Jump to content

பிம்பங்களும் அதன் நிஜங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரோஜா அம்மா அன்று விடிந்ததிலிருந்து பரபரத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவரின் பரபரப்பை பார்த்த அவர் கணவர் சரோஜா அம்மாவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக இங்க பாரு இப்படி ஓடி ஓடி எல்லாவற்றையும் தயார் படுத்திக்கொண்டு உம்முடைய உடம்பை கெடுக்க வேண்டாம் . நீ இப்படி எல்லாம் ஆர்ப்பரிக்கிறதுக்கு உன்னுடைய மருமகன் இன்று வருவானோ, என்னவோ தெரியாது . அவனுக்கு தானே எங்களை அவ்வளவாக பிடிப்பது இல்லை. ஆகவே இந்த ஆர்பாட்டங்களை விட்டு விட்டு எனக்கும் உனக்கும் கோப்பி போட்டுகொண்டு வந்து இந்த கதிரையில கொஞ்சம் அமரும் . சிறு கண்டிப்புடனும், கரிசனையுடனும் குமரேசன் கூறினார் .

 

அதற்கு என்னங்க சொல்றீங்க ? இன்றைக்கு உங்களுக்கு 80வது வயது பிறந்த நாள் . மகள் ரதி கட்டாயம் மருமகன் குமாரை சமாதானப்படுத்தி பேத்தியுடன் வருவதாக சொல்லி இருக்கிறாள் . அந்த படம் பிடிக்கிறவன் பின்னேரம் 4 மணி அளவில கட்டாயம் வாறன் என்றும் சொல்லியிருக்கிறான் . மற்றும் மருமகன் நீண்ட நாட்களுக்கு பின் வருவதினால் நான் அவருக்கு பிடித்த முறுக்கும் வேறு சில சிற்றுண்டி வகைகளும் செய்து வைக்க வேண்டும் . வீடும் துப்பரவாக இருந்தால் தானே படம் எடுக்கையில் எல்லாம் வடிவாக இருக்கும் . நீங்கள் கொஞ்சம் என்னை குழப்பாமல் அப்படியே தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருங்கள். சரோஜா அம்மா ஆரவாரத்துடன் எல்லாவற்றையும் மூச்சு விடாமல் அப்படியே கூறி விட்டு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தார் .

 

அவரது நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறப் போவதைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு அவரை தொற்றிக்கொண்டிருந்தது . வயதின் நிமித்தம் சுகயீனமுற்றிருக்கும் கணவருடன் தங்கள் ஒரே மகள், அவளது குடும்பமுமாக ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக எண்ணி இருந்தார் . சிறிது காலமாக மருமகன் காரணமின்றி அவர்களை வெறுக்கத் தொடங்கி, வந்து பார்ப்பதையே நிறுத்தி இருந்தது அவருக்கு கவலையை அளித்தது. தாங்கள் அவருக்கு என்ன பிழை செய்தோம் என்பதே அவ்விருவருக்கும் புரியவில்லை . ஏதோ மகள் ரதி நல்லா இருந்தால் அதுவே தங்களுக்கு போதும் என்ற நிலைபாட்டில் அவர்கள் ஒரு போதும் மருமகனை கூட்டி வருமாறு ரதியிடம் வற்புறுத்தியதும் இல்லை . ஆனால் இன்றைய நாளைத் தவிர . அதாவது சரோஜா அம்மாவே நேரில் சென்று மருமகனிடம் மன்றாடி, குமரேசனின் பிறந்த நாளுக்கு எடுக்கபோகும்  புகைப்படத்தில், ரதி கணவனுடன்  குடும்பமாக இருப்பதையே குமரேசன் விரும்புவதனால் மறுக்காது வருமாறு தயவாக கேட்டுக் கொண்டார் . மருமகன் குமாரும் ம் என்று அமோதித்ததினால் தான் இன்று இவ்வளவு ஆர்ப்பாட்டம் சரோஜா அம்மாவின் வீட்டில் .

 

ஆனால் அங்கு ரதியின் வீட்டிலோ ஒரே கலவரம் தான் நடந்து கொண்டு இருந்தது . ஆம், ரதி அப்பாவின் பிறந்த நாளுக்கு போவதற்காக கணவனை மிகவும் கெஞ்சிக் கொண்டிருந்தாள் . அவனது உடுப்புகள் எல்லாம் தயார் நிலையில் வைத்தபடியே தயவு செய்து வெளிக்கிடுங்கோ! அப்பாவை இன்றைக்கு கவலைப்படுத்த கூடாது . அவர் இனி எவ்வளவு நாள் உயிரோடு இருப்பாரோ தெரியாது . அவர் போறதுக்கு முன்னர் குடும்பமாக ஒரு புகைப்படம் எடுத்து வைக்க அம்மா சரியாக ஆசைபடுகிறா . நீங்கள் வருகிறேன் என்று கூறிவிட்டு இப்பொழுது எனக்கு வேற வேலை இருக்கு, நேரம் இல்லை என்றால் என்ன அர்த்தம் ? நீங்கள் செய்வது கொஞ்சமும் சரி இல்லை . இன்று மட்டும் வாருங்கள் . இனிமேல் நான் ஒரு பொழுதும் என் பெற்றோரை சந்திக்கும்படி கேட்க மாட்டேன் ரதி குமாரிடம் மன்றாடினாள் . குமார் இவளது கெஞ்சலை பொருட்படுத்தாதவாறு உன்னுடைய அப்பாவின் பிறந்த நாள் என்றால் எனக்கென்ன ? அவர்கள் என்ன எனக்கு சீதனமா கொட்டி தந்து விட்டார்கள், நான் சென்று மரியாதை கொடுக்கிறதுக்கு. இவனது பேச்சைக் கேட்ட ரதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது . நாங்கள் இருவரும் காதலித்து கலியாணம் செய்தோம் . அம்மா அப்பாவிற்கு இந்த கலியாணத்தில் விருப்பம் இல்லை என்று உங்களுக்கு தெரியும் தானே . அந்த நேரம் சீதனம் ஒன்றும் வேண்டாம் , நாமிருவரும் சேர்ந்தால் போதும் என்று கூறி விட்டு பின்னர் அவர்கள் மறுத்த ஒரே ஒரு காரணத்தை மனதினுள் வைத்துக் கொண்டு இப்படி வஞ்சம் தீர்ப்பது நியாயமாகுமா ? உங்கள் அம்மாவிற்கும் தான் என்னை பிடிக்காது, அப்படி இருக்கையில் உங்கள் வீட்டு விசேஷம் என்றால் நான் உங்களுடன் சேர்ந்து வந்து என் கடமைகளை இத்தனை வருடங்களாக செய்து கொண்டுதானே வருகிறேன் . ஆனால் நீங்கள் மட்டும் எனது பெற்றோரை பார்க்க வருவதில்லை . நானும் ஒரு நாளும் உங்களை வருமாறு வற்புறுத்தியதும் இல்லை . இன்று மட்டும் கேட்பதன் காரணம் எடுக்கப்போகிற புகைப்படத்தில் நான், எங்கள் மகள் ரோஷியுடன் தனியாக தெரிவது அவ்வளவு நன்றாக இருக்காது . இது அப்பாவின் கடைசி ஆசை என்றே வைத்துக்கொள்ளுங்களேன். ரதியின் கண்களில் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது .

 

சீச்சீ, என்ன மனுஷன் இவர் . இப்படி செய்கிறாரே ! அப்பொழுது காதல் கண்களை மறைத்தது . இப்பொழுது எல்லாம் தெளிந்தவுடன் அவருக்கு நானும் என் குடும்பமும் தேவையில்லை . கோபமும் கண்ணீருமாக மகளை நாடிச்சென்றாள். ரோஷி என்று கூப்பிட்டுக்கொண்டு சென்றவள் மகள் இன்னமும் தயாராகாமல் இருப்பதைக் காண ரதிக்கு மேலும் ஏமாற்றமாக இருந்தது . என்னம்மா ரோஷி பாட்டாவின் பிறந்த நாளுக்கு போக வேண்டுமென்று உனக்கு எத்தனை தரம் கூறி இருந்தேன் . நீ இன்னமும் வெளிக்கிடாமல் இருந்தால் எத்தனை மணிக்கு நாம் போய் சேர்வது . அங்கே புகைப்படம் எடுப்பவர் வந்து தயார் நிலையில் இருப்பார் . ரோஷி நீ இப்படி தாமதிப்பது சரியில்லை. ரதி ஆதங்கத்துடன் கூறிக்கொண்டே போக அம்மா நான் வெளிக்கிட்டு தான் இருக்கிறேன். எனக்கு நீங்கள் அணிவதற்காக வைத்த அந்த சல்வார்கமீஸ் அணிந்து வர விருப்பம் இல்லை . நான் இப்பொழுது அணிந்திருக்கும் ஜீன்ஸ் எனக்கு சௌகரியமாக இருக்கிறது . ஆகவே தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம் அம்மா என்று தாயை இடைநிறுத்தினாள் ரோஷி .

 

ரதி அப்படியே அங்கிருந்த கதிரையில் தொப்பென்று அமர்ந்தாள். அவளுக்கு ஆற்றாமையினால் ஒ! என்று அழவேண்டும்போல் இருந்தது .ஒரு பக்கம் கணவன் நியாயமே இன்றி வர மறுக்கிறான் . மறு பக்கம் மகள் சாதாரணமாக கிளம்புவது போல் உடை அணிந்து நான் தயார் என்கிறாள் . தன் தந்தையின் 80வது வயது பிறந்தநாளை தன் குடும்பத்துடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டாள். இதற்காக தானே என் அம்மாவும் இனியும் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமோ என்று எண்ணியதனாலேயே இந்நாளை அப்படியே புகைப்படம் பிடிப்பதன் மூலம் என்றும் நினைவு கூற ஆசைபட்டார் .

 

ரதி தனது பெற்றோரின் ஆசையை நிவர்த்தி செய்ய முடியாமல் போகிறதே என்பதை எண்ணுகையிலேயே அவளது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தது . வயதான தன் தந்தை தாயின் கண்களில் ஆனந்தத்தை காண ஆசைப்பட்டவள் எல்லாம் நிராசையாக போகிறதே என்று மிகவும் மனவருத்தப்பட்டாள். இவளது நிலையைக்கண்ட மகள் ரோஷி ஒரு கணம் திடுக்கிட்டாள். அவளால் தன் தாய் மனம் வருந்துவதை காண இயலாமல் உடனே தந்தையை நாடிச்சென்று எப்படியோ சமாதானம் செய்து தயாராகும்படி கேட்டுவிட்டு தானும் அம்மா எடுத்து வைத்த அந்த சல்வார்கமிஸ்யையும் அணிந்து கொண்டாள். ரதியிடம் மெல்ல வந்து அம்மா நானும் அப்பாவும் தயாராகி விட்டோம் . பாட்டாவும் அம்மம்மாவும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் . தாமதிக்காமல் போக வேண்டும் . ஆகவே கிளம்புங்கள் என்று தன் தாயை மெல்ல தட்டினாள். நிமிர்ந்து பார்த்த ரதி, மகள் சல்வார்கமீஸ் அணிந்து அழகாக நிற்பதைக்கண்டு திடுக்கிட்டாள் . உடனே கண்களை துடைத்தபடியே முக மலர்ச்சியுடன் தனது பெற்றோரிடம் கணவன் மகள் என குடும்பமாக வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள் .

 

குமரேசன் தனது 80 வது பிறந்த நாளைக் கொண்டாடி மூன்று மாதங்களில் மாரடைப்பு வந்து இறைவனடி சேர்ந்தார் . துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் எல்லாம் அங்கே சுவரில் மாட்டியிருந்த குமரேசன் தன் குடும்பத்துடன் எடுத்திருந்த அந்த புகைப்படத்தைப் பார்த்து பாராட்டினர். அஹா என்ன அழகான புகைப்படம் இது . குமரேசன், அவர் மனைவி, மகள், மருமகன், பேத்தி என்று எல்லோரும் சந்தோஷமாக சிரித்தபடியே புகைப்படத்தில் தெரிகிறார்கள். குமரேசனும் மிகவும் கம்பீரமாகவும் இப்படத்தில் தோற்றம் அளிக்கிறார் . புகைப்படத்தில் எல்லோரும் சந்தோஷமாக காட்சி தருவதைப் பார்த்தாலேயே தெரிகிறது, எவ்வளவு அன்னியோன்னியமான குடும்பம் இது என்று . வந்தவர்கள் ஆளாளுக்கு புகைப்படத்தை பார்த்து மெச்சிக்கொண்டனர். சரோஜா அம்மா இவர்களின் உரையாடலைக் கேட்டு தன் மனதிற்குள் அன்று புகைப்படம் எடுக்கும் முன்னர் எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் பின்னர் குமரேசன் விரும்பியபடியே எல்லாம் நல்லப்படியே முடிந்ததே என்று ஆறுதல் அடைந்தார் .

 

ஒவ்வொரு புகைப்படங்களின் பின்னும் எத்தனையோ கதைகள் அடங்கி இருகின்றன. நாம் அப்புகைப்படங்களை காலங்கள் கடந்த பின் எடுத்து பார்க்கையில் பல நேரங்களில் அவை பல சுகமான நினைவுகளை தான் மீட்டிக் கொடுக்கிறது .

       சுபம்

  •  மீரா குகன்

எனது சிறுகதை ஒன்றை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன் . தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

திருத்திக் கொள்வேன் . நன்றாக இருப்பின், அதையும் தெரிவியுங்கள் . அது எனக்கு உற்சாகத்தை தரும் .

மிகவும் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ..

ஒவ்வொரு புகைப்படங்களின் பின்னும் எத்தனையோ கதைகள் அடங்கி இருகின்றன. நாம் அப்புகைப்படங்களை காலங்கள் கடந்த பின் எடுத்து பார்க்கையில் பல நேரங்களில் அவை பல சுகமான நினைவுகளை தான் மீட்டிக் கொடுக்கிறது 

 

இவ்வாறு ஒரு புகைப்படம் வரலாறுகளையும் மாற்றி  எழுதியுள்ளது..

 

நல்லதொரு கரு

அதை எழுதிச்சென்றவிதம்

மற்றும் உறவுகளின் உணர்வுகளைப்பதிந்து சென்ற சொற்கள் நிச்சயம் வரவேற்பைப்பெறும்

தொடருங்கள்..

வாழ்க வளமுடன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி விசுகு.

யாழில் பகிர்ந்து கொண்ட என் முதல் படைப்பு . உங்கள் வாழ்த்து என்னை நிச்சயம் ஊக்குவிக்கும் .

என் கற்பனையில் உருவான ஒரு காதல் கதை தொடரை உங்கள் எல்லோருடனும் பகிரப் போகிறேன் . :wub:

ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன் விசுகு . நன்றி . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குடும்பங்களுக்குள் நடைபெறும் உறவுகளின் உணர்வுகளை எடுத்துச் சொல்லும் பாங்கு நன்றாக உள்ளது. தாயின் கண்டிப்பை விட தாயின் கண்ணீருக்கு மிகுந்த சக்தி உண்டு என்பதையும் கூறியுள்ளீர்கள். நிழற்படங்களை எடுத்தவுடன் அழகை மட்டும் ரசிக்கும் நாம் பல வருடங்களின் பின் பார்க்கும் பொழுது அது சொல்லும் பல கதைகள் எம் கண்களில் நீரையும் மனங்களில் ஏக்கத்தையும் வரவைப்பதை நாம் பல தடவைகளில் உணருவதை அழகாகக் கூறியுள்ளீர்கள். படைப்புப்பளைத் தொடருங்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களைத் தாருங்கள்
உண்மைகள் பல உறங்கியிருக்கும் வேளைகளில்
பொய்கள் உண்மைபோலத் தோற்றமளிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான் . வெளிப்பார்வைக்கு எல்லாம் சுமூகமாக தான் தெரியும் . அவை யாவும் வெறும் விம்பங்கள் தான் .நிஜங்கள் பலநேரங்களில்  வேறு விதமாக இருக்கும் .

உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.