Jump to content

இவர் யார் தெரியுமா?


Recommended Posts

வீரமாமுனிவர் தமிழராக பிறந்தும் தமிழை பேச தயங்கும் எம்மவர் மத்தியில் இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்து தமிழ் கற்று காவியுடை அணிந்து தமிழுக்கு பெரும்பணி ஆற்றி "தேம்பாவணி" என்னும் பெரும் காவியம் படைத்த வீரமாமுனிவர் பற்றி அறிந்துள்ளீர்களா? அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மிகவும் அளப்பரியது. இன்று அவரது நினைவு தினமாகும் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் (நவம்பர் 8, 1680 இல் பிறந்த இவரின் இயற்பெயர் Constanzo Joseph Beschi கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். தமிழ்நாட்டுத் துறவிகள் போல் காவி உடை அணிந்தும், புலால் உணவை நீக்கியும் வாழ்ந்தவர். இவர் வேதியர் ஒழுக்கம். வேதவிளக்கம், தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், சதுர்அகராதி முதலான நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறளின் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார். இவர் தமிழில் இலக்கிய, இலக்கணங்களை எழுதினார். இவர் கத்தோலிக்க இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப்பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு . மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல்தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில்,நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்துஉரைநடையாக மாற்றியவர் இவர். பிற தமிழ் படைப்புகள்] • தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். • கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். • திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். • திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். • 1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். • காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர். இவர் பெப்ரவரி 4, 1747 இல் மறைந்தார் வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்: 1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம் 

fb

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.