Jump to content

வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?


Recommended Posts

Tamil_News_large_1013868.jpg

 

வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவரா நீங்கள்? சந்தோஷமாக வாழ ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதனை நிஜமாய் மாற்றுவது எப்படி என்கிற கேள்வியும் இணைகிறதா? இதோ, வாழ்வை மாறுபட்ட கோணத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அலசும் வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா?

மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் வாழ்க்கையின் போக்கை, தங்கள் விருப்பு வெறுப்பைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். "எனக்குப் பிடித்திருப்பதால் இதைச் செய்கிறேன்" என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பவைக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதே கேள்வி. ஏனென்றால், உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது இரண்டுமே இருவிதமான பிணைப்புகள்தான். இரண்டுமே உங்கள் புரிதலை திசைதிருப்பக் கூடியவைதான்.

ஒருவரை உங்களுக்குப் பிடித்திருந்தால் அவரைப் பற்றிய உங்கள் எண்ணம் மிகையானதாகவே 

இருக்கும். ஒருவரை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் அவரைப் பற்றிய உங்கள் எண்ணம் 

மிகையாகத்தான் இருக்கும். ஒன்றை மிகைப்படுத்துகிறீர்கள் என்றாலே அந்த விஷயத்தை உள்ளது உள்ளபடி பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்று பொருள். உள்ளதை உள்ளவண்ணம் பார்க்கத் தவறிவிட்டீர்கள் என்றாலே வாழ்க்கையை சரியான முறையில் உங்களால் கையாள முடியாது. எனவே உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமேயில்லை.

உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மட்டுமின்றி, மலர்கள், செடிகொடிகள், மரங்கள் அனைத்திற்குமே உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் கேள்வி.

உண்மையில் தாவரங்கள் உங்களைவிட நுண்ணுணர்வு கொண்டவை. நீங்கள் நடக்கும் பூமிக்குக்கூட உங்களைப் பிடித்திருக்கும் விதமாய் வாழப் பழகிக் கொண்டீர்களென்றால், வாழ்வில் வரும் அனைத்துமே ஒரு வரமாக இருப்பதை உணரத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவை உங்களை வெறுக்கத் தொடங்கினால் இப்போது நலமாகத் தெரியும் எல்லாமே ஒரு சாபமாக மாறுவதை உணர்வீர்கள்.

 

திருமணம் வரமா? சாபமா?

 

 

உதாரணமாக, திருமணம் செய்து கொள்கிறீர்கள் அதனை வரம் என்பதா? சாபம் என்பதா? சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் திருமணம் எத்தனை பேருடைய வாழ்வில் ரோதனை தரும் சமாச்சாரமாக இருக்கிறது என்பதை தினசரி வாழ்வில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சொல்லப்போனால் மனித வாழ்வின் மீதான சாபம் என்று தனியாக ஏதுமில்லை.

மனிதர்களின் வேலை, சொத்து, உறவுகள், அவர்களின் உடல், மனம் என்று எல்லாமே அவர்களின் சாபமாக மாறுகிறது. வருத்தமும் துன்பமும் வானத்திலிருந்து பொழிவதில்லை. மனிதர்கள் எதை விரும்புகிறார்களோ அவையே அவர்களின் வருத்தத்துக்கும் துன்பத்துக்கும் மூலமாக மாறிவிடுகின்றன. மனிதர்களுக்கு எது வேண்டியிருக்கிறதோ, எதற்காக அவர்கள் ஏங்குகிறார்களோ, எதை அடையப் பாடுபடுகிறார்களோ அவையே அவர்களின் சாபமாக மாறி துன்புறுத்துகின்றன..

 

இதை எப்படி மாற்றுவது?

 

 

உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உங்களைப் பிடித்திருக்கும் விதமாக நீங்கள் வாழப் பழக வேண்டும். இப்போது கொசுக்களுக்குத்தான் உங்களை மிகவும் பிடித்திருக்கிறது. பறவைகள், பூச்சிகள், பூக்களுக்கெல்லாம் உங்களைப் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பருகும் நீர், உங்கள் சுவாசக்காற்று, உணவு எல்லாமே உங்களுக்கு நஞ்சாக மாறிவிடக்கூடும். அவற்றுக்கு உங்களைப் பிடித்திருந்தால் அவையே அமுதமாக மாறும்.

பிரபஞ்சம் என்கிற படைப்பும் அதைப் படைத்தவரும் உங்களை நேசித்தே ஆகவேண்டும் என்ற விதமாய் வாழ்வதே வாழ்க்கை. உங்கள் விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதல்ல வாழ்க்கை. பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவுக்கும் உங்கள் மேல் பிரியம் தோன்றும் விதமாக வாழும் முறைக்குத்தான் வாழ்க்கை என்று பெயர்.

இல்லையென்றால் நீங்கள் எதற்காகப் பாடுபட்டாலும் எதுவும் உங்களுக்குப் பயன்தரும் விதமாக இராது. நீங்கள் என்னென்னவோ செய்யலாம், ஏதேதோ ஆகலாம், வருமானம் வரலாம் ஆனால் வாழ்வில் எதையும் அழுத்தமாக உணராமலேயே ஒரு சுழற்சியில் இருப்பீர்கள்.

கற்களுக்கும் தாவரங்களுக்கும் பிடித்திருக்கும் விதமாய் கனிவு மிக்க வாழ்க்கையை நீங்கள் நடத்தினால் உங்கள் நுண்ணுணர்வுக்கே அது புரிய வரும். சில தொட்டாற் சிணுங்கிகள் தங்கள் விருப்பின்மையை வெளிப்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு மட்டுமல்ல. எல்லா தாவரங்களுமே உங்களைப் பிடிக்குமா இல்லையா என்பதை தெளிவாகச் சொல்கின்றன. அவற்றின் பாஷையைப் புரிந்து கொள்ளும் அளவு நீங்கள் நுட்பமானவராக இருங்கள். எல்லாவற்றையும் கொட்டை எழுத்தில் எழுதினாலோ சத்தம் போட்டுச் சொன்னாலோதான் புரியும் என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

 

. "தான்" என்ற எண்ணம்:

 

 

தற்கு ஏற்கும் தன்மையில் நீங்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியம். "தான்" என்பது உங்களுக்குள் பெரிதாக இருந்தால், உங்களின் ஏற்கும் தன்மை குறையும். தான் என்னும் எண்ணம் உங்களுக்குள் இல்லாமல் போனால், இந்தப் பிரபஞ்சமே உங்களுடன் இணைந்து நடனமாடும். நீங்கள் அந்நிலையில் படைத்தவருக்கான கருவியாகவே வாழலாம். இல்லையென்றால், எண்ணங்கள், உணர்ச்சிகள், பேதங்கள் அபத்தங்கள் ஆகியவற்றின் குவியலாகத்தான் வாழ்வீர்கள்.

ஒவ்வொரு மனிதரும் தேர்வு செய்ய இருவேறு வாய்ப்புகள் இன்று உள்ளன. ஒன்று படைத்தவனின் அங்கமாகவே வாழலாம். இதை ஈஷாங்கா என்கிறோம். இல்லையெனில் அபத்தங்களின் தொகுப்பாகவே வாழலாம்.

இந்த இரண்டிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யும் உரிமை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குக் காத்திருக்கிறது. இந்த உணர்வு உங்களுக்கிருந்தால் உங்களைச் சுற்றியுள்ள பாறைகள், பூக்கள், என்று படைப்பின் ஒவ்வோர் அணுவும் உங்களுக்குப் புரிகிற பாஷையில் உங்களுடன் பேசும். இல்லையெனில் இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் தனிமையாகத்தான் உணர்கிறீர்கள். பாதுகாப்புணர்வு அற்றவராக, நிலையற்றவராக, உளவியல் தடுமாற்றங்கள் மிக்கவராக வாழ்கிறீர்கள்.

 

சரியான, தவறான் தேர்வு:

 

 

சரியான தேர்வை நீங்கள் செய்தால் சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறான தேர்வைச் செய்தால் நடப்பவை எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. எனவே வலியும் துயரமும் வருத்தமும் வந்தால் யார்மீது பழியைப் போடலாம் என்று அங்குமிங்கும் பார்க்காதீர்கள். உங்களுக்கு நோய் வந்தால் அடுத்தவர்களுக்கா மருந்து கொடுக்கிறீர்கள்? உங்களுக்குத் துன்பம் வந்தால் மட்டும் அடுத்தவர்களை ஏன் காரணம் சொல்கிறீர்கள்? இந்த எளிய விஷயம் புரியவே சிலருக்கு பல பிறவிகள் தேவைப்படுகின்றன.

ஒருமுறை சங்கரன் பிள்ளை குடிபோதையில் தட்டுத் தடுமாறி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு எட்டு மணிக்குள் வீட்டுக்குப் போக வேண்டியவர் அதிகாலை 2.30 மணிக்கு தட்டுத்தடுமாறி கல்லிலும் முள்ளிலும் விழுந்து எழுந்து போய்க் கொண்டிருந்தார். வீடு வந்து சேர்ந்து கண்ணாடியில் பார்த்தால் முகமெங்கும் ரத்தக் காயங்கள்.

உடனே ரகசியமாக மருந்துப்பெட்டியைத் திறந்து காயமுள்ள இடங்களில் எல்லாம் பிளாஸ்திரி போட்டுக் கொண்டு படுத்துவிட்டார். காலையில் அவர் மனைவி அவர் முகத்தில் தண்ணீரைக் கொட்டி தரதர வென்று இழுத்துப்போய் காட்டிய போதுதான் விஷயம் புரிந்தது. காயத்துக்கு கட்டுப்போடுவதாய் நினைத்துக் கொண்டு கண்ணாடி முழுக்க பிளாஸ்திரியை ஒட்டி வைத்திருக்கிறார்.

விழிப்புணர்வே இல்லாத மனிதர்கள்தான் தங்கள் காயங்களுக்கு வெளியே காரணங்களைக் கண்டுபிடிப்பார்கள். உங்கள் வரங்களும் சாபங்களும் உள்ளிருந்தே நிகழ்கின்றன.

இதை உணர்ந்து நடந்தால் உங்கள் வாழ்க்கை அழகாகவும் அற்புதமாகவும் மாறும். இது புரிய ஒரு பிறவியையே எடுத்துக் கொண்டால் வாழ்க்கை தன்னுடைய வழிகளில் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும்.

வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா? தேர்ந்தெடுங்கள். 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1013868

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.