Jump to content

முஸ்லிம்களின் மீதான வன்முறைகள்: உள்ளோட்டம் என்ன? நிலாந்தன்


Recommended Posts

aluthgama1_CI.png

''ஆயிரம் சமர்களின் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது' 

-புத்தர் -

மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்தீர்மானத்துக்கமைய மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஓர் அனைத்துலகத் தீர்மானத்தில் அப்படி சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் அத்தீர்மானத்தின் பிரகாரம் ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படும் ஒரு கால கட்டத்தில் அளுத்கமவிலும் பேருவளையிலும் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால் அனைத்துலக அளவில் ஏற்கனவே அபகீர்த்திக்குள்ளாகியிருக்கும் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களையடுத்து மேலும் அபகீர்த்திக்குள்ளாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனால், ஆழமாகப் பார்த்தால் இதில் கிடைக்கக்கூடிய அபகீர்த்தியோடு அரசாங்கத்திற்கு நன்மைகளும் உண்டு என்றே சிந்திக்க வேண்டியிருக்கும்.

முதலில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்த காலச் சூழலை சற்று ஆழமாகவும் தொகுத்தும் பார்க்க வேண்டும்.  அதை அப்படி மூன்று பரப்புகளில் பார்க்கலாம். முதலாவது, உள்நாட்டில். இரண்டாவது பிராந்திய மட்டத்தில். மூன்றாவது அனைத்துலக அரங்கில்.

உள்நாட்டில், இம்மாதம் முக்கியமாக இரண்டு நிர்ணயகரமான நகர்வுகள் குறித்து ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் காணப்பட்டன. நவிப்பிள்ளையின் விசாரணைக் குழு இம்மாதம் நியமிக்கப்படலாம் என்பது முதலாவது நகர்வு. மற்றது தென்னாபிரிக்காவின் சமாதான முன்னெடுப்புக்கள் மாத இறுதியளவில் முன் நகர்த்தப்படலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு.

இது தவிர தலிபான் போன்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இலங்கைத்தீவை ஓர் இடைஊடாட்டத் தளமாகப் பயன்படுத்துவது குறித்து இன்ரபோல் ஒரு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இவைதவிர அரசாங்கத்தின் சக்தி மிக்க இரு பிரதானிகளும் நாட்டில் இல்லாதபோதே மேற்படி வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.  இது உள்நாட்டு நிலவரம்.

இரண்டாவது, பிராந்திய நிலவரம். இந்தியாவில் நரேந்திர மோடி பதவிக்கு வந்தமை முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இப்பிராந்தியத்தில் மத அடிப்படைவாதம் பெறக்கூடிய அதியுச்ச பதவி அது. ஆகப் பெரிய அந்தஸ்தும் அது. இதனால் இப்பிராந்தியத்தில் அடிப்படைவாத சக்திகள் மேலும் உற்சாகமடையக் கூடும் அல்லது வன்மங்கொள்ளக் கூடும் என்றவாறான ஊகங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிரான இந்து அடிப்படை வாதமும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அடிப்படை வாதமும் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வாய்ப்பாட்டுக்கிணங்க நெருங்கி உறவாட முடியும் என்ற ஓர் அச்சம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது காரணமாக புதிய உத்வேகத்தைப் பெற்ற அடிப்படைவாதிகள் அளுத்கம மற்றும் பேருவளையை ஒரு பலப்பரீட்சைக் களமாகப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்ற கேள்வியும் உண்டு. இது இரண்டாவது பின்னணி.

மூன்றாவது அனைத்துலகப் பின்னணி. குறிப்பாக, மேற்காசியாவில் இஸ்லாமியத் தீவிரவாதமானது அண்மை வாரங்களில் ஒரு புதிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. சிரியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பரந்த இஸ்லாமியப் பேரரசு ஒன்றை உருவாக்கப்போவதாகக் கூறி படுவேகமாக முன்னேறி வருகிறது. அண்மையில் ஈராக்கில் அது எண்ணெய் வளம் மிக்க தலைநகர் ஒன்றைக் கைப்பற்றி அங்கிருந்த வங்கிகளில் இருந்து செல்வமனைத்தையும் தன்வசப்படுத்தியது. இதனால் இப்பூமியில் இப்பொழுது உள்ள எல்லா ஆயுதமேந்திய இயக்கங்களையும் விட ஆகப் பெரிய பணக்கார இயக்கமாக அது எழுச்சி பெற்றுள்ளது.

பின்லேடனின் அல்கெய்தாவை முன்னோடியாகக் கொண்ட அந்த இயக்கம் மேற்காசியாவின் அரசியல் எல்லைகளை மாற்றி வரையத் தொடங்கிவிட்டது. பின்லேடனும் ஒரு உலகு தழுவிய கனவுடனிருந்தவர்;. ஆனால், அவருடையது அதிகபட்சம் கெரில்லாப் போர்முறைதான். ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமானது சிரியாவும் ஈராக்கும் உள்ளிட்ட பெரிய நிலைப்பரப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது. உலகின் ஏகப்பெரு  வல்லரசாகிய அமெரிக்காவினால் பயிற்றப்பட்ட ஈராக்கிய படையினர் ஈசல்களைப் போல சுட்டுப் பொசுக்கப்படுகிறார்கள். புறமுதுகிடுகிறார்கள்.

தலிபான்களைப் போலவே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் தொடக்கத்தில் ஓர் அமெரிக்கத் தயாரிப்புத்தான். சில ஆண்டுகளுக்கு முன் ஜோர்தானிலும் துருக்கியிலும் வைத்து அமெரிக்கர்கள் அந்த இயக்கத்திற்கு பயிற்சி அளித்ததாக தகவல்கள் உண்டு. சிரிய அரசை கவீழ்ப்பதற்காக அவ்வாறு பயிற்றப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்  ஒரு கட்ட வளர்ச்சிக்கு பின் அமெரிக்காவால் கட்டுப்படுத்தவியலாத ஒரு வளர்ச்சிபை; பெற்றுவிட்டது. அதன் எழுச்சி மேற்கு நாடுகளுக்கு உடனடிக்கு அச்சுறுத்தல்தான். ஆனால் அதேசமயம் அது இன்னொரு புறம் முஸ்லிம்களின் மத்தியில் மேலும் பிளவுகளை உருவாக்குமொன்றாகவும் மாறிவருகிறது. ஷpயா முஸ்லிம்களுக்கும் சன்னி முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதலால் ஏற்கனவே அதிக லாபமடைந்தது மேற்கத்தைய  எண்ணெய் வியாபாரிகள்தான்.

இம்முறையும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெருவளர்ச்சி எனப்படுவது இன்னொரு விதத்தில் ஷpயா, சன்னி மோதல்தான். எனவே, ஸ்திரமற்ற ஒரு மேற்காசியாவை உருவாக்கி அதில் மேலும் லாபமடையப்போவது மேற்கத்தைய எண்ணெய் வியாபாரிகள் தான்.

எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அதன் பரந்தகன்ற இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளைப் பற்றி அறிவித்தபோது அதில் இந்தியாவும் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதை இங்கு முக்கியமாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஒரு புறம் ஸ்திரமற்ற மேற்காசியாவினால் எண்ணெய் வியாபாரிகள் லாபமடைவார்கள். இன்னொரு புறம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெருவளர்ச்சியானது அரசியல் மற்றும் படைத்துறை ரீதியாக மேற்கிற்கு ஒரு விதத்தில் அச்சுறுத்தலும் தான். தலிபான்களைப் போல, பின்லேடனைப் போல, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் அமெரிக்காவின் ஊட்டச்சத்தைத் தொடக்கத்தில் பெற்றிருந்தாலும் எதிர்காலத்தில் மேற்கு நாடுகளால் கையாளக் கடினமான எதிர்பாராத வளர்ச்சிகளைப் பெறக்கூடும்.

இப்படியாக இஸ்லாமியத் தீவிர வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சிகளைக் குறித்த மேற்கத்தைய அச்சங்களின் பின்னணியில்தான் இலங்கைத்தீவில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களும் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இலங்கைத்தீவில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடமாட்டம் தொடர்பான இன்ரபோலின் எச்சரிக்கை வெளிவந்திருக்கும் ஒரு பின்னணியிலேயே மேற்படி தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

எனவே, மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது அதாவது, முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்த கால கட்டத்தைக் கருதிக் கூறின் அதனால், அரசாங்கத்திற்குக் கிடைத்த அபகீர்த்தியோடு சேர்த்து நன்மைகள் உண்டு என்றே தோன்றுகின்றது. அந்த நன்மைகள் வருமாறு.

நன்மை ஒன்று, இனப்பிரச்சினையைவிட புதிய பிரச்சினைகளைப் பெரிதாக்குவதன் மூலம் இனப்பிரச்சினையின் மீதான குவி மையத்தைச் சிதறச் செய்யலாம். குறிப்பாக நவிப்பிள்ளையின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஒரு பின்னணியில் புதிதாக ஒரு பிரச்சினையை பெரிதாக்குவதன் மூலம் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கலாம். இப்படிப் புதிது புதிதாகப் பிரச்சினைகளை உருவாக்குவது ஆட்சியியலில் ஒரு வகை உத்தியாகப் பார்க்கப்படுகின்றது. பிரச்சினைகளைத் தீர்க்காது. அவற்றை மித நிலையில் அதாவது கையாளப்படத்தக்க ஒரு நிலையில் பிரச்சினைகளாகவே தக்கவைத்திருப்பது அல்லது அவற்றுக்கு நிகராக அல்லது அவற்றைவிடப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பல பிரச்சினைகளை ஒரே நேரத்தில் கையாள்வது. இதன் மூலம் ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையால் வெட்டியோடலாம். அல்லது திசை திருப்பலாம்.  உலகின் பலவீனமான ஜனநாயகக் கட்டமைப்புக்களில் இது ஒரு ஆட்சித் தந்திரமாக வெற்றிகரமாகக் கைக்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது பிரச்சினைகளைப் பேணிக் கையாளும் ஒரு ஆட்சிமுறை. சிங்கள அரசியல் தலைவர்கள் கடந்த பல தசாப்தங்களாக இதில் நன்கு கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். தனது முன்னோடிகளிடமிருந்து இந்த அரசாங்கம் அந்த அனுபவத்தைக் கிரகித்திருப்பதாகவே தெரிகிறது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். அரசின் அங்கமாகவுள்ள ஒரு தரப்பினரே இவ்வன்முறைக்குப் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கமே பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு அதை ஒரு காரணமாகக் காட்டி ஏனைய பிரச்சினைகளை ஒத்திவைக்க அல்லது திசை திருப்ப அல்லது குழப்பிவிட முயற்சிப்பதாக அனைத்துலக சமூகம் அரசாங்கத்தைக் குற்றங் கூறாதா? என்பது.

உண்மை. அதற்கான வாய்ப்புகள் உண்டுதான். ஆனால், மற்றொரு யதார்த்தத்தையும் கவனிக்க வேண்டும். இந்த அரசாங்கம் தனியே சிங்களக் கடுங்கோட்பாளர்களை மட்டும் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் அல்ல. இதில் முன்னாள் இடதுசாரிகளும் உண்டு. வலது குறைந்த இடதுசாரிகளும் உண்டு. ராஜித சேனநாயக்க போன்றவர்களும் உண்டு. டிலான் பெரேரா போன்றவர்களும் உண்டு. இது தவிர தமிழர்களும் உண்டு. முஸ்லிம் தலைவர்களும் உண்டு.

நடந்து முடிந்த வன்முறைகளிற்குப் பின்னரும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் நிற்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய ஒரு பலம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, சிங்களக் கடும் போக்காளர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமே தவிர அவர்கள் தான் அரசாங்கம் அல்ல அதனால், அவர்களைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று அரசாங்கம் கேட்குமிடத்து உலக சமூகம் அதற்கு  ஓரளவுக்கு ஒத்துக்கொள்ளும்.  குறிப்பாக, முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் நிற்கும் வரை உலகத்தை அப்படி நம்பச் செய்வது அதிகம் கஸ்ரமாயிராது.

எனவே, எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளைக் காரணம் காட்டி அரசாங்கம் தனக்கு வேண்டிய அவகாசங்களைப் பெற முயற்சிக்கக் கூடும். இது முதலாவது நன்மை.

இரண்டாவது நன்மை – பிராந்திய அளவில் இரண்டு மத அடிப்படைவாதங்கள் ஒரு 'பொது எதிரிக்கு' எதிராகக் கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புக்களை பரீற்சித்துப் பார்க்க இது உதவும் ஒரு பரீற்சார்ந்த முயற்சி இது என்பதால் இதன் இறுதி விளையைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மூன்றாவது நன்மை - இலங்கைத்தீவின் சிங்களப் பௌத்த அடிப்படைவாதமானது உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானதாகத் தன்னை அடையாளப்படுத்தக் கூடிய ஓர் உலகச் சூழல் இப்பொழுது காணப்படுகின்றது.

சிங்களக் கடுங்கோட்பாளர்கள் தாங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடனேயே மோதி வருவதாகக் கூறிவருகிறார்கள். எனவே, உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடிவரும் மேற்கு நாடுகளை இது விசயத்தில் நெருங்கிச் செல்ல முடியும் என்றும் அவர்கள் சிந்திக்கக்கூடும்.

நாலாவது நன்மை – தமிழர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் ஒரு பாடம் படிப்பித்திருப்பதுடன் இச்சிறு தீவில் அவர்களுக்கிருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்தியிருப்பதாகவும் மத அடிப்படைவாதிகள் சிந்திக்க இடமுண்டு. ஆனால், அதற்காக அண்மைய வன்முறைகளோடு அவர்களின் வேகம் தீர்ந்து போய்விட்டதாகவோ அல்லது அவர்களுடைய காழ்ப்புணர்ச்சி தணிந்து போய்விட்டதாகவோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எதிர்காலத்தில் புதிய வன்முறைகளுக்கான அனைத்து அடிப்படைகளும் அப்படியே திறக்கப்பட்ட நிலையில்தான் உள்ளன.

எனவே, மேற்கண்டவைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் தற்செயலானவை என்றோ அல்லது தன்னியல்பானவை என்றோ கருதத்தக்க புறநிலைகள் அநேகமாக இல்லை எனலாம். ஐ.நா. மனித உரிமை அணையாளரது விசாரணைகள் தொடங்கப்படவிருக்கும் ஒரு பின்னணியில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டதை எந்த ஒரு புத்திக்கூர்மை மிக்க அதவானியும் தவறான முடிவு என்றே கூறுவார். ஆனால், அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதாவது நல்லிணக்கத்தின் கதவுகளை மூடிவைத்துக் கொண்டு வேறெல்லாக் கதவுகளையும் திறக்க முற்படும் ஒரு அரசாங்கத்தின் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் மேற்படி தாக்குல்களின் பின்னிருக்கக்கூடிய உள்நோக்கங்களை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.

மனித உரிமை அணையாளரது விசாரணைக் குழுவெனப்படுவது கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்துலக சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகித்திருக்கக் கூடிய அழுத்தங்களில் ஒப்பீட்டளவில் ஆகக்கூடிய பட்சம் தூலமான ஒரு அழுத்தம் எனலாம்.

இதற்கு முந்திய எல்லா அழுத்தங்களும் அதிக பட்சம் அரூபமானவை. செயலுக்குப் போகாதாவை. ஆனால், இம்மாதம் உருவாக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவானது ஒப்பீட்டளவில் தூலமானது. செயல் பூர்வமானது. எனவே, அரசாங்கம் தனக்குச் சாதகமான தெரிவுகளை உருவாக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளிருக்கிறது. விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்று வீரங்காட்டினாலும் யதார்த்தம் அதுவல்ல. விசாரணைக் குழு முன்னே வைக்கும் ஒவ்வொரு அடியும் அரசாங்கத்திற்கு நெருக்கடிதான்.  குறிப்பாக, நல்லிணக்கத்தின் கதவுகளை மூடி வைத்திருக்கும் வரை அது நெருக்கடிதான். பிரதான பிரச்சினையைத் தீர்க்கத் தயாரில்லையென்றால் புதிய பிரச்சினைகளை உற்பத்தி செய்துதான் நிலைமைகளை வெட்டியோட வேண்டியிருக்கும்.

ஆனால் பிரச்சினைகளைத் தக்கவைத்துக் கையாளும் பொறிமுறையே ஒரு பிரச்சினைதான். எவ்வளவுக்கெவ்வளவு பழைய பிரச்சினைகளைப் புதிய பிரச்சினைகளால் வெட்டியோட முயற்சிக்கப்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு நாடும் முடப்பட்டுக்கொண்டே போகும். எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாடு அல்லது ஒரு சமூகம் மூடப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதை வெளிச்சக்திகள் வந்து திறக்கும் நிலைமைகளும் அதிகரித்துக் கொண்டேபோகும். ஏனெனில், அய்ன் ரான்ட் கூறியதுபோல, ''நீங்கள் யதார்த்தத்தைப் புறக்கணிக்கலாம். ஆனால், யதார்த்தத்தைப் புறக்கணிப்பதால் வரும் விளைவுகளை உங்களால் புறக்கணிக்க முடியாது'.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108701/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.