Jump to content

எப்படி ராகிங் செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி ராகிங் செய்வது?

வா. மணிகண்டன்

கல்லூரியில் படிக்கப் போவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே நாவரசு- ஜான் டேவிட் விவகாரம் பாப்புலராகிவிட்டது. நாவரசுவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அவர் மறுத்ததால்தான் ஜான் டேவிட் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். கொலையாக இருந்தாலும் சரி; கொள்ளையாக இருந்தாலும் சரி- அவ்வளவு ஏன்? கள்ளக்காதலாக இருந்தாலும் கூட கட்டிலுக்கு அடியில் தினத்தந்தி, மாலைமுரசு செய்தியாளர்கள் ஒளிந்திருந்து அச்சுபிசகாமல் எழுதுவார்கள் என்பதால் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிக் கொள்வேன். அப்படித்தான் ஜான் டேவிட் விவகாரத்தையும் எழுதியிருந்தார்கள். அதுவரைக்கும் ஓரினச் சேர்க்கை என்றால் என்னவென்று தெரியாது. அதை விளக்கி நெஞ்சத்து இருளுக்குள் விளக்கேற்றி வைத்த பெருமை நிருபர்களையே சாரும். கல்லூரிக்குச் சென்றால் எப்படியும் ஒரு பையன் வன்புணர்ந்துவிடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டாவது வருடம் சென்றவுடன் நாமும் ஒருவனை வன்புணர்ந்து பழி தீர்த்துவிடலாம் என்று சுய ஆறுதலும் அடைந்து கொண்ட காலம் அது.

அந்தத் திருநாளும் வந்தது. கல்லூரியில் சேர்த்துவிட்டார்கள். எங்கள் கல்லூரியில் ராகிங்கை தடை செய்திருப்பதாக பார்த்த பக்கமெல்லாம் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். சீனியர்கள் யாராவது லோலாயம் செய்தால் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகவும் எச்சரித்திருந்தார்கள். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. இந்த எச்சரிக்கைகளால் கல்லூரி வளாகத்திற்குள் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனால் விடுதி இருக்கிறதே- ஏழு மணி ஆனால் பயோ-வாட்ச் அலறத் தொடங்கிவிடும். ‘சீனியர் கூப்பிடுறாரு...ரூம் நெம்பர் xxx க்கு போ’ என்று யாராவது வந்து சொன்னால் சோலி சுத்தம். ராகிங் செய்தால் கூட தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அசைன்மெண்ட் எழுதச் சொல்லிவிடுவார்கள். மண்டியைப் போட்டுக்கொண்டு தீட்டு தீட்டென்று தீட்ட வேண்டும். அதிலும் நம் நேரம் கெட்டுக் கிடந்தால் இம்போஸிஷன் வந்து மாட்டும். விடிய விடிய எழுதினாலும் தீராது. இதில் என்ன கொடுமை என்றால் நம்மை எழுதச் சொல்லிவிட்டு சீனியர் ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருப்பார் அல்லது வாக்மேனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் கம்யூட்டர் அவ்வளவாக புழக்கத்திற்கு வரவில்லை என்பதால் வாக்மேன்தான் அதிகபட்சம். அவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க நாம் கடுப்பிலேயே எழுதி முடிக்க வேண்டும்.

இந்த எழுத்து வேலை போக அவ்வப்போது ராகிங்கும் உண்டு. எனக்கு எப்பவுமே நாக்கில்தான் சனி என்பதால் சீனியர்களிடம் சிக்கும் போதெல்லாம் கொங்குத் தமிழில் பேசச் சொல்வார்கள். ‘அதாவுதுங்கண்ணா’ என்று ஆரம்பித்து எதையாவது பேச வேண்டும். ஒரு சமயம் வகுப்பில் இருக்கும் அழகான பெண்ணைப் பற்றி பேசச் சொன்னார்கள். இதுதான் சாக்கு என்று ஒரு அழகியைப் பற்றி அள்ளிவிட்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அந்த வர்ணனைக்கு இன்ஸ்பிரேஷன் பள்ளிக் கூட தமிழ் வாத்தியார்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் ஒரு தமிழாசிரியர் இருந்தார். வி.பி.எஸ் அய்யா. தமிழ் பண்டிட். ‘கண்ணகி பாதம் எப்படி இருந்துச்சு தெரியுமா...வெயில் தொடாத பாதம்...அப்படியே பூ மாதிரி....ஸ்ஸ்ஸ்’ என்று கிளுகிளுப்பாகச் சொல்லிவிட்டு ‘மணிகண்டா எப்படி இருந்துச்சு?’ என்பார். நானும் கூச்சமே இல்லாமல் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று இழுத்துவிடுவேன். இப்படியெல்லாம் தமிழ் வாத்தியார் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் கூட தமிழ் வகுப்பு சலிப்பேற்றுவதாக இருந்ததேயில்லை. இதே முறையில்தான் ராகிங்கின் போது அந்தப் பெண்ணை வர்ணித்துவிட்டு ‘அவ பாதம் எப்படியிருந்துச்சுங்கண்ணா?’ என்று சீனியர் ஒருவரைப் பார்த்துக் கேட்டுவிட்டேன். கூட்டத்தில் தன்னை கலாய்ப்பதாக நினைத்துவிட்டார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.

கன்னத்தைத் தேய்ப்பதோடு விட்டார்களா? அடுத்த நாள் அந்த அழகியிடமும் எசகுபிசகாக சொல்லிவிட்டார்கள். அதோடு கதை முடிந்தது. நான்கு வருடத்தில் ஒரு முறை கூட அவள் என்னிடம் பேசியதில்லை. இப்பொழுது இது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அப்பொழுது அது பெரிய விஷயமாகத் தெரிந்தது. மனதுக்குப் பிடித்த பெண்ணொருத்தி ஏறெடுத்தும் பார்க்காத காவியச் சோகம் அது. கவிதை எழுதினேன்; நாடகம் நடத்தினேன். வேலைக்கே ஆகவில்லை.

இந்த காதல் கதையை இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.

‘பாதம் எப்படியிருந்துச்சுங்கண்ணா?’ என்று கேட்டேன் அல்லவா? அந்த சீனியர் ஒரு சுபயோக சுபதினத்தில் முதல் வருட மாணவர்கள் நான்கைந்து பேர்களை தனது அறைக்கு அழைத்தார். அவர் ஒரு மார்க்கமான ஆள் என்று ஏற்கனவே கிளப்பிவிட்டிருந்தார்கள். அவ்வளவுதான். இன்றைய தினத்தை நம் காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஞாபகத்துக்கு வந்த சாமிகளை எல்லாம் வேண்டிக்கொண்டு மேலே சென்றேன். ஆளாளுக்கு ஒரு பாட்டிலை எடுத்து வரச் சொன்னார். அப்படியே செய்தோம்.

எங்கள் நான்கைந்து பேர்களுக்கும் ஒரு போட்டி. யார் அதிகத் தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். கீழே கேண்டீனுக்குச் சென்று அவரவர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து வர வேண்டும். மேலே வந்து சீனியர் முன்னால் குடித்துக் காட்ட வேண்டும். அவர் கணக்கு எழுதி வைத்துக் கொள்வார். இதென்ன பெரிய விஷயம்? கற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை என்ற உற்சாகத்தில் மூன்று நான்கு பாட்டில்கள் தண்ணீரைக் குடித்துவிட்டேன். வயிறு தள்ளிக் கொண்டு வந்தது. படி ஏறும் போதும் இறங்கும் போதும் வயிற்றுக்குள் ‘கலங்...புலங்..சலங்’ என்று சத்தம். அத்தனை பேரும் ஓய்ந்துவிட்டோம்.

‘இதுக்கு மேல முடியாதாடா?’ என்றார்.

ஆளாளுக்கு தலையைக் குத்திக் கொண்டு நின்றோம்.

‘சரி இங்கேயே நில்லுங்க...ஒண்ணுக்கு வந்தா சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு தப்பித்து ஓடிவிடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். எங்களில் ஒருவன் ‘அண்ணா...ஒண்ணுக்கு வருது’ என்றான்.

‘போலாம் இரு’ - இது சீனியர்.

ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். யாரையும் அனுமதிக்கவில்லை. பத்து நிமிடங்கள் ஆனது. பதினைந்து நிமிடங்களும் ஆகிவிட்டது. எனக்கும் அடிவயிற்றில் மாறுதல் தெரிந்தது. இது சைக்காலஜிக்கலான விஷயம் இல்லையா? வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டு அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் என்னவாகும்?

ஆளாளுக்கு நெளியத் துவங்கினோம். விடமாட்டான் போலிருந்தது.

‘யாருக்குடா ரொம்ப அவசரம்?’ முதலில் சிறுநீர் வருவதாகச் சொன்னவன்தான் கை தூக்கினான். முந்திரிக்கொட்டை.

‘நிஜமா அவசரமா?’

‘ஆமாண்ணா’

‘அப்படின்னா இங்க வா...இந்த டப்பாவில் அடி’ என்று ஒரு டப்பாவைக் காட்டினார். டப்பாவிலா? அடுத்தவர்கள் பார்ப்பார்களே என்றுதான் கூச்சமாக இருந்தது. ஆனால் டப்பாவை உற்றுப் பார்க்கும் போதுதான் தூக்கிவாரிப் போட்டது. அது மின் இணைப்புக் கொடுக்கப்பட்ட டப்பா. நல்லவேளையாக 230 வோல்ட் கொடுக்கவில்லை. ஒரு எலிமினேட்டர் வைத்து ‘சுரு சுரு’ கரண்ட் கொடுத்து வைத்திருந்தார். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்கள். ஆளும் சாகக் கூடாது; ராகிங் செய்த மாதிரியும் இருக்க வேண்டும். ‘தடியும் உடையக் கூடாது. பாம்பும் சாகக் கூடாது’- இந்தப் பழமொழிக்கு டபுள் மீனிங் எடுக்காமல் மேலே படியுங்கள்.

டப்பாவை பார்த்தவுடன் ‘அண்ணா எனக்கு வரலை’ என்று முதலில் கை தூக்கிய முந்திரிக்கொட்டை தப்பிக்க முயன்றான். ஒரு குச்சியைக் கையில் வைத்துக் கொண்டு ‘வந்து அடிக்கலைன்னா நான் அடிப்பேன்’ என்றார். அது ஒரு பெரிய குச்சி. அடித்தாலும் அடித்துவிடுவான். பம்மிக் கொண்டே அவன் சென்றான்.

எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. நாக்கில் ஷாக் கொடுத்தால் கூட சமாளித்துவிடலாம். அந்த சீனியருக்கு அறிவு கிட்னியில் இருக்கும் போலிருக்கிறது. குதர்க்கமாக யோசித்திருக்கிறார். முந்திரிக்கொட்டைதான் தனது பரிசோதனையை ஆரம்பித்தான். ஷாக் அடிக்கும் போதெல்லாம் ‘ஜ்ர்ர்ர்ர்ர்ர்’ என்ற சத்தம் நின்றுவிடும். ‘அண்ணா போதும்’ என்பான். தன்னிடம் இருக்கும் குச்சியால் சீனியர் ஒரு அடி போடுவார். மீண்டும் ‘ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்’. இப்படியே நான்கைந்து பேர்கள் சோலியை முடிக்கும் போது ஏகப்பட்ட சீனியர்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடிவிட்டார்கள். எல்லோருக்கும் இலவச படம் காட்டினோம்.

இந்த வலியைக் கூடத் தாங்கி இருக்கலாம். ஆனால் இந்தக் கருமத்தையும் என் வகுப்பு பெண்களிடம் பரப்பிவிட்டார்கள். அதைத்தான் தாங்க முடியவில்லை. இதையெல்லாம் பரப்புவதற்கென்றே சில ஜென்மங்கள் பிறப்பெடுத்திருக்கும் அல்லவா? அப்படியொரு ஜென்மம் செய்த காரியம் அது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு எந்தப் பெண்ணின் முகத்திலும் விழிக்க முடியவில்லை. வெட்கம் என்றால் வெட்கம்- அப்படியொரு வெட்கம்.

ஓரிரு மாதங்கள் கழித்து ஏதோ ஒரு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எலெக்ட்ரானிக் சப்ஜெக்ட். மின்னோட்டத்தைக் குறைப்பது பற்றிய பாடம். எலிமினேட்டர்தான். சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது ‘மணிகண்டன் எலிமினேட்டர் டிசைன் செஞ்சிருக்கான் மேடம்’ என்று யாரோ கடைசி வரிசையில் இருந்து கத்தினார்கள். மொத்த வகுப்பும் சிரித்துவிட்டது. அந்த மேடம் உண்மையாக இருக்கும் என்று நினைத்து ‘அப்படியா?’ என்றார். மேலேயும் கீழேயும் பார்த்துபடியே எழுந்து நின்றேன். ‘எப்படின்னு சொல்லுடா?’ என்று பின்வரிசையில் இருந்து மீண்டும் கத்தினார்கள். இப்பொழுதும் வகுப்பே சிரித்தது. நான் ஓரக்கண்ணால் பெண்களைப் பார்த்தேன். அந்த அழகான பெண் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அது போதும். எத்தனை டப்பாவில் வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

http://www.nisaptham.com/2014/05/blog-post_7.html

Link to comment
Share on other sites

இவர் எழுதியிருக்கும் பல அனுபவங்கள் எங்கள் கல்லூரியில் நடந்தவை போலவே இருக்கு.. :huh: ஆனாலும் எலிமினேட்டர் அனுபவம் எதுவும் கேள்விப்படவில்லை.. :lol: மணிகண்டன் என்கிற பெயரில் ஒரு மாணவர் இருந்த ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது மினி ட்ராஃப்டர்கள் வருவதற்கு முன் நாங்கள் படிக்கும்பொழுது 'டி-ஸ்கொயர்' என்ற வரைவுதடி உண்டு. அன்றைய தினம்  மாலை பொறியியல் வரைவு(Engineering Drawing) வகுப்பு முடிந்தவுடன், கல்லூரி விடுதி நோக்கி செல்லுகையில் தெரியாத்தனமாக இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் சிலரிடம் முதலாண்டு மாணவர்களாகிய நாங்கள் சிக்கிக்கொண்டோம்.

 

குறும்பான(????) சீனியர் மாணவர் ஒருவர் எங்களின் இடுப்பில் அந்த 'டி-ஸ்கொயரை' கட்டிவிட்டு அப்புறம் நடத்தச் சொன்ன கூட்டுக் கூத்துகளை இங்கே எழுத இயலாது. :)

 

இதுபோன்ற 'பல கூத்து'களை அந்நாளில் சிரமத்துடன் சந்திதித்து, பின்னர் பகிடிவதை செய்த அதே சீனியர் மாணவரை இங்கே கண்டு, "நீங்கள் இப்படி செய்தவர்தானே?" இன்னமும் சொல்லி சிரிப்பதுண்டு. :icon_mrgreen:

 

பொன்னான கல்லூரி வாழ்க்கை கூத்துகளை இந்நாளில் நினைவு மீட்பதும் இனிய அனுபவமே!

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க யுனி போன போது ராக்கிங்கு தடை வந்துவிட்டது. ஆனாலும் பலர் கற்றலுக்கு சீனியர்களின் ஆதரவு தேவை என்று சொல்லி தடையை மீறி நடந்த ராக்கிங்கை எடுத்தார்கள். ராக்கிங் என்று சிலர் அணுகிய போது அதனை ஏற்க மறுத்துவிட்டேன். எதுவும் செய்ய முடியாமல் நடையை கட்டிவிட்டார்கள். இறுதியில்.. வெருட்டிப் பார்த்தார்கள்.. அக்காடமிக்கா உனக்கு உதவ மாட்டம் எப்பவும் என்று. அசரவே இல்லை. ஆனால்.. கடைசியில் நடந்தது என்னெவென்றால்.. அவையா அக்காடமிக்கா  எங்களிடம் உதவி தேடி வந்தது தான். சும்மா சீனப்போட்டாங்க.. எல்லாம் வெட்டி சீனு. :lol::icon_idea:

 

ராக்கிங் பயத்தால்.. தென்பகுதி பல்கலைக்கழகங்களுக்குப் போகப் பயந்த தமிழ் பெண்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அதை விட மோசமான ராக்கிங். சிலர் அதுக்கும் பயந்து படிக்கவே போகவில்லை. :(

 

இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில்.. ராக்கிங் போதை பாவனையில்... இல்லை..! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.