Jump to content

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன்

06 ஜூலை 2014

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம்.

அரசாங்கம் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. நாட்டுக்குள்ளிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பவர்களுக்குக் குறிப்பாகச் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதும், ஏற்கனவே, அரச தரப்புப் பிரதானிகளால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டிருக்கிறது. இத்தகையதொரு பின்னணியில், விசாரணைகள் நாட்டுக்கு வெளியில்தான் நடக்க முடியும். அப்படி நடக்குமாயிருந்தால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும்?

இது விசயத்தில் ஏற்கனவே, இது போன்று நாட்டுக்கு வெளியில் நடாத்தப்பட்ட விசாரணைகளை எடுத்துப் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் வட கொரியாவில் நிகழும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு ஒரு குழுவை நியமித்தது. வடகொரியா நிலைமையும், இலங்கை நிலைமையும் ஒன்றல்ல. வடகொரியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட விசாரணைக்குழுவும் இலங்கைக்கான விசாரணைக் குழுவும் ஒன்றல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அந்த விசாரணைக் குழுவை நாட்டுக்குள் விட வடகொரியா மறுத்ததையடுத்து விசாரணைக்குழு எவ்வாறு நாடு கடந்து செயற்பட்டது என்பதை இங்கு எடுத்துப் பார்க்கலாம்.

நாட்டுக்கு வெளியே ஜப்பான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய இடங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டன. வடகொரியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் விசாரணைகளில் பங்குபற்றினார்கள். இது தவிர ஐ.நா. உறுப்பு நாடுகள், ஐ.நா. நிறுவனங்கள், மனித நேய நிறுவனங்கள் போன்றவற்றின் உதவிகளும் பெறப்பட்டன. இவற்றோடு நவீன தகவல் தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்பட்டு சான்றாதாரங்கள் சேகரிக்கப்பட்டன்,உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுத்து உருவாக்கப்பட்ட அறிக்கை இவ்வாண்டு மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவும் இவ்விதம் செயற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. விசாரணைக்குழு தொடர்பில் சில மாதங்களிற்கு முன்பு இன்டிபென்ரென்ற் பத்திரிகைக்கு நவிப்பிள்ளை வழங்கிய ஒரு பதிலில் பின் வருமாறு கூறியிருந்தார். ''சிறிலங்கா விசாரணைக்கு மறுத்தால் பின்னர், அது ஏற்கனவே கிடைத்த தகவல்களிலிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையிலான மதிப்பீடாகவே அமையும்.... சிறிலங்காவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாயிருந்தால் அவை கூட விரும்பிய முடிவுகளை அடையும் நோக்கத்தோடு கவனமாகத் திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட மேடை நிகழ்வைப் போல (stage managed) அமையலாம்' என்று.

அதாவது, அரசாங்கம் சிலசமயம் உத்திபூர்வமாகச் சிந்தித்து விசாரணைக் குழுவிற்கு அனுமதி வழங்கினாலும் அந்த விசாரணைகளை மழைமுறைகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க எத்தனிக்கும் என்று பொருள்.

ஏனெனில், மே 2009இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் சமூக அசைவியக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் தானிருக்கிறது. அதிலும், தனக்குத் தூக்குக் கயிற்றைக் கொழுவ நினைக்கும் ஒரு விசாரணைக் குழு என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் ஒரு விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதித்துவிட்டு அரசாங்கம் வாளாயிருக்குமா?

ஆனால், விசாரணைகள் நாட்டுக்குள் நடந்தால் அதில் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய அனுகூலம் உண்டு. விசாரணைகள் இரு தரப்பு மனித உரிமை மீறல்களையுமே கவனத்திற்கொள்ளப் போகின்றன. அதன்படி தமிழர் தரப்பு மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கும்போது அதற்கு மிக வசதியான ஒரு களம் உலகில் இப்பொழுது இலங்கைத்தீவு மட்டும்தான்.

ஏனெனில், இந்த அரசாங்கம் அதிகம் பலமாகக் காணப்படும் ஒரே களம் இலங்கைத்தீவு மட்டும்தான். எனவே, தான் பலமாக உள்ள ஒரு களத்தில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட தரப்பினரால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வது ஒப்பீட்டளவில் இலகுவானது. அதை நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைத்துச் செய்ய முடியும். அதேசமயம், தனக்கு எதிராகச் சாட்சி கூறக் கூடியவர்களை எதுவித்திலாவது தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கலாம்.

இதில், முதலாவதைச் செய்வது சுபலமானது. ஆனால், இரண்டாவதை அதாவது தனக்கு எதிராகச் சாட்சி கூறக் கூடியவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது சிலசமயம் எதிர்பார்த்த விளைவுகளைத் தராமலும் போகலாம். ஏற்கனவே, நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கழுவின் விசாரணைகளிலிருந்து பெற்ற அனுபவங்கள் அத்தகையவைதான். விசாரணைகளின்போதும், உண்மையின் ஏதோரு ஒரு நுனியாவாது வெளித் தெரியவரும். அதை ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக்கும்.

உண்மையின் ஏதோ ஒரு விகிதமாவது பகிரங்கமாகக் கூறப்படும் ஒரு நிலை ஆரோக்கியமானதே என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகளின் இதயமான பகுதிகளில் அதுவும் ஒன்று. உண்மை எவ்வளவுக்குப் பகிரங்கமாகக் கூறப்படுகின்றதோ அவ்வளவுக்கு அங்கே ஜனநாயக வெளியும் விரிவடையும். உண்மையை வெளியில் கொண்டுவருவது என்பது நீதி நிலைநாட்டப்படுவதற்கான பிரதான முன்நிபந்தனையுமாகும். தவிர உண்மை பகிரங்கமாகக் கூறப்படும்போது கூட்டுக்காயங்களிலும், கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடப்பவர்களுக்கு அது ஒரு விதத்தில் ஆறுதலாக அமைகிறது. அதாவது அது ஒரு கூட்டு உளவளச் சிகிச்சையாக அமைகிறது. இது காரணாகவே தென்னாபிரிக்க நல்லிணக்க முயற்சிகளின்போது உண்மை என்ற வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஆனால், சிறிலங்கா தனது நல்லிணக்க முயற்சிகளின் போது உண்மை என்ற சொல்லை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக கற்றுக்கொண்ட பாடங்கள் என்ற சொற்றொடரை இணைத்துக் கொண்டது.

தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் உருவாகியிருக்கும் ஒரு காலச்சூழலில் மேற்படி தென்னாபிரிக்க அனுபவத்தை இங்கு மீட்டுப்பார்க்க வேண்டும். தென்னாபிரிக்காவில் குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களும் பகிரங்கமாக விசாரணைகளில் பங்குபற்றி உண்மைகளை வெளிக் கொணர்ந்தார்கள். அப்படி உண்மையை வெளிப்படையாக ஒப்புவிக்கும் ஒரு அரசியல் சூழல் எனப்படுவது வெறுமனே விசாரணைக் குழுக்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. மாறாக, அது விசாரணைக் குழுவை உருவாக்கும் தலைமைத்துவத்தின் அரசியல் திடசித்தம் மற்றும் தீர்க்கதரிசனத்தின் பாற்பட்டதொன்று. தென்னாபிரிக்காவில் மண்டேலா அத்தகைய ஒரு பேராளுமையாகக் காணப்பட்டார். அதாவது உண்மையை வெளிக்கொண்டு வருவது என்பது அந்த உண்மையை வெளிக்கொண்டு வரத்தக்கதொரு அரசியல் சூழலை உறுதி செய்வதிலிருந்தே தொடங்குகிறது. அது முழுக்க முழுக்க ஒரு அரசியல் தீர்மானம் தான். அதாவது, மேலிருந்து கீழ் நோக்கி அமுல் செய்யப்படும் ஓர் அரசியல் தீர்மானம். ஆதை விசாரணைக்குழு செய்முறைக்குக் கொண்டு வரும். மாறாக, விசாரணைக்குழுவிலிருந்து அதைத் தொடங்க முடியாது. அதாவது, உண்மையை வெளிக்கொணர்வது என்பதை கீழிலிருந்து மேல் நோக்கிச் செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக, விசாரணைக் குழுக்கள் தொடர்பில் அபகீர்த்திக்குரிய ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கம் இலங்கைத்தீவால் அதைச் செய்யவே முடியாது.

இத்தகையதொரு பின்னணியில் விசாரணைக்குழுவை உள்நாட்டில் அனுமதிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளை விட தீமைகளின் திரட்டப்பட்ட தர்க்கபூர்வ விளைவுகளைக் குறித்தே அரசாங்கம் அச்சப்படும். விசாரணைக் குழுவை அனுமதிப்பதால் மேற்குலகின் அழுத்தங்களை உடனடிக்கு வெட்டியோடலாம். ஆனால், நீண்ட எதிர்காலத்தில் அதன் விளைவுகளின் தர்க்கபூர்வ திரட்சி எப்படி அமையும்?

எனவே, நாடுகடந்த விசாரணைக்கான வாய்ப்புக்களே இப்போதைக்கு அதிகமாகத் தெரிகின்றன. வடகொரிய விசாரணைக் குழுவைப் போல புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விசாரணைக் களங்கள் திறக்கப்படக்கூடும். இது அதிகம் வினைத்திறன் மிக்கதாகவும் இருக்கும். ஏனெனில், விசாரணைக்குத் தேவையான போதியளவு சாட்சிகள் இப்பொழுது நாட்டுக்கு வெளியில் இருக்கிறார்கள். குறிப்பாக, கடைசிக் கட்ட யுத்தத்திலிருந்து தப்பியவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் எத்தகைய அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடாத போதிலும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற வகைகளைச் சேர்ந்த நூற்றுக்காணக்கானவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டுக்கு வெளியில் சென்றுவிட்டார்கள். இவர்கள் ஒன்றில் கடல் வழியாகவோ அல்லது கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கூடாகவோ நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

ஒஸ்ரேலியாவுக்கு கடல் வழியாகப் போனவர்களை யார் அனுப்பியது என்பது தொடர்பில் ஏற்கனவே, பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை இங்கு சுட்டிக்காட்டலாம். அதுபோலவே கட்டுநாயக்காவூடாக வெளியேறும் தமிழர்களை அரசாங்கம் கண்டும் காணாமல் விடுகிறது எனலாம்.

இதன் மூலம் தமிழர்களின் தேசிய இனத்துவ அடர்த்தியைக் குறைக்க முடியும். ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய இருப்பு எனப்படுவது அடிப்படையில் நிலம், சனத்தொகை அடர்த்தி ஆகிய இரண்டு பிரதான பௌதீக அம்சங்களில் தங்கியிருக்கிறது. மே 2009 இற்குப் பின் நிலம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் பிடியில் தான் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வன்னியிலும் கிழக்கிலும் சன அடர்த்தி தமிழர்களுக்குப் பாதகமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் யுத்தமில்லாத காலத்தில் சன அடர்த்தியைக் குறைப்பதற்கு புலம்பெயர்ச்சியைத் தூண்ட முடியும். தமிழர்களுடைய சன அடர்த்தி குறையக் குறைய தேசிய இருப்பும் மெலிவுறும்.

எனவே, தமிழர்களுடைய தேசிய இருப்பை மெலியச் செய்வதற்கும் புலம்பெயர்ச்சி ஊக்குவிக்கப்படலாம். எனது முன்னைய கட்டுரை ஒன்றில் கூறப்பட்டதுபோல சாரசரியாக ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட ஆயிரத்துக்குக் குறையாத தமிழர்கள் கொழும்பில் உள்ள தூதரகங்கள் ஊடாக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் கணிசமான தொகையினர் வம்சவிருத்தி செய்யப்போகும் மணப் பெண்கள். இவர்கள் தவிர முளைசாலிகளும், தொழில் திறன் பெற்றவர்களும் வருடா வருடம் வெளியேறுகிறார்கள். இவ்வாறு தமிழர்களுடைய சன அடர்த்தி குறைவது தமிழர்களுடைய தேசிய இருப்பைக் குலைக்க நினைப்பவர்களுக்கே சாதகமானது.

ஆனால், இப்புலப்பெயர்வு அரசாங்கம் எதிர்பாராத ஒரு உடனடிப் பின்னுதைப்பைக் கொடுக்கப்போகிறது. குறிப்பாக, 2009 மே க்குப் பின் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் வரும் மாதங்களில் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு முன் தோன்றக் கூடும். அது விசாரணைக் குழுவின் இலக்குகளை இலகுவாக்கிவிடும்.

உண்மையில் விசாரணைக்குழு இனிமேற்றான் உண்மைகளைச் கண்டுபிடிக்க வேண்டும் என்பதல்ல. அவர்களுக்கு எல்லாமே ஏற்கனவே தெரியும். போரின் இறுதிக் கட்டத்தில் வெளிச்சாட்சிகள் இருக்கவில்லை என்பது முழு அளவில் உண்மையல்ல. தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பொறுத்த வரை இப்பூமியில் இனி ரகசியம் என்ற ஒன்று அநேகமாகக் கிடையாது. போரின் இறுதிக் கட்டத்தில் சக்தி மிக்க நாடுகளின் சக்தி மிக்க நவீன செய்மதிக் கமராக்கள் எல்லாவற்றையும் படம்பிடித்தன. அது பருந்துப் பார்வையிலிருந்து பெறப்பட்ட படங்கள். இப்பொழுது அவற்றை கிடைப்பார்வையிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சான்றாதரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்போகின்றார்கள் என்பதே சரி. இதை இன்னும் துலக்கமாகக் கூறின் அவர்களிடம் ஏற்கனவே இலத்திரனியல் சான்றாதாரங்கள் உண்டு. இனி அவற்றை உயிருள்ள சாட்சியங்களின் மூலம் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தினால் சரி.

ஆனால், நாட்டுக்கு வெளியே நடக்கக்கூடிய விசாரணைகள் அதிகபட்சம் அரசாங்கத்துக்கே பாதகமாய் அமையும். ஏனெனில், தற்பொழுது தமிழ்த் தேசியத்தின் கூர்முனை போல காணப்படுவது புலம்பெயர்ந்த சமூகம்தான். இந்நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படக்கூடிய விசாரணைகளின் போது தமிழர் தரப்புக்கு எதிரான சாட்சியங்களை முன்னுக்குகு; கொண்டு வர முடியாத ஒருவித உணர்ச்சிகரமான சூழல் அங்கேயுள்ளது. இலங்கைத் தீவுக்குள் மட்டும் தான் அதற்கான ஒப்பீட்டளவில் ஆகக் கூடிய பட்ச வாய்ப்புக்கள் உண்டு.

இந்த அடிப்படையில் பார்த்தால் விசாரணைகளை நாட்டுக்கு வெளியே தள்ளி விடுவது அரசாங்கத்திற்கே அதிகம் பாதகமானது. அதாவது நாட்டுக்குள் வைத்தாலும் கெடுதிதான். நாட்டு வெளியே நடந்தாலும் அதைவிடக் கெடுதிதான்.

இதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது விசாரணைக்குழுவின் மீதான நம்பிக்கைகளை மிகைப்படுத்திக் கட்டியெழுப்பவதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. விசாரணைக்குழுவினால் விளையப்போகும் உடனடி நன்மை ஆவணப்படுத்தல்தான். அதாவது இது வரையிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஆவணங்களும் சாட்சியங்களும் சான்றாதாரங்களும் அனைத்துலகத் தரத்திலானதும், அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றதுமாகிய ஒரு பொறிமுறைக்கூடாக ஆவணப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படப்போகின்றன. ஆவணச் செயற்பாட்டாளராகிய ஒரு நண்பர் கூறியது போல இவ்வாவணங்களுக்கு ஒரு சட்ட அந்தஸ்து கிடைக்கப்போகிறது. இது தான் முக்கியம். அதாவது ஆவணப்படுத்துகை. தகவல் யுகத்தில் அதாவது மென்சக்தி அரசியலைப் பொறுத்த வரை தகவல்களை சட்ட அந்தஸ்துள்ள ஆவணங்களாக்கித் தொகுப்பது என்பது எல்லாவற்றுக்கும் தொடக்கமாகும். எல்லாவற்றுக்கும் அடிப்படையுமாகும்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட வடகொரியாவுக்கான விசாரணைக் குழுவின் தலைவரான மைக்கல் கிர்பியின் (Michael Kirby) கூற்றை இங்கு மேற்கோள் காட்டலாம். அவர் ஒரு ஒஸ்ரேலியர். அங்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். முன்னம் 1990களில் கம்பூச்சியாவுக்கான ஐ.நா.வின் சிறப்புத்தூதுவராகச் செயற்பட்டவர். இவரிடம் வடகொரிய விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் பின்வருமாறு கேட்டார். ''இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை ஏதும் உடனடி மாற்றங்களை வடகொரியாவில் கொண்டுவரும் என்று நம்புகிறீர்களா?'. இக்கேள்விக்கு தனது கம்பூச்சிய அனுபவத்தை நினைவு கூர்ந்து கிர்பி பின்வருமாறு பதிலளித்தார்...... ''சாட்சியங்களை ஆழமாகச் செவிமடுப்பதும், கதைகளை சேகரிப்பதும், அவற்றை பதிவு செய்வதும் எதிர்காலப் பயன்பாட்டிற்;காக அவற்றை அங்கே வைப்பதும் சற்றுப் பிந்தியாவது நல்ல கனிகளை தரக்கூடும்'... என்று. கம்பூச்சியாவில் ஏறக்குறைய ஒரு தசாப்த கால கட்டத்தில் தான் சர்வதேச விசாரணை மன்று உருவாக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இலங்கைத்தீவிற்கும் இது சில விசயங்களில் பொருந்தும். விசாரணைக்கழுவானது சான்றாதாரங்களையும் சாட்சியங்களையும் ஆவணப்படுத்துகிறது. அதை அவர்கள் தமக்கு வாய்ப்பான ஒரு காலத்தில் வாய்ப்பான விதத்தில் பயன்படுத்துவார்கள். அதாவது, விசாரணைக்குழு தனது பத்து மாத காலப் பணியை முடிக்கும்போது இலங்கை அரசாங்கத்தின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுவிடும் என்பதல்ல. மாறாக, பிறகொரு காலம் அப்படி வைக்கத் தேவைப்படும் கத்தி இப்பொழுதிருந்து கூர் தீட்டப்படுகிறது என்று பொருள்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109015/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.