Jump to content

ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம் - யமுனா ராஜேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம்

- யமுனா ராஜேந்திரன்

‘கவிதை என எழுதாதே வரலாற்றை’ என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். புனைவு எனும் பெயரில் எழுதப்படும் இன்றைய ஈழப் போராட்டப் புனைகதைகளுக்கு இந்த வரி அச்சொட்டாகப் பொருந்துகிறது. வரலாறு, புனைவு என இரண்டினதும் குறைந்த பட்ச அழகியல் அடிப்படைகளையும் புறந்தள்ளி இன்றைய ஈழப் புனைவுகள் எழுதப்படுகின்றன. வரலாறு எழுதுதலில் இரண்டு அடிப்படைகள் உண்டு, ஆய்வும் தரவுகளும் அதற்கான ஆதாரங்களும் கொண்டு கருத்தியல் பார்வையுடன் எழுதப்படுவது வரலாறு. குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் வாழ்ந்த மாந்தர்களின் மாதிரியை அனுபவதரிசனத்துடன் முன்வைப்பது புனைவு.

புனைவு யதார்த்தத்தை முன்வைக்கிறது எனினும் அது யதார்த்தத்தைப் பிரதிபண்ணுவதல்ல, மாறாக யதார்த்தத்தை மறுபடைப்புச் செய்வது. இத்தகைய புனைவுகள் படைப்பாளி எனும் தனிமனிதனையும் வில்லன் கதாநாயகன் என்ற அற்பமாதிரிகளையும் கடந்து செல்லும் தன்மை படைத்தது. ஈழச் சூழலில் போராட்ட வரலாறு எழுதுதலில் உள்ள இடர்களைக் கடந்து செல்லப் புனைவைப் பாவிப்பதை ஒரு தந்திரோபாயமாகக் கைக்கொள்கிறார்கள். இவ்வாறு எழுதுகிறபோது புனைவுக்கு அவசியமான கற்பனையாற்றலும் யதார்த்த மாந்த மாதிரிகளும் இல்லாது பிசைந்த களிமண்போல பனுவல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஈழப்போராட்டம் குறித்த வரலாறு எனவும் இப்போது கணிசமான நூற்கள் வந்துவிட்டன. அன்டன் பாலசிங்கம், புஷ்பராசா, புஷ்பராணி, ஐயர், பொன்னுத்துரை, செழியன் என தமிழீழ விடுதலைப்புலிகள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழமக்கள் விடுதலைக் கழகம் என இயக்கம் சார்ந்து இவைகள் எழுதப்பட்டுள்ளன. புனைவிலக்கியம் என விடுதலைப் போராட்ட இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றியவர்களான கோவிந்தன், ஷோபா சக்தி, செழியன், கர்ணன், தமிழ்க்கவி, குணா கவியழகன், சாத்திரி போன்றவர்களின் நாவல்களும் சிறுகதைகளும் வந்திருக்கின்றன. இந்த நாவல்களும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களால்தான் எழுதப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே 18 முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் போராட்டம் குறித்து வெளியான நாவல்கள் அனைத்துமே விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளாலேயே எழுதப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைக் கழகம் சார்ந்தவர்களால் ஈழ வரலாற்று அனுபவங்கள் எனவோ அல்லது அதன் அடிப்படையிலான நாவல்கள் எனவோ நானறிந்து வெளியாகவில்லை. இதுவன்றி போராட்டத்தைக் களமாக முன்வைத்து நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் என தேவகாந்தன், விமல் குழந்தைவேல், சயந்தன், ஸர்மிளா ஸெய்யித் போன்றோரது நாவல்களைக் குறிப்பிடலாம்.

போராட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட, போராட்ட இயக்கங்களில் பங்கு பற்றியவர்களால் எழுதப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் பொறுத்து ஒரு விமர்சன முறையியலைக் கண்டடைவதற்கு உள்ள தார்மீக மற்றும் அழகியல் நெருக்கடிகளையே நான் இக்கட்டுரையில் பேச விழைகிறேன்.

ஈழ விடுதலைப் போராட்டமும் இலங்கைத்தீவு தழுவிய இனப்பிரச்சினையும் பற்றி இப்போது சிங்கள-தமிழ்-ஆங்கில மொழிகளில் கணிசமான கலை இலக்கியப் படைப்புகள் வெளியாகிவிட்டன. சிங்கள மொழியில் 25 இற்கும் குறையாத முழுநீளத் திரைப்படங்கள் உருவாகிவிட்டன. 10 நாவல்கள் வரை ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலும் தென்னிந்திய மாநிலங்களிலும் என 25 திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பு மேற்கத்தியர்களாலும் இந்தியர்களாலும் எடுக்கப்பட்ட 15 வரையிலான ஆவணப்படங்கள் இருக்கின்றன. இதுவன்றி சிங்கள-தமிழ்-ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பொன்றும் இந்திய இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாக வெளியாகி இருக்கிறது. இந்த நாவல்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், கவிதைகள் குறித்து வேறு வேறு சந்தர்ப்பங்களில் நான் விரிவாகவும் எழுதியிருக்கிறேன்.

சிங்களக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் குறித்த எனது மதிப்பீடு இவ்வாறாக அமைகிறது:

வன்முறை அரசியல் சூழலில் வாழ நேர்ந்த ஓரு கலைஞன் அவனது முதல் தேர்வாக ஒடுக்கப்பட்ட மக்களின் உவியல் அமைவுக்குள் வாழ்வதன் வழியில் தனது விமோசன அரசியலை அல்லது கலாதரிசனத்தை முன்வைக்கலாம். பிறிதொரு வழிமுறையில் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் ஒடுக்கும் சமூகத்தினுள் விதைக்கும் குற்றஉணர்வின் அடிப்படையில், அவர் சார்ந்த சமூகத்தினள் ஏற்படும் விளைவுகளை உருக்கமாக முன்வக்கலாம். அவர் சார்ந்த சமூகம் குறித்த கடுமையான விமர்சனங்களை அவர் இதன் மூலம் முன்வைக்க முடியும். சிங்களக் கலைஞர்கள் பெரும்பாலும் இந்த இரண்டாவது பாதையையே தேர்ந்து கொள்கிறார்கள். முப்பது ஆண்டுகள் நீண்ட ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள ராணுவம் எனும் அமைப்பு மானுட அவலம் எனும் அளவில் சிங்கள சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளையே பெலும்பாலுமான சிங்களக் கலைஞர்கள் தமது திரைப்படங்களில் முன்வைத்திருக்கிறார்கள்.

ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உளவியலுக்குள் நின்று இனப்பிரச்சினையைப் பார்த்த சிங்களத் திரைக்கலைஞர்கள் என எவரும் இல்லை என்றே என்னால் சொல்ல முடியும். இனப் பிரச்சினை குறித்து குறிப்பிடத்தக்க திரைப்படங்களைக் கொடுத்த பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தரா, அசோக ஹந்தகமா போன்ற மூன்று திரைக்கலைஞர்கள் குறித்த எனது அறுதியான மதிப்பீடும் இதுதான்.சிங்கள ராணுவமயமாதலும் வன்முறையும் வன்பாலுறவும் வடக்கு-கிழக்கு சமூகத்தினுள் ஏற்படுத்திய பாதிப்புக்களை, வடக்கு-கிழக்கு நிலஅமைவைக் கொண்டு சிங்களத் திரைக்கலைஞர்கள் ஒரு போதும் சித்தரித்ததில்லை.

2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் வெகுஜன சிங்கள சினிமாவின் நிலை எவ்வாறாக உள்ளது என்பதனை ‘சினிமாவும் எல்லாளனின் மறு உயிர்ப்பும்’ எனும் தனது கட்டுரையில் நடராசா சரவணன் இவ்வாறு சுட்டுகிறார் :

 

இன்றைய சிங்கள திரைப்பட சந்தையில் விலைபோகக் கூடிய ஒன்றாக ‘இனவாதப் பரப்புரை’ ஆகிவிட்டிருகிறது என்றால் அதன் அர்த்தம் மக்கள்மயப்பட்ட பேரினவாதத்துக்கு இனவாத – இனப்பெருமித ஏக்கமும் அவாவும் உருவாக்கப்பட்டிருகிறது என்பதும் தான். கூடவே இதன் எதிர்விளைவாக அந்த சந்தையின் தேவையை ஈடுசெய்ய திரைப்படத்துறையினரும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் தான்.

திரைப்படவுருவாக்கத்தை தேசபக்தி மற்றும் தேசத்துரோக பிரச்சாரத்துக்கான ஊடகமாக பயன்படுத்துவது. தமிழர்களின் போராட்டம் பயங்கரவாத போராட்டம் என்பதை சித்திரித்து அதற்கெதிரான போராட்டம் என்றும் தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக புனைவதற்கும் சிங்கள திரைப்படங்கள் பாவிக்கப்பட்டன. இந்த கருதுகோளின்படி தேசிய வீரர்கள் குறித்த அபரிமிதமான சித்திரிப்புகளும், தேசத்துரோகிகளை களைவதற்கான கதையாடல்களும் கதாபாத்திரங்களும் உள்ளடக்கப்பட்டன. அதே வேளை இலங்கை அரசையோ, யுத்தத்தையோ பேரினவாத்தத்தையோ விமர்சித்து தமிழில் திரைப்படம் மட்டுமல்ல ஒரு சாதாரண நாடகம் கூட போட முடியாது என்பது இன்றைய இலங்கையின் யதார்த்தம்.

தமிழகத் திரைப்படங்களில் பெரும்பாலுமானவை தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த அகதி வாழ்வின் துயர் சொல்பவை. ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்வை இந்திய நோக்கில் பார்த்துச் சொல்பவை. இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிகழ்த்திய வன்முறைகள் வல்லுறவுகள் குறித்து இவை ஒரு போதும் பேசியதில்லை. ஒரு சில படங்கள் விடுதலைப் புலிகள் குறித்த மனோரதியமான சித்திரங்களைத் தீட்டிக் காட்டுபவை. லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ படம் மட்டுமே ஈழப் பிரச்சினைiயில் தமிழக அரசியல்வாதிகளின் இரட்டை நிலைபாடு பற்றிப்பேசும் திரைப்படம்.

இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தரவு யாதெனில் சிங்களத் திரைப்படப் படைப்பாளிகள் இலங்கை அரசும் அவர்களது கொள்கைகளும் இராணுவமும் தமிழ் பகுதிகளில் நிகழ்த்திய பேரழிவை விரிவாக அவர்கள் பதிவு செய்வதில்லை. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவும் இலங்கை இராணுவமும் நிகழ்த்திய படுகொலைகளும் வல்லுறவும் குறித்து சிங்களத் திரைப்படங்கள் கிஞ்சிற்றும் பேசுவதில்லை. மாறாக, சிங்களப் கலாச்சாரப் பேரினவாதத்தை மகோன்னதப்படுததுபவனவாகவே பெரும்பாலுமான படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்களில் பெரும்பாலுமானவை நாவல்களாக எழுதப்பட்டு அதன் அடிப்படையில் உருவாகின திரைப்படங்கள். இந்தியப் படங்கள் ஈழ அகதிகள் பாலான பாசாங்கும் இந்தியப் படையின் தலையீடுகளும் மனித உரிமை மீறல்களும் வல்லுறவுகளும் குறித்து மௌனமும் கடைப்பிடிப்பவை. ஜெயமோகன், வாசந்தி போன்றவர்களால் எழுதப்பட்ட நாவல்களும் இந்திய மேலான்மை உணர்வுடன் ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பார்த்தவைகள்தான்.

மேற்கத்திய நாட்டுத் திரைப்பட இயக்குனர்களால் எடுக்கப்பட்ட ஆவணப்படங்கள் அனைத்தும் சிங்கள இனவாத அரசின் மனித உரிமை மீறல்களைப் பேசுகின்றன. பாரிய மக்கள் படுகொலைகள் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன எனச் சொல்கின்றன. இலங்கைப் படை பாரிய வல்லுறவுகளை நிகழ்த்தின எனப்பதிவு செய்கின்றன. அரசு மக்களைப் பட்டிணி போட்டுக் கொன்றது எனச் சொல்கின்றன. சிங்களக் கலைஞர்களும் மனித உரிமையாளர்களும் ஊடகவியலாளர்களும் உயர்தப்பி இலங்கையை விட்டு வெளியேறினார்கள் எனச் சொல்கின்றன. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஒப்பிட, விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் சொற்பமானவை எனச் சொல்கின்றன. இவையும் பின்முள்ளிவாய்க்கால் குறித்த வரலாறு எழுதுதலில் ஒரு வகையினம் என்பதில் சந்தேகமில்லை.

ஈழக் கவிதைகள்தான் போராட்டத்தின் தார்மீக நெறிகளை உலகெங்கிலும் உரக்கச் சொல்லிய முதல் வடிவம். ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் வலி, எழுச்சி, எதிர்ப்புணர்வு போன்றவற்றை வெளிப்படுத்தியதால்தான், புதிதாக எழுந்த பெண் பிரக்ஞையை அது வெளியிட்டதால்தான், ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பும் ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பும் தமிழ்க்கவிதையில் பெருவெடிப்பை உருவாக்கின. இந்த உணர்வுகளை வெளிப்படுத்தியதால்தான் ஈழக் கவிஞர்கள் தமிழகத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட்டார்கள். அங்கீகரிக்கப்பட்டார்கள்.

ஒடுக்கப்பட்ட ஈழமக்களின் மனசாட்சியாக இக்கவிஞர்கள் இருக்கிறார்கள் என்கிற தார்மீகம்தான் அவர்களது அடையாளம். இந்தத் தார்மீக அடையாளத்தை 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் பெரும்பாலுமான கவிஞர்கள் இழந்தார்கள் என்றே சொல்லவேண்டும். ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பில் எழுதிய கவிகள், ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பில் எழுதிய பெண் கவிகள் எனப் பெரும்பான்மையான ஈழக்கவிகள் மகிந்த ராஜபக்சேவின் மனித உரிமை ஆலோசகரான ரஜீவ விஜேசிங்க தொகுத்த தொகுப்பில் கவிதைகள் எழுதினார்கள்.

இலங்கை அரசையும் இலங்கை ராணுவத்தையும் காத்து நின்றதோடு மட்டுமல்ல, இலங்கை அரசோ ராணுவமோ முள்ளிவாய்க்கால் பேரழிவின்போது ஈழமக்களின் மீது படுகொலைகள் நிகழ்த்தவோ, வலலுறவு புரியவோ இல்லை என்றார் ரஜீவ விஜேசிங்க. இந்தியா ராணுவம் ஈழமக்கள் மீது வன்முறை செலுத்தியது, வல்லுறவு புரிந்தது என ஈழத்தமிழர்கள் சொல்வது ஒரு பொய் என்றார் ரஜீவ விஜேசிங்க. இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, இலங்கையர் எனும் அடையாளம் மட்டுமே உண்டு என்பதற்கான சாட்சியமாக இலங்கை வெளிவிவகாரத் துறைக்கு இந்தக் கவிதைத் தொகுபபின் மூலம் தான் ஒரு ஆயுதத்தை வழங்கியிருக்கிறேன் என்றார் ரஜீவ விஜேசிங்க. இத்தகைய ஒருவர் தொகுத்த தொகுப்பில் தமது கவிதைகளை இடம்பெறச் செய்த ஈழத்தின் தொகையான ஆண் பெண் கவிஞர்கள் தாம் கவிதை எழுதுவதற்கான தமது தார்மீகத்தை, தமது மக்களைப் பிரதிநித்துவம் செய்கிறவர்கள் என்கிற உன்னத அடையாளத்தை இழந்தார்கள். இது இன்று ஈழக் கவிதை எதிர்கொள்ளும் மிகப்பெரும் தார்மீக அவலமாக இருக்கிறது.

ஈழத் தமிழ்க் கவிகளும் சிங்களக் கவிகளும் இணைந்து வெளியான அத்தொகுப்பில் சிங்களக் கவிதைத் தேர்வாளர்களும் சரி, சிங்களக்கவிதை மதிப்பீட்டு முன்னுரை எழுதியவரும் சரி, சிங்களக் கவிதை மரபை எழுதுகிற அதே பொழுதில் முப்பதாண்டு கால இனப் பிரச்சினையும் விடுதலைப் போராட்டமும் சிங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் குறித்துத் திட்டவட்டமான கருத்துக்களுடன் சிங்களக் கவிதைகளை அவர்கள் தொகுத்திருந்தார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் எழுதப்பட்ட கவிதைகளையும் அவர்கள் தொகுத்திருந்தார்கள்.

ஈழத் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்தவர்களும் சரி, ஈழத்தமிழ்க் கவிதையின் வரலாறும் மரபும் பாடுபொருளும் குறித்து மதிப்பீட்டுரை எழுதியவரும் சரி, ஈழ விடுதலைப் போராட்டம் ஈழக் கவிதையில் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் குறித்தோ, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் எழுதப்பட்ட ஈழக் கவிதை குறித்தோ மறந்தும் ஒரு மதிப்பீட்டை முன்வைக்கவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவு அனுபவம் குறித்த கவிதைகளும் தொகுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. ஒரு வகையில் ஈழக் கவிதையின் தொடர்ச்சியையும் ஆன்மாவையுமே இவர்கள் கொன்றொழித்தார்கள். சிங்களக் கவிதையின் வரலாறு அரசியல் மொழியில் எழுதப்பட்டிருக்க, ரஜீவ விஜேசிங்காவின் தொகுப்புரை அரசியல் மொழியில் எழுதப்பட்டிருக்கத் தமிழ் தொகுப்பாளரின் கட்டுரை அரசியல் நீக்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. ஈழக் கவிதைக்கும் கவிதை விமர்சனத்துக்கும் நேர்ந்த மிகப்பெரும் தார்மீக மற்றம் விமர்சன மதிப்பீட்டு வீழ்ச்சி எனவே இதனை மதிப்பிட வேண்டும்.

கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் எழுதப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வரலாறு, தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தினுள் நடந்த சம்பவங்கள், படுகொலைகள், பாலியல் நடத்தைகள், இயக்க முரண்பாடுகள், தார்மீக விழ்ச்சிகள், அறத்தழும்பல்கள், இலட்சிய வேட்கையின் வீழ்ச்சி என அனைத்தும் குறித்ததுதான் அந்த நாவல். அந்த நாவலின் தொனி ஒரு விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று நாவல் எழுதுவதற்கான முறையியலையும் அழகியலையும் கண்டடைந்திருந்தது. ‘நாம்’ என்பதுதான் அந்த நாவல் சொல்முறையின் அடிநாதம்.

நாம் போராடப் புறப்பட்டோம், நாம் முரண்பாடுகளை எதிர்கொண்டோம், நமக்குள் சீரழிவுகள் தோன்றின, நாம் இதிலிருந்து எவ்வாறு மீள்வது? நாம் எவ்வாறு விடுதலை பெறுவது? போன்ற மனநிலைதான் கோவிந்தனிடம் வெளிப்பட்டது, கோவிந்தனின் சொல்முறை இயக்கத்திலிருந்து ‘நானை’ உருவாக்கிக் கொண்ட, அதிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்ட, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் இயக்கத்தை ‘மற்றமையாக’ நிறுத்திய சொல்முறை அல்ல கோவிந்தனுடையது. இதே சொல்முறையை 25 ஆண்டுகளின் பின் எழுதப்பட்ட குணா கவியழகனின் நாவலிலும் நாம் காணமுடியும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை ‘மற்றமையாக’ நிறுத்தி ‘நான்’ என்பதை உருவாக்கிக் கொண்டு ஒரு எதிர்மையை அவர் கட்டமைக்கவில்லை. உயர்வுக்கும் தாழ்வுக்கும் வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் அதலிருந்து விடுதலைக்கும் ஆன கூட்டுணர்வைக் கலையுணர்வாக கோவிந்தனும் குணா கவியழகனும் தமது நாவல்களில் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

ஷோபா சக்தி, செழியன், கர்ணன், தமிழ்க்கவி, சாத்திரி போன்றவர்கள் தமது ‘புனைவு’களில் தமது கூட்டுடணர்வையும் கூட்டுப்பொறுப்பையும் ‘மறந்து’ போகச் செய்து, ‘நானை’ உருவாக்கிக் கொண்டு இயக்கத்தையும் அதில் ஈடுபட்டவர்களையும் ‘மற்றமையாக’ முன்னிறுத்தி ஓரு வகையிலான எதிர்மையைக் கட்டமைத்துக் கொள்கிறார்கள். தமது கடந்த காலத்தை ‘மறுத்து’ அதற்கான பொறுப்பை ‘மற்றமைகளின்’ மீது முழுமையாகச் சுமத்தி விடுகிறார்கள். இந்த ‘மற்றமைகள்’ இன்றும் வாழ்கிறவர்களும் இறந்தவர்களுமாக நிஜப்பெயரில் நடந்த சம்பவங்களில் வைத்துக் கட்டப்படுகிறார்கள். இத்தகைய சொல்முறையினால் கதை சொல்பவர்களாக தாம் கூட்டுப்பொறுப்பிலிருந்தும் இயக்கச் செயல்போக்கிலிருந்தும் ‘செயற்கையாக’ விடுவித்துக்கொள்வதன் மூலம் தமக்கும் கதை மாந்தர்க்கிடையிலும் ஒரு ‘எதிர்மையை’ உருவாக்கிக் கொள்வதன் மூலம் புனிதம்-புனிதம் அல்லாதது எனும் சொல்முறையைக் கண்டைகிறார்கள்.

இத்தகைய சொல்முறை என்பது ஒரு எதிர்ப்பியக்கம் தோன்றி, வளர்ந்து, முரண்பட்டு, தேய்ந்து, சிரழிந்து, வீழ்ந்தது எனும் செயல்போக்கை ‘நானும் மற்றவர்களும’ அல்லது ‘தானும் மற்றமையும்’ எனும் விகாரமான தனிநபர்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் சச்சரவுகளாகவும் முடித்துவிடுகின்றன.

இது ஏன் இவ்வாறு நிகழ்கிறது? இவர்கள் நிகழ்வுகளை எழுதுகிறார்கள். சம்பவங்களை எழுதுகிறார்கள். முரண்களை எழுதுகிறார்கள். அரசியலை எழுதுகிறார்கள். தரவுகள் நிச்சயமானவை எனவும் புனைவுகளுக்கு வெளியில் நேர்முகங்களில் உரையாடல்களில் கட்டுரைகளில் விரிவாக வாதிடுகிறார்கள். எனில் ஏன் இதனைப் புனைவு எனும் வடிவத்தில் எழுது வேண்டும்? சம்பவங்கள் தரவுகளோடு பெயர்களோடு இருக்குமானால் அதனை வரலாறு எனவே உரைநடையில் எழுதலாமே?

புஷ்பராசா, செழியன், ஐயர், பொன்னுத்துரை போன்றவர்கள் அப்படி எழுதித்தானேயிருக்கிறார்கள்?

மேலாக, புனைவில் ‘மற்றமைகளை’ பெயர் சொல்லி எழுதுகிறவர்கள் தம்மைக் கதைசொல்லி எனும் சாத்தியத்தில் மறைத்துக் கொள்ள முடிகிறது. தொடர் வசவுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இதுவே காரணம். இன்னும் இந்திய இலங்கை மேறகத்திய அரசுகளும் ‘மற்றமைகள’ எதிர்கொள்ள வேண்டிய தண்டனைச் சட்டங்களும் நிலவும் சூழலில் முறைசாரா பாலுறவுகள், ஆயுதக்கடத்தல்கள், படுகொலைகள் போன்றவற்றை பெயர்கள் குறிப்பிட்டு எழுதும்போது சம்பந்தப்பட்டவர்கள் அதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது ஒரு போதும் புனைவு அறமாக முடியாது.

இன்று கதைசொல்லிகளால் ‘குற்றங்கள்’ மற்றும் அரச விரோதச் செயல்கள் என சொல்லப்படும் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் இயக்கங்களின் ‘இயல்பான’ செயல்பாடுகளாகவே இருந்தன, அதனை நம்பியே இயக்கத்தின் பகுதியாக இருந்தவர்கள் இதில் ஈடுபட்டார்கள் என்பதனையும் நாம் மறந்துவிடமுடியாது.

ஓன்று தரவுகளை எழுதுகிறவர்கள் எனில் எழுதுவதற்குப் பொறுப்பேற்று வரலாறு என எழுதவேண்டும். அல்லது புனைவு எனில் மாதிரி மாந்தர்களைப் படைத்து சம்பவம்-அரசியல்-உணர்வுகள்-கருத்தியல் எனத் தழுவி எழுத வேண்டும். கோவிந்தனும் குணா கவியழகனும் அத்தகைய புனைவிற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

இயக்கத்திற்குள் நடந்த கொலைகளை, மீறல்களை, பிறழ்வுகளை எழுதவே வேண்டும். அதில் ஏதும் சந்தேகமில்லை. அதனது அறமும் நோக்கமும் புனிதனும் சாத்தனும் என்று சொல்வது இல்லை. வரலாறு எனில் அதற்குரிய அறத்துடன் எழுத வேண்டும். புனைவு எனில் அதற்குரிய அழகியலுடன் எழுத வேண்டும். இது அல்லாதபோது தனிநபர்களுக்கு இடையிலான வன்மமான பழிவாங்குதல்களாகவே இத்தகைய புனைவுகள் இழியும்.

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த இன்றைய புனைவுகள் எதிர்கொள்ளும் வடிவ நெருக்கடியும் விமர்சன நெருக்கடியும் இது. ரஜீவ விஜேஜிங்காவின் கவிதைத் தொகுதி வெளியான பிறகு ஈழக் கவிதையின் தார்மீகமும் விமர்சன மதிப்பீடுகளும் குறித்த நெருக்கடி தோன்றியிருப்பது போலவே, ஈழப் போராட்ட அனுபவங்களை எழுதுவதில் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்கள் ‘நானை’ உருவாக்கிக் கொண்டு ‘மற்றமைகளைக்’ கட்டமைத்து புனிதர்களுக்கும் சாத்தான்களுக்கும் இடையிலான வன்மமாக ‘புனைவை’ப் பாவிப்பதால் உரைநடை இலக்கியத்தினது தார்மீகமும் அது குறித்த விமர்சன மதிப்பீடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது எனவே நினைக்கிறேன்.

பிரபாகரனும் அவரது புதல்வியும் குறித்த யோ.கர்ணனது கதை, செழியனது தகவல்களின் அடிப்படையிலான முத்துலிங்கத்தின் கதை, அதனைத் தொடர்ந்த தமயந்தியின் கதை, இன்றைய சாத்திரியின் நாவல் போன்றவற்றைச் சுற்றி நடக்கும் விவாதங்களும் விவகாரங்களும் ஈழ இலக்கியம் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியின் சாட்சியமாகவே இருக்கின்றன.

இறுதியாக, இந்திய, இலங்கை அரசுகளும் அதனது திரைப்பட இயக்குனர்களும் மற்றும் இலக்கியவாதிகளும் தமிழர் பிரச்சினையின் ஜனநாயக அடிப்படைகளை ஒப்பாதவர்களாக, தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த தீமைகளை கிஞ்சிற்றும் ஒப்பாத நிலைபாட்டில் இருக்கிறார்கள். இதனை வெளியிலிருந்து பார்க்கும் மேற்கத்திய ஆவணப்பட இயக்குனர்கள் தமிழர்கள் பாலான பரிவுடன் இலங்கை இந்திய அரசுகளை விமர்சனத்துடன் பார்க்கிறார்கள். ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் இது குறித்த எந்தச் சுரணையும் இல்லாமல் தம்மைத் தாமே இழிவுபடுத்திக் கொள்வதில் கச்சைகட்டிக் களத்தில் நிற்கிறார்கள். இலட்சியத்தின் பின்னடைவு மட்டுமல்ல, இது ஒரு பண்பாட்டின் அழிவு..

http://yamunarajendran.com/?p=1964

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.