Jump to content

சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சேனல் நான்கின் அறம் - யமுனா ராஜேந்திரன்

 

சேனல் நான்கு அமெரிக்க மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும், அமெரிக்க, பிரித்தானிய அரசுகளிடம் அதற்காக சேனல் நான்கு நிதிபெறுவதாகவும், அதிலிருந்தே இத்தகைய ஆவணப்படங்கள் எடுப்பதாகவும் 'மார்க்சீயர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்' எனத் தம்மைக் கோரிக் கொள்பவர்கள் கூச்சநாச்சமின்றி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

 

சானல் நான்கு ஒரு பொதுநிறுவனம். அது அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் பெறுவது இல்லை. 2007 ஆம் ஆண்டு அது கடுமையான நிதி நெருக்கடியில் வீழ்ந்தபோது, அன்றைய பிரித்தானிய சட்டத்தின்படி, அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் லைசென்ஸ் கட்டணத்தில் இருந்து அதனது மீட்புக்காக ஒரு தொகை வழங்கியது. பிற்பாடாக, பிரித்தானிய அரசு அந்தச் சட்டத்தையே இல்லாததாக ஆக்கியது. 2012 பிற்பகுதியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறும் வேளையிலான நிதி நெருக்கடியில் சேனல் நான்கு இருந்தபோது, அதனை மீட்பதற்கென லைசென்ஸ் கட்டணத்திலிருந்து அதனை நிவர்த்தி செய்வதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவன்றி முழுமையாகத் தமது நிகழ்ச்சிகளை விளம்பரக் கட்டணங்களாலும், நிகழ்ச்சி அனுசரணையாளர்களாலும் மட்டுமே கொண்டு செலுத்துகிறது சேனல் நான்கு தொலைக் காட்சி நிறுவனம்.

 

அரசு சாரா நிறுவனங்கள் உள்பட, சுயாதீன ஊடகங்கள் உள்பட, தமது அரசியல் திட்டங்களுக்கு உடன்பட்டு வராதவர்கள் அனைவரையும் ஏகாதிபத்தியத்திடம் காசு வாங்குபவர்கள், அதனது நிகழ்ச்சி நிரலுக்குச் செயல்படுவபவர்கள் என, எந்தவிதமான ஆதாரமும் அற்று எழுதுவது ஒரு நோய்க்கூறான சிந்தனை முறை. குறைந்தபட்சம் இடதுசாரிகள் அதிலிருந்து வெளியே வரவேண்டும். மன்மோகன் சிங்கும், மகிந்த ராஜபக்சேவும், எகிப்திய ராணுவமும் அரசு சாரா நிறுவனங்களின் மீதும், சுயாதீன ஊடகங்களின் மீதும் ஏறி விழும்போது, இதில் நீங்கள் எங்கே முரண்படுகிறீர்கள் என்கிற குறைந்தபட்சத் தர்க்கத்தையாவது நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆதாரமற்று அவதூறுகளைத்தான் நீங்கள் சதா சுமத்திக் கொண்டிருப்பீரகள் என்றால், மகிந்த முதல் மன்மோகன் வரை இவர்களுக்கும் உங்களுக்கும் என்னதான் வித்தியாசம் சொல்லுங்கள்?

 

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரேவின் தனது ஆவணப்படத்தின் அறமும் ஆதாரங்களும் குறித்து வாக்குமூலமாகச் சொல்வதனைக் கேட்போம்:

 

.... போர்க் குற்றங்கள் தொடர்பில் சனல் நான்கு முன்வைக்கும் ஆவணங்களை போலியானவை என ஒற்றைச் சொல்லில் இலங்கை அரசு மறுப்பதும், அதனை பெருமளவிலான சிங்கள் மக்கள் நம்புவதும் மறுக்கமுடியாது. ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மக்களிடம் அதிர்ச்சி கலந்த தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அதிக எண்ணிக்கையான சிங்கள மக்கள் ராஜபக்ச குழுவினரின் நடவடிக்கைகளை நம்புவர்களாக இல்லை. அதேபோல் அதிகளவு சிங்கள மக்கள் இவ்விடயங்கள் தொடர்பில் அக்கறைய உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள் கூட இவ்விடயங்களில் கவலைப்படுபவர்களாக இருக்கின்றனர். அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு மிக நெருங்கியவர்கள் கூட இவ்விடயங்களில் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு இருந்தபோதும் இதே அளவு மறுபக்கத்தில் ஏராளமான சிங்கள மக்கள் அரசு சொல்வதை நம்புவர்களாகவே இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.

 

இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனித்தனியாக விளக்கம் தருவதை விடுத்து, ஒரேயடியாக வீடியோ காட்சிகள் அனைத்தும் போலி என்று இலகுவாக சொல்லிவிடுகின்றது. அவ்வாறு தான் சொல்வதை ஏராளமான சிங்கள மக்கள் நம்பும்படியாகவும் இலங்கை அரசு பிரச்சாரங்களைச் செய்துள்ளது.

 

புலிகளின் ஆதரவுடனே வீடியோக்கள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சிறிலங்கா அரசின் மற்றுமொரு குழப்பமான குற்றச்சாட்டுக்கு உதாரணமாகும். இக் குற்றச்சாட்டு உண்மையாயின் நாங்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொண்டு வர முடியும்? உதாரணமாக மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.  உண்மையில் இது மிகவும் கடினமான தருணம். ஏன் இலங்கை அரசு இவ்வாறு சொல்கின்றது என்பது புரியவில்லை. ஆனால் ஆவண திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும்.

 

நிதி உதவி அளிப்பதாக கூறப்படுவது முட்டாள் தனமான கூற்றாகும். சேனல் நான்கு தொலைக்காட்சியின் முழுமையான நிதி உதவியில்தான் இத்திரைப்படம் உருவாகியது. நாங்கள் சுதந்திர ஊடகமாக செயற்படுகின்றோம். எமது முன்னைய விசாரணைகளில் அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் அதிகளவிலான போர்க்குற்றத் தவறுகள் சுட்டப்பட்டுள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் சுட்டப்பட்டுள்ளன.

 

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள், காணொளி நிபுணர்களால் மிகக் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் அது உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐக்கியநாடுகள் சபையோ மேற்குலக நாடுகளோ இலங்கைப் படையினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் கட்டளைகளின் அடிப்படையிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலரும் இராணுவத் தளபதியும் வகித்துள்ளனர்.

 

இலங்கை அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையிலும், விக்கிலீக்சில் வெளியான அமெரிக்காவின் தொடர்பாடல் குறிப்புகளும், ஐ.நாவின் முன்னாள் முக்கியஸ்த்தர் ஜோன் ஹோம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளன. இறுதிக்கட்ட யுத்தத்தில், அனைத்துலக சட்டங்களின் கீழ் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய முதன்மையான கடமையை நிறைவேற்ற அனைத்துலக சமூகம் தவறியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைத் தடுக்கத் தவறியதற்கு பிரதான காரணமாக தீவிரவாதத்துக்கு எதிராக அன்றய சூழலில் அமரிக்காவும் மேற்குலகும் நடத்திய உலகளாவிய போர் என்ற நிகழ்ச்சி நிரலை ராஜபக்ச அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது.

 

யுத்தத்தில் பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை. அந்த வகையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்கு எவரும் சவால்விட முடியாது.

 

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் யுத்த மீறல்கள் மேற்கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப்புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம் புரிந்தால் அதை வெளிக்கொணர்வது ஊடகவியலாளரின் கடமை.

 

ஓர் ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள்ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும் ....

 

ஹாலும் மக்ரே ஓர் அரசியல்வாதி அல்ல. எந்த ஓர் அரசியல் தரப்புக்குமாக அவர் வாதிட முடியாது. ஓர் ஊடகவியலாளின் அறம் தனது தரப்பினை வெளிப்படுத்த முடியாத நிராதரவான மனிதனின் குரலாகச் செயல்படுவதுதான். அவன் அடிப்படையில் ஏற்கனவே வகுத்துக் கொண்ட சார்பு நிலையில் இருந்து செயல்பட முடியாது. பொஸ்னியா, கிழக்கு திமோர், கொசவா, குர்திஸ்தான், பாலஸ்தீனம், ஈழம், காஷ்மீர் என சேனல் நான்கு ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. அரசியல் சார்பு நிலைகளுக்கும் அப்பாலான உண்மைகளைக் கொன்டுவருவதுதான் ஊடகவியலாளனின் பணி. அவனிடம் இசைப்பிரியா, கேணல் ரமேஷ், பிரபாகரனின் இளைய புதல்வர், நடேசன், பிரபாகரன், கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகள், யுத்த தவிர்ப்பு வலயத்தில் கொல்லப்பட்ட மக்கள் போன்ற அனைவரதும் தொடர்பான ஒளிப்பதிவுகள் வருகிறது. இலங்கை ராணுவத்தினரால், அரசினால் அதிகாரபூர்வமாக எடுக்கப்படாத தரப்பிலிருந்து அவனுக்கு ஒளிப்பதிவுகள் கிடைக்கிறது. அதனை அவன் தொழில்துறை நிபுணர்களை வைத்து, தடயவியல் நிபுணர்களை வைத்து உறுதிப்படுத்திக் கொள்கிறான்

 

சேனல் நான்கு தொலைக்காட்சி பார்த்துக் கற்றுக் கொண்டு வளர்ந்த சிறுபான்மையினச் சமூகங்களின் தலைமுறை ஒன்று பிரித்தானியாவில் நிச்சயமாக இருக்கிறது. ஊடகப் போராளிகள் எனும் ஆளுமையுடன் எவரையும் நாம் குறிப்பிட முடியமானால் அவர்கள் ஜான் பில்ஜர், ஜோன் ஸ்நோ போன்ற ஆளுமைகள்தான். இருவருமே சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புடனும், சேனல் நான்கு தொலைக்காட்சியுடனும் தொடர்பு கொண்ட ஆளுமைகள். குர்திஸ் மக்கள் ஆதரவு அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர் ஜோன் ஸ்நோ. உலகின் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தியவர் ஆவணப்பட இயக்குனர் ஜான் பில்ஜர். ஊடக அறம் குறித்த கல்விக் கையேடுகள் ஜான் பில்ஜர் எழுதிய நூல்கள். நந்திக் கடல் படுகொலைகளின் போது, சாட்சியமற்று இலங்கை அரசு நடத்தி முடித்த அந்த யுத்தத்தின் மானுடவிரோதம் குறித்துத் தார்மீகக் கோபத்துடன் நியூ ஸ்டேட்ஸ்மென் அரசியல் இதழில் கட்டுரையொன்றினை எழுதினார் ஜான் பில்ஜர். நிராதரவான மக்களின் பாலான இவர்களது தோழமையுணர்வு, தமிழர்கள் உட்பட, எவரும் கேட்டுக் கொண்டதால் அவர்களிடம் உருவானது இல்லை. அவர்களது ஊடக அறமும் மனுக்குலப் பெருமிதத்தின் மீதான அவர்களது தார்மீக உணர்வும்தான் அவர்களை இவ்வாறு இயல்பாகவே நிராகரிக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் நிற்கச்செய்கிறது.

 

சேனல் நான்கு தொலைக்காட்சியின் உருவாக்கமே சிறுபான்மையின மக்களுக்காகவே ஒப்புக் கொடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சிச் சேவையின் அவசியத்தினின்றுதான் உருவானது. எல்லைப்புற மொழி என வழங்கப்பெற்ற வேல்ஸ் மொழியிலும், வேல்ஸ் மக்களுக்காகவும் அதிகமான நிகழ்ச்சிகளை உருவாக்கி ஒளிபரப்புவது எனும் நோக்கிலிருந்து 1982 ஆம் ஆண்டு சேனல் நான்கு தொலைக்காட்சி உருவானது. அப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிபிசி ஒன்று மற்றும் இரண்டு அதனோடு ஐடிவி எனும் மூன்று தொலைக்காட்சி வரிசையினோடு நான்காவதாக உருவானதுதான் சேனல் நான்கு தொலைக்காட்சி. பிபிசி தொலைக்காட்சி வரிசைகளோடு ஒப்பிட, ஐடிவி, சேனல் நான்கு போன்றன ஒரு முக்கியமான வித்தியாசத்தினைக் கொண்டிருந்தன.

 

பிபிசி, பிரித்தானிய அரசு மக்களின் மீது விதிக்கும் லைசென்ஸ் கட்டண வருமானத்தைக் கொண்டு நடத்தப்பெறும் அமைப்பு. ஐடிவியும் சேனல் நான்கும் சுயாதீனமான, தமக்குத் தானே நிதி அளித்து நடத்தப்பெறும் தொலைக்காட்சி வரிசைகள். ஒளிபரப்பு விளம்பரங்களில் வரும் வருமானம், தாம் தயாரிக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகின் பிற பிரதேசங்களுக்கு விற்பதால் வரும் வருமானத்தில் நடத்தப்பெறும் நிறுவனங்கள் இவை. இதுவன்றி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் சார்ந்து ஐடிவிக்கும் சேனல் நான்கிற்கும் மிகப்பெரும் வித்தியாசங்கள் உண்டு.

 

சேனல் நான்கு வெகுஜன ஊடகங்களில் தரப்படும் பிரபல நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக சிறுபான்மையினச் சமூகங்கள், வெகுஜனத் தொலைக்காட்சிகளால் அதிகம் கவனம் குவிக்கப்பெறாத கருப்பொருட்கள் என்பனவற்றைத் தனது தனித்துவமாக வரித்துக் கொண்டது. "அன் ரிப்போர்டட்வேர்ல்ட்" எனும் ஆணவப்பட வரிசை முழுக்க முழுக்க உலகின் சிறுபான்மையினச் சமூகங்களின் போராட்டம் குறித்த சித்திரமாக இருந்தது. "பார்னிங் எம்பர்ஸ்" என இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த இடதுசாரிப் பாராளுமன்றவாதியான டோனி பென் நெறிப்படுத்திய உரையாடல் நிகழ்ச்சி காத்திரமான அரசியல் - தத்துவ விவாதங்களை வெகுமக்கள் தளத்துக்குக் கொண்டு சென்றன. "டாக்கிங் ஹெட்ஸ்" நிகழ்ச்சியில் உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்கள் அனைவரதும் நேர்முகங்கள் வெளியானது. பிற்பாடு இவை புத்தக வடிவிலும் வெளியானது.

 

சேகர் கபூரின் பன்டிட் குயின், மீரா நாயரின் காம சூத்ரா, வால்ட்டர் செல்லாசின் சே குவேரா-மோட்டார் சைக்கிள் டயரி போன்ற படங்களை சேனல் நான்கு நிறுவனமே தயாரித்தது. மட்டுமன்று இன்று உலகில் வாழும் உன்னதமான திரைப்பட இயக்குனர்களில் ஒருவரும், ஸ்காட்லாந்தைச் சார்ந்தவருமான கென் லோச்சின் ஆவணப்படங்கள், முழுநீளப்படங்கள் எனப் பலவற்றை இந்த நிறுவனமே தயாரித்தது. சிறுபான்மையினத் திரைப்படங்கள், கலாச்சரங்கள் போன்றன பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக அறியவந்ததற்கு மிகப்பெரும் ஊடகக் காரணம் எனில், அது சேனல் நான்கின் செயல்பாடுதான் எனத் தயக்கமின்றி, ஆதாரங்களுடன் நிறுவமுடியும்.

 

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இதுதான் சேனல் நான்கு தொலைக் காட்சியின் சுருக்கமான வரலாறு. இன்றும் எனது சேமிப்பில் அறிவின் வற்றாத சுனையாக சேனல் நான்கு பதிப்பித்த புத்தகங்களும் ஆவணப்படங்களும் திரைப்படங்களும் இருந்து கொண்டிருக்கின்றன.

 

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வெளியானபோது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அதனைக் கொண்டாடினார்கள். சேனல் நான்கு வெளியிட்ட ஒளிநாடாக்களின் உண்மைத்தன்மை பற்றி இலங்கை அரசு மட்டுமே அவதூறுகளைப் பரப்பியபடி, அது இட்டுக்கட்டப்பட்டது என நிராகரித்துக்கொண்டே இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தடயவியல் நிபுணர்களும், சுயாதீனத் தடயவியல் நிபுணர்களும் அந்த ஒளிநாடாக்களின் ஆதாரத்தன்மையை உறுதிப்படுத்தினார்கள். இதனது உச்சமாகவே சாட்சியமற்று நடத்திமுடிக்கப்பெற்ற இலங்கை அரசின் இனக்கொலைக்கு எதிரான வலுவான ஆதாரங்களாக சேனல் நான்கின் ஒளிப்பட ஆதாரங்கள் அமைந்தன. இந்த ஆதாரங்களைக் குலைக்குமாறான அனைத்து தகிடுதித்தங்களையும் இலங்கை அரசு ஒரு உத்தியோகபூர்வப் பிரச்சார யுத்தமாகவே மேற்கொண்டது. பிரித்தானியாவின் ஊடகக் கட்டுப்பாட்டு நிறுவனமான ஓப்காமில் சேனல் நான்கின் மீது நூற்றுக்கணக்கில் இலங்கை அரசினாலும், இலங்கை அரச ஆதரவாளர்களாலும் குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டன. ஓப்காம் அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்தது. சேனல் நான்கின் ஒளிப்பதிவுகள் நம்பகத்தன்மையற்றவை எனும் குற்றச்சாட்டு தொடர்பான மிகச் சமீபத்திய அனுபவங்கள் இவைகள்.

 

இதற்குப் பின்னும் இலங்கை அரசு என்ன சொல்கிறது? ஆவணப்படத்திலுள்ள ஒளிப்பதிவுகள் பொய்யானவை என்கிறது. இதைப் போலவே இஸ்ரேலுக்காக வேலை செய்யும் பிரித்தானிய பாராளுமன்றவாதிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியை சேனல் நான்கு ஒளிபரப்பியது. யூதர்களையும் இஸ்ரேலிய அரசையும் பற்றி பாரபட்சமான நிகழ்ச்சி அது என இஸ்ரேலிய ஆதரவாளர்களால் ஓப்காமில் சேனல் நான்கு மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்த ஓப்காம் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தது. குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் சார்பு கொண்டவை என்றும், சேனல் நான்கை அரசியல் சார்பு எடுக்குமாறு அவை கோருகின்றன என்றும், அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒரு உண்மைகாண் விசாரணை நிகழ்ச்சியே அல்லாது அரசியல் விவாதத்தில் சார்பு நிலை எடுக்கும் நிகழச்சி அல்ல எனக் காரணம் சொன்னது ஓப்காம்.

 

சேனல் நான்கு சம்பந்தப்பட்ட, ஒரு இடதூரி மரபாளனாக சங்கடப்பட்ட ஒரு தருணமும் இருக்கிறது. "லிவிங் மார்க்சிசம்" என டிராட்ஸ்க்கி-மார்க்சீய ஆய்விதழ் ஒன்று வெளியாகி கொண்டு இருந்தது. மிகக் காத்திரமான விவாதங்களைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்ட ஒரு மார்க்சீய ஆய்விதழ் அது. யுகோஸ்லாவிய யுத்தத்தின் போது அவ்விதழ் சேனல் நான்கின் நிகழச்சியொன்று தொடர்பாகக் கட்டுரையொன்றினை வெளியிட்டது. யுகோஸ்லாவியாவில் அக்காலத்தில் முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு, செர்பியப் பெரும்பான்மையின ராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்ட சிறுபான்மையின மக்கள் குறித்த நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் முள்கம்பி வேலிக்குள் இருக்கிற எலும்புகள் துறுத்திய சிறுபான்மையின மக்களின் பிம்பம் சேனல் நான்கினால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பிம்பம் என எழுதியது "லிவிங்க் மார்க்சிசம்". சேனல் நான்கு தமது நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட அவதூறு என்பதற்காக "லிவிங் மாரக்சியம்" இதழின்மீது பல இலட்சக்கணக்கான பவுண்கள் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்தது.

 

"லிவிங் மார்க்சிசம்" இதழின் முன் இரண்டு தேர்வுகளே இருந்தன. ஒன்று சேனல் நான்கிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது இலட்சக்கணக்கான பவுண்கள் நஷ்டஈடு கொடுக்க முடியாத நிலையில் அந்த இதழ் பிரசுரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  "லிவிங்க் மார்க்சிசம்" வழக்கை எதிர்கொள்ள முடிவெடுத்தது.

 

உலகின் புகழ் பெற்ற இடதுசாரிச் சிந்தனையார்களான நோம் சாம்ஸ்க்கி, ஜான் பில்ஜர், கென் லோச் - இவர்கள் மூவரும் வேறுவேறு விதங்களில் சேனல் நான்குடன் தொடர்புபட்ட ஆளுமைகள் - இருவருக்கும் இடையில் சமரசம் செய்ய முனைந்தனர். "லிவிங்க் மார்க்சியம்" முன்வைத்த கருத்து பிழையேயென்றாலும், அவ்வாறு சந்தேகம் எழுப்புவதற்கான அதனது சுதந்திரக் குரல்வளையை நெரித்துவிடக் கூடாது. சேனல் நான்கு அந்த இதழையே மூடிக்கட்டும் வகையில் இந்த வழக்கை நடத்தக் கூடாது எனக் கோரினார்கள். சேனல் நான்கு தன் மீதான கறையைத் துடைக்க இதுவே வழி எனப் பிடிவாதமாக நின்றது. தொடர்ந்து சோம்ஸ்க்கி, பில்ஜர், கென்லோச் போன்ற இடதுசாரிகள் "லிவிங் மார்க்சீயம்" இதழுடன் தமது தோழமையை வலியுறுத்தி, அந்த இதழைக் காப்பாற்ற வழக்குமன்ற நிதியையும் அவர்கள் துவங்கி வைத்தார்கள். வழக்கில் சேனல் நான்கு வென்றது. விளைவாக பெரும்பணம் நஷ்டஈடு வழங்க முடியாத சூழலில் "லிவிங் மார்க்சிசம்" தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது. இப்பிரச்சினையில் சேனல் நான்கின் மீது இடதுசாரிகளுக்கு மனத்தாங்கல் இருந்தாலும், அதனது ஊடக அறம் சார்ந்து எவரும் அதனை அவமானப்படுத்திக் கேள்வியெழுப்ப முடியவில்லை.

 

மனித உரிமைக் கண்காணிப்பகம் ஒவ்வொரு ஆண்டும் முன் கோடைக்காலத்திலும், கடும் கோடைக் காலத்திலும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மனித உரிமைகள் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. மார்ச்-ஏப்ரல்-மே மாதங்களில் ஜெனீவா-இலண்டன் உள்பட இந்தத் திரைப்பட விழாக்கள் பலவருடங்களாக நடந்துவருகிறது. இலண்டன் "பிரிக்ஸ்ட்ன் ரிட்ஸி" திரையரங்கம் இந்தத் திரைப்பட விழா நடக்கும் முக்கியமான வளாகம். அமெரிக்க, ஐரோப்பிய மனித உரிமை மீறல்களும், இந்தியா உள்ளிட்ட உலக அளவிலான நாடுகளின் மனித உரிமை மீறல்களும் குறித்த ஆவணப்படங்களும் முழுநீளப் படங்களும் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும். இந்திரா காங்கிரசார் புரிந்த டில்லி சீக்கியமக்கள் படுகொலை குறித்த சோனாலி போஸின் அமு (2005), குஜராத் நரவேட்டைக்காரன் நரேந்திரமோடி குஜராத் முஸ்லிம் மக்களைக் கொன்று குவித்த பேரழிவு பற்றிய நந்திதா தாஸின் பிராக் (2008) போன்ற திரைப்படங்களை நான் இந்த மனித உரிமைத் திரைப்பட விழாவில்தான் பார்த்தேன்.

 

சேனல் நான்கின் ஒளிப்பதிவுகளின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது என்பதும், அந்தக் காரணத்துக்காக சேனல் நான்கின் ஊடக அறத்தையும் அவர்களது நோக்கையும் கேள்விக்கு உட்படுத்துவது என்பதும், அவர்களது உண்மை காண் நோக்கைச் சந்தேகிப்பது என்பது தர்க்கத்துக்கு உட்பட்டதாகத் தோன்றவில்லை. இந்தப் பிம்பங்கள் பொய்யானவை, இட்டுக்கட்டப்பட்டவை, உள்நோக்கம் கொண்டவை எனத் தமிழர்கள் கருதி சேனல் நான்கை விமர்சிப்பார்களானால் தவிர்க்கவியலாமல் அவர்கள் இலங்கை அரசின் சேனல் நான்கிற்கு எதிரான அதே அலைவரிசையில் சென்று சேர்வது தவிர்க்கவியலாததாகிவிடும்.

 

இன்றைய நிலையில் மிக வலிமையான போர்க்குற்ற ஆதாரமான சேனல் நான்கு ஆவணப்படத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது ஊடக அறத்தின் மீதான தாக்குதலாக மட்டுமல்ல, தமிழர்களுக்குச் சார்பான உலக அபிப்பராயத்தின் மீதான தாக்குதலாகவும் ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது. சேனல் நான்கு தொலைக்காட்சியின் வரலாறு ஊடக அறத்தின் வரலாறு. சிறுபான்மையின மக்களின் பாலான அதனது சார்பு நிலையின் வரலாறு. அதனது நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவது, ஒரு சிறுபான்மை இனம் தனது எதிரிகளைத் தனக்குள்ளேயே கண்டுபிடிப்பது போன்றது. இது வரலாற்றுத் தவறாகிவிடும் மிகப்பெரும் ஆபத்து.

 
 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=fcc3df47-10ee-4c4c-89ee-09ce64d34145

Link to comment
Share on other sites

சமாதனத்திற்கான நோபல்பரிசிற்கே தகுதியானவர். ஆனால்,தமிழருக்காக (நீதிக்காக) குரல் கொடுப்பாதால்.... கிடைக்காது  :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.