Jump to content

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்... - 01

[ திங்கட்கிழமை, 26 மே 2014, 07:58 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.]

பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.

அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல.

ஏனென்றால் - இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது வீட்டுக் கதவைத் தட்டுவதை நான் விரும்பவில்லை.

ஆனாலும் - நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்.

பிரபாகரனைத் தமிழர்கள் மறந்துவிட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் சொல்லுகின்றது; ஆனால், அவரை அவர்கள் மறந்துவிடாத மாதிரியான காரியங்களையே திரும்பத் திரும்ப அது செய்தபடி உள்ளது.

என்னுடைய வீட்டுத் தெருவிலோ, கிராமத்துச் சந்திகளிலோ - கடந்த ஒன்றரை, இரண்டு வருடங்களாக எந்தச் சீருடை தரித்த படை வீரனையும் நான் கண்டதில்லை. அவர்கள் இந்தப் பக்கம் வருவதுமில்லை; வரவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை.

நான் நடமாடித் திரிகின்ற ஏனைய ஊர்களிலும் நகர்களிலும் ஆங்காங்கே படை வீரர்கள் நிலைகொண்டுள்ளார்கள்; ஆனால், உண்மையாகவே அச்சுறுத்தும் பாணியில் அவர்கள் நடமாடுவதில்லை.

ஆனால் - மே மாதம் 18ஆம் திகதிக்கு உரிய தனித்த வேறுபாடு என்ன…?

அந்த ஒரு நாளில் மட்டும், ஆயுதம் தரித்த சீருடைவீரர்கள் மிதிவண்டிகளில் குறைந்தது நான்கு தடவைகள் எனது வீட்டுத் தெருவில் ரோந்து போனார்கள்; அயற் சந்திகளில் வழமைக்கு மாறாய் குழுமி நின்றார்கள்; பக்கத்து நகரில் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் போர் நடவடிக்கைக் களங்கள் போல இருந்தன. சந்திகள், கடைத் தெருக்கள், பாடசாலை வாசல்கள், கோயிற் சூழல்கள் - எங்கும் படையாட்கள். சில வீதிகளுக்கு குறுக்கே தடைகளைப் போட்டு கனரக ஆயுதங்களுடன் மறித்து நின்றார்கள்; நாளேடுகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டிருந்தார்கள்; பல்கலைக்கழகத்தை மூடி, சூழல் எங்கும் படைவீரர்கள் பரவி நின்றார்கள்.

யாழ்ப்பாண நகரில், தனது அரசியற் கட்சியின் செயலகத்துக்குச் சென்ற வடக்கு மாகாண சபையின் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், அந்த வீதிக்கு உள்ளேகூடச் செல்ல முடியாது தடுக்கப்பட்டார். தனது மேலதிகாரியைத் தொடர்புக் கருவியில் அழைத்து உரையாடிய பின்பு - "இந்த இடம் உயர் காப்பு வலயம். உள்ளே செல்ல உங்களை அனுமதிக்க முடியாது" என அங்கே நிறுத்தப்பட்டிருந்த சிறிய படை அணியின் பொறுப்பாளன் தன்னிடம் திடமாகக் கூறியதாக சிவஞானம் என்னிடம் சொன்னார்.

இறந்தவர்களை நினைத்து அஞ்சலிக்கும் நிகழ்வுகளுக்கு அதிகாரபூர்வத் தடைகள் ஏற்கெனவே போடப்பட்டிருந்தன; அதையும் மீறி எவரும் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகப் படையினர் பட்டவர்த்தனமாக இறக்கிவிடப்பட்டிருந்தனர்.

சாதாரண உடைகளில் மோட்டார் சைக்கிள்களில் அலைந்து திரிந்த புலனாய்வாளர்களின் எண்ணிக்கை, சீருடைகளில் இறக்கிவிடப்பட்டிருந்தவர்களை விடவும் அதிகம். அச்சமூட்டுகின்ற தோறனையில் அவர்கள் செயற்பட்டார்கள். ஆலயங்களில் தீபம் ஏற்றி வணங்க முற்பட்ட தமிழ் கூட்டமைப்பு ஆட்களையும் கூடிநின்ற மக்களையும், ஊடகவியலாளர்களுடன் கலந்துவந்து அவர்கள் படம்பிடித்தார்கள். முகங்களுக்கு நேரே தொலைபேசிகளைப் பிடித்து, தாம் புலனாய்வாளர்கள் என்பது இனந்தெரியும்படியாகவே படம்பிடித்தார்கள். 'நீங்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளப்படுகின்றீர்கள்' என்ற செய்தியைச் சொல்லும் விதமாகப் படம்பிடித்தார்கள்; தோற்றங்களால் பயமுறுத்தினார்கள்;நடத்தைகளால் எச்சரித்தார்கள்.

ஒரு சாதாரண தமிழ் குடியானவனின் மனதில் இவையெல்லாம் எத்தகைய எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும்…? இத்தகைய நகர்வுகளைச் செய்வதற்குப் பின்னால் இருக்கக்கூடிய ஞானம் என்ன…?

இவையெல்லாமே - பிரபாகரனை மறக்கச் செய்வதற்கான முயற்சிகளா, அல்லது தமிழர்களின் மனங்களில் அவரை நிலைக்கச் செய்வதற்கான முயற்சிகளா…?

‘சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதக் கோட்பாட்டோடு இயங்குகின்ற சிறிலங்காவின் ஆளும் வர்க்கம், தானாக மனமிரங்கித் தமிழ் பேசும் மக்களைச் சமதையாக நடத்தாது’ என்பதுதான் பிரபாகரனின் மூலக்கொள்கையாக இருந்துவந்தது.

அந்த மூலத்திலிருந்துதான் அவர் ஆயுத அரசியலை முன்னெடுத்தார்; முதன்மைப்படுத்தினார். 'தானாக மனமிரங்கித் தமிழர்களைச் சமதையாக நடத்தும் மனோபாவம் இல்லாத' சிங்கள ஆளும் வர்க்கத்தை இறங்கிவர வைப்பதற்கான ஒரு வழிமுறைதான் ஆயுத அழுத்தம் என்று தனது கொள்கையை அவர் நியாயப்படுத்தினார். அவரது அந்த மூலக்கொள்கையைச் சரியானது எனப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு புறச்சூழலே – மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களாலும் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் பேணப்பட்டும் வந்தது.

தற்போது - பிரபாகரனும் இறந்து, அவர் நடாத்திய ஆயுதப் போராட்டமும் முடிக்கப்பட்டுவிட்ட பின்பும் கூட - அதே புறச்சூழலே தொடர்ந்தும் பேணப்படுகின்றது.

முப்பது ஆண்டுகளாக இந்த நாட்டிலே ஒரு போர் நிகழ்ந்தது. ஏறக்குறைய 50,000 பேர் வரையானோர் அந்தப் போரின் கடைசி நான்கு மாத காலத்துக்குள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல்போய்விட்டார்கள் என உலகக் கணிப்புகள் கூறுகின்றன. அரசாங்கம் தானே அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது இழப்புக்களைப் பதிவு செய்தார்கள். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அந்தத் துயர்களுக்கு அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றது. தானே அமைத்த ஆணைக்குழுவாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட துயரங்களுக்காகத் தனது நாட்டின் குடிமக்களைக் கண்ணீர்சிந்தக்கூட விடாமல் ஒர் அரசாங்கம் தடுக்கின்றது எனில் - அது, ஒருவகையான சர்வாதிகாரப் போக்கு என்று தானே பொருள்…?

அதைவிடவும் கொடுமை என்னவெனில் - தனது குடிமக்களுள் ஒரு இனத் தரப்பினருக்குத் துயரங்களைத் தந்த போரின் வெற்றியைத் தனது குடிமக்களுள் இன்னொரு இனத் தரப்பினருக்கு மட்டும் உரித்தானது ஆக்கிவிட்டு, அந்த இன்னொரு இனத் தரப்பினரோடு தானும் சேர்ந்து நின்றுகொண்டு ஒர் அரசாங்கம் ஆண்டுதோறும் வெற்றி விழாக்களை எடுக்கின்றது எனில் - அது, ஒருவகையான இனக்குரோத ஆட்சிமுறை என்றுதானே பொருள்…?

பேசுகின்ற மொழியின் அடிப்படையிலான வேறுபாட்டைக் கொண்ட இரு மக்கள் இனங்கள் வாழும் ஒரு நாட்டின் தேசிய நினைவு நிகழ்வு ஒன்று – ஒர் இனத்திற்கு அதீத வெற்றிக் களிப்பையும் அடுத்த இனத்திற்குக் கொடுந்துயரத்தையும் கொடுக்கின்றதெனில் - அந்த நினைவு நிகழ்வை ஆண்டுதோறும் முன்னெடுக்கின்ற அரசாங்கத்தின் ஆட்சி முறைமை சமத்துவமற்றது என்றுதானே பொருள்…?

அண்மையில், கொழும்பில், ஒரு பொது நிகழ்வில் சந்தித்த போது - பயங்கரவாத முறியடிப்புத் துறை கலாநிதி றொஹான் குணரட்ண என்னைக் கேட்டார் - "பிரபாகரன் எவ்வளவு பெரிய கொடுமைக்காரர். கடைசிப் போர் சமயத்தில் தனது மக்களையே நூற்றுக்கணக்கில் சுட்டுத்தள்ளுவதற்கு அவர் உத்தரவிட்டார். அதையெல்லாம் தமிழ் மக்கள் மறந்துவிட்டார்களா என்ன?”

றொஹான் குணரட்ண சிறீலங்கவின் பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகின்றவர். அவருக்கு நான் சொன்னேன் - "உங்களுடைய ஆட்கள்தானே அவரில் இருக்கும் கோபங்களைத் தமிழர்கள் மறந்துவிடும்படியான காரியங்களைத் திரும்பத் திரும்பச் செய்கின்றார்கள். நீங்கள் சொல்லுவது போல கடைசிக் காலத்தில் புலிகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அந்த உயிர்களையும் சேர்த்து நினைவுகொள்ளுவதற்குத் தன்னும் அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்கவில்லையே.” பதிலுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை.

அமெரிக்க வரலாற்றில் நான் பார்த்த அழகான விடயம் ஒன்று உண்டு.

1800-களில் - அமெரிக்காவில் - மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உரித்தான அதிகாரங்கள் தொடர்பிலும், மாநிலங்கள் மீதான மத்திய அரசாங்கத்தின் ஆதிக்க விரிவாக்கம் தொடர்பிலும் பல தசாப்தங்களாக அரசியற் பதற்றம் நிலவி வந்தது. 1861-இல், ஏப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதன் பின்பு - அது ஒரு கொடூரமான உள்நாட்டுப் போராக வெடித்தது. வடக்கு மாநிலங்களை மையமாகக் கொண்ட ஐக்கிய அமெரிக்க (United States of America) மத்திய அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்ட 11 தென் மாநிலங்கள் "கூட்டாட்சி அமெரிக்கா" (Confederate States of America) என்று தம்மைச் சுயபிரகடனம் செய்து அந்த உள்நாட்டுப் போரைத் தொடுத்தன. நான்கு ஆண்டுகளாக நீண்டு, முப்பது இலட்சம் போர்வீரர்கள் பங்கேற்று, ஆறு இலட்சத்து இருபதாயிரம் பேர் கொல்லப்பட்ட அந்தக் கொடூரமான உள்நாட்டுப் போர் - "கூட்டாட்சி அமெரிக்கா” மாநிலங்களின் சரணடைவோடு முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஏப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டுவிட்ட போதும், அந்துப் போருக்குத் தலைமையேற்று வெற்றிகொண்டு நாட்டை ஒருமைப்படுத்திய பெருமை அவருக்கே உரித்தாக்கப்பட்டது. போரின் முடிவுக்குப் பின்னர் - ஐக்கிய அமெரிக்க மத்திய அரசாங்கம் செய்த முதன்மையான காரியங்களுள் ஒன்று - ஐக்கிய அமெரிக்க மத்திய அரசாங்கத்துடனான போரில் உயிரிழந்த தமது போராளி வீரர்களை அதிகாரபூர்வமாக நினைவுகூர்வதற்கு அந்த 11 மாநிலங்களுக்கும் இருந்த உணர்வையும் உரிமையையும் மதித்ததுதான். அலபாமா, ஆகன்ஸாஸ், புளோரிடா, ஜோஜியா, லூஸியான, மிஸிஸிப்பி, நோர்த் கரோலினா, சவுத் கரோலினா, ரென்னஸீ, ரெக்ஸாஸ், வேஜினியா ஆகிய அந்த தென் மாநிலங்களில் இந்த “கூட்டாட்சி நினைவு நாள்” (Confederate Memorial Day) மாநில மட்டத்திலான அரச விடுமுறை நாட்களாக இன்றும் கொள்ளப்படுகின்றன.

Cemetery.jpg

கூட்டாட்சி அமெரிக்கா போர் வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள பல மயானங்களில் ஒன்று - வேஜினியா மானிலம்.

இந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த ஐக்கிய அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் படைவீரர்களுக்கான தேசிய நினைவு நாள் (Memorial Day), நாடு தழுவிய வணக்க நாளாகத் தனியான வேறு ஒரு நாளில் கொள்ளப்படுகின்ற போதும், “கூட்டாட்சி அமெரிக்கா” மாநிலங்களைச் சரணடையச் செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிவிழா எதுவும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதில்லை.

அத்தோடு - அந்த உள்நாட்டுப் போரில் ஐக்கிய அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் படைகளை வழிநடாத்திய ஒரு முதன்மைத் தளபதி ஜெனரல் ஜோன் அலெக்ஸாண்டர் லோகன் தான் தனது படையினருக்கான இந்த தேசிய நினைவு நாள் (Memorial Day) 1868ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு உழைத்தார். ஆனால், அந்த எண்ணம் அவரது மனதில் தானாக உதித்தது அல்ல; ஏனெனில், தமது படைவீரர்களுக்கான நினைவு நாளை (Confederate Memorial Day), “கூட்டாட்சி அமெரிக்கா” மாநிலங்கள் ஏற்கெனவே கடைப்பிடிக்கத் தொடங்கியிருந்தன.

John%20Alexander%20Logan.jpg

ஐக்கிய அமெரிக்க படைகளின் தளபதி ஜெனரல் ஜோன் ஏ லோகன்

"தமக்குச் சரியானது எனவும் நியாயமானது எனவும் கருதிய ஒர் இலட்சியத்திற்காகப் போராடி உயிர்நீத்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆண்டுதோறும் நினைவு கொள்கின்ற தெற்கு மக்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி எங்களது ஐக்கிய அமெரிக்க வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என நான் எண்ணினேன்" என ஜெனரல் லோகன் தன்னிடம் கூறியதாக, "ஒரு போர் வீரனது மனைவியின் நினைவுகள்" என்ற தனது நூலில் அவரது மனைவி குறிப்பிடுகின்றார்.

இத்தகைய நற்சிந்தனைகளிலும், நல்லியல்புகளிலும், நற்செயல்களிலுமிருந்துதானே நல்லிணக்க முயற்சிகள் வேர்விட்டுச் செழிக்க முடியும்…?

மாறாக - இறந்து போனவர்களுக்காகக் கண்ணீர் சிந்தவும், இறை நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கான கடமைக் கிரியைகளை முடிக்கவும், காணாமல் போனவர்கள் பற்றிய உணர்வுகளை மனதில் கொள்ளவும் தடைகள் போடப்படுகின்ற போது - பிரபாகரனின் கோட்பாடுகள் தானே நியாயப்படுத்தப்படுகின்றன…?

தமிழ் குடிமக்கள் எதை நினைக்க வேண்டும், எதை விரும்ப வேண்டும், எதை உணர வேண்டும், எதைச் சிந்திக்க வேண்டும் போன்ற விடயங்களே அரசாங்கத்தால் நிர்ப்பந்தங்கள் போலத் திணிக்கப்படும் போது - பிரபாகரன் சொல்லிவந்தவையே சரியானவை என்ற எண்ணம் சாதாரண தமிழ் குடியானவனின் மனதில் இயல்பாகவே எழாதா…?

இந்த கருத்துரையை நான் எழுதுவதன் நோக்கம் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதோ, அல்லது “பயங்கரவாதம்” மீள உருவாகுவதற்கான கருத்துப் பரப்பலைச் செய்வதோ அல்ல. மாறாக, அடுத்தவர்கள் இவற்றைச் செய்கின்றார்கள் என்று குற்றம் சாட்டுகின்ற அரசாங்கக்கமே இந்த மூன்றையும் செய்கின்றது என்று எனது மனதில் எழுகின்ற எண்ணத்தைச் சொல்லுவது மட்டுமேயாகும்.

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் வாரமலரிலும் நேற்று பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140526110592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குடிமக்கள் எதை நினைக்க வேண்டும், எதை விரும்ப வேண்டும், எதை உணர வேண்டும், எதைச் சிந்திக்க வேண்டும் போன்ற விடயங்களே அரசாங்கத்தால் நிர்ப்பந்தங்கள் போலத் திணிக்கப்படும் போது - பிரபாகரன் சொல்லிவந்தவையே சரியானவை என்ற எண்ணம் சாதாரண தமிழ் குடியானவனின் மனதில் இயல்பாகவே எழாதா…?

இந்த கருத்துரையை நான் எழுதுவதன் நோக்கம் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதோ, அல்லது “பயங்கரவாதம்” மீள உருவாகுவதற்கான கருத்துப் பரப்பலைச் செய்வதோ அல்ல. மாறாக, அடுத்தவர்கள் இவற்றைச் செய்கின்றார்கள் என்று குற்றம் சாட்டுகின்ற அரசாங்கக்கமே இந்த மூன்றையும் செய்கின்றது என்று எனது மனதில் எழுகின்ற எண்ணத்தைச் சொல்லுவது மட்டுமேயாகும்....

 

 

இதை  நான் சொன்னால்......??? :( 

Link to comment
Share on other sites

 

இதை  நான் சொன்னால்......??? :( 

 

https://www.youtube.com/watch?v=SQ1nwR6_Vdw#t=100

 

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இதில் கடைசியில் வருபவர் போலத்தான் தோற்றத்தில் எனது தகப்பனார் இருப்பார்...

நம்மகிட்டயேவா??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

மிருகங்கள் தான் உண்ணும் இரையின் உயிரைப் போக்கிய பின்னரே அதன் இறைச்சியை உண்ணும். ஆனால் மிருகங்களை விடவும் பன்மடங்கு கொடியதான மனித உருவத்தில் இருக்கும் சிங்கள அரசின் காட்டுமிராண்டிகளிடம் அகப்பட்டால் உயிரோடு வதைபடும் அதன் கொடூரத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்று அறிந்துதான் தன் போராளிகளோடு தானும் கழுத்தில் நஞ்சுக் குப்பியை பிரபாகரன் அணிந்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 02

[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ]

போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.

மாறிவந்த காலங்களையும், மாற்று வழிகள் தேடச் சென்ற ஏனைய தமிழ் தலைவர்களையும் கடந்து - ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார் பிரபாகரன்.

சிறீலங்காவில் தமிழர்களுக்கான மிதவாத அரசியல் இயங்குவெளி ஒன்று இல்லை; அது எப்போதுமே இருக்காது என்பதுவே அவரது அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாக இருந்தது.

அவரது நிலைப்பாட்டின்படி -- எந்தத் தமிழராவது சிறீலங்காவில் மிதவாத அரசியல் செய்வாராயின், அவர் தமிழினத்துக்கு முழுமையான விசுவாசத்துடன் நடக்க மாட்டார்; நடக்கவும் முடியாது; நடப்பதற்குச் சிங்கள ஒற்றையினவாத இயந்திரம் விடாது. அதையும் மீறி அவர் அரசியல் செய்ய வேண்டுமெனின், தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்போது - பிரபாகரன் இறந்தும், அவர் நடத்திய அந்த ஆயுதப் போராட்டம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

என்னுடைய நோக்கம் பிரபாகரனைப் பெரும் தூரநோக்குப் பார்வையுடைய அரசியற் தீர்க்கதரிசியாக நிரூபிப்பது அல்ல; மாறாக - வாழும் காலத்தில் தமிழ் மக்களிடத்தில் தனது கொள்கைகளை நியாயப்படுத்தப் பிரபாகரனால் முடிந்ததை விடவும் செயற்திறனோடு - அவர் இறந்துபோனதை அடுத்துவந்த ஐந்து ஆண்டுகளில் அவரை நியாயப்படுத்தும் காரியங்களை அரசாங்கமே செய்கின்றது என்று என் எண்ணத்தில் தோன்றுவதைப் பகிர்வதாகும்.

அவரது இறப்புக்குப் பின்னர் - அவரது கருத்துக்களைப் பொய்யாக்கவும், தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களைச் சிறீலங்கா அரசாங்கம் வேண்டுமென்றே உதாசீனம் செய்துவிட்டது.

போர் நிகழ்ந்த காலத்தில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகளின் முகவர்கள் என சிறிலங்கா அரசாங்கம் கூறியது - அதில் தவறில்லை; அதற்குக் காரணங்கள் இருந்தன. சர்வதேச இராஜதந்திரிகள் கூட, அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தூய்மையான ஜனநாயக வழிமுறை ஊடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பாகக் கருதியதில்லை; அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையூறற்ற ஒரு ஜனநாயக இயங்குவெளி சிறீலங்காவில் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு பொருட்டாகவும் இருக்கவில்லை. ஏனென்றால், அது, எல்லோருக்கும் தெரியும்படியாகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலாகத்தான் இருந்தது.

ஆனால், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேறு. அதற்குப் புலிச் சாயங்கள் பூச முனையாமல், ஒரு முழுமையான ஜனநாயக அங்கீகாரத்தைச் சிறீலங்கா அரசாங்கம் கொடுத்திருக்க வேண்டும். அது அந்த அரசாங்கத்திற்கும் பல வழிகளில் சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், சிங்களப் பெரும்பான்மைவாத மனோபாவம் அதற்கு இடமளிக்கவில்லை - அவ்வாறு இடமளிக்காது என்று பிரபாகரன் கூறிவந்ததையே சரியானது என்று அரசாங்கமே ஆக்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்டு, புலிகள் இயக்கத்தைத் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு வாக்குக் கேட்ட பழைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது இல்லை. 2010-இற்குப் பிறகு, அந்தக் கூட்டமைப்பைச் சம்பந்தன் படிப்படியாகத் “தூய்மைப்படுத்திவிட்டார்.”

விடுதலைப் புலிகளால் உள்ளுக்குக் கொண்டுவரப்பட்டவர்களை வெளியில் போட்டார்; அவர்களையும் சேர்த்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய கஜேந்திரகுமாரையும் வெளியில் போக வைத்தார்; போராட்ட காலம் முழுவதும் அரசியலுக்கு வெளியில் இருந்த சுமந்திரனை உள்ளே கொண்டு வந்தார்; சரவணபவன் போன்ற வணிகச் சிகரங்கள் அரசியலில் ஒளிரவும் இடம்கொடுத்தார்; புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் மறுபக்கத்திலிருந்த சித்தார்த்தன், ஆனந்தசங்கரியையும் இணைத்தெடுத்தார்; தேவானந்தாவுக்கும் அழைப்பை விடுத்தார்; ஆகக் கடைசியாக - அஹிம்சைக் கோபுரத்தின் அழகிய மகுடமாக - ஆயுதச் சாயம் படியாத ஆன்மீக முகத்தோடு விக்கினேஸ்வரனையும் சேர்த்துக்கொண்டார்.

சிறீதரன் நாடாளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றிய பட்டோலைகளை வாசித்தாலும், தேசியப் பிரச்சனையே குடும்பப் பிரச்சனை ஆகிப் போனதால், துணிந்து இறங்கி அனந்தி தெருவில் நின்றாலும் கூட - இன்றைய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் உருவாக்கியது அல்ல; பிரபாகரன் உருவாக்கியிருக்கக்கூடியதும் அல்ல. அது விடுதலைப் புலிகளின் பொம்மையும் அல்ல. பழைய முகங்கள் பல இதற்குள்ளும் இருந்தாலும், இப்போது இருக்கின்ற கூட்டமைப்பின் சிந்தனை புதியது; சொல்லும், செயலும் புதியது.

அந்தச் சிந்தனையும் சொல்லும் செயலும் - இந்த நொடிப்பொழுது வரை - சம்பந்தனும் சுமந்திரனும் தான். கடும்போக்கு நிலைப்பாட்டு உறுப்பினர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மைய உயிரியக்கமாக இருக்கின்ற அதிதீவிர மிதவாதிகள் அவர்கள்.

‘தமிழீழம்’ கேட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையே ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியின் தளபதி சம்பந்தன். "அது ஒரு அவசரப்பட்ட முடிவு" என்றே தான் கருதுவதாகத் தந்தை செல்வாநாயகத்திடம் அப்போதே கூறிய தனயன்; "பிரிக்கப்படாத – ஒன்றுபட்ட - சிறீலங்கா" என்ற ஒற்றை வரம்புக்குள், சிங்களவர்களைப் போல தமிழர்களும் சமதையாக வாழும் ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாகவே கொண்டவர்; "இந்தியாவில் இருப்பதைப் போன்றதான ஓர் ஆட்சிக் கட்டமைப்பையே" தாம் எதிர்பார்ப்பதாகக் கூறுபவர்; தமிழ் தேசிய இனப் பிரச்சனை நோக்கிய பிரபாகரனின் தவறான அரசியல் அணுகுமுறையே ஒட்டுமொத்தமான தமிழினத்தின் இன்றைய கையறு நிலைக்குக் காரணம் என்ற கருத்தை முன்வைப்பவர்; விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தினர் எவருக்கும் முன்னரே இடம்பிடித்திருந்தவர்; மென்முறை அரசியலை விடாப்பிடியாகப் பின்பற்றி நிற்பவர்.

வன்முறை அரசியற் பாதையைப் பிகிரங்கமாகவும் – அடியோடும் - எப்போதும் நிராகரிக்கின்றவர் சுமந்திரன். தனது அந்த நிலைப்பாடு குறித்துப் பெருமிதம் கொள்பவர்; போர் நடந்த முழுக் காலத்திலும் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்ந்தவர்; ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரே அரசியலுக்குள்ளும் வந்தவர்; விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்; சர்வதேச சமூகத்தை முன்னிலைப்படுத்தித் தான் செய்கின்ற அரசியல் ஆட்டத்தில், புலிகளை முதன்மைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தைச் சொல்லுபவர்.

ஏறக்குறையப் பார்த்தால் - சிறீலங்காவின் நில ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற விடயங்களில், சிறீலங்கா அரசாங்கத்தின் அடிப்படை நிலைப்பாட்டை ஒத்ததாகவே தமது நிலைப்பாட்டையும் கொண்ட இந்த இருவரின் பிடியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.

அப்படியிருக்கும் போது -- இந்த தமிழ் தலைமையின் கைகளைப் பற்றிப்பிடித்து - பரஸ்பர விட்டுக்கொடுப்புக்களுக்கு இணங்கி - அரசியல் அரங்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுவிட்ட சூழலில் சிங்களவர்களின் சிந்தனைகளையும் செதுக்கி - சிங்களக் கூட்டுக் கட்சிகளையும் பதப்படுத்தி - எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியற் தீர்வைத் தமிழர்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் விருப்பமின்றி இருப்பதன் காரணம் என்ன…?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழ் அரசியற் கட்சியுடன் நேரடியான அரசியலிணக்கப் பேச்சுக்களுக்கு_ அரசாங்கத் தரப்பில் இருக்கின்ற விருப்பமின்மை - மிதவாதத் தமிழ் அரசியலுக்கு சிறீலங்கா என்ற ஒற்றை நாட்டில் இடமே இருக்காது என்ற பிரபாகரனின் கோட்பாட்டைத் தானே நியாயப்படுத்தும்…?

அத்தோடு - "ஒன்றுபட்ட இலங்கை" என்ற கொள்கையோடு, பிரபாகரனின் அரசியல் அணுகுமுறைகளை மறுதலித்து வருகின்ற அதே தமிழ் மிதவாதத் தலைவர்களின் அரசியலை அர்த்தமிழக்கத் தானே செய்யும்…?

அத்தோடு - அதே "ஒன்றுபட்ட -பிரிக்கப்படாத- இலங்கை" என்ற கோட்பாட்டைப் பேசும் அதே தீவிர மிதவாதிகளது நிலைப்பாடுகளை - அவர்களது கட்சிக்காரர்களிடத்திலும் அவர்களுக்கு வாகளித்த மக்களிடத்திலும் செல்லுபடியற்றதாகவும் சிரிப்புக்கிடமானதாகவும் தானே ஆக்கும்…?

அத்தோடு - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே, கடும்போக்குத் தேசியவாதம் பேசி, விடுதலைப் புலிகளின் எச்சசொச்சங்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு அரசியல் செய்வோரைத் தானே வலுப்படுத்தும்…?

இவையெல்லாம் - ஒட்டுமொத்தமான இந்த நாட்டின் சுபீட்சத்தைத்தானே பாதிக்கும்…? ஆனால், அந்த அக்கறை எதுவும் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீட்டிய சமரசக் கரங்களைப் பற்றிப்பிடித்து, 2011 வரை நீண்ட அதனுடனான பேச்சுக்களை அரசாங்கம் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த நாட்டில் "இனப்பிரச்சனை" என்று ஒரு விடயமே இல்லை என வாதிட்டு, பேச்சுக்களுக்கான தேவையே இல்லை என்று ஆக்குவதன் மூலம், தமிழர்களின் ஜனநாயக அரசியல் இயங்கு வெளியை அது மூடிவருகின்றது.

அதையும் மீறி - தமிழர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும்படியான நிர்ப்பந்தங்கள் வெளியிலிருந்து வருகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரும்படி வற்புறுத்துகின்றது. அவ்வாறு வரவைப்பதன் மூலம் - அந்தத் தெரிவுக் குழுவில் - சிங்களப் பெரும்பான்மைவாதத்தை ஒருமுகமாக்கி, தமிழர் கோரிக்கைகளச் சிறுபான்மையாக்கி, பெரும்பான்மைக் கருத்தே சரியென்றும் ஆக்கி, இந்தத் தீவில் இனப் பிரச்சனையே இல்லையென்றாக்கி, அதனால், அதிகாரப் பகிர்வு எதுவும் தேவையற்றது எனச் சிங்களப் பெரும்பான்மையோடு நிரூபித்துவிட முனைகின்றது.

இவ்வாறாக - எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எந்த வடிவத்திலும் சிங்கள ஆளும் வர்க்கம் இதையே செய்வதனால் தானே சேர்ந்து வாழ்வது சாத்தியமற்றது என்று பிரபாகரன் கொள்கைபூண்டார் என சாதாரண தமிழ் மனம் எண்ணாதா…?

ஜெனீவா அமர்வுகள், அமெரிக்கப் பிரேரணை, சர்வதேச விசாரணை, மன்மோகனுக்கு வாக்குறுதிகள், மோடியுடன் சந்திப்புகள் என எதுவந்தாலும் - சிங்களப் பெரும்பான்மைவாத ஒற்றையின மேலாதிக்க மனோபாவத்தைத் தீனி போட்டு வளர்த்துத்தான் சிறீலங்கா அரசாங்கம் அரசியல் செய்யப்போகின்றதெனில் - இந்த ஆரவாரங்களால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

அத்தோடு - இந்த சர்வதேச நகர்வுகளை நம்பி எந்தப் பயனும் இல்லை என்ற பிரபாகரனின் வாதமே, மீளவும், சரியென்று ஆகிவிடும்.

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் வாரமலரிலும் நேற்று பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140602110632

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள்… - 03

[ செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2014, 05:39 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்].

"தமிழீழம்" என்ற கொள்கையில் பிரபாகரன் விடாப்பிடியாகவே நின்றுகொண்டிருந்தார்.

‘வாழ்ந்தாலும் அதற்காக, செத்தாலும் அதற்காக’ என்று அந்தக் கொள்கை வழி அதே விடாப்பிடியுடன் அவர் ஆயுதப் போராட்டத்தையும் நடாத்திக்கொண்டிருந்தார்.

வாழும் காலத்தில் தனது கொள்கை மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதி தொடர்பாக எவரிடமும் பெரிய கேள்விகள் எதுவும் இல்லை; ஆனால், இறக்கும் பொழுதில் அதே பற்றுறுதியோடு அவர் மரணத்தை அணைத்துக்கொண்டாரா என்பது தொடர்பாகப் பலவடிவக் கதைகள் பலதரப்புக்களில் இலங்கையில் உலவுகின்றன.

உண்மை எது, பொய் எது என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றிப் பேசுவதும் இங்கு எனது எண்ணமல்ல.

எந்தக் கதை எவர் வழி கேட்பினும், கொண்டிருந்த கொள்கை வழி நின்றே பிரபாகரன் இறந்தார் என்றுதான், அவர் இறந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளுகின்ற சாதாரண தமிழ் மக்கள் கொள்கின்றார்கள்; அப்படித்தான் நம்ப விரும்புகின்றார்கள்.

"இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற மகாவம்ச மனோநிலையோடு சிந்திக்கின்ற சிங்கள் ஆளும் வர்க்கம் - தமது அடிப்படை உரிமைகளைக் கோருவதற்கான குறைந்தபட்ச மென்முறை அரசியற் செயற்பாடுகளைக் கூட முன்னெடுப்பதற்கான இயங்குவெளியைத் தமிழர்களுக்குத் தராது" என்ற முடிவோடுதான், தமிழீழக் கொள்கையை வரித்துக்கொண்டு ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார் பிரபாகரன்.

அவரைப் போலவே - இன்னொரு பக்கத்தில், தான் கொண்ட அரசியல் நிலைப்பாட்டிற்காக - ‘வாழ்ந்தாலும் அதுதான், செத்தாலும் அதுதான்’ என்று பல சாவுகளையும் கடந்து வாழும் இன்னொருவர் டக்ளஸ் தேவானந்தா.

'ஐக்கிய இலங்கை' என்ற ஆட்சியமைப்புக்குள், அரசியலமைப்பில் ஏற்கெனவே செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக உருவான மாகாண சபை முறையே தமிழர் பிரச்சனைக்கு ஏற்ற தீர்வு என்பதே அவரது நிலைப்பாடு.

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில், வெளிநாட்டு இராணுவப் பயிற்சிக்குச் சென்ற முதல் மூவரில் ஒருவர் என்ற வரலாற்றை உடைய தனது பழைய தீவிரவாதப் பாதையைக் கைவிட்டுவிட்டு, புதிய அரை-மிதவாத அரசியலைத் தொடங்கியது முதல் - இந்த மாகாண சபை முறையைத் தனது கொள்கையாக வகுத்துக் கொண்டவர் அவர்.

'தமிமீழம்' என்பதற்கு மாற்றாக 'ஐக்கிய இலங்கை'யை ஏற்றுக்கொள்ளும் ஒரு கொள்கையுடன் உருவெடுத்ததால், பிரபாகரனுக்கு எதிரியாகவும் அவர் ஆகினார்.

நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கைத் தமிழினம் தற்போது கடைசியாக வந்து நிற்கின்ற அரசியல் அடைவிடம் - கடந்த 22 வருடங்களாகத் தேவானந்தா கைக்கொண்டிருக்கின்ற மாகாண சபை முறைமைதான். அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என்று அவரே சொல்லுகின்ற போதும், அதற்கான வாய்ப்புக்கள் எதுவும் இதுநாள் வரை தெரியவில்லை என்பது வேறு விடயம்.

சிறீலங்கா அரசாங்கத்தோடு நீண்ட காலமாகப் பங்காளியாக இருக்கின்றவர் தேவானந்தா. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டுவிட்டால் தமிழர்கள் மதிப்போடு வாழும் சூழல் இந்தத் தீவில் ஏற்படும் என்று சொல்லி வந்தவர்; பிரபாகரன் இருக்கின்றவரை தமிழர்களுக்கு விடிவில்லை என்ற வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்; கொலை அச்சுறுத்தல் கழுத்துவரை வந்து நெரித்திருந்த போதும் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வராமல் - சிறீலங்கா அரசாங்கத்திற்குச் சாதகமான வியாக்கியானங்களைக் கொடுத்துவந்தவர்; அவரது தோழர்கள் அரசாங்கப் படைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்தனர்; கொழும்பு அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக, அதன் பிரதிநிதியாகவே தன்னை முன்னிலைப்படுத்துகின்றவர்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தனது கட்சியின் நிலைப்பாடாகவும் கொண்டு 13ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கடந்து செல்ல வேண்டுமெனில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ் கூட்டமைப்பை அழைக்கின்றவர்; இந்த நாட்டின் ஐக்கியத்தையும், இறைமையையும் ஏற்றுக்கொண்டவர்; நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதுமான தனது விசுவாசத்தைக் கேள்விக்கிடமற்று நிரூபித்துவிட்டவர்.

இவ்வாறாக – அவர் ஒரு தமிழராக இருக்கின்ற போதும், அவரது கட்சி ஒரு தமிழ் கட்சியாக இருக்கின்ற போதும் - தென்னிலங்கையின் மாசற்ற நம்பிக்கைக்கு உரியவர்களாகவே அவரும் அவரது கட்சியினரும் எப்போதும் இருந்துவருகின்றார்கள்.

தமிழ் இன அடையாளத்துடன் எவரும் இந்தத் தீவில் மிதவாத அரசியல் செய்வதற்கான தளத்தை சிங்கள மேலாதிக்க வர்க்கம் வழங்காது என்ற பிரபாகரனின் வாதத்தை அரசாங்கமே சரியென்று ஆக்குவதன் உச்சம் என்னவெனில் - இருபது வருடங்களாகக் கூடவே இருந்து இயங்கிய தேவானந்தாவுக்கும் அவரது கட்சிக்கும் கூடத் தன்னிச்சையாகவும் சுயமாகவும் இயங்குவதற்கான ஜனநாயக வாய்ப்பை அரசாங்கம் தற்போது கொடுக்கவில்லை என்பதாகும்.

தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளுக்குத் தமிழ் மக்களிடத்தில் ஆதரவில்லை; தேவானந்தாவின் கட்சி தனது வாக்குச் செல்வாக்கை இழந்துவருவதன் காரணமே அரசாங்க கட்சியின் பங்காளியாக இருப்பதனால்தான். அரசாங்கத்தின் அங்கமாக இருந்தவண்ணம் தமிழர்களுக்கு நன்மையாகத் தேவானந்தா பேசினாலும் தமிழர்கள் அதனை ஏற்க மாட்டார்கள்; ஆனால், அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து அவர் 'ஐக்கிய இலங்கை' கோட்பாட்டைப் பேசுவாரெனில், அதில் இருக்கக்கூடிய நியாயத்தன்மைகளைத் தமிழர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டு.

இந்த உண்மையை உணர்ந்து - தேவானந்தாவை வெற்றிலைச் சின்னத்துக்கு வெளியில் அனுப்பி - சொந்த வீணைச் சின்னத்தில் தமிழ் முகத்தோடு மக்களை அணுகவைத்து, 'ஐக்கிய' கோட்பாடுகளை அவர் மூலம் படிப்படியாக தமிழர் மனங்களில் பரவச் செய்து - தமிழ் மக்களின் மனங்களையும் புத்திகளையும் வென்றெடுக்க இந்த அரசாங்கத்திற்கு வாய்ப்பிருந்தது; ஆனால், அதைச் செய்வதற்கான மனமும் புத்தியும் இந்த அரசாங்கத்திடம் இருந்திருக்கவில்லை.

சேர்ந்திருந்து சேவகங்கள் செய்து, செய்த பழிகளோடு செய்யாத பழிகளையும் சுமக்கும் ஒரு கட்சிக்கே - அது தமிழ் இன அடையாளத்தைப் பேணுகின்ற கட்சி என்ற ஒரே காரணத்திற்காக - உரிய சுதந்திரத்துடனான அரசியற் பாத்திரம் நிராகரிக்கப்படுகின்றது எனில் - ஒட்டுமொத்தமான தமிழினம் தனித்துத் தன்னுடைய விவகாரங்களைத் தானே கவனிக்கும் ஒர் அரசியல் கட்டமைப்பைச் சிங்கள ஆளும் வர்க்கம் உருவாக்காது என்ற பிரபாகரனின் வாதம் சரியானது என்ற எண்ணம் தானே ஒரு தமிழ்க் குடியானவனிடத்தில் எழும்…?

சர்வதேசத் தலையீட்டை முன்னிறுத்தித் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் செய்யும் முன்னகர்வுகளை முறியடிப்பதற்காகவேனும் - கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சியாகச் செயற்படுவதற்கான வாய்ப்பை அதற்கு அளித்து – உள்நாட்டுத் தீர்வு உருவாக்கத்தை முன்னிறுத்தும் தேவானந்தாவின் கட்சியைத் தனித்து இயங்கி மேலெழ வைப்பதற்கான மன இணக்கம் இல்லையெனில், தமிழ் கட்சிகள் எவையுமே தலையெடுத்து அரசியல் செய்யக்கூடாது என்ற சிங்கள ஒற்றையினவாதச் சிந்தனை தானே காரணம்…?

தேவானந்தாவின் அரசாங்கச் சார்புக் கொள்கையைப் பின்பற்றி அவரோடு சேர்ந்திருந்த குற்றத்திற்காக, அவரது பலநூறு தோழர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். இன்று – ஒரு தமிழ் கட்சி என்பதற்காக, அந்த அரசாங்கத்தாலேயே அவரது கட்சியின் அரசியற் தனித்துவம் மதிக்கப்படாத போது, அந்தச் சாவுகள் எல்லாம் அர்த்தமிழந்து போகின்றன என்றுதானே அந்தத் தோழர்களின் உறவுகள் எண்ணுவார்கள்...?

பிரபாகரனின் காலத்தில், இனப் பிரச்சனையை வெறும் பயங்கரவாதப் பிரச்சனையாகச் சுருக்கி, “தமிழ் கட்சிகளும் எங்களோடு இருக்கின்றன” என்று காட்டுவதற்காக இணைத்து வைத்துக்கொள்ளப்பட்டிருந்த தேவானந்தாவின் கட்சிக்கு, பிரபாகரன் உயிரோடு இருந்த போது கொடுக்கப்பட்ட அரசியற் தனித்துவத்துவம் தற்போது நிராகரிக்கப்படுகின்றது எனின் - அரசாங்கத்திற்குச் சார்பான தமிழர்களின் அரசியல் இருப்பையும் முக்கியத்துவத்தையும் கூட, பிரபாகனின் ஆயுதப் போராட்டம்தான் தந்தது என்று தானே தமிழ் புத்திகள் சிந்திக்கும்...?

இனவாதத்தின் அதியுச்ச இயங்குநிலை என்னவெனில் - தனது இனத்தைத் தவிர இன்னொரு இனம் தனக்கென அரசியற் தனித்துவங்களையும் அடையாயங்களையும் கொண்டிருப்பதை ஒரு இனம் நிராகரிப்பது ஆகும். இன்று – பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில் - தமது அரசியல் இருப்பும் தனித்துவங்களும், நிராகரிப்புக்கும் நீக்கநிலைக்கும் இட்டுச்செல்லப்படுகின்றது என்ற அச்சம் தானே தமிழ் பேசும் மக்களிடத்தில் இயல்பாகவே எழுகின்றது…?

அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தமது நிலைப்பாடாகக் கொண்டிருக்கின்ற தமிழர்கள் அரசியற் பணிகளை ஆற்ற விரும்பினால் கூட - ஏதாவது ஒரு சிங்களக் கட்சியில் இணைந்தே அதனைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது எனில், சிங்கள ஒற்றையினவாத மனோநிலை இந்தத் தீவில் எப்போதுமே இளகிவராது என்று பிரபாகரன் சொல்லி வந்ததது தானே சரியென்று ஆகும்…?

தென்னிலங்கைக் கட்சிகளோடு இரண்டறக் கலந்து தமிழர்கள் அரசியல் செய்வது பற்றி எனக்குப் பெரிதாக ஒரு பிரச்சனையும் இல்லை; ஆனால், அவ்வாறு இரண்டறக் கலந்த பின்பு நானும் எனது சமூகமும் எமது தனித்துவத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தைத் தானே நடைமுறை விடயங்கள் கற்றுத்தருகின்றன…? இறந்து போன எனது நண்பன் ஒருவனுக்காக இரண்டு நிமிடங்கள் தலை தாழ்த்தி நிற்கின்ற எனது அடிப்படை உணர்வு வெளிப்பாட்டு உரிமைக்காகப் போராடாத ஒரு கட்சியை நான் எப்படி எனது கட்சியாகப் பார்க்க முடியும்…?

தனித்து இயங்கிய சித்தார்த்தனும் அவரது கட்சியும் தமிழ் கூட்டமைப்போடு இணையவிருந்த காலத்தில், தமது அரசாங்க ஆளும் கட்சியோடு வந்து கலந்துவிடுமாறு அழைப்பு விடுத்தாராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அதிசக்தி மிக்க மனிதர். தன்னால் அவ்வாறு செய்யமுடியாது என்று சித்தார்த்தன் மறுத்த போது, “எமது கட்சியில் சேராவிட்டாலும், ஐக்கிய தேசியக் கட்சியோடாவது இணைந்துவிடுங்கள்” என்று அவர் அன்பு வற்புறுத்தல் செய்தாராம்.

இவ்வாறாகத் தொடர்ந்தும் பேணப்படுகின்ற ஒற்றையின மேலாதிக்கவாதப் புறநிலையின் காரணமாகத் தானே, விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மறுபக்கத்திலேயே எப்போதும் இருந்த சித்தார்த்தன் கூட, ‘இனி இது சரிவராது’ என்ற முடிவுக்கு வந்து தமிழ் கூட்டமைப்போடு போய் இணைந்து கொண்டார்.

இந்த நாடும் மக்களும் ஒருங்கிணைவோடும் ஒற்றுமையோடும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நாட்டின் அரசாங்கத்தினது நோக்கம் எனில் - பிரிவினைவாதம் பேசாத - இந்த நாட்டின் இறைமையைக் கேள்விக்கு உட்படுத்தாத அனைத்து அரசியற் சக்திகளையும் - அவை எந்த இனப் பின்னணியைக் கொண்டவையாக இருப்பினும் - தன்னிச்சையாகச் செயற்பட அனுமதித்து அதற்கு வழியும் சமைக்க வேண்டும்.

அதை விடுத்து - நல்லிணக்கக் கருத்துக்களைப் பேசுவதும், தேசிய ஒற்றுமை பற்றிய பரப்புரைகள் செய்வதும் கூடச் சிங்களக் கட்சிகளால் மட்டுமே செய்யப்படவேண்டும் என்ற ஒற்றையினவாத மனோ நிலைதான் மேலோங்கி இருக்கப் போகின்றதெனில் - இந்த நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்த நாட்டை ஆளுபவர்களுக்கே இல்லை என்று தானே அர்த்தம்…?

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் ஞாயிறு வாரமலரிலும் பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140610110675

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 04

[ திங்கட்கிழமை, 16 யூன் 2014, 05:34 GMT ] [ புதினப் பணிமனை ]

|போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்].

தமிழ் தேசிய இனப் பிரச்சனையைக் கையாண்ட பிரபாகரனின் அரசியல் அணுகுமுறைகள் தொடர்பான விமர்சனங்களும், அவரது ஆயுதப் போராட்ட வழிமுறைகள் பற்றிய அதிருப்திகளும் ஏராளமான தமிழர்களிடம் உள்ளன.

அவர் செய்திடத் தவறிய காரியங்கள் குறித்த கவலைகளும், செய்வதைத் தவிர்க்கத் தவறிய விடயங்கள் குறித்த கோபங்களும் பலரிடம் உள்ளன.

இத்தகைய விமர்சனங்களும், அதிருப்திகளும், கவலைகளும், கோபங்களும் என்னிடமும் இருந்தன; இருக்கின்றன.

நீண்ட போர், தமிழர்களைக் களைப்புக்கும், வெறுப்புக்கும், சினத்திற்கும் உள்ளாக்கியும் இருந்தது. ஏதோ ஒரு வகையில் அந்தப் போர் முடிவுக்கு வந்த நிம்மதியில்தான் அவர்கள் இருந்தார்கள்; இருக்கின்றார்கள்.

எது எவ்வாறு இருந்தாலும் -- இறக்கும் போது, தமிழ் மக்களிடத்தில் அவர் ஒரு மாபெரும் வெற்றிடத்தை விட்டுச் சென்றார் என்பதுதான் உண்மையானது.

ஒரு கடந்தகால வரலாறாகப் பிரபாகரனை மறந்துவிட்டு, நிகழ்காலச் சூழலைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற தமிழ் தலைவர்களும், அவரைத் தமிழ் மக்கள் ஒரேயடியாக நிராகரித்துவிட்டாலே எதிர்காலம் சுபீட்சமாய் இருக்கும் என்று சொல்லுகின்ற சிறீலங்கா ஆட்சியாளர்களும் -- அவரது உத்தரவுகளின் கீழ் நிகழ்த்தப்பட்ட பாதகச் செயல்கள் மட்டுமே தமிழ் மனங்களில் எஞ்சியிருப்பதாக நம்ப முனைகின்றார்கள்.

அவ்வாறு பிரசங்கிப்பவர்கள் மறந்திடாது இருக்க வேண்டியது என்னவெனில் -- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பரப்புகளில், தமிழ் மக்களது சமூக - பண்பாட்டு - பொருளாதார வாழ்வைச் செழுமைப்படுத்திய - முழுமைக்கு நெருக்கமான - ஒரு பல்பரிமாணப் பொது நிர்வாகத்தினை வியக்கத்தகு விதத்தில் பிரபாகரன் கொண்டு நடாத்தினார் என்பதுவும் தமிழர்களின் மனங்களில் நீக்கமற இருக்கின்றது.

அத்தோடு - பிரபாகரனின் போராளிகள் படைத்த மெய்சிலிர்க்க வைக்கும் சாதனைகளும், அவர்கள் புரிந்த மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தியாகங்களும் கூட, பிரபாகரனிற்கு எதிர்ப் பக்கத்திலிருந்த தமிழர்களாலாலேயே இன்றும் மதிக்கப்படுபவையாக இருக்கின்றன.

இன்று தமது தலைவர்களாக மேலெழுந்து -- பிரபாகரன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முன்வந்துள்ளோர்களிடம் - அவரது காலத்தைப் போன்றதான பொது நிர்வாக நேர்த்தியையும், அவரது போராளிகளுக்கு ஈடானதாக இல்லாவிட்டாலும், ஒரு குறைந்தபட்சத் தரத்திலான அர்ப்பணிப்பையும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

பிரபாகரனின் காலம் என்பது - யார் விரும்பாவிட்டாலும், எவர் நிராகரித்தாலும் -- அன்று அவர் செய்த காரியங்களை இன்று செய்ய முனைவோரின் செயற்திறனை மதிப்பீடு செய்வதற்கான அளவீட்டு அலகாகவே இப்போது ஆகியிருக்கின்றது.

வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் தனிநாட்டுக்கான ஒரு வாக்கெடுப்பு என்ற தரத்துக்கு ஈடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பிரச்சாரப்படுத்தப்பட்டது; எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு ஒபாமாவும் மன்மோகனும் இந்தத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருப்பதாக மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; அனைத்துக் குறைகளையும் வழித்துத் துடைத்திட வந்திறங்கும் வானத்து தேவன் என்ற தரத்துக்கு விக்கினேஸ்வரன் சித்திரிக்கப்பட்டார்; “மலர்ந்தது தமிழர் அரசு!” என்றே யாழ்ப்பாணத்து உதயன் செய்தியேடு தலைப்பிட்டது.

ஒரு புறத்தில் மூர்க்கத்தனமான போர் ஒன்றை நிகழ்த்தியபடியும், அதனை எதிர்கொண்டபடியும் -- இல்லாதவற்றுக்காகக் காத்திருக்காமல் இருப்பவற்றைக் கொண்டு செய்யவேண்டியவற்றைச் செய்த பிரபாகரனின் நேர்த்திக்கு நெருக்கமான பொது நிர்வாகத்தையும், செய்ய வேண்டியவற்றைச் செய்ததோடு மட்டும் நின்றுவிடாமல் செய்ய முடியாதவற்றையும் செய்ய முனைந்த அவரது பொது நிர்வாகக் கட்டமைப்புகளின் மகத்துவங்களையும் -- இல்லாதவற்றுக்காக் குறைபடுவதிலேயே பெருமளவு காலத்தைக் கரைக்கும் இன்றைய வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தோடு தமிழ் மக்கள் ஒப்பிடுவார்கள் அல்லவா…?

பிரபாகரனைக் கடந்தும், அவர் முன்னிலைப்படுத்திய வன்முறை அரசியலைக் கடந்தும் தமிழ் மக்களை அழைத்துச் செல்ல விரும்புகின்ற தமிழ் மிதவாதத் தலைவர்கள் -- அவரை விடவும் திறம்படத் தம்மால் காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதையும், மென்முறை அரசியலின் மூலம் நன்மைகளை அடைய முடியும் என்பதையும் தமிழ் மக்களுக்குச் செயல் மூலம் நிரூபிக்கவில்லையெனில் -- மிதவாதத் தமிழ் தலைவர்களை நம்பிப் பயனில்லை என்ற பிரபாகரனின் அன்றைய வாதங்களே இன்றைக்கும் சரியென்று ஆகிவிடும் அல்லவா…?

சர்வதேச சமூகத்தை முன்னிறுத்தி மட்டுமே செய்யப்படுகின்ற தமது இன்றைய அரசியற் காய்நகர்த்தல்களின் எந்தச் சதுரத்திலும் விடுதலைப் புலிகளை முன்னிலைப்படுத்துவது பொருந்திவராது என்று கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு -- பிரபாகரனை முழுமையாக மறுதலித்துவிட்டுச் செய்துவருகின்ற அரசியலின் மூலம் பெற்றெடுக்க முடிந்திருக்கின்ற ஆட்சியுரிமைகள் எவை என்று தமிழ் மனங்கள் கேட்கும் அல்லவா…?

பிரபாகரனைத் தமிழ் மக்கள் நிராகரித்துவிட வேண்டும் என்று சொல்லுகின்ற சிறீலங்கா அரசாங்கம், அதனை அடைவதற்கான தனது பங்களிப்பையும் இதயசுத்தமாகச் செய்ய வேண்டும். அது -- பிரபாகரன் நிராகரித்த மாகாண சபையின் அதிகாரத்தைக் கோரி நிற்கின்ற, அவரது பின்னணியுடனேயே உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பிடம், அதனை முழுமையாகக் கொடுத்துவிடுவதாகும். அதாவது - 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கி, தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தனது வடக்கு மாகாண ஆட்சிக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற அரசாங்கம் ஒத்துழைப்பதாகும். இல்லாதுவிடின், மாகாண சபையை நிராகரித்த அன்றைய பிரபாகரனும், அது உப்புச்சப்பற்றது, அதைச் செயற்படுத்த அரசாங்கமும் விடாது என்ற நிலைப்பாட்டை உடைய இன்றைய கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தான் நியாயப்படுத்தப்படுவார்கள்.

“நாடு ஒன்று; தேசங்கள் இரண்டு” போன்ற தமிழ் தேசியக் கோட்பாடுகளைக் கொண்டிருக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற மிதவாத தமிழ் அரசியற் சக்திகளின் வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் ஒத்துழைப்பதற்கான மனவிருப்பு கூட கொழும்பு ஆட்சிப்பீடத்திடம் இல்லாதவிடத்து -- சிங்கள ஒற்றையினவாத மனோநிலை பற்றிப் பிரபாகரன் கூறிவந்தவையே சரியானவை என்ற தீர்மானங்களுக்குத் தமிழ் மனங்கள் வரக்கூடும்.

பிரபாகரனைக் கொன்ற பின்னால் “ஐக்கிய” நாட்டிற்குள் தாங்கள் தலையெடுப்பதற்கு வழிசெய்யவில்லை என்ற கோபம் அரசாங்கத்தின் மீது எழுகின்ற அதே வேளையில், பிரபாகரனுக்குப் பின்பு, “ஒன்றுபட்ட” நாட்டிற்குள் தமக்குக் குறைந்தபட்சத் தலைமைத்துவத்தைக் கூடத் தரத் திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள் என்ற சினம் தமிழ் மிதவாதத் தலைமை மீதும் தமிழர்களுக்கு எழக் கூடும்.

பிரபாகரன் நிராகரித்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராகி, அதிலிருக்கும் ஆட்சியுரிமைகள் கிடைத்தாலே போதும் என்ற அளவுக்குக் கருத்துக்களை வெளியிட்டு, தேவைக்கும் அதிகமாக இறங்கிச் செல்கின்ற தமிழ் தலைமைகள் -- அவ்வாறு இறங்கிச் செல்வதன் மூலம் அந்தக் குறைந்தபட்ச ஆட்சியதிகாரத்தையாவது முழுமையாகப் பெற்றுவிடமுடியும் என்பதை நிரூபிக்கத் தவறுகின்றார்கள் என்று தமிழர்கள் சிந்திக்கக்கூடும்.

“நடைமுறைச் சாத்தியமானவை” எனத் தமது கொள்கைகளை முன்வைக்கின்ற தமிழ் கட்சிகளே தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்தச் சிரமப்படுகின்ற போது, “நடைமுறைச் சாத்தியமற்றவை” என முத்திரை குத்தப்படுகின்ற கொள்கைகளை உடைய கட்சிகளைப் பின்பற்றிப் பரீட்சித்துப் பார்க்க மக்கள் முயலக்கூடும்.

விளைவு -- தோல்விகளால் சளைத்துவிடாமலும், புறமொதுக்கப்படுவதால் துவண்டு போகாமலும் - “நாடு ஒன்று; தேசங்கள் இரண்டு” என்ற கோட்பாட்டை வரித்திருக்கும் கஜேந்திரகுமாரின் கட்சிக்குப் பின்னால் - தமிழர்கள் நிதானமாகவும் தன்னியல்போடும் திரண்டுவிடக்கூடும்.

சர்வதேசத் தலையீடுகள் பற்றியும் ஆட்சிமாற்றத்துக்கு முயற்சிக்கும் அந்நியச் சக்திகள் குறித்தும் ஒப்பாரிகள் வைக்கும் கொழும்பு ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில் -- தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யத் தக்க ஆக்க பூர்வமான உரையாடல்களைத் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு நிகழ்த்துவதன் மூலமும், சிறீலங்காவின் நில ஒருமைப்பாட்டைப் பங்கப்படுத்தாத ஆகக் கூடிய ஆட்சியதிகாரப் பகிர்வுக்குத் தயாராய் இருப்பதன் மூலமும் -- சர்வதேசத் தலையீடுகளை மட்டுமல்ல, பெரிதாக ஆர்ப்பரிக்கப்படுகின்ற சர்வதேச விசாரணையைக் கூட மழுங்கடிக்கச் செய்துவிட முடியும்.

அதற்கான மன இணக்கப்பாடு அரசாங்கத்திற்கு இல்லாதவிடத்து -- கஜேந்திரகுமாரின் கட்சி போன்ற, வளைந்து கொடாத தமிழ் தேசியவாதச் சக்திகளின் எழுச்சியும், அதன் விளைவாக நிகழக்கூடிய அகச் சூழல் மாற்றங்களும், அந்நியத் தலையீடுகளுக்கு வழி செய்வது மட்டுமன்றி -- கொடுக்க விரும்பாதவற்றையும் தமிழர்களுக்குக் கொடுத்துவிட வேண்டிய புறநிலை ஒன்றுக்குள்தான் கொழும்பு ஆட்சிப்பீட்தை நிர்ப்பந்திக்கும்.

சிங்களச் சமூகம் ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்:

இந்தத் தீவின் இன்றைய அமைதி நிலை தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்பட்டதல்ல; இது பல்லாயிரம் சிங்களப் படை வீரர்களின் உயிர்களை விலையாகக் கொடுத்துப் பெறப்பட்டது. அடுத்தடுத்து ஆட்சிக் கதிரையில் அமர்ந்த ஆளும் தரப்பினரின் அரசியல் அணுகுமுறைத் தவறுகளாலும், அவர்கள் ஊட்டி வளர்த்த சிங்கள ஒற்றையினவாதச் சிந்தனையாலும் பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்கள் வடக்கு-கிழக்குப் போர் அரங்குகளில் பலியிடப்பட்டார்கள். இத்தனை விலை கொடுத்துப் பெற்ற அமைதி உருக்குலைந்துவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கம் அதன் பொறுப்பிலிருந்து விலகிவிடாது கவனித்திருக்கும் பொறுப்பு அதற்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கும் உண்டு.

அதற்கான ஒரு வழிதான் - ஆகக் குறைந்தது - 13ஆவது திருத்தச் சட்டத்தையாவது முழுமையாகச் செயற்படுத்துமாறான அழுத்தங்கள் தெற்கிலிருந்து எழ வேண்டும். அது கூட எழவில்லையெனின் - சிங்கள மக்களின் மகாவம்ச மனநிலை பற்றியும் ஒற்றையினவாதச் சிந்தனை பற்றியும் பிரபாகரன் சொன்னவை தானே சரியென்று ஆகும்…?

இந்த நாட்டில் வாழும் சமூகங்களிடையே இணக்கத்தையும் கூட்டிருப்பையும் ஏற்படுத்துவதில் அக்கறை காட்டாமல், சிங்கள பொளத்த ஒற்றையினவாதத்தை எரியூட்டி எரியூட்டியே ஆட்சியாளர்கள் அரசியல் நடத்தப் போகின்றார்கள் எனில், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வாக்களித்த சிங்கள மக்களும் அனுமதிக்கப் போகின்றார்கள் எனில் -- வடக்கு கிழக்கில் தமிழ் தேசியவாதம் மீண்டும் வேர்விட்டு வளர்ந்து, பிரபாகரனின் சிந்தனைகள் தளைத்துச் செளிக்க வேண்டும் என்பதுதான் தென்னிலங்கையின் விரும்பம் என்று தானே தமிழர்கள் கருதிவிடுவார்கள்….?

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் ஞாயிறு வாரமலரிலும் பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140616110709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 05

[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 06:24 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.]

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் இறந்த போது அவரைப் பற்றி நான் எழுதிய நினைவுக் குறிப்பு இவ்வாறு செல்கின்றது -

“கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை மனதில் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய்விட்டது என்று யோசித்திருப்பாரா…?

அல்லது - ‘நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறுகின்ற உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்’ என்று பாலா அண்ணை (அன்ரன் பாலசிங்கம்) திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று கருதியிருப்பாரா…?

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தை இடாமல் இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இப்போது அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று எண்ணியிருப்பாரா…?

அல்லது - கடந்த காலங்களில் தான் செய்த சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா…?

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா…?

எனக்கு எதுவும் தெரியாது.”

* * *

இப்போது பிரபாகரன் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அவர் விட்டுச் சென்ற பணியைப் பலர் பொறுப்பெடுத்துள்ளார்கள்.

அவர்களுள் - அவரை அடியோடு நிராகரிப்பவர்களும் உண்டு; அரைகுறையாக ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு; அவரே சரியென்று சாதிப்பவர்களும் உண்டு.

எவர் எவ்வாறு இருந்தாலும் - தமிழ் பேசும் மக்களுக்கு இன்று இருக்கும் கவலைகள் எல்லாம் பிரபாகரன் பற்றிவை அல்ல; ஆனால், அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர முன்வந்திருக்கும் இன்றைய தலைவர்களும் அவர் இழைத்தது போன்றதான தவறுகளையே விட்டுவிடுவார்களோ என்பதாகும்.

பிரபாகரனுக்குத் தமிழ் மக்கள் வழங்கிய நிபந்தனைகளற்ற ஆதரவிற்கு மிக முதன்மையான காரணம் அவர் மீதிருந்த பயம் அல்ல; மாறாக, அவரது போராளிகள் செய்துகொண்டிருந்த மகோன்னத தியாகங்கள். தங்களால் செய்யமுடியாத அர்ப்பணிப்புக்களை அந்தப் போராளிகள் செய்த போது, எதிர்த்து நின்று கேள்வியெழுப்பித் தவறுகளைத் தட்டிக் கேட்கும் உளத்துணிவு தமிழர்களிடம் இருக்கவில்லை; அவர்களது மனச் சாட்சியும் அதற்கு இடமளிக்கவில்லை. பிரபாகரன் தமிழீழம் எடுத்துத் தரப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும், அந்தத் தியாகங்களுக்கு முன்னால் தமிழர்கள் தங்களைத் தாழ்த்திக்கொண்டனர். பொன்னும் பொருளும் உயிருமாகக் கேட்டதெல்லாம் கொடுத்தனர்.

ஆனால் -- தமது இன்றைய தலைவர்களுக்கு முன்னால் தமிழர்கள் அவ்வாறு கைகட்டி வாய்பொத்தி இருக்கப் போவதில்லை. கேட்பதெல்லாவற்றையும் கேட்கும் பொழுதிலெல்லாம் கொடுக்கப்போவதுமில்லை. ஏகபோகத் தலைமைத்துவத்தைத் தனது கைகளில் எடுத்திருந்த பிரபாகரனிற்கு நிபந்தனைகளற்ற ஆதரவை வழங்கியதன் விளைவை அவர்கள் ஒரு பாடமாகக் கற்றுள்ளார்கள்.

ஆனால் -- பிரபாகரனிடம் ஆயுதங்கள் இருந்தன; அச்சமூட்டும் ஆளணிகள் இருந்தன; பிரமிக்க வைக்கும் நுட்பங்கள் இருந்தன; கட்டுக்கோப்பான இராணுவ-அரசியல் அமைப்பு ஒன்று இருந்தது. ஏதோ ஒரு வகையில் தீர்மானிக்கும் சக்தியாக - தவிர்க்க முடியாத சக்தியாக - அவர் இருந்தார். இவை எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு - ஏதோ ஒரு தந்திரோபாயத்தைக் கையாண்டு - அற்புதமொன்றை அவர் நிகழ்த்தமுடியும் என்றும், நிகழ்த்திவிடுவார் என்றும் தமிழர்கள் நம்பியிருந்ததனர். இருந்தாலும் -- இவையெல்லாமும் அவரிடம் இருந்தும், தனது மக்கள் எதிர்பார்த்தது போன்ற சரியான விளைவுகளைப் பெற்றெடுக்க அவரால் முடியவில்லை. அது தான் தமிழ் மக்கள் கற்றிருக்கும் பாடம்.

இன்று இருக்கின்ற தமிழ் அரசியற் தலைவர்கள் - அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் - பிரபாகரனைப் போன்றதான ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக - தீர்மானிக்கும் சக்தியாக - இருக்கின்றார்கள் என்று எந்த அடிப்படையில் கருத முடியும்…?

பிரபாகரனிடம் ஒரு பலம் இருந்தது. இலங்கை தொடர்பான எந்த நகர்வை எந்த நாடு எடுக்க முனைந்தாலும், அவரது அந்தப் பலத்தைச் சார்ந்தே தமது முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அந்தப் பலத்தைச் சார்ந்துதான் - தமிழர்களுக்கு ஒர் அரசியற் தீர்வை வழங்க வேண்டிய சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீதான நிர்ப்பந்தமும் இருந்தது. ஒன்றில், அவரோடு சேர்ந்தியங்க வேண்டும், அல்லது அவரை அழித்துவிட்டு இயங்க வேண்டும். வெளித் தலையீடுகளாலோ, அல்லது வெளித் தலையீடுகள் இல்லாமலோ - தமிழர்களுக்கு நன்மைகள் விளையக்கூடிய சாத்தியங்கள் அவரது அந்தப் பலம் வகித்த பாத்திரத்தின் காரணமாகவே இருந்தன. அவ்வாறான ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடிய எத்தகைய பலத்தை தமிழினத்தின் இன்றைய தலைவர்கள் கொண்டுள்ளார்கள்…?

பிரபாகரனை எப்போதும் மறுதலித்ததுடன், அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை நிராகரித்ததுடன், தமிழருக்கு விடிவு கிடைப்பதற்கு அவரே பெரும் தடை என வலியுறுத்தியும் வந்த இன்றைய தலைவர்கள் - அவர் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஒரு குறைந்தபட்சத் தீர்வைத் தன்னும் தமிழர்களுக்குப் பெற்றெடுக்க முடியாமல் இருப்பது எதனால்…?

சர்வதேச சமூகத்தை முன்னிலைப்படுத்தியே - அதனை நம்பியே - ஆட்சியுரிமைக்கான தமிழரது அரசியற் போராட்டம் இப்போது நகர்த்தப்படுகின்றது. தாம் தொடர்ச்சியான அரசியல், பொருளாதார, இராணுவ, இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்ற ஒர் அரசாங்கத்தை மீறி - ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அரசாங்கத்தை மீறி - உள்நாட்டில் மக்களின் பேராதரவோடு அசுரபலத்துடன் இருக்கின்ற ஓர் அரசாங்கத்தை மீறி - அந்த நாட்டில் வெறும் 10 வீதமே உள்ள ஒரு மக்கள் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒர் அரசியற் கட்சியுடன் எந்த ஒரு வெளிநாடும் எதற்காக நேர்மையான தொடர்புகளை வைக்க வேண்டும்…?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயலகம் நடத்தவுள்ள போர்க்குற்ற விசாரணையின் முடிவானது, குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிக்கு முன் நிறுத்தக்கூடும்; அவர்களுக்குத் தண்டனையையும் பெற்றுக்கொடுக்கக்கூடும். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற தண்டனைகள் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும், தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு நிரத்தரத் தீர்வு கிடைப்பதற்கும் எவ்வாறு வழிசெய்யும்…?

உலக ஒழுங்கு என்பது ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பு வகிக்கும் பேரரசுகள், ஆங்காங்குள்ள பிராந்தியச் சிற்றரசுகளுடன் சேர்ந்து தமது தேசிய நலன்களுக்காக மட்டும் வனைந்தெடுக்கின்ற உறவுமுறையாகும். ராஜீவ் காந்தியைக் கொன்ற பாரதூரமான செயலுக்காக மட்டும் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து பிரபாகனை அழித்தன என்று சொல்ல முடியாது; அல்லது, தனது அரசியல் கோரிக்கைகளை அடைவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகளுக்காக மட்டுமே அவர் அழிக்கப்பட்டார் என்றும் சொல்ல முடியாது. மாறாக - அவரது அரசியல் இலட்சியமே தமது தேசிய நலன்களுக்கு இடையூறாக அமைந்ததனாலேயே குறிப்பாக அவர் அழிக்கப்பட்டார். இதில் தமிழர்களுக்கான பாடம் என்னவெனில் - அவர்களது கோரிக்கைகள் உலகச் சக்திகளின் தேசிய நலன்களைத் திருப்திப்படுத்தவில்லை எனில், அந்த இலக்குகளை அடையவதற்கு உலகச் சக்திகள் துணை இருக்க மாட்டார்கள்; தடையாகவும் இருப்பார்கள். இத்தகைய புறநிலையில் - தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய உயரத்திலும், இந்த வல்லரசுகளின் தேசிய நலன்களைப் பாதிக்காத அளவுக்குத் தாழ்வாகவுமான ஒரு தீர்வு ஒரே சம மட்டத்தில் எவ்வாறு சாத்தியமாகும்…?

மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் மாறாக சிறீலங்கா செயற்படுவதும், சிறீலங்காவைத் தமது வழிக்குக் கொண்டுவர முடியாமல் மேற்குலகு சிக்கல்படுவதும்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்யும் அரசியலின் இன்றைய பலம். இது பிரபாகரன் வைத்திருந்ததைப் போன்றதான சொந்தப் பலம் அல்ல; இது சிறீலங்கா அரசாங்கத்தின் பலவீனத்தால் வந்த பலம். திடீரென - தமது ஆட்சியையும் அன்பர்களையும் பாதுகாப்பதற்கான ஒரு தந்திரோபாயத் திருப்பத்தைச் செய்து மேற்குலகத்துடனுடனும் இந்தியாவுடனும் சிறீலங்கா அரசாங்கம் ஒரு சமரசத்திற்குப் போய் பலம் பெற்றுவிடுமிடத்து, பலமிழந்து போய்விடும் தமிழர்கள் தமக்கான புதிய பலத்தைத் தேடிக்கொள்வது எவ்வாறு…?

இந்திய நாட்டை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரியாகப் பிரபாகரன் எப்போதாவது கருதினார் என்று சொல்ல முடியாது. இலங்கைத் தமிழர்களின் நலன்களும் இந்திய நாட்டின் நலன்களும் பொருந்திவராது என்பதுதான் அவருடைய பிரச்சனை. அதன் காரணமாக, இந்தியாவின் முயற்சிகளை அவர் ஐயத்தோடு பார்த்தார்; இந்தியாவின் முடிவுகளை ஏற்கத் தயங்கினார். அதனால், இந்தியாதான் அவரை எதிரியாகப் பார்த்தது. தமது வழிக்கு வர மறுக்கின்றார் என்பதால் இந்தியாவே அவர் மீது போரைத் தொடுத்தது. ‘பிரபாகரன்தான் பிரச்சனைக்காரன்’ என்று சொல்லுபவர்கள், அவரது இறப்புக்குப் பின்னர் - கடந்த ஐந்து ஆண்டுகளாக - ஆகக் கடைசியாக ஜெனீவாவில் வாக்களிக்காது விலகியது வரை -- இந்தியா நடந்துவருகின்ற முறையை எவ்வாறு நியாயப்படுத்தவார்கள்…?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை எய்தி மக்களின் பேரதரவு தங்களோடு இருப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரூபித்தால், ஜெனீவா வாக்கெடுப்பின் போது இந்தியா அவர்களோடு நிற்கும் என்ற வாக்குறுதி டில்லியில் வைத்து இந்தியாவால் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது. அதை நம்பி -- ஜெனீவாத் தீர்மானத்தில் இந்தியாவின் ஆதரவைத் தாங்கள் பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை, தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு வோசிங்டனில் வைத்து வழங்கினார் சுமந்திரன். ஆனால், கடைசியில், ஜெனீவா வாக்கெடுப்பின் போது இந்தியா பின்பற்றிய கொள்கை, மாறியிருக்கின்ற புதிய நரேந்திர மோடி அரசாங்கத்தில் மாறிவிடும் என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உண்டு…?

எப்பெயர்ப்பட்ட பாரத மாதா பக்கத்திலிருந்தே அந்த அன்னை அருளிய மாகாண சபையை நடைமுறைப்படுத்துவதில் இடர்பாடுகளும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் நிலவுகிற போது - அந்த மாகாண சபையை முழுமையாகப் பெறுவது எவ்வாறு…? அத்தோடு - அந்த 13ஆவது திருத்தச் சட்டத்தையும் தாண்டிச் செல்வது பற்றிய வாக்குறுதிகள் வழங்குவோர் அதனைச் சாத்தியமாக்கப் போவது எவ்வாறு…?

தனது கடைசி நாட்களில் பிரபாகரன் அவ்வாறெல்லாம் நினைத்திருப்பாரா என்று அன்று நான் எழுதியது அவருக்கு எதிரான எண்ணப்பாட்டினால் அல்ல. இன்றைய தலைவர்களின் அரசியல் நகர்வுகள் தொடர்பான தெளிவைத் தேடி இன்று நான் இவ்வாறு எழுதுவது இவர்களுக்கு மாறானவன் என்பதாலும் அல்ல.

இந்தக் கேள்விகள் என்னிடம் மட்டும் இல்லை.

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் ஞாயிறு வாரமலரிலும் பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140622110745

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 06

[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 07:13 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்.]

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திய போது - அவரோடு இரண்டறக் கலந்திருந்து அவரது எண்ணங்களைச் செயல் வடிவமாக்கியோர் முதன்மையாக இரண்டு தரப்பினர். ஓன்று - தளத்தில் அவரோடு கூடவே இருந்த அவரது போராளிகள். அடுத்தது - நாடுவிட்டுச் சென்றுவிட்ட போதும் அவருக்குத் துணையாக நின்ற அவரது மக்கள்.

இந்த இரண்டு தரப்பினரும் இல்லாமல் அவரால் ஓர் அணுவைக் கூட அசைத்திருக்க முடியாது.

இப்போது அவர் உயிரோடு இல்லை. அவர் நடாத்திய போரின் எச்சமாக மிஞ்சியிருப்பது -- ஒரு பக்கம், தப்பியிருக்கும் முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களும்; அடுத்த பக்கம், 90,000 வரையான கணவன்மாரை இழந்த பெண்களும் அவர்கள் கொண்டுநடத்தும் குடும்பங்களும். இலங்கையின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் சமூகத்தினரில் ஏறக்குறை காற் பங்கினர் இவர்கள்.

இவர்களுள் உடற் பாகங்களை இழந்தும், உடற்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டும் உள்ளவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். இவர்களுள் மிகப் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர். இவர்கள் - அலட்சியப்படுத்திவிட முடியாத அளவுக்கு நிச்சயமாக ஒரு கணிசமான தொகையினர்.

இது மிகவும் ஆழமான ஒரு சமூக – பொருளாதாரப் பிரச்சனை; மிகவும் விரிவான ஒர் அரசியற் பிரச்சனையும் கூட.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்குகின்ற இலங்கைத் தமிழ் சமூக-அரசியற் செயற்பாட்டாளர்கள் - போர் விட்டுச்சென்றிருக்கும் இந்த உயிர்களின் நல்வாழ்வுக்காகத் தயாரித்திருக்கும் திட்டங்கள் என்ன…?

தமிழ் தேசிய இறையாண்மைப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை அடைவதற்குக் கொடுக்கப்படுகின்ற அதே அளவு முக்கியத்துவம் இந்த விவகாரத்திற்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படாதது ஏன்…?

எனது நெடுநாள் நண்பன் ஒருவன் நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவன்; ஆழமான உரையாடல்களுக்குத் தகுதியானவன். பிரபாகரனுக்கு நெருக்கமாகப் பணியாற்றியவன்; சாகசங்கள் செய்தவன். இப்போது கிளிநொச்சியில் வாழ்கிறான். முதுகெலும்பில் குண்டு தாக்கியதால் இடுப்பிற்குக் கீழே இயக்கமற்ற உடல்; வருமானத்திற்காகத் தொழிலுக்குப் போகும் மனைவி; இரண்டு குழந்தைகள்.

அவனது கதை இந்த நான்கு வரிகளையும் விட ஆழமானது; ஆத்மார்த்தமானது. அவனது நிலை தனித்த ஒருவனின் கதை மட்டும் அல்ல. அவனைப் போன்ற பல்லாயிரம் பேரின் நிலை.

“தோற்றுப் போனதை விடவும் கொடுமையான உணர்வு கவனிப்பாரற்றுக் கிடப்பதுதான்” என்கிறான். “வெறும் பந்தயக் குதிரைகள் போல நாங்கள் பாவிக்கப்பட்டு விட்டோமா…?” என்று கேட்கிறான்.

அவனைப் போன்றவர்கள் ஒவ்வொருவருமே, தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் கேட்டுக்கொண்டிருக்க முடியாத அளவுக்கு மனம் கனத்துவிடும் சோகங்களைத் தாங்கி நிற்கின்றார்கள்.

“தலைவர் இருந்த போது அள்ளிக்கொடுத்த எங்கட சனங்களுக்கு இப்போது என்ன நடந்தது, அண்ணை…?

இயக்கம் இருந்த போது ஆயிரக் கணக்கானவர்கள் வன்னிக்கு வந்து போனார்களே, அவர்களெல்லாம் இப்போது எங்கே…?

அப்போது நாங்கள் வெற்றிகளைக் குவித்தபோது கொண்டாடியவர்கள், இப்போது ஒரு பொழுது என்றாலும் எங்களைப் பற்றி நினைப்பார்களா…?

அல்லது, அவர்களையும் வெறும் காசு காய்த்துக் கொழிக்கும் மரங்கள் போலவே நாம் நடத்திவிட்டோமா…?”

-- கண்களில் நீர் கசிய அவன் கேட்கிறான். யார் மீதும் அவனுக்குக் கோபம் இல்லை. எவரில் குற்றம் காணவும் அவன் முயலவிலை. கவலையும் ஆற்றாமையுமே மிஞ்சிக்கிடக்கின்றது.

“அல்லது, முழு மக்கள் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்திப் போராட்டத்தின் ஒட்டுமொத்தமான கூட்டுப் பொறுப்பை எல்லோரும் பகிர்ந்தெடுக்கும் சூழலை உருவாக்காது விட்டதும் தலைவரின் தவறு தானா…?” என்கிறான்.

எப்போதுமே கண்காணிக்கப்படுவதான அச்சம்; எதிர்பாராமல் வந்துபோகும் விசாரணையாளர்களால் ஏற்படும் பயம்; நாளைய வாழ்வு பற்றிய நிச்சயமின்மை தருகின்ற சஞ்சலம்; பொருளாதாரத் தேவைகள் தருகின்ற நிம்மதியின்மை; சமூக அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்படுகின்ற கவலை; ஆண் துணை இல்லாத பெண்களாய் இருப்பதால் தேடி வருகின்ற சமூகத் தொல்லைகள்; பாதுகாப்புக்காக ஏற்படுத்தவேண்டியிருக்கின்ற வேண்டாத உறவுகள்; அந்த உறவுகளால் கிடைத்துவிடுகின்ற அவப் பெயர்கள்; போதிய கல்வித் தகுதிகள் இல்லாமையால் மறுக்கப்படுகின்ற தொழில் வாய்ப்புக்கள்; தேவையான உடல் வலு இல்லாமையால் கிடைக்காது போகின்ற வேலைகள்; இந்த வாய்ப்புக்களைத் தேடி அலைவதால் ஏற்படுகின்ற அயர்ச்சி; எப்போதும் அடுத்தவரில் சார்ந்திருக்க வேண்டியிருக்கின்ற துயரம்; இவை எல்லாவற்றாலும் குடும்பத்திற்குள் ஏற்படுகின்ற மனக் கசப்புகள்; ‘என்னடா இது வாழ்க்கை?!’ என்று ஒட்டுமொத்தமாக வருகின்ற விரக்தி -- இது தான் பெருமளவுக்கு அவர்களது வாழ்க்கை.

இந்த முன்னாள் போராளிகளுக்காகவும் போரில் கணவன்மாரை இழந்த பெண்களுக்காகவும் -- இலங்கையில் சட்டபூர்வ அங்கீகாரத்துடன் இயங்கும் வடக்கு மாகாண சபை, தனித்தும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் சமூகத்தோடு கைகோர்த்தும் ஒரு பல்பரிமாண வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும்.

முடியுமான வரையில், இயலுமான பொறுப்புக்களில், மாகாண சபையின் நிர்வாகத்திற்குள் அவர்களைப் பணிகளுக்கு அமர்த்துவதிலிருந்து அவர்களுக்கான வேலைத் திட்டங்களைத் தொடங்க முடியும்.

முன்னாள் போராளிகளது குடும்ப வாழ்வுகள் சிறப்புற்று - அவர்கள் சமூகத்திற்குள் மேம்பட்டு - தமக்குத் தொல்லைகள் தராமல் தனிப்பட்டு வாழ வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தினதும் அரச ஆயுதப் படைகளதும் நிச்சயமான நோக்கம். அதனால், அவர்களை மாகாண சபையின் பணிகளுக்குள் ஈர்த்துக்கொள்வதையிட்டோ, அல்லது அவர்களுக்கான வேலைத் திட்டங்கள் எதனையும் மாகாண சபை செயற்படுத்துவதையிட்டோ அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சனையுமே இருக்காது. அது மட்டுமல்லாமல் - மாகாண ஆட்சி விரும்பினால், அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தையும் ஒத்துழைப்பையும் கூட இந்த முயற்சிகளுக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

விக்கினேஸ்வரன் நிர்வாகங்கள் செய்யாதவர்; அரசியலுக்கும் புதியவர். சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாகவே நடப்பவர்; வழமையான நிர்வாக ஒழுங்குகளைப் பின்பற்றியே வாழ்ந்தவர். வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கு வெளியிலும், அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு வெளியிலும் வாழ்ந்தவர். கல்வித் தகுதியை மட்டும் வைத்தே மனிதர்களின் பணியாற்றலை அளவிடும் பழக்கத்திற்குள்ளால் வளர்ந்தவர்; அந்த அடிப்படையிலேயே வடக்கை நிர்வகிப்பதற்கான மனித வலுவைத் தான் தேட வேண்டும் என அவர் இயல்பாகவே எண்ணக் கூடும். அப்படி அவர் எண்ணுவாராயின் அது அவரது தவறோ, குறைபாடோ அல்ல.

பிரபாகரன் விட்டுச் சென்றிருக்கம் விரிந்த பொது நிர்வாக அனுபவமும் அறிவும் உடைய விடுதலைப் புலிகளின் போராளிகள் பற்றி அவர் அறியாதிருக்கலாம். அவர்கள் பல்துறை ஆற்றல் படைத்தவர்கள் என்பது அவருக்குத் தெரியாதிருக்கலாம். அவர்கள் சிறுவயது முதலே குறைந்த கல்வித் தகமைகளோடு வன்முறைச் சூழலுக்குள் வளர்ந்தவர்கள் என அவர் நினைத்திருக்கலாம்; அதனால், அவர்கள் பொது நிர்வாகப் பணிகளுக்குப் பொருந்தி வர மாட்டார்கள் என அவர் கருதியிருக்கலாம். அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தாலும், இந்த எண்ணங்கள் அவரைத் தடுத்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துத்தான் நேர்த்திருக்கு மிக நெருக்கமான - ஒர் உலகம் வியந்த - நிர்வாகத்தைப் பிரபாகரன் நடத்தினார் என்பதை, அந்த விடயங்கள் தெரிந்த, விக்கினேஸ்வரனின் அமைச்சரவையில் இருக்கின்ற, ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா போன்றவர்கள் அவருக்கு எடுத்து விளக்க முடியும்.

விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு போராளியினது தொழில் அனுபவம் மற்றும் அறிவு என்பவற்றின் அடிப்படையில், அவரவருக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் - அந்தப் போராளிகளுக்கு சமூக அங்கீகாரத்தையும், பொருளாதார உறுதிப்பாட்டையும், பாதுகாப்பு உத்தரவாதத்தையும் மாகாண சபை வழங்க முடியும். அதே வேளையில் - அர்ப்பணிப்பும், செயற்திறனும், பணி ஒழுக்கமும் மிக்க ஒரு மாபெரும் மனித வலுவையும் வடக்கு மாகாண சபைக்குள் ஈர்க்க முடியும். இன்னொரு வகையில் சொல்லுவதானால் - அந்தப் போராளிகளின் நல்வாழ்வுக்காக இதைச் செய்யாதுவிடினும் கூட, மாகாண சபையின் பணிகளை நேர்த்தியாக முடிப்பதற்காக என்றாலும் அவர்களை உள்வாங்கிக் கொள்ளலாம்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளது குடும்பங்களையும் போரில் கணவன்மாரை இழந்த பெண்கள் கொண்டுநடத்தும் குடும்பங்களையும் - அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற்றி, சொந்தக் காலில் செழிப்படையச் செய்வதற்கான இன்னொரு வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் இணைத்து வடக்கு மாகாண சபை முன்னெடுக்க முடியும்.

இவ்வாறான பணிகள் -- அவர்கள் மீது இரக்கப்பட்டோ அல்லது அனுதாபப்பட்டோ ஆற்றப்பட வேண்டும் என்பதல்ல; மாறாக - தமது தலைமை எடுத்த சரியானதும் தவறானதுமான முடிவுகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் அப்பால், சாதாரண போராளிகளாகத் தமக்கான கடமைகளை நியைவேற்றியவர்களைக் கைவிடாது தாங்கிப் பிடித்து நிமிர்த்திவிட வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் உண்டு. அத்தோடு - ஏதோ ஒரு வகையில் - நடந்து முடிந்த போரிற்கு நேரடியாகவோ வேறு முறைகளிலோ ஆதரவுகளை வழங்கியவர்கள் என்ற அடிப்படையில், அந்தப் போரின் நேரடியான தாக்கங்களால் துவண்டிருப்போரைத் தூக்கி எழுப்பிச் சுயமாக வாழ வைக்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பும் ஒட்டுமொத்தமான தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது.

தனிப்பட்ட முறையிலும், சீராக ஒழுங்கமைக்கப்படாத வகையிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏராளமான உதவிகளை நிச்சயமாக வழங்குகின்றார்கள். ஆனால், அந்தச் சேவை ஒரு சமச்சீரற்ற வகையிலேயே சென்றடைகின்றது. குறையத் தேவையானவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கின்றது; தேவையானவர்கள் பலருக்கு எதுவுமே கிடைக்கவில்லை; ஒரே குடும்பங்களுக்குப் பல வழிகளில் கிடைக்கின்றது; பல குடும்பங்களுக்கு உதவிகளைப் பெற வழிகளே தெரியவில்லை.

அத்தோடு - புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் இந்தப் பணியில் பங்கேற்க விரும்புகின்ற போதும், வழங்கிய உதவிகள் முழுமையாகப் போய் சேராதுவிட்ட பழைய கசப்பான அனுபவங்களால் அவர்கள் தயங்குகின்றார்கள். மீண்டும் அது போலவே ஆகிவிடுமோ என்ற அச்சம் அவர்களைத் தடுக்கின்றது. அவர்களுக்கு நம்பகமான வழிகள் தெரியவில்லை. நம்பகமான வழிமுறைகள் உருவாக்கப்படின் மேலும் பலர் உதவிக் கரங்களை நீட்டுவார்கள். இதன் காரணமாகவே, சீராக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு முறையில் இந்த உதவிகளைத் திரட்டி, அவை உரியவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேருவதற்கு ஏற்ற நேர்த்தியான ஒரு பொறிமுறையை வடக்கு மாகாண சபைக்கு ஊடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். அதற்கூடாக - அந்த உதவிகள் கிழக்கு மாகாண மக்களையும் சென்றடைய வகை செய்ய முடியும்.

உருப்படியான சுய தொழில் முயற்சிகளுக்கும் ஆக்கபூர்வமாகக் கல்வியைத் தொடர முயல்கின்றவர்களுக்கும் உதவிகள் வழங்கலாம்; தொழில் புரியும் உடல் நிலைகளில் இல்லாதோருக்கு உதவித் தொகைகளை வழங்கலாம்; பால், வயது, மனநிலை என்பவற்றின் அடிப்படையில் ஆதரவற்றோர்களுக்கு பாராமரிப்பு இல்லங்களை அமைக்கலாம். மிகக் கொடூரமான போர் நிகழ்ந்த காலத்திலேயே இவற்றையெல்லாம் திறம்படச் செய்த பிரபாகரனிடமிருந்தே இவற்றைச் செயற்படுத்துவதற்கான பாடங்களைக் கற்கலாம்.

வடக்கு மாகாண சபை நேரடியாக வெளிநாட்டுப் பண விடயங்களோடு சம்மந்தப்படுவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கலாம். விடுதலைப் புலிகளின் நிதி மாகாண சபைக்கு வருவதாக அரசாங்கமே அஞ்சலாம்; அல்லது, வேறு எவராவது அவ்வாறான கதைகளைக் கட்டலாம். எனவே, வடக்கு மாகாண சபை, ஒர் அரசு சாரா நிறுவனத்தை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்க முடியும். அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே இதனைச் செய்யவும் முடியும். ஜனநாயகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இலங்கையில் சட்டபூர்வ அங்கீகரத்தைப் பெற்றதுமான வடக்கு மாகாண சபையின் பின்னணியுடன் உருவாக்கபடும் ஓர் அரசு சாரா நிறுவனம், ஒரு நம்பகத் தன்மையை இயல்பாகவே பெற்றுவிடும்.

இதற்கு முன்னேற்பாடாக - உண்மையிலேயே பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களை இனங்காணவும், அவர்களது பாதிப்புக்களின் தன்மைகளை மதிப்பீடு செய்யவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் எத்தகையவை என்பதை அளவீடு செய்யவும், உதவிகளால் அவர்கள் பெறக்கூடிய பயன்பாடுகளைக் கணிப்பீடு செய்யவும், அந்த உதவிகளை எல்லாத் தரப்பிலிருந்தும் பெறத்தக்கதான வழிமுறைகளை ஆராயவும், அந்த உதவிகள் சரியான முறையில் உரியவர்களைச் சென்றடையக் கூடிய பொறிமுறைகளை உருவாக்கவும் என ஒரு குழுவை வடக்கு மாகாண சபை ஊடாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்த முடியும்.

இப்போது மாகாண சபையில் உறுப்பினராக இருக்கின்றவரும், முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், ஆயுதப் போராட்ட அமைப்புப் பின்னணியிலிருந்து வந்தவரும், அரசியல் - இராணுவ அமைப்பு ஒன்றை நிர்வகித்த பட்டறிவை உடையவரும், இராஜதந்திரத் தொடர்பாடல் அனுபவத்தைக் கொண்டவருமான சித்தார்த்தன் தர்மலிங்கத்தின் தலைமையில் - முன்னாள் போராளிகள் மற்றும் போரின் பாதிப்புக்கு உள்ளான பெண்களின் விவகாரங்களைக் கவனிப்பதற்கான அந்தக் குழுவை வட மாகாண சபை அமைக்கலாம். அந்தக் குழுவில் - அவரைப் போலவே ஆயுதப் போராட்டப் பின்னணியிலிருந்து வந்த மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், எம். கே. சிவாஜிலங்கம் ஆகியோருடன், அனந்தி சசிதரனையும் இணைக்கலாம். வேறு சமூகப் பெரியார்களையும் அறிஞர்களையும் கூட இந்தக் குழுவில் சேர்க்கலாம்.

உலகளாவிய தமிழினத்தின் ஆதரவுகளை ஒருங்கு திரட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து, தற்காலிக மற்றும் நிரந்தரத் திட்டங்களை வகுத்து, அரசு சாரா நிறுவனம் ஒன்றின் ஊடான பொறிமுறைகளை உருவாக்கி அந்தக் குழு அவற்றைச் செயற்படுத்தலாம்.

ஓட்டுமொத்தமாகப் பார்க்கையில் -- விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளினதும், போரில் கணவர்களை இழந்த பெண்களால் கொண்டு நடத்தப்படும் குடும்பங்களினதும் வாழ்வு நிலை சிறப்படைவது அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாது. அதோடு சேர்த்து – தமிழ் சமூகத்தினதும், ஒட்டுமொத்தமான இந்த நாட்டினதும், இந்த நாட்டை ஆளும் அரசாங்கத்தினதும் தேவைகளையும் அது பூர்த்தி செய்யும்.

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் ஞாயிறு வாரமலரிலும் பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140629110784

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 07

[ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2014, 07:04 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்]

இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாகத் தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால ஆளுகை வரலாற்றின் சுருக்கம் இதுதான்:

சேர்ந்து வாழ முடியாது என்பதால் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையோடு தனது ஆயுதப் போராட்டத்தை அவர் நடத்தினார். காலப் போக்கில் - பிரிந்து செல்ல வேண்டும் என்பதால் சேர்ந்து வாழ முடியாது என்று அவரது கொள்கை மீளுருவாக்கம் பெற்றது.

பிரிந்து செல்லவே வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்துவிட்டிருந்ததால், சேர்ந்து வாழுவதற்கான வழிகளை விசுவாசமாகப் பரீட்சித்துப் பார்க்க அவர் விரும்பவில்லை; அவரால் முடியவில்லை; அவருக்குத் தெரியவில்லை.

இறுகிப் போய் கிடக்கும் சிங்கள பௌத்த ஒற்றையினக் கோட்பாடு என்றுமே இளகி வராது என்ற காரணத்தைக் காட்டியே பிரபாகரன் தனது வன்முறை அரசியலைத் தொடர்ந்தார். அவர் கூறியது போலவே - சிங்கள பௌத்த ஒற்றையின மனேபாவம் தளர்வடையவில்லை; அதே வேளையில் - அவ்வாறு அது தளர்வடைகின்ற சூழல்கள் உருவாகி வருவதற்குப் பிரபாகரன் விடவுமில்லை. எந்தக் கோட்பாட்டுக்கு எதிராகத் தனது ஆயுதப் போராட்டத்தை அவர் தொடங்கினாரோ, ஒரு கட்டத்தில் - அந்தக் கோட்பாட்டையே தனது ஆயுதப் போராட்டத்திற்கான மூலதனமாகவும் அவர் ஆக்கிக்கொண்டார். அடித்து இளக்கி இறங்கிவர வைப்பதற்குப் பதிலாக, சிங்கள பௌத்தத்தை அவர் மேலும் இறுக்கித் திடப்படுத்தினார்.

சிங்கள பௌத்தம் தெற்கிலும் மேற்கிலும் திடப்படத் திடப்படத்தான், வடக்கும் கிழக்கும் பிரிந்து செல்வதற்கான காரணங்கள் வலுப்படும் என்று அவர் நம்பினார். தமிழர் பக்கத்திலிருந்த மென்கோட்பாட்டாளர்களையும் மென்சிந்தனையாளர்களையும் அவர் அகற்றினார்; சிங்களத் தரப்பிலிருந்து கனிந்துவந்த நல்லெண்ண சூழல்களையும் அவர் கலைத்தார். தமிழ் தேசியக் கோட்பாட்டை வலுப்படுத்தியதன் மூலமாகச் சிங்கள ஒற்றையினக் கோட்பாடு வலுவடைய அவர் வழி வகுத்தார். சிங்கள ஒற்றையினக் கோட்பாடு வலுவடைய வலுவடைய, அதனையே மூலதனமாக இட்டு, தமிழ் தேசியக் கோட்பாட்டையும் அவர் திடப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் - தமிழர் தரப்பில், தமிழ் தேசியக் கடும் கோட்பாட்டோடு அவர் மட்டுமே நிமிர்ந்து எழுந்து, சிங்கள பௌத்த ஒற்றையினக் கடும் கோட்பாடே இந்த நாட்டை ஆளும் சூழலை ஏற்படுத்தினார். இரு தரப்பிலும் கடும் கோட்பாடுகளே உருக் கொண்டு எழுந்துவிட்ட போது - இனிச் சமரசங்கள் செய்யத் தேவையில்லை, செய்யவும் முடியாது என்ற முடிவுக்கு இரண்டு தரப்புமே வந்து சன்னதமாடத் தயாராகின.

விளைவு - பிரபாகரனைப் போலவே ஒற்றைச் சிந்தனையுடனும் மனத்திமிருடனும் செயற்திறனுடனும் எதிர்ப்பக்கத்தில் கொட்டாபய ராஜபக்ச வந்து சேர்ந்தார். சிந்தனையும், திமிரும், செயற்திறனும் சமப்பட்ட போது - ஆள் வளத்திலும், ஆயுத வலுவிலும், உலகப் பலத்திலும் மேலோங்கியிருந்த - அரசாங்கம் என்ற அங்கீகாரத்தையும் கொண்டிருந்த - கொட்டாபய ராஜபக்ச முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துவைத்தார்.

இந்த வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து உலகளாவிய தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன…?

இப்போதைய நிலவரமும், ஏறக்குறைய இதே போன்றதுதான். அனால், பிரபாகரன் இப்போது இல்லை; அவர் வகித்த பாத்திரத்தை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழ் அமைப்புகள் வகிக்க முற்படுகின்றன.

மேற்குலகத்தை முன்னிலைப்படுத்தி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியற் செயற்பாடுகளுள் இப்போது முதன்மையாய் இருப்பது மூன்று விடயங்கள்:

ஒன்று -- மேற்குலக அரசாங்கங்களுக்கும் அரசியற் கட்சிகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலையை விளக்க எடுக்கப்பட்டுவரும் பரப்புரைப் பணிகள் (Lobbying)

அடுத்தது -- சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கோரும் போராட்டங்கள்.

மூன்றாவது -- சிறீலங்கா அரசாங்கத்தினர் வேறு நாடுகளுக்குப் பயணங்களை செய்கின்ற போது, அவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற வீதிப் போராட்டங்கள்.

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் சமூகமே இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்று இருக்கும் பலம்; உண்மையில் அது தான் ஒரே பலம். ஏறக்குறைய - உலகப் பெரும் நாடுகள் வைத்திருக்கும் அணு குண்டுகளைப் போன்ற பலம் என்று அதனை ஒப்பிடலாம். நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், பலம் என்பது அதன் நோக்கத்தை அடைவதற்கான ஒன்றே அல்லாமல், அது பாவிக்கப்பட்டே ஆக வேண்டிய ஒன்று அல்ல. இன்றைய உலகில், அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற நாடுகளதும், அவற்றைத் தயாரிக்க விழுந்தடிக்கின்ற நாடுகளதும் நோக்கம் அடுத்த நாடுகளைத் தாக்குவது அல்ல; மாறாக – அடுத்த நாடுகள் தம்மைத் தாக்காது ஒரு கவசத்தை ஏற்படுத்துவதே. அணு குண்டுகளின் நோக்கம் - “நீ அடித்தால் நானும் அடிப்பேன்” என்ற செய்தியைச் சொல்வதும், 'நான் அடித்தால் அவனும் அடிப்பான்' என்று அடுத்த நாடுகளைச் சுய எச்சரிக்கை செய்ய வைப்பதும் ஆகும். அத்தகைய ஒரு ஞானத்துடன்தான் ஒரு பலம் உபயோகப்படுத்தப்பட வேண்டும். புலம்பெயர் சமூகம் என்ற பலம் எத்தகைய ஞானத்தோடு இலங்கைத் தமிழர்களுக்காகப் பயன்படப் போகின்றது என்பதே பெரிய கேள்வி. பிரபாகரன் எத்தகைய ஞானத்தோடு அதனை முன்பு பயன்படுத்தினார் என்பதுவும் இங்கு தமிழர்களுக்கு இருக்கின்ற பாடம்.

பிரபாகரனின் காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் என்ற இந்த மாபெரும் சக்தி, சரிகளுக்கும் பிழைகளுக்கும் அப்பால், தேவைகளுக்கும் தேவையின்மைக்கும் அப்பால், அவரது கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கும், அவரது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குமான ஒரு கருவியாகவே மிகப் பெருமளவிற்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. சுயமாகச் சிந்தித்து இயங்குவதற்கான செயற்பாட்டுச் சுதந்திரம் இந்த இரண்டு பணிகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஏறக்குறைய - அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலவே புலம்பெயர்ந்த தமிழ் சமூகமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரது இனப்பற்றும், வன்னியிலிருந்து சொல்லப்படுபவற்றை எவ்வளவுக்குத் துல்லியமாக அவர் செய்கின்றார் என்பதன் மூலம் அளவிடப்பட்டது போலவே, ஒவ்வொரு புலம்பெயர்ந்த தனித் தமிழனின் இனப்பற்றும், அவர் எவ்வளவு அதிகமாக நிதியை வழங்குகின்றார் என்பதிலிருந்து அளவிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் போராளிகள் புரிந்துகொண்டிருந்த தியாகங்களின் காரணமாகவும், போர்க்களங்களில் அவர்கள் படைத்துக்கொண்டிருந்த சாதனைகளின் காரணமாகவும் - பிரபாகரனின் எண்ணங்களை ஈடேற்றுவதிலேயே புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் கருத்தாக இருந்தது. இதே காரணங்களுக்காக - மாற்றுச் சிந்தனைகளும், அவற்றை முன்வைத்தவர்களும் நிராகரிக்கப்பட்டார்கள். இவ்வாறான மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது, அந்தப் போராளிகளின் தியாகங்களை அவமானப்படுத்துவது போன்றதாகக் கருதப்பட்டது.

ஏதோ ஓர் அதிசயத்தைப் பிரபாகரன் நிகழ்த்தப் போகின்றார் என்ற எதிர்பார்ப்புடனும், நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையுடனும் மறுகேள்வியின்றி மக்கள் எல்லாவற்றையும் தந்தார்கள். அப்பழுக்கில்லாத தூய விசுவாசத்துடன் கைகள் சிவக்கத் தம்மை வருத்தி வாரிக் கொடுத்த பல உள்ளங்களை எனக்குத் தனிப்பட்ட முறையிலேயே தெரியும். பிரபாகரனின் போராளிகளது அர்ப்பணிப்பு மனோபாவத்திற்கு ஈடான அல்லது அதை விடவும் அதிகமான அர்ப்பணிப்பு மனோ நிலையோடும் நிச்சயமாகப் பலர் இருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இறுதியில் எல்லாம் என்னவாகிப் போனது என்பது எல்லோருக்குமான பாடம். சொந்த வீடுகளைக் கூட ஈடாக வைத்து நிதியைக் கொடுத்தவர்களும், வங்கிகளில் சொந்தக் கடன்களைப் பெற்றுத் தானம் வழங்கியவர்களும், அவ்வாறெல்லாம் கொடுத்தவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததும், தற்கொலைகள் புரிந்ததும், மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் அலைந்ததும், குடும்பங்கள் பிரிந்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடையே நடந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் மனநிலை மிகவும் நுட்பமாகப் பார்க்கப்பட வேண்டியது. பிரபாகரன் இறந்துவிட்டமையையே அவர்களுள் பலரால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கின்றது; பொருள், பணம், உழைப்பு, செல்வாக்கு என எல்லாவற்றையும் கொட்டிக் கொடுத்தும் எதையுமே அடைந்துவிடமுடியவில்லை என்ற துயருக்குள்ளும் அவர்களுள் பலர் மூழ்கிப்போயுள்ளார்கள்; இருந்தாலும், ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உள்ளுணர்வு இப்போதும் அவர்களை உந்தித் தள்ளியபடி இருக்கின்றது. இலங்கைக்குள் தமிழர்ளுக்கான அரசியல் இயங்குவெளி நாற்புறமும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் கருதுகின்றார்கள். அதனால், பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில், கட்டுப்பாடற்ற செயற்பாட்டு வல்லமையுடன் இருக்கும் தாங்களே அவர்களது மீட்பர்களாக அவதரித்திருப்பதாக அவர்களுள் பலர் நம்புகின்றார்கள். இவ்வாறான உணர்வுகளின் உந்துதலினால் தங்களது செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்லுகின்றார்கள்.

முதலாவது -- அரசியற் பரப்புரைப் பணிகள்.

மேற்குலக நாடுகளின் அரசாங்கங்களுடனும் அங்குள்ள அரசியற் கட்சிகளுடனும் பரப்புரைகளில் ஈடுபடுவது ஒரு நுட்பமான பணி. இது ராஜதந்திரத் தொடர்பாடல் போன்றது. எவ்வளவுக்கு எவ்வளவு இரகசியத் தன்மை பேணப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அது பயன்களைத் தருவதற்கான வாய்ப்புக்கள் உருவாகலாம். எவ்வளவுக்கு எவ்வளவு விடயங்கள் வெளிப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அது சிறீலங்கா அரசாங்கத்தையே சிங்கள மக்களிடத்தில் பலப்படுத்தும். அதாவது, முன்னைய காலங்களில் பிரபாகரன் காட்டிய மூர்க்கத்தனமான எதிர்ப்பைக் காட்டி எந்த அளவுக்குச் சிங்களவர்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ச தன்னைத் திடப்படுத்திக்கொண்டாரோ, அதே போன்றதான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதே வேளையில், தமது நலன்களுக்காகத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி நகர்த்த முற்படும் நாடுகள் தொடர்பிலும் அவதானம் தேவை. தமிழர் தரப்புக்களால் வெளிநாட்டு அரசாங்கத்தினருக்குச் சொல்லப்படும் செய்திகளும், கொடுக்கப்படும் தகவல்களும், அங்கு எடுக்கப்படும் பரப்பரை நடவடிக்கைகளும் - இலங்கைத் தமிழர்களுக்கு நன்மைகளைக் கொண்டுவருவதற்கே பயன்படுத்தப்படும் என்பதற்கு எவ்வாறான உறுதிப்பாடுகள் உள்ளன…? அதைவிடவும் முக்கியமாக, இலங்கைத் தமிழர்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதற்கு இந்த விடயங்கள் பயன்படுத்தப்படமாட்டா என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உள்ளன…?

மேற்குலகம் ஒர் ஆட்சி மாற்றத்தை விரும்பக் கூடும். அவ்வளவு தான். இந்த நாட்டினைச் சமூக, பொருளாதார, இராணுவ, அரசியல் ரீதியாகத் திடப்படுத்திவிட்டு, ஆட்சியை மாற்றி தமக்கு ஏற்றவர்களிடம் நாட்டைக் கொடுப்பது மட்டும்தான் மேற்குலகத்தின் நோக்கம். தமிழர் தரப்புக்களால் உலகளாவிய ரீதியில் சொல்லப்படும் செய்திகளும், கொடுக்கப்படும் தகவல்களும், எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இலங்கைத் தமிழர்களது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கே நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்பதற்கு எவ்வாறான உறுதிப்பாடுகள் உள்ளன…? அதைவிடவும் முக்கியமாக - வெறுமனே இந்த ஆட்சி மாற்ற முயற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக ஆகிவிடாது என்பதற்கு எவ்வகையான உத்தரவாதங்கள் உள்ளன…?

இங்கே, தமிழ் பேசும் மக்கள் கேட்க வேண்டிய முதற் கேள்வி, மேற்குலகம் சாதிக்க முனைகின்ற இந்த ஆட்சி மாற்றம் நிச்சயமாகச் சாத்தியமாகும் என்பதற்கு எவ்வாறான சாதக நிலைகள் உள்ளன…?

அடுத்த கேள்வி - மாறுகின்ற ஆட்சியில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோரின் உரிமைகளும் இனமானமும் மதிக்கப்படும் என்பதற்கு எவ்வாறான உத்தரவாதங்கள் உள்ளன…?

இப்போது இருக்கின்ற ஆட்சி நிறுவனமயப்படுத்திவிட்டுப் போகும் ஒரு கோட்பாட்டைக் கடந்து (institutionalisation of policy) - இந்த ஆட்சி உருவாக்கிவிட்டுப் போகும் ஒர் அரசியல், இராணுவப் புறச் சூழலைக் கடந்து - இந்த ஆட்சிக் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுவிடும் ஒர் இன மேலாதிக்க மனோ நிலையைத் தாண்டி -- வரப்போகின்ற அரசாங்கம் பெளத்த சிங்களவர்கள் அல்லாதோருக்கு நன்மைகள் செய்யக் கூடிய சாதகங்கள் எவ்வளவு உள்ளன…?

அடுத்தது -- சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கோருகின்ற போராட்டங்கள்.

இது ஒரு சிக்கலான பணி. இந்த நாட்டின் பொருளாதார அடித்தளத்தைத் தளர்வடையச் செய்வதை இலக்காகக் கொண்டு வெளிநாட்டுத் தமிழர்களால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் இருக்கும் முதலாவது சிக்கல் - குறிப்பிட்ட சில நபர்கள் மீதோ அல்லது குடும்பங்கள் மீதோ என்றில்லாமல், ஒட்டுமொத்தமான ஒரு நாட்டின் மீதே பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போது முதலில் தாக்கங்களுக்கு உள்ளாகக் கூடியவர்கள் அந்த நாட்டிலுள்ள மிகவும் நலிந்த மக்கள். இலங்கையைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில், அந்த மிகவும் நலிந்த தரப்பினர் தமிழ் மக்கள் தான். அப்படியிருக்கையில் - தமிழ் மக்கள் மீது தாக்கங்களை ஏற்படுத்தாத வகையில் சிறீலங்கா என்ற நாட்டின் அரசாங்கத்தை மட்டும் பொருளாதார ரீதியாகப் பணிய வைப்பது எவ்வாறு…?

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான இன்னொரு முரண்பாடு என்னவெனில், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சிறீலங்கா அரசாங்கத்தை நாலு பக்கத்தாலும் நெருக்குவதற்குக் காரணங்கள் வேறு; நிச்சயமாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவது அவர்களது நோக்கம் அல்ல. மாறாக - இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, இந்த நாட்டு மக்களின் பொருண்மியத் தேவைகளை நிறைவுபடுத்தி, மீண்டும் ஒரு குழப்பகரமான மனோபாவத்திற்குள் அவர்கள் சென்றுவிடாது சீர்படுத்தி, இந்த நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறுக்கத்தையும் உறுதிப்படுத்தவே அவர்கள் வேலை செய்கின்றார்கள்.

ஐரோப்பிய, ஸ்கன்டினேவிய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகள் செய்வதற்காகப் படையெடுக்கின்றன; திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத உதவியாகவும் மிகக் குறைந்த வட்டி வீதத்திற்கும் பல மில்லியன் டெலர்களை தனியார் துறையின் வியாபார முன்னெடுப்புக்களுக்கு அமெரிக்கா வழங்குகின்றது; அவுஸ்ரேலியா வெளிப்படையாகவே உதவுகின்றது; சீனா தெரிந்தும் தெரியாமலும் அள்ளிக் கொடுக்கின்றது; இந்தியா தெரியாமலும் தெரிந்தும் கொடுக்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா மீது பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கு உலகத் தமிழ் அமைப்புக்கள் வகுக்கும் நுட்பங்களும் திட்டங்களும் அதற்குக் கொடுக்கப்படும் நேரமும் சக்தியும் வளமும் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்…?

மூன்றாவது -- சிறீலங்கா அரசாங்கத்தினருக்கு எதிராக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதிப் போராட்டங்கள்.

குறிப்பாக - தமிழர்கள் பெருவரியாக வாழும் நாடுகளுக்கு மஹிந்த ராஜபக்ச பயணிக்கின்ற போது, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டப் போராட்டங்களைச் செய்து - அவரை ஓடி ஒளிக்க வைத்து - அவரை அவமானப்பட வைத்து - அவரைத் திருப்பி அனுப்புகின்ற செயற்பாடுகள். இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் - ராஜபக்சவைப் பலவீனப்படுத்த எனச் செய்யப்படும் இத்தகைய போராட்டங்கள், உண்மையில், அவரது மக்களிடத்தில் அவரை மிக ஆக்ரோசமாகப் பலப்படுத்துகின்றன என்பதாகும். தன்னுடைய ஆயுதப் போராட்ட காலத்தில், தனது எதிர்ப்பு வீரியத்தை அதிகரித்ததன் மூலம், சிங்கள பௌத்த ஒற்றையினவாதக் கோட்பாட்டைப் பிரபாகரன் எவ்வாறு பலப்படுத்தினாரோ, அதற்கு ஒப்பான ஒரு பலப்படுத்தலையே வெளிநாட்டுத் தமிழர்களின் வெளிப்படையான போராட்டங்கள் ஏற்படுத்துகின்றன. இதன் விளைவு என்னவெனில் - எல்லோரும் விரும்புகின்ற ஆட்சி மாற்றம் நடைபெறாமலே போகலாம்; போர்க் குற்றங்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டாலும், அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மைகளும் விளையாமலே போகலாம்.

சிங்களக் கிராமங்களில் மகிந்த ராஜபக்ச சிங்களத்தில் ஆற்றுகின்ற உரைகளை வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் அறிவதற்கான வாய்ப்பக்களே இல்லை. உள்நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் கேள்விப்படுவதற்கான வாய்ப்புக்களே மிக மிக அரிது. அந்த உரைகள் ஒவ்வொன்றினதும் சாராம்சச் சுருக்கம் இது தான் --

"முப்பது ஆண்டு காலமாக உங்களைக் கொன்றொழித்த பயங்கரவாதிகளை நான் அழித்தேன்; பிரபாகரனை நான் கொன்றேன். இன்று இந்த நாடு அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும் அமைதியையும் நானே பெற்றுத்தந்தேன்; இதற்கு முன்னர் நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைத்த எந்த தலைவரும் செய்யாததை நான் செய்தேன். இதைச் செய்தத்ற்காக என்னை மின்சாரக் கதிரையில் உட்கார வைப்பதற்கு உலகெல்லாம் இருக்கின்ற புலிகளின் ஆட்கள் வெளிநாட்டுச் சக்திகளோடு சேர்ந்து வேலை செய்கின்றார்கள். தமிழ் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து உங்களை விடுவித்ததற்கு வெகுமானமாக, எனக்கு மரண தண்டனையைப் பரிசளிக்க வேண்டும் என்றுதான் நான் போகின்ற நாடுகளிலெல்லாம் தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை நடத்துகின்றார்கள். உங்களுக்காகவே நான் இந்த அவமானங்களைத் தாங்குகின்றேன்; உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன். தூக்கு மேடையில் ஏறவும் நான் தயார். தூக்குக் கயிற்றை எனது கழுத்தில் போட்டுவிட்டு, ஆட்சிக் கதிரையில் தங்களது ஆட்களை அமர்த்த வெளிநாட்டுக்காரர்களும் தமிழர்களும் முயற்சிக்கிறார்கள். உங்களுக்காக சாவைச் சந்திப்பது கூட எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், எனக்கு இருக்கும் ஒரே கவலை, என்னை வீழ்த்திவிட்டுத் தமிழர்களோடு சேர்ந்து ஆட்சியிலே அமரப் போகின்ற ஆட்கள், எங்களது பல்லாயிரம் பிள்ளைகளைகளின் உயிர்களை விலையாகக் கொடுத்து நாம் பெற்றெடுத்த இந்தச் சுதந்திரத்தை வெளிநாட்டுக்காரர்களுக்கு விற்றுவிடப் போகின்றார்கள். உங்களை அவ்வாறான ஒரு நிர்க்கதி நிலையில் விட்டுச் செல்வது மட்டும்தான் எனது கவலை. ஆனால், எனக்குத் தெரியும் - நீங்கள் என்னைக் கைவிட மாட்டீர்கள். நீங்கள் என்னுடைய மக்கள்; நான் உங்களின் சேவகன். நீங்கள் என்னைச் சுற்றிக் கவசமாக எப்போதும் இருப்பீர்கள்… இருப்பீர்களா, இல்லையா?!"

இத்தகைய எரியூட்டும் உரைகளைக் கேட்டதன் பின்பு வருகின்ற தேர்தலில் சிங்கள மக்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல.

மஹிந்த ராஜபக்சவையும் அவரது ஆட்சியையும் வீழ்த்துவதற்கு ஆவேசத்தோடு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவரைப் பலப்படுத்துவதாகவே முடிகின்றதெனின், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் தமது திட்டங்களில் அடிப்படையான தந்திரோபாய மாற்றம் ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

பிரபாகரனின் காலத்தைப் போல, ஒரு வரம்பிற்குள்ளேயே இயங்க வேண்டிய தேவையோ, நிர்ப்பந்தமோ இப்போது இல்லை; எவரையும் மீறாது செயற்பட முடியாது என்ற சூழலும் இல்லை. அதனால் - சுயமாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகளின் வழியாக, புலம்பெயர்ந்த தமிழ் சமூக அமைப்புக்கள், தமக்கென நடைமுறைச் சாத்தியமான தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.

** இந்த கருத்துரை, இலங்கையில், தினக்குரல் ஞாயிறு வாரமலரிலும் பிரசுரமாகியது.

http://www.puthinappalakai.com/view.php?20140706110826

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 08

[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:54 GMT ] [ புதினப் பணிமனை ]

[போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளின் பின்னான தனது எண்ணங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து பகிர்கின்றார் திருச்சிற்றம்பலம் பரந்தாமன். இந்த கட்டுரையாளர், தி. வழுதி என்ற பெயரில் எமது தளத்தில் முன்னர் கருத்துரைகள் வரைந்தவராவார்]

பிரபாகரனின் காலத்தைப் போலவே, அவருக்குப் பின்னான கடந்த ஐந்து ஆண்டுகளிலும் இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில் பல காட்சிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

முன்னேற்றங்களும், முன்னேற்றங்கள் போலத் தென்படுபவையும், பின்னடைவுகளும், பின்னடைவுகள் போலத் தென்படாதவையுமாகக் காட்சிகள் மாறுகின்றன. நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் இந்தக் காட்சிகள் மாறி மாறித் தருகின்றன.

பிரபாகரனின் காலத்தில் அரங்கேறிய ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் நம்பிக்கையின் அடிப்படை இருந்தது. முன்னேற்றங்கள் நிகழ்ந்த போது அவை அந்த நம்பிக்கையை அதிகரித்தன; பின்னடைவுகள் நேர்ந்த பொழுதுகளில், அவற்றால் ஏற்பட்ட அவநம்பிக்கையைக் கீழே தள்ளி அந்த நம்பிக்கை மேவி வந்தது. அந்த நம்பிக்கை, தனிப்பட்ட பிரபாகரன் மீது இருந்த நம்பிக்கை - அவரது செயற்பாடுகளிலிருந்து பிறந்த நம்பிக்கை.

இன்றைய தமிழர் தலைவர்கள் பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் -- ஒரு தடத்தில் போர் நடவடிக்கைகளையும் அரசியல் விவகாரங்களையும் அவர் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்த சம வேளையில், இன்னொரு தடத்தில் மக்களுக்கான பொது நிர்வாக அலுவல்களையும் அவர் சமாந்தரமாக வழிநடத்திச் சென்றார். அரசியல் முன்னெடுப்புக்களும் இராணுவ நடவடிக்கைகளும் மாறி மாறிப் பின்னடைவுகளைச் சந்தித்த பொழுதுகளிலும் தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கான பொதுச் சேவைகளை அவர் நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றார். அரசியல் மற்றும் படைத்துறைப் பின்னடைவுகள் பொது நிர்வாகத்தில் இடையூறுகளை ஏற்படுத்த அவர் இடமளிக்கவில்லை. அத்தகைய அவரது தலைமைத்துவப் பண்பினாலும், செயற்பாட்டு இயல்பினாலும்தான் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையாதிருந்தது. அவரது அரசியல் மற்றும் இராணுவத் தோல்விகள் மக்களின் மனோதிடத்தை அவ்வப்போது தளர்வடையச் செய்த போதும், அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைதான் ஒட்டுமொத்தமான போராட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையாகவும் பரிணமித்திருந்தது.

தற்போது அரங்கேறிவரும் அரசியற் காட்சிகளும் நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் மாறி மாறித் தருவனவாகவே நடந்தேறுகின்றன. ஆனால், அவரது காலத்தைப் போன்று - நம்பிக்கையீனங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை ஊட்டவல்ல செயற்பாடுகள் இப்போது எந்த அளவிற்கு முன்னெடுக்கப்படுகின்றன…?

இன்றைய தமிழர் அரசியல் முதன்மையாக இரண்டு தலைமைகளால், இரண்டு தடங்களில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஒன்று - அரசியல் அதிகார விவகாரத்தைத் தீவிரமாக முன்னிலைப்படுத்தி, அபிவிருத்தி விடயங்களுக்குக் குறைந்தளவு முக்கித்துவத்தைக் கொடுக்கின்றது. அடுத்தது - அபிவிருத்தி விடயங்களையே மும்முரமாக முன்னிலைப்படுத்தி அரசியல் விவகாரங்களை இரண்டாம் பட்சமாக்குகின்றது; ஒன்று - எதிர்ப்பு அரசியல். அடுத்தது - இணைந்த அரசியல்; ஒன்று - சம்பந்தனும் அவரது கட்சியும். அடுத்தது - தேவானந்தாவும் அவரது கட்சியும்.

இந்த இடத்தில்தான் நம்பிக்கைக்கும் நம்பிக்கையீனத்திற்குமான பாத்திரங்கள் வருகின்றன.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கமரூனின் வருகை, மன்மோகன் சிங்கோடு நடந்த சந்திப்புக்கள், இந்தியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், தென்னாபிரிக்க அரசாங்கத்தின் வருகை, ஐ. நா. மனித உரிமைகள் சபையின் அனைத்துலகப் போர் குற்ற விசாரணைகள் போன்றவையெல்லாம் முன்னேற்றங்கள் போலத் தென்படுகின்ற விடயங்கள். இந்த விடயங்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை இணைத்துப் பெருமை கொள்கின்றது. இந்த விடயங்களின் ஊடாக முழுமையான அரசியல் அதிகாரங்களைப் பெற்றெடுத்தாலே, நிலைக்கக்கூடிய பரிபூரணமான சமூக பொருளாதார அபிவிருத்தி சாத்தியமாகும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. இருந்தாலும் - உண்மையில் இவையெல்லாம் தொடக்கத்தில் நம்பிக்கை தருவது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. ஆனால், நடைமுறையில், அவநம்பிக்கையைத் தாங்கிவருகின்ற விடயங்களாகவே இருக்கின்றன. சாதாரண மக்களது அன்றாட வாழ்வின் மேம்பாட்டினில் நேரடியான ஆக்கபூர்வ விளைவுகள் எதனையும் இந்தப் பாதையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் காண முடியவில்லை.

இராணுவத்தை வெளியேற்றுவது போன்றதான அரசியல் முழக்கங்களையும், அரசியல் அதிகாரங்களைப் பெற்றெடுத்தல் போன்றதான அதியுச்ச வாக்குறுதிகளையும், அனைத்துலக சமூகத்தின் திருவிளையாடல்கள் பற்றிய ராஜதந்திர விளக்கங்களையும், போர் குற்ற விசாரணைகள் தொடர்பான நீதிக் கதைகளையும் தமிழ் மக்கள் தாராளமாகக் கேட்டுவிட்டார்கள். ஆனால், அவை எதுவுமே உருப்படியான எவற்றையுமே இற்றைவரை கொண்டுவந்து சேர்க்கவில்லை. அரசியல் அதிகாரங்களே எல்லாவற்றுக்கும் அடிப்படையானவை என்பது புரிகின்ற போதிலும், அவற்றைப் பெற்றெடுப்பது எவ்வாறு சாத்தியமாகப் போகின்றது என்ற கேள்வியே சாதாரண மக்களிடத்தில் மிஞ்சிக் கிடக்கின்றது.

இன்னொரு தடத்தில், தேவானந்தாவும் அவரது கட்சியும் - கிடைத்தததையும், கிடைப்பதையும், கிடைக்கக்கூடியதையும் சேர்த்தெடுத்து, தமிழர்கள் முதலில் தமது இருப்பைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அபிவிருத்திப் பாதையில் பயணிக்கின்றார்கள். அரசியல் அதிகார விடயங்களை ஒர் ஓரத்தில் வைத்துவிட்டு, மக்களுக்கான வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுக்கின்றார்கள். முழுமையான அரசியல் அதிகாரங்கள் இல்லாமையால் மட்டுப்படுத்தப்பட்ட ஒர் அபிவிருத்தியே செய்யப்படுகின்ற போதும் - நம்பிக்கையீனத்திற்கு மத்தியில் இருந்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சி இது என்று சொல்லப்படுகின்றது. இந்தப் பாதையில் மக்கள் விளைவுகளைப் பார்க்கின்றார்கள். ஏதோ ஒரு வகையில், தமது சொந்த மண்ணில், அமைதியாக வாழும் சூழல் உருவாகுவதாக அவர்கள் கருதுகின்றார்கள். அரசியல் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும் - ஒரு நீண்டகாலப் பயனை நோக்குமிடத்து, தேவானந்தா முன்னெடுத்துச் செல்லும் அரசியல்தான் பொருத்தமானதோ என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகின்றது.

பிரபாகரனின் காலத்தில் தேவானந்தாவும் அவரது கட்சியும் மறுபக்கத்தில் இருந்தனர்; மறுபக்கத்தில் இருந்ததால் துரோக முத்திரையையும் சுமந்தனர். முன்பொரு காலத்தில் துரோக முத்திரை குத்தப்பட்டிருந்த பலர் இப்போது கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கிறர்கள். பிரபாகரனின் காலம் போன்று இப்போது இரண்டு பக்கங்கள் இல்லை. தமிழ் பேசும் தலைமைகள் எல்லோருமே இலங்கை என்ற ஒற்றை நாட்டுக்குள் தான் தீர்வைத் தேடுகின்றார்கள். எல்லோரும் ஒரே கொள்கையோடு இருக்கின்ற போது, அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளை வைத்து அல்லாமல், அவர்கள் முன்னெடுக்கும் சேவைகளை வைத்தே அவர்கள் மீதான மக்களின் மதிப்புகள் தீர்மானிக்கப்படும். மக்கள் விளைவுகளைப் பார்க்கவே விரும்புகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குப் பலம் இருக்கின்றது. அந்தப் பலம் எத்தகையது எனில் - எவ்வளவு ஆழமான அதிருப்திகள் இருப்பினும் தேர்தல் வருகின்ற போது தமிழ் மக்கள் தமக்கே வாக்களிப்பார்கள் என்ற தைரியத்தினால் வந்த பலம். இன்னொரு வகையில் இதனைச் சொல்லுவதானால் - தமக்குரிய கடமைகளை முழுமையாகச் செய்யாதுவிடினும் கூட, அடுத்த தேர்தலில் தாம் வென்றுவிடுவோம் என்ற அசட்டுத் துணிச்சலோடு வந்த பலம்.

இது, ஏறக்குறைய, பிரபாகரனிடமிருந்த ஆயுத பலத்தைப் போன்றது. அந்தப் பலம் எத்தகையது எனில், என்னதான் அதிருப்திகள் இருந்தாலும் மக்கள் தனக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும் - அவர்களுக்கு வேறு வழியில்லை - என்ற தைரியத்தினால் வந்த பலம். இன்னொரு வகையில் சொல்லுவதானால் - மக்களுக்கான எந்தவித பொதுச் சேவைகளையும் முன்னெடுக்காது, வெறுமனே ஆயுதப் போராட்டத்தை மட்டும் நடத்திக்கொண்டிருந்தாலும் கூட, மக்கள் தனக்குப் பின்னாலேயே நிற்பார்கள் என்ற அசட்டுத் திமிரோடு வந்த பலம்.

ஆனால், இங்கே வேறுபாடு என்னவெனில் - எது நடந்தாலும் மக்கள் தனக்குப் பின்னாலேயே நிற்பார்கள் என்பது திடமான நிச்சயம் ஆகிவிட்டிருந்த போதும், மாறிவிடமாட்டாத ஒரு தெய்வீக வரம் போல அதனைக் கருதிவிடாமல், மக்களுக்கான சேவைகளைப் பிரபாகரன் விரிவாக்கியபடியே இருந்தார். கடுமையான போரும் அரசியல் நெருக்கடிகளும் தன்னை நாற்புறத்தாலும் நெருக்கிய பொழுதுகளில் கூட, பொதுச் சேவைகளுக்கு இடையூறுகள் நேர அவர் விடவில்லை. இந்தக் கருத்துரைத் தொடரின் நான்காவது பாகத்தில் நான் குறிப்பிட்டது போல - பிரபாகரனின் காலம் என்பது - யார் விரும்பாவிட்டாலும், எவர் நிராகரித்தாலும் - அன்று அவர் செய்த காரியங்களை இன்று செய்ய முனைவோரின் செயற்திறனை மதிப்பீடு செய்வதற்கான அளவீட்டு அலகாகவே இப்போது ஆகியிருக்கின்றது. அந்த அளவீட்டு அலகில் இன்றைய தலைவர்கள் பெறும் புள்ளிகள் எத்தனை…?

அதே சமயத்தில் - வெளிநாடுகளில் இருந்தபடி, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலத்தை எழுத முனைகின்ற தமிழ் செயற்பாட்டாளர்களும், தாங்கள் ஆற்றுகின்ற பணிகள் தொடர்பாக மீளச் சிந்திக்க வேண்டும். நம்பிக்கையீனத்திற்கு மத்தியில் நம்பிக்கையினையூட்டி மக்கள் இந்த மண்ணில் நிலைத்து வாழத்தக்க சூழலை ஏற்படுத்த உருப்படியாக எதைச் செய்ய முடியும் என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்க வேண்டும். பிரபாகரனின் வழித்தோன்றல்களாகத் தம்மை அடையாளப்படுத்த முனைவோர்கள் முதன்மையாக விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவெனில் -- அவரது பணிகளைத் தொடர்வதென்பது நிச்சயமாகப் புலிக்கொடிகளை எந்தியபடி மேற்குலக நகரங்களில் முழக்கங்களை எழுப்புவது அல்ல. எந்த மக்களுக்காக இத்தகைய போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அந்த மக்களுக்கு அந்தப் போராட்டங்கள் நன்மைகள் எதனையும் தரவில்லை. பிரபாகரனின் அரசியற் கோட்பாட்டை வலுப்படுத்த விரும்புகின்றவர்கள் செய்யவேண்டியது என்னவெனில் - சொந்த மண்ணை விட்டு விலகாமல் மக்கள் இங்கேயே காலூன்றி நிற்பதற்கேற்ற சமூக, பொருளாதாரச் சூழலை இங்கே உருவாக்கப் பாடுபட வேண்டும்.

தமிழர் நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாக மேற்குலகில் குரல் எழுப்புகின்ற தமிழ் ஆர்வலர்கள் உணர வேண்டியது என்னவெனில், மேற்குலகத்திற்கு அது ஒரு பிரச்சனை அல்ல. செறிவான சனத்தொகை உடைய இறுக்கமான பிரதேசங்களிலிருந்து - வேலை வாய்ப்புக் கிடைக்கின்ற அல்லது வாழ்க்கைச் செலவு குறைவான பிரதேசங்களுக்கு மக்கள் நகர்ந்து செல்வது ஒர் இயல்பான விடயம் என்றே மேற்குலகில் கருதப்படும். இலங்கைத் தமிழர் தாயகத்தில் நிலவுகின்ற நில ஆக்கிரமிப்புப் பிரச்சனைக்குத் தீர்வு என்னவெனில் - அரசியல் பிரச்சனைகளைக் காரணம் காட்டி இந்த மண்ணிலிருந்து மக்கள் தொடர்ந்தும் வெளியேறுவது நிறுத்தப்பட வேண்டும். தேவையான பொருளாதார நிறைவுகளுடன் மக்கள் இங்கு வாழும் புறச்சூழல் உருவாக்கப்பட வேண்டும். மக்களின் நிலங்களை அரசாங்கம் பலவந்தமாகப் பறித்தெடுக்கின்ற பிரச்சனை ஒருபுறம் இருக்க - மக்கள் வாழாத வெற்று நிலங்களில் அரசாங்கம் யாராவது மக்களைக் கொண்டுவந்து குடியேற்றினால், அதனை ஒரு பிரச்சனையாக எவரும் மேற்புலகத்தின் முன் வைத்தால், அதனை அவர்கள் ஒரு பொருட்டாக எடுக்கப்போவதில்லை.

அனைத்து அரசியல் அதிகார அபிலாசைகளுக்கும் அடிப்படையானது நிலம். நிலம் காக்கப்பட வேண்டும் எனில் மக்கள் அங்கு வாழ வேண்டும். மக்கள் அங்கு வாழ வேண்டுமெனில், அதற்கேற்ற சமூக, பொருளாதாரச் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழினம் ஒரு வளர்ந்துவரும் சமூகம்; எல்லா வகையிலும் வளர்ந்து வரும் சமூகம். நீண்ட போரின் அழிவுகளிலிருந்தும், போர்க்கால மனோநிலையிலிருந்தும் மீண்டு வருகின்ற சமூகம். அடுத்தவர்களில் சார்ந்து நிற்காமல், தன்னைத் தானே தாங்கி நிற்கக் கூடிய பொருளாதார வலுவைப் பெற்றுக்கொள்வதற்காகத் தமிழ் சமூகம் தன்னை வருத்திப் போராடிக்கொண்டிருக்கின்றது. மகத்தான மானிடப் பண்புகளுடனும், மனிதத் தகமைகளுடனும், தனது பண்பாட்டுத் தனித்துவங்களை விட்டுக்கொடுக்காமல் தலை நிமிர்வதற்காகத் திணறிக்கொண்டிருக்கின்றது. இந்தச் சமூகத்திற்கு உதவிகள் தேவை -- தனியே நிதி உதவி மட்டுமல்ல, எல்லா வகையான உதவிகளும் தேவை. அறிவை விருத்தி செய்யவும், சிந்தனையைப் பரவலாக்கவும் உதவிகள் தேவை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அதற்கு கைகொடுத்தாலே, தமிழ் சமூகம் இந்த மண்ணில் நிலைத்துத் தலைநிமிரும். அப்போது தான் நிலம் பாதுகாக்கப்படும். அப்போது தான், தமிழர்களது அரசியற் கோரிக்கைகள் வலுப்பெறும்.

வெளிநாடுகளில் வாழுகின்ற கணிசமான தமிழர்கள் அரசியல் விடயங்களில் தமது ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்பதும் உண்மை தான். பிரபாகரனின் காலத்திலேயே பலர் ஆர்வமற்றவர்களாகவே இருந்த போதும், அவரது காலத்தில் மும்முரமாக இருந்தவர்களில் ஏராளமானவர்கள் கூட இப்போது இருந்த ஆர்வத்தையும் இழந்துவிட்டார்கள். பிரபாகரனுக்குப் பின்னான காலத்தில், நம்பிக்கையீனத்திற்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான விடயங்கள் இந்த மண்ணிலிருந்து அவர்களுக்குப் போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் விடயங்களில் அவர்கள் ஆர்வமற்று இருப்பது, தமது சமூகத்தின் மீதே அக்கறையற்று இருக்கின்றார்கள் என்று அர்த்தம் அல்ல. தமது சமூகத்தை, தமது ஊர்களை, தமது உறவுகளை, தமது பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் தளைத்தோங்க வைக்கும் விருப்பு அவர்களுக்குள் நிறைந்து கிடக்கின்றது. ஆனால், அவற்றைச் செய்வதற்கான தெளிவான வழிகள் தான் அவர்களுக்குத் தெரியவில்லை. முன்னர் அத்தகைய வழிகளைப் பிரபாகரன் ஏற்படுத்திக் கொடுத்தார். இப்போது அத்தகைய வழிகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது யார்…?

இந்த மண்ணில் தனது பணிகளை முன்னெடுப்பதற்குப் போதிய நிதியை மத்திய அரசாங்கம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை வடக்கு மாகாண சபை முன்வைக்கின்ற அதே வேளையில், இந்த மண்ணில் முதலீடுகளைச் செய்யவும், தமது சமூகத்தை முன்னேற்றவும் ஆர்வத்துடனும் தயாராகவும் வெளிநாட்டுத் தமிழர்கள் பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களது முயற்சிகளுக்கான அனுசரணைகளை வடக்கு மாகாண சபை ஒழுங்கமைத்துக் கொடுக்கமுடியும்.

மத்திய அரசாங்கத்தோடு பங்காளியாக இருப்பதால் அரசியல் அதிகார விடயங்களில் கடும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதில் தேவானந்தாவின் கட்சிக்குச் சங்கடங்கள் இருக்கலாம் - அது புரிந்துகொள்ளத்தக்கது. அபிவிருத்தி விடயங்களில் அரசோடு இணைவது அரசியல் அதிகாரத்திற்கான வற்புறுத்தல்களை மழுங்கடித்துவிடும் என்ற சங்கடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கலாம் - அதுவும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், ஒருங்கிணைய முடியாதுவிட்டாலும் கூட, தமிழ் மக்களின் தலைமைகளாக இரண்டு தடங்களில் பயணிக்கின்ற இந்த இரண்டு தரப்பினரும் ஒர் ஒத்திசைவோடு இயங்கலாம். ஒற்றை மனிதனாக இருந்து எவ்வாறு பிரபாகரன் நம்பிக்கையை விதைத்தும், நம்பிக்கையீனத்தைத் துடைத்தும் மாறி மாறிக் காரியங்களை நகர்த்தினாரோ, அதை இப்போதைய தமிழ் தலைமைகள் இரண்டும் சமமாகவும் சமாந்தரமாகவும் செய்ய முடியும். அரசியல் அதிகாரத்திற்கான நகர்வுகளில் பின்னடைவு நேர்கையில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்தியும், அபிவிருத்தி விவகாரத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்ற போது அரசியல் அதிகாரக் கோரிக்கைகளைத் தீவிரப்படுத்தியும் செயற்படமுடியும். இவ்வாறான ஒர் ஒத்திசைந்த செயற்பாட்டிற்கான முன்னுதாரண இயங்கு களமாக வடக்கு மாகாண சபை விளங்க முடியும்.

ஏனெனில் - ஆளும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பில் தேவானந்தாவின் கட்சியும் இருக்கின்ற நிலையானது, மூன்றாம் தரப்பின் இடையூறுகள் இன்றி, முடிந்தால் அங்கஜன் ராமநாதனின் ஒத்துழைப்புகளையும் பெற்று - தமிழர்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான பெரும் வாய்ப்பை வடக்கு மாகாண சபை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கெனவே - மாகாண அமைச்சர்களின் பணிகளை இலகுபடுத்தத் தன்னாலான உதவிகளை அங்கஜன் வழங்குவதான தகவல்களும் உண்டு.

இவ்வாறாக --

சட்டச் சிக்கல்கள் இருந்தாலும், புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பங்களிப்பைப் பெறக்கூடிய நம்பகத்தன்மையான ஒரு பொறிமுறையை உருவாக்கியும்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பை_யும் பெறுவதற்கேற்ற ஒரு வேலைத்திட்டத்தை வரைந்தெடுத்தும் -- தமிழ் மக்களின் சமூக, பொருளாதார வாழ்வின் உயர்விற்கான உருப்படியான பணிகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் - 'ஒரு சாதாரண மாகாண சபை இப்படியெல்லாம் கூடச் செயற்படமுடியும்' என்ற ஒரு முன்னதாரணமாக வடக்கு மாகாண சபை திகழ முடியும். அத்தகைய ஒரு முன்னுதாரணம், கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் வருகின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி தமிழ் பேசும் மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடும்.

http://www.puthinappalakai.com/view.php?20140721110924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 08

[ திங்கட்கிழமை, 21 யூலை 2014, 06:54 GMT ] [ புதினப் பணிமனை ]

பிரபாகரனின் காலத்தில் அரங்கேறிய ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் நம்பிக்கையின் அடிப்படை இருந்தது. முன்னேற்றங்கள் நிகழ்ந்த போது அவை அந்த நம்பிக்கையை அதிகரித்தன; பின்னடைவுகள் நேர்ந்த பொழுதுகளில், அவற்றால் ஏற்பட்ட அவநம்பிக்கையைக் கீழே தள்ளி அந்த நம்பிக்கை மேவி வந்தது. அந்த நம்பிக்கை, தனிப்பட்ட பிரபாகரன் மீது இருந்த நம்பிக்கை - அவரது செயற்பாடுகளிலிருந்து பிறந்த நம்பிக்கை.

இன்றைய தமிழர் தலைவர்கள் பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் -- ஒரு தடத்தில் போர் நடவடிக்கைகளையும் அரசியல் விவகாரங்களையும் அவர் முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்த சம வேளையில், இன்னொரு தடத்தில் மக்களுக்கான பொது நிர்வாக அலுவல்களையும் அவர் சமாந்தரமாக வழிநடத்திச் சென்றார். அரசியல் முன்னெடுப்புக்களும் இராணுவ நடவடிக்கைகளும் மாறி மாறிப் பின்னடைவுகளைச் சந்தித்த பொழுதுகளிலும் தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கான பொதுச் சேவைகளை அவர் நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றார். அரசியல் மற்றும் படைத்துறைப் பின்னடைவுகள் பொது நிர்வாகத்தில் இடையூறுகளை ஏற்படுத்த அவர் இடமளிக்கவில்லை. அத்தகைய அவரது தலைமைத்துவப் பண்பினாலும், செயற்பாட்டு இயல்பினாலும்தான் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையாதிருந்தது. அவரது அரசியல் மற்றும் இராணுவத் தோல்விகள் மக்களின் மனோதிடத்தை அவ்வப்போது தளர்வடையச் செய்த போதும், அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைதான் ஒட்டுமொத்தமான போராட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையாகவும் பரிணமித்திருந்தது.

ஆனால், இங்கே வேறுபாடு என்னவெனில் - எது நடந்தாலும் மக்கள் தனக்குப் பின்னாலேயே நிற்பார்கள் என்பது திடமான நிச்சயம் ஆகிவிட்டிருந்த போதும், மாறிவிடமாட்டாத ஒரு தெய்வீக வரம் போல அதனைக் கருதிவிடாமல், மக்களுக்கான சேவைகளைப் பிரபாகரன் விரிவாக்கியபடியே இருந்தார். கடுமையான போரும் அரசியல் நெருக்கடிகளும் தன்னை நாற்புறத்தாலும் நெருக்கிய பொழுதுகளில் கூட, பொதுச் சேவைகளுக்கு இடையூறுகள் நேர அவர் விடவில்லை. இந்தக் கருத்துரைத் தொடரின் நான்காவது பாகத்தில் நான் குறிப்பிட்டது போல - பிரபாகரனின் காலம் என்பது - யார் விரும்பாவிட்டாலும், எவர் நிராகரித்தாலும் - அன்று அவர் செய்த காரியங்களை இன்று செய்ய முனைவோரின் செயற்திறனை மதிப்பீடு செய்வதற்கான அளவீட்டு அலகாகவே இப்போது ஆகியிருக்கின்றது. அந்த அளவீட்டு அலகில் இன்றைய தலைவர்கள் பெறும் புள்ளிகள் எத்தனை…?

 

 

நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரித்த சடைமுடி தொடுத்து முடிக்குமுன் எடுத்த  சபதம் முடித்தவளே    
    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.