Jump to content

நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3


Recommended Posts

வளர்மதி வெள்ளி, 22 ஜூன் 2012 20:11

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star_blank.png / 3

குறைந்தஅதி சிறந்த

“நாம் தமிழர்” ஆவணம் - தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 3

சென்ற பகுதியில் விவரித்திருந்த வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது.

பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis):

‘நாம் தமிழர்’ ஆவணம் முழுவதும் ‘தேச உரிமை மீட்சி’ என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ‘திராவிடக்’ கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து ‘மீட்சி’ பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் வெளிப்படை. ஆனால், இழந்த உரிமைகளை மீட்பது என்ற பொருளில், அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவது என்ற பொருளோடு நின்றுவிடவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அது தேசிய விடுதலை நோக்கு என்ற அளவில் இருந்திருக்கும்.

மாறாக, ‘மீட்சி’ என்பதை ஆவணம் முன்மொழிவது, பாசிசத்திற்கே உரிய ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற வகையில் அமைந்திருப்பதை ‘ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்’ என்ற பகுதியில் உள்ள ‘உரைவீச்சுத் தெறிப்பு’ ஒன்று தெள்ளத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

பக்கம் 48 இல்:

“நாம் தமிழர் கட்சி

ஆட்சிக்காக மட்டுமல்ல!

தமிழின மீட்சிக்காக!”

என்று தாம் தமிழின மீட்சிக்கானவர்களே என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்திலேயே:

“கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்!

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்

கட்ட வந்த புரட்சியாளர்கள்!” (பக்கம்: 49)

என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

தமிழ் தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தருவது என்பதல்ல; ‘மறுகட்டடத்தை’ உருவாக்குவதே அவர்களது இலக்காம். ‘நாம் தமிழர்’ ஆவணத்தின் ‘தேசப்புத்துயிர்ப்பு’ நோக்கு, இக்குறிப்பிட்ட வகையிலானதாக – பழைய கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுவதாகும். (கொத்தனார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, இன்ஜினியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை! ஆனால், கட்டடத்தை இடிக்கப் போவதாகச் சொல்வது கரசேவகர்களை நினைவுபடுத்தினால் அதற்கு அவர்களே பொறுப்பு!)

noam_chomsky_281.jpgஇவ்விடத்தில் ஒரு ‘தொன்மக் கரு’வின் வெளிப்பாடே பாசிசம் என்று சென்ற பகுதியில் குறித்திருந்து விளக்காமல் விட்டிருந்ததைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அத்தொன்மக் கரு வேறொன்றுமில்லை. ‘புத்துயிப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோளே.

உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இந்தப் ‘புத்துயிர்ப்பு’ அல்லது ‘மறுபிறப்பு’ என்ற கருதுகோள் உறைந்திருப்பதைக் காணமுடியும். மனித ஆன்மாவிற்கு அழிவில்லை, என்ற கற்பனையில் ஊற்றெடுத்து, அந்த ஆன்மா இன்னொரு உடல் உருக்கொள்ளும் என்ற நம்பிக்கையாக உருமாறி, பின் நிறுவனமயப்பட்ட பல்வேறு மதங்களின் ஆதார சுருதியாக இப்புத்துயிர்ப்பு என்ற கருதுகோள் நிலைபெற்றதையும் காணமுடியும். மனித குலத்தின் ஆதியிலிருந்து அதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற மரணத்தின் மீதான அச்சத்தில் இருந்து பிறப்பதே இத்தொன்மக் கரு. அதை சமூகத்தின் மீது, குறிப்பாக தேசத்தின் மீது சாற்றுவதே பாசிசத்தின் தனித்தன்மை.

பல்வேறு சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் குறிப்பான தன்மைகளுக்கே உரிய முறையில் இத்தொன்மக் கரு பல்வேறு வடிவம் கொள்கிறது. குறிப்பான, சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் தனித்தன்மைகளில் தோன்றும் பாசிச இயக்கங்கள், இத்தொன்மக் கருவை தமது ஆதாரச் சுருதியாகக் கொண்டு, தமது சமூக வரலாற்றுப் பின்புலத்திற்கே உரிய, அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனமான நம்பிக்கைகளோடு இணைத்து உருக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய நாஜிக்கள், இத்தொன்மக் கருவோடு இணைத்தது, ‘தூய ஆரிய இனம்’ என்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இனப்பெருமை சார்ந்த மூடத்தனம்.

நமது சூழலில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்டுகள், இப்புத்துயிர்ப்பு அல்லது மறுபிறப்பு (ஆவணம் கைக்கொண்டிருக்கும் மொழியில் ‘மறுக்கட்டடம்’) என்ற தொன்மக் கருவோடு இணைக்கும் அறிவியலுக்குப் புறம்பான அல்லது போலியான அறிவியல் மீது கட்டமைக்கப்பட்ட இரு மூடத்தனமான நம்பிக்கைகள், ‘உலகின் மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழியான தமிழ்’ மற்றும் ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’.

ஆவணத்தின் முதல் பத்தியே போலியான அறிவியலின் மீது கட்டப்பட்ட இந்த இரு மூடநம்பிக்கைகளில் இருந்தே தொடங்குகிறது. உலகின் முதல் மொழி தமிழ், லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்பவற்றுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியில் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதை எத்தனை முறை கூறினாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிற மூட நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை முதல் பத்தியிலேயே தனது முற்கோளாகக் கொண்டு தொடங்கியிருக்கிறது ஆவணம்.

மேலும் ஒரு படி மேலே சென்று அதற்கான ‘அறிவியல் பூர்வமான ஆதாரமாக’ புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாளரான நோம் சோம்ஸ்கியின் கூற்றாக, அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறவும் தயங்கவில்லை.

அது என்ன பொய்?

இதுதான்: “அதனால்தான் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சோமிசிகி அவர்கள், ‘உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்; அம் மூலமொழி தமிழாக இருக்கலாம்’, என்று கருத்துரைத்துள்ளார்.”

முதலாவதாக, நோம் சோம்ஸ்கியின் ஆய்வுகள் மொழிகளின் வரலாற்றுத் தோற்றம் என்ற புலம் சார்ந்தவையே அல்ல. மொழியைக் கற்பதற்கான திறன், மனித மூளையின் அமைப்பில் உள்ளார்ந்து இருக்கிறது என்ற கருதுகோளையே அவர் தமது ஆய்வுகள் வழியாக முன்வைத்தார். அதன் அடிப்படையில் Transformative Generative Grammar என்பதாக இன்று பரவலாக அறியப்படுவதை முன்வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது மேற்குறிப்பிட்ட மொழியியல் அடிப்படையில் அமைந்த இலக்கண நோக்குகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த மொழியியல் துறையில், உசாத்துணை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நோம் சோம்ஸ்கி, இத்தகைய மூடத்தனமான ஒரு கருத்தை எங்குமே கூறியிருக்கவில்லை. இத்தகைய அறிவியலுக்குப் புறம்பாக ஒரு கருத்தை அவரது கூற்றாக ஆவணம் தன் முதல் பத்தியிலேயே வைத்திருப்பது ஏதோ அறியாமல் செய்த பிழை என்று கருவும் இயலாது. தமது மூடத்தனமான கருத்துக்களுக்கு வலு சேர்க்க, அப்பட்டமான ஒரு பொய்யை கூசாமல் சொல்லத் துணிந்திருக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது.

தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, முதல் பத்திகளிலேயே அப்பட்டமாக பொய் சொல்லத் துணிந்த ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணம் பெற்று நிற்கிறது.

இருக்கும் கட்டடத்தை இடித்துவிட்டு (கரசேவகப் பணி) ‘மறுகட்டடத்தை’ கட்டுவோம் என்ற விளக்கத்தில் ‘நாம் தமிழர்’ கட்சி ஆவணம், தனக்கே உரித்தான ‘தேசப்புத்துயிர்ப்பு’ என்ற பாசிசத்தின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இத் தொன்மக் கருவிற்கு வலுசேர்க்கும் விதமாக ‘ஆதிக் குடி’, ‘முதல் மொழி’ என்ற அறிவியல் பூர்வமற்ற மூடத்தனமான கற்பனைகளையும் அவற்றை நிறுவ ஒரு பெரும் அறிஞரின் கூற்றாக அப்பட்டமான பொய்யையும் சொல்லத் துணிந்திருக்கிறது.

அதே சமயம், இத்’தேசப்புத்துயிர்ப்பு’ வெகுவிரைவில் நிகழக்கூடிய சாத்தியமில்லை என்பதிலும் ஆவணம் தெளிந்தே இருக்கிறது. ‘தேசிய இனங்களின் சிறையாக’ அரை நூற்றாண்டுக்கும் மேலாக, வலுவாக தாக்குப் பிடித்து நிற்கும் இந்திய அரசை மீறி, அத்தனை சுலபத்தில் தமிழ் தேசப் புத்துயிர்ப்பை நிகழ்த்திவிட இயலாது என்ற தெளிவு இருப்பதாலேயே,

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

என்ற விளக்கத்தையும் அளிக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசை மீறி தமிழ் தேச புத்துயிர்ப்பை உடனடி நிகழ்ச்சி நிரலில் வைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருப்பதாலேயே, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கேற்று, ஒரு நீண்ட கால நோக்கில் ‘தேசப் புத்துயிர்ப்பை’ நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கிறது.

தற்காலத்தைய நவ – பாசிஸ்டுகள், தமது நிகழ்ச்சி நிரல்களை ஒரு பல்தேசிய மட்டத்திற்கு நகர்த்தியிருப்பதற்கு ஒப்பானது இது. நவ – பாசிசக் கும்பல்களில் ஒன்றான சிவசேனை கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானது.

பாசிசத்தின் இரண்டாவது முக்கிய அம்சமான அதிதீவிர தேசியவாதத்திற்கு (ultra – nationalism) இனி நகர்வோம்.

தமிழ் தேசத்திற்கான வரையறுப்பாக ஸ்டாலினின் இலக்கணத்தை ஆவணம் பக்கம் 31 – 31 ல் குறிப்பிடுகிறது. ஸ்டாலினின் வரையறுப்பை ஆவணம் எங்ஙனம் திரித்திருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்பாக, அவரது வரையறுப்பை தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.

ஸ்டாலின் தமது தேசம் (nation) குறித்த வரையறுப்பில் இனம் (race) என்ற வகையினத்தை மிகக் கவனமாகக் குறிப்பிட்டு விலக்கினார். ‘மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்’ என்ற அவரது புகழ் பெற்ற சிறு நூலின் முதல் கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே இதை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார்:

“ஒரு தேசம் என்பது என்ன?

தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகக் குழுமம். ஒரு மக்கள் தொகுதியின் உறுதியாக நிலைபெற்ற சமூகக் குழுமம்.

இச்சமூகக் குழுமம், இன ரீதியாகவோ, பழங்குடியினர் அடிப்படையிலானதோ அன்று. நவீன இத்தாலிய தேசம் ரோமர், டியூட்டானியர், எட்ருஸ்கியர், கிரேக்கர், அராபியர் இன்னும் இதுபோன்ற பல இனங்களால் உருவானது. ஃப்ரெஞ்சு தேசம் கௌல், ரோமர், பிரித்தானியர், டியூட்டானியர் இன்னும் பலரால் உருவானது. பிரிட்டிஷ், ஜெர்மன் இன்னும் இது போன்ற மற்ற தேசங்களும் இவ்வாறு பல்வேறு இனத்தினர், பழங்குடியினரின் கலப்பினால் உருவானவை என்றே சொல்ல முடியும்.

ஆக, ஒரு தேசம் என்பது, வரலாற்று ரீதியாக உருவாகி அமைந்த ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே தவிர, இன ரீதியாகவோ பழங்குடியினர் அடிப்படையிலோ அமைந்ததன்று.”

(குறிப்பு: மொழியாக்கம் எனது. Community என்பதை சமூகக் குழுமம் என்பதாகவே தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். அதை social group என்று திருப்பி மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள வேண்டாம் என்று கோருகிறேன்)

[What is a nation?

A nation is primarily a community, a definite community of people.

This community is not racial, nor is it tribal. The modern Italian nation was formed from Romans, Teutons, Etruscans, Greeks, Arabs, and so forth. The French nation was formed from Gauls, Romans, Britons, Teutons, and so on. The same must be said of the British, the Germans and others, who were formed into nations from people of diverse races and tribes.

Thus, a nation is not a racial or tribal, but a historically constituted community of people.

http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

இந்த முன்நிபந்தனையை வரையறுத்த பின்னரே ஸ்டாலின், அக்கட்டுரையின் பிற்பாதியில் தேசிய இனத்திற்கான தமது வரையறுப்பைத் தந்திருப்பார்.

அவ்வரையறுப்பு பின்வருமாறு:

“ஒரு பொதுமொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, ஒரு பொதுப்பண்பாட்டின் ஊடாக வெளிப்படும் பொதுவான உளவியல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகி நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே ஒரு தேசமாகும்.”

[A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture. http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1]

ஆவணம் இவ்வரையறுப்பை மிகச் சரியாக, பிசகேதும் இன்றித் தருகிறது:

தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் தகுதியுடைய இனம். இவ்வினத்திற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பொதுவான வாழும் பகுதி, பொதுப் பொருளாதார வாழ்வு, ஓரினமென்ற மன இயல்பு ஆகிய கூறுகளுடன் வரலாற்று அடிப்படையில் உருவான நிலையான மக்களினம், தமிழ் குமுகாயமாகும். தனக்கென அரசியல் பண்பாட்டு வாழ்வியல் உரிமைகளோடும், இறையாண்மையோடும் இருந்த, இருக்க வேண்டிய ஒரு இனம், தமிழினம் ஆகும்.” (பக்கம் 31 – 32) (அழுத்தம் எனது. அழுத்தம் தராப்படாத பகுதி ஸ்டாலினின் வரையறுப்பு)

stalin_630.jpg

ஆனால், முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் சேர்த்திருக்கும் வரிகளிலும், வரையறுப்பின் முதல் சொல்லாக்கத்திலும், மிக வெளிப்படையாக, இனம் என்பதற்கே அழுத்தம் தருகிறது. ஸ்டாலினின் வரையறுப்பைச் சரியாகத் தரும் அதே போதில், அவர் விலக்கி வைத்த இனம் என்ற வகையினத்தின் அடிப்படையிலே தமிழ் தேசத்தை வரையறை செய்கிறது.

தேசத்தின் மையக்கூறாக, தூய இனம் என்ற வகையினத்தைக் கொள்வதாலேயே ஆவணம் முழுக்க இனவாதம் தலைவிரித்து ஆடுவதாக இருக்கிறது.

ஆவணம் விவரித்துச் செல்லும் சமூக வரலாற்றின்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே (பாகிஸ்தான் உட்பட) தமிழர் என்ற இனத்தால் ஆளப்பட்டது. ஆரிய இனப் படையெடுப்பிற்குப் பின் நிகழ்ந்த இனத்திரிபால் உருவானதே திராவிடம் என்ற இனம். தமிழ் மொழி திரிந்ததால் உருவானவையே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியிருக்கும் பிற மொழிகள்.

இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்.

இவ்வாறு, இனத்திரிபு என்று நோக்குவதாலேயே, திராவிடத்தை வேரறுக்கக் கோருகிறது ஆவணம். மொழித் திரிபு என்று நோக்குவதாலேயே தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினரைத் தம் தாய் மொழி தமிழே என்று உணர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு மென்மையாக மிரட்டவும் செய்கிறது:

“உங்களைப் பிறமொழியாளர் என்று சொல்லி,

உங்களைப் பிறராகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

உங்கள் மூலத் தாய்மொழியாம் தமிழுக்குத் திரும்பிட

உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.” (பக்கம்: 50)

ஒரு தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் பிற மொழி பேசுவோர், தமது தாய்மொழியைக் கைக்கொள்வதற்கான முழு உரிமையை ஏற்பதுவே ஒரு ஜனநாயக அணுகுமுறையாக இருக்க முடியும். அவர்களது மூல மொழி, பெரும்பான்மையினரின் மொழியே என்று கற்பித்து அதற்குத் திரும்பிட உரிமை தருகிறோம் என்பது – இதில் முழு உரிமை வேறாம் – என்பது மிரட்டல் அல்லாமல் வேறு என்ன? இனவாத வெறியில் இருந்தல்லாமல் வேறு எதில் இருந்து இத்தகைய மிரட்டல் எழ முடியும்!

இதன் அடுத்த வரிகளிலேயே மீண்டும்:

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்!

எனக்கு அடங்கி, என்னை வாழ்த்தினால் நீ இங்கு வாழலாம் என்ற பெரிய அண்ணாத்தையின் (big brother attitude) மென்மையான மிரட்டல் அல்லாமல் இது வேறு என்ன!

ஸ்டாலினின் வரையறுப்பைத் தரும் ஆவணம், அவரது கருத்தில் பல்வேறு இனங்களின் கலப்பினூடாக வரலாற்று ரீதியாக நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியினரே ஒரு தேசமாக உருப்பெறுகின்றனர் என்பதைக் கவனமாகத் தவிர்க்கிறது. (ஸ்டாலினின் இவ்வரையறுப்பைக் காட்டிலும் செறிவான நோக்குகளை இங்கு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்). பல இனத்தவர், பல மொழி பேசுபவர் கலந்து, நெடுங்கால வரலாற்று தொடர்ச்சியில் ஊடாடி, உருப்பெற இருப்பதே நவீனத் தமிழ் தேசம் என்பதை உணராது, தூய இனவாதச் சகதியில் வீழ்ந்தமையால், இனவெறி விஷத்தைக் கக்குவதாக இருக்கிறது.

எந்தவொரு தேசமும் தூய இனக்குழுவால் நிலைபெற்றவை அல்ல. தூய இனவாதம் தேசியவாதமும் அல்ல. தூய இனவாதம், பாசிசத்தின் முக்கிய அம்சமான ultra – nationalism - அதிதீவிர தேசியவாதமே.

பாசிசத்தின் மூன்றாவது முக்கிய அம்சமான அரசியல் மதம் (political religion) ‘நாம் தமிழர்’ ஆவணத்தில் எங்ஙனம் உருக்கொண்டிருக்கிறது என்பதோடு இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.

செயற்பாட்டுக் கொள்கைகள் பகுதியில், “நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

நல்லது. ஆட்சிக் கனவோடு, நல்ல ஆட்சியை நல்குவதாகக் கனவு காண்பது மிக நல்லது.

ஆனால், முரண்பாடுகள் பகுதியில், மூன்றாம் முரண்பாடாக “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்குமிடையே முரண்பாடு” (பக்கம்: 37) என்று வரையறுக்கிறது ஆவணம்.

இதை விளக்குமிடத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கிறது:

“3 ஆம் முரண்பாடுகளான முகமதியமும் கிறுத்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகம்மதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (பக்கம்: 39)

சமயச்சார்பற்ற அரசமைக்கப் போவதாகக் கனவு காணும் ஒரு கொள்கை ஆவணம், எல்லாச் சமயத்தினரையும் சமமாக அணுகியிருக்க வேண்டும். குறைந்தது “எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள்” என்று பட்டியலிட்டால், அதில் அனைத்து மதத்தினரையுமாவது சேர்த்திருக்க வேண்டும். ‘நாம் தமிழர்’ ஆவணமோ இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆர். எஸ். எஸ். பி. ஜே. பி. சிவசேனா ஆகிய இந்துத்துவ சக்திகளின் ‘கொள்கைகளுக்கும்’ இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக, இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்த கொள்கையை அறிவித்த முதல் ஆவணம் என்ற பெருமையையும் ‘நாம் தமிழர்’ ஆவணமே தட்டிச் செல்கிறது என்பதைக் குறிப்பிடாமல் விடுவது வரலாற்றுக்கு துரோகம் செய்வதாகிவிடும்.

இத்தகைய நுட்பமான இந்துத்துவச் சார்புக் கொள்கையை அறிவித்தாலும், ஆவணம் எந்த ஒரு மதத்தையும் தனது உத்தியோகப்பூர்வமான மதமாக ஒப்புக்கொண்டுவிடவில்லை. மாறாக, பாசிசத்தின் கூறான, அரசியல் மதம் (political religion) ஒன்றையே தனது கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது.

கலைச்சொல் விளக்கம் பகுதியில் ‘தமிழியம்’ என்பதாக ஆவணம் கீழ்க்கண்டவாறு வரையறை தருகிறது:

தமிழியம்: ஐந்திணை மரபுசார்ந்த இயற்கை நெறி, எண்ணியம் சார்ந்த அறிவியநெறி, பொதுமை சார்ந்த உலகியநெறி, உயிரிநேயம் சார்ந்த அருள்நெறி ஆகியவற்றை உ:ள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் போற்றும் விழுமிய வாழ்வியம் (வாழ்வியல் நெறி). (பக்கம்: 117)

இது ஒரு மதம் சாராத வரையறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வரையறுப்பின்படி வாழ்ந்தாலே ஒருவர் தமிழர் என்ற வரையறைக்குள் வருவர் என்று நிபந்தனையையும் விதிக்கிறது ஆவணம்: “தமிழியத்தை வாழ்வியல் நெறியாகவும், தமிழர் நலனை நடைமுறையாகவும் கடைப்பிடிப்பவர் வாழும் தமிழர் ஆவார்.” (பக்கம்: 116)

இந்த வரையறுப்பின்படி இன்று வாழும் தமிழரில் ஒருவரைக்கூடத் தமிழராகச் சொல்லமுடியாது (‘நாம் தமிழர்’ இயக்கத்தவரின் தலைவர் கூட இதன்படித் தமிழர் இல்லை என்றாகும்) என்பது ஒருபுறம் இருக்க, பாசிசத்தின் மூன்றாவது வரையறுக்கும் அம்சமான அரசியல் மதத்தை ‘நாம் தமிழர்’ ஆவணம் தமிழ் மக்கள் மீது திணிக்கிறது என்பதுவே இங்கு கவனத்திற்குரியது.

மதம் தொடர்பான தனது நிலைப்பாடாக ஹிட்லர் கூறியதோடு, இந்த வரையறுப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்:

“தேசிய சோஷலிசம், சற்று நீண்ட காலம் ஆளுகையில் இருந்துவிட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட சாத்திமற்றுப் போகும்.

நீண்ட கால நோக்கில், தேசிய சோஷலிசமும் மதமும் ஒத்திசைந்து இருப்பது சாத்தியப்படாத ஒன்று.

இந்த முரண்பாட்டை மதத்திற்கு எதிரான போராக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்று சி. எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக ஃப்யூரர் மேற்கொண்டு கூறியதாவது:

இல்லை. இதன் பொருள் மதத்திற்கு எதிராக நாம் போர் தொடுக்கப் போகிறோம் என்பதில்லை. சிறந்த தீர்வு என்பது, எந்தவிதமான களையெடுப்புகளும் செய்யாமலேயே, இம்மதங்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும்படி விட்டுவிடுவதாகவே இருக்கும்.

[When National Socialism has ruled long enough, it will no longer be possible to conceive of a form of life different from ours.

In the long run, National Socialism and religion will no longer be able to exist together.

On a question from C. S., whether this antagonism might mean a

war, the Fuehrer continued:

No, it does not mean a war. The ideal solution would be to

leave the religions to devour themselves, without persecutions.

HITLER'S TABLE TALK 1941-1944: His Private Conversations. Translated byNorman Cameron and R.H. Stevens Introduced and with a new Preface by H.R. Trevor-Roper]

ஹிட்லர், ஆட்சியைப் பிடிக்கும் முன்பாகவும் சரி, கைக்கொண்ட பிறகும் சரி, எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை (யூதர்கள் மீதான தாக்குதல் இனவெறி அடிப்படையிலே இருந்தது). ஜெர்மனியில் ப்ரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பலம் உணர்ந்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருக்கும் நிலையையே எடுத்தான். சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்தான்.

தமிழகத்தில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்ட்டுகள், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் ‘சந்தேகப் பட்டியலில்’ சேர்த்துவிட்டு, ‘இந்து’ மதத்தினர்பால் கண்டும் காணாத நிலையெடுத்திருப்பது அதற்கு ஒப்பானதே. ஹிட்லரைப் போலவே, நாஜிக் கொள்கைக்கு நிகரான, அரசியல் மதமாக ‘தமிழியம்’ என்ற அரசியல் மதத்தையும் முன்மொழிந்திருப்பதுவும் அப்பட்டமான பாசிசமே!

(தொடரும்)

- வளர்மதி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20183:2012-06-22-14-44-52&catid=1:articles&Itemid=264

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செத்துப்போன கம்யூனிசிய கொள்கை இன்னமும் எத்தனை நாளைக்கு கூட வரும்?

தமிழனை தமிழன் ஆள நினைத்தவுடனேயே அனைவருக்கும் ஒரு பதட்டம் வருவது இயல்பே ஏனென்றால் தமிழர் அல்லாதவரின் இருப்பு தமிழகத்தில் முக்கியம் இல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.