Jump to content

பந்தயம்


Recommended Posts

ஆன்டன் செகாவ் 'பந்தயம்'

மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ்.

எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது.

பந்தயம்

பனி பொழியும் ஓர் இரவில் தனது படிப்பறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார் அந்த வங்கி அதிபர். 15 ஆண்டுகளுக்கு முன் இதே போன்றதொரு நாளின் பொன் மாலைப் பொழுதில் அவர் அளித்த விருந்தில் நடந்த சம்பவம் மனதில் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த அறிவிற் சிறந்த இளைஞர்களுடன் ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் நடந்தது. பல விஷயங்களைப் பேசிய அவர்கள் ஒரு கட்டத்தில் மரண தண்டனை குறித்தும் தங்களது உரையாடலில் விவாதித்தனர்.

விருந்துக்கு வந்திருந்த பெரும்பாலானோரில் பத்திரிகையாளர்களும், மெத்தப் படித்த கனவான்களும் மரண தண்டனை அளிப்பதை நிராகரித்தனர். இம்மாதிரியான தண்டனை நீதி நெறியற்றது, காலத்திற்கு ஒவ்வாதது, பழம் பஞ்சாங்கம், ஒரு கிறிஸ்தவ நாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்று வாதிட்டார்கள். இன்னும் சிலரோ, எங்கெல்லாம் மரண தண்டனை விதிக்க இடமிருக்கிறதோ அங்கெல்லாம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசப்பட்டார்கள்.

'உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றார் அந்த வங்கியாளர். 'ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ இதுவரை நான் அடைந்ததில்லை. ஆனால் ஒரு நீதிபதியின் இடத்தில் இருந்து பார்த்தால் ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே மிகவும் அறம் சார்ந்தது, நீதி நெறிமிக்கது. மரண தண்டனை ஒருவனை உடனடியாகக் கொல்கிறது. ஆனால் ஆயுள் தண்டனையோ கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. ஒரு மனுஷனை சில நிமிஷத்தில் கொல்வது நல்லதா அல்லது சிறிது சிறிதாக வாழ்க்கை முழுவதும் சாகடிக்கிறது நல்லதா. இதில் எது மனித நேயம் மிக்கது?'

'இரண்டுமே நீதியற்றது, மனித நேயமில்லாதது' என்றார் ஒரு விருந்தினர். இரண்டு தண்டனைகளின் நோக்கமும் வாழ்வை ஒருவனிடம் இருந்து எடுத்துக் கொள்வதுதான். அரசாங்கம் என்பது கடவுள் அல்ல. அரசாங்கத்தால் ஓர் உயிரைக் கொடுக்க முடியுமா. நிச்சயமா முடியாது. அதனால அதுக்கு ஓர் உயிரை எடுக்கிற உரிமையும் இல்லை' என்றார்.

வந்திருந்த விருந்தினர்களில் ஓர் இளம் வழக்கறிஞரைப் பார்த்து அவரது கருத்து என்ன என்று கேட்டோம்.

'இரண்டுமே மனித நேயமற்றது. ஆனால் ஆயுளா அல்லது மரணமா என்று கேட்டால் நான் ஆயுள் தண்டனையையே தேர்வு செய்வேன். ஏன்னா, சாகறத விட எப்படியாவது உயிரோட இருக்கிறது நல்லது தானே' என்றார்.

விவாதம் உச்சத்தை அடைந்தது. அப்போது வங்கி அதிபர் மிக இள வயதினராக இருந்ததால் பெரும் மன எழுச்சி கொண்டு உணர்ச்சி வேகத்தில் இருந்தார்.

'இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்களால் தனிமைச் சிறையில் ஒரு 5 வருஷங்கள் கூட இருக்க முடியாதுங்கிறேன். பாக்கலாமா? என்ன பந்தயம்? 2 மில்லியன் ரூபிள் பந்தயம். ஓகேவா?' உணர்ச்சி வேகத்தில் டேபிளை ஓங்கித் தட்டினார் வங்கி அதிபர்.

'நீங்க நிஜமாத்தான் சொல்றீங்கன்னா, உங்க பந்தயத்துக்கு நான் தயார். ஆனால் 5 வருஷமில்ல 15 வருஷத்துக்கு நான் ரெடி' என்றார் இளம் வழக்கறிஞர்.

'15 வருஷமா...அப்படின்னா நானும் ரெடி. ஜென்டில்மென் இதோ 2 மில்லியன் கொடுக்க நான் ரெடி' இப்போதே வெற்றி பெற்றது போல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார் அதிபர்.

'ஒப்புக்கிறேன். நீங்க உங்க மில்லியனை பந்தயம் கட்டுங்க. நான் என் சுதந்திரத்தை பந்தயமா கட்டுறேன்' வக்கீலும் ஆவேசமானார்.

இந்த முட்டாள்தனமான பந்தயம் துவங்கியது. மில்லியன் ரூபிள்களை எடுத்து வைத்த வங்கி அதிபர் இரவு விருந்தின் போது அந்த இளம் வழக்கறிஞரை சீண்டினார்.

'இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நல்லா யோசிச்சு முடிவு செய்யுங்க தம்பி. எனக்கு 2 மில்லியன் ரூபிள் சும்மா... ஒன்னுமே இல்லை. ஆனா உங்களுக்கு வாழ்க்கையோட 3, 4 சிறந்த வருஷங்கள் வீணாப் போயிரும். நான் மூனு நாலுன்னு ஏன் சொல்றேன்னா அதுக்கு மேல உங்களால தனிமை சிறையில இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதனால அப்படி சொல்றேன். அதே மாதிரி கட்டாயமா சிறைக்குள்ள இருக்கிறது வேற. நீங்களே விரும்பி தனிமைச் சிறைக்குள்ள அடைஞ்சுக்கிறது வேறங்கிறது புரிஞ்சுக்குங்க தம்பி. அது ரொம்ப கஷ்டமானது. எந்த நிமிஷத்திலாவது நீங்க சிறையிலிருந்து வெளிய போயிருவோம்டா சாமீ என்று நினைத்தாலும் மொத்த சிறைக் காலமும் உங்களுக்கு ரொம்ப வேதனை தருவதாக மாறிடும். ஞாபகம் வச்சுக்குங்க. பாவம் நீங்க' என்றார் அதிபர்.

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வங்கி அதிபர் நினைத்துக் கொண்டார். 'இந்தப் பந்தயத்தின் நோக்கம் என்ன? அந்த மனுஷன் 15 வருஷத்தை இழப்பதும், நான் 2 மில்லியனைத் தூக்கி வீசுவதும் எதற்காக? மரண தண்டனையை விட ஆயுள் தண்டனை நல்லது என்பதை இந்தப் பந்தயம் நிரூபிக்குமா? இல்லை. இது எல்லாமே அர்த்தமற்றது. முட்டாள்தனம். எனக்கு ஒரு இளைஞனின் வாழ்க்கையில் விளையாடக் கிடைத்த சந்தர்ப்பம். அவனுக்கு கஷ்டப்படாமல் கிடைக்கும் பணத்தின் மீது பேராசை. அதுதான் இதுக்கு எல்லாம் அர்த்தம்.'

அவரது சிந்தனை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் ஊடாடிக் கொண்டிருந்தது. அந்த மாலைப் பொழுதில் நடந்தவை நினைவிலிருந்து தூசி போல உதிர்ந்தன.

வங்கியாளரின் தோட்டத்தில் உள்ள பங்களாவில் கண்காணிப்பு நிறைந்த ஓர் அறையில் அந்த இளைஞர் தனது சிறைவாசத்தை துவங்குவது என முடிவு செய்யப்பட்டது. 15 வருடங்களுக்கு எந்த மனிதரையும் பார்க்கக் கூடாது, மனிதக் குரல்களைக் கேட்கக் கூடாது, வெளியிலிருந்து எந்த கடிதமும் பெறவோ, செய்தித் தாளோ படிக்கக் கூடாது என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டது. ஆனால் குடிக்கலாம், புகைக்கலாம், புத்தகம் படிக்கலாம், கடிதம் எழுதலாம், இசைக் கருவி வாசிக்கலாம். வெளியுலகுடன் அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரே தொடர்பு சிறிய சாளரம் மட்டுமே. அது பந்தயத்தின் விதிமுறை. அவருக்குத் தேவையான மது, சுருட்டு, புத்தகம், இசைத்தட்டு என்று எதையும் ஒரு சிறிய சீட்டில் எழுதி அனுப்பலாம். அவற்றை அந்த சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே பெற முடியும்.

அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு வரியும் மிக நுணுக்கமாக எழுதப்பட்டிருந்தது. நவம்பர் 14, 1870- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்குத் துவங்கி நவம்பர் 14, 1885- ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு கடுங்காவல் மிகுந்த தனிமைச் சிறைவாசம் முடிகிறது. இந்த விதிமுறைகளை மீறுவதற்கு அந்த இளைஞர் செய்யும் மிகச் சிறிய முயற்சி கூட பந்தயத்தில் தோல்வியடைந்ததைக் குறிக்கும். கடைசி நாளில் கடைசி 2 நிமிடங்கள் இருக்கும் போது கூட அவர் விதியை மீறினால் வங்கியாளருக்கு 2 மில்லியன் ரூபிள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதும் ஒரு விதி.

சிறைவாசத்தின் முதலாண்டில், தனிமையும் மன அழுத்தமும் அந்த இளைஞரை வாட்டி வதைக்கின்றன என்பதை அவர் எழுதி அனுப்பிய சிறு குறிப்புகள் மூலம் உணர்ந்தேன். அவரது அறையிலிருந்து பியானோவின் இசையொலி இரவும் பகலும் கேட்டுக் கொண்டே இருந்தது. புகையிலையையும், ஒயினையும் அவர் மறுத்துவிட்டார். ஒயின் ஆசையை அதிகரிக்கிறது. ஆசையே ஒரு கைதிக்கு மிகப் பெரும் துன்பமிழைக்கும் எதிரி. குடிப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதையும் விட மிகத் துன்பமான செயல் இல்லை. சுருட்டுப் பிடித்தால் அந்த அறையில் எழும் புகையால் காற்று மாசடைந்துவிடும். அதனால் அதுவும் வேண்டாம் என்று அந்த இளைஞர் ஒதுக்கினார். முதல் வருடத்தில் எளிமையான காதல் கதைகள் கொண்ட நாவல்கள், புத்தகங்கள், வீரதீர சாகசக் கதைகள் கொண்ட புத்தகங்களைப் படித்தார்.

இரண்டாம் ஆண்டில் அந்த அறையிலிருந்த பியானோ அமைதியாக இருந்தது. அந்த சிறைவாசி தனக்கு செவ்வியல் இலக்கியங்கள் வேண்டும் என்று கேட்டுப் பெற்றார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஐந்தாவது வருடத்தில் அந்த அறையில் மீண்டும் பியானோ இசைத்தது. குடிப்பதற்கு ஒயின் பெற்றுக் கொண்டார். அவரைப் பற்றி அறிந்தவர்கள், அந்த இளைஞர் அறையில் எந்நேரமும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் என்றும், சாப்பிடுவது, தூங்குவது, குடித்துக் கொண்டு, கோபமாக தனக்குத் தானே கத்திக் கொண்டும் இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. இரவு முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் விடிகாலையில் அவற்றைக் கிழிந்து எறிந்தார். ஓரிருமுறை அவர் அழுததும் கேட்டது.

ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில் அந்த இளைஞர் புதிய மொழிகளையும், தத்துவம், வரலாறு ஆகியவற்றையும் வெறி கொண்டது போலப் படிக்கத் தொடங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 புத்தகங்களை அவர் படித்து முடித்தார். வங்கி அதிபர் தேடித் தேடி அந்தப் புத்தகங்களை அவருக்காக வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கால கட்டத்தில் வங்கியாளருக்கு ஒரு கடித்தத்தை சிறைவாசி அனுப்பினார்.

'மை டியர் ஜெயிலர், நான் இந்தக் கடிதத்தை ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அந்த மொழிகளைத் தெரிந்தவர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். அதில் ஒரு பிழை கூட இல்லையென்றால் உங்கள் தோட்டத்தில் நின்று வானை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுடுங்கள். அதன் மூலம் நான் எழுதியது சரிதான் என்றும் எனது உழைப்பு வீணாகவில்லை என்றும் அறிந்து கொள்வேன். வரலாற்றின் பக்கங்களில் வாழ்ந்த எந்தவொரு அறிவாளியும் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருக்கிறார்கள். அவற்றை நான் புரிந்துகொள்ளும் போது எனது ஆன்மா எவ்வளவு ஆனந்தம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.'

சிறைவாசியின் ஆசை நிறைவேற்றப்பட்டது. வங்கி அதிபர் தோட்டத்தில் இருமுறை சுட உத்தரவிட்டார்.

பத்தாம் ஆண்டில் அவர் ஓரிடத்தில் அமர்ந்து நற்செய்தியை (Gospel) மட்டுமே படித்துக் கொண்டிருந்தார். ஒரு சில வருடங்களில் 600 புத்தகம் படித்த ஒருவர் ஓராண்டை அமைதியாகக் கழித்தது வியப்பாக இருந்தது வங்கி அதிபருக்கு. அதற்குப் பின் இறையியலும், மதங்களின் வரலாறும் பற்றிய புத்தகங்களைப் படித்தார்.

கடைசி இரண்டு வருடங்களில் ஏராளமான நூல்களை வகை தொகை இல்லாமல் வாசித்தார். ஒரு சமயம் இயற்கை அறிவியல் நூல்களை வாசித்தவர், சில சமயம் பைரன், ஷேக்ஸ்பியர் நூல்களை கேட்டார். வேதியியல், மருத்துவம், நாவல், தத்துவம், இறையியல் ஆகிய நூல்களை வாசித்து தீர்த்தார். கடலில் உடைந்து போன கப்பலில் இருந்து சிதறிய கட்டைகளை ஒவ்வொன்றாய் பிடித்து உயிர் தப்ப நினைக்கும் ஒரு மனிதனைப் போல புத்தகங்களை படித்துக் கொண்டே இருந்தார் அந்த தனிமை சிறை இளைஞர்.

நினைவுகளினூடே மிதந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்றார். நாளை 12 மணிக்கு அந்த இளைஞன் தனது சுதந்திரத்தை பெற்று விடுவான். ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் ரூபில்களை கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுத்தால் அதோடு நான் திவால் தான். எல்லாம் அதோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரிடம் எண்ணி முடிக்க முடியாத அளவு பணம் இருந்தது. ஆனால் இன்று, கடன் அதிகமா சொத்து அதிகமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பக் கூட அவருக்கு அச்சமாக இருந்தது. வெறித்தனமாக பங்குச் சந்தையில் சூதாட்டம் போல ஈடுபட்டதும், கண்மூடித்தனமான ஊக வணிகத்தில் இருந்து வெளியே வரக்கூட முடியாத சூழலும் அவருடைய சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்தன. பெருமை கொண்ட நெஞ்சமும், அச்சமின்மையும், தன்னம்பிக்கையும் கொண்ட வங்கியாளர் தனது முதலீடுகள் ஒவ்வொரு முறை ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் நடுக்கம் அடைந்தார்.

"நாசமாய் போன பந்தயம்..." என்று மனம் தளர்ந்து தலையில் கை வைத்து அமர்ந்தார் அந்த வயோதிகர். "அந்த இளைஞன் ஏன் சாகவில்லை?. அவனுக்கு நாற்பது வயதுதான் ஆகிறது. என்னிடமிருக்கும் கடைசி பணம் வரை அவன் வாங்கிக் கொண்டு, நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்வான். வாழ்க்கையை அனுபவிப்பான். பங்கு சந்தையில் விளையாடுவான். அதே நேரம் நான் அவனை பொறாமையோடு ஒரு பிச்சைக்காரனை போல பார்த்துக் கொண்டிருப்பேன். 'எனது வாழ்வின் மாபெரும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். நான் உங்களுக்கு உதவட்டுமா' என்று என்னை பார்த்து ஒவ்வொரு நாளும் அவன் கேட்பான். அய்யோ இது நடக்கக் கூடாது. அவமானத்திலிருந்தும் திவால் ஆவதில் இருந்தும் நான் தப்பிக்க இருக்கும் ஒரே வழி அந்த இளைஞனின் மரணம் தான்."

மணி மூன்றடித்தது. அந்த வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தனர். வெளியே பனிக் காற்றுக்கு மரங்களின் அசைவோசை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. பதினைத்து ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த சாவியை சத்தமில்லாமல் எடுத்து தந்து கோட் பாக்கட்டில் வைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் வங்கியாளர்.

தோட்டத்தில் கும்மிருட்டும் குளிரும் ஒரு சேர இருந்தது. தோட்டத்தை நோக்கி ஊளையுடன் வந்த காற்று மரங்களை ஓய்வு எடுக்க விடாமல் அசைத்துக் கொண்டிருந்தது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தபோதும் தோட்டத்தில் இருந்த வெள்ளை நிற சிலையோ, மரங்களோ, விடுதியோ, சிறை வாசியின் இருப்பிடமோ கண்களுக்குப் புலப்படவில்லை வங்கி அதிபருக்கு. அந்தக்கட்டடத்தின் அருகே சென்று இருமுறை குரல் எழுப்பியும் காவலாளி எந்த பதிலும் அளிக்கவில்லை. அடிக்கும் குளிரில் இந்தக் கட்டடத்தின் சமையலறையிலோ அல்லது ஏதோவொரு மூலையிலோ காவலாளி உறங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டார்.

'எனது திட்டத்தை செயல்படுத்தினால் முதலில் காவலாளி மீதுதான் சந்தேகம் எழும்' என்று நினைத்துக் கொண்டார் அந்த வயோதிகர்.

அந்த இருளில் தட்டுத் தடுமாறி தனிமை சிறை உள்ள விடுதியின் மாடிப் படிகளை கண்டு கொண்டார். உள்ளே சென்று ஒரு தீக்குச்சியை உரசினார். அங்கே ஆளரவமற்று இருந்தது. அந்த இளைஞர் உள்ள அறை கதவு பூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீல் எந்த சேதமும் அடையாமல் அப்படியே இருந்தது.

தீக்குச்சி அணைந்ததும் நடுக்கத்துடன் அந்த அறையின் சாளரத்தின் வழியே அவர் எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு சிறிய மெழுகுவர்த்தி மெலிதாக எரிந்து கொண்டிருந்தது. சாளரத்தை கை விரலால் தட்டினார். இளைஞரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அசைவுமில்லை. கதவின் பூட்டிலிருந்த சீலை கவனமாக உடைத்து அதில் சாவியை நுழைத்தார். துரு ஏறியிருந்த பூட்டு கிறீச்சிட்டபடி திறந்தது. கதவை திறந்தபோது அந்த விடுதியில் சத்தம் எழுப்பியது. கதவை திறந்தால் பெரும் சத்தம் அந்த இளைஞரிடமிருந்து எழும்பும் என்று நினைத்த வங்கியருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் போல் அந்த அறை மௌனமாக இருந்தது. கதவு திறந்து மூன்று நிமிடங்கள் ஆகியும் எந்த சத்தமும் இல்லாததால் தைரியத்தை வரவழைத்தபடி உள்ளே சென்றார்.

அங்கிருந்த மேசையின் மீது தலை வைத்து உட்கார்ந்திருந்த அந்த இளைஞர் உடல் எலும்பை சுற்றி வைத்த போர்வை போலிருந்தது. நீண்ட முடியுடன் தாடியுடனும் வெளிறிய முகத்துடனும் காணப்பட்டார். கன்னங்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக, நைந்து கிடந்த அந்த இளைஞரை பார்க்க பயங்கரமாக இருந்தது. வெளுத்த தலை முடியையும், குலைந்த உடலையும் பார்ப்பவர்கள் அந்த இளைஞருக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்பதை நம்ப மாட்டார்கள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அந்த இளைஞர் தலை கவிழ்ந்து படுத்திருந்த மேசையில் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கிடந்தது.

'பாவப்பட்ட ஜென்மம்' என்று நினைத்தார் வங்கியர். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் இந்த நைந்து போன இளைஞர் நாளை கிடைக்கும் மில்லியன் ரூபிள்கள் பற்றிய கனவில் இருப்பார். பாதி இறந்த இந்த பிணத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி ஒரு தலையணையால் அமுக்கி கொன்றால் யாருக்குத் தெரியப் போகிறது. சிறந்த மருத்துவ நிபுணரால் கூட இந்தக் கொலையை கண்டறிய முடியாது. அதற்கு முன் அந்த கடிதத்தில் என்னதான் அவன் எழுதியிருக்கிறான் என்று பார்ப்போமே என்று எண்ணி அதை எடுத்தார் வயோதிகர்.

கடிதத்தில் அந்த இளைஞர் எழுதியிருந்ததை வாசித்தார் வங்கியாளர்.

'நாளை 12 மணிக்கு நான் எனது சுதந்திரத்தை மீட்டு விடுவேன். அதோடு பிற மனிதர்களுடன் மீண்டும் இணையும் வாய்ப்பையும் பெற்று விடுவேன். ஆனால் இந்த அறையை விட்டுச் சென்று சூரிய ஒளியை பார்க்கும் முன் உங்களுக்கு சில வார்த்தைகள் கூற நினைக்கிறேன். நான் இந்த சுதந்திரத்தையும், வாழ்வையும், வளத்தையும் மற்றும் நீங்கள் அளித்த புத்தகங்கள் கூறும் அனைத்து உலகியல் நலங்களையும் தூக்கி எறிய முடிவு செய்து விட்டேன். என்னை காத்து ரட்சிக்கும் கடவுளிடம் கூறுவது போல் தெளிவான மனசாட்சியுடன் இதை நான் சொல்கிறேன்.

'கடந்த 15 ஆண்டுகளாக உலக வாழ்வை நான் வெகு ஆர்வத்துடன் படித்தேன். மனிதர்களையோ இந்த பூமியையோ நான் பார்த்திருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால், நீங்கள் கொடுத்த புத்தகங்களின் மூலம் நான் வாழ்வை அனுபவித்தேன். மிகச் சிறந்த நறுமணமிக்க ஒயினை சுவைத்தேன், பாட்டுப் பாடினேன், காட்டுப் பன்றியையும், கலை மான்களையும் வேட்டையாடினேன், பெண்களை காதலித்தேன். நுண்மையான அழகுடைய மேகங்களையும் உங்கள் கவிஞர்கள் புனைந்த அற்புதமான கவிதைகளையும் ரசித்தேன். இரவு நேரங்களில் தேவதைகள் காதுகளில் வந்து தமது அற்புதமான கதைகளை எனக்குக் கூறினர்.'

'உங்கள் நூல்களில் இருந்த எல்புரூஸ் மற்றும் மான்ட் பிளாங்க் மலை உச்சிகளின் மீதேறி சூரியோதையத்தையும் கடலில் இறங்கும் சூரியனின் அஸ்தமனத்தையும் அந்தி வானச் சிவப்பையும் ரசித்திருக்கிறேன். என் தலைக்கு மேலே மின்னிச் செல்லும் மின்னலையும் இடிஇடிக்கும் மேகங்களையும் கண்டேன். வனங்களும், வயல்களும், ஆறு ஏரிகளும் கடல்களும், நகரங்களும் என் மனதை நிறைத்தன. உங்கள் நூல்களின் வழியே அற்புதங்களை நிகழ்த்தினேன். புதிய மதங்களை பரப்பினேன். பேரரசுகளை வென்றெடுத்தேன்.'

'உங்கள் நூல்கள் எனக்கு ஞானத்தைக் கொடுத்தன. மனிதனின் ஓய்வில்லாத சிந்தனையால் விளைந்த அறிவு அனைத்தும் எனது மூளையில் ஒரு சிறிய திசை காட்டும் கருவி போல் சுருக்கி பதிய வைக்கப்பட்டுள்ளது. உங்கள் எல்லோரையும் விட நான் ஞானமுள்ளவன் என்பதை நானிறிவேன்.'

'உங்கள் நூல்களையும், ஞானத்தையும், உலகத்தின் ஆசியையும் நான் வெறுக்கிறேன். இவை எல்லாம் பயனற்றவை. மாயை. கானல் நீர் போன்றவை. நீங்கள் பெருமையடையலாம். அறிவு உடையவர்களாக இருக்கலாம். நன்றாக வாழலாம். ஆனால் மரணம் உங்கள் அனைவரையும் இந்தப் பூமிப் பந்தின் மேலிருந்து துடைத்துச் சென்றுவிடும். உங்கள் வழித் தோன்றல்கள், வரலாறுகள், மாபெரும் புத்திக் கூர்மை அனைத்தும் இந்த பூமியோடு அழிந்துவிடும்.'

'உங்கள் பகுத்தறிவை இழந்து தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உண்மைக்குப் பதில் பொய்யையும், அழகுக்குப் பதில் அறுவெறுப்பையும் எடுத்துக் கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்களில் ஏதேனும் திடீர் மாற்றத்தால் பல்லிகளும், தவளைகளும் காய்த்தால் அதை நீங்கள் மலைப்புடன் பார்ப்பீர்கள். ரோஜாவின் நறுமணத்துக்குப் பதில் குதிரையின் வியர்வை நாற்றத்தை ரசிப்பீர்கள். ஆனால் சொர்க்கத்திற்கு பதில் நரகத்தை விரும்பும் உங்களை பார்த்து நான் மலைத்துப் போகிறேன். உங்களை புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை.'

'இதை உங்களுக்கு நான் நிரூபிக்கும் விதமாக ஒரு காலத்தில் நான் சொர்க்கமாய் கனவு கண்ட மில்லியன் ரூபிள்களை துச்சமாக மதித்து அதை துறக்கிறேன். அந்தப் பணத்தை வெறுக்கிறேன். அதை இழக்கும் விதமாக பந்தயம் முடியும் ஐந்து மணி நேரத்துக்கு முன்பாகவே நான் வெளியேறுகிறேன்.....ஆம்....ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு செல்கிறேன்....'

இதை படித்த வங்கி அதிபர் அந்தக் கடிதத்தை வைத்துவிட்டு அந்த இளைஞரின் தலையை தடவி முத்தமிட்டு சத்தமில்லாமல் விசும்பியபடியே வெளியேறினார். வாழ்வின் எத் தருணத்திலும் பங்குச் சந்தையில் பெரும் இழப்பை சந்தித்த போது கூட அவர் மனம் இத்தகு அவமானத்தை அடைந்ததில்லை. வீட்டுக்கு வந்ததும் படுக்கையில் விழுந்தார். அவர் மனமும் கண்களும் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தன.

மறுநாள் காலை அந்த விடுதியின் காவலாளி ஓடோடி வந்து அவரிடம், அந்த இளைஞர் சன்னல் வழியே எட்டிக் குதித்து தோட்டத்திற்கு வந்து, அங்கிருந்த கதவு வழியே வெளியே ஓடிவிட்டார் என்று கூறினார். உடனே அங்கு கிளம்பிச் சென்று அந்த இளைஞர் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டார்.

மற்றவர்களுக்கு சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று நினைத்த அவர், அங்கிருந்த மேசையின் மேல் கிடந்த, மில்லியன் ரூபிள்களை இழப்பதாக அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து வந்து, தனது வீட்டின் பெட்டியில் வைத்துப் பூட்டினார்.

The Bet என்ற இக் கதையின் ஆங்கில வடிவம் இங்கே.

http://www.classicreader.com/book/240/1/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விச‌ர்கதை...காசு முக்கியமில்லை என்டால் ஏன் அவ்வளவு காலமும் சிறை வாழ்க்கை வாழ்ந்தவர் முதலே விட்டுட்டு ஓடியிருக்கலாமே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.