Jump to content

மாற்று மணலுக்கு மாறுவோம்


Recommended Posts

6_2084423h.jpg
 

மணல் இன்று தங்கத்தைப் போல விலை மதிப்புள்ள பொருளாக மாறிவிட்டது. அதனால் நகைக்கொள்ளை போல மணற்கொள்ளையும் நடக்கிறது.

ஆனால் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைதான் மணல். ஆற்றில் கிடக்கும் மணல்தானே என அள்ளிக்கொண்டே இருந்தால், அதுவும் ஒரு நாள் தீர்ந்துபோகும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மணல் அள்ளினால் சரி.

ஆனால் அதிகார, பண பலம் கொணடவர்களின் கனரக இயந்திரங்கள் கணக்குவழக்கில்லாமல் அள்ளிக்கொண்டே இருந்தால்..?

கட்டிடப் பணிகளுக்காக ஆற்று மணல் அவசியம். அதற்கு என்ன செய்வது என்ற கேள்வி எழும். அதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாற்று மணல். இதுவும் இயற்கை வழங்கிய கொடைதான்.

கல் உடைக்கும் குவாரிகளில் கிடைக்கும் மணல் துகள்களைக் கொண்டு இந்தச் செயற்கை மணலைத் தயாரிக்கிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கட்டுமானப் பணிகளின் தேக்க நிலைக்குக் கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடும் ஒரு காரணம். கட்டுமானப் பணிகளுக்கு உகந்த அளவுக்கு மணல் கிடைப்பதில்லை.

உதாரணமாகத் தென் மாவாட்டங்களைப் பொறுத்தவரை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கட்டுமான மணல் திருச்சியில் இருந்துதான் பெரும்பாலும் வாங்கப்படுகிறது. இதனால் மணல் தட்டுப்பாடு உருவாகிறது. விலையும் அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையின்படி தமிழகத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது.

இதில் சென்னைக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லாரி மணல் தேவைப்படுகிறது. கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை அது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.

இதனால் கட்டுமானத்திற்குத் தேவைப்படும் மணலின் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்தில் மணல் அள்ளப்படுவது இல்லை. அதே சமயம் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி நம் சுற்றுச்சூழலை நாமே சீரழிக்கவும் முடியாது.

அள்ளினால் மணல் மறுபடியும் வந்திடும் என நாம் நினைப்பது தவறானது. ஏனெனில் செண்டி மீட்டர் அளவுக்கான மணல் கிடைப்பதற்கே நூறு ஆண்டுகள் ஆகும் எனச் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மேலும் மணல் மறுபடியும் தோன்றுவதற்கான இயற்கைச் சூழலையும் நாம் வளர்ச்சி என்ற பெயரில் அழித்துவருகிறோம். இதனால் மணல் தட்டுப்பாட்டைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் ‘தயாரிக்கப்படும் மணலை (Manufactured Sand - M-Sand) கட்டுமானங்களுக்குப் பயன்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமானது.

இவ்வகையான மணல் சந்தையில் கிடைக்கும் ஆற்று மணலை விட விலை குறைவாக உள்ளது. தயாரிக்கப்படும் மணலாக இருந்தாலும் இதுவும் இயற்கையில் இருந்துதான் நமக்குக் கிடைக்கிறது. அதனால் இதையும் தயக்கமின்றி நாம் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

இந்த வகையான தயாரிக்கப்படும் மணலை வெளி நாடுகளிலும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அயல் மாநிலங்களிலும் அதிக அளவில் பயன்படுத்திவருகிறார்கள். உதாரணமாக புனே- மும்பை நெடுஞ்சாலை அமைக்க தயாரிக்கப்படும் மணலைப் பயன்படுத்தி முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள்.

பெங்களூர் விமான விரிவாக்கப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் போன்ற பல பெரிய திட்டங்களுக்கு இந்த வகை மணலைப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். மேலும் இந்திய அறிவியல் கழகமும் இதைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் மக்கள் மத்தியில் இந்த வகையான மணலைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துவதில் தயக்கம் உள்ளது.

உண்மையில் ஆற்று மணலுக்கு நிகரான, சொல்லப்போனால் அதையும் விடத் தரமானது தயாரிக்கப்படும் மணல். மேலும் தயாரிக்கப்படும் மணலைப் பயன்படுத்தும்போது சிமெண்டின் அளவும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கட்டிடக் கலை நிபுணர்கள் சொல்கிறார்கள். அதுபோல ஆற்று மணலில் 15 முதல் 20 சதவீதம் வரை கழிவுகள் இருக்கும்.

தயாரிக்கப்படும் மணலில் அப்படியான கழிவுகள் இருப்பதில்லை. ஒரே சீராகவும் தயாரிக்கப்படும் மணல் கிடைக்கும் என்பதால் இதைத் தேவைக்கேற்ப வாங்கிப் பயன்படுத்தலாம்.

விலை, தட்டுப்பாடு போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு இயற்கையைப் பாதுகாப்பதற்காக நாம் மாற்று மணலைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.