Jump to content
  • entries
    8
  • comments
    3
  • views
    34407

இரு உள்ளங்கள்


மல்லிகை வாசம்

1885 views

கடந்த சில நாட்களாக வசந்தனின் மனம் அமைதியின்றி தவித்தது. எப்படியாவது தனது மனதில் தோன்றிய எண்ணங்களை யமுனாவுடன் பகிர்ந்துவிட வேண்டும் என அவன் மனம் அடிக்கடி சொல்லியது. இருந்தாலும் அவனது சிறு ஈகோ அதை தடுக்கவும் செய்தது. ஆனாலும், இதை இப்படியே மனதில் பூட்டி வைத்திருக்க முடியாது என உணர்ந்து கொண்ட அவன், எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்பது என்று முடிவு செய்தான். சரி, அவனது பிரச்சினை தான் என்ன?

*********

உயர்தரம் படிக்கும்போதே வசந்தனுக்கும், யமுனாவுக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் தான் இருவரும் படித்தனர். அவன் கணித பிரிவு. வசந்தன் கெட்டிக்காரன். மிக அமைதியானவன். ஆனாலும் இயல்பாகவே உதவி செய்யும் மனப்பாங்கு உடையவன். அவனது நண்பர்கள் பாட ரீதியாக என்ன சந்தேகம் கேட்டாலும் முகம் சுழிக்காது, முகத்தில் ஒரு சிறு வசீகரப்புன்னகையுடன் அவர்களது சந்தேகத்தை தீர்த்து வைப்பான். இதனால் அவனுக்கு புன்னகை மன்னன் என்ற பட்டம் வேறு.

வசந்தன், யமுனா இருவருக்கும் பொதுவாக பௌதீகம், இரசாயண பாடங்கள் இருந்த போதிலும், ஆரம்பத்தில் அவை பற்றி இருவரும் கலந்துரையாடி படித்ததில்லை. இருவருக்கும் உள்ள கூச்ச சுபாவமே அதற்குக் காரணம். ஆனாலும், அவனது அமைதியான, கண்ணியமான, உதவி செய்யும் குணத்தைக்கண்டு யமுனாவே ஒருநாள் பௌதீக பாடத்தில் சந்தேகம் கேட்க வந்தாள். அவனும் பொறுமையுடனும், விருப்புடனும் அதே சிரித்த முகத்துடனும் அவளது சந்தேகத்தை தீர்த்து வைத்தான். அதன் பிறகு யமுனா தனது சந்தேகங்களை வசந்தனிடம் தயங்காமல் கேட்பாள். யமுனா இரசாயணவியலில் கெட்டிக்காரி என்பதால், அவனும் அந்த பாடம் சம்பந்தமான சந்தேகங்களை அவளிடம் கேட்டு விளங்கிக்கொள்வான்.

******

உயர்தர பரீட்சையுடன் பாடசாலை இருவரினதும் வாழ்க்கை முடிவடைந்தது. இப்போது இருவரும் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் கணினி பாடம் ஒன்றை கற்றுக்கொண்டிருந்தனர். பாடசாலையில் தொடங்கிய நட்பு இங்கும் தொடர்ந்தது. இப்போது யமுனாவுக்கு வசந்தன், தனது சொந்த சோகங்களை சொல்லும் அளவுக்கு நண்பனாகி விட்டான். யமுனா தனது பிரச்சினைகளை சொல்லி வேதனைப்படும் போது, அதே புன்னகை மிகுந்த முகத்துடன் ஆறுதல் சொல்லி அவளை தேற்றுவான்.

இப்படி இருக்கையில் அவர்களது உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் வெளியாகின. வசந்தன் அகில இலங்கையில் கணித பாடத்தில் ஆறாவதாக தேறியிருந்தான். யமுனாவுக்கு உயிரியல் பிரிவில் நான்காவது இடம். முடிவுகள் வெளியானதும் இருவருமே ஒருவரை ஒருவர் வாழ்த்திப் பாராட்டினர்.

ஆனால், பரீட்சை முடிவுகள் வெளியாகி சில நாட்களின் பின்னர் வசந்தன் சில மாற்றங்களை அவதானித்தான். அவனது நண்பர்கள் வட்டம் தன்னை விட்டு விலகுவது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு தோன்றியது, யமுனா உள்ளடங்கலாக. அவனுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம் குறைந்துவிட்டதை அவதானித்தான். இத்தனைக்கும் அவனது நண்பர்கள் சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்தாலும், எவரும் அவனுக்கு கிட்டிய பெறுபேறுகளை பெறவில்லை, யமுனாவை தவிர. வழக்கமாக அவனிடம் உதவி என்று வரும் பல நண்பர்கள் இப்போது வருவதில்லை என்பதையும் அவதானித்தான்.

இப்படியான நாட்களில், கணினி வகுப்பிற்கு சென்ற போது, யமுனாவுடன் கதைத்தான். அவளுடன் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது, 'என்ன வசந்தன்... ஆளே மாறிட்டீங்கள்? முந்தி நல்லா சிரிப்பீங்கள். இப்ப என்னடா என்றால் முகம் இஞ்சி திண்ட குரங்கு மாதிரி இருக்கு' என்றாள். அவனுக்கு அதிர்ச்சியாகவும், ஆத்திரமாகவும் இருந்தது. 'இஞ்சி திண்ட குரங்கு' என்ற வார்த்தையை மட்டும் நினைத்தபடி, இவள் இப்படி சொல்லிவிட்டாளே என்று வேதனையுற்றான். இவை ஒன்ரையும் வெளியே காட்டிக்கொள்ளாது, 'நான் இப்போது அவசரமாக வீடு போகவேணும் ' என்ரு சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அதன் பிறகு அவன் யமுனாவை சந்தித போதும், முன்பு போல அவளுடன் பழகுவதை தவிர்த்தான். முகமனுக்காக ஒரு சிறு சிரிப்பு, பாடம் பற்றி கதைப்பது இவற்றுக்கு மேல் அவளுடன் பழகுவதில்லை.

இப்படி இருக்கையில், ஒரு சில நாட்களின் பின்னர் ஒரு நாள் மீண்டும் அவள் சொல்லியதை மீண்டும் மனதில் அசை போட்டான். 'இஞ்சி திண்ட குரங்கு...'. இதற்கு முன்னர் எவரும் அவனை அப்படி அழைத்ததில்லை. 'புன்னகை மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவன், இன்று எப்படி இஞ்சி தின்ற குரங்கானான். இவ்வாறு யோசிக்கையில் அவனுக்கு ஒரு விஷயம் பளிச்சென புரிந்தது. அது அவனது மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பத்துக்கும் பதில் சொல்லியது. இதை யமுனாவிடமும், மற்றய நண்பர்களிடமும் பேசினால், அவனது மனப்பாரம் குறைந்துவிடும் என்று அவனுக்குப்பட்டது. எனவே தான் எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்பது என்று முடிவு செய்தான்.

*********

அன்றைய வகுப்பு முடிந்ததும், வசந்தனை நெருங்கிய யமுனா "வசந்தன்..., உங்களோட ஒன்று கதைக்க வேண்டும்" என்றாள். வசந்தனுக்கு திகைப்பாக இருந்தது. அவன் தான் அவளிடம் பேச வேண்டும் என்று வர, அவள் தானும் ஏதோ சொல்ல வேண்டும் என்கிறாளே... என்னவாக இருக்கும் என்று சிந்தித்த அவன், பிறகு முதலில் அவள் மனதில் உள்ளதை அறிவது என்று முடிவெடுத்தபடி, "என்ன... சொல்லுங்கோ" என்றான்.

"இப்ப கொஞ்ச நாட்களாக எனக்கு மனதிலை நிம்மதி இல்லை, வசந்தன்"

"ஏன்? என்ன நடந்தது?" இது வசந்தன்.

"நாங்கள் உயர்தரம் படிக்கும் போது தொடக்கம், போன மாதம் வரை எவ்வளவு நட்பாக இருந்தம்... இப்ப கொஞ்ச நாட்களாக எங்களுக்குள் அவ்வளவாக நெருக்கம் இல்லை போல தெரியுது"

"ம்ம்"

"என்ன ம்ம்...? ஏதாவது காரணம் புரியுதா, வசந்தன்?"

"உங்களுக்கு ஏதாவது புரியுதா, யமுனா?"

"உயர்தர பரீட்சை முடிவுகள் வந்ததில் இருந்து நான் நல்லா மாறீட்டன் வசந்தன். அகில இலங்கை ரீதியில் நல்ல பெறுபேறு பெற்றவுடன் முந்தி ஒருக்காலும் இல்லாத கர்வம், திமிர் எனக்கு வந்திட்டுது. மற்றவர்கள் என்னை புகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு நிறைய இருக்கு. அப்படி தான் மற்றவர்கள் புகழ்ந்தாலும் இன்னும் புகழ்ச்சியை எதிர்பார்க்குது என் மனது... உங்களுக்கு ஒன்று தெரியுமா வசந்தன்?"

"என்ன?"

"இப்போதெல்லாம், எனது நண்பிகள் என்னுடன் முன்னம் மாதிரி பழகுவதில்லை. ஏன் நீங்கள் கூடத்தான். எல்லாம் நான் செய்த பிழை. எண்ட கர்வம் தான் என்னை தனிமைப் படுத்திவிடும் போல இருக்கு".

இவ்வளத்தையும் பொறுமையாக கேட்ட வசந்தன் சொன்னான். "இதையே தான் இன்று உங்களுடன் நான் பேச இருந்தனான். நீங்கள் முந்திக்கொண்டீர்கள் யமுனா. இப்படித்தான் சிறு சிறு ஈகோக்களால் நல்ல நண்பர்கள் கூட பிரிகின்றார்களோ...." என்றவன், "நன்றி யமுனா, நீங்களும், நானும் ஒரே மாதிரி தான் யோசிச்சிருக்கிறம்" என்றான் அதே வசீகரப் புன்னகையுடன்.

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.