்தவீடு, குழந்தை பிறந்ததெண்டு ஆரும் துடக்குக்கார வீடுகளிருந்தா வாச்சுப்போயிடும். அவையள் கோயிலுக்குப் போகாயினம்தானே. அக்கா அவையிட்ட ஒரு கிழமைக்கு முன்னமே சொல்லிவைச்சுடும். இதைவிட சில அதிஸ்ரமும் அக்காவுக்கு அடிக்கும். பொம்பிளையளுக்கு மாதத் துடக்கு இருக்குதானே. அப்படி ஏதும் அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு வந்துட்டா அதுக்களின்ர காற்சங்கலியையோ தோட்டக்காப்பையோ வாங்கிப்போடும். அம்மாட்ட ஒரு பவுண் சங்கிலி இருந்திது. அதிலதான் தாலியக் கோத்து வைச்சிருந்தா. காலையில அக்கா அதை வாங்கிக்கொண்டு கோயிலுக்குப் போய்வரப் பிறகு அம்மா அதைப் போட்டுக்கொண்டு போய்வருவா….

”நான் இந்த உண்டியல் காசில, அக்கா திருவிழாவுக்கு சட்டை வாங்குமென்று நினைச்சுத்தான் இருந்தனான். ஒருநாள் தூக்கிக்கிலிக்கிப் பாத்தன். பாரமாத்தான் இருந்திது. ஆனால், காணுமோ தெரியேல எண்டுட்டு அம்மன் கொயில் திருவிழாவும் கிட்ட வரவும் அடிக்கடி சில்லறையள் கொண்டந்து குடுத்தன். ஆனால், கடைசியில என்ன நடந்திது…

”இந்த உண்டியல் காசில, அக்கா திருவிழாவுக்கு ஒரு கிழமை முந்தி அம்மாவோட சந்தைக்குப்போய் உடைச்ச உண்டியல் காசில எனக்கொரு சாறமும் சேட்டும் வேண்டிக்கொண்டந்திது. அம்மா மாறிச்சவாவாம். ‘ஏன்ரி உனக்கொரு சட்டையெடன்’ எண்டு. அக்கா மாட்டன் எண்டுட்டாளாம். ‘தம்பிக்குச் சாறமில்லை. இருந்த சாறத்தை சைக்கிள் கடைக்குக் கட்டி ஒயிலும் கிறீசும் பிரண்டு போச்சு. சேட்டும் பள்ளிக்கூட வெள்ளைச் சேட்டுத்தானே வைச்சிருந்தவன். இப்ப அதைப் போடேலுமே. கோயிலுக்கு அவன் என்னத்தைக் கொண்டு போறது?’ எண்டு சொல்ல, அம்மா சும்மா இருந்திட்டாவாம்….

“மூத்தவனுக்கெடுக்கேல்ல இவுனுக்கு மட்டும் எடுக்கிறாய் அவன் என்ன நினைப்பான் ?” எண்டு அம்மா பேசியிருக்கிறா. ‘அவனுக்கு ஏதோ உடுக்க இருக்குத்தானே. இல்லாமல் இருக்கிறானே.’ அக்கா கேட்டிருக்கு. எண்டாலும் அம்மாவுக்கு மனம் பொறுக்கேல்ல. தான் கொஞ்சநஞ்சம் பதுக்கி வைத்திருந்த காசில அண்ணைக்கும் ஒரு சாறம் எடுத்தா. பேய் மனிசி, அந்தக் காசில அக்காக்கொரு சட்டையெடுத்திருக்கலாம்; யோசிக்கேல்ல. அம்மாக்களுக்கு ஆம்பிளைப்பிளையளிலதானே கவனம். அதோட, எனக்கு எடுக்கேக்க அவனுக்கெடுக்காமல் இருக்க அம்மாக்கு மனசு வரேல்ல எண்டு நினைக்கிறன்…

“அக்கா அண்டிரவு நான் வர ‘தம்பி இஞ்ச வாவன் இதப்பாரன்’ எண்டுச்சிது. போய்ப் பாத்தா சாறம், சேட்டை வைச்சுக்கொண்டிருக்கு. ‘உனக்குப் பிடிச்சிருக்கோ சொல்லு’ எண்டுச்சுது ‘ எங்கத்தயான்”’ எண்டு கேட்டன். அது தன்ரை காசில வாங்கினான் எண்டு சொல்லுச்சு. எனக்கு முழுக்க விளங்கீற்று. உண்டியல் உடைச்சாச்சு. எனக்கு உடன கோவம்தான் வந்திது. அதின்ர முகத்தைப்பாக்க பேச மனம் வரேல்லை. அது வலுபுழுக்கத்தில இருந்திது. தான் முதன்முதலா தன்ர காசில தம்பிக்கு உடுப்பெடித்துக் குடுத்திட்டன் எண்ட புழுகம் அதுக்கு: பார், ஒரு தம்பியாக இருந்தும் உழைச்சுக்கூட அக்காக்கு முதல்ல என்னால ஒரு சட்டையெடுத்துக் குடுக்கேலாமல் போச்சு, ஆனால் அக்கா உடுப்பெடுத்துத் தந்திட்டுது. நான் ‘நல்லாருக்கு. நீலக்கலர் சேர்ந்தது எனக்குப் பிடிக்குமெண் உனக்கென்னண்டு தெரியும்?’ எண்டன் ‘எனக்குத் தெரியாதே தம்பிக்கு எது பிடுக்கும் பிடிக்காதெண்டு?’ சொல்லிச்சு. உண்மையா அதுகின்ர தெரிவை மெச்சுறதாக ஒரு ஒப்புக்குத்தான் நான் அப்பிடிச் சொன்னனான். அது மனநோகுமெல்லே…

”தம்பியாக்கள் அழத்தொடங்கிற்றாங்கள்: தங்களுக்கு உடுப்பெடுக்கேல்லயெண்டு. இது பெரிய பிரச்சினையாப் போச்சு. எனக்கு மனம் பொறுக்கேல்ல. நான் நுற்றியம்பது ரூபா கடன் வாங்கிக்கொண்டுவந்து அம்மாட்டக் குடுத்தன்: தம்பியாக்களுக்கு உடுப்பெடுத்துக் குடணையேண்டு. வெள்ளைச்சேட்டும் நீலக்காற்சட்டையும் ரண்டு பேருக்கும் எடுத்தா. காணாத மிச்சக் காசுக்கு சந்தைக்காரனிட்ட கடன் சொன்னா. பள்ளிக்கூட உடுப்புண்டால் அவங்கள் எல்லாத்துக்கும் போடுவாங்கள். அவங்களுக்கு அதப்பற்றிக் கவலையில்லை. கலர் உடுப்பெண்டா பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக்கொண்டு போய்க் காட்டேலாதெல்லோ?

“திருவிழா வந்திது. எல்லாருக்கும் உடுப்பிருக்கு, அக்காக்கில்லை ஆனாலும்,அக்கா தன்ர வழமையான முறையில உடுப்புப் போட்டுக்கொண்டு போச்சுது. எனக்கு அதைப்பாக்க வேதனையா இருந்துச்சு. நான் அந்து முறை பெரிசா கொயிலுக்குப் போகேல்ல. மற்றப்படியெண்டா முழுநேரமும் கோயில்தான். இதுக்குப்பிறகுதான் நான். ஒரு முடிவெடுத்தன் : சயிக்கிள் கடையைவிட வேறையொரு வேலையும் தேடவேணுமெண்டு.

“வேலை தெடித்திரிஞ்சு களைச்சுபோனன். ஒண்டும் சரியாவரேல்ல. இந்த வேலையையும் விடேலாது. வேறயொண்டையும் பாக்கோணும். ஒண்டுமே சரிப்பட்டு வரேல்ல. கடைசியில ஒண்டைக் கண்டுபிடிச்சன். தோட்டங்களில இருந்து காலைல சந்தைக்கு மரக்கறி கட்டினன். அம்மாவோட சந்தக்குப் போனதால கொஞ்சம் சந்தையப்பற்றி பழ்க்கமிருந்திது. காய்கறிகளை சந்தைக்குக் கொண்டு போகேலாத தோட்டக்காரரைத் தேடிக்கண்டுபிடிச்சு அவையிற்றயிருந்து சந்தைக்கு மரக்கறி கட்டினன். சின்னதாச் செய்தாலும் கொஞ்ச நேர வேலைதானே. இருவது, முப்பது சிலவேளை நாப்பது ரூபா தேறும். கொஞ்ச நாளையில சந்தையின்ர நீக்குப்போக்குகள அறிஞ்சிட்டன். தொழில் பிடிபட்டுது. தொடக்கத்தில் சிலதடவை நடந்தமாதிரி பிறகு கையில பொறுக்கிறேல்ல.”

சொல்லிவிட்டு கொஞ்சநேரம் அமைதியாக இருந்தான்.

“என்னாடா நான் கதைச்சுக்கொண்டேயிருக்கிறன் உனக்கு விசரா இருக்கா?”

“ச்சீ… ச்சீ… அப்படியொண்டுமில்லை.” நீணட நேரம் உருறைந்திருந்த எனக்கு வாய்திறக்க ஏனோ தாடை வலித்தது.

”சென்றி முடிஞ்சிருக்குமே,என்ன நேரம்?” என்றான்.

“சென்றி முடிஞ்சிருக்கும். வா போய் நேரத்தைப் பாத்துக்கொண்டு வருவம்.”

**************************************************************

அன்றிரவு எனக்கும் சுகுமாருக்கும் ஒன்று பதினைந்துக்கு மணிக்குச் சென்றி. எழும்பி வெளியிலே வந்ததும் சொன்னான். “வா ஒருமுறை சுத்திப்போட்டு வந்து இருப்பம். உனக்கு மிச்சக்கதை சொல்லவேணும்.” அவன் உற்சாகமாக இருந்தான்.

காட்டைச்சுற்றி நடந்துகொண்டிருந்தம். “ஏன்ரா குடும்பத்தில கஸ்டம் வந்து அப்பாவுக்கும் ஏலாமல் போனபிறகு சொந்தக்காரர் ஒருத்தரும் உதவி செய்ய முன்வரேல்லையே?” நான்தான் கேட்டேன்.

“கண்ணதாசன்ர பாட்டொண்டு இருக்கடா, ‘பானையில சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா, பானையில சோறு இல்லை சொந்தமில்லை பந்தமுமில்லை’ எண்டு. மடி நிறைஞ்சாத்தான் சொந்தமும் பந்தமும். நீ பாக்கேல்லையே வேதநாயகம் சொன்னானே. அவன்ரை அம்மாவே தன்ர தம்பியைக் கை விட்டதை. சொந்தம் பந்தம் எல்லாம் இப்படித்தான். வாழ்க்கையில அது ஒரு போலி. ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான போலியாகவும் அது இருக்கு.”

அவன் தன் அனுபவத்தை வார்த்தைகளாகக் கிள்ளித்தெளித்தான். வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. பேசாமல் நடந்தேன். இந்த புதிய வாழ்க்கையில் போர் தவிர்ந்த எத்தனை விசித்திரங்களை நான் இன்னும் அறியவும் காணவும் கூடுமோ என்று எண்ணினேன். இப்படியெல்லாம் அனுபவங்கள் வந்து சேருமென்று நான் எண்ணியிருக்கவில்லை.

சுத்திவிட்டு வந்து அதே வரிச்சுக் கதிரையில் இருவரும் இருந்தோம். அவன் வெறுச்சுப் பார்த்தான். அந்த பார்வையில் காட்டின் எந்தப்பகுதியும் தெரியாதென்று எனக்குத் தெரிந்தது. அவனுடைய வாழ்க்கையையே அவன் பார்த்தான். பார்த்தைப் பிறகவன் எனக்குச் சொன்னான்.

“நேற்றுச்சொன்னனே சந்தையில மரக்கறி கட்டத் தொடங்கினனெண்டு ஞாபகம் வைச்சிருக்கிறியோ?”

“ம்…ம்…ம்… “

“சந்தையில மரக்கறி கட்டத்தொடங்கினது ஏனெண்டு சொன்னா அக்காக்குச் சட்டை வாங்கத்தான். சின்ன ஆசை; சரியான சின்ன ஆசை. ஆனா, அது நடக்கமாட்டன் எண்டிட்டுது. அப்பதான் பொருளாதாரத்தடை வந்த நேரம். அரிசி, மா, சீனி, மண்ணெண்ணை, சவுக்காரம், தேங்காண்ணை எல்லாமே தட்டுப்பாடு. ஒவ்வொரு சாமானும் பலமடங்கு விலை. உத்தியோகக்காரக் குடும்பங்களே தடுமாறுற நேரம். வெளிநாட்டுச் சனம் தாக்குப்பிடிச்சிது. எங்களை மாதிரிக் குடும்பங்களின்ர நிலை என்ன?. மரக்கறியோட தேங்காயும் கட்டினன். ஐம்பதறுவதெண்டு வரும். சைக்கிள் கடையிலயும் நாப்பது ரூவா தந்தார். அம்மான்ர உழைப்பைச் சேத்தும் ரெண்டுநேரச் சாப்பாட்டுக்கே குடும்பம் அப்பிடியிப்பிடித் தடுமாறிச்சு. சட்டைக் கனவெல்லாம் வெறும் கனவாப்போச்சு. ஆனாலொன்று, நான் இந்தத் தொழிலையும் பிடிச்சுருக்காட்டி இப்ப, எங்கட குடும்பம் ஒருவேளைக் கஞ்சியோட படுத்திருக்கும். தம்பியாக்கள் பள்ளிக்கூடத்தை விட்டிருப்பாங்கள்.

“இந்த நேரத்துலதான் அக்கா ஒருநாள் ‘டேய் தம்பி, எண்பத்தாறாம் ஆண்டு அடிச்ச ஐஞ்சுரூபா குத்தி எங்கயும் கிடச்சாக் கொண்டந்து தரியே?’ எண்டு கேட்டிடுச்சு. ஏன் எண்டு கேட்டன். ‘அந்தக்குத்தி ஏதொ ஐம்பொன்னில செய்த்தாம். அதை உருக்கி நகை செய்யலாமாம். பவுன் மாதிரி இருக்குமாம். கருக்காதாம்’ எண்டு லலிதா சொன்னவள். அப்பிடி ஆரோ அங்க செய்து வைச்சுருக்கினமாம்.’

“அந்த நேரம் அப்படியொரு கதை ஊரில வலுவா உலாவினத நானும் கேள்விப்பட்டுத்தான் இருந்தனான். அக்கறைப்படாமல் விட்டுட்டன். அக்காக்கு தங்க நகை போடுற ஆசை வந்ததில்லை. வந்ததில்லையெண்டு நான் சொல்லுறது, அது அப்படி ஒருநாளும் கதைச்சதில்லை. திருவிழாவுக்குப் போடச் சட்டைக்கே வழியில்லாமல் இருக்கேக்க நகைநட்டைப்பற்றி ஆர் யோசிப்பினம்? ஆனால் அக்கா வலு புழுகத்தில திரிஞ்சிது. ஐஞ்சு எண்பத்தாறாம் ஆண்டுக் குத்தி ஏற்கனவே எடுத்திட்டென்டதுதான் அதுக்குக் காரணம். அடுத்தநாள் நானும் ரெண்டு குத்தி கொண்டுவந்து கொடுத்தன். அது சந்தோசம் பிடிபடாமல் திரிஞ்சிது. வாழ்க்கையில, ஆசைப்பட்டு எட்டமுடியாதெண்டு விட்ட பொருள் எதிர்பார்க்காத நேரத்தில எதிர்பார்க்காத விதமாக் கிடச்சா அதைவிடச் சந்தோசம்வேறென்னயிருக்கு? அப்படியொரு புழுகத்திலதான் அக்கா திரிஞ்சிது.

“எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லை. இருந்தாலும் நானும் விடேல்ல. பேசாமல் விட மனம் கேக்கேல்லை. சந்தையில, சைக்கிள் கடையில எண்டு ஐஞ்சுரூபாக் குத்திகளைக் குறி வெச்சன். ஐஞ்சுரூபா மிச்சம் வரத் தக்கனையா சாமான் வாங்கினன். ஐஞ்சுரூபா வரத் தக்கனையா குறைச்சோ கூட்டியோ சாமான் வித்தன். சைக்கிள் திருத்தக் கூலியும் அப்படித்தான் வாங்கினன். அதுல ஒன்பது குத்தி எண்பத்தாறாம் ஆண்டுக் குத்தி அம்பிட்டுது. கொண்டு போய்க்குடுத்தன். அக்கா இதுக்கிடையில இரண்டுமூண்டு குத்தி தானும் எடுத்திட்டுது. இந்த காலத்துல அக்கான்ர முகம் வடிவா இருந்தமாதிரி வேறெப்பவும் அக்கா வடிவா இருக்கேல்லை. அக்கா தானும் தங்கநகை போடப்போறன் எண்ட கட்டத்துக்கு வந்திட்டுது. அது உண்மையில தங்கநகை இல்லாட்டியும்கூட பாக்கிற ஆக்களுக்கு அப்படித்தானே தெரியும்?

“கடைசில ஒருநாள் நான் இரவு வீட்ட வாறன், குளிக்கக்கட்டின துவாய் முறுக்கிப் புளிஞ்சு விரிக்காமல் கிணத்துக்கட்டில கிடந்து வெந்தமாதிரி அக்கான்ர முகம் இருந்திது. எனக்கென்னண்டு விளங்கேல்ல. வழமைக்கு மாறாக, தம்பியாக்கள் படிக்கேல்லையெண்டு திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்திது. ஏதோ நடந்திட்டெண்டு விளங்கிற்று. ஆளைச் சமாளிக்க மண்டைக்குள்ள ஒரு உத்தி வந்திது. ‘இந்தாக்கா இன்னொண்டு அம்பிட்டுருக்கு’ எண்டு ஒரு ஐஞ்சு ரூவாக் குத்தியெடுத்துக் குடுத்தன். எனக்கு வேண்டாமெண்டு சீறிச்சு. ஏன் எண்டன். ’அப்பிடி ஒண்டும் இல்லையாம்.அது பொய்யாம்.’ அழுதுவிடும் போலத் தெரிஞ்சிது. ஆர் சொன்னதெண்டு கேட்டன். ‘நானும் லலிதாவும் காலமை நகைக்கடையில போய்க் கேட்டனாங்கள். அவங்கள்தான் அப்பிடிச் சொன்னவங்கள். கேட்டுட்டு வெளியில வர அவங்கள் சிரிக்கிறாங்கள்.’ எண்டு சொல்லிச்சு. மச்சான் இதைக் கேட்ட உடன, எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. அக்கா அழுதுகொண்டு அடுப்படியில போய் இருந்திட்டுது. எனக்கும் கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு மச்சான். கோவம் வந்திது… ஆர் மேலயெண்டில்லை… பயங்கர ஆத்திரம்…”

அவன் சொல்லிக்கொண்டிருக்க நான் சுகுமாரின் கையைப்பிடித்தேன். அவன் அமைதியாகினான். அவன் அதிக உணர்ச்சிவசப்பட்டுக் கோபப்பட்டிருந்தான். அழவும் பார்த்தான். எனது கை அவனுக்கு ஆறுதலாக இருந்திருக்க வேணும். பேசாமல் கொஞ்சநேரம் இருந்தான். பிறகு வெறிச்சுப் பார்த்தான். அதே பார்வை. நான் அதைக் குழப்ப விரும்பினேன்.

“வா சுத்திக்கொண்டு வருவம்.”

“இல்லை மச்சான். கொங்சநேரம் இருப்பம்.”

கொஞ்சநேரம் எங்களை அமைதி மூடியிருந்தது. காட்டின் இரகசியமான ஒலிகள்கூடக் காதில் விழவில்லை. வெறுமையில் காடும் நாங்களும் மண்டிக்கிடந்தோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அங்கே எப்பவுமே சவப்பெட்டி கேக்கிற ஆளாத்தான் போனேன்

பா. செயப்பிரகாசம்

f2f3954f-2e95-404c-a89d-59c87afc2c161.jp

நஞ்சுண்ட பூமி - பகுதி 1

ஈழப் போராளி சுகுமார் வாசகங்களால் நிறைந்தவன். அவன் உச்சரிக்கும் வார்த்தைகளும் அவனைப் பற்றிய பிறர் உச்சரிப்புகளும் உயரமானவை. வாழ்வினைச் சாதனையால் நிறைவு செய்வது என ஒரே மதியாய் இருந்தான். இனவிடியல் காண யுத்தகளம் செல்லுதற் பொருட்டு, போராளி இயக்கத்தில் இணைதல் முதல் காலடி வைப்பாக ஆகியது. களப்பயிற்சிக்கு வந்த இடத்திலும் அவரவர் குணவாகுகளிலிருந்து விடுதலை பெறாமலிருந்த சூழலில், அவன் தன்னை ஒரே வீச்சில் தகுதிப்படுத்திக் கொண்டான். மற்றவர்கள் காட்டிக் கொடுத்தபோது மௌனமாய் பொறுமையாய் ஏற்றான். மற்றவர்கள் தண்டனை அடைந்தபோது தோள்களால் தாங்கினான். உடல்வயதை விட அவனுடைய மனவயது அதிகம். போராளிப் பயிற்சி எடுக்கிறபோது, மெய்யாய்ச் சொன்னால் ' மலையைப் பெயர்க்கிற' வேலை அது. அப்போது பயிற்சியில் காயம்பட்டோருக்கு உதவினான்.

'வேப்பிலைக் கொத்தில் குருத்துப் பக்கங்களை முறிச்சு எடுத்தான் சுகுமார். பொலிதின் பை எடுத்து வந்து அதில் சுற்றி வைத்தான். நுனிக் குருத்தைக் கிள்ளி ஒவ்வொரு நாளும் மற்றவர்க்கு சப்பித்தின்னக் கொடுத்தான். அதுக்குக் கீழ் உள்ளதைக் கிள்ளி வைச்சு குத்திக் கசக்கி, மருந்து கட்டுற நாளில் மத்தியானமே நாகேந்திரன் புண்ணைக் கழுவி புண்ணிலை அந்தச் சாற்றை விட்டு புண்ணைக் காய விட்டான். அடுத்த கிழமை முடிவில் புண் பெரும்பாலும் காஞ்சு போட்டது.'

**

இனி சுகுமாருடைய வாசகங்கள்;

முத்தெடுக்கிறதென்றால் மூச்சடக்கித்தான் ஆகவேணும்.

**

'நானிருக்கேக்க கொண்டுவாற காசில்தான் வீட்டில் கஞ்சியாவது காய்ச்சிக் குடிச்சதுகள். எனக்கே அது கால்வயித்துக்குக் காணாது. நான் களவா பாண் வாங்கியும் சில நேரம் சாப்பிடுவேன். பிறகு இயக்கத்துக்கு வந்திட்டன். இப்ப நான் வயிறார சாப்பிடுறன். அதுகளுக்கு என்னால கிடைச்ச கஞ்சியும் இப்ப கிடைக்காது. நான் மட்டும் திண்றால் சரியா.'

f2f3954f-2e95-404c-a89d-59c87afc2c164.jp

**

'வானத்தில நிலவு ஏணை மாதிரித் தூங்குது. இதில் ஏறிப்படுக்க எத்தனை பேருக்குத் தெரியும்? வானம் மனசுக்கு இதனமான ஒரு விசயம் இல்லையா? இளகின மனசுகளுக்குத்தான் அப்பிடி. அதிகப் பணமுள்ளவர்களுக்கு அப்படியில்லை. மற்றவனை எட்ட இன்னும் பணம் போதாது என்ற கவலை அவர்களுக்கு. அந்த முயற்சியில் மணமிறங்கி விசயங்களைப் பாக்கவோ கேக்கவோ, அவையளுக்கு அவகாசம் இருக்கிறதில்லே... பொதுவா ஏழைகளுக்கு வானம் ஒரு கொடைதான். ஆனாலும் முதல்ல வயிறு நிறைய வேணும். வயிறு நிறையாட்டி உன்னுடைய ஏணை அதுகளுக்கு வெறும் சட்டியாகவோ, பிச்சைப் பாத்திரமாகவோ தான் தெரியும்.

**

ஒருவன் போராட வருவதற்கென்று முடிவெடுக்கையில், மனிசனுக்குள்ள இருக்கிற மிருகத்தனமான மனம் அவனிட்ட இருந்து பின் தள்ளப்பட்டு, மனிசத்தனமான, இரக்கத்தனமான, தவறுகளை எதிர்த்துக் கேள்வி கேக்கிற மனம் அவனைத் தூண்டியிருக்க அவன் வந்திருக்கலாம். ஆனால் அது மீண்டும் சக்தியிழந்து போகலாம். மிருக மனசிட்டயிருந்து மனசைப் பேண முடியாமற் போகலாம். அதுக்காக அவன் முடிவெடுத்த தருணத்தில் அவன் மனிசனாக இருந்தான் என்ற உணர்வு பொய்யாயிராது.

**

நாலு பெடியளுக்கு ஒரேயொரு பொம்பிளைச் சகோதரம் அக்கா. அதால எனக்கு அக்காவில் தான் பாசம். அவளுக்கும் என்னில பாசம். அந்தச் சட்டைகளெல்லாம் அக்கா அக்கம் பக்கத்துல வாங்கினது தான் ... செருப்புக் கூட அப்படித்தான். அக்காட்ட நல்லதென்று இருந்தது நாலஞ்சு வருசத்துக்கு முன்னம் வாங்கின ஒரு ரோஸ்கலர் சட்டை தான்.

**

ஒருத்தன் கஷ்டப்பட்டா அவனுக்கு உதவி செய். இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடு. எழும்பி நிற்கிறவன் விழுந்தவனைத் தூக்கு. ஏன் இதுக்குள்ளே புண்ணியத்தைச் சேர்த்து அதை வியாபாரம் ஆக்கிறாங்கள்? மனிதத் தனத்தை வியாபாரம் ஆக்கிப் போட்டாங்களே! தாய் புள்ளைக்குப் பால் கொடுத்தா தாய்க்குப் புண்ணியம் என்டா சொல்லிக் குடுக்கிறியள். இல்லையே, தாய்மை என்றுதானே சொல்லுறியள். அதுமாதிரி இருக்கிறவன் இல்லாதவனுக்குக் குடுக்கிறது.. மனிசத் தனமென்டாவது சொல்லுங்களேன். தாய்மை என்பது மகத்துவமானது போல் மனிசத்தனமென்பதும் மகத்துவமானது.

**

வீட்டுக்குப் பிள்ளையா நான் எடுத்த முடிவு முதல்ல பிழையா இருக்கலாம். ஆனால் ஒரு மனிசனா நா எடுத்த முடிவு பிழையா?

**

சண்டை நடக்குது, பொடியளெல்லாம் செத்துச் செத்து வாறாங்கள். அவர்களுக்கும் இப்படி எத்தனை பொறுப்புகள், விருப்பங்கள் என்றிருந்திருக்கும். வாழ்ந்து முடிச்சவையா போராட ஏலும். ஒரு பக்கம் தியாகங்கள் நடக்க, நாங்கள் அதுக்குள்ள சுழிச்சோடி எங்கட குடும்பங்களை உயர்த்திடலாம் என்று நினைக்கிறது ஒரு துரோகம்.

**

நீ யோசிச்சுப்பார், ஆனையிறவுத் தோல்விக்கு அடிபட்டவனா காரணம்? அடிபடப் போகாதவன்தான் காரணம். சண்டைக்குப் போனதாலேயே அறுநூறு பேர் செத்தவங்கள். நாம் சண்டைக்குப் போகாததாலே செத்தவங்கள். வாழ்க்கை அவலங்களுக்குச் சிங்களவனேயா காரணம்? நாமும் தான் காரணம்.

**

எல்லோரும் பாதுகாப்புக்கு தங்க வீட்டச் சுத்திதான் அணை கட்டப் பார்க்கிறோம். அது முட்டாள்தனம். அணையை வெள்ளம் உடைக்கிற இடத்தில் கட்டவேணும். உடைக்கிற இடத்திலே கட்டினாத்தான் நிப்பாட்டலாம்'

-2-

'நஞ்சுண்ட காடு' நெடுங்கதை தொடங்குகிறது. தொடங்கியது கதையா? வரலாறா? வலித்து வலித்து வாழ்ந்த சுகுமார் என்ற மனிதனின் கதையைத் தொடங்குகிறார் போராளியாய், படைப்பாளியாய் வாழ்ந்த குணா.கவியழகன். அவரில், அவராக வாழ்ந்த சுகுமாரின் கதை.

'வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக் கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளி விசிறும் வித்தையா கற்றேன் கனவுலகக் கதை சொல்ல? இல்லையந்த வாழ்வைத் தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே கால நீட்சியில் திரட்சியுற்று, திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை? இல்லையே! இதுவும் வலித்து வலித்து வாழ்ந்த மனிதனின் கதை. வலியென்றா காண்பீர், இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை.'

'கதையெனில் பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசும் வித்தையா கற்றேன் கனவுலகக் கதைசொல்ல' என முதல் கட்டமாக வாசகர்களைப் பிரித்து நிறுத்துகிறார் குணா கவியழகன். அவர் சொல்லப் போவது போர்க்கள வரலாறு. வீரத்தை, வீரம் விளைவித்த மகிழ்ச்சியை, கூடவே கொண்டு வந்து நிறுத்திய வலியை, இடிபாடுகளைக் காண்பதற்கும் கிரகிப்பதற்கும் மனுசத்தனம் வேண்டும். அதில்லாதவரை விலகி நிற்கக் கேட்டுக் கொள்கிறார்.

ரணம், நிணம், வலி, வேதனை, கொலை, சாவு என மானுட வாழ்வின் அன்றாட நிரலினால் பாதிப்புக்குள்ளாகி - போரியிலை வாழ்வியலாகக் கொண்ட நாடு. உடன் செல்ல, உணர்ந்து கொள்ள பாரம்பரிய இலக்கிய வாசிப்பு போதாது. மதியநேர உணவுக்குப் பின்னான தூக்கத்துடன், மாலை நேர மந்தமாருத மயக்கத்துடன், வாசிப்பு செய்யும் கனவுலக வாசிகளை விலக்குகிறார்.

விசத்தின் கதை இது. பகை உமிழ்ந்த நஞ்சினை, போராடிப் போராடி தமது மக்களுக்கும் தமக்கும் பாதுகாப்பான ஒளிரும் இரத்தினக் கல்லாய் மாற்றித் தரும் போராளிகளின் கதை இது.

ருசிய எழுத்தாளர் ஷோலகாவின் 'அவன் விதி' புதினம் இவ்வாறு தான் தொடங்குகிறது. யுத்த வரலாற்றின் ஊடாக வருகிற வாழ்வுக் கதை . யுத்தத்தின் சுழிப்பு அந்திரேயை மட்டுமல்ல, குடும்பத்தை, ருசிய சமுதாயத்தை உள்ளிழுத்துச் சுருட்டிய பின், வாசகர்களுடன் ஷோலகாவ் நேர் உரையாடுதல் போலவே, தமிழீழக் கதை சொல்லி குணா. கவியழகன் பேசுகிறார். சுகுமாரின் சகபோராளியான இனியவன் என்னும் பெயரின் வழியாய் சொல்லப்படுகிறது.

யுத்தகளத்தில் மனித உயிருக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. கொல்லுவதும், கொல்லப்படுவதும் மட்டுமே அவ்விடத்தில் முனைப்பான காரியங்கள். இரண்டாம் உலகயுத்தத்தில் குடும்பம் முழுதும் பலி கொள்ளப்பட்டு மீந்திருந்த 'அவன் விதி' நாயகன் அந்திரேய் பேசுகிறான். ஜெர்மானியர்கள், ருசிய மக்களை எதற்காக கொன்றார்கள்?

'அவர்கள் எதற்காக கொன்றார்கள் என்றா கேட்கிறீர்களா? நான் ருசியன் என்பதற்காக. நான் இன்னும் உயிரோடு உலகில் இருக்கிறேன் என்பதற்காக. அவர்கள் பொருட்டு உழைத்தேன் அல்லவா அதற்காக. எடுத்தற்கெல்லாம் உதையும் குத்தும். எதிர்த்துப் பார்த்தால் அடி, தவறுதலாகக் காலடி வைத்தால் அடி, அவர்கள் விரும்பின மாதிரித் திரும்பாவிட்டால் அடி. அடிக்கிற அடியில் உயிரைப் பறித்து விட வேண்டுமென்பதற்காகவே அடித்தார்கள். ரத்தக் குழாய் வெடித்து அடிபட்டுச் சாக வேண்டுமென்பதற்காகவே அடித்தார்கள்.'

இந்தக் கொலைச் செயல்களை அப்படியே கொண்டு போய் சிங்கள வெறியர்களுக்குக் கொழுவிக் கொள்ளலாம். இரண்டாம் உலகப் போரினை விட, இப்போது கொலைத் தொழில் நுட்பங்கள் வெள்ளமாய்ப் பெருகியுள்ள சமகாலத்தில், சிங்கள வெறியர்கள் என்ன விரல் சூப்பும் குழந்தைகளா?

இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு போர்க்கள வீரனாக அந்திரேய் நின்று கொண்டிருக்கையில், குடும்பம் கண்காணாத் திசையில் தூக்கி எறியப்பட்டு சிதைகிறது. 'நஞ்சுண்ட காடு' கதையில் வரும் சுகுமார்களுக்கு நடக்கிறது போலவே.

'இரவு கன்ரரின் பின்புறத்தில் ஏற்றப்பட்டு 'கைதடி' வெளியில், காற்று முகத்தில் அறைந்து தலைமயிர் பறக்க, சேர்ட் பட படக்க இருந்த உணர்வுக்கும், பின் மழையில் நனைந்து நித்திரையில் வழிந்தபோது இருந்த உணர்வுக்கும் இப்போது இருக்கும் உணர்வுக்கும் எத்தனை வித்தியாசம்?'

இயக்கப் பயிற்சி எடுக்கும் வித்தியாசமான உணர்வில் சுகுமார் பயணிக்கிறான். அவரவர் விருப்பத்தின் பேரில்தான் போராளி வாழ்க்கைக்கு பேர் தந்தார்கள். ஆனால் 13 பேரில் ஒருவன் வரும்போது இடையிலேயே பூநகரி ஜெற்றியிலோ அல்லது வாகனம் வேகம் குறைந்த ஏதாவது ஒரு முடக்கிலோ குதித்துப் பின்வாங்கி ஓடிவிடுகிறான். அதுபோலவே பயிற்சியணியில் குழுத்தலைவராக இருப்பவன் வன்மம் கொள்வது, ஒருவர் துன்பத்தில் மற்றவர் இன்பம் அடைவது, காட்டிக் கொடுப்பது, துணை நிற்பது என இயல்பான மனிதர்கள் வருகிறார்கள். செதுக்கி வடிவமைக்கப்பட்ட, அளவாய் தைக்கப்பட்ட போராளிப் பொம்மைகள் இல்லை அவர்கள். தலைமையேற்க முந்துகிறவர்கள், காட்டிக்கொடுப்பதால் தண்டனை பெறுகிறவர்கள், தண்டனை பெற்றவருக்கு உதவுபவர்கள் எனப் பலர் அவரவரின் வித்தியாசமான வாழ்க்கைப் பின்னணியில் வெளிப்படுகிறார்கள். வேதச் சமயத்திலே பிறந்து வேதப் பாதிரியாய் ஆக பெற்றோர் விரும்பிய சுசீலன், அந்தத் துறவை விட இந்தத் துறவு அர்த்தமுள்ளதென நினைக்கத் தொடங்கினான். அது மக்களுக்காக என்றால் இதுவும் மக்களுக்காகத்தானே. அதில் ஆண்டவனைப் பற்றிப் போதிக்கலாம். இதில் ஆண்டவன் போல அவர்களைக் காப்பாற்றலாம்.

'இப்படியெல்லாம் யோசிச்சன். சூசையப்பர் வாள் வச்சிருக்கேல்லையா சாத்தான்களை விரட்ட, நான் துவக்கு வச்சிருப்பேன் சாத்தான்களை விரட்ட என்று நினைச்சன். வந்திட்டன்'

ஒவ்வொரு போராளியும் வந்த வாழ்வின் பின்னணி ஒப்புதல் வாக்குமூலமாய் வருகிறது.  தங்களைப் போன்ற சக போராளிகளோடு இயல்பான அளவளாவுதலில் தெரியப் பண்ணுகிறார்கள். அவரவரின் யதார்த்த குணங்களோடு காட்டப்படுகிறார்கள்.

'பயிற்சி முகாமில் கழிப்பறை போவது பெரிய நரக இம்சை. கக்கூசிருக்கும் காரியம் இனி கைகூடி வராது. பள்ளிக்கூடத்திலிருந்தபோது பகிடியென்று சொல்லித் திரியும் ராஜ்ஜின் வசனம் 'தம்பி நீ எழுவாய், இங்கிருப்பதால் பயனில்லை' நினைவுக்கு வந்தது. தூக்கிப் பிடித்த சாரத்தால் மூக்கைப் பொத்தி அம்மளாச்சியே, நான் என்னெண்டுதான் இனி கக்கூசிருக்கப் போறேனோ என்றென் கண்முட்டியது '

சுகுமார் வந்த சேர்ந்த முதலாவது நாளின் சம்பவம் விரிகிறது.

முதல்நாள் இரவில் படுக்கும்போது மணி 2.46. தலைமாடு பதிவாகவும், கால்மாடு உயர்த்ததாகவும் இருந்தது. போதாக்குறைக்கு கழட்டிய அரை ஈர உடுப்பைச் சுற்றி தலையணையாக்கிப் படுத்தான். கால்மாடு போர்த்துவிட அம்மா இல்லை. இனிமேல் அம்மாவும் இல்லை. போர்வையும் இல்லை

'இனி சனம் உங்களை இயக்கப் பொடியள் போறாங்கள் என்று சொல்லுங்கள்'

பயிற்சி மாஸ்டர் சொன்னபோது மனம் அவர்களுக்கு ஒருதரம் அந்தர இடத்தில் நின்றது. உண்மையிலேயே அந்த வசனம் நினைக்க நினைக்க கிளர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது.

இயற்பெயர்கள் மறந்துபோக இயக்கப் பெயர்கள் சூட்டினார்கள். நேற்று வரை தனது வட்டத்தில் வழங்கிய தாய், தந்தை சூட்டிய பெயர் இல்லாமல் போகும். எதிரி அறியாமல் செயல்கள் செய்ய, மக்கள் அறியும்படி காரியங்களை முன்னெடுக்க புனை பெயர்கள் தேவையாகின்றன. பயிற்சி பெறும் எல்லோருக்கும் துவக்கு (துப்பாக்கி) தருகிறார்கள். துவக்கு தந்த நாள் மனதுக்குப் பிடிபடாத சந்தோசம். எல்லோரது முகங்களும் பூத்திருந்தன. துவக்கெண்டால் சும்மாவா? துவக்கைப் பிடித்தால் அதுக்கொரு தனி வீரம் பிறக்கும். துவக்கு ஏந்தி,

'புலிவீரர் புதுவீரர் உருவாகின்றார்

புயலோடும் போராடும் புலியாகின்றார்'

பாடல் ஒலிக்க பயிற்சி பெறுகிறார்கள். பயிற்சி நிறைவுபெறும் கட்டத்தில் அந்தப் பகுதியின் படையணித் தளபதி இளம்போராளிகள் மத்தியில் உரையாடுகிறார்.

'இப்ப நீங்களும் போராளி. நானும் போராளி, நாம் எல்லோரும் ஒரே எண்ணத்தோடும், குறிக்கோளோடும் வந்திருக்கிறோம். நம்முடைய வீரமும், தியாகமும் நிச்சயம் நம்முடைய நாட்டை விடுதலை செய்யும்.'

தளபதி ஒன்றை மறக்காமல் வைத்திருக்கிறார். தான் சஞ்சரிக்கும் இடமெல்லாம் அதைக் கொண்டு செல்கிறார்.

'உங்களுடைய தனிமனித திறமை எப்படியொரு இயக்கத்தின் பலமாகவோ, இனத்தின் பலமாகவோ மாறுமோ, அப்படியே உங்களுடைய தனிமனித ஒழுக்கயீனங்கள் நமது இயக்கத்தின் பலவீனமாகவும் மாறும். புலிகளுக்கென்று ஒரு பழக்கவழக்கம், பண்பாடு, ஒழுக்கம் அடையாளமாக இருக்கிறது. அத்தகைய இயல்புள்ள ஒரே குடும்பத்தவராக இந்தப் பயிற்சி முடிந்ததும் இருக்க வேணும்.'

அவர் உரை புதிய உற்சாகத்தைக் கொடுப்பதாக மாறியது.

'ஒழுக்கம் இல்லாத ஓர்மம் வீரமாடா? அதுக்குப் பேர்வேற, சண்டித்தனம், காடைத்தனம், ரவுடித்தனம்.''

இவர்களுக்குப் பயிற்சி தந்த மாஸ்டரின் கோபமான முகபாவத்தில் வெளியான வாசகம் புலிகளின் பொது ஒழுக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

பயிற்சியின்போது பலதையும் உள்வாங்கி உணரும் திறன் வாய்க்கிறது. அனுபவப் பாடம் போல் உசத்தியானதாக போதனைப்பாடம் ஒருபோதும் இருப்பதில்லை. பயிற்சியின்போது காகம் கரைகிறது. காகம் கரைவதைக் கொண்டு பயிற்சிமுகாம் எங்கிருக்கும் எனக் கண்டுகொள்கிறார்கள். 'காகம் வந்திருக்கிறதென்றால் நாங்கள் இருக்கிறது நடுக்காட்டில் இல்லை. எங்கேயோ காடு கரையில்தான் இந்தப் பயிற்சி முகாமிருக்கு. அப்ப ஊர் மனை கிட்ட இருக்க வேணும்' என்று யூகித்து உணருகிறான் சுகுமார். இந்த நடமாட்டமெல்லாம் நேரடி அனுபவங்களைப் பெற்றவர் யாரோ அவர்களுக்கே புலப்படும். நேரடி அனுபவம் வாய்க்காத ஒருவர் நிச்சயமாக கதை சொல்ல முடியாது. கதை சொல்லக் கூடாது.

பயிற்சி நிறைவு பெற்று படையணித் தாக்குதல் நடத்தி வெற்றியின் வெள்ளோட்டத்தின் பின் அணி பிரிகிறது. வேறுவேறு முனைகளுக்கு வேறு வேறு பணிகளுக்குப் பிரிக்கப்படுகிறார்கள்.

நான் சுகுமாரைப் பிரிய வேண்டியதாயிற்று என்கிறான் இனியவன்.

'ஈழப் போராளிகள், யுத்தமற்ற, யுத்தம் விரட்டப்பட்ட ஒரு பூமியைத் தரிசனம் செய்யவே விரும்பினார்கள். எத்தனை போர்க்களங்கள், எத்தனை இழப்புக்கள், எத்தனை துயரங்களை இந்தப் போர் வாழ்வில் பார்த்தாகி விட்டது. வாழ்ந்தாகிவிட்டது. பொது நியாயம் ஒன்றில் எல்லா இழப்புகளும் அர்த்தம் பெற்றிருந்தன. தவறுகள் கூட நியாயப்படுத்தப்பட்டிருந்தன. அதனில் அதுவே தர்மமும்.' - இவ்வாறு போராளி இனியவன் எண்ண ஓட்டம் போகிறது.

அவ்வாறு தான் ஆயிற்று. சிலர் எதிர்பாராத இடத்தில் சந்தித்தார்கள். சிலர் வீரச் சாவு எய்தினார்கள். சிலர் ஊனமடைந்து அவலம் கொண்டார்கள்.

தாய், தந்தை, தம்பி, அக்கா, தங்கை என்ற ஒரு குடும்பத்தில் பாத்திரங்கள் எல்லோரும் பின்னணிப் படைகள். இந்த சொந்த ரத்த ஓட்டம் சீராக இருக்கிற போது- போராளிகள் நோயெதிர்ப்புக் குணம் கொண்டோராய் களத்தில் நிற்பார்கள்.

ஒரு போராளி இருக்கும் வரை எந்தக் குடும்பமும் அநாதையில்லையென சுகுமார் உதிர்த்த சொல் உண்மையாயிற்று. இடப்பெயர்வினால் தென்மராச்சியில் இருந்தபோது அவர்களுக்கு ஒரு தங்குமிடம் கிடைக்க வழி செய்ய இனியவனுக்கு சாத்தியமாயிற்று. அதன் பின் எட்டு வருசங்கள். தென்மராச்சி, கிளிநொச்சி எனப் பெயர்ந்து பெயர்ந்து அலைந்தபின் அமைதிக்காலத்தில் கூடு திரும்பியது குடும்பம்.

உலை ஏற்ற முடியாத அந்தக் குடில் மாதந்தோறும் ஒவ்வொருத்தராய்ப் பாடை ஏற்றியது. ஷோலகோவின் அவன் விதியை விட கொடூரமானதாய் அக்காவின் விதி நடந்தது.

அவள் வாழ்ந்த கொட்டில் இனியவன் நினைவுகளில் விரிந்து அச்சமூட்டியது. இருண்டு வெறுமை தோய்ந்து கிடந்த குடில். அதன் நிசப்தம் சிறு ஒலியையும் பேரொலியாகக் காட்டியது. ஆறுதல் அளிக்க வார்த்தையில்லை. வழியுமில்லை, ஒரு மனிசன் கேட்க முடியாத கதையை, இனியவன் அந்த அக்காவிடமிருந்து கேட்க நேர்ந்தது, அவன் அடிவயிற்றைப் பிசைந்தது.

முதலில் தாயின் இறப்பு - சவப்பெட்டி கேட்க திருகோணமலைத் தொடர்பகப் பொறுப்பாளைரைத் தேடிப் போனாள் அக்கா.

தாய் இறந்து, இறுதிச்சடங்கு முடிந்த அடுத்த சில நாளில் தந்தையின் சாவு. உலையேற்றவே வக்கற்று இருந்த அந்தக் குடும்பம் தந்தையைப் பாடையேற்ற எங்கே வழி தேடுவது? கருணையுள்ளம் கொண்ட அதே திருகோணமலைப் பொறுப்பாளர் உதவ சவப்பெட்டி கிடைத்தது.

மூன்றாவது சீனன் குடாவில் சுகுமார் வீரச்சாவு. அந்தத் திருகோணமலைப் பொறுப்பாளரும் போராளிகளும் வீட்டுக்காரர்களாய் நின்று காரியம் செய்தார்கள்.

மூத்த அண்ணன் மகன் சுரேஷ் படித்து வளர்ந்து தலையெடுத்தால்தான் குடும்பத்துக்கு எதிர்காலம் என்றிருந்த நிலையில் மலேரியாக் காய்ச்சல் வந்தது. போதிய மருத்துவ உதவியும் சத்தான சாப்பாடும் இல்லாத பன்னிரண்டு வயது சுரேஷ் மரணித்தான். திருகோணமலைப் பொறுப்பாளரிடம்தான் மீண்டும் போனாள். நான்காவது தடவையும் சவப்பெட்டி கேட்கவே அவர் கலங்கிப் போனார்.

'நான் அங்கே எப்பவுமே சவப்பெட்டி கேக்கிற ஆளாத்தான் போனேன்' அக்கா அழுதாள்.

(தொடரும்)

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=f2f3954f-2e95-404c-a89d-59c87afc2c16

Link to comment
Share on other sites

எத்தனை இன்னல்களை தான் எமக்களித்தாய் இறைவா.. மாவீரர்களினதும் அவர்களின் குடும்பத்தினரினதும் தியாகங்கள் எழுத்தில் அடக்கமுடியாதது!

Link to comment
Share on other sites

தீராநதியில் வெளியான 'நஞ்சுண்டகாடு' நாவலின் விமர்சனம் பொங்குதமிழில் மீள்பிரசும்:-

 

ஈடு செய் நீதி - நஞ்சுண்ட பூமி – பகுதி 2 

 

பா.செயப்பிரகாசம்

 

ஒரு விடுதலை இயக்கத்துக்கு மண், புவியியல், அரசியல் சூழல், மக்கள்- போன்றன அடிக்களனாக அமைகின்றன. அத்தனையையும் சரியாகக் கணித்து, தனித்துவமான வழிமுறைகள், நடைமுறை கைக்கொண்ட இயக்கத் தலைமையினால் விடுதலை சாத்தியமாகும். சாத்தியமாவதும், ஆகாமல் போவதும் மக்களின் அர்ப்பணிப்பு சார்ந்த விசயம் மட்டுமேயல்ல. 

 

'நல்லது, நானும் போர்முனைக்குப் போய்ப் படாத பாடெல்லாம் பட்டுத் தீர்ந்தேன் அண்ணே. அளவுக்கு மேலேயே, ஆம்'

போராளிகள் சுகுமார், இனியவனின் பேச்சுப் போல் தோன்றலாம். அச்சு அசலாய் அது ஒரு போராளியினுடையது தான். உயிர், குடும்பம், துணை, தன் உயிரின் புதிய தளிர் எனப் பரித்தியாகம் செய்த 50 ஆயிரம் போராளிகளின் அச்சு அசலான வாசகம் போல்தான் இருக்கிறது. ஆனால் அவர்களினுடையது அல்ல. ஷோலகாவின் 'அவன் விதி' நாயகன் அந்திரோய் தான் இவ்வாறு உதிர்த்தான்.

அந்திராய் சொன்னான் 'சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டைப் பார்த்த வண்ணம் வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை.

 

இருட்டானாலும் சரி, இல்லை சூரியன் பளிச்சென்று ஒளிசெய்யும் போதானாலும் சரி... எனக்கு விடை எதுவும் கிடைப்பதில்லை. இனி ஒருபோதும் விடை கிடைக்காது.'

 

வலது பக்க முழங்காலின் கீழ்ப்பகுதியில் காயப்பட்டு, எலும்பு முறிந்து கால் முழுக்கப் பத்துப் போட்டு – வயிற்றிலும் பிளாஸ்டர் ஒட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த சுகுமார், இனியவன், இன்னும் மருத்துவமனை முழுதும் நிறைந்திருந்த போராளிகளின் மனநிலை 'அவன் விதி' அலைவரிசையில் இருந்தது. நோயாளிகள் நிலையில் கிடக்கிற போராளிகள் பேசமுடியாது. பேசமுடியாப் போராளிகளும் பேசமுடிந்த ஒன்பதாம் கட்டில்காரன் தேர்ந்தெடுத்துப் பாடும் பாடல்களும் 'அவன் விதி' நினைப்பைக் கொண்டிருக்கின்றன.

 

'அழுக்கான சுவரில் கரிக்கோடுகளின் கிறுக்கல்கள் தெரிகின்றன. வாழ்க்கை எங்கெல்லாம் பயணிக்கிறது. தன்விதியை யார்தான் அறியமுடிகிறது. யாரிந்த மனிதர்களுக்கு விதி செய்கிறான், கடவுளா? யுத்தமல்லவா எங்கள் மனிதர்களுக்கு விதி எழுதிப்போகிறது' இனியவன் என்ற பாத்திரத்தின் குரலாக வெளிப்படும் இவ்விசனம், 60-ஆண்டுக்காலப் போரிடும் இனத்தின் வாழ்வு குறித்த சரியான வசனம்.

 

மருத்துவமனையில் போய்ப் படுத்த நாளன்று, ஏணைப்பிறை சரிந்து வானத்தில் விழுந்து கிடந்தது. அன்றுதான் இனியவன் கேட்டான்.

'அக்கா சுகமாமோ?'

0639a6d3-343d-40b8-b885-43131e0e56ee4.jp

'ஓம்' என்றான் ஒற்றைவரியில்.

'வீட்டை யார் பாக்கினம்?'

'ஒருத்தரும் இல்லை. அம்மான்ர (மாமா) சம்பாத்தியத்திலதான் ஓடுது'

'அண்ணா?'

'கலியாணம் செஞ்சிட்டானாம்' சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பினான் அவன்.

'அப்பாக்கு இப்ப எப்பிடி?'

'அப்பாக்கு கொஞ்சும் சுகமாம், எழும்பி நடக்கிறாராம்'

'தம்பிகள் படிக்கிறாங்களோ?'

'எனக்கடுத்தவனும் இயக்கத்துக்குப் போய்ட்டானாம்'

மற்ற பக்கம் திரும்பிப் படுத்தான். இனியவனுக்கு தொடர்ந்து கதைப்பது நல்லதா, விடுவது நல்லதா என்று தெரியவில்லை. அக்கா மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் செல்கிறாள்.

 

காயம்பட்டு மருத்துவமனையில் கிடக்கிற சுகுமாரைப் பார்க்க வந்தாள் கீதா. அவன் முகம் கொடுத்துப் பேசவில்லை.

'ஏன் நீ கதைக்கேல்ல. தெளிவா கதைச்சு விட்டிருக்கலாமே?'

 

'கதைச்சா இதை விட வேதனையா முடியும். இயக்கத்துக்கு வந்த அன்றே காதலுக்கு முற்றுப்புள்ளி வைச்சாச்சு. பிறகும் பக்கத்தில் முற்றுப் புள்ளி வைச்சா, அது தொடராய்ப் போயிடும். வசனம் முடிஞ்சதா ஆகாது'

வாழ்க்கையின் விதியை யுத்தம் எழுதிப்போகிறது. எதிரி தொடுத்த யுத்தமும் அதை நாம் எதிர்கொண்ட விதமும் என்பது இதன் பொருள். யுத்தத்தின் வசம் வாழ்க்கையை ஒப்படைத்து விடுகிறது ஒரு இனம். பிறகு மருத்துவமனையிலிருந்து அவரவர் படையணிக்குத் திரும்புகிறார்கள்.

ஒரு கடிதம் வந்து சேருகிறது.

'அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம்.

முக்கியமான கடமையில் நான் ஈடுபடத் தொடங்கியிருக்கிறேன். சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த என் மனம் உன்னால் அமைதியடைந்திருக்கிறது. என் கடமையில் வலிமையோடு மனதைச் செலுத்த உதவி செய்யும்... ஒரு போராளி இருக்கும் வரை எங்கள் குடும்பங்களும் அநாதைகள் அல்ல என்று நம்புகிறேன்... விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்கக் கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக் கூடும் என எண்ணுகிறேன்.. மறுபடியும் உன்னைச் சந்திக்க முடியும் என்று நான் நம்பவில்லை.

நன்றிகளுடன் நண்பன், சுகுமார்.'

 

அதுவே சுகுமாரின் இறுதிக் கடிதம். கரும்புலி அணியினர் களச் சாவு அடைவதற்கென்று வியூகத்தில் நுழைகிறார்கள். மீண்டு வரமுடியாத ஒரு முனைக்கு சுகுமார் போய்விட்டான். 

'கடிதம், சுகுமார் ஈடுபட்டிருக்கும் முக்கியப் பணி தொடர்பாக நான் எண்ணியது சரியாக இருக்கலாம் என்பதை மேலும் ஊர்சிதப்படுத்தியது. நெஞ்சுக் கூட்டுக்குள் ஏதோ இனம் புரியாத இறுக்கம். அதிகம் மூச்சை உள்ளிழுத்து நான் விடுபட முயன்றேன். எனக்கு அவனைத் தெரியும். அவனின் மனம் அசையும் கோணம் தெரியும். அதை வைத்துத் தான் இப்படி எண்ணத் தோன்றியது. சுகுமாரின் மனக் கோலத்தை நான் அறிந்திருந்தேன். உணர்ந்திருந்தேன். ஒருவேளை நான் கடவுள் ஆகினால் அவனின் மனதையே எல்லா மனிதர்களுக்குமாக படைத்திருப்பேன். இந்த தற்கொலை யுத்ததாரியின் மனதை பூமியின் மனிதர்களுக்குப் படைத்திருந்தால், யுத்தம் இல்லாத பூமி ஒரு வேளை   சாத்தியமாகியிருக்கக் கூடும்.'

 

இனியவன் அறிந்திருந்தான். சுகுமார் மீண்டு வரப்போவதில்லை என்ற சேதியை, இழப்பு பற்றிய உறுதியோடும் உறுதியின்மையோடும் காத்திருக்கிற அக்காவுக்கும் குடும்பத்துக்கும் வெளிப்படுத்தும் கடமை சுமந்து இனியவன் செல்கிறான். உரையாடும் திராணியற்ற  அக்காவின், குடும்பத்தின் நிலைகுறிக்கும் கடைசிப் பகுதிகள் கொடுமையினும் கொடுமையானவை.

'தம்பி இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது. குடும்பத்தில் பொறுப்பான ஆளில்லாட்டி அந்தக் குடும்பம் வழிப்படாது. ஆனால் தம்பியை நான் வரச்சொல்லிக் கேட்டதில்லை. அவன் என்னசெய்தாலும் சரியாகத்தான் செய்வான். நியாயம் அறிஞ்சுதான் எதையும் செய்வன்... ம்... எல்லாத்துக்கும் விலையிருக்கு. விடுதலை கிடைச்சா இந்த நாட்டின் பெறுமதியா இழந்து போன உயிர்களிருக்கும். ஆனால் அந்த உயிர்களின் பெறுமதியை யார் விளங்குவினம், அதுதான் எங்கட குடும்பத்தின்ற வாழ்க்கை.'

விட்டு விட்டு வந்த வார்த்தைகளின் முடிவில் திரும்பவும் அழுதாள்.

 

கட்டுண்டு போயிருந்த உணர்வின் வீச்செல்லைக்குள்ளிருந்து விடுபட இனியவனுக்கு ஒரே வழிதான் தெரிந்தது.

'நான் வெளிக்கிட வேணுமக்கா. இன்னொரு நாளைக்கு வாறேன்'

சொன்னானே தவிர இன்னொருநாள் சந்திக்கும் துணிவு அவனுக்கில்லை.

அக்கா என்னும் அமுதசுரபிகளை இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொலைத்து நிற்கப் போகிறோம். அமுதசுரபி ஜீவனுள்ளது. அது பேசும், அசையும், சிரிக்கும். அமுதசுரபிகளை  நடைப் பிணமாக்கி, எலும்புக்கூடுகளை ஏந்திய கைகள் எற்றுக்கு?

சுகுமார் - களப்போராளி. அக்கா பின்புலப்போராளி.

அக்கா ஒரு குறியீடு. ஈழத்து மொத்த மக்களுக்குமான அடையாளமாகி நிற்கும் இரு சித்திரங்களில் ஒரு சித்திரம் சுகுமார். இன்னொரு சித்திரம் அக்கா. இன விடுதலைக்காக   விழுந்த விதைகளில் சத்தான விதை எது? களத்தில் விழுந்த விதைகளா? களத்தைத் தாங்குதற்கு வீட்டில் விழுந்த விதைகளா?

இழப்புகளுக்கான அறுவடை இழப்புகளை ஈடுசெய்யும் விடுதலையின் உதயம் மட்டுமே. சுகுமார் சொல்வது போல், விலைகொடுக்காது விடுதலை சாத்தியமாகாது என்பதை நாம் விளங்கிக் கொண்டிருந்தாலும், ஈழவிடுதலை ஒன்றே அந்த இழப்பை ஈடுசெய் நீதியாக இருக்க முடியும்.

நம்மிடையே ஒரு குறள் உண்டு

'வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்

துணை வலியும் தூக்கிச் செயல்'

- இராச தந்திர நகர்வுகளின் அடிப்படை இந்தக் குறள்.

வினைவலி என்னும் விடுதலை வலிமையை அறிந்திருந்தோம்.

(இங்கு 'நாம்' என்பது- சுகுமாரின் சிந்திப்பு நிலையிலிருந்து- அனுபவத் தொகுப்பிலிருந்து - விடுதலையை எதிர்நோக்கும் தளத்திலிருந்து எழுந்து வரும் ஒரு சொல்)

தன் வலிமையின் அளவை, இருப்பதினும் அதிகமாய் எண்ணியிருந்தோம்.

மாற்றான் வலிமையை முழுமையாய்க் கணித்திடவில்லை. பாரம்பாரியத் தாக்குதலும் ஆயுதங்களும் வஞ்சகமும் கொண்டிருந்த ஜெயவர்த்தனே, சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்கே என்ற இந்த வரிசை முடிந்து போயிற்று. இவர்கள் எல்லோரினும் கூடுதல் தந்திரோபாயமுடன், சர்வதேச அரவணைப்பும் நவீன கொலைத்தொழில் நுட்பமும், இராணுவப் பெருக்கமும், அனைத்துக்கும் மேலாய் ஒன்றுதிரட்டி ஊத்தமான சிங்கள இனவெறியும் கொண்டு இராசபக்சே ஆட்டமேடைக்கு வந்திருந்தான்.  

துணைவலியின் சாரம் ஐக்கிய முன்னணித் தந்திரம். துணைச் சக்திகளின் ஒன்றுதிரட்டலை  நிராகரித்தோம். பூபாகத்தில் எந்த ஒரு எழுச்சியும், விடுதலைப் புரட்சியும், இனவிடுதலையும் ஐக்கிய முன்னணி இன்றி சாத்தியப்பட்டதில்லை. துணைவலியைத் தேடி, நாடி நாம் நடக்கவில்லை . 

 

எதிரிக்கு ஒரு நாடு இருக்கிறது. ஒரு நாட்டில் நின்று, அவன் உலகத்து நாடுகளை வளைக்கிறான். சற்று முன்பிருந்தது நமக்கு ஒரு நாடு. அதற்கு ஒரு அரசும் இருந்தது. அரசிருந்த வேளையில் பேசும் வலிமை வேறு. அப்போது நமக்குக் காதுகொடுக்க, கைலாகு கொடுக்க சிலராவது வந்தார்கள். அதனால் அப்போது நார்வே இடையில் வந்தது.

ஆறு, ஆணைக்கட்டு, நீர்த்தேக்கம், மதகு – என நீர்நிலைகள் வளம் அவனுக்கு. கண்பார்வைக்கும் படாது, கைக்கும் எட்டாது, மேகங்கள் எட்டி எட்டி ஓடுகின்றன நமக்கு.

'அதோ மேகங்கள்

மழையைக் கொண்டு போகிறது

நம்முடைய குளங்கள் வறண்டுவிட்டன

நம்முடைய பயிர்கள் வாடிவிட்டன

விடாதே, மேகங்களை மடக்கு,

பணிய வை'

கவிஞர் மு.சுயம்புலிங்கம் கவிதையில் காட்டிய காரியத்தை, இன்று நாம் அரசியலில் செய்யவேண்டிருக்கிறது. மழை என்பது பருவநிலை. அரசியல் பருவங்கள் நமக்குச் சாதகமாக இல்லாதபோது, பருவங்களைப் பணியவைக்க, நம் காட்டில் மழை பெய்ய வைக்க, இராசதந்திர முன்னெடுப்புக்கள் எவை, என்னென்ன என சிந்திக்க வேண்டிய காலத்தில் நிற்கிறோம்.

இது போல் எண்ணிக்கையில்லா போராளிகள், மக்களின் சாவுகளின் பின், குடும்பங்களின் சிதிலங்களுக்குப் பின், தலையாய விடுதலைப்போரின் பின்னடைவுக்குப் பின், சில கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்பத் தூண்டுகிறது இந் நெடுங்கதை. அவைகளைத் தனக்குள் கொண்டிருக்கிறது களப் போராளியும் படைப்பாளியுமாய் வாழ்ந்த குணா. கவியழகனின் எழுத்து. இலட்சியம், தியாகம், அர்ப்பணிப்பு, இழப்புகள், ஒழுக்கவிதிகள் மட்டும் விடுதலைப் போரின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. தீர்மானிக்க இவை போதா. விடுதலைப் போரை முன்னகர்த்தும் இராசதந்திரக் கோட்பாடுகளை சமகாலம் கோருகிறது. வெறும் இராசதந்திரங்களினால் இனவெறியன் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது, இராசதந்திரம் என்னும் கருதுகோள் இல்லாததினாலே பின்னடைவுக்குச் சென்றோம் என்ற சுயவிமர்சனம் இந்நெடுங்கதைக்குள்ளிருந்து கிளம்புகிறது. 

உலகத்திடம், ஐ.நா. அவையின் முன், அதன் உறுப்பு நாடுகளிடம் ஈழத் தமிழர்களுக்கான, 'ஈடுசெய் நீதியைக்' கோருகிற வேளையில், இயக்கங்களின் போக்கில் புதிய நடைமுறையைக் கோருவதே – அகநிலை 'ஈடுசெய் நீதியாக' இருக்க முடியும்.

'எது தோல்வியெனக் காணப்படுகின்றதோ அதனையே தனது வெற்றிக்கான தளமாக்கிக் கொள்ள வல்லவன் எவனோ அவனே நிகரற்ற சாதனையாளன் ஆவான்' என்கிறார் அரசியல் ஆய்வாளர் சண்முகவடிவேல். அவ்வாறு நிகழாது போயின், குணா.கவியழகன் 'என்னுரையில்' பதிந்திருப்பது போல் நிகழும்.

'நண்ப,

 உனது மரணம் விடுவிக்கப்படாது விடின்

 மனுக்குலத்தில் தமிழ்ச்சாதி மண்ணாகிப் போகும் காண்'

(யுத்தம் உச்சத்திலிருந்த 2008- ஆம் ஆண்டில், 'ஏணைப் பிறைஎன்னும் தலைப்பில்  இக்கதைப் பிரதியைவெளியிட கவிஞர் கி.பிஅரவிந்தன் பிரான்சிலிருந்து இணையத்தில்  அனுப்பியிருந்தார். 'போர்க் களஇலக்கியம்எனத் தலைப்பிட்டு அதற்கொரு அணிந்துரையும் நான் எழுதி அச்சிட ஏற்பாடு செய்திருந்தேன்.இந்நிலையில் கி.பி.அரவிந்தன் தனது பதிவில் குறிப்பிடுமாறு போல 'வன்னியிலிருந்து இரு தடவைகள் தடைஉத்தரவைஇந்நூல் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. 2009-இல் போர் முடிவுற்ற பின்அரசபயங்கரவாதத்தின் பிடிக்குள் மாட்டுப்பட்டிருந்த சூழலில் படைப்பாளி ஒப்புதல் தர இயலவில்லைமுள்வேலிமுகாமிலிருந்து விடுபட்டு புலம்பெயர்ந்த பின்அவரது ஒப்புதலுடன்அகல் பதிப்பக வெளியீடாக (348-,டி.டி.கே சாலைராயப்பேட்டைசென்னை-14) வந்திருப்பது கி.பி அரவிந்தனின் இடைவிடா முற்சிக்குக்கிடைத்த வெற்றி எனக் கருதுகிறேன்)

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=0639a6d3-343d-40b8-b885-43131e0e56ee#.VITvvSpdVLY.facebook

 

Link to comment
Share on other sites

கேதீஸ்வரன் நவரட்ணம் முகநூலில் எழுதிய கருத்து :-
Ketheeswaran Navaratnam
8 December at 23:02 · 

”நஞ்சுண்டகாடு” நேற்றைய மாலை தான் கையில் கிடைத்தது. இன்றைய பொழுது முழுவதும் அந்த அடா்ந்த காட்டுக்குள் நான் கட்டுண்டு கிடந்தேன். ஒரு விடுதலைப் புலிப் போராளியின் படைப்பு இது. அவா் கதை சொல்லும் விதம் இது அவருடைய முதல்ப் படைப்பு என்ற உண்மையை நம்ப மறுக்கவைக்கிறது. 

 

போராளிகளின் உயிா்த் தியாகங்கலே எமக்கு வெளித் தொிந்தன. ஆனால் இந்த நஞ்சுண்டகாடு அவா்களது உணா்வுத் தியாகங்களை வெளிக்காட்டி நிற்கின்றது. பயிற்சி முகாம்களிலும், போா்க்கள முனைகளிலும் அவா்கள் அனுபவித்த இன்ப துன்பங்களையும், கோப தாபங்களையும், இனைவுகளையும், பிாிவுகளையும், வெறுப்புக்களையும், பழிவாங்கள்களையும், தவறுகளையும், தண்டனைகளையும், கண்ணீரும் கதறலுமாய் பதிவு செய்திருக்கின்றது இந்த நஞ்சுண்டகாடு. 

 

போராட வந்தபின்னும் அவா்களை அழுத்திப் பிடித்து பிழிந்து விடுகின்ற குடும்ப நிலைகளும் அதன் நினைவுகளுமென ஒவ்வொரு போராளிக்குள்ளும் காதலையும், வீரத்தையும், கடின உழைப்பையும் சொல்லும் ஏராளமான கடந்தகாலக் கதைகள் . போராளிகளின் பாடுகள் மட்டுமன்றி அவா்களது குடும்பத்தின் பாடுகளும் யதாா்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன. படித்து முடித்தவுடன் துயா் கலந்த மௌனத்துடன் மிஞ்சுவது கனத்த இதயம் மட்டுமே..!

2004 இல் குணா கவியழகனால் எழுதப்பட்ட கதை இப்போது தான் புத்தகமா வெளிவந்திருக்கின்றது. 

கீழே புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்: 
”அவன் கதைக்கிறதை நிறுத்தினான்.மற்றப்பக்கம் முகத்தை திருப்பி மேலே வெறிச்சுப் பாா்த்தான்.கலங்கின கண்கள் எனக்கு தொியக்கூடாதென்று விரும்பினான் என்பதை புரிந்து கொண்டேன் .சின்னதாக விம்மினான், அழுகின்றான், அடக்க முயற்சிக்கின்றான் என்பதையும் புரிந்து கொண்டேன்.அவன்ர கைகளை மெல்ல பிடிச்சழுத்தினேன்.

”டேய் சுகுமாா்.. மச்சான்..சாி.. சும்மா இரு. வா எழும்பி எப்பனுக்கு நடப்பம்” என்று சொல்லி அவனுடைய கைகளை இன்னும் அழுத்தினேன்.எனது கண்களும் கலங்கிப் போயின. அவனுக்கு எனது கைகள் ஆறுதல் அளிக்கிறது என்று நம்பினேன். அவன் கைகளை உதறிவிட்டு முகத்தைப் பொத்தி அழுதான். உடனேயே கண்களைத் துடைத்துக் கொண்டு என் கைகளைப் பிடித்து எழுந்தான். ” வா நடப்பம்” குரல் தழுதழுத்தது. காடு இருவரையும் பாா்த்துக் கொண்டிருந்தது.இந்தக் காட்டுக்கு இப்படி பல ரகசியங்கள் தொியக்கூடும்.

 

மனிதவரலாற்றில் மனிதனின் அந்தரங்கத்தை காட்டை தவிர வேறு எதுவும் அறிந்திருக்க நியாயமில்லை.மனிதன் நகாில் காதல் கொண்டு அதனுடன் கரைந்து போகும் போது காடு எப்படியோ மனிதனின் உறவை விடுவதாயில்லை. அது இப்படி சந்தா்ப்பங்களை உருவாக்கி மனிதனை ஈா்த்துக்கொண்டு இருக்கிறது போலும். காடு அனந்த சயனத்திலிருந்தாலும் அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கின்றது.
காட்டின் மீது நடந்தோம். செருமிக் காறி வெளியே துப்பினான் சுகுமாா்.இவ்வளவு வேகமாக தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். என் மனம் குமைஞ்சு குமைஞ்சு புரண்டது.அவன் தான் என்ர கைகளை இறுகப்பற்றிக் கொண்டு நடந்தான். மேற்கொண்டு இன்றைக்கு இது பற்றிக் கதைக்க கூடாது என்று தீா்மானமாக இருந்தேன். ரோந்து மற்ற முறை சுற்றி வரவும் நேரம் சாியாக இருந்தது.வந்து படுத்தோம். விடிய எழும்பினால் சுகுமாருக்கு கால் சாியாக வரவில்லை எல்லோருக்கும் அது கவலை அளித்தது.என்ன நடக்குமோ தொியவில்லை. சத்தியப் பிரமாணம் முடிந்ததும் வழமைபோல ”ஏலாத ஆக்கள் இஞ்சால வாங்கோ ” என்றாா் மாஸ்ரா். சுகுமாா் போகேல்லை போய் அவமானப்படக்கூடாது என்று அவன் நினைச்சிருக்க வேணும். அன்றைய பயிற்சியில் செம அடி சுகுமாருக்கு. அதைப் பாா்த்துக்கொண்டு ஓடுறது பெருஞ் சங்கடமாய் இருந்தது. நான், இரவு சொன்ன அவன்ர வாழ்கையிலிருந்து இன்னும் மீளேல்லை. அந்தப் பின்னனியில் அவனுக்கு விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் எனக்கும் வலித்தது . அந்த வலி மற்றவா்களுக்கு இல்லை. இவனேன் தன்ர கதையை என்னட்டச் சொன்னான் என்று இருந்ததெனக்கு.”

10805545_775080262565401_813079181907688

 

Link to comment
Share on other sites

நெஞ்சை அடைக்கின்றது , இது எழுதப்பட்ட கதையைல்ல ஒவ் வொரு புலிவீரனின் பின் உள்ள நிஜங்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.