Jump to content

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்; 32 ஆண்டு சாதனை முறியடிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார்.

அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) .

chesss0130_1.jpg

இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை ஏற்படுத்தக்கூடிய நுட்பமான செஸ் கேம்களும் உருவாக்கபட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஐபிஎம்மின் டீப் புளு கம்ப்யூட்டர் செஸ் மகாராஜா காஸ்ப்ரோவிற்கோ கண்ணாமூச்சி காட்டியிருக்கிறது.

ஆனால், இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் செஸ் கேம் இந்த அளவுக்கு எல்லாம் திறன் படைத்ததல்ல. மாறாக அது மிக மிக எளிதானது. அதன் சிறப்பு அதன் கீர்த்தியில் இல்லை;அதன் மூர்த்தியில் இருக்கிறது. ஆம், இது வரை உருவாக்கப்பட்ட செஸ் கேம்களிலேயே மிகவும் சிறிய கேமாக இந்த பூட் செஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

சிறியது என்றால் ,கம்ப்யூட்டரில் விளையாடக்கூடிய செஸ் கேம்களிலேயே மிகவும் சிறியது. கம்ப்யூட்டர் மொழியில் சொல்வதனால் இது 487 பைட் மட்டுமே கொண்டது. பைட் என்பது கம்ப்யூட்டர் அல்லது சிப்களில் ஒரு புரோகிராம் அல்லது சாப்ட்வேர் இயங்க தேவையான இடப்பரப்பை குறிக்கும். 

புரோகிராமோ , கேமோ கிலோபைட் எல்லாம் கூட ஒன்றுமே இல்லை என ஆகிவிட்ட நிலையில் இந்த சாப்ட்வேர் கில்லாடி 487 பைட் அளவுக்கு ஒரு முழுமையான செஸ் கேமை உருவாக்கியிருக்கிறார். 

சாப்ட்வேர் வரலாற்றில் இது ஒரு மைல்கல் மற்றும் சாதனை என்கின்றனர். இதற்கு முன்னர் சின்கிலர் கம்ப்யூட்டரில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட 1 கே இசட்.எக்ஸ் செஸ் கேம் தான் மிகச்சிறியது என்று கருதப்பட்டு வந்தது. இந்த கேம் உருவாக்கப்பட்டது 1983 ம் ஆண்டில். ஆக 33 ஆண்டுகளுக்கு பிறகு ஆலிவர் பவுடாடே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

கவிதையில் சொற்சிக்கனம் என்பது போல பவுடாடே கோடிங்கில் சிக்கனத்தை கடைபிடித்து மொத்த செஸ் கேமையும் 487 பைட்டில் கொண்டு வந்திருக்கிறார்.இதற்காக புரோமிங்கில் புதுமையை கையாண்டதுடன் பழைய அசெம்பிளி லாங்குவேஜ் நுட்பத்தையும் நாடியிருக்கிறார்.

chesss0130_2.jpg

ஆனால்,இந்த கேம் உள்ளடக்கத்திலும் சரி ,தோற்றத்தில் சரி ரொம்ப சாதாரணமாக இருக்கிறது. பைட்களை சேமிக்க வேண்டும் என்றால் கிராபிக்ஸ்களை எல்லாம் மறந்துவிட்டு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தியாக வேண்டுமே.

சொல்லப்போனால் இந்த சின்னஞ்சிறிய செஸ் கேமில் நகர்த்துவதற்கு காய்கள் கூட கிடையாது. எல்லாமே எழுத்துக்கள் தான்.சிப்பாய்களும் ,ராணியும் ,ராஜாக்களும் எழுத்துக்கள் தான். கியு என்றால் ராணி. பி என்றால் சிப்பாய்கள். அதே போல காய்களின் நிறத்தை குறிக்கும் குறியீட்டிலும் சிக்கனம் தான். பெரிய எழுத்துக்கள் வெள்ளை நிற காய்கள். சிறிய எழுத்துக்கள் கருப்பு நிற காய்கள். எழுத்துக்களை டைப் செய்வதன் மூலம் காய்களை நகர்த்த வேண்டும்.

பூட் செஸ் கேமை எப்படி ஆடுவது என விரிவாக குறிப்புகளையும் தந்திருக்கிறார் பவுடாடே. ஆனால் இதை புரிந்து கொள்ளவே கொஞ்சம் புரோகிராமிங் அடிப்படை தெரிந்திருந்தால் நல்லது. 

கம்யூட்டர்களில் நினைவுத்திறன் என்பது மிகவும் காஸ்ட்லியாக இருந்த காலத்தில் டேவிட் ஹோம் எனும் சாப்ட்வேர் வல்லுனர் , 1 கே இசட்.எக்ஸ் செஸ் கேமை 672 பைட் அளவில் உருவாக்கி கம்ப்யூட்டர் உலகை வியக்க வைத்தார். வீடியோ கேம் என்பது மெய்நிகர் பரப்பில் முழு மாய உலகையும் உள்ளடக்கியதாக இருக்கும் காலத்தில் பவுடாடே இந்த கேமை விட சிறிய கேமை உருவாக்கி புருவங்களை உயர வைத்திருக்கிறார்.

இருந்தாலும், இதில் செக் வைப்பதற்கான வழியே இல்லை என்பது போன்ற குறைகளை சுட்டிக்காட்டி இது ஒரு செஸ் கேமே இல்லை என்றும் சிலர் விமர்சித்துள்ளனர். பவுடாடே அது பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. முதல் கேமிலேயே இது போன்ற குறைகள் உண்டு என்று கூலாக கூறியிருக்கிறார். விஷயத்தை விட்டுவிட்டு குறைகளை தேடிக்கொண்டிருப்பவர்களால் இந்த சாதனையை புரிந்து கொள்ளமுடியாது என நினைக்கிறார் போலும்.

செஸ் கேமில் ஆர்வமிருந்தால் பூட் செஸ் கேமை ஆடிப்பார்க்கலாம். ஆனால் இத்ன் மூலம் செஸ் நுணுக்கங்களை எல்லாம் கற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும் என்ன கோடிங் நுணுக்கம் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாமே.

பூட் செஸ் கேம்; http://www.pouet.net/prod.php?which=64962

- சைபர்சிம்மன்

http://cybersimman.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.