Jump to content

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்


Recommended Posts

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்
 
நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 
 
தென்னையில் ரகங்கள்
 
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. 
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
 
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. 
 
தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை
 
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
வயது
 
விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். 
 
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். 
 
தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?
 
தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன. 
எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம். 
 
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
டாக்டர். ஹென்றிலூயிஸ், தென்னைவிஞ்ஞானி. நாகர்கோவில்.
 
 
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த இணையத்தளங்களில்

பல வகைப்பட்ட விவசாய / கால்நடை வளர்ப்பு சம்மந்தமான  செய்திகள் (தமிழில்)உள்ளன.

http://gttaagri.relier.in/

http://mygreenindiaa.blogspot.ch/

http://www.agriinfomedia.com/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கபுர்வமான இணைப்புகளை இணைக்கிறீகள் தொருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.