Jump to content

'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!''


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'வீட்டுக்கு ஓர் ஊனம்.. இரவில் பாலியல் கொடுமை!''

---தப்பி வந்த வக்கீல் பேட்டி

அங்கயற்கண்ணி என்கிற கயல். வழக்கறிஞரான இவர், மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் பேத்தி. தாத்தாவைப்போலவே தமிழுக்கான போராட்டக் களங்களில் முந்தி நிற்கும் கயல், ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் தடியடிக்கு உள்ளானவர்.

பொங்கலுக்கு முன்பு இவர், சுற்றுலா விசாவில் இலங்​கைக்குச் சென்று ஈழத் தமிழர்களின் பாதிப்புகளை நேரில் பார்த்தபோது, இலங்கை போலீஸார் கைதுசெய்ய... தமிழகம் கொந்தளித்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ தொலைபேசியில் பேசினார். ''ஒரு தமிழறிஞரின் குடும்பத்துப் பிள்ளையை பத்திரமாக நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும்!'' என்றார். வழக்கறிஞர்கள் இணைந்து போராடத் தயார் ஆனார்கள். மறுநாள் பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்றார் வைகோ. அதற்குள் முந்தைய நாள் இரவே அங்கயற்கண்ணி விடுதலை செய்யப்பட்டார். 'அந்தப் பெண்ணை விடுவித்துவிட்டார்களே’ என்று வைகோவை பார்த்ததும் பிரதமர் சொல்லியிருக்கிறார்.

கயலைச் சந்தித்தோம். ''போர் முடிந்த பிறகு ஈழத் தமிழ் மக்களின் நிலையை அறிவதே, என் பயண நோக்கம். 13-ம் தேதி கொழும்பு சென்றோம். 14-ம் தேதி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனின் வாகனத்தில் வவுனியா சென்றோம். அங்கு, 2005, 2008 காலங்களில் மறுகுடியமர்த்தம் செய்யப்பட்டவர்களைச் சந்தித்தோம். கட்டரியான்குளம் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம், தேவாலயம், ஒரு பெரிய வீடு என மூன்று இடங்களில் மொத்தமாக 746 குடும்பங்களை வைத்திருந்தார்கள். மிகக் குறுகிய இடத்தில் அத்தனை பேரும் அடைந்தது போலத்தான் இருந்தனர். பள்ளிக்கூடத்தில் சமைத்து, உணவு தருவார்களாம். காலை உணவே, நாங்கள் சென்றபோது மாலை வரை சில இடங்களுக்கு வரவே இல்லை. சின்னக் குழந்தை​கள் பசியால் துடித்தன. எங்கள் வயிறு எரிந்தது.

மாலை 6 மணிக்கு மன்னார் மடுமாதா தேவால​யத்துக்குச் சென்றோம். எங்களைச் சந்தித்த ஈழத் தமிழர்கள் பேச்சில் துயரம் வழிந்தது. நள்ளிரவு 1 மணிக்குக் கிளம்பி வவுனியா சென்று, மறுநாள் பொங்கல் அன்று சில குடும்பங்​களைச் சந்தித்தோம். 'தமிழீழ அரசு’ப் பகுதிக்குச் செல்ல ராணுவ அனுமதி அன்று வரை கிடைக்கவில்லை. இருந்தாலும் 'அனுமதித்தால் உள்ளே போகலாமே’ என ஒரு முயற்சி செய்தோம். ஆனால், ஓமந்தை சோதனைச் சாவடியில் சிங்கள ராணுவம் திருப்பி அனுப்ப... வவுனியா திரும்பினோம்.

16-ம் தேதி காலை கிழக்கு மாகாணத்துக்குப் புறப்பட்டோம். மட்டக்களப்பு சென்று, பல பகுதிகளைத் தாண்டி விநாயகபுரம் என்ற கடலோரக் கிராமம் சென்றோம். சுனாமியால் போரால் பாதிக்கப்​பட்ட மக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. கண் இழந்து, கை, கால் இழந்து... அப்பப்பா, ஒவ்வொரு குடும்பத்​திலும் ஒருவராவது ஊனத்துடன் இருந்தனர்.

17-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராணுவ அனுமதி கிடைத்து, 2.30 மணிக்கு கிளம்பி 45 நிமிடத்தில் ஓமந்தையைஅடைந்தோம். வெளிநாட்டவர்கள் என்பதால், சோதனைச் சாவடியில் எங்களை பேருந்தில் இருந்து இறங்கச்​சொல்லி சோதித்து அனுப்பினர். 3.30 மணி நேரப் பயணத்தில் கிளிநொச்சி அடைந்து நண்பர்களுடன் ஆட்டோவில் பயணித்தோம். வவுனியா நகரத்தில் ஓரளவாவது வெளிச்சம்... இங்கோ எங்குமே இருட்டு. வீடுகள் எல்லாம் தரைமட்டம். ஐ.நா. கொடுத்த தகரங்களில்தான் மறுகுடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகள்.

பெரும்பாலான வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இல்லை. பெற்றோரே இல்லாத குடும்பங்களையும் பார்க்க முடிந்தது. வீட்டுக்கு ஒரு குழந்தையாவது ஊனம். ஆண் இல்லாத வீடுகளில், சிங்கள ராணுவத்தினர் இரவு நேரத்தில் பாலியல் வன்முறை செய்வது சர்வசாதாரணம் என கேள்விப்பட்டபோது, குருதி கொதித்தது...'' என்றவர் சற்று நிறுத்தி, தொடர்ந்தார்.

''அதன்பிறகு, வன்னி தமிழ் எம்.பி. ஸ்ரீதரனைச் சந்தித்துவிட்டு, கிளிநொச்சி பேருந்து நிலையம் வந்தோம். இரவு 9.45 மணி. மின்சாரம் அற்ற கும்மிருட்டு. 'இரவு 12.45 மணிக்குத்தான் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து’ என்றார்கள். வரலாற்றுப் பெருமைகொண்ட தமிழீழ அரசின் தலைநகரான அந்த மண்ணில் 3 மணி நேரம் இருந்ததே பரவசம்! அங்கிருந்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைப் பார்த்தோம். எப்பேர்ப்பட்ட மனிதனின் தாயாருக்கு இந்த நிலைமையா எனும்படி இருந்தார். தாங்கிக்கொள்ள முடியவில்லை!

பிரபாகரனின் வீடு முற்றிலுமாக இடியுண்டுகிடந்தது. அந்த வீடே சிங்கள இனவெறியின் அடையாளமாக இருந்தது. ஒரு சதுர அடிக்குள் நூறு துப்பாக்கிச் சூட்டுத் துளைகள். வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் 19-ம் தேதி கொழும்பில் விமானம் ஏறவேண்டும் என்பதால், யாழில் இருந்து 18-ம் தேதி மதியம் 12 மணிக்கு வவுனியா கிளம்பினோம். பிற்பகல் 3 மணிக்கு ஓமந்தை சாவடியில், எங்களைப் பிடித்துச் சென்றவர்கள், உள்ளூர் போலீஸ் நிலையம் கொண்டுபோனார்கள். அங்கே இருந்த தமிழ் போலீஸ் அதிகாரி ஒருவர், 'சந்தேகத்​தின் பேரில் எங்களைக் கைது​செய்துள்ளதாக’க் கூறினார். 3 மணி நேரம் கழித்து கொழும்புக்குக் கூட்டிப்போனவர்கள், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகக் கட்டடத்தில் என்னை​யும், என்னுடன் வந்த திருமலையையும் தனித்தனியாகத் துருவி விசாரித்தார்கள். நான் எடுத்திருந்த பார்வதி அம்மா​ளின் படம் உள்பட பல முக்கியப் படங்களை அழித்தனர். மூன்று இரவு, நான்கு பகல்களுக்குப் பிறகு, 21-ம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்பு நீதிமன்றத்தில் நிறுத்தி, எங்களை விடுதலை செய்தார்கள். வெளியில் வந்த பிறகு தமிழ்நாட்டைத் தொடர்புகொண்டபோதுதான் வைகோ, நெடுமாறன், சீமான், போன்ற தலைவர்களின் அழுத்தமே எங்களை விடுவித்தது தெரியவந்தது!'' என்று முடித்தார் கயல்.

''எங்களின் ஈழ நண்பர்களைப் பார்ப்பதற்காக, முறைப்படி சென்றோம். ஆனால், எங்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து விசாரிப்பது என்றால், என்ன நியாயம்? நமக்கே இப்படி என்றால், அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாமே...'' என்றார் அவருடன் சென்று இருந்த திருமலை.

இந்த நாட்டைத்தான் இங்குள்ள சிலர் அமைதி நிலவுவதாகச் சொல்கிறார்கள்!

- இரா.தமிழ்க்கனல்

படம்: பொன்.காசிராஜன்

post-8033-0-81359000-1296027852_thumb.jp

post-8033-0-49174100-1296027882_thumb.jp

post-8033-0-91490800-1296028065_thumb.jp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.