Jump to content
  • entries
    2
  • comments
    2
  • views
    44968

எலியட்ட என்டே! (01)


melbkamal

1414 views

இவன் என்ன தமிழ் பற்றியெல்லாம் எழுதிப் போட்டுச் சிங்களத்தில தலையங்கம் வைத்திட்டான் என்று யாரோ புலம்பியபடி இதனைப் படிப்பது எனக்குப் புரிகிறது. ம்....சரி சரி கொஞ்சம் பொறுமையாயிருங்கோ....நான் விசயத்திற்கு வாறேன்.

சமாதான காலம் என்பது என் போன்ற இள வயதில் உள்ள யாழ்ப்பாண இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்த காலமாகும், எண்பத்தியொன்பதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட பேரினவாதக் கனவுகளின் விளைவால் புகைவண்டி என்றால் மன்னிக்கவும் ரயில் என்றால் என்னவென்று நேரில் பார்க்கும் வாய்ய்புக் கிடைக்கவில்லை. இது மட்டுமன்றிக் கொம்பியூட்டர் என்றால் பேச்சளவில் மட்டுமே தெரிந்திருந்தும், தொலைக்காட்சியில் பார்த்துமறிந்திருந்த பெரும்பாலானவர்களுக்கு புகைவண்டி, தொலைக்காட்சி பிளாஸ்ரிக் கதிரைகள், கொம்பியூட்டர் எனப் பலப் பல இத்தியாதி அயிட்டங்களை எமக்கு அறிமுகப்படுத்திய வசந்த காலமது. ம்...

ஏன் சொல்லப் போனால் கொழும்பையே எமக்கு அறிமுகப்படுத்திய காலமது, ஒரு பழைய கசற் ஒன்று எங்கட வீட்டு மூலைக்குள் இருந்தது, அது லூஸ் மாஸ்ரரின்ர பகிடிக் கசற். அதில வாற கொழும்புப் பகிடி சுவையாக இருக்கும். இப்படித்தான் யாழ்ப்பாணத்தில இருந்த்து ஒருவர் முதல் முதல் கொழும்புக்குத் தனது மாமனாருடன் கொழும்புக்குப் போனார். அவர் போகும் போது அவரின் அம்மம்மா சொல்லி விட்டது... 'எடேய் அப்பு... நீ போற இடம் கொழும்படா மோனை,,, வலு கவனம். சனம் நெரிச்சலுள்ள இடம்... மாவாவை விட்டிட்டு விலகிப் போடாதை.... உன்னை அங்க தேடிப் பிடிக்கிறது கரைச்சல்''என்று சொல்லியிருக்கிறா...

கொழும்புக்குப் போனவரும் அங்கால இங்கால திரும்பவில்லையாம்..... தனது மாமனாருக்குப் பின்னாலே சென்றாராம்... கொழும்பெல்லாம் பார்த்து முடிஞ்ச பிறகு நம்மவரும் யாழ்ப்பாணத்திற்கு வந்ததும் நண்பர்கள் கேட்டார்களாம் எப்படி மச்சான் கொழும்பு என்று,.... அவர் யோசிச்சார்...நான் எங்க கொழும்பைப் பார்த்தனான்..மாமாவின்ர முதுகை எல்லோ பார்த்தனான்.... இதைச் சொன்னால் வெட்கக் கேடு என்று விட்டுக் கொழும்பில உள்ள புதுப் புது விடயங்கள் என்று ஏதோ எல்லாம் அவிழ்த்து விட்டாராம் மனுசன்.

இந்த லூஸ் மாஸ்ரர் கசற்றை நாங்களும் சின்னனில படிக்கும் போது கேட்டுக் கேட்டுக் சிரிப்பதுவும்....பின்னர் அதனை அப்படியே மனப்பாடம் செய்து ரியூட்டறியிலயும், எங்கட யாழ் மத்திய கல்லூரியிலயும் நாங்கள் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது தனி நடிப்பென்று நடித்து எல்லோரையும் ரசிக்க வைச்சதும் என் சின்ன வயது ஞாபகங்கள்.

நாங்கள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது எங்கட பள்ளிக் கூடத்தில ''D'' வகுப்புத்தான் பெஸ்ற் கிளாஸ் (Best Class) என்று சொல்லுவீனம். ஒரு மாதிரி கஸ்ரப் பட்டுப் படிச்சு ''D' வகுப்பை ஆறாம் ஆண்டில இருந்து (O/L) உயர் தரம் படிக்கும் வரை தக்க வைப்பதென்பதை பெரிய சாதனையாகத்தானே சொல்ல வேணும். எங்கட வகுப்பென்றால் கெட்டிக்கார வகுப்பென்று தான் எல்லொரும் சொல்லுவார்கள்.

வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லையென்றால் நாங்கள் பக்கத்து வகுப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் நாடகங்கள் எல்லாம் தயார் செய்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழுங்கமைத்து ஒரு நாற்பது நிமிடப் பாட நேரத்திற்குள் எதனையோ சாதித்ததாய் எங்கள் சின்ன வயதில் பெருமைப் பட்டுக் கொள்வோம்.

ஹர்சன், ஞானவேல், ரஜீவன், பிரசன்னா, அகீனன், திருக்குமார், நான் உட்பட இன்னும் பல பேர் சேர்ந்து ஆசிரியர் வகுப்பிற்கு வராத பாட நேரத்தில் ஏதாவது நாடகங்கள், இல்லை என்றால் பாடுக் கச்சேரி, பட்டி மன்றம் எனப் பல சுவையான நிகழ்ச்சிகள் உடனடியாகத் தயார் செய்து எமது சக மாணவர்களுக்கு வழங்கிச் சந்தோசப் பட்டுக் கொள்வோம்.

இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் தான் ஒரு நாள் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் போது எமது இரண்டாம் தவணை முடிந்து மூன்றாம் தவணை தொடங்கும் போது எமது தமிழாசிரியை அவர்கள் கேட்டார். எல்லோரும் இந்த விடுமுறைக் காலத்தில என்ன செய்தனீங்கள் என்று?? உடனே ஞானவேல் எழும்பி தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல அந் நேரம் நானும் என்ர தனி ரகத்தைக் காட்டப் போய் பக்கத்தில இருந்த ஹர்சனிடம் 'ஏன் மச்சான் உவன் மட்டும் தான் கொழும்புக்குப் போனவன்??? நானும் தான் கொழும்பிற்குப் போனனான் என்று சொல்ல ஹர்சனும் உடனடியாக எங்களாசிரியரிடம் ''ரீச்சர் இவன் கமலும் கொழும்புக்குப் போனவன் என்று கூற ரீச்சரும் உடனே ''எப்படிக் கொழும்பு??? கொழும்பில எங்க எங்க போனீங்கள்??? எங்க இருந்தீங்கள் என்று கேட்க???

நானும் எனக்குள்ளை இருந்த சமூகக்கல்விப் பாட அறிவை வைச்சு ஒரு மாதிரிக் கொழும்பைப் பற்றிச் சொல்லி ஜமாய்த்ததும் என்ர சின்ன வயசுச் சமயோசிதம் என்றே சொல்ல வேணும்.

இந்த ஏ ஒன்பது நெடுஞ்சாலை திறக்கும் வரைக்கும் எங்கடை வகுப்புப் பொடியளுக்கு கொழும்பு பார்த்த ஆட்கள் நானும் ஞானவேலுமாகத்தான் இருந்திருப்பம்.... இப்போது வரைக்கும் பாதை திறப்பதற்கு முன்னர் கொழும்பு பார்த்தது பற்றி நான் அப்போது சொன்னது பொய் என்று எங்கள் வகுப்புப் பொடியங்கள் யாருக்கும் தெரியாது,,,,

எலியட்ட என்டே என்டாகவில்லை.....இன்னும் வளரும்..........

0 Comments


Recommended Comments

There are no comments to display.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.