Jump to content

தண்ணீரிலே தாமரைப் பூ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே தாமரைப் பூ
                 
                    (1) 

 

'வசந்தங்கள் வாழ்த்துரைக்க
வான்மேகம் பூத்தெழிக்க
சொந்தங்கள் சூழ்ந்து நிற்க
சொர்க்கமே அருகிருக்க
மங்கள மேளமது
சங்கமம் என ஒலிக்க
தங்கமாய் வந்ததொரு
தரமான வசந்தவிழா'

 

விடிந்தால் திருமணம்.
வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது.
ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர்.
முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது.
பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
'டேய் கதிரேசு, பந்தலுக்க போடிற கதிரைகளெல்லாம் இறக்கியாச்சா எண்டு பார்'
யாருக்கோ கட்டளை இட்டபடி அண்ணன் கேசவன் கால் நிலத்தில் நிற்காமல் பறந்தான்.
'இந்த வாழைமரம் நேரா இருக்குதாஎண்டு பார்' யார் யாரையோ கேட்டு தான் செய்யும் காரியம் சரியா எண்டு உறுதிப்படுத்திக் கொண்டிருந்தனர்
மணவறை அலங்காரம் மறுபக்கத்தில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது
கேசவனின் நண்பர்கள் சிலர் அந்த அலங்காரம் செய்வதில் அக்கறையோடு செயற்பட்டுக் கொண்டு இருந்தனர்.
பின் பக்கம் உணவுதயாரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
'இந்த சின்னவெங்காயத்தை முழுவதும் உரிக்க வேணும்'
சொல்லியபடி பார்வதி ஒரு கூடையில் சின்ன வெங்காயத்தை கடைவிரித்தாள்.
அயலவர் உறவினர் என்று அங்கு கூடியிருந்த பெண்களுள் சிலர் வெங்காயம் உரிப்பதற்கு முன்வந்தனர்.
சமையல்வேலை செய்வதற்கென்று பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட சிலர் பெரிய அண்டாக்களுடன் புகை நடுவில் போராடிக்கொண்டிருந்தனர்.
எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று நோட்டமிட்டபடி மணியம் வீட்டுத்தலைவனுக்கே உரிய பொறுப்புடன் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தார்.
பூ மணமும்;;, பன்னீர் மணமும், பலகார மணமும், சந்தண மணமும், எல்லாம் இணைந்த திருமணவீட்டின் நறுமணம் எல்லோரையும் ஓர் இன்பமான சூழலுக்குள் இட்டுச்சென்றது.
கல்யாணியின் நண்பிகள் அவளைச் சுற்றி ஒரே கேலியும் கிண்டலுமாக அவளைச் சீண்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
'கல்யாணி நீ நேரத்துக்கு நித்திரைக்குப் போ' விடிய அலங்காரம் செய்ய நேரத்தோட எழும்ப வேணும்' அம்மாவின் கட்டளை அங்கு எடுபடுமா என்ன?
கல்யாணிக்கு ஒரே பரபரப்பும்;, பயமும், நாளைக்கு எல்லாம் ஒழுங்காக நடைபெற வேண்டுமே என்ற பதைதைப்பும், மகள் என்ற உறவு தாண்டி பெற்றவர்களை விட்டு ஓர் புதிய உறவுக்குள் புக இருக்கும் ஓர் சுகமான உணர்வும், எல்லாமாகச் சேர்ந்து கல்யாணியின் கண்களை மூடவிடாமல் அடம் பிடித்தன.
அது தவிர 'புடவையை ஓழுங்காகக் கட்டி விடுவார்களோ? தலை அலங்காரம் பொருத்தமாகச் செய்வார்களோ?  நகைகள் அளவாக அணிவிர்பார்களோ? இப்படி இன்னோரன்ன எதிர்பார்ப்புக்களால் மனம் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்க தூக்கமாவது ஒன்றாவது.
ஏதோ நடப்பது நடக்கட்டும் தூங்கலாம் என்று கண்களை மூடினாலும் தோழிகளின் கசமுசா பேச்சினாலும் பந்தல் அலங்காரம் செய்பவர்களின் கலகலப்பாலும் சமையல் செய்பவரின் சந்தடியாலும் இரவு முழுவதும் தூக்கமில்லாமலேயே கழிந்தது.

    
              (2)

 

'மெல்லத் திறந்தது கதவு
மேனி தழுவியது தென்றல்
உள்ளம் முழுவதிலும் கனவு
உயிரில் கலந்ததிந்த உறவு'

 

அதிகாலை நான்கு மணிக்கே ஒலிபெருக்கியில் நாதஸ்வர இசையை ஒலிபரப்பி அனைவரையும் விழித்தெழுந்து தத்தமது கடமைகளை ஆரம்பிக்கச் செய்து விட்டார்கள். வீட்டிலுள்ள அறைகள் மண்டபம் கிணற்றடி முற்றம் என்று எல்லா இடங்களிலும் மங்கையரும் மழலைகளும் பெரியவர்களுமாக திருமண வீடு களை கட்டத் தொடங்கி விட்டது.
ஓர் அறைக்குள் கல்யாணிக்கு மணப்பெண் அலங்காரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இயற்கையிலேயே அழகுச்சிலையான கல்யாணி இளம் சிவப்பு பட்டுப் புடவையிலும், தலை நிறைய பூக்களிலும், கல்லுவைத்து இழைக்கப்பட்ட பதக்கம், ஒட்டியாணம், சிமிக்கி, உச்சிப்பட்டம், என்று பல்வறு மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரங்களினாலும் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
பாவாடைத் தாவணிகளுடன் பட்டாம் பூச்சிகளாய் வீட்டில் பறந்து திரியும் இளம் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு.
பூக்களிலே எத்தனை நிறம், எத்தனை ரகம், எத்தனை அழகு.
அழகற்ற பூ என்று அகிலத்தில் ஏதேனும் உண்டோ?
சமையற்கட்டுப் பக்கமிருந்து பருப்பு, பாயாசம், பொரியல், என்று பலவித மணங்கள் பரவி பசியைத் தூண்டிக் கொண்டிருந்தன.
'கும்பம் வைத்திருக்கும் மேசையில் எல்லாம் சரியா இருக்கா எண்டு பார்' பார்வதி தாய்க்கே உரிய பொறுப்புணர்வுடன் யாரையோ விரட்டிக் கொண்டிருந்தாள்.
அம்மா பார்வதியும் அப்பா மணியத்தாரும் பட்டுப் புடவை பட்டு வேட்டிசால்வை என்று அமர்க்களமாக வெளிக்கிட்டிருந்தனர்.
இருவர் முகத்திலும் தம் ஒரே மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற இருப்பதையிட்டு பெருமிதம்.
கல்யாணிக்கு நல்ல வரனாக அதுகும் கொழும்பில் சொந்தமாக பெரிய பிஸ்னஸ் செய்யும் மாப்பிள்ளை எடுத்து விட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
கணேசனும் பெற்றவருக்கு ஒரே மகன்;. செழிப்பான குடும்பம். அழகில் மட்டுமல்ல குணத்திலும் சிறந்தவன் என்பதால் பார்வதியினதும் மணியத்தாரினதும் சந்தோசத்திற்கு கேட்கவா வேணும்.
மங்கள மேளம் முழங்க, மந்திர வேதம் ஒலிக்க, உறவுகள் சூழ மலர் தூவி வாழ்த்திசைக்க கல்யாணியும் கணேசனும் கைத்தலம் பற்றி மங்கலநாண் அணிந்து மலர் மாலை மாற்றி மணமக்களாக பட்டுப் புடவை சரசரக்க அக்கினியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணச் சடங்குகளின் எல்லா நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருந்தது
கணேசனின் அருகாமையினால் கல்யாணி நாணத்தில் முகம் சிவந்தாள். பக்கத்தில் அமர்ந்திருக்கம் கல்யாணியின் அழகை பார்த்து ரசித்தான் கணேசன்.
எல்லா சடங்குகளும் முடிந்து மணமக்களை அனைவரும் வாழ்த்தி பந்தியில் அமர்த்தி பரிமாறி அனைத்தும் செய்து முடிப்பதற்குள் பார்வதியும் மணியத்தாரும் மட்டுமல்ல கேசவனும் களைத்துப் போய் விட்டனர்.

              

                  (3)

 

'மனதோடு மனம் பேசும்
மௌன மொழி
மனதுக்குள் பூப்பூக்கும்
சலங்கை ஒலி
காற்றோடு நான் வந்து
கவிதை சொல்லி
கனவுக்குள் உறவாடி
மகிழ வேண்டும்'

 

இன்று கல்யாணிக்கும் கணேசனுக்கும் முதலிரவு.
எத்தனை திரைப்படங்களிலும் கதைப்புத்தகங்களிலும் தோழிகளின் அரட்டைகளிலும் முதலிரவைப்பற்றி பார்த்து கேட்டு இருந்தாலும் முதன் முதலில் தன் கணவனையோ மனைவியையோ தனிமையில் சந்திக்கும் அந்தக் கணத்தைப்பற்றி ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணுக்குள்ளும் ஏதாவது கற்பனைகள் இல்லாமல் இருக்காது.
கல்யாணி வீட்டிலேயே முதவிரவுக்கான ஆயத்தமாக அவர்களுக்கான அறை ஒதுக்கப்பட்டு அழகான ஜன்னல் திரைச்சீலைகளுடனும் பளபளப்பான படுக்கை விரிப்புக்களுடன் ஓர் ரம்மியமான சூழலாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கணேசனை சூழ்ந்து அமர்ந்திருந்த நண்பர்கள் 'கல்யாணத் தேன்நிலா காய்க்காத பால்நிலா' என்று வாலியின் பாடல் வரிகளை தாளம் போட்டு பாடி ஆரவாரித்துக்கொண்டிருந்தனர்.
மறுபுறம் கல்யாணியை சுற்றி தோழிகள் சீண்டிக் கொண்டிருந்தனர்.
'போதும் நல்லா நேரம் போச்சுது. உங்கட கதைகள நிப்பாட்டிப் போட்டு எல்லோரும் படுக்கப் போங்க.' பார்வதி கட்டளையிட தோழிகள் கண்சிமிட்டி கலைந்து போயினர்.
தனியறை.
கல்யாணியும் கணேசும் முதன் முதலில் தனிமையில் சந்திக்கும் இனிமையான நேரம்.
கணேசை நிமிர்ந்து நேருக்கு நேர் பார்க்க துணிவின்றி தலை குனிந்த கல்யாணியின் பக்கத்தில் வந்த கணேஸ்
'உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தாலேன்ன?'
என்று நகைச்சுவையாக கல்யாணியின் காதுக்குள் பாட
கணேசின் மார்பில் நாணத்துடன் முகம் புதைத்தாள் கல்யாணி.
வானில் நீந்திய முழுமதி இவர்களைக் கண்டு நாணி மேகத்துக்குள் முகம் புதைத்துக் கொண்டது.
இரு இதயங்கள் மட்டுமல்ல இதழ்களும் சங்கமித்தன.
அந்த இனிய இரவு இன்பத்தில் குளித்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் கணேசும் கல்யாணியும் கோவில், குளம், விருந்து, சினிமா, என்று பொழுதுகள் போனதே தெரியாமல் பறந்து கொண்டிருந்தது.
கல்யாணிக்கு பட்டும் நகையுமாக பரிசளித்து அழகோவியமான தன் மனைவியை பார்த்து பார்த்து கணேஸ் பூரித்தான்.
கல்யாணி அழகில் மட்டுமல்ல குணத்திலும் குணவதிதான் எனக் கண்டு கொண்ட கணேசின் பெற்றவர்கள் மிகுந்த மனத்திருப்தி அடைந்தனர். பிள்ளைகள் மகிழ்ச்சி கண்டு மனதுக்குள் பெருமிதமடைந்தனர்.

        

தொடரும்...........  

 

(கதையின் நீளம் கருதி அதனை பகுதி பகுதியாக இணைக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே தாமரைப் பூ

   

 

தொடரும்...........  

 

(கதையின் நீளம் கருதி அதனை பகுதி பகுதியாக இணைக்கின்றேன்)

 

என்னைப்போன்ற  வாசகர்களையும் :)  கவனத்தில் எடுப்பதற்கு நன்றிகள்..

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..ஆ..அனேகமாக யாரு எந்த ஆக்கம் போட்டு விட்டுப் போனாலும் முதல் பார்வையிடுவது யாயினியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறன்...ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை யாழைத் தான் பார்ப்பது வழமையாகிட்டு..இதுவும் உடன் பார்த்தேன் ஆனால் இப்போ எல்லாம் படித்தாலும் அதற்கு தகுந்தால் பதில் எழுத முடிகிறது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக் எழுதியுள்ளீர்கள் அக்கா. அடுத்தடுத்த பகுதிகளையும் விரைவில் இணைத்துவிடுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நேரத்தை ஒதுக்கி என் ஆக்கத்தை வாசித்து பதிவு செய்த விசுகு யாயினி இருவருக்கும் என் நன்றிகள்.
சுமே கதை நீளமாக இருப்பதால் வாசிப்பவர்களது நேரத்துக்கு மதிப்பளிக்கவே மிகுதியை பதியவில்லை. விரைவில் பதிவிடுகிறேன். ஊக்கமளிப்பிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

              (4)

 

'கவிதை மழையாய்
கனவின் எழிலாய்
உயிர்க் காதலிலே
நனைந்தாய்
காதல் சிறகால்
காற்றாய் வருடி
மன வானிலும்
சிறகடித்தாய்'

 

கணேஸ் கொழும்பில் சொந்தமாக கடை வைத்திருந்ததால் அநேக நாட்கள் ஊரில் தங்க முடியாது. கல்யாணியை பிரிந்து போகவும் விரும்பவில்லை. ஏற்கெனவே நண்பர்கள் மூலம் கொழும்பில் ஒரு வீடு பார்க்கச் சொல்லி வைத்திருந்தான்.
வெள்ளவத்தையில்; ஒரு வசதியான வீடு கிடைத்திருப்பதாக கணேசின் நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.
கல்யாணிக்கு பெற்றவர்களைப் பிரிந்து போவது கவலையாக இருந்தாலும் கணவனுடன் புதுக் குடித்தனம் ஆரம்பிக்க இருக்கும் ஆனந்தம்.
பார்வதிக்கும் மணியத்தாருக்கும் மனதுக்குள் மகளைப் பிரியும் சோகம் இருந்தாலும் புது மணமக்களை வழியனுப்புவதற்கு தேவையான பொருட்களெல்லாம் ஆயத்தம் செய்யத் தொடங்கினர்.
பார்வதி கிராமத்தை விட்டு புறப்பட மாட்டாள். எனவே கணேசின் பெற்றவர்கள் அவர்களுடன் சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து அவர்களை குடியமர்த்திவிட்டு வருவதென்று எற்பாடாகிற்று.
பார்வதி அரிசி மா, மிளகாய்த்தூள், என்று ஒரு பெரிய பட்டியலிட்ட பொருட்களுடன் பலகாரங்கள் பாத்திரம் பண்டம் என்று ஒரு வாகனம் நிறைந்த சாமான் ஆயத்தம் செய்திருந்தாள்.
'ஏனம்மா இவ்வளவு சாமான்?'என்று கேட்டதற்கு
'உங்களுக்கு தெரியாது நீங்க இப்பதான் புதுசா குடித்தனம் ஆரம்பிக்கப் போறீங்க. எல்லாச் சாமானும் தேவைதானே.'என்று அவர்கள் வாயை அடக்கி விட்டாள் பார்வதி.
கணேசின் அம்மா மங்களமும் தன் பங்குக்கு பொருட்களைச் சேர்த்திருந்தாள்.
'எல்லாம் அங்கு வாங்கலாம்' என்று கணேஸ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மங்களம் கேட்டபாடாக இல்லை. தன் ஓரே மகனின் புதுக்குடித்தனம் நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தாள்.
மங்களமும் கணவனும் தமது ஊரிலேயே வீடு தோட்டம் ஆடு மாடு என்று அவர்கள் வாழ்க்கையை அமைதியுடன் கழிக்கவே ஆசைப்பட்டனர். கொழும்பின் வாகன நெரிசலும் சனக்கூட்டமும் அவர்களுக்குப் பிடிக்காது.
எனவே மகனையும் மருமகளையும் கொழும்பில் விட்டு விட்டு இரண்டு நாட்களில் மீண்டும் கிராமத்துக்கு திரும்பிவிட முடிவெடுத்தனர்.
            

                  (5)

 

'வானக் குடை பிடிக்க
வண்ண மலர் சிரிக்க
நீலக் கடலலையும்
நித்தம் இரைச்சலிட
கோலக் குயிலிசைக்க
கொஞ்சும் கொலுசொலிக்க
ஞாலம் விழி திறக்கும்
நாளும் இதழ் விரிக்கும்'

 

கொழும்பு, அதிலும் வெள்ளவத்தை கடலோரம் பார்த்தபடி காற்றோட்டமான வீடு. கிராமத்தில் வாழ்ந்த கல்யாணிக்கு புது இடம் புது உறவுகள் எல்லாமே பிரமிப்பாக இருந்தது.
முதல் சில நாட்களுக்கு பெற்றவர்களையும் பிரியஉறவுகளையும் நினைக்க மனது ஏக்கமாக இருந்தாலும் பிரியமுள்ள கணவனின் அருகாமை அவளது ஏக்கத்திற்கு மருந்தாகியது.
வார விடுமுறை நாட்களில் பீச், பார்க், கோவில், சினிமா என்று மனம் போல சுற்றி மகிழ்வாக பொழுதைக் கழித்தனர்.
கணேசன் 'கல்யாணி, கல்யாணி என்று ஒவ்வொரு தேவைகளுக்கும் அவளைச் சுற்றிச் சுற்றியே வந்தான். கல்யாணியும் கணேசுக்கு எவ்வித குறையுமின்றி உணவு, உடை என்று எல்லாம் கவனித்து ஒரு குழந்தையைப்போல் பார்த்துக் கொண்டாள்.
அடிக்கடி பெற்றவர்களுக்கும் தன் நிறைவான இல்லறம் பற்றி கடிதம் எழுதத் தவறுவதில்லை.
பார்வதியும் மணியமும் கல்யாணியின் எதிர்காலம் பற்றிய கவலை நீங்கியதுடன் மகளின் வளமான வாழ்க்கை பற்றியும் எண்ணி எண்ணி இன்பமடைந்தனர்.
பார்வதியும் நாள் தவறாமல் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 'அம்மாளாச்சி நீதான் பிள்ளைகளின் வாழ்க்கைக்கு எவ்வித குறையுமில்லாமல் பார்த்துக் கொள்' என்று அடிக்கடி கோவிலைச் சுற்றிவர தவறுவதில்லை.
            
               (6)

 

'அன்பாகப்
புன்னகை செய்வாய்
அழகாகப்
பார்வையில் கொல்வாய்
பண்பாகப்
பேசிடும் சொல்லால்
பாசத்தை
யாசகம் செய்வாய்'

 

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. அடுத்து வந்த ஜந்து வருடத்திற்குள் கல்யாணி இரு குழந்தைகளுக்கு தாயானாள்.
நான்கே வயதான ரவியும் இரண்டே வயதான ராதாவும் பேசிய மழலை மொழியிலும் செய்யும் குறும்புகளிலும் மனதை பறிகொடுத்த கல்யாணிக்கும் கணேசுக்கும் உலகமே தம் மழலைகளாய் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் கணேசுக்கு வீடே சொர்க்கமாய் தம் பிள்ளைகளுக்கு உடை என்றும் விளையாட்டுப் பொருட்களென்றும் வாங்கிக் கொடுத்து தன் அன்பில் பிள்ளைகளை திக்குமுக்காடச் செய்தான்.
அடுத்து வந்த ஆண்டில் கல்யாணி மீண்டும் கர்ப்பமானாள் இப்பொழுது பிள்ளைகளைக் கவனிப்பது அவளுக்கு கஸ்ரமாக இருந்தது. கணேசும் வியாபாரத்தை விரிவாக்கி இருந்ததால் வீட்டிற்கு வர நேரமாகியது. வியாபாரத்தை விரிவாக்குவதற்கு பெற்றவர்களின் சில சொத்துக்களை விற்று வியாபாரத்தை ஆரம்பித்தான்.
பார்வதியும் அடிக்கடி கடிதம் எழுதினாள். இரண்டு பிள்ளைகளுடனும் தனியே கஸ்ரப்பட வேணாம். இங்கு வந்தால் நாங்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளலாம். பிரசவம் முடிந்து சில மாதங்களின் பின் மீண்டும் கொழும்பக்கு போகலாம் என்று.
கணேசுக்கும் இது சரியாகத்தான் பட்டது.
'கல்யாணி, அம்மா இவ்வளவு தூரம் கேட்டிருக்கிறா. நீர் அங்க போய் கொஞ்சநாளுக்கு ஓய்வெடுத்தால் நல்லது. பிள்ளைகளுக்கும் சந்தோசமாக இருக்கும். அம்மா அப்பா அவர்களும் பல தடவை கேட்டிட்டினம்.'
கல்யாணிக்கும் இப்ப தனக்கும் இயலாமல் இருக்கும் இந்த நேரத்தில் பெற்றவர்களின் அருகாமையும் அரவணைப்பும் தேவையாயிருந்தது.
'கணேஸ் பிள்ளைகளை விட்டிட்டு நீங்க எப்பிடி தனிய இருப்பீங்க'
'கல்யாணி சில மாதங்களுக்குத்தானே அதன்பிறகு சின்னக் குட்டியும் சேர்ந்து நாங்கள் ஜந்துபேர்' என்று சந்தோசமாகச் சொன்னவன்
இந்த நேரத்தில அம்மா அப்பா பக்கத்தில இருந்தா உமக்கு மட்டுமில்லை பிள்ளைகளக்கும் உதவியாக இருக்கும் என்று மிகுந்த அக்கறையோடு கூறவும் கல்யாணி ஊருக்குப் போக ஒப்புதல் கொடுத்தாள்.
கணேசும் கல்யாணியும் பிள்ளைகளும் வந்தது பெற்றவர்களுக்கு பெரிய கொண்டாட்டம். இரண்டு தாத்தா பாட்டிகளும் பிள்ளைகளை நிலத்தில் விடாம ல் தூக்கி தோளில் சுமந்து கொண்டு திரிந்தனர்.
இந்த ஜந்து வருடங்களில் ஈழமண்ணிலும் எத்தனையோ மாறுதல்கள். விடுதலை வேட்கையுடனும் வீர உணர்வுடனும் தியாகம் செய்ய பல இளைஞர்களும் யுவதிகளும் தம் எதிர்காலத்தையே தியாகம்செய்ய முன்வந்து எதிரிகளை எதிர்க்கத் துணிந்த காலம்.
எங்கும் தாயகவிடுதலைப் பாடல்களும் கூட்டங்களும் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருந்தது.
கல்யாணிக்கு இவையனைத்தையும் பார்க்க வியப்பாக இருந்தாலும் இவை பற்றி பல விடயங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் ஊரில் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்வாள். மண்மீட்புப் பணிக்கு தம்மை அர்ப்பணித்த வீரர்களுக்கு அடிக்கடி உணவாகவும் பணமாகவும் உதவிசெய்வதிலும் அவர்கள் குடும்பத்தினர் பின்நிற்கவில்லை.

 

தொடரும்................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு நாளில் ஒருபகுதி போட்டாலே போதும் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் புகையிரத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது இந்தக் கதையை முழுக்க வாசித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கதை போர் அடித்தது.கண்மனி அக்கா என்னை மன்னிக்கவும் உங்கள் கதையை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை என்டாலும் மனதில் பட்டதை சொன்னேன்.கதையின் கரு உண்மையில் ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என நினைக்கிறேன். இப்படி வாழ்க்கையை தொலைத்த கண பேர் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி உங்கள் மனதில் பட்டதை உள்ளபடி உரைத்ததற்கு நன்றிகள். என்றாலும் பொறுமையுடன் வாசித்ததற்கு நன்றி கூறத்தான்வேண்டும். வாசிக்கும் பழக்கம் அருகிவிட்ட இன்றைய காலககட்டத்திலும் இளையவர்களாகிய உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ நாங்களும் வாசிக்கிறோம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               (7)

 

'பௌர்ணமி நிலவும்
பனிவிழும் இரவும்
முன்நிலவெறிக்கும்
முற்றத்து நினைவும்
வெண்பனி தூவும்
வெற்றுவான் வெளியில்
கண்களில் கனவாய்
காயுது நிலவாய்'

அது 1983ம் ஆண்டின் நடுப்பகுதி நாடெங்கும் விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த காலப்பகுதி. அடிக்கடி கண்ணி வெடிகளில் சிக்கி இராணுவத்தினர் பலியாவதும் விமானக் குண்டுவீச்சுக்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதும் ஆங்காங்கே நடைபெறுவது இப்பொழுதெல்லாம் அடிக்கடி நடைபெற்றது. கல்யாணியின் பெற்றவர்களுக்கும் இது குறித்த கவலை இல்லாமலில்லை. ஆனாலும் அவர்கள் இருக்கும் பகுதியில் இதுவரை பெரிதாக அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாததால் சற்று நிம்மதியுடன் இருந்தனர்.
அன்று யாழ்நகரின் பருத்தித்துறை வீதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் யாழ்நகரமே அதிர்ந்தது. அதில் பல இராணுவத்தினர் பலியாகியதில் ஆத்திரமடைந்த படையினர் ஊருக்குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுடத்தொடங்கினர். பல அப்பாவிப் பொதுமக்கள் வீட்டிற்குள் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டனர். ஊர் எங்கும் மரண ஓலங்களும் பயப் பிராந்தியுமாக வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிப் போயினர்.
கல்யாணியின் கிராமம் யாழ்நகரில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரத்தில் இருந்தாலும் இராணுவத்தினரின் அட்டகாசங்களுக்குப் பயந்து அனைவரும் தத்தமது வீட்டிற்குள் இருந்தனர். அவசர தேவையின்றி வீட்டிற்கு வெளியே போவதைத் தவிர்த்தனர். பாடசாலைகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தன.
மறுநாள் உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்போவதாக செய்திகள் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
எங்கும் பதற்றமான சூழ்நிலை. போராட்டச் சூழல் மக்களது இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்திருந்தது. நாளாந்தம் கூலித் தொழிலாளர்கள் வருமானமிழந்து வருந்திக்கொண்டிருந்தனர். எத்தனையோ நோயாளிகள் வைத்தியசாலைக்கு செல்ல முடியாமல் துடித்துக் கொண்டிருந்தனர். அடிக்கடி ஊரடங்குச் சட்டங்களும் கைதுகளும் நடை பெறுவதால் நாடே அமைதியிழந்து தவித்துக்கொண்டிருந்தது.
           
              (8)

'அழகிய பூக்களும்
ஆங்காங்கே முட்களுமாய்
நீண்டு கிடக்கிறது
வாழ்வெனும் நெடுஞ்சாலை
பூக்களைக் குத்திக்கொள்ள
முட்களைப் பயன்படுத்து
முட்களுக்கும் மோட்சமுண்டு'

அன்று யூலை 25. இலங்கை வரலாற்றில் இரத்தக்கறை படிந்த இருட்டான நாள். வழக்கம்போல் அன்றும்  அனைவரும் தத்தமது கடமைகளுக்காக சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திருந்தனர்.
யாருக்கும் அன்று நடக்க இருக்கும் அனர்த்தங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை.
எதிர்பாராமல் தலைநகரெங்கும் மரண ஓலங்கள். உயரமான கட்டிடங்கள் அலுவலகங்கள் எங்குமே புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. வீதி எங்கும் கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கொள்ளை அடித்த பொருட்களுடன் குதூகலமாகச் சத்தமிட்டபடி வெறிக்கூச்சலுடன் பெரும்பான்னையின மக்கள். எங்கு யாருக்கு என்ன நடைபெறுகிறது, யார் எங்கு நிற்கிறார்கள், என்ன செய்வது என்று எதுவுமே தெரியாமல் வீட்டிற்குள் இருந்த பெண்களும் குழந்தைகளும் மிரட்சியுடன் இருக்க,
கையில் அகப்பட்டவர்களையெல்லாம் வெட்டியும் சுட்டும் அடித்தும் சித்திரவதை செய்து வெறிக்கூச்சலிட்டபடி கூட்டம் கூட்டமாக கையில் ஆயுதங்களுடன் கொலைஞர்கள். விசமிகளுக்கு மத்தியில் கையறு நிலையில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து உயிருக்குப் போராடிக்கொண்டு பல உடலங்கள். பாதி உயிருடன் கிடந்தவர்களின் மீதி உயிரையும் பல கொடியவர்கள் பெற்றோல் ஊற்றி ரயர் போட்டு கொழுத்தி அழித்தனர். பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. பல இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
ஆனாலும் விதி விலக்காக எத்தனையோ பெரும்பான்மை இன மக்கள் தங்கள் வீடுகளில் எம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் உயிரை பாதுகாத்தனர்.
வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். உயிர்தப்பிய தமிழ் மக்கள் பாடசாலைகள் கோவில்கள் ஆலயங்கள் என்று அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
வானொலிகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளை தணிக்கை செய்தே வெளியிட்டன. நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் யாருக்கும் நிலைமைகளின் உண்மை நிலை அறிய முடியவில்லை.
               
            (9)

'எந்த மலரிலும்
நீ சிரித்தாய்
அந்த நிலவிலும்
புன்னகைத்தாய்
அழகே அமுதே எந்தன்
அருகினில் நீ இருப்பாய்'

செய்திகளை வானொலியில் கேட்ட கல்யாணி கல்லாய் சமைந்து விட்டாள். கொழும்பிலிருந்து எந்தச் செய்திகளையும் அறியக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அகதி முகாம்களிலும் பாடசாலைகளிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் செய்திகள் கூறின.
கல்யாணியின் பிரசவத்திற்கான நாட்கள் அண்மித்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் பிரமைபிடித்தவள் போல இருக்கும் கல்யாணிக்கு 'பிள்ளை இந்த நேரத்தில இப்பிடி கவலைப்படக் கூடாது, கடவுள் ஒரு குறையுமில்லாமல் கணேச கொண்டுவந்து சேர்ப்பார்.'என்று பெற்றவர்கள் எத்தனை ஆறுதல் கூறினாலும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
கணேசின் பெற்றவர்களும் மகனின் நிலை அறிய முடியாமல் பெரும் மனச்சஞ்சலத்துடன் இருந்தனர்.
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு கப்பல் மூலம் அகதிகளை அழைத்து வரும் வேலைகள் ஆரம்பமாகின. கணேசும் அகதிகளுடன் வருவான் என்ற எதிர்பார்ப்புடன் கல்யாணி தினமும் காலையில் காகம் கரைவதையும் கனவில் கணேஸ் வருவதையும் நம்பி காத்திருந்தாள். ஒரு வாரத்தின்பின் கணேசின் கடையில் வேலை செய்யும் சந்திரன் எத்தனையோ இடர்தாண்டி யாழ் வந்து சேர்ந்திருந்தான். அவன் மூலம் கேட்ட செய்திகள் அனைவர் இதயத்திலும் இடியாக இறங்கியது.
அவனால் ஒழுங்காகப் பேசக்கூட முடியவில்லை. பயத்தில் முகம் வெளுறி பார்க்கவே பைத்தியம் பிடித்தவன்போல் இருந்தான்.
எல்லோரும் எவ்வளவோ கேள்வி கேட்டபின்தான் திக்கித்திக்கி பேசத்தோடங்கினான்.
'நாங்கள் வழக்கம் போல் காலையிலேயே கடை திறந்து வேலைகளை ஆரம்பித்து விட்டம். திடீரென்று எல்லா இடமும் ஒரே பதட்டமாக இருந்தது. வீதியெங்கும் சனங்கள் ஓடத்தொடங்கினர்.' சொல்லும்போழுதே கண்கள் கலங்கத் தொடங்கின. எல்லோரும் வியப்பு பயம் விடயம் அறியும் ஆவல் என்று பல உணர்வுகளுடனும் அவன் சொல்வதையே பார்த்துக்கொண்டு நின்றனர். கல்யாணிக்கும் பெற்றவர்களுக்கும் உள்ளக்குள் ஏதோ கெட்ட செய்தி வரப்போகிறதோ என்ற  அங்கலாய்ப்பு.
சந்திரன் சுற்றி நின்றவர்களை ஒருமுறை ஏக்கத்துடன் ஏறிட்டான். அவனால் நிமிர்ந்து பார்த்து பேசக்கூட முடியல்ல.
'சந்திரன் ,கணேஸ் ஏன் உன்னோட வரயில்லை?'
கல்யாணி ஏக்கத்துடன் சந்திரனிடம் கேட்டாள்.
'வெளியில என்ன நடக்கிறது எண்டு ஒண்டுமே எங்களுக்கு விளங்கயில்ல. என்ன நடக்கிறது என்று நாங்க சுதாகரிக்கிறத்துக்கு முந்தியே கூட்டமாக பொல்லுகள் கத்திகளுடன் வந்த ரவுடிகளைப் பார்த்து பயந்து பின் கதவால ஓடுவதற்கு வெளிக்கிட்டோம். ஆனால் கதவுகளைப் பூட்டி விட்டு வரலாம் என முயற்சித்த கணேஸ் சற்று தாமதித்து விட்டார்.'
சொல்லும் பொழுதே கதிரேசனின் கண்களிலிருந்து பொபொலவென்று கண்ணீர் கொட்டியது.
கல்யாணிக்கு நிலமையின் தீவிரம் விளங்கத்தொடங்கியது 'ஜயோ என்ர தெய்வமே' என்று கத்தியபடி தரையில் விழுந்தாள். அவளைச் சுற்றி அயலவர்கள் தாங்கிக்கொள்ள சந்திரனிடம் மற்றவர்கள் விபரம் கேட்க ஆயத்தமாகினர்.
'எனக்குப் பின்னால் ஓடிவந்த கணேசின் மரணஓலம் மட்டும்தான் எனக்கு கேட்டது' சந்திரன் தொடர்ந்து பேசமுடியாமல் தடுமாறியபடி
'எனக்கு திரும்பிப் பார்க்கக்கூட அவகாசமிருக்கவில்லை. ஓழுங்கைகளுக்கூடாக உயிரைக் கையில பிடித்துக்கொண்டு ஓடி தூரத்திலிருந்த மரங்களுக்குள் பதுங்கியபடி நிமிர்ந்து பாத்தன்.'
'ஜயோ எப்படி சொல்லுவன். எங்கட கடை பெரும் தீச்சுவாலையா எரிந்து கொண்டிருந்தது' சந்திரன் முகத்தை கைகளால் மூடியபடி விம்மிக்கொண்டிருந்தான்.

 

தொடரும்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்குள் கதையா அல்லது கதைக்குள் கவிதையா என்று கூறவியலாதவாறு எழுதிய விதம் வரவேற்கத் தக்கது!

 

ஒரு பெண்ணின் அல்லது ஒரு ஆணின் இளமைக்காலக் கனவுகள்... எதிர்பார்ப்புக்கள் என அறிமுகப்படலம் அசத்துகின்றது!

 

பின்னர் அந்தக் கனவு மாளிகை... புயலுக்கும்... மழைக்கும்... அனல் கக்கும் வெயிலுக்கும் எவ்வாறு நின்று பிடிக்கப் போகின்றது என்பது தான் கதை!

 

வாழ்க்கையே ஒரு போராட்டம் தானே.. காவலூர் கண்மணி!

 

அதை வாழும் வகையில் தானே... வாழ்க்கை ஒரு கதையாகின்றது..! :lol:

 

தொடரட்டும் உங்கள் கவி மழை...மன்னிக்கவும்   கதை மழை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றிகள். ஒரு பெண்ணின் இளமைக் கனவுகள் எதிர்பார்புகள் கலைந்த நிலையில் அப் பெண்ணின் உள் மனதின் உணர்வுகளை எடுத்து வருவதே இக் கதையின் நோக்கம். தொடந்தும் வாசித்து உங்கள் கருத்தை முன்வையுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 (10)

'உயிர்ப் பூ எரிகிறது
உள் உணர்வோ கனல்கிறது
சங்கீதக் குயிலொன்று
சத்தமின்றி அடங்கியது
பொங்கி வந்த பிரவாகம்
பொசுக்கென்று வற்றியது'

 

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது. ரவியும் ராதாவும் திகைத்துப்போய் யாருக்கு என்ன நடந்தது? ஏன் இப்பிடி எல்லோரும் கதறி அழுகிறார்கள்? அம்மாவுக்கு என்ன நடந்தது? அம்மம்மா தாத்தா எல்லோரும் ஏன் இப்படி கதறுகிறார்கள்? விடை விளங்காத கேள்விகளுடன் அவர்கள் திருதிரு என்று விழித்துக்கொண்டு நின்றனர்.
ஊரே அங்கு கூடி விட்டது. கூக்குரல்களும் வேதனைக் கதறல்களும் அங்கு ஒலித்துக்கொண்டிருந்தன. அனைவரும் கல்யாணியையும் ரவியையும் ராதாவையும் அணைத்து ஆறுதல் கூறினர்.
யார் என்ன சொல்லி என்ன? கணேசன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கை எவருக்குமில்லை.
ஏழுமாதக் கருவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் கல்யாணியின் நிலையை எப்படிச் சொல்லுவது.
கணேசின் நிலை அறிந்த அவனது பெற்றோரின் நிலையோ எழுத்தில் வடிக்க முடியாது. கதறித் துடித்தனர். அப்பா நெஞ்சைப்பிடித்தபடி விழுந்தவர்தான். வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்தார். அம்மாவின் நிலை அதைவிட மோசம். தம் ஒரே பிள்ளை தமக்கு கொள்ளி வைக்க வருவான் என்று நினைத்திருக்க தம் அருமை மகன் எங்கே எப்படிப் போனான் என்று தெரியாமலேயே அரக்கர்கள் கைகளில் அழிந்து போன மகனை பறிகொடுத்த பெற்றவர் நிலை வேறெப்படி இருக்கும்.
கல்யாணிக்கு மூன்றாவது குழந்தையாக ராகவி பிறந்தாள்.
'ஜயோ கணேஸ் இருந்திருந்தால் குழந்தையைப் பார்த்து எவ்வளவு சந்தோசப் பட்டிருப்பார். எங்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே'
எதிர்காலம் கண்முன் இருட்டாகத் தெரிந்தது.
'இந்த மூன்று பிள்ளைகளோடும் நான் என்ன செய்யப் போறன்'
நிமிடத்துக்கு நிமிடம் எண்ணி எண்ணி மனதுக்குள் மறுகிப் போனாள்.
கணேசின் எதி;ர்பாராத இழப்பினால் அவனது உயிர் மட்டும் போகவில்லை.
அத்துடன் சேர்த்து அவன் நிறைய முதலீடு செய்து பெரியளவில் ஆரம்பித்த கடை சொத்து அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது.
சொந்தத் தொழில் ஆனபடியால் கணேசனது கொடுக்கல் வாங்கல் பற்றிய ஆவணங்களும் தீயுடன் சங்கமித்துப் போனதால் எதுவுமே தெரியாத ஓர் இக்கட்டான நிலை.
கண்முன் விரிந்து கிடந்த இருட்டை வெறித்தபடி கல்யாணி அமர்ந்திருந்தாள்.
'எத்தனைநாள் அம்மா அப்பா என்னைச் சுமப்பார்கள்.'
'தெய்வமே ஏன் எனக்கு இப்படியான நிலை?' கடவுளிடம் எத்தனை முறைதான் ஓரே கேள்வியைக் கேட்பாள். பதில்தான் இல்லை.
                

             (11)

'பூவுக்குள் பூகம்பம்
புயலோடு வீசியது
தென்றல் காற்றொன்று
தெருவோடு தேம்பியது
'

இந்த ஜந்து ஆண்டுகளில் எத்தனையோ இழப்புக்கள் துயரங்கள் அத்தனையும் தாங்கி கல்யாணி இன்றும் உயிருடன் உலவிக்கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமே அவளது பொறுப்பில் கணேஸ் விட்டுச்சென்ற மூன்று பிள்ளைச் செல்வங்கள்தான்.
அக் காலக் கட்டத்தில் இந்திய இராணுவம் எம் மண்ணில் அமைதி காக்கவென்று சந்திக்கு சந்தி முகாம் அமைத்து புலிகளை வேட்டையாடுகிறோம் என்று ஆலய வளவுகளுக்குள் அனைவரையும் வரும்படி அழைத்து தலையாட்டி மூலம் பல இளைஞர்களையும் யுவதிகளையும் கைது செய்து சித்திரவதை செய்து எத்தனையோ கொடிய நிகழ்வுகள் அரங்கேறின.
அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டனர் பலரினது பெற்றவர்களும் சகோதரர்களும் முகாம் வாசல்களில் காத்திருந்து அதிகாரிகளைத் தேடி அலைந்து களைத்ததுதான் மிச்சம்.
அக் கைது செய்து காணாமற் போனோரில் கல்யாணியின் அண்ணன் கேசவனும் ஒருவனாகி விட்டிருந்தான்.
கணேசன் இருந்தபொழுது கல்யாணி எத்தனை வசதியோடு வாழ்ந்தாளோ அவனது இழப்பின் பின் எத்தனை துயரங்கள்.
அடுத்தவேளை அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடும் நிலை.
கணேசின் பெற்றவரும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டனர். பிள்ளைப் பாசமே அவர்களைக் கொல்லும் நோயாகிவிட்டது.
கல்யாணியின் அம்மா அப்பாவும் உடல் தளர்ந்தவர்களாக, நாட்டில் ஏற்பட்ட போராட்ட சூழலில் பலமுறை இடம் பெயர்ந்து, குண்டு வீச்சுக்களுக்குத் தப்பி ஓடுவதும் மீண்டும் வருவதுமாக எல்லாமே, எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
குழந்தைகள் ராதாவும் ரவியும் அந்த அமைதியற்ற சூழலிலும் கிராமத்து பாடசாலைக்கு போய் வந்தனர்.
அடிக்கடி கல்யாணி 'கணேஸ் நீங்க இருந்தால் எங்கள் பிள்ளைகள் எர்படியான உயர்தர பாடசாலைகளில் படிக்க வைத்திருப்பீர்கள். நான் என்ன செய்வேன்' என்று அழுது ஆற்றாமையில் புலம்புவாள்.
வீட்டில் வருமானம் போதாமையால் பெற்றவர்படும் துன்பத்தைப் பார்த்து கல்யாணியும் தோட்டவேலை, தையல், அத்துடன் பலகாரம் செய்து விற்றல் இப்படியான வேலைகளைச் செய்து பிள்ளைகளின் தேவைகளை நிரப்பினாள்.
பிள்ளைகள் வளர வளர செலவும் கூடியது. ரவிக்கு பதினைந்து வயதாகியது. அம்மா படும் கஸ்ரங்களைப் பார்த்து பிள்ளைகளும் மனதுக்குள் அழுதனர். இரண்டு வேளை உணவு கிடைப்பதே கஸ்ரமாக இருந்தது. இருக்கும் உணவை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்து தன் வயிறை காயவைத்த கல்யாணியும் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வாடிய பயிர்போல் ஆனாள்.
சில நாட்களில் அயலிலுள்ள வசதியான குடும்பங்களுக்கு மா இடிப்பது, மிளகாய் இடிப்பது, வீட்டு வேலைகளுக்கு உதவி செய்வது என்று கல்யாணி பிள்ளைகளின் கல்வி;ச் செலவுக்கும் உணவுக்கும் தேவையான வருமானத்தைக் கூட்டிக் கொண்டாள்.
             
               (12)

'இனித்திடும் இளமை
என்பது வழமை
இளமையில் வறுமை
எத்தனை கொடுமை'

ரவிக்கு பதினேழு வயது நிறைந்ததும் தனது ஒரே சொத்தான காணியையும் தன்னிடம் மீதமிருந்த ஒன்றிரண்டு நகைகளையும் விற்று ஜேர்மனியில் இருக்கும் உறவினரின் உதவியடன் மகனை ஜேர்மனிக்கு அனுப்ப ஆயத்தங்கள் நடந்தது.
'அம்மா, நான் இங்க உங்களையும் தங்கச்சிமாரையும் தனிய விட்டிட்டு எப்படி அங்க போவன்' என்று கேட்ட மகனிடம்
'இங்க நாட்டு நிலமையும் சரியில்ல. நீ அங்க போனால்தான் தங்கச்சிமாருக்கும் படிக்க உதவி செய்யலாம்' என்று எத்தனையோ எடுத்துச் சொல்லி ரவியை சம்மதிக்க வைத்து ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தாள்.
ரவி இச் சிறு பராயத்துக்குள் எத்தனையோ துன்பங்களையம் சுமைகளையும் அனுபவித்து விட்டான். அவனது ஜந்தாவது வயதில் அப்பாவைப் பற்றிய நினைவு மங்கிய நிழலாக மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும். 'அப்பா, அப்பா என்று தனக்குள் அழைத்து மகிழ்வான். அம்மாவுக்குத் தெரியாமல் கண்ணில் துளிர்க்கும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வான்.
மகனைப் பிரிவது கல்யாணிக்கு துன்பமாக இருந்தாலும் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்காக எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டாள்.
ரவியும் ஜேர்மனிக்கு வந்து ஜந்து வருடங்கள் உருண்டோடின.
ஆரம்ப நாட்களில் அவன் வேலை செய்துகொண்டு மொழியும் படித்தான். குளிரும் பனியும் தனிமையும் ஏக்கங்களும் வாட்டினாலும், பெற்றவள் படும் துன்பங்களை நேரில் பார்த்தவன், சகோதரிகள் காட்டிய மிதமான அன்பில் குளித்தவன், தன் குடும்பத்திற்காக எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டான்.

 

தொடரும்.............

Link to comment
Share on other sites

ஒரே மூச்சில வாசிச்சிட்டன்,

ஈழ மண் தான் எத்துனை எத்துனை துயர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வழி நிரம்பிய ஒவ்வொருவர் வாழ்வும் வாசிக்க கடினமாயுள்ளது. இருந்தும் என்னை போன்ற இளையோர் அறியதர பதிவிட வேண்டியுள்ளது அத்தியாவசியமாயுள்ளது. தொடருங்கள் கண்மனி அக்கா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது கதை, வாசிக்க ஆவலாய் உள்ளோம்.

கதை உட்பகுதி முன் இணைக்கும் கவிதை அழகு, கதை தொடர்ச்சியை யூகிக்க வைக்கிறது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் மண்ணின் மைந்தர்கள் சுமந்த வலிகள் ஏராளம் ஒவ்வருவருக்குள்ளும் ஒவ்வொருவிதமான வலிகள் கடந்த ஜம்பது வருடங்களுக்கு மேலாக எம்மவரின் சுமைகள் இன்னும் குறையவில்லை. அதன் தாக்கமாக புலம்பெயர்ந்த மண்ணிலும் பெற்றவர்கள் படும் துயரங்களை நேரில் சந்திக்கும்போது அதை எழுத்தில் வடிக்காமல் இருக்க முடியவில்லை. இளைஞனாகிய நீங்கள் பொறுமையுடன் வாசித்து கருத்தெழுதியமைக்கு மிகமிக நன்றிகள். ராஜன் விஸ்வாவுக்குள்ளும் ஒரு பெரும் கவிஞன் இருக்கிறான். நிறைய எழுதுங்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா,
இன்று தான்... இந்தத் திரி கண்ணில் பட்டது.
மேலோட்டமாக முதல் பகுதியை வாசித்தேன்.
யாழ்ப்பாணத் தமிழில் எழுதப் பட்ட, குடும்பக் கதை போல் நன்றாக  இருந்தது. :)

நிச்சயம்.... முழுவதுமாக, வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து கனடாவில் முடிவதாகத்தான் கதை எழுதப்படடிருக்கிறது. உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி என் கதையை வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள். உங்கள் ஊக்குவிப்புத்தான் எமக்கு ஊக்கமருந்து நன்றிகள் தமிழ்சிறி

          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               (13)

 

'கனைவாய் கலைந்தாய்
காற்றாய் மிதந்தாய்
கண்களுக்குள் விழுந்தாய்
உணர்வாய் உறவாய்
உயிராய் உருகி
உள்ளுக்குள் நீ உறைந்தாய்'

 

கடந்த ஜந்து வருடங்களில் ரவி சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஊருக்குப் பணம் அனுப்பினான். கல்யாணியும் மெல்ல மெல்ல கடன்களைக் கொடுத்து முடித்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சிக்கனமாகச் சீவித்து சேமிக்கத் தொடங்கினாள்.
ராதாவும் ராகவியும் நன்றாக வளர்ந்து விட்டிருந்தனர். ராதாவுக்கு ஊரில் திருமணப் பேச்சுக்கள் நடைபெற்றன.
கல்யாணியின் அப்பாவும் அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக மறைந்துவிட கல்யாணி தனிமரமானாள்.
'கல்யாணி, ராதாவுக்கு ஏற்ற இடம். நீ எத்தனை நாளைக்குத்தான் இத்தனை சுமைகளையும் சுமப்பாய். ரவியும் பாவம். வசதியாக வரும் போதே ராதாவின் திருமணத்தை முடிப்பதுதான் நல்லது.' ஊரிலுள்ள உறவுகளும் நட்புக்களும் உரிமையுடன் ஆலோசனை கூறினர்.
ரவியும் சம்மதம் தெரிவிக்கவே ராதாவின் திருமணம் நிச்சயமாகியது. அம்மாவின் சுமைகளைக் குறைக்க அண்ணாவின் பொறுப்புக்களை இலகுவாக்க தங்கைகள் இருவரும் எதுவும் செய்யத் தயாராக இருந்தனர்.
நாட்டு நிலமையும் வரவர மோசமாகிக் கொண்டிருந்தது. கைதுகளும் சுற்றி வளைப்புக்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் நடை பெறுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. எங்கும் கிலியுடன் வாழும் மக்கள்.
ரவியை நினைத்து கல்யாணி ஏங்கினாலும் தனது பிள்ளை குடும்பப் பொறுப்புக்களை ஏற்று விட்டான். இனி தான் உடல் வருந்தி உழைக்கத் தேவையில்லை என்று நிம்மதி அடைந்தாள்.
ராதாவின் திருமணம் முடிந்த கையோடு ராகவிக்கும் கனடாவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு சம்பந்தம் பேசி வந்தது. ரவிக்கும் ராதாவுக்கும் அதைவிட கல்யாணிக்கும் மிகுந்த சந்தோசம்.
ரவி இரவு பகலாக உழைத்ததுடன் நண்பர்களிடமும் கடனாக பணம் பெற்று ராகவியின் திருமணத்திற்கான ஆயத்தங்களை ஆரம்பித்தான்.
பெண்ணின் புகைப்படம் பார்த்த சங்கருக்கு ராகவியைப் பிடித்துப் போனது.
ஊரிலுள்ள சங்கரின் பெற்றவர்கள் ராகவியை பெண்பார்த்;து கல்யாணியுடன் பேசி திருமணத்திற்கான சம்மதத்தை தெரிவித்ததும் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
விரைவிலேயே ராகவிக்கான ஸ்பொன்சர் லெட்டரும் சங்கரால் அனுப்பி வைக்கப்பட்டது.
            
                (14)

 

'உன் பாதச் சுவடுகளில்
என் பாதம் பதித்தபடி
தேடித் தடம் பதிக்க

தினமும் வரம் வேண்டும்'

 

ராகவி அப்பா முகம்கூடப் பார்க்க வழியின்றி அம்மாவினால் வளர்க்கப்பட்ட பிள்ளை. இப்ப அம்மாவை விட்டுவிட்டு எப்;படிப் போவது என்று மனம் சங்கடப்பட்டாள்.
இருந்தும் கனடாவில் சங்கருடன் வாழப்போகும் அந்த இனிமையான வாழ்க்கையை எண்ணி தன் கவலைகளை மறந்தாள்.
சங்கரும் அடிக்கடி போனில் கதைப்பதால் தம் அன்பை பரிமாறிக் கொண்டனர். அத்துடன் தன் மனச் சங்கடத்தையும் சங்கரிடம் வெளிப்படுத்தத் தவறவில்லை.
'சங்கர், அம்மா பாவம். இங்க நாட்டு நிலமையும் சரியில்லை. இந்த நேரத்தில அம்மாவைத் தனிய விட்டிட்டு வாறத நினைச்சாத்தான் கவலையாக் கிடக்கு'
'ராகவி, முதலில நீர் வந்தால்தானே கொஞ்சநாள் போனபிறகு அம்மாவையும் ஸ்பொன்சர் பண்ணி எடுக்கலாம்.'
ராகவியின் மனம் சிறிது தெளிவாகியது.
கல்யாணிக்கு மகளின் திருமணம் நடைபெற இருக்கும் சந்தோசம் ஒருபுறம். திருமணத்தை தான் நேரில் பார்க்க முடியாமல் இருக்கும் சங்கடம் மறுபுறம். அடிக்கடி தன் மன ஆதங்கத்தை ரவியுடன் கதைத்து ஆறுதல் அடைந்தாள்.
ராகவியும் கனடாவுக்குப் போய் ராகவி சங்கர் திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது.
ரவி கனடாவுக்ககு வந்திருந்து ஒவ்வொன்றாக கவனித்து தன் தங்கையின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தான். இரு தங்கைகளினதும் திருமணங்கள் முடிந்ததில் ரவிக்கு மிகவும் மனத்திருப்தி.
அடிக்கடி ராகவியுடன் போனில் கதைக்கும் பொழுதெல்லாம் ரவி அம்மாவைப்பற்றியே கவலைப்படுவான்.
'ராகவி எப்படியாவது அம்மாவை கனடாவுக்கு எடுக்க வேணும்'
'அதுதான் அண்ணா எனக்கும் எந்த நேரமும் யோசினை'
'ராதாவும் லண்டனுக்கு போக இருக்கிறதா அறிந்தன். அதனால அம்மாவை எப்படியாவது கெதியில கூப்பிட வேணும்;'
'கவலைப்படாதேங்க அண்ணா, நான் சங்கரிடம் கதைத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்யிறன்'
அம்மாவும் வந்துவிட்டால் எவ்வளவு நல்லது.
இளமையிலேயே வாழ்வைத் தொலைத்து தமக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த அன்புத்தாயை நினைக்கும் போதெல்லாம் ரவியின் கண்களில் கண்ணீர் துளிர்க்காத நாளில்லை.
அந்த அன்னை தம்மை வளர்க்க பட்ட பாடுகள், அவமானங்கள், ஏழ்மையுடன் போராடிய இன்னல்கள், செய்த தியாகங்கள், ஒவ்வொன்றும் திரைப்படம் போல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
அந்த அன்னையை அன்பாக அனுசரணையாக தாம் வைத்து கவனிக்க வேண்டும். அப்பா இல்லாத குறை தெரியாமல் அன்பைப் பொழிந்து சீராட்ட வேண்டும். இப்படி எத்தனையோ கற்பனைகளை மனதில் சுமந்தவனாய் ரவி காத்திருந்தான்.
               
                  (15)

 

'கரை தவழும் நுரை போல
நினைவலைகள் மோதுகையில்
காற்றாக வந்து எந்தன்
கை கோர்த்து நடக்க வேண்டும்'

 

சங்கர் படித்தவன். நல்ல வேலையில் இருந்தான். ஆனாலும் அவனிடம் குடிப்பழக்கம் இருந்ததைக் கவனித்த ராகவியால் எதுவும் செய்ய முடியவில்லை. அதிலும் பார்ட்டிகளுக்குப் போனால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு மீறிக் குடித்து ஆர்ப்பாட்டம் செய்வான்.
சாதாரண நாட்களில் ராகவியும் வேலைக்குப் போய் வந்தபின் உதவிகள் செய்வதில் பின்நிற்க மாட்டான். அன்பாக அநுசரணையாக நடப்பான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனால் குடியை விடமுடியவில்லை.
ஒரு வருடம் ஓடி மறைந்தது. ராகவி வயிற்றில் குழந்தையை சுமந்திருந்தாள்.
'சங்கர், அம்மா இங்க வந்தால் எனக்கு உதவியாக இருக்கும். பாவம் அம்மா. அங்க தனிய இப்ப இடம் பெயர்ந்து எங்கெல்லாமோ அலைந்து கொண்டு திரிகிறா.'
ராகவியின் அம்மா இங்கு வந்தால் குழந்தையை வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்த சங்கரும் 'சரி அம்மாவை கூப்பிடுறத்துக்கு அலுவல் பார்ப்பம்' என்று சம்மதம் தெரிவித்தான்.
அம்மாவுக்கு ரவி ஒரு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுத்திருந்ததால் அடிக்கடி பிள்ளைகளடன் கதைப்பதற்கு வசதியாக இருந்தது.
மறுநாளே ராகவி அம்மாவை அழைத்து'அம்மா நாங்கள் ஸ்பொன்சர் பண்ணிறம். நீங்க எதற்கும் கொழும்புக்கு வந்து யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி நின்றால் நல்லது. நான் அண்ணனிடம் சொல்லி நீங்கள் வந்து தங்குவதற்கு இடம் ஆயத்தப்படுத்த சொல்லிறன்'
கல்யாணிக்கோ கொழும்பில் வந்து தங்கி நிற்பதை நினைக்கவே மனமெல்லாம் வேதனையில் விம்மியது.
ஜந்து வருடங்கள் அவள் கணேசுடன் வாழ்ந்த அந்த வசந்தகாலம் கண்முன் கண்ணாமூச்சி காட்டியது.
அழுது அழுது கண்ணீர் வற்றிப்போன கண்களிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் மண்ணில் விழுந்தது.
'கடவுளே என்னை என்ர பிள்ளைகளிடம் கொண்டுபோய் சேர்த்துவிடு. அவர்களுடன் என்ர கடைசிக்காலத்தில நிம்மதியா இருந்தாலே போதும்'
இறைவனும் அவளது வேண்டுதலை செவிசாய்த்தான்.
கனடாவில் இருவரும் வேலை செய்தபடியாலும் எல்லா படிவங்களும் ஒழுங்காக இருந்தபடியாலும் கல்யாணியின் விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விசயம் அறிந்த ரவியின் சந்தோசத்திற்கு அளவில்லை.
'அம்மா விசா கைக்கு வந்தவுடன் ரிக்கற் போட வேணும். வெளிக்கிடுவதற்கு ஆயத்தமாக இருங்க' ரவி மகிழ்ச்சியுடன் அன்னைக்கு போனில் கூறினான்.
கல்யாணிக்கு எப்படியாவது பிள்ளைகளைப் பார்க்கும் பரவசம்.
எத்தனை ஆண்டுகள் ரவியை பார்க்கவில்லை.
கனடா போனபின் ரவிக்கும் ஒரு பொம்பிளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேணும். பாவம் ரவி. பதினெட்டு வயதிலிருந்து ஓடாய் உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய பிள்ளை. அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.
இப்படி நிறைய கனவுகளுடன் கல்யாணி கனடா மண்ணில் காலடி வைத்தாள்.

 

தொடரும்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புத்தோழி கண்மணிக்கு என்வரையில் மனதில்பட்டதைப்பதிவிடுகிறேன் சங்கடங்கள் கொள்ளவேண்டாம். ஒரு பெருநாவலாக எழுதவேண்டிய கதையை அவசரமாக நகர்த்துவதுபோல் தெரிகிறது. கதைசொல்லியாக நின்றுவிடாமல் உங்கள் எண்ணங்களின் ஆளுமையையும் சம்பவங்களின் சிருட்டிப்புக்களையும் இன்னும் மெருகேற்றலாம் என்று தோன்றுகிறது. தோழியின் திறமையை அதிகம் அறிந்தவளான என்னால் உடன் கதை சொல்லியாக ஏற்க முடியவில்லை. உங்கள் எழுதகோலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டீர்களா என்ன? இருப்பதை வெளியே எடுத்து வாருங்கள் உங்கள் எழுத்துக்களில் அடர்ந்த சோலைகளின் அழகை கண்டிருக்கிறேன்..... ஆனால் இன்று எழுத்துக்களில் வற்றிப்போன வறட்சியை பார்க்க பிடிக்கவில்லை. இப்படி ஒரு பதிவை இட விருப்பம்இல்லை இருப்பினும் மற்றவர்களுக்கு நான் இப்பதிவை இட்டால் அதை அவர்கள் தவறாகக்கருதக்கூடும் உங்களுக்கு இடுவது என்பது நல்ல புரிதல்களின் வெளிப்பாட்டுடன் அணுகுவீர்கள் என்பதாலேயே......... :unsure::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா உங்கள் எழுத்தில் அவசரம் தெரிகிறதக்கா. ஒரு நாளில் நிறையப் பகுதிகளைப் போடத் தேவை இல்லை அக்கா.பச்சை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்கள் ஆதங்கம் புரிந்து கொண்டேன். சிறுகதையை ஒரு குறுநாவலாக ஏழுதலாம் எனும் சிறு முயற்சியாக இதை முன்னெடுத்தேன். நீங்கள் சுட்டிக்காட்டிய பின்தான் இக்கதையில் நீங்கள் எதிர்பார்த்த அடர்ந்த சோலையின் அழகைக் காணமுடியாமையைத் தெரிந்து கொண்டேன். உங்கள் பதிவும் ஆலோசனையும் எதிர்காலத்தில் என்னை புடம் போட வழிகாட்டும். நன்றிகள். சுமேயின் கருத்திற்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                          (16)

'இறைவன் எனும் மாகலைஞன்
எழுதுகின்ற கவிதை இது
பூச்சொரிவின் மென்மையினால்
பூரித்த பூமியிது
வசந்தம் துகிலுரியும்
வனப்பான காட்சிகளால்
இலையுதிரின் ஆரம்பம்
எத்திசையும் ஆனந்தம்'

 

கனடா...
இதுவல்லவோ சொர்க்கம் என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான கட்டிடங்கள்.
இரவானால் மின்விளக்குகளால் பளீரிடும் கண்ணாடி மாளிகைகள்.
விசாலமான வீதிகள்.
இருபத்தினாலு மணிநேரமும் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வரிசைகட்டிய நெடுஞ்சாலைகள்.
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உயர்வான பண்பு.
விஞ்ஞானத்தில் முன்னேறி விதவிதமான தொழில்நுட்பம் பெருகிய நாடு.
பல்கலாச்சாரம், பலஇனமக்கள், பல மொழிகள், பல மதங்கள், ஜாதி பேதமற்ற சமத்துவமான தேசம்.
இரவு பகல் என்றில்லாமல் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தனம்.
மொத்தத்தில் இது ஒரு கனவுத் தொழிற்சாலை.
கிராமத்தில் இருந்து இங்குவந்து இறங்கும் ஒவ்வொருவரும் தம்மைச் சுதாகரிப்பதற்குள் திக்கித்திணறிப் போவார்கள்.
கல்யாணி மட்டும் விதிவிலக்கா என்ன?
எல்லாமே அவளுக்கு வியப்பாக இருந்தது.
அம்மாவைக் கண்டதும் ராகவியின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
'அம்மா, ஏனம்மா இப்பிடி மெலிந்து போய்ற்றீங்க'
'பால் குடியுங்க, பழம் சாப்பிடுங்க'என்று அம்மாவைப் பார்த்து பார்த்து கவனித்தாள்;
கல்யாணிக்கும் ராகவியை தாய்மைக் கோலத்தில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
கணேஸ் ராகவியை கண்ணால் காணவும் முடியாமல் போய்விட்டது ஒருகணம் மனக்கண்ணில் வந்து போனது.
             
                            (17)

'கண்ணாடியாய் மின்னும் வாவியில்
தள்ளாடியபடி நீந்தும் நிலவு
சிற்றலைகளின் தாலாட்டில்
முத்தமிடும் இளம் தென்றல்
ஞாபகக் குளத்தில்
துள்ளும் மீன்களாய்
தூண்டில் வீசிடும் நினைவுகள்
இதயம் மட்டும் ஈரச்சிறகாய்'

 

ராதாவும் குடும்பத்துடன் ஜரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகுந்திருந்தாள். நாட்டின் அசாதாரண நிலை காரணமாக அநேகர் புலம் பெயரத் தொடங்கி இருந்தனர். சொந்த வீடு, ஊர், உறவுகள், இளமைக்கால இயல்பான வாழ்க்கை, இயற்கையுடன் இசைந்த வாழ்வோட்டம், எல்லாமே,எல்லாமே இழந்து இயந்திரத்தனமான வாழ்க்கையை அனைவரும் எதிர்கொள்ளத் தொடங்கி இருந்த காலகட்டம்.
உணவு, உடை, காலநிலை, மொழி என்று எல்லாமே மாறியே ஆக வேண்டும்.
ஊரில் இருந்ததுபோல உடனடியாக உணவு சமைத்து உண்ணவோ,புடவை கட்டி பொட்டு வைத்து வீதியிலே வலம் வரவோ,  வெற்றுக் காலுடன் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து வளர்ப்புப் பிராணிகளை தடவி இலை புல் கொடுக்கவோ, வேப்பமர நிழலில் அமர்ந்திருந்து சுத்தமான காற்றை சுவாசிக்கவோ, கிணற்று நீரை வாளியால் அள்ளி தலையில் கொட்டிக் கொள்ளவோ, நினைத்தவுடன் கோவிலுக்கச் சென்று கும்பிடவோ, எதற்குமே இங்கு இடமில்லை.
'சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போலவருமா?' என்ற பாடல்தான் கல்யாணிக்கு நினைவுக்கு வந்தது.
குளத்திலிருந்த மீனை கடலில் தூக்கிப் போட்டதுபோல என்ன செய்வது? எப்படி எதிர் நீச்சல் போடுவது? என்று கல்யாணி திகைத்துப் போனாள். ராகவியும் சங்கரும் விடிந்தால் வேலைக்குப்போய் திரும்பி வர இருட்டிவிடும்.
பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் கல்யாணியின் பொழுது போவது மிகவும் கஸ்ரமாக இருந்தது.
கண்ணாடிக் கூடுபோல வீடுகள். பக்கத்தில் யார் வசிக்கிறார்கள், எங்கு போகிறார்கள், எப்ப வருகிறார்கள், எதுவுமே அறிய முடியாது. எத்தனை நேரம் மொட்டை மரங்களையும் கொட்டும் பனியையும் பார்ப்பது. விறைக்கும் கை கால்களுக்கு உறைகள், கம்பளி ஆடைகள்.
கல்யாணியின் கனவுகள் பொலபொலவென உதிரத் தொடங்கியது.
'ஜயோ எத்தனை கஸ்ரப்பட்டாலும் ஊரில எத்தனை இலகுவான வாழ்வு'
'இது என்ன இயந்திரத்தனமான வாழ்க்கை. பணம் மட்டும்தான் வாழ்க்கையா?'
மெத்தை, கட்டில், ஸோபா, நிலைக்கண்ணாடி, சாப்பாட்டு மேசை, பாத்திரம் பண்டம் எது இல்லை இங்கு? எல்லாமே உண்டு. மன அமைதியைத் தவிர.
கணேசைப் பிரிந்து பல வருடங்கள் தனிமையில் வாழ்வது கல்யாணிக்கு புதிதல்ல. ஆனாலும் இங்கு வந்தபின் கணேசின் பிரிவை அதிகமாக உணரத் தொடங்கினாள்.
இந்த முதுமையில் துணையாக கணேஸ் இருந்திருந்தால் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்திருக்கலாம். பேச்சுத் துணைக்காகவாவது, மனம் திறந்து பேசக்கூட யாருமற்ற தனிமை.
            
                    (18)

'என் கனவுகளை ரசிக்கவும்
கண்ணீர் துடைக்கவும்
இதயமதை வருடிச் செல்லும்
இதமான நினைவுகளுடன்
நான் மட்டும்.....'


இரண்டு மாதங்கள் எப்படியோ ஓடி இலையுதிர் காலம் மறைந்து முன்பனிக்காலம் ஆரம்பமாகியது.
ராகவிக்கு குழந்தை பிறந்தபின் கல்யாணியின் பொழுது ஓரளவு சந்தோசமாகக் கழிந்தது.
ஆனாலும் என்ன படிதாண்ட முடியாமல் பனிக்குவியல்கள்.
'அம்மா பனி சறுக்கும் வெளிய போக வேண்டாம்'
'குளிர் காற்று பட்டால் சளி பிடிக்கும் கதவை திறக்க வேண்டாம்'
அன்புக் கட்டளைகள்கூட அலுப்பாக இருந்தன.
கோவிலுக்குப் போவதானாலும் சங்கரிடம் உதவி கேட்டுத்தான் போக வேணும்.
சில நாட்கள் அவனும் வேண்டா வெறுப்பாக கூட்டிச் செல்வதுண்டு.
குளிடூட்டியில் வைக்கப்பட்ட உணவு சூடாக்கிச் சாப்பிடுவதே கல்யாணிக்கு வெறுப்பாக இருந்தது.
சங்கருக்கு தினமும் மச்சம் சமைக்க வேணும்;
கல்யாணிக்கோ கணேசின் இழப்பின் பின் விரதம் பூசை என்று உணவு விடயத்திலும் பழக்க வழக்கத்திலும் கட்டுப்பாட்டுடன் வாழப் பழகி விட்டிருந்தாள்.
இவர்களது உணவுப் பழக்கங்களை ஏற்றுக்கொள்ள கல்யாணிக்கு மிகவும் கஸ்ரமாக இருந்ததால் பேஸ்மென்ரில் இருக்கும் சமையலறையில் தனக்குரிய உணவை தானே சமைத்து சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.
இதற்கிடையில் ரவியை மாப்பிள்ளை கேட்டு பல பெண்வீட்டுக்காரர் கல்யாணியிடமும் ராகவியிடமும் தூது விடத் தொடங்கினர்.
ரவி பாவம். குடும்பத்திற்காக உழைத்து ஓடாகி விட்டான். அவனது வாழ்க்கை நன்றாக இருக்கவேணும் என்பதே கல்யாணியின் எதிர்பார்ப்பு.
ஆனால் சங்கருக்கோ ரவியை நல்ல வசதியான படித்த பெரிய இடத்தில் மாப்பிள்ளை ஆக்கினால்தான் தனக்கு கௌரவம் என்று எண்ணினான்.
இறுதியில் கல்யாணியின் எண்ணம் ஈடேறவில்லை. ராகவியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.
சங்கரின் ஏற்பாட்டில் தனக்குத் தெரிந்த பெரிய வசதியான இடத்திலேயே திருமணம் பேசி முடித்திருந்தான்.
ராகவியின் பேச்சும் எடுபடவில்லை.

 

தொடரும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                 (19)

'கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்
காலங்கள் கடந்த போதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்'

ரவியின் திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. ரவி கொழும்புக்குச் சென்று திருமணம் செய்வதென்று முடிவாகியது.
அன்பையே பாலாக ஊட்டி வளர்த்த அன்னையோ, பாசத்தை பொழிந்த தங்கைகளோ, ரவியின் திருமணத்தில் பங்குபற்ற முடியாமல் சங்கர் மட்டும் அங்கு சென்று திருமணத்தில் கலந்து கொண்டான்.
திருமண வீடியோவைப் பார்த்து கல்யாணி மகிழ்ச்சியில் திணறினாள்.
மாலதியும் ரவியும் நல்ல பொருத்தமான தம்பதிகள் என்று எண்ணி எண்ணி இறுமாந்தாள.
மாலதியுடனும் ரவியுடனும் போனில் பேசியது அந்த அன்னையின் மனம் நிறைந்து போனது.
பிள்ளைகளின் வாழ்க்கையே தன் சந்தோசம் என்று வாழ்ந்த அந்த தாய் 'கடவுளே இந்த சந்தோசம் போதும்' என்று கடவுளுக்கு நன்றி சொன்னாள்.
இப்பொழுதெல்லாம் சங்கர் தினமும் குடிக்க ஆரம்பித்திருந்தான்.
குடித்து விட்டால் யாரிடம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாது.
ஏதாவதொரு காரணம் சொல்லி தினமும் ராகவியுடன் வாய்ச்சண்டை வேறு.
ராகவி எவ்வளவு பொறுமையாக இருந்தாலும் சங்கர் விடுவதாக இல்லை. ஏதாவது வம்புக்கு இழுத்து வேணுமென்றே பேச்சை வளர்த்து எதிர்த்து பேச வைத்து சத்தம் போட்டு வீட்டையே இரண்டுபடுத்தி விடுவான்.
கல்யாணிக்கு ராகவியின் வாழ்க்கையை எண்ணி மன வேதனை இருந்தாலும் 'ராகவி பொறுமையாய் இரு. குடித்திருக்கும் நேரம் எதிர்த்து கதைக்க வேணாம்' என்று அறிவுரை சொல்லத்தான் முடிந்தது.
ராகவியும் கல்யாணியின் அறிவுரையை ஏற்று மௌனமாகவே இருக்கப் பழகிக் கொண்டாள்.
                
                     (20)

'துடுப்பாட்ட பந்தைப் போல
வாழ்க்கை தூக்கியே எறியும்போது
பாறையாய் இறுகிடாமல்
பந்தாக உயர வேண்டும்'

இன்று சங்கர் நிறைய குடித்திருந்தான். அவனால் நிதானமாக நடக்கவே முடியவில்லை.
தேவையில்லாமல் ரவியைப்பற்றியும் கல்யாணியைப் பற்றியும் ஏதேதோ குறைகளெல்லாம் சொல்லி சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
ராகவியும் இந்த நேரத்தில் ஒன்றும் கதைக்கக் கூடாது என்று பொறுமையாக அமைதியாக இருந்தாள்.
'ஏ ராகவி, நான் பேசிறது காதில விழயில்லையா? என்ன திமிரா?
ஏன் பேசாமல் இருக்கிறாய்? என்னோடு பேசப் பிடிக்கயில்லையோ?'
எத்தனையோ முயற்சி செய்தும் ராகவியுடன் சண்டையை ஆரம்பிக்க முடியாமல் போகவே இன்னும் போத்தலில் உள்ளதை கிளாசில் ஊற்றி வயிற்றுக்குள் நிரப்பினான்.
இப்பொழுது ராகவியின் பக்கத்தில் வந்து அவளது தலைமுடியைப் பற்றியபடி 'ஏனடி என்னோட பேசப் பிடிக்கயில்லை? புது போய்பிரண்டோடதான் கதைப்பியோ? யாரடி அவன்?
இல்லாத ஒன்றை இழுத்து கதைத்து எப்படியாவது சண்டை போட வேணுமென்றதானே அவனது நோக்கம்.
ராகவியும் இத்தனையும் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருந்தாள்.
கல்யாணியும் இவர்களது குடும்பப் பிரச்சனையில் தான் நுழையக்கூடாது என்று வாய் மூடி மௌனியாகவே இருந்தாள்.
சங்கரின் போதை தலைக்கேறி என்ன செய்வது என்று தெரியாமல்
சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை எல்லாம் உருட்டத் தொடங்கினான்.
பொறுமையிழந்த ராகவி 'உங்களுக்கு இப்ப என்ன வேணும்?' என்று கேட்டபடி சமையலறை வாசலுக்கு வந்தாள்.
இதற்காகவே காத்திருந்தவன் போல்'வாடி உன்னை கொலை செய்தால்தான் சரி' என்று உளறியபடி கத்தியை கையிலெடுத்துக் கொண்டான்.
பார்த்துக்கொண்டிருந்த கல்யாணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
வீட்டுக்கதவைத் திறந்து வெளியே போய் 'ஜயோ ஆராவது உதவிக்கு வாங்களேன்.' என்று கத்தத் தொடங்கினாள்
சற்று நேரத்திற்குள் பொலிஸ் கார் பெரிய சைரன் ஒலியுடன் வீட்டின்முன் வந்து நின்றது.
யாரோ அயலவர்கள் பொலிசுக்கு அறிவித்து விட்டனர்.
பொலிஸ் வீட்டினுள் நுழைந்த பொழுது சங்கரின் கையில் கத்தி இருந்தது. ராகவி பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள்.
குழந்தை ஒருபுறம் வீரிட்டு அலறியபடி இருந்தது.
அடுத்தகணம் குடிபோதையில் கத்தியுடன் நின்ற சங்கர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காரில் ஏற்றப்பட்டான்.
ராகவி திகைத்து நின்றாள்.
கல்யாணிக்கு எப்படி பொலிஸ் வந்தது என்ன நடக்கிறது என்று புரியவேயில்லை.
             

                           (21)

'நீர்க் குமிழி வாழ்க்கை என்போம்
நீல வானும் வெண்மை என்போம்
பார்க்குமிடம் தோறும் அண்ட
சாகரமும் வெறுமை என்போம்'


என்ன நடக்கிறது என்று திகைத்து நின்ற கல்யாணியின் திகைப்பு அடங்குவதற்கு முன் என்னென்னவோ நடந்து முடிந்து விட்டது.
'ராகவி எப்படி பொலிஸ் வந்தது? '
'அம்மா எல்லாம் கை மீறிப் போறிற்றுது' அழுகையும் ஆத்திரமுமாக ராகவி பதிலுரைத்தாள்.
'விசாரிச்சுப் போட்டு விடுவான்களோ?'
கல்யாணிக்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை.
'அம்மா கனடா சட்டம் உங்களுக்குத் தெரியாது. அதுவும் குடிபோதையில் கையில் கத்தியுடன், ஜயோ, இந்தக் குடிப்பழக்கத்தை விடச் சொல்லி எத்தனை தரம் சொன்னனான். இப்ப என்ன செய்யிறது.'
ராகவி தனது நெருங்கிய தோழியின் மூலம் சட்டத்தரணியை அழைத்து விடயத்தை சொன்னாள்.
சங்கர் வெளியில் வருவது உடனடியாக நிகழாது என்று சடடத்தரணி கூறியதும் ராகவியின் கோவம் கல்யாணியிடம் திரும்பியது.
'உங்களாலதான் எல்லாம் வந்தது'
ராகவி தன் இயலாமையை தாயிடம் கொட்டித் தீர்த்தாள்.
'ராகவி. கையில கத்தியோட நின்றான். நான் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு இருக்க ஏலும். அதுகும் உன்னை கொலை செய்யப் போறன் எண்டு சொன்ன உடன எனக்கு என்ன செய்யிறதென்றே தெரியல்ல. அதுதான் வெளியில ஓடிப்போய் யாராவது உதவிக்க வருவினமென்று சத்தம் போட்டனான்.'
ராகவிக்கும் கல்யாணியின் நிலமை புரியாமலில்லை.
சிலவேளை பொலிஸ் வராவிட்டால் தன்னைக் காயப்படுத்தவும் சங்கர் தயங்கி இருக்க மாட்டான்.
எல்லாம் இந்த குடியால் வந்த கேடு.
இரண்டு கிழமையாக பொலிஸ் கோட் என்று அலைந்து இனி இப்படி நடக்காது என்று சங்கர் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் நண்பன் கொடுத்த உத்தரவாத கையெழுத்துடனும் மனைவியின் ஒப்புதலின் பேரிலும் ஒரு பெரிய தொகை தண்டப்பணமாக கட்டியபின் சங்கரை விடுதலை செய்தனர்.
'இது முதல் தடவை இனிமேலும் இப்படி ஏதாவது நடந்தால் நிரந்தரமாக உள்ளே இருக்க வேண்டியதுதான்' என்று அச்சுறுத்தல் வேறு கொடுக்கப்பட்டிருந்தது.
வீடு திரும்பிய சங்கரைக் கண்டு கல்யாணி பயத்தில் நடுங்கினாள்.
'சீ, இவளெல்லாம் ஒரு மனசியா? நன்றி கெட்டது'
கல்யாணியை விரோதத்துடன் பார்த்து சங்கர் உறுமினான்.
கல்யாணி தன் கணவனது வாயிலிருந்தே ஒரு சுடுசொல் கேட்காதவள். முதன்முதலாக மருமகனின் வாயினால் கடும்சொல் கேட்டதும் மனம் குமைந்து போனாள்.
சங்கரின் கோவப் பார்வையைத் தவிர்க்க அவன் முன் வருவதைத் தவிர்த்தாள்.
பொலிசுக்குப் போய் வந்ததனால் சங்கரின் வேலைக்கும் பங்கம் ஏற்பட்டது.
வீட்டிலேயே இருக்கும் சங்கரின் கண்களில் படாமல் பூட்டிய அறைக்குள் எவ்வளவு நேரம்தான் காலம் தள்ளுவது.
பேசாமல் பேஸ்மென்ற் அறைக்குள் சென்று அமர்ந்து கொள்வாள்.

 

தொடரும்..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.