Jump to content

முதல் பயணம் – திருவிடந்தை


Recommended Posts

எனக்கு முப்பது வயது முடியப்போகிறது. இது ஒரு சிக்கலா? எனக்கு  ஒரு சிக்கலும் இல்லை. அனால் என் தாயாருக்கு தான் கவலை. எனக்கு  இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை. காதலித்து பார்த்து, அந்த பெண்ணையே மணந்து கொள்கிற அளவுக்கு எனக்கு திறமை பத்தாது. வசதி, வாய்ப்பும் அமையவில்லை. அம்மா காண்பிக்கின்ற பெண்ணையே மணந்து கொள்வது என்று நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக முடிவு எடுத்தேன். வந்தது வினை.

 இதுவரை முப்பது பெண்களின் படங்களை காட்டிவிட்டார்கள். ஒன்று எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு பிடித்தால் அந்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லை. ஜாதகம் (தமிழ் வார்த்தை என்ன?) சரியில்லை, பொருத்தமில்லை என்று ஏதோ கரணம் சொல்லி எதுவும் சரியாக அமையவில்லை. தாயாருக்கு கவலை அதிகமாகிப்போனது. யாரோ திருவிடந்தை கோவிலுக்கு சென்று வந்தால் உடனே கல்யாணம் நடக்கிறது என்று சொல்ல, மேலும் சிக்கல்.

 எனக்கு இந்த கடவுள், ஜாதகம், சாதி, மதம், போன்றவற்றில் எல்லாம் துளியும் உடன்பாடு கிடையாது. இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம் என்று சொல்லி தள்ளி போட்டுக்கொண்டே வந்தேன். குடும்பத்தினர் நச்சரிப்பு தாளாமல், இன்று போக வேண்டியதாகிவிட்டது.

 கிழக்கு கடற்கரை சாலையில், மாமல்லபுரம் 17கிமீ  என்ற கல்லிற்கு 100 அடி முன்னால் இருக்கிறது, திருவிடந்தை – ஸ்ரீ ஆதி வராஹ பெருமாள் கோவில்.நல்ல பழைய கோவில் என்று பார்த்த உடனே தெரிகிறது. வலைதளத்தில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கோவில் என்று போட்டிருக்கிறார்கள். நித்ய கல்யாண பெருமாளும் இங்கு தான் இருக்கிறார். கோவிலுக்குள் நுழைந்த உடனே சாரை சாரையாக ஆண்களும், பெண்களும், ஜோடிகளாகவும், கழுத்தில் மாலை அணிந்து கோவிலை சுற்றிகொண்டிருப்பது தெரிகிறது. நாட்டில் பலபேருக்கு கல்யாணம் நடப்பதில் சிக்கல் போல.

nithyakalyanaperumal.png?w=497

 பெருமாளை தரிசிக்க வரிசை கட்டி இருக்கிறது. நாமும் வரிசையில் சேர்ந்து கொள்கிறோம். பெரிய கூட்டம் ஒன்றும் இல்லை. வரிசை சுமாரான வேகத்தில் நகர்கிறது. அர்ச்சனை சீட்டு ரூ. 5/- என்று போட்டு, அதை அடித்து விட்டு, திருமண பிரார்த்தனை சீட்டு ரூ. 50/- என்று போட்டிருக்கிறார்கள். எரிபொருள் விலை மற்றும் பொதுவான விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப + 5 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் ரூ. 55/-. (பூ, தேங்காய், மாலை இவற்றையெல்லாம் வெளியிலேயே வாங்க வேண்டும். அது ஒரு ரூ. 50/-.) Billing  machine வைத்திருக்கிறார்கள். சீட்டு உடனடியாக அச்சடித்து தரப்படுகிறது. சீட்டை கொடுத்தால், அய்யர் தேங்காய் உடைத்து தருகிறார். “மாலைய கைல எடுதுங்கோ” என்கிறார்.

 

 வராஹ பெருமாளை பார்த்தவுடன், வேறு ஒரு அய்யர், பெயர், நட்சத்திரம், கோத்ரம் கேட்டுவிட்டு, மாலையை வாங்கி பெருமாள் சிலை அருகில் வைத்து, எடுத்து தருகிறார். “மாலைய கழுத்துல போட்டுங்கோ. பெருமாள சேவியுங்கோ. கோவிலை ஒன்பது சுத்து வரணும். கல்யாணம் நிச்சயம்” என்கிறார்.அவ்வளவுதான். நான் கோவிலை மாலை கழுத்தோடு ஒன்பது முறை வலம் வந்ததும், திருமண பிரார்த்தனை முடிந்தது. பிரகாரம் நல்ல பெரிதாகவே இருக்கிறது. ஒன்பது முறை சுற்ற கொஞ்சம் நேரம் ஆகிறது.

 

 கோவில் வளாகத்திலேயே, புளியோதரை, தயிர் சாதம் விற்கிறார்கள். ஒரு தொன்னை ரூ. 20/-. Water bottle-ம் விற்பனைக்கு உண்டு. அங்கேயே அனைவரும் காலை உணவை முடித்தாகி விட்டது. “கை அலம்பும் இடம்” இருக்கிறது. தண்ணீர் நூல் போல வருகிறது. ஒரு மாதிரி கையை அலம்பிவிட்டு, புறப்பட்டு வந்து விட்டோம்.

 

 ஓரளவிற்கு நல்ல கூட்டம் வருகிறது. நல்ல வியாபாரம். யார் இதை யோசித்து பரப்பினார்கள் என்று தெரியவில்லை. அனால் அந்த நபர் ஒரு நல்ல வியாபாரியாக இருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகால கோவிலுக்கு, திடீர் சக்தி எங்கிருந்தோ வந்துவிட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் சென்னை வாசிகளுக்கே இந்த கோவில் பற்றி தெரியாது. இப்போது சிற்றுந்து, பேருந்து எல்லாம் வைத்து கொண்டு பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள். கோவிலில் சீரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் அமோகமாக நடந்து வருகிறது.

 நான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் எங்கேயாவது On-site போயிருந்தால், ஜாதகம் பொருந்தாவிட்டாலும் பெண் கொடுத்திருப்பார்கள். நான் உள்ளூரிலேயே உட்கார்ந்து கொண்டு, நாட்டிற்காக உழைக்கிறேன் என்று சொன்னால், மாலையோடு ஒன்பது முறை கோவிலை சுற்றவேண்டியதுதான்.

 

 வாரம் இருமுறை கோவிலை ஒன்பது முறை வலம் வந்தால், தொப்பை குறையும். தொப்பை குறைந்தால், கல்யாணம் நிச்சயமாக நடக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

 

 வரும்போது பன்பலையில் “what a கருவாட், what a கருவாட்” என்ற கருத்தாழமிக்க பாடல் ஒலிபரப்பினார்கள். Dr. தனுஷ் அவர்கள் பாடிய பாடல். (Dr. பட்டம் கொடுதுவிட்டார்களா இல்லையா? இல்லையென்றால், இந்த பாட்டிற்காக நிச்சயம் கொடுப்பார்கள்). அனைவரும் கேட்டு மகிழுங்கள்.

 

http://thaniyan.wordpress.com/2014/02/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.