Jump to content

Recommended Posts

தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள்.

சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் குறுங்காலத்தில் முடிந்துவிடும். ஆனால் வாழ்க்கை அப்படியல்ல அது நீடித்த நிலையான கவனத்தைக் கவரும் செயலாகும். மற்றவரை வழி நடாத்த ஆதாரமாக அமைவதும் அதுவேயாகும். இந்த உண்மை தனிமனிதனுக்கு மட்டுமல்ல அரசியல், சமுதாயமென்று அனைத்திற்குமே பொருந்தும். நமது வாய் மொழிக்கும் வாழ்விற்கும் பெரும் இடைவெளி இருந்தால் நம்மால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க முடியாது. நமது மக்களுக்கு ஒரு நல்ல அரசியலையும் தர முடியாது.

வாய் மூலம் கட்டளைகளை இட்டு பிள்ளைகளை வளர்க்க பலர் முயற்சியெடுப்பார்கள். நாம் எவ்வளவோ கத்திக்கத்தியும் இந்தப் பிள்ளை சொல் பேச்சு கேட்காமல் நடந்து கடைசி இப்படி நாசமாகி நிற்கிறதே என்று பல பெற்றோர் அழுவார்கள். இப்படியான அழு குரல்களை நாம் பெற்றோரின் தேசிய கீதமாக எங்குமே கேட்க முடியும். அதே பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகள் எப்படியாக வரவேண்டுமென கற்பனை பண்ணினீர்களோ அதற்கமைவாக நீங்கள் வாழ்ந்து காட்டினீர்களா என்று கேட்டுப்பாருங்கள். பெற்றோரிடம் முன்மாதிரியான வாழ்க்கை இல்லை என்ற பதில் உங்கள் கைக்கு இலகுவாகக் கிடைக்கும்.

 நமது பிள்ளைகள் நாம் வாயினால் சொல்வதைவிட செயலினால் வாழ்ந்து காட்டுவதைத்தான் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரின் உடல் அசைவையும் அதன் மூலம் அவர்கள் வாழும் வாழ்வின் உண்மைத் தன்மையையும் அவர்கள் அவதானிக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் செலுத்துவது பெற்றோர் வாழ்ந்து காட்டும் வாழ்வுதான்.

கண்கெட்ட கபோதியான திருதராஷ்டிரனும், கண்களை சீலையால் கட்டிக் கொண்டு குருடி போல வாழ்ந்த அவன் மனைவி காந்தாரியும், சகோதரனான பாண்டுவின் பிள்ளைகளை புறந்தள்ளி நடந்தார்கள். அவர்களுடைய வாழ்வு முழுவதுமே வஞ்சகமும், பக்கச்சார்பும், ஓரங்கட்டுதலுமாக நடந்தது. அந்த வாழ்வை துரியோதனனும் அவனுடைய தம்பிகளும் பார்த்தபடியே வாழ்ந்தனர். நயவஞ்சகமே அவர்கள் வாழ்வாக மாறுவதற்கு அவர்களோடு வாழ்ந்த தாயும், தந்தையும் உடலால் வாழ்ந்து காட்சிய காட்சிகளே காரணம். துரோணாச்சாரியார், பீஷ்மாச்சாரியார் போன்ற எத்தனையோ ஞானிகள் பாடம் சொல்லிக் கொடுத்தும் அந்தப் படிப்பால் அவர்கள் பாடம் பெறவில்லை. பெண் மேல் கொண்ட தீராத ஆசையால் பாண்டு தலைசிதறிச் செத்தான். அவன் பிள்ளைகள் ஐவரும் ஒருத்தியை தமக்கு மனைவியாக்கி, ஆண்டுக்கு ஒருவராக அவளை அனுபவித்தனர். அத்தோடு நில்லாமல் போகுமிடமெல்லாம் பெண்களை மணமுடித்து தாம் பாண்டுவின் பிள்ளைகளே என்பதை புரியவும் வைத்தனர். தவறான பாதையில் போனால் மண்டை சிதறும் என்ற ஒரு நிகழ்வு பாண்டவருக்கு புத்தியைத்தரவில்லை. தந்தையான பாண்டு வாழ்ந்த சபல வாழ்வுதான் பாண்டவர்கள் மனங்களை பெண் சஞ்சலத்தில் வீழ்த்தியது.

கடைசியில் பாண்டவர்கள் திரௌபதி என்ற பெண்ணுக்காகவும், கௌரவர்கள் மண்ணுக்காகவும் மோதி மடிந்தார்கள். 18ம் நாள் போருக்குப் பிறகு பிணக்குவியலில் நின்று இவர்களுடைய வாழ்வை மதிப்பீடு செய்தபோது, மண்ணுக்கு ஆசைப்பட்ட அப்பனுக்கும், பெண்ணுக்கு ஆசைப்பட்ட இன்னொரு அப்பனுக்கும் பிள்ளைகளாகப் பிறந்தவர்களால் இதைவிட வேறென்ன செய்ய முடியும் என்ற உண்மை தெரிய வந்தது. அதனால்தான் 19ம் நாள் போரில் அசுவத்தாமன் இவர்களின் குழந்தைகள், வம்சத்தவர் அனைவரையும் கொன்றதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளையும் கொல்கிறான். வாழ்ந்து காட்டும் பழக்கம் வம்ச பரம்பரையாக நீண்டு செல்லும் என்பதால் அசுவத்தாமன் வம்சக்குலக் கொழுந்துகளையே கருவறுத்தான்.

நாம் சுயநலம் கொண்டு சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளுக்குத் துணை போனால் நம் பிள்ளைகள் அதை அவதானிப்பார்கள். கடைசியில் கபோதியான திருதராட்டிரன் காட்டிய வஞ்சக வழியையே நம் பிள்ளைகளுக்கு நாமும் காட்ட நேரிடும். ஐம்புலன்களை அடக்க முடியாத பாண்டு போல வாழ்ந்தால் ஒழுக்கம் குன்றிய பிள்ளைகளையே உருவாக்க முடியும். இவை கதைகள் மூலம் நாம் அறியும் உண்மைகளாகும். ஆகவேதான் வாயால் புலம்பாது வாழ்ந்து காட்டுவதை சட்டரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டுமென மேலைத்தேய சமுதாயம் விரும்புகிறது.

மேலும் வாழ்ந்து காட்டுவது ஒரு நாளில் நடக்கும் காரியமல்ல, அது பல ஆண்டுகால நீடித்த செயற்பாடாகும். உங்கள் பிள்ளைகள் எப்படி வரப்போகிறார்கள் என்பதை அறிய ஜோதிடரிடம் போகாதீர்கள். கடந்த பத்தாண்டுகளில் உங்கள் உடம்பு வாழ்ந்து காட்டிய வாழ்வை ஒரு கடதாசியில் எழுதிப்பாருங்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள் எப்படி உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள அதைவிட பெரிய ஜோதிட அறிக்கை இருக்க முடியாது.

-       செ.துரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.