Jump to content

ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன? - ஒரு காலங்கடந்த கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன? - ஒரு காலங்கடந்த கேள்வி

விஜய்

இந்தக் கேள்வி, அண்மைக்காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகளினால் உருவானதாகும்.

இந்த வகையில் இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பிய வாழ்த்துச்செய்தி, நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி வந்தவேளையில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அதன் விசேட அறிக்கையாளர் சாலோக பெயானி சமர்ப்பித்துள்ள அறிக்கை என்பன இந்தக் கேள்விக்கு அடிப்டையான அறிக்கைகளாகும்.

இரா.சம்பந்தன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இலங்கைத் தமிழர்களை குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக, அரசாட்சிக் கட்டமைப்பின் வேறுபட்ட மன்றங்களுக்கு ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும்' எனத் தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்துச் செய்தியில், வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக - அதாவது இலங்கை அரசின் கடும்போக்கு நிகழ்ச்சித்திட்டமாக - ஆறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,

1. தங்களது வாழிடங்களாகவும், வாழ்வாதார இடங்களாகவும் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த இலங்கையின் வடக்கு, கிழக்கிலே இருக்கின்ற வளமும் பெறுமதியும்மிக்க பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமித்துள்ளது. தமது சொந்த நிலங்களுக்கு மீளச்செல்ல முடியாமல் அது தமிழ் மக்களைத் தடுக்கின்றது. மக்களிடம் அவர்களது வாழ்விடங்களை மீளக்கையளிப்போம் என உச்ச நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறுகிறது. இதன் மூலம், தமிழ் மக்களை படுமோசமான ஒரு வாழ்நிலைக்குள் அது தள்ளியுள்ளது.

2. வடக்கு, கிழக்கு பிராந்தியத்தின் இனப்பரம்பல் முறைமையினை மாற்றியமைக்கும் நோக்குடன், நில ரீதியான அரச உதவிகளை வழங்கி, பெரும்பான்மை இன மக்களை அரசாங்கம் அங்கு முனைப்போடு குடியேற்றுகிறது.

3. வடக்கு, கிழக்கில் இருக்கின்ற இந்துத் தமிழ் மக்களுக்கு மதரீதியாகவும் கலாசார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாற்று இடங்களை அழித்தும், மாற்று நிர்மாணம் செய்தும், தமிழர் நிலத்தின் பண்பாட்டு மற்றும் மொழியியல் அடையாளங்களில் அடிப்படையான மாற்றங்களை அரசாங்கம் செய்கின்றது.

4. மிகப் பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசாங்கமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் போட்டு வருகிறது.

5. வடக்கு, கிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாக மீறுவதன் மூலம், சட்டத்திற்கு முன்னால் அவர்களுக்கு நீதியை நிராகரித்து, அவர்களை இராண்டாந்தர பிரஜைகளாக அரசாங்கம் தரம் தாழ்த்துகிறது.

6. வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் தொகையின் விகிதாசார அளவீட்டிற்கு மிக அதிகப்படியான அளவில் இருக்கின்ற இராணுவத்தின் ஆக்கிரமிப்பு பிரசன்னம், இராணுவத்திற்காக நிர்மாணிக்கப்படுகின்ற நிலையான வீட்டு வசதிக் கட்டுமானங்கள், சாதாரண மக்களது வாழ்வின் மீது இடப்படுகின்ற பாராதூரமான இடையூறுகள், பெண்கள் மீதான வன்முறைகள், விவசாயம், மீன்பிடி, வணிக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவது என்பன பாரதூரமான எதிர்ப்புணர்வுமிக்க தாக்கங்களை மக்களின் மனங்களில் ஏற்படுத்துகின்றன என்பனவே சம்பந்தன் குறிப்பிட்டுள்ள விடயங்களாகும்.

இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ள இவ் ஆறு விடயங்களும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டனவா? அல்லது இலங்கை அரசின் அண்மைக்கால கடும்போக்கு நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டனவா? என்ற தெளிவின்மை இருப்பினும், முக்கியமான பிரச்சினைகள் குறிப்பிடப்படாமல் விடப்பட்டுள்ளன என்பதுவும், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் கூட சரியான முறையில் விபரிக்கப்படவில்லை என்பதுவும் தெளிவாகிறது. போர்க்குற்றம், இன அழிப்பு என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மிக அண்மையில் கூட்டமைப்பினர் உரத்துப் பேசிய 'இறந்தவர்களின் நினைவு தினம்' பற்றிக் கூடக் குறிப்பிடவில்லை.

இது ஏன் என்பதனைப் புரிந்துகொள்ள முடியாத போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் இத்தகையதொரு அறிக்கையிடலைச் செய்வது அதன் அரசியலை கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. அது தெரிந்தே செய்கிற தவறா?, அல்லது அதன் அரசியல் வரட்சியால் ஏற்பட்ட தவறா?

இந்திய மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சில குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பிரச்சினைக்குத் தீர்வுகாண இலங்கை ஜனாதிபதியின் வருகையைப் பயன்படுத்த வேண்டும் என மோடியை வலியுறுத்தியுள்ளது. இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள்,

1. இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்பும் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அதற்கான முயற்சிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

2. இறுதிக்கட்ட மோதலின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து இதுவரையிலும் விசாரணை எதுவும் நடைபெறவில்லை

3. வடக்கு மாகாண சபை தேர்தல்கள் நடைபெற்று புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட பின்பும் அந்த அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலை நீடிக்கிறது.

4. இராணுவ அதிகாரி ஒருவரே வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நீடிக்கிறார்.

5. இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்கு அதிகாரப் பரவலாக்கலுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

6. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ள நிலையில் தமிழர்களின் புனர்வாழ்விற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது என்பனவே ஜி.இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ள விடயங்களாகும்.

ஒப்பீட்டளவில் இரா.சம்பந்தனின் செய்தியில் குறிப்பிடப்படாத முக்கியமான பிரச்சினைகள் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர் சாலோக பெயானி சமர்ப்பித்துள்ள அறிக்கை, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்த அறிக்கையாகும். அதில்

* இப்போதும் இடம் பெயர்ந்த மக்களின் தொகையினர் எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் வேண்டியிருக்கிறது.

* தமது பூர்வீக நிலங்களுக்குச் செல்ல முடியாதிருப்போர் எத்தனை பேர் என்பது தெரியாமல் இருக்கிறது.

* இடம் பெயர்ந்த மக்களின் கணக்கீட்டுத் தொகை என்பவற்றை ஏற்படுத்தி நியாயபூர்வமான தீர்வு காணப்பட வேண்டும்

* வடக்கில் இடம்பெயர்ந்து திரும்பிச்சென்ற அல்லது வேறு எங்கோ குடியமர்த்தப்பட்ட மக்கள் இப்போதும் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு புதிய வீட்டு வசதிகள், சமூக சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதார வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற தேவைகள் உண்டு போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த வருடம் இலங்கை வந்திருந்த சாலோக பெயானி வடபகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களைச் சந்தித்திருந்தார். அந்தப் பின்னணியில் வடபகுதி இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்வறிக்கைகளை நோக்குகிறபோது, ஈழத்தழிர் பிரச்சினைகளை முழுமையாக குறிப்பிடப்படாத ஒரு தன்மையையே காணமுடிகிறது. எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியாக இனங்காணப்படுவது, சரியான முறையில் முன்வைப்பது காலம் கடந்தாயினும் உடனடியாகச் செய்யப்படவேண்டிய பணியாக இருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் அறிவும், உணர்வும் உடையதாக முன்வைக்கபட வேண்டும்.

இந்த அறிக்கைகளில் பொதுவாக இனம்தெரியம் பண்பு என்னவெனில், ஈழத்தழிழர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லில் உள்ள வேறுபாடாகும். இலக்கிய வழியாக நீண்டகாலப் பயன்பாடு கொண்டதும் இலங்கையில் வாழும் தமிழர்களைக் குறிக்க பொருத்தமாக அமையக் கூடியதுமான ஈழத்தமிழர் என்ற சொல், சிங்கள பெருந்தேசிய வாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையால், பிராந்திய - சர்வதேசிய ரீதியில் அதிகம் விரும்பப்படாதமையால் கைவிடப்பட்டிருப்பது தெரிகிறது.

சிங்களப் பெருந்தேசியவாதத்தின் விருப்பினாலோ, பிராந்திய - சர்வதேசிய நலன்களின் அடிப்படையிலோ ஈழத்தமிழர்களின் தேசிய இன அபிலாசைகள் தீர்மானிக்கப்பட முடியுமா? என்ற கேள்வி இன்று கேட்கப்படவேண்டிய கேள்வியாகும். அதற்கு நாம் பதிலிறுப்பதற்கு எமது பிரச்சினையை நாம் சரிவர இனங்கண்டு முன்வைக்கபட வேண்டிய தேவையிருக்கிறது என்பது உணரப்பட வேண்டும்.

பெரும் வலியுடன் எழுவதற்கான காலமிது.

இன்னும் தொடரும்...

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=e2b31d3c-d65f-499a-bca2-7771ba4ac7a1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நம்பகமான ஒரு மாற்றுத் தீர்வின் அவசியம் குறித்து..

விஜய்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன? - ஒரு காலங்கடந்த கேள்வி - 2

தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமரிடம் கையளித்துள்ள மனுவில், ஈழத்தமிழர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் - தமிழ் அரசியல் எழுத்தாளர்களிடத்தில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிற விடயம் - கவனத்திற்குரியதாகின்றது.

அந்த மனு, ஈழத்தமிழர்களின் பிரச்சினை பற்றியதல்ல. ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு பற்றி இந்தியப் பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளாகவே அமைகின்றது. மனுவில் ஈழத்தமிழர்கள் தொடர்பில் குறிப்பிட்ட விடயம்,

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, சிறுபான்மை தமிழ் மக்கள் மீது இனக்கொலைகள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில், தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா கொண்டுள்ள உறவு தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வலிமையான உணர்வலைகள் தோன்றியுள்ளன. இந்த அடிப்படையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல் மற்றும் இனவொதுக்கல் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, ஏற்கனவே தமிழ்நாட்டு சட்டசபையில் நான்கு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. (இந்த அடிப்படையில்) நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை பொறுப்புக்கூறத்தக்க வகையிலும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும். மேலும், குறித்த தீர்மானம், இலங்கைக்குள்ளும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனியரசு அமைப்பதற்கான அவர்களது விருப்பை அறியும் வகையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். (நன்றி யதிந்திரா - 07.06.2014 தினக்குரல்)

மனுவில், ஈழத்தமிழர்கள் சிறுபான்மை தமிழ் மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில்,

'உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது, சிறுபான்மை தமிழ் மக்கள் மீது இனக்கொலைகள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,

'இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் மற்றும் இனவொதுக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் மனுவில், இனவொதுக்கல் பற்றி குறிப்பிட்டிருக்கிறமை கவனத்திற்குரியது. இனக்கொலைகள், இனப்படுகொலை, தொடர்ச்சியான மனித உரிமை மீறல் ஆகிய விடயங்கள் பலராலும் பல அமைப்புக்களாலும் குறிப்படப்பட்டவையாகும்.

இம் மனுவில் குறிப்பிட்டுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அன்றி, ஏனைய விடயங்களினால் இம் மனு அதிக முக்கியத்துவமுடையதாகிறது.

இம்மனுவில் உள்ள முக்கியமானதொரு விடயம், ஈழத்தமிழர் தொடர்பில் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தோன்றியுள்ள வலிமையான உணர்வலைகள் பற்றியதாகும். மனுவில்,

'இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது, சிறுபான்மை தமிழ்மக்கள் மீது இனக்கொலைகள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்ற நிலையில், தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா கொண்டுள்ள உறவு தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் வலிமையான உணர்வலைகள் தோன்றியுள்ளன' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைக்கு ஈழத்தமிழர்களின் அரசியலில் முக்கியமானதொரு வகிபாகத்தை 'தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தோன்றியுள்ள வலிமையான உணர்வலைகள்' பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்தில் அரசியல் தாக்கமுடைய ஒரு விடயமாகவும் அமைந்திருக்கிறது. தமிழகத்தை, இந்தியா எனும் உணர்விலிருந்து விலகிச் செல்ல வைக்கக்கூடிய இவ்வுணர்வலைகளை தமிழக - இந்திய அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ளவேண்டிய அளவிற்கு வலிமையுடையதாக வளர்ந்து வருகிறது. எனினும் அது பற்றி ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளால் ஆராயப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

இரண்டாவது விடயம், இலங்கைக்குள்ளும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தொடர்பானது. கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தினால் அகதிகளாக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்கள் குறித்து - அவர்களுடைய அரசியல், சமூக நலன் குறித்து இலங்கை அரசு எந்த அக்கறைகளையும் கொண்டுள்ளதா? ஒரு நிலையில், தமிழ் தலைமைகள் அக்கறை கொள்ளாத நிலையில் இந்த மனு அவர்களைப்பற்றி அக்கறை கொண்டுள்ளது.

தமிழகத்தில் பெருமளவானோர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலைத்தேச நாடுகளில் அகதி அந்துஸ்து வழங்கப்படாத ஒரு தொகையினர் இருக்கின்றனர். அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் பெரும் நெருக்கடி நிலையில் இருக்கின்றனர். இவர்களின் சமூக நலன் குறித்து என்றுமே இலங்கை அரசாங்கம் அக்கறை கொண்டதில்லை. தமிழ் தலைமைகள் அதற்கான கரிசனைகளையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

மூன்றாவது விடயம், இலங்கை தொடர்பில் இந்தியா ஐ.நா சபையில் முன்வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டள்ள தீர்மானம் பற்றியதாகும். அது,

இடம்பெற்ற இனப்படுகொலைக்கு இலங்கை பொறுப்புக் கூறத்தக்க வகையிலும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும்.

குறித்த தீர்மானம், இலங்கைக்குள்ளும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனியரசு அமைப்பதற்கான அவர்களது விருப்பை அறியும் வகையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கான ஏற்பாட்டையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதாகும்.

சிங்கள பெருந்தேசியவாதத்தின் விருப்பிலும் - பிராந்திய நலன்களின் அடிப்படையிலும் இவ்விடயம் விரும்பப்படாதவையாக இருக்கலாம். எனினும் இவ்விடயம் சர்வதேச நடைமுறைக்கும் வழமைக்கும் மாறானதொன்றல்ல. மக்கள் மத்தியிலான விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு ஒன்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது என யாரும் கூறமுடியாது. அதேவேளை சிங்களப் பெருந்தேசியவாதத்தின் தோற்றம் - வளர்ச்சி - தற்போதைய அதன் இறுகிப்போன நிலைமைகள் மற்றும் நீண்டகால வரலாறு கொண்ட சமரச முயற்சிகளின் தோல்வி என்பன, காத்திரமான ஒரு நடவடிக்கை தேவை என்பதைனையே சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கு மாற்றீடாக 13 ஆவது திருத்தம், 13 பிளஸ் பற்றிப் பேசப்படுகிறது. 13 ஆவது திருத்தம் - அதனால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை, இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்திலேயே இலங்கை அரசாங்கத்தால் புறந்தள்ளப்பட்ட ஒன்று. இன்று அவ்வாறானதொரு தலையீடற்ற நிலையில் அதன் நடைமுறைச் சாத்தியப்பாடு குறித்து எந்த உத்தரவாதத்தினையும் பெறமுடியாது.

அதேவேளை இடைக்காலத்தில் வடக்கு - கிழக்குப் பிரிப்பு உட்பட பல அதிகாரக் குறைப்புக்களும் - மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அரசியல் யாப்பு உயர்சட்டமாக இல்லாத நிலையில், நீதித்துறை சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இயங்காத நிலையில் 13 ஆவது திருத்தம் என்பது பெறமதியற்றதொன்றே.

பேரழிவு யுத்தம், யுத்தத்தின் பின்னரான இனவாத ஒடுக்குமுறைகள் என நிலைமைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவை பற்றிய குறிப்பான எந்த ஏற்பாடுகளும் அற்ற ஒரு தீர்வுத்திட்டத்தினை வைத்துக்கொண்டு, பெரும் அழிவுக்குள்ளான - பெரும் ஒடுக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் அரசியல் - சமூக - பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியுமா? மரணமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள், விதவைகள், அநாதைக் குழந்தைகள், ஊனமுற்றோர், நிலம் பறிக்கப்பட்டவர்கள் அல்லது பூர்வீக நிலங்களில் குடியேற முடியாதோர், வீடு - சொத்தழிவு, கட்டுமான அழிவுகள் என ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் புதிய பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றன. இதனை மாகாண சபைக்கூடாக எதிர்கொள்ள முடியுமா?

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் சுயாதீனத்தை அழித்துவிடும் நோக்கில் செயற்பட்டுவரும் நிலையில், அரசாங்கத்தின் மூன்று படைத்துறைகளும் மற்றும் பொலிஸ், நிர்வாகத்துறையும் அதற்காகப் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், துணைப்படைகள் - உளவுப்பிரிவுகள் - குண்டர்படைகள் - இனந்தெரியாத ஆயுததாரிகள் நிலைகொள்ளச் செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நம்பகமான ஒரு மாற்றுத் தீர்வு அவசியமாகும்.

அந்த மாற்றுத் தீர்வு தமிழ் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒன்றாக, அரசியல் தீர்வை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒன்றாக, இழப்புகளிலிருந்து மீள எழக்கூடிய ஒன்றாக அமைய வேண்டியிருக்கிறது.

யுத்தம் முடிவுற்ற நிலையில், ஏதாவது ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொண்டு, ஆட்சியதிகாரத்தைப் பெற்று, முடிசூடிக் கொண்டு சில சௌபாக்கியங்களுடன் வாழ்ந்து விடலாம் என்ற அபிலாஷைகளைக் கொண்ட சிந்தனையால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது.

பாதிக்கப்பட்ட - பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் மத்தியில் வாழ்ந்து அப்பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்கிற சிந்தனையையும் செயற்பாட்டையும் கொண்டவர்களால்தான் தமிழ்மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

தொடரும்...

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=904c46d8-7ee5-46f7-b087-6ccf194d3d50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பையும், மீள் எழுச்சியையும் சிதைக்கும் ஒடுக்குமுறையின் புதிய பரிமாணங்கள்

விஜய்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன - ஒரு காலங்கடந்த கேள்வி - பகுதி 3

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் இனவொடுக்குமுறை நிகழ்வுகள் நடந்தேறிவருவது நாளாந்த நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

அண்மையில் முல்லைத்தீவு - ஒதியமலை மலையடிவார வைரவர் ஆலயம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு புத்த மத அடையாளங்களை வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.

ஒதியமலையில் 1984 இல் இடம்பெற்ற படுகொலைகளையடுத்து வெளியேறிய மக்கள், தற்போது மீளக்குடியேற்றப்பட்டு, தாம் காலம் காலமாக வழிபட்டு வந்த வைரவர் ஆலயத்தை துப்பரவு செய்து மீள கட்டியெழுப்பி வந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் சிரமதானப் பணிகளுக்கு இராணுவமும் ஒத்துழைப்பு வழங்கி வந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் மலையடிவார வைரவர் ஆலயப் பகுதியை ஆக்கிரமித்த இராணுவத்தினர் அங்கு முகாமொன்றையும் அமைத்துள்ளனர். அதேவேளை இராணுவத்தினரால் அப்பகுதி அரச சொத்து என அறிவிக்கப்பட்டு அங்கு மத அடையாளங்கள் எதுவும் இடப்படலாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி மத வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டும் இருக்கிறார்கள்.

தற்போது பௌத்த பிக்கு ஒருவரின் தலையீட்டில் அரச மரம் நடப்பட்டு பௌத்த மத அடையாளங்களை வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்காதரவாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது எனவும் இராணுவத்திரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினரிடம், அங்குள்ள மக்கள் பல பிரச்சினைகளை முன்வைத்திருக்கிறார்கள். முல்லைத்தீவில் படையினர் பெருமளவு நிலங்களையும் பண்ணை நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றில் விவசாயம் செய்து வருகின்றமையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர். படையினர் குறைந்த விலையில் பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்ற நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முல்லைத்தீவிலிருந்து காட்டுமரங்கள் வெட்டப்பட்டு தென் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும், மணல் தென் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் ஆனால் முல்லைத்தீவு மக்களுடைய தேவைகளுக்கு மணல், மரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மீள்குடியேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேசமயம் வலிகாமம் மீளக்குடியேற்றம் பெரும் பிரச்சினைக்குரியதொரு விடயமாக மாறியிருக்கிறது. வலிகாமம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தினால் காணிகளை விட்டு வெளியேறி 25 வருடங்களை கடந்துவிட்ட மக்கள் இன்னமும் மீள் குடியேறமுடியாத நிலையே காணப்படுகிறது.

வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேறிய மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்னமும் மீளக்குடியேற முடியாதுள்ள 10 ஆயிரம் குடும்பங்களின் மீள் குடியேற்றத்தினை சிங்களப் பேரினவாத அரசு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்க மறுத்து வருகிறது. அம்மக்கள் தமது வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டு உல்லாச விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

வலிகாமம் கிழக்கில் வளலாய் கிராமத்தைச் சேர்ந்த 920 பேர் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர். இம்மக்களை வலிகாமம் வடக்கில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வலி வடக்கு - கிழக்கு மக்கள் மீள் குடியேற்றக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். மக்கள் தங்கள் நிலங்களில் மீளக்குடியேற மனவுறுதியுடன் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இதேவேளை மட்டக்களப்பு பட்டிருப்பு பிரதேசத்தில் எல்லைக்கிராமமான கெவிளியாமடு கச்சக் கொடி சுவாமிமலை போன்ற கிரமாங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள், மண் அகழ்வு போன்றவற்றால் இக்கிராம மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டிக்கிற தகவல், இனஒடுக்குமுறையின் மற்றொரு பரிமாணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாணத்திற்கு வெளிநாடுகளினால் வழங்கப்படுகின்ற உதவிகளை அரசு தட்டிப்பறிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வட மாகாணத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் குறித்த ஒரு வீதத்தினை அரசுக்கு தரவேண்டும் என்ற நிலையிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசு வடக்க கிழக்கு மக்கள் யுத்த அழிவிலிருந்து மீண்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

முள்ளிவாய்க்கால் ஒரு பெரும் அழிவு எனில், அதன் பின்னரான ஐந்தாண்டு காலமும் தமிழ் மக்களின் இன இருப்பையும், மீள் எழுச்சியையும் சிதைக்கும் நடவடிக்கைகள் கொண்ட ஒரு காலமாகவே அமைகிறது. அண்மைக்காலமாக சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதல் முஸ்லிம்களை நோக்கி திரும்பியிருக்கிறது. தமிழ் - முஸ்லிம் மக்களிற்கெதிரான தாக்குதல்கள் அவர்களின் சமூக-பொருளாதார-கலாசாரத்திற்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=d0cd2e7f-5678-4672-9e7b-3a9d80d9b623

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமே நீ உன் வீட்டுக்குப் போ, நான் என் வீட்டுக்குப் போவதற்கு

விஜய்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்ன - ஒரு காலங்கடந்த கேள்வி - பகுதி 4

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், 'இராணுவம் தமிழர்களின் நினைவு தினங்களையும் அபகரிக்க ஆரம்பித்திருக்கிறது' எனத் தெரிவித்திருக்கிறார். கரும்புலிகளின் நினைவு தினமான ஜூலை 5 ஆம் திகதியில், இராணுவம் யாழ்.மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து, நிகழ்ச்சிக்குப் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்தே ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர், 'இராணுவத்தை எங்கள் இடங்களைவிட்டு வெளியேறுங்கள் என்று கோரிக்கொண்டு இருக்கின்ற நான் எப்படி இராணுவத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும்' எனக் கூறி இராணுவத்தின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 2009 மே மாதத்தின் பின் புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிக்கத் தொடங்கிய இராணுவம் தமிழர்களின் நினைவு தினங்களை அழித்தொழிப்பதிலும் தீவிரமாக இருந்து வருகிறது.

வன்னியில் 'நிலங்களைச் சுவீகரித்தல் மற்றும் நிலங்களை பலாத்காரமாக கையகப்படுத்தல்' தீவிரமடைந்திருக்கிறது. ஏற்கனவே பல பிரதேசங்கள் இவ்வாறு சுவீகரிக்கவும் கையகப்படுத்தவும் பட்டுள்ளன. இந்த நிலச்சுவீகரிப்பு, நிலப் பலாத்காரக் கையகப்படுத்தல் என்பன வன்னியில் இராணுமயப்படுத்தலையும் சிங்களக் குடியேற்றங்களையும் பாரியளவில் இடம்பெறச் செய்யும் நோக்கின் அடிப்படையில் இடம்பெற்று வருகின்றன.

    • செட்டிகுளம் பிரதேசத்தில் முன்னர் இடைத்தங்கல் முகாம் அமைந்திருந்த பிரதேசம் மற்றும் செட்டிகுளத்திலிருந்து மன்னார் வீதி சந்தி வரைக்குமான 15,000 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 6348 ஏக்கர் காணி இராணுவத்தினரின் பழச் செய்கைப் பண்ணைக்காக இராணுவப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
    • நெடுங்கேணியில் பட்டிக்குடியிருப்பு கிராமசேவையாளர் பிரிவுக்குக் கீழ் பனிச்சங்கேணி கிராமத்தில் 1000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
    • வவுனியா-மன்னார் மாவட்டத்திற்கு இடைப்பட்ட தில்லைப்பண்டிவிரிச்சான் எனுமிடத்தில் சுமார் 2500 ஏக்கர் காடு அழிக்கப்பட்டு விமானப்படையினரின் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
    • முல்லைத்தீவில் கோப்பாபிலவு, மன்னாரில் முள்ளிக்களம் ஆகிய பகுதிகள் படையினரின் பலத்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • வன்னியில் வீதியோரங்கள், அரச காணிகள் என்பன படையினராலும் சிங்க மக்களாலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • வன்னியில் இடம்பெற்று வரும் நிலச்சுவீகரிப்பு, நிலப் பலாத்காரக் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் வன்னியில் பாரியளவிலான குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • வன்னி மாவட்டத்தில் கொக்கஸ்தான் குளம் எனும் தமிழ்க்கிராமப் பகுதியில் 4000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்.
    • கலாபோவஸ்வவ - ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய சிங்களக் குடியேற்றம்
    • வவுனியாவில் நாமல்புர சிங்களக் குடியேற்றம்.

    • இக்குடியேற்றங்கள் பாரிய சிங்களக் குடியேற்றங்களாக அமைந்துள்ளன. இக்குடியேற்றங்கள் வெளிமாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்டவர்களைக் கொண்டதும் மீள் குடியேற்றம் என்ற வகையில் நடைபெற்றவையாகும். இவ்வாறு அத்துமீறிக் குடியேற்றப்பட்டவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்ட வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவை தவிர,
    • முல்லைத்தீவில் வெலிஓயாப் பிரதேசத்தில் 20,000 சிங்களக் குடும்பங்களின் குடியேற்றம்.
    • மன்னாரில் முசலிப் பிரதேசத்தில் 1628 சிங்களக் குடியேற்றம். அனுராதபுரம், நொச்சிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மக்களின் இக்குடியேற்றத்திற்கு ஜனாதிபதியின் விசேட நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • மன்னார் மடுப்பிரதேசத்தில் 150 சிங்கள குடும்பங்களைக் கொண்ட குடியேற்றம்
    • முருங்கன் மற்றும் கொண்டைச்சிக் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடியேற்றம்.
    • இவ்வாறான குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

      இத்தகைய நடவடிக்கைகளுக்கு மேலாக, புதிய, சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச செயலகங்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணியில் ஒரு பகுதியையும் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் பகுதியையும் கொண்ட பகுதி, ஒரு தனி பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது வெலிஓயா (சிங்கள) பிரதேச சபைப் பிரிவு. வர்த்தகமானி அறிவித்தலின்றி உத்தியோகபூர்வமற்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரதேச சபையின் பிரதேச செயலாளருக்கான சம்பளம் முல்லைத்தீவு அரசாங்க அதிபரூடாகவே வழங்கப்பட்டு வருகிறது. இப்பிரதேச சபையை மேலும் விரிவாக்கி நிரந்தரமாக ஆக்கும் நோக்கில், மேலும் சில தமிழ் கிராமங்களை இப்பிரதேச சபையுடன் இணைக்க இராணுவம் முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
    • இதேவேளை முசலி பிரதேசத்திலும் காணிகளை கையகப்படுத்தி, சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி, புதியதொரு சிங்களப் பிரதேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

    • இவ்விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வன்னிப் பிரதேசத்தை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மாற்றியமைக்கும் நோக்குடனேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் 'வன்னியில் குடிப்பரம்பல் மாற்றத்தை' முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடிப்பரம்பல் மாற்றம், பாராளுமன்ற - மாகாண - பிரதேச சபைத் தேர்தல்களில் சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே, இவ்வாறான நடடிக்கைகள் மூலம் நெடுங்கேணி பிரதேச சபையில் மூன்று சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

      இந்த திட்டமிட்ட நடவடிக்கைகள் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் பாரம்பரிய வாழிடம் என்ற அடிப்படையை இல்லாதொழிக்கும் முயற்சியாக நோக்கப்படுகிறது. அதேவேளை வடக்கு, கிழக்கில் இருந்து தெரிவாகும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையாகவும் நோக்கப்படுகிறது.

      இதேவேளை இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில், பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல இடங்களில் 'இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து', அந்த நிலங்களில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 'சிலரும்' கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 'எமது நிலம் எமக்கு வேண்டும்', எமது வீடு எமக்கு வேண்டும்', 'இராணுவமே நீ உன் வீட்டுக்குப் போ நான் என் வீட்டுக்குப் போவதற்கு' போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

      மக்களின் நிலங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையால், மக்கள் சொந்த-பூர்வீகமான நிலங்களை இழந்துள்ளனர். மீள் குடியேற முடியாதுள்ளனர். நிலத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. அது, சுய பொருளாதாரம் - வருமானம் அற்ற நிலையை உருவாக்கி விடுகிறது. இருந்த போதிலும் அரசாங்கம் அதனையிட்டு எந்தக் கவலையும் அடையாததுடன் தொடர்ந்தும் தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றது.

      தமிழர்களின் பிரச்சினைப் பட்டியல் இவ்வாறு 'நீண்டும் வளர்ந்தும்' சென்று கொண்டிருக்கின்ற வேளை, ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஒரு புதுப்பிரச்சினையும் கவலையும் தோன்றியிருக்கிறது. 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏகப் பிரதிநிதியாக ஏற்று அரசாங்கம் பேச்சு நடாத்தினால் அது ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் கட்சிகளுக்கு செய்கின்ற அநீதியாகிவிடும்' எனக் கவலை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் டிலான் பெரேரா. அரசாங்கத்திற்கு, தமிழர்களுக்கு சுயாதீனமான ஏகபிரதிநிதிகள் மற்றும் தங்களுக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகள் இருப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதனை இல்லாமல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்தும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்.

      நன்றி: திருமலை நவம், 'வன்னிப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றம்', வீரகேசரி, 06.07.2014.


      http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=02e15a9b-3ee1-49d8-a480-5cfcbf24cbc5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.