
இவ் வருடத்திற்கான போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன. முதலாவது போட்டி மார்ச் 16-18 தினங்களில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. வெள்ளி - சனி ஆகிய நாட்களில் பரீட்சார்த்தப் போட்டிகளும் சனி பிற்பகல் 5 மணிக்கு தெரிவுப் போட்டியும் ஞாயிறு பிற்பகல் 5 மணிக்கு போட்டியும் ஆரம்பமாகும். இப் போட்டி Melbourne இல் அமைந்துள்ள Albert Park ஓடுபாதையில் நடைபெறும்.
என்றுமில்லாதவாறு இப் போட்டியில் முந்நாள் உலக சம்பியன்கள் 6 பேர் பங்குகொள்கின்றனர். 12 கார் நிறுவனங்களிலிருந்து 2 ஓட்டுனர்கள் வீதம் 24 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். கார் நிறுவனங்கள் சென்ற வருடம் தமது வாகனங்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் போர்முலா 1 சம்மேளனத்தின் புதிய கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி புதிய கார்களை சென்ற வருடமே உருவாக்கி விட்டனர். இவ்வருட ஆரம்பத்தில் அவற்றை ஐரோப்பிய நாடுகளில் ஓடி மேலதிக மாற்றங்களைச் செய்து கொண்டனர். ஒவ்வொருவரும் தமது புதிய தொழில்நுட்பங்களை இரகசியமாகவே வைத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் முதலாவது போட்டியில் தான் இக் கார்களின் தரத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இந்த வருடம் Mercedes கார்கள் அதிக வலுவுடையதாகக் கருதப் படுகிறது. சென்ற வருடம் மிக வலு குறைந்த கார்த்திகேயன் ஓட்டிய HRT கார்களில் இவ்வருடம் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஏனைய கார்களுடன் போட்டியிடக் கூடியவாறு வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எமக்குச் சந்தோசமான விடயம் என்னவென்றால் சென்ற வருட இறுதியில் போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கார்த்திகேயன் இவ்வருடம் மீண்டும் HRT நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளார். புதிய காரில் கார்த்திகேயன் தனது திறமையை வெளிப்படுத்த வாழ்த்துகிறோம்.


























