Jump to content

இலங்கை தொடர்பான இந்திய கையாளல் நீண்ட வரலாற்றைக் கொண்டது!


Recommended Posts

பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது!
 
87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன.
 
அதாவது 2009 இற்குப் பின்னான தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த பிரக்ஞையை மையப்படுத்தி, இவ்வாறான 'ஆக்கங்களின்' போர் இடம்பெறுகின்றது! சமகால ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிவர்த்திக்கப்பட வேண்டுமென்ற இந்தியக் குரல்களை சமாளிக்க 87 களின் காலப்பகுதியை ஶ்ரீலங்கா கிளறுவதும் அதற்குப் போட்டியாக ஹரிகரன் போன்றவர்களின் எள்ளல்கள் வெளிப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
 
விடுதலைப் புலிகள் உட்பட்ட தமிழ் போராளிகளின் குழுக்களுக்கு 80 களின் பிற்பகுதி வரை இந்தியா உதவி செய்தமை பகிரங்கமான ஒரு விடயம். ஆனால் இப்போது அதனையே சமகால தேவைகளுக்கான மாற்றீடாக கோத்தாபய போன்றவர்கள் கிளற முனைகின்றனர்.
 
புலிகள் எதிர் இந்தியப் படையினரின் 87 மோதலுக்குப் பின்னர், 2009 மே மாதம் வரை, கொழும்பு-டெல்லி இராணுவ அரசியல் மூலோபாயங்கள் ஒரே புள்ளியில் நிலைகுத்தியிருந்தமை நிதர்சனமான ஒரு விடயமும் கூட! ஆனால் இப்போது கோதாபய போன்றவர்களின் மகிந்த அதிகார மையப் பல்லவிகள் இலங்கையின் மூன்று தசாப்தகால போருக்கு இந்தியாவே உதவியாக சீறுகின்றன.
 
குறிப்பாக 80 களின் பிற்பகுதியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாகவும், பின்னாளில் நியூயோர்க் ஐ.நா. தலைமையகத்தில் இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தவருமான ஹர்தீப் பூரி எழுதிய ஆக்கம் ஒன்றே மகிந்த அதிகாரத்துவ வாதிகளை வெட்கமடையச் செய்வதால், போராளிகள் மீதான இந்திய ஆயுதப் பயிற்சி தொடர்பான விசாரணைக்காகவும் அவர்கள் கூக்குரலிடுகின்றனர். இவ்வாறான ஒரு விசாரணை நடாத்தப்பட்டால்கூட, ஈழத்தமிழர்களுக்கு யாதொரு தாக்கமும் இல்லை என்பதும் பிராந்திய நலன் சார்ந்த 'கூட்டுக் களவாளித்தனமே' இங்கு அகப்பட்டுக்கொள்ளும் என்பதும் துல்லியமானது!
 
ஆனால் இறுதிக்கட்டப் போர் என்ற அடையாளத்துடன் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக் குறித்த நீதிகோரல்களுக்கான திசைதிருப்பு யுக்தியாகவே கொழும்பு இதனை வீசியெறிவது இந்திய அமைதிப்படையின் முன்னாள் முகமான கேர்ணல் ஹரிகரன் போன்றவர்களுக்குத் துல்லியமாகப் புரிகிறது. இதனால்தான் தமிழ் போராளிகளுக்கான இந்திய ஆயுதப் பயிற்சி குறித்து, அனைத்துலக விசாரணை எதற்கு, கோத்தாபயவே அதனை மேற்கொள்ளலாமே என எள்ளலாகக் கூறுகிறார்.
 
அதாவது சமகால இலங்கைத்தீவில் 'கோத்தா' போன்ற மகிந்த முகங்கள் கோலோச்சினாலும் இலங்கை தொடர்பான இந்திய கையாளல் நீண்ட வரலாற்றைக் கொண்டதென உணர்த்தும் வகையில் கோத்தா மீதான ஹரிகரனின் எள்ளல் நகர்கிறது......
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.