Jump to content

தமிழர்களின் மாறாத ரசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மாறாத ரசனை

- வண்ணநிலவன்

தொலைக்காட்சி, சினிமாவின் குறுகிய வடிவம்தான். அதனால்தான் அதைச் சின்னத்திரை என்கிறார்கள். ‘தகவல் ஒளிபரப்பு’ என்று வரும்போது, தொலைக்காட்சி, சினிமாவைவிடப் பன்மடங்கு பயனுள்ளது. சினிமாவை நாம் வெறும் கதை சொல்லும் ஊடகமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். சமூகத்துக்குத் தேவையான பயனுள்ள தகவல்கள் சினிமாவில் அபூர்வமாகத்தான் பரிமாறப்படுகின்றன.

ஆனால், தொலைக்காட்சி அப்படியல்ல. அது நிஜமான தகவல் ஒளிபரப்பு ஊடகம். இதைத்தான் பல்வேறு விதமான செய்திச் சேனல்கள், டிஸ்கவரி, ஹிஸ்டரி, நேஷ்னல் ஜியோகிராபி, அனிமல் பிளானட் முதலான பல்வேறு, சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லும் சேனல்களும் உறுதிசெய்கின்றன. மக்களுக்குக் கற்றுத் தருவதில் சினிமாவைவிட மேற்கண்ட சேனல்கள் அதிக அளவில் முன்னணியில் நிற்கின்றன. இதில் விளையாட்டுச் சேனல்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை பொதுவாக எண்டர்டெய்ன்மெண்ட் சேனல்கள் என்றே கருதப்படுகின்றன. ஆனால் இவை கேளிக்கையை மட்டும் அளிப்பதில்லை. கேளிக்கையினூடாகப் பயனுள்ள தகவல்களையும் வழங்குகின்றன. இந்த வகையில் இவை சமூகத்துக்குக் கற்றுத் தருகின்றன.

ஆனால், இவற்றுக்கான வரவேற்பு தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் மத்தியில் மிகக் குறைவு. நேஷ்னல் ஜியோக்கிராபியையோ, டிஸ்கவரியையோ பெருவாரியான ரசிகர்கள் அடிக்கடி பார்ப்பதில்லை. சன் டி.வி.யையோ, அல்லது வேறொரு மொழிச் சேனலிலோ ஒளிபரப்பப்படும் சினிமா, சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், சீரியல்கள் இவற்றைப் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைவிட டிஸ்கவரி சேனல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம்தான்.

அதிலும் குறிப்பாக எவ்வளவு பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்பதைக் கணக்கிடும் டி.ஆர்.பி. ரேட்டிங் நிச்சயமாக மேற்கண்ட சேனல்களுக்கு இருக்காது. மொழிச் சேனல்களில் குறிப்பாக, நெடுந்தொடர்களைப் பார்வையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விரும்பிப் பார்க்கின்றனர். இது சன் டி.வி., ஜெயா டி.வி., கலைஞர் டி.வி.யின் சீரியல்களுக்குத்தான் என்றில்லை. அது கன்னடத்தின் உதயாவாக இருந்தாலும் சரி, மலையாளத்தின் ஏஷியா நெட் அல்லது சூர்யா, தெலுங்கின் ஜெமினியாக இருந்தாலும் சரி இதே நிலைதான். எல்லா மொழிகளிலுமே சீரியல்கள் எனப்படும் நெடுந்தொடர்களைத்தான் இந்தியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்.

சன் டி.வி.யில் 90களில் ஒளிபரப்பான ‘சித்தி’ சீரியல் முடிந்தபோது, அதில் நடித்த கலைஞர்களுக்குப் பாராட்டு விழாவே நடத்தப்பட்டது. அந்தளவுக்கு சித்தி நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றிருந்தது. சித்தி நெடுந்தொடரைத் தயாரித்த அதே நிறுவனம் அண்ணாமலை, அரசி, இப்போது வாணி ராணி என்று தனது பாணியைத் தானே நகல் செய்து தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிவருகிறது.

இதேபோல் மெட்டி ஒலி, கோலங்கள் போன்றவை தமிழர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்த சீரியல்கள். தினசரி ஏதாவது எதிர்பார்ப்புடன் திடுக்கிடும் திருப்பத்தில் சீரியல் முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பார்வையாளர்களை நாற்காலியின் விளிம்பில் உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் இந்த சீரியல் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் நோக்கம். அப்போதுதான் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகரிக்கும், விளம்பரமும் கூடும்.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்த ஒரு சீரியலை இயக்கிய நிறுவனத்துக்கு அதன் அடுத்த சீரியலை ஒளிபரப்ப பிரைம் டைம் எனப்படும் 7.30 மணி ஸ்லாட், 8.00 மணி ஸ்லாட், 8.30, 9.00 மணி ஸ்லாட்டுகள் வழங்கப்படும். இந்த ஸ்லாட்டுகளைப் பெற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் கம்பெனிகளிடையே போட்டி நிலவுகிறது. இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை உள்ள பிரைம் டைம் ஸ்லாட்டுகளைப் பெறுவது சாதாரண விஷயமல்ல.

இந்த பிரைம் டைம் ஸ்லாட் சீரியல்களெல்லாம் தமிழ் சினிமாக்களையே நினைவுபடுத்துகின்றன. சதி செய்யும் வில்லன் அல்லது வில்லிகள் இல்லாமல் எந்த சீரியலையும் எவரும் எடுத்துவிட முடியாது. தமிழ் சினிமாவின் வீரப்பா, நம்பியார், சி.கே.சரஸ்வதி, சுந்தரிபாய் போன்ற நடிக, நடிகையர்கள் சினிமாவில் ஏற்று நடித்த அதே பாத்திரங்கள் இந்த சீரியல்களிலும் அப்படியே வருகின்றன. இவை ஏதாவது ஒரு கதாபாத்திரத்துக்கு எதிராகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களுக்கு எதிராகவோ சதா சர்வகாலமும் திட்டங்களைத் தீட்டி, சீரியல் பார்வையாளர்களை நாற்காலியின் விளிம்பில் உட்கார வைக்கின்றன.

இந்த சீரியல்களில் வரும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்கு எதையும் கற்றுத் தருவதில்லை. வேண்டுமானால் எதிர்மறையான, கெடுதலான விஷயங்களைக் கற்றுத் தருகின்றன என்று சொல்லலாம்.

இந்த சீரியல்களுக்கு ‘க்ரியேட்டிவ் ஹெட்’கள் வேறு உண்டு. ‘க்ரியேட்டிவ் ஹெட்’கள் சீரியல்களின் கதைகள் தொய்ந்துவிடாமலும், பார்வையாளர்களிடம் திகிலையும், பரபரப்பையும் எப்படித் தொற்ற வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

பெண் கதாபாத்திரங்களை அழுது கதற வைப்பது, கதையில் வரும் ஏதாவது கதாபாத்திரத்தை திடீர் திடீரென்று காணாமல் போகச் செய்வது, கதையில் அடிக்கடி ஆஸ்பத்திரிக் காட்சிகளை நுழைப்பது முதலான காரியங்களை இந்த க்ரியேட்டிவ் ஹெட்கள் அற்புதமாகச் செய்கிறார்கள். தமிழ் சினிமாக்களைப் போல் ஆட்களைக் கடத்துவது, அடிக்கடி சண்டைக் காட்சிகள் போன்றவையும் இத்தொடர்களில் இடம்பெற ஆரம்பித்துவிட்டன. சமீப காலமாக தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்களில் அக்கால தமிழ் சினிமாக்களைப் போல் ஒரே நடிகையே இரட்டை வேடங்களில் நடிப்பதும் சகஜமாக இருக்கிறது.

தமிழ் சினிமாக்களிலும் ஏ.வி.எம்.மின் அந்த நாள், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற வித்தியாசமான திரைக் கதைகளை இந்த சீரியல்கள் நகல் செய்வதில்லை. அரதப் பழசான தமிழ் சினிமா கதைகளையும், அவற்றில் வரும் கதாபாத்திரங்களையும் இவை நகல் செய்கின்றன.

தனியார் தொலைக்காட்சி சேனல்கள்தான் வியாபாரத்துக்காக இப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்றால், அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தஷனிலும் இதே சினிமாத்தனமாக காட்சிகளைக் கொண்ட சீரியல்தான் இடம்பெறுகின்றன. தூர்தஷினில் முன்பு ‘வண்ணக் கோலங்கள்’ என்ற நகைச்சுவைத் தொடர் பிரபலமாக இருந்தது. அதுபோன்ற தொடர்களை இப்போது தூர்தர்ஷனில் காண முடியவில்லை. உண்மையிலேயே வண்ணக்கோலங்கள் நன்றாக இருந்தது. இதுபோன்ற நிலைக்கு சீரியல் தயாரிப்பாளர்களையும், தனியார் சேனல்களையும் மட்டுமே குற்றம் சொல்ல முடியாது.

தமிழர்களின் ரசனை என்பது காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரை அன்று முதல் இன்று வரை அப்படியேதான் உள்ளது. கொஞ்சம் அழுகை, கொஞ்சம் பரபரப்பு, கொஞ்சம் நகைச்சுவை என்ற மசாலாவான ரசனையே ரசிகர்களிடம் உள்ளது. இந்த மசாலாவை மீறி எடுக்கப்படும் சினிமா ஒடாதது மாதிரி, இந்த மசாலாவை மீறி எடுக்கப்படும் தொலைக்காட்சித் தொடரும் எடுபடுவதில்லை. இந்த ரசனை மாறாத வரை தமிழ் சினிமாவிலும் மாற்றம் வராது, தொலைக்காட்சித் தொடர்களிலும் வராது.

http://www.aazham.in/?p=4127

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.