Jump to content

கறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 31 வருடங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

10563051_750595191664270_726066881327532

நான்இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்

அமைதி நிலவிய அந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கம்பீரமாக நின்றிருந்த அந்த இளைஞனின் குரல் அங்கு கூடியிருந்தவர்களையே அதிர வைக்கிறது.

தனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட போகிறது என்பது தெரிந்திருந்தும் இறப்பு பற்றிய கவலையோ பயமோ இன்றி இறப்பின் பின்பும் விடுதலை பெற்ற தாயகத்தைத் தன் கண்களால் காண வேண்டும் என்ற அவனின் உன்னத வேட்கை அங்கே கொழுந்துவிட்டு எரிகிறது.

அவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதுகிறது. அவன் வெலிக்கடைச் சிறையில் தாயக விடுதலைக்காகத் தான் எழுதப் போகும் தியாக வரலாற்றைப் பதிவு செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறான்.

1983 ஜூலை 25

கொடிய குற்றங்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளின் கூண்டுக் கதவுகள் திறக்கின்றன. கொடிய கொலை வெறியுடன் வெளியே ஓடி வந்த அவர்களுக்கு சிறையின் பண்டகசாலை திறந்து விடப்படுகிறது. அவர்கள் இரும்புச் சட்டங்கள், கோடாரிகள், கொட்டன்கள் எனக் கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

விடுதலைப் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களின் கொட்டடிகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன.

சிங்களக் கைதிகளின் கொலைவெறி ஆரம்பமாகிறது. நிராயுதபாணிகளான தமிழ் கைதிகள் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர். வெறுங்கைகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தமிழ்க் கைதிகளின் முயற்சி சாத்தியமற்றுப் போகிறது.

படுகாயமடைந்து குருதி வெள்ளத்தில் துடித்த அவர்கள் சிறையின் புத்தர் சிலை முன் இழுத்துக் கொண்டு வந்து போடப்படுகின்றனர். கருணையையும் அன்பையும் போதித்த கௌதம புத்தரின் காலடியில் பிணங்கள் குவிகின்றன.

மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன, கை, கால்கள் வெட்டப்படுகின்றன, ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.

குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.

மூன்று நாள்கள்

அத்துடன் அடங்கியதா இனவெறிக் கொலைஞர்களின் காட்டுமிராண்டித்தனம்? இல்லை, மூன்றாம் நாள் மீண்டும் ஆரம்பமாகியது. அடைக்கப்பட்ட சிறைக் கூண்டுகளின் கதவுகளை உடைத்துத் திறந்து மேலும் 18 கைதிகளைக் கொன்று தள்ளினர்.

இவை வெலிக்கடைப் படுகொலையின் குருதி படிந்த கொடிய நினைவுகள். இனவெறிக் கொடூரத்தின் அழிக்க மடியாத பதிவுகள், வெலிக்கடைச் சிறையில் இப்படியொரு மிருகவெறிக் கொலைகள் அரங்கேற்றப்பட சிறைக்கு வெளியேயும் பிணத் திண்ணிகளின் பேயாட்டம் கோலோச்சுகிறது.

தமிழன் என அடையாளம் காணப்படும் எவனும் கொல்லப்பட்டான். தமிழர் கடைகள், இருப்பிடங்கள், சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.

பொலிஸார் முன்னிலையில் ஆட்சியாளர்கள் மறைமுக அங்கீகாரம் வழங்க ஒரு பெரும் இன அழிப்பு தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது. அந்த அரங்கேற்றம்தான் தமிழன் தமிழனாக வாழவேண்டுமானால் கைகளில் ஆயுதம் ஏந்தியே ஆக வேண்டும் என்ற செய்தியை தமிழருக்கு உணர்த்தியது.

இந்தச் சிறைச்சாலைப் படுகொலைகளுக்கும் தென்னிலங்கை எங்கும் தமிழ் மக்கள் நரவேட்டையாடப்பட்டமைக்கும் திருநெல்வேலியில் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலே காரணம் எனக் கூறப்பட்டது.

ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்குமிடையே படையினர் கொல்லப்படும் போது அதில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி மக்கள் மீது பழி தீர்ப்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் கோழைத்தனமான அரசியல் நாகரிகம்.

அதுமட்டுமல்ல 1983 ஜூலை இன அழிப்பு சிங்கள மக்கள் கொதிப்படைந்து மேற்கொண்ட எதிர்பாராத சம்பவமல்ல. அது அரச தரப்பால் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்து முடுக்கி விடப்பட்ட ஓர் அகோரத் தாண்டவம்.

ஒரு தாக்குதலில் படையினர் எவராவது இறந்தால் அவர்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறுவது தான் வழமையான நடைமுறை.

இனப்படுகொலை

ஆனால் திருநெல்வேலியில் சாவடைந்த படையினரின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவர்களின் உறவினர்கள் அவர்களின் சொந்த ஊர்களிலிருந்து கொழும்புக்கு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

புறநகர்ப் பகுதிகளின் காடையர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கனத்தையில் திரட்டப்படுகின்றனர். அமைச்சர்களாக சிறிஸ் மத்யூ, அத்துலத் முதலி ஆகியோர் தலைமையில் ஒரு பெரும் இன அழிப்புக்குத் திட்டமிடப்படுகின்றது.

அதன் படி பொறளையில் உள்ள பெட்டிக் கடைகளில் பெற்றோல் கலங்கள், வாள்கள், இரும்புப் பொல்லுகள் என்பன தயாராக வைக்கப்படுகின்றன. படையினரின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் யாழ்ப்பாணத்தில் ஒரு புத்த பிக்கு உயிருடன் எரிக்கப்பட்டார் என்ற வதந்தி பரப்பப்படுகிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே பொறளையில் உள்ள தமிழர்களின் கடைகள் எரிகின்றன. வீதியில் சென்ற தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். பலர் கொல்லப்படுகின்றனர்.

அதேநேரத்திலேயே கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் மீதான இன ஒழிப்பு பரவுகிறது. அடுத்தநாள் விடியும்போதே தென்னிலங்கையின் முக்கிய நரங்களில் எல்லாம் தமிழர்களின் இரத்தம் ஓட ஆரம்பிக்கிறது.

பல ஆயிரம் தமிழர்கள் பலி கொள்ளப்படுகின்றனர். சொத்துகள் சூறையாடப்படுகின்றன. கடைகள் வீடுகள் எரியூட்டப்படுகின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். சிலர் வாகனங்களுக்குள் வைத்து உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்.

தண்டிக்கப்படாத குற்றங்கள்

இந்தப் பயங்கர இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 25, 28ஆம் திகதிகளில் 54 தமிழ்க் கைதிகள் குதறப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறைச்சாலை என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கம். அது நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் கடப்பாடு கொண்டது.

சிறைச்சாலை எவருக்கும் தண்டனை வழங்கிகத் தீர்ப்பளிக்க முடியாது. ஆனால் வெலிக்கடைச் சிறைச்சாலை 54 கைதிகளுக்கு எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவுமின்றி சாவுத் தண்டனை வழங்கியது.

இந்தப் படுகொலைகள் இடம்பெற்று முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. பல அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டன. அன்று சிறைக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை. படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு தடுக்க முயலாத காவலர்கள் தண்டிக்கப்படவில்லை.

நேரடியாகப் படுகொலைகளை மேற்கொண்ட சிங்களக் கைதிகள் தண்டிக்கப்படவில்லை. இவை தொடர்பாக எந்தவொரு நீதிமன்றமும் கேள்வி எழுப்பவில்லை. இது இலங்கையின் ஜனநாயகம்.

ஆனால் அந்தக் கொலைகளில் முன் நின்று பணியாற்றிய கைதிகள் நெடுங்கேணியில் உள்ள திறந்த வெளிச்சிறைக்கு அனுப்பிக் கௌரவிக்கப்பட்டனர். அங்கு போயும் அவர்களுக்கு இரத்த வெறி அடங்கவில்லை. காட்டில் வேட்டை யாடதேன் எடுக்கச் செல்லும் தமிழர்களின் கழுத்துக்களை காத்திருந்து வெட்டிக் குருதி குடித்தனர். வருடங்கள் 31 போய்விட்டன.

மாறாத நாகரிகம்

ஆட்சிகள் மாறி மாறி அதிகாரத்துக்கு வந்தபோதும் சிறைச்சாலைக்குள் கைதிகளைப் படுகொலை செய்யும் நாகரிகம் மட்டும் மாறவில்லை. எவரும் தண்டிக்கப்படுவதுமில்லை.

இலங்கையின் சிறைக் கொலைகள் சம்பிரதாயத்தின் அடுத்த சாதனை பிந்துனுவௌப் படுகொலைகள். விடுதலைப்புலிகள் எனச் சந் தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு முகாம் அது.

ஒரு நாள் இரவு அந்த முகாமின் கதவுகள் சிறைக் காவலர்களால் திறந்து விடப்படுகின்றன. இந்த ஊரைச் சேர்ந்த பலர் துப்பாக்கிகள் உட்படப் பல்வேறு ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து கொள்கின்றனர்.

இளைஞர்கள் மேல் கொலை வெறியாட்டம் நடத்தப்படுகிறது. தடுப்பதற்கு எவருமே இல்லாத நிலையில் 28 இளைஞர்கள் பிணமாகச் சாய்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேன்முறையீட்டில் அவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் பின்பு சிறைச்சாலை என்பது தமிழ்க் கைதிகள் எந்த நேரமும் பலமோசமாகத் தாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது மாற்ற முடியாத நியதியாகிவிட்டது.

ஏதோவொரு காரணம் கூறப்பட்டு தமிழ்க் கைதிகள் அடித்து நொருக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதும் அவர்களில் சிலர் இறந்துவிடுவதும் இப்போதெல்லாம் சாதாரண விடயங்களாகி விட்டன.

நீதி இல்லை

அண்மையில் வவுனியாவில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மேல் வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரிப் போராட்டம் நடத்திய கைதிகள் தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து நொருக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்தனர். இப்படியாக வெலிக்கடையில் 1983 ஜூலையில் தொடங்கிய சிறைப்படுகொலைகள் இன்றுவரை 30 வருடங்களாகத் தொடர்கின்றன.

இந்தப் படுகொலைகள் தமிழ் மக்களுக்கு ஒரு திட்டவட்டமான செய்தியைச் சொல்லி வைக்கின்றன. அதாவது இலங்கையின் ஆட்சியாளர்களிடம் தமிழர்கள் எப்போதுமே நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் அது.

- சந்திரசேகரஆஷாத்

****

குட்டிமணியின் கண்கள்

எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். – குட்டிமணி

விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் போகும் தமிழீழத்திற்காக ஆயிரமாயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இன்னுயிர்களை விடுதலை வேள்விக்கு காணிக்கையாக்கிக் கொண்டார்கள். தனது எதிர்காலத் தலைமுறை எந்த வித அடக்குமுறைகளும் அற்று உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக தன்னை அழித்துக் கொண்டவர்தான் குட்டிமணி என்று அழைக்கப்படும் திரு செல்வராசா யோகச்சந்திரன்.

ஈழத் தமிழர்களின் இன்னல்கள் நிரந்தரமாகக் களையப் படவேண்டுமென்றால் தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர் குட்டிமணி. அந்த விடுதலை வீரரை 08-05 1981 அன்று சிங்களக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கள நீதிமன்றம் அவருக்கு மரணதன்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்த நீதிபதி குட்டிமணியின் இறுதி ஆசையைக் கேட்டபோது, அதற்கு குட்டிமணி கூறிய பதில் அவரது உள்ளக் கிடக்கையையும் விடுதலைமேல் அவர் கொண்டிருந்த தீராத பற்றையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.”

இதுதான் அந்த விடுதலை வீரரின் கடைசி ஆசை. அதற்குப் பின் அவர் வெலிக்கடைச் சிறையில் அடைக்கப் பட்டார். அந்தச் சிறையில் ஏற்கனவே பல சிங்களக் கைதிகளும் தமிழ்க் கைதிகளும் இருந்தனர். சிங்களக் கைதிகள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்தனர். தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை வைக்கப் பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் மூண்டது. யூலை மாதம் 24 ஆம் திகதி தொடங்கிய அந்தக் கலவரம் பல வாரங்கள் தொடர்ந்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். பலர் உயிரோடு கொழுத்தப் பட்டனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப் பட்டன. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.) கலவரத்தை அடக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்ததுமில்லாமல் கலவரத்தை மேலும் தூண்டும் வேலைகளிலும் இறங்கியது.

இந்தக் கலவரத்தின் தீ வெலிக் கடைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளையும் பற்றிக் கொண்டது. சிறைக் காப்பாளர்கள் அந்தச் சிங்களக் கைதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டிருந்த சிறைக் கதவுகளைத் திறந்து விட்டனர். கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயதங்களுடன் தமிழ்க் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களை வெட்டி வீழ்த்தினர். குட்டிமணியின் கடைசி ஆசையை ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அந்தச் சிங்களக் கைதிகள் அவரை வெட்டிப் படுகொலை செய்தது மட்டுமல்ல அவரது கண்களைத் தோண்டி எடுத்து அதை தங்களது கால்களால் நசுக்கி அழித்தனர். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.

குட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள். அந்த விடுதலை வீரரின் இறுதி ஆசையை நிறைவேறாமல் செய்தனர். குட்டிமணி மட்டுமல்ல பல்லாயிக்கணக்கான பெண்களும் ஆண்களும் தங்கள் உயிரினும் மேலாக நேசித்த அந்தத் தமிழீழத் தனியரசைக் காணும் முன்பே போர்க்களத்தில் தங்கள் உயிர்களைக் காணிக்கையாக்கிக் கொண்டனர். இவர்கள் எதைக் கேட்டார்கள்? உரிமைகள் மறுக்கப்பட்ட தங்கள் இனத்துக்காக விலங்கிலும் கேவலமாக நடத்தப்பட்ட தங்கள் மக்களுக்காக நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் விடுதலையையும் கேட்டார்கள்.

(செப்டம்பர் திங்கள் 1997 ஆம் ஆண்டு, ‘Tamil Tribune’ எனும் இதழில் பேராசிரியர் தஞ்சை நலங்கிள்ளி அவர்கள் எழுதிய “Eyes Of Kuttimani” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு …

* தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்

* குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்

* ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்

* தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்

* சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்

* செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்

* அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செல்லதுரை ஜெயரெத்தினம்

* அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்

* ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்

* சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்

* சின்னதுரை அருந்தவராசா

* தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்

* மயில்வாகனம் சின்னையா

* சித்திரவேல் சிவானந்தராஜா

* கணபதிப்பிள்ளை மயில்வாகனம்

* தம்பு கந்தையா

* சின்னப்பு உதயசீலன்

* கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்

* கிருஷ்ணபிள்ளை நாகராஜா

* கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்

* அம்பலம் சுதாகரன்

* இராமலிங்கம் பாலச்சந்திரன்

* பசுபதி மகேந்திரன்

* கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்

* குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்

* மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்

* ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்

* ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்

* கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்

* யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்

* அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்

* அந்தோணிப்பிள்ளை உதயகுமார்

* அழகராசா ராஜன்

* வேலுப்பிள்ளை சந்திரகுமார்

* சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் ஆகிய 35 தமிழர்களும் ….

இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு…

* தெய்வநாயகம் பாஸ்கரன்

* பொன்னம்பலம் தேவகுமார்

* பொன்னையா துரைராசா

* குத்துக்குமார் ஸ்ரீகுமார்

* அமிர்தநாயகம் பிலிப்குமாரகுலசிங்கம்

* செல்லச்சாமி குமார்

* கந்தசாமி சர்வேஸ்வரன்

* அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை

* சிவபாலம் நீதிராஜா

* ஞானமுத்து நவரத்தின சிங்கம்

* கந்தையா ராஜேந்திரம்

* டாக்டர் ராஜசுந்தரம்

* சோமசுந்தரம் மனோரஞ்சன்

* ஆறுமுகம் சேயோன்

* தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்

* சின்னதம்பி சிவசுப்பிரமணியம்

* செல்லப்பா இராஜரட்னம்

* குமாரசாமி கணேசலிங்கன்

இனவெறி சிங்கள ஆதிக்க சக்தியின் இன அழிப்பு கோரவதாண்டவத்தில் படுகொலையான இவ் உறவுகளுக்கு எம் இதய அஞ்சலிகள்.

கறுப்பு ஜூலை – 1983 இனக்கலவரம்

கருப்பு ஜூலை 1983ம் வருடம் வன்முறை ஏதோ எதேச்சையாக நடந்த ஒன்றல்ல. அது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட வன்முறை. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைச் சிதைப்பதுடன் அவர்களின் இருப்பையே நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை.

சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய அன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள்

FB: எங்கள் ஈழம் இது தமிழீழம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.