Jump to content

வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றை மாற்றுமா ஜெர்மனி?

513xNxmessi-argentina_1998712g.jpg.pages

 

20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதவிருக்கின்றன.

இந்த இரு அணிகளும் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றுள்ளன.

வரலாறு மாறுமா?

தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, பிரேசில், அர்ஜென்டீனா தலா ஒரு முறை) அணிகளே வாகை சூடியுள்ளன. ஆனால் இந்த முறை ஜெர்மனி கோப்பையை வென்று அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுமா? அமெரிக்க கண்டத்தில் அக்கண்ட அணிகள்தான் வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. அரையிறுதியில் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை புரட்டியெடுத்த ஜெர்மனி, அதே ஆட்டத்தை அர்ஜென்டீனாவுக்கு எதிராகவும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வலுவான ஜெர்மனி

 

 

ஜெர்மனி அணி, கோல் கீப்பரில் தொடங்கி ஸ்டிரைக்கர் வரை மிக பலம் வாய்ந்ததாக உள்ளது. அந்த அணியின் கோல் கீப்பர் மானுவேல் நூயர் இதுவரை எதிரணிகளால் வீழ்த்த முடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பின்களத்தில் மேட்ஸ் ஹம்மல்ஸ் ஜெர்மனியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார்.

மிட்பீல்டில் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் ஆகியோர் கலக்கி வருகின்றனர். இவர்கள் ஜெர்மனிக்கு தொடர்ந்து கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மட்டுமின்றி, தொடர்ந்து கோலும் அடித்து வருவது கூடுதல் பலமாகும்.

மிரட்டும் ஸ்டிரைக்கர்கள்

முன்களத்தைப் பொறுத்தவரையில் தாமஸ் முல்லர், மிரோஸ்லாவ் க்ளோஸ் ஆகியோர் அர்ஜென்டீனாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாற்று ஸ்டிரைக்கரான ஸ்கர்ல் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். தாமஸ் முல்லர் மட்டும் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளார்.

கோல் அடிப்படையில் பார்த்தால் அர்ஜென்டீனா இதுவரை 7 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. ஆனால் ஜெர்மனி 17 கோல்கள் அடித்துள்ளது. மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட ஜெர்மனியான பிறகு இதுவரை அந்த அணி கோப்பையை வெல்லவில்லை. அந்தக் குறை இந்த முறை தீருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மெஸ்ஸியை நம்பி

அதேநேரத்தில் அர்ஜென்டீனா பிரேசில் ரசிகர்களின் பேராதரவோடு ஜெர்மனியை சந்திக்கிறது. அந்த அணியின் பலமே அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸிதான். அர்ஜென்டீனாவை இறுதிச்சுற்று வரை அழைத்து வந்ததில் மெஸ்ஸியின் பங்கு மகத்தானது.

கோல் அடிப்பது மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மெஸ்ஸி உள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான அரையிறுதியில் மெஸ்ஸி கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தபோதும் ரோட்ரிகஸ் கோட்டைவிட்டது ஏமாற்றமாக அமைந்தது. பலம் வாய்ந்த ஜெர்மனிக்கு எதிராக அர்ஜென்டீனா அதுபோன்ற தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம்.

மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அந்த அணியின் பலம் என்று எடுத்துக்கொண்டால் கோல் கீப்பர் ரொமேரோதான். நாக் அவுட் சுற்றில் இதுவரை அவர் ஒரு கோல்கூட வாங்கவில்லை. காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத டி மரியா இந்த ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. கொன்ஸாலோ ஹிகுவெய்ன், ரோட்ரிகஸ், மார்கஸ் ரோஜோ, மாஸ்கெரனோ ஆகியோர் சிறப்பாக ஆடுவது அர்ஜென்டீனாவுக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.

மகுடம் சூடுவாரா மெஸ்ஸி?

சாம்பியன்ஸ் லீக், ஸ்பானிஷ் லீக் ஆகியவற்றில் கோலோச்சிவிட்ட மெஸ்ஸி, உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டீனா அணியில் இதுவரை இடம்பெற்றதில்லை. அவருடைய சாதனை பட்டியலில் உலகக் கோப்பை மட்டும் இல்லை. இந்த முறை அர்ஜென்டீனாவுக்கு அவர் உலகக் கோப்பையை வென்று தரும்பட்சத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் பீலே, மரடோனா ஆகியோருக்கு நிகரானவராகப் பார்க்கப்படுவார். உலக கால்பந்தின் முடிசூடா மன்னனாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் அர்ஜென்டீனாவைவிட ஜெர்மனிதான் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஜெர்மனிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக பல்வேறு கால்பந்து நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலகக் கோப்பையில்

ஜெர்மனியும் அர்ஜென்டீனாவும் உலகக் கோப்பையில் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஜெர்மனி 4 முறையும் அர்ஜென்டீனா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. மொத்தம் 16 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதில் ஜெர்மனி மட்டும் 11 கோல்களை அடித்துள்ளது. அதன் விவரம்:

xstats_1998710a.jpg.pagespeed.ic.nDGY9zB

அர்ஜென்டீனாவுக்கு பிரேசில் ரசிகர்கள் ஆதரவு

பிரேசில் மண், அர்ஜென்டீனாவுக்கு தாய் நாடாகியிருக்கிறது.பிரேசில் ரசிகர்கள் அர்ஜென்டீனாவுக்கு ஆதரவு கொடுப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அரையிறுதியில் ஜெர்மனியிடம் பிரேசில் படுதோல்வி கண்டது. மற்றொன்று அர்ஜென்டீனாவும், பிரேசிலும் ஒரே கண்டத்தைச் சேர்ந்த அணிகள்.

இதுதவிர பிரேசில் ரசிகர்களின் நாயகனான நெய்மர், “மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா, ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும்” என விருப்பம் தெரிவித்துள்ளார். மெஸ்ஸி அணிக்கு பிரேசில் ரசிகர்களின் ஆதரவு கிடைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

உலகக் கோப்பையில் கடந்து வந்த பாதை

மோதிய ஆட்டங்கள்

ஜெர்மனி 6

அர்ஜென்டீனா 6

வெற்றி

ஜெர்மனி 5

அர்ஜென்டினா 6

டிரா

ஜெர்மனி 1

அர்ஜென்டினா 0

அடித்த கோல்கள்

ஜெர்மனி 17

அர்ஜென்டினா 7

இலக்கை நோக்கிய ஷாட்கள்

ஜெர்மனி 70%

அர்ஜென்டினா 60%

தவறுகள்

ஜெர்மனி 71

அர்ஜென்டினா 64

மஞ்சள் அட்டை

ஜெர்மனி 4

அர்ஜென்டினா 6

இதுவரை

ஜெர்மனியும் அர்ஜென்டீனாவும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஜெர்மனி 6 முறையும், அர்ஜென்டீனா 9 முறையும் வெற்றி கண்டுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்த 20 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 28 கோல்களை அடித்துள்ளன.

 

தி ஹிந்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.