Jump to content

எரியும் மாணவர் உறைந்த மௌனம் காக்கும் இந்திய அறிவியலாளர்கள்…


Recommended Posts

ஊமையாகிவிட்ட இந்திய அறிஞரைப் பார்த்து வெட்கித் தலை குனிகிறது உலகு

 

 

kalam5.jpg

 

 

முதலாவது கேள்வி :

 

ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஒரு கோடி மாணவர்கள் தமிழகத்தில் உண்ணாவிரதமிருந்தார்களே அப்போது இந்தியக் கல்வியியலாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்..?

 

அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் திருதராஷ்டிரானாக இருந்த இந்திய நடுவண் அரசின் நடவடிக்கையை கண்டித்து, தகுதி குறைந்த அரசியல் தலைவர்களுக்கு சரியாக வழிகாட்டியிருக்க வேண்டிய கூட்டுப்பணியை இந்திய கல்வியியலாளர்கள் செய்யவில்லை.

 

பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உபகதை கூறும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்றவர்கள் தம்போன்ற விஞ்ஞானிகளை இணைத்து நாட்டு மக்களுக்கு கூட்டறிக்கை விடத்தவறியது, மாணவர்களுக்கும், தமிழினத்திற்கும் மட்டுமல்ல இந்திய அறிவியலுக்கு செய்த கேடாகும்.

 

இரண்டாவது கேள்வி :
ஒரு நாட்டின் பாராளுமன்றம் தவறான பாதையில் செல்லும்போது அதைத் தடுத்து நிறுத்தி மக்களை விழிப்படையச் செய்வது சமுதாய முன்னோடிகளின் கூட்டுக்கடமை அதை செய்யாதது ஏன்..?


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கும் கருத்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், 110 கோடி மக்களுக்கும் எதிரான கருத்து என்பதை வன்மையாகக் கண்டிக்கத் தவறியிருக்கிறது இந்திய அறிவியல் உலகு.

 

kal24.jpg



என்ன சொன்னார்..?


ஈழத் தமிழர் விவகாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தமிழீழத்தை அமைக்க வேண்டுமென தமிழக அரசு இயற்றிய சட்டம் வெறுமனே ஒரு மாநிலத்திற்குரியது அதை நாம் கணக்கில் எடுக்க முடியாது என்றுள்ளார்.

 

இதை சிறிது மாற்றிப்போட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்..

 

ஒரு மாநிலத்து ஜனநாயக அரசு எடுக்கும் முடிவு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமையும் என்பது கூட இந்த அமைச்சருக்கு தெரியவில்லை..

 

வடக்கு மாநிலமான ஐதராபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு மற்றய மாநிலத்தில் தீர்ப்பு வழங்க முடியும்.

 

ஒரு மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை அனைத்து மாநிலங்களின் நீதிமன்றங்களும் முன்மாதிரியாகக் கொள்ள முடியும் என்கிறது நீதித்துறை.

 

அதுபோலத்தான் ஒரு மாநில அரசு இயற்றிய சட்டம் அனைத்து மாநிலங்களுக்கமான வழிகாட்டி ஆவணம் என்பதையே வெளிநாட்டு அமைச்சரால் புரிய முடியவில்லை என்றால் அதை மக்களுக்கு தோலுரித்துக் காட்ட வேண்டியது யாருடைய கடமை..?

 

தமிழக அரசு இயற்றிய முக்கிய தீர்மானங்கள் இரண்டையும் இதுவரை இந்திய மாநிலங்களில் ஒன்றுகூட எதிர்க்கவில்லை, ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

 

இந்த நிலையில் மற்றைய மாநிலங்கள் அப்படியொரு சட்டத்தை இயற்றவில்லை என்று கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம், அறியாமை இதைக்கூட இந்திய அறிவியல் உலகம் இணைந்து கண்டிக்கத் தவறியது ஏன்..?

 

 

கேள்வி மூன்று :

காவிரி நீர்ப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்க மறுத்தபோது அது ஒரு மாநிலத்தின் பிரச்சனை மற்றைய மாநிலங்கள் அதை ஆதரிக்கவில்லை என்று ஏன் மன்மோகன் சிங் இன்றுவரை கூறவில்லை..

 

அன்று இலங்கைத் தீவில் உள்ள ஆட்சியாளர் போர்க்குற்றத்தை செய்தபோது அவர்களை தடுக்க வேண்டிய கடமையை சிறீலங்காவின் சிங்கள, தமிழ், முஸ்லீம் அறிஞர்கள் ஒன்றிணைந்து செய்ய முன்வரவில்லை.


பட்டம், பதவி, பெயர் புகழுக்காக இந்த கல்வியியலாளர் உறைந்த மௌனம் காத்தார்கள், இன்றும் காக்கிறார்கள்.

 

அன்று இலங்கையின் இன முரண்பாட்டை இந்தியா தப்பாகக் கையாளப் போகிறது என்பதை உணர்ந்தும் சிறீலங்கா அறிஞர்கள் நாட்டை வழிநடாத்தத் தவறிய இமாலயத் தவறு போன்ற தவறை இன்றைய இந்திய அறிவியல் உலகம் நிகழ்த்தியிருக்கிறது.



man111-150x150.jpg

 

கேள்வி நான்கு :
பக்கத்து நாட்டில் 140.000 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 21ம் நூற்றாண்டின் மாபெரும் போர்க்குற்றம் நடந்திருக்கிறது, அதற்கு இந்திய நடுவண் அரசு துணை போயிருக்கிறது என்றால்..

 

அந்தத் தவறு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் கரங்களிலும் இரத்தம் பூசியிருக்கிறது இதை வக்கற்ற அந்த மாநிலங்களின் அறிஞர்கள் ஒன்றிணைந்து சுட்டிக்காட்டத் தவறிவிட்டார்கள்..

 

பணக்கார முதலைகள் மௌனம் காத்தார்கள்…

நாடு பேராபத்தான முடிவுக்குள் நுழைந்து, மோசமான இடத்திற்குள் போய்க்கொண்டிருக்கிறது…

 

காந்தி பிறந்த நாடா இது என்று உங்களில் யார் கேட்டீர்கள்…?

 

இது ஈழத் தமிழர் பிரச்சனையா.. இல்லை இல்லவே இல்லை இது இந்தியப் பிரச்சனை.. இந்த நேரம் அறிஞர்கள் ஊமையாக இருப்பதுதான் கொடுந்தவறு..

 

இந்திய அறிஞர்களே நீங்கள் எப்படிச் செயற்பட வேண்டும் இதோ ஓர் உதாரணம் :

 

டென்மார்க்கில் முகமது கேலிச்சித்திர விவகாரம் நடைபெற்றபோது அல்லாவை அவமதித்துவிட்டதாக உலகம் முழுவதும் தீப்பரவியது..

 

டேனிஸ் கொடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன, டேனிஸ் ஏற்றுமதிகள் தீயிடப்பட்டன.. கோடான கோடி நஷ்டம்… நஷ்டத்திலும் நஷ்டம்…

 

டேனிஸ் பிரதமரும், பாராளுமன்ற அரசியல்வாதிகளும் பிரச்சனையை சரிவர கையாளத் தெரியாமல் தடுமாறியபோது..
நாட்டில் உள்ள 50 அறிஞர்கள், முன்னாள் தூதுவர்கள், வெளியுறவுத்துறை நிபுணர்கள் இணைந்து டேனிஸ் பிரதமரின் அணுகுமுறையை கண்டித்து, செய்ய வேண்டிய கருமங்களை நாட்டு மக்களுக்கு வழிகாட்டினார்கள்.

 

அந்த எரியும் பொழுதுகளில் பாராளுமன்றத்தை தூக்கி வீசிவிட்டு நீதியின் பாதையில் அறிஞர்களே நாட்டை வழி நடாத்தினார்கள்.

 

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்திக்கத் தவறியது டேனிஸ் பிரதமர் இழைத்த பாரிய தவறு என்று பகிரங்கமாகக் கூறினார்கள்..

 

அந்த அறிக்கை டேனிஸ் பாராளுமன்றத்தைவிட பெரிய சாசனமாக மாறி, மத்திய கிழக்கு முழுவதும் பரவி அந்த நாடுகளின் உயர் மட்டங்களில் ஒரு புரிதலை ஏற்படுத்தியது.

 

பாராளுமன்றம், மந்திரிகள் என்பது ஒரு கட்டமைவு அதுவே எல்லாமல்ல பாராளுமன்றம் தடம்மாறும்போது அறிஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெளிவாக சொன்னார்கள்.

 

வெறும் 12 கேலிச்சித்திரங்களால் நாடு எரிந்தபோது அறிஞர் விழித்தனர், ஆனால் 140.000 பேர் இறந்த பிறகும், ஒரு கோடி மாணவர் உண்ணாவிரதம் இருந்தபோது இந்திய முன்னாள் இராஜதந்திரிகள், அறிஞர்கள் அகில இந்தியளவில் இணைந்த அறிக்கை வெளியிட்டு பாராளுமன்றத்தை நெறிப்படுத்தத் தவறியிருப்பது தவறுகளுக்கெல்லாம் தவறு..

 

யாழ்ப்பாணத்து ஆசிரியர் ஒருவரிடம் கணிதம் படித்தேன் என்று சொல்லி இன்று உறைநிலை மௌனம் காக்கும் அப்துல்கலாமைப் பார்த்து ஒரு பள்ளிக்கூட மாணவன் என்ன நினைப்பான்..?

 

kal32-300x192.jpg

 

நினைக்க நினைக்க வெட்கமாக இருக்கிறது..
இந்திய அறிவியலுக்கு ஒரு காலம் தலை வணங்கியது உலகு..
இன்றய இந்திய அறிவியலை எண்ணி வெட்கி நிற்கிறது அதே உலகு..

 

அலைகள் தெற்காசிய பார்வைகளுக்காக..

கி.செ.துரை 04.04.2013

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.