"சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின் விளிம்புகளைப் மகிழ்வுடன் தேடின. அதில் அவனுக்கு ஒரு மகிழ்வு! பல பண்டைய தமிழர் மற்றும் இலங்கைத் தமிழர் வரலாற்று நூல்களை வாசித்த அவனுக்கு, இதையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுவது இயற்கைதானே! என்றாலும் அது உசாத்துணை அல்லது குறிப்பு பகுதியில் இருப்பதால், அங்கிருந்து தான் வாசிக்கவேண்டும். அது தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது. தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையை பிரதிபலிக்கும் திராவிட மற்றும் கிழக்கத்திய கலையின் ஒருங்கிணைப்புடன் கட்டப்பட்டு வெள்ளை வர்ணத்தில் ஒளிரும் அதன் முகப்புடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் பரந்த வளைந்த நுழைவுகள் கொண்ட நுழைவாயில், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் முல்லை இலைகள், வளைந்த அலங்காரங்கள் மற்றும் நுணுக்கமான மலர் வடிவ சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட, கோரிந்திய தூண்கள் (Corinthian Columns) கொண்ட பெரிய படிகளால் அலங்கரிக்கப்பட்டு, உயரமான சாளரங்கள், நுட்பமான மர வேலைப்பாடுகள், வெளிச்சம் நிறைந்த உள்வடிவமைப்பு, வாசகர்களுக்கு ஒரு அமைதியான வாசிப்பு சூழலை வழங்கும் அந்த பெருமைமிக்க நூலகத்திற்குள், அவன் யோசித்துக் கொண்டு நின்றான். நூலகத்தின் உள்ளே, 97,000 நெடுங்கால அரிய நூல்கள், பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், பத்திரிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன. தரையில் பிரதிபலிக்கும் அளவுக்கு மென்மையாகப் மெருகேற்றப்பட்ட பளபளப்பான தரை, மேற்கூரை வழியே மெல்லிய ஒளியை உள்வாங்கும் திறமையான கட்டமைப்புடன் இருந்தது. நூலகத்தின் மையத்தில் பெரிய குவிமாடம் (குவிந்த கூரை / dome) அமைக்கப்பட்டிருந்தது, தமிழர் அறிவு மற்றும் பண்பாட்டு பெருமையின் சின்னமாக அது உயர்ந்து காட்சியளித்தது. கட்டிடத்தைச் சுற்றிய வளவில் [நிலத்தில்] பரவி வளர்ந்த மல்லிகைப் பூக்களின் மென்மையான நறுமணத்துடன் பழங்கால நூல்களின் மெல்லிய வாசனையும் அவ்விடத்தை நிரப்பியது. இது ஒரு புனிதமான தலமாகவும் கனவுகளின் பீடமாகவும் இருந்தது. முதிர்ந்த பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கவனமாக பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில், தமிழர் வரலாறு அங்கு கிசுகிசுத்துக் கொண்டு இருந்தன. அந்த கிசுகிசு அவன் காதில் கேட்டுதோ என்னவோ, வேம்படி மகளீர் பாடசாலை உயர்வகுப்பு மாணவி மாலினியின் கிசுகிசுப்பு மட்டும் அவனுக்கு கேட்டது. அவன் திரும்பி பார்த்தான். அவள் இன்னும் பள்ளி சீருடையுடனே, எதோ ஒரு ஆய்வில், உதவி நூலகர் சயந்தியுடன் அலசிக்கொண்டு இருந்தாள். அவன் அங்கே மெல்லச் சென்று, எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவளும் ஆமாம் என்று, சி. கணேசையார் 1939 ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கைத் தமிழ்ப் புலவர்களின் வரலாறு" என்ற நூலில், பக்கம் ஆறில், நல்லூர் சரஸ்வதி மகாலயம் நூலகம் ஒரு சிங்கள அரசன் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றிய செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய விளக்கம் கேட்டாள். இது பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், யாழ்ப்பாணத்தில் நல்ல நிலையில் செயற்பட்டது என்றும், இந்த நூலகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய நூல்கள் காணப்பட்டன என்றும், தற்போது நாயன்மார்கட்டு என அழைக்கப்படும் இடமே முன்னர் சரஸ்வதி மகாலயம் இருந்த இடமென என்றும், அறியப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.அப்பத்தான் அவன், அவளை நெருக்கமாக அருகில் பார்த்தான். ஒரு சிங்கள அரசன் நெருப்பு வைத்தானோ இல்லையோ, அல்லது போர்த்துக்கீசர் 17ஆம் நூற்றாண்டில் இதைச் செய்தனரோ இல்லையோ, இப்ப அவன் நெஞ்சத்தில், அவள் ஈவுஇரக்கமின்றி நெருப்பு வைத்துவிட்டாள்! அவன் இதயம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது!! அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும் தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக் கொண்டேன் என்றான் ஒரு கவிஞன். இவனோ அதைவிட ஒரு படி மேலே போய்விட்டான். காலுக்கு கீழ் பஞ்சு போல ஒரு உணர்வு, கொஞ்சம் சலங்கைச் சத்தம், மிதப்பது போல் உணர்வு, ஏன், பிரபஞ்சமே காதலியாக மாறி விட்டது, அவ்வளவுக்கு காரணம் சுட்டும் விழிச்சுடர்களான, அந்த அழகிய, அவளின் காந்தக் கண்கள்தான்!”நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை தாக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன, வீக்கிய கணை கழல் வீரன் செங்கண்ணும்தாக்கணங் கணையவள் தனத்தைத் தைத்ததே..!”மாலினியின் வேல் போன்ற கண்கள் ஆனந்த்தின் அகன்ற தோளில் நிலைத்து நிற்க, ஆனந்த்தின் கண்கள் மாலினியின் தனங்களைத் தைத்து நின்றன, வாய்கள் பேசவில்லை, கேள்வியும் மறுமொழியும் மறைந்து விட்டன. விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது போன்ற ஒரு பிரமையில் இருவரும் மௌனமாக நின்றனர். சயந்தி, ஒரு புன்முறுவலுடன் தன் வேலையைக் கவனிக்க அங்கிருந்து அகன்றுவிட்டாள்!அமைதியான, அழகான மாலினியின் சந்திப்பு முன்னறிவிப்பு இல்லாமல், அவனது உலகத்தைத் திருப்பிய அச்சாக மாறியது. அவள் அடிக்கடி உயரமான, வளைந்த ஜன்னல்களுக்கு அருகில், பிந்திய மதியம் பாடசாலை முடிய இரண்டு மணித்தியாலம் அளவு, தனது வேம்படி பாடசாலைக்கு அருகிலேயே அமைந்து இருக்கும் யாழ்ப்பாண பொது நூலகத்தில், தன் தந்தை யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை முடிந்து வரும் வரை, அங்கு படிப்பது வழமை. அப்படியான ஒரு நாள் தான் அது. அவள் எனோ விடையை அறியாமலே, தான் முன்பு இருந்த இடத்தில் போய் அமர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட சடை அவள் தோளில் பட்டும் படாமலும் விழுந்து இருந்தது. அவளுடைய உதடுகள் தனக்குள் பழங்கால வசனங்களை முணுமுணுப்பது போல் அமைதியாக எதோ சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால், சத்தம் வரவில்லை! யாழ்ப்பாண பொதுநூலக உசாத்துணை பகுதிக்கு அடிக்கடி வருவது ஒரு பிரச்சனையாக முன்பு நினைத்தவன், இப்ப தவறாமல் ஓய்வு கிடைக்கும் பொழுது வரத் தொடங்கி விட்டான். ஒருநாள், எதிர்பாராத மழையால் அவர்களின் முதல் உண்மையான உரையாடல் தொடங்கியது. அன்று மாலினியின் பொன் நிற உடல், அவளின் வேம்படி கல்லூரி சீருடையின் வெண்ணிறத்துடன் இணைய, மருட்சி தேங்கி நின்ற அவளின் விழிகள் அலைபாய, இரட்டைப் பின்னல்கள் அவளது நடையின் சீரான தாளப் போக்கிற்குப் ஏற்ப அசைந்தாட, பாடப் புத்தகங்களை மார்புக்கு நேராகப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து வந்த அழகு அப்படியே அவன் மனதில் எதோ ஒன்றைத் தோற்றுவித்தது. என்றாலும், அதை வெளியே காட்டாமல், ஆனால், அவளை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக அமர்ந்தான். இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தருகுதே! சக்கர தோடு கழுத்தைத் தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கைக் கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுதே இள நகை!சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகுதே அவளின் பார்வை!மாலினி ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் இருந்த சாளரத்தை எட்டி மூட எத்தனிக்கும் பொழுது, மறுகையில் இருந்த சில புத்தகங்கள் நழுவப் பார்த்தன, அதற்குள் சில மழைத் துளிகள் உள்ளே விழுந்துவிட்டன. விலைமதிப்பற்ற அந்த நூல்கள் ஈரமான கல் தரையைத் தொடமுன், ஆனந்த், அவள் பக்கம் விரைந்து சென்று, தன் இயல்பான கூச்சத்தையும் மறந்து, அவள் கையைப்பற்றி, அந்த புத்தகங்களை கவனமாக எடுத்துவிட்டான். என்றாலும் அவற்றை அவளிடம் திருப்பி அவளிடம் கொடுக்கும் பொழுது அவன் கைகள் கொஞ்சம் நடுங்கின. அவள் 'அது பரவாயில்லை' என்று சிறு புன்னகையுடன் கூறி, அவ்வற்றைப் பெற்றாள். புத்தகங்களை அந்தந்த இடங்களில் திருப்பி வைத்துவிட்டு, அவன் அருகில் சென்று "நன்றி," சொல்லிவிட்டு, அங்கேயே பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள். அவளுடைய கயல்மீன் போன்ற, கரும் மையிட்ட கண்கள் முதல் முறையாக மிக நெருக்கமாக நேரடியாகச் சந்தித்தன. "இந்த நூல்கள் ... என் தாத்தாவின் படைப்புகள். அவர் நமது வரலாற்றைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்" என்று தனது உரையாடலை ஆரம்பித்தாள். "இவரின் பேத்தியா நீங்கள்? அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான். ஆமாம் உங்கள் தாத்தாவின் நூல்கள் உண்மையில் மிகவும் விலைமதிப்பற்றவை, காலத்தின் தேவை " என்று அவன் பதிலளித்தான், அவனது குரல் ஒரு கிசுகிசுப்பை விட அதிகமாக இருந்தது. "நான் அடிக்கடி அவரது படைப்புகளைப் படிப்பேன். அவை நமது கடந்த காலத்தை மிகவும் உயிரோட்டமாக உணர வைக்கும் புதையல்கள்." என்றான். அந்த நாளிலிருந்து, அவர்களின் பாதைகள் அடிக்கடி குறுக்கிடுவது போல் தோன்றியது, யாழ்ப்பாண பொது நூலக புத்தக அலமாரிகளின் வரிசைகளுக்கு இடையே அவர்களின் அமைதியான ஒப்புதல் தலையசைப்புகள் படிப்படியாக நீண்ட உரையாடல்களாக வளர்ந்தன. அவர்கள் யாழ்பாணம் வைபவமலையிலிருந்து பல பகுதிகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் தத்துவஞானி ஆனந்த குமாரசாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற குறிப்பிடத்தக்க நபர்களின் படைப்புகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளையும், அதேநேரம் ஆரம்பகால தமிழ் செய்தித்தாள்களின் பதிவுகள், குறிப்பிடத்தக்க பொருட்களின் மைக்ரோஃபிலிம்கள் [microfilms] மற்றும் காலனித்துவ சகாப்தத்தின் ஆவணங்களுடன் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் என எல்லாவற்றிலும் மேலோட்டமாக, தங்களுக்கு தேவையான பகுதிகளை இருவரும் ஒன்றாக அலசி, இலங்கை தமிழ் மக்களின், தமிழ் மொழியின் நீண்ட வளமான வரலாற்றைப் பற்றி விவாதித்தனர். மேலும் தங்கள் பாரம்பரியம் போற்றப்பட்டு பாதுகாக்கப்படும் எதிர்காலத்தைக் கனவு கண்டனர்.நாட்கள் செல்லச் செல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமடைந்தது. நூலகத்திற்குப் பின்னல் காணப்படும் ஒதுக்குப்புறமான பூந் தோட்டத்தில் அவர்கள் சிலவேளை நீண்ட இருக்கையில் [bench] அமர்ந்து தங்கள் தனிப்பட்ட விடயங்கள் கதைப்பதும் உண்டு, அங்கு பிந்திய மதிய வெயிலிலும் கூட கல் பெஞ்சுகள் குளிர்ச்சியாக இருக்கும். அதில் அவள் அமர்ந்து, மலர்களை வட்டமிடும் வண்டுகளை மற்றும் வண்ணாத்திப் பூச்சிகளைப் வேடிக்கை பார்ப்பாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக் காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல, அவன் அவளைப் பார்ப்பான். இப்படி சிலவேளை அவர்கள் அமைதியாக கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தனர், நேரத்தைக் களித்தனர். ஒரு நாள், ஆனந்த் அவளிடம் கிசுகிசுத்தான். அவள் முன்னோக்கி சாய்ந்து அவன் வார்த்தைகளைப் உற்றுக் கேட்கும் போது, அவள் இடையின் மென்மையான வளைவில் அவன் கண்கள் பதிந்தன. அதைக்கண்ட அவள் அதிசயித்தாள். அவள் கடை இதழில் ஒரு புன் முறுவல் புறப்பட்டது. அவன் அப்படியே சொக்கிப்போனான்! கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். உசாத்துணை பகுதியில், இடைவெளிவிட்டு தள்ளி இருந்தாலும், இருவர் கண்களும் அமைதியாக ஒருவரை ஒருவர் எண்ணங்களில் நெருங்கினர். அவன் கண்களால் அவளிடம் 'உன் சகோதரர்கள் கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள். நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை என்னால் பார்க்க முடியவில்லையே என்றான்! ஆனால் அதை அவள் பொருட்படுத்தவில்லை, அவள் தன் நாற்காலியை கொஞ்சம் விலத்தி வைத்து, தரையில் எதோ விழுந்ததை பொறுக்குவது போல குனிந்து, இடையை மேலும் காட்டி, அங்குமிங்கும் கண்களைச் சுழட்டி, தலையை நிமிர்த்தி, அவனை தன் மான் விழியால் சுட்டாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தைநெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்வடம்கொள் முலையால் மழைமின்னுப் போலநுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் என் உயிரைக் கொல்லுகிறாய். மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுவதை எப்படி நான் பொறுப்பேன் என்றான். அவள் தன் குறும்புத்தனத்தின் பின், தன் விரல்களால் பழைய உசாத்துணை புத்தகங்களின் சிதைந்த விளிம்புகளை தற்செயலாகத் தேடினாள். "நம் பெயர்கள், நம் கதைகள், இந்தப் பக்கங்களிலும் ஒரு காலம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். அதனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது அவற்றைப் படிக்கும் போது, நாம் வாழ்ந்தோம், நாம் நேசித்தோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்." என்றாள். சாளரத்தின் வழியாக ஊடுருவி வந்த மங்கலான சூரிய ஒளியில் அவன் கண்கள் மின்னின, மாலினி திரும்பி பார்த்தாள். அங்கு ஒருவரும் இல்லை. அவள் கை நீட்டி, அவன், தன் விரல்களை லேசாகத் தடவ அனுமதித்தாள். "ஒருவேளை அவை ஏற்கனவே இருக்கலாம்," என்று அவள் மீண்டும் கிசுகிசுத்தாள், "இந்த இடத்தின் காற்றில் அது இன்று எம் இருவரின் விரல்களால் ஒன்றாக இணைந்து எழுதப்பட்டு விட்டதே." என்றாள். அவர்களின் பகிரப்பட்ட தருணங்கள் யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் மீண்டும் மீண்டும் தினம் தினம் தொடர்ந்தன - பிரதான மண்டபத்தின் குறுக்கே ஒருவருக்கு ஒருவர் திருடப்பட்ட பார்வைகள், நாற்காலியில் அமரும் பொழுது விரல்கள் பட்டும் படாமலும் உராய்வது. பண்டைய அல்லது அண்மைய காதலர்களின் குறிப்புகளைப் புரட்டும் போது, அவர்களுக்கிடையிலான அமைதியான சிரிப்புகள் எனத் தொடர்ந்தன. அவர்கள் ஒருவருக் கொருவர் சிறிய குறிப்புகளை, உதாரணமாக, கவிதை வரிகள், பண்டைய காதல் பாடல்களின் சில வரிகள் மற்றும் வாக்குறுதிகள் அல்லது பொன்மொழிகள் போன்றவற்றை ஒரு சிறு காகித தாளில் எழுதி, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பக்கங்களில் மறைத்து வைத்து, அதில் ஒரு சுகம் கண்டனர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் விரோதம், யாழ்ப்பாணத்தை கொதிநிலை பயம் மற்றும் வெறுப்பின் கொப்பரையாக மாற்றி, தமிழர் தாயகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையின் நிழல்கள் பரவியிருந்த இந்த நேரத்தில் தான், இன்று அவர்களின் காதல் முழுமையாக மலர்ந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, மே மாதம் 29,1981 ஆம் திகதி. 1971 ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக கல்வி மற்றும் மொழியில் பாகுபாடு காட்டும் கொள்கைகளை அமல்படுத்தியது. இது, ஏற்கனவே இருந்த இனப் பதட்டங்களுடன் சேர்ந்து, தமிழ் இளைஞர்களிடம் எழுச்சிக்கு வழிவகுத்து, இறுதியில், 1972 இல் போராளிக் குழுக்கள் உருவாக வழிவகுத்தது. அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் பற்றி முழுமையாக இருவரும் தற்செயலாகக் இன்று கதைத்தனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.என்பார்கள்.அப்படியான ஒன்றைத்தான், கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை துன்பத்தில் இருந்து மீட்பவர் [இரட்சகர்] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார்.அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர். மாயன்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா? அவன், அவள் முகத்தைப் பார்த்து கேட்டான. ஆனால், அதற்கிடையில் தந்தை வரும் நேரம் வந்ததால், விடை கொடுக்காமல், விடை பெற்று மாலினி போனாள். இனி ஜூன் ஒன்று திங்கள் தான், அவளை மீண்டும் காணமுடியும் என்ற ஏக்கத்துடன் அவனும் வீடு திரும்பினான். மே 31, 1981 அன்று மாலை, ஞாயிறுக்கிழமை ஆனந்த் நூலகப் படிகளில் நின்று, பழைய நகரத்தில் உள்ள ஒரு சிறிய புத்தகக் கடையில் கண்டெடுத்த தமிழ் காதல் கவிதைகளின் மெல்லிய தொகுதி ஒன்றை மாலினிக்கு ஜூன் 1, திங்கள் கிழமை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, அதை கையில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம், கல்வியின் தெய்வம் சரஸ்வதியை பார்த்துக் கொண்டு நின்றான். அந்தப் புத்தகம் ஆழமான மெரூன் நிறத் தோலால் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கங்கள் பல நூற்றாண்டுகளாக ஏக்கத்தையும் காதலையும் பேசும் வசனங்களால் நிரப்பப்பட்டு இருந்தன.மே 31 1981 இரவு நாச்சிமார் கோயிலடியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். இவ்வகையான பதட்டங்களால் சோர்வடைந்த யாழ் மக்கள், வீடுகளில் நேரத்துடன் முடங்கினர். யாழ்ப்பாண பொது நூலகமும், சந்திரனின் கண்காணிப்புக் கண்களின் கீழும், கடல் காற்றின் கிசுகிசுப்பின் கீழும், அதன் பிரமாண்டமான கதவுகள் உறுதியாக மூடிய நிலையில் அமைதியாக நின்றது. ஆனால் ஜூன் 1, 1981 ஆம் தேதி அதிகாலையில், மே 31 இன் நள்ளிரவுக்குப் பிறகு, யாழ்ப்பாண பொது நூலகம் அருகில் அமைதி சிதறியது. சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் சுழன்று, எரியும் காகிதத்தின் கடுமையான வாசனையையும் பல நூற்றாண்டுகள் பழமையான பனை ஓலைகளையும் சுமந்து சென்றது. அரை மைல்களுக்கு அப்பால் இருந்த ஆனந்த் மற்றும் பலர் தொலைதூரக் கூச்சல்களின் சத்தத்திற்கும், அடிவானத்தை வரைந்த ஆரஞ்சு நிற ஒளிக்கும், விழித்தனர். உடனடியாக அவனும் அவனைப் போல சிலரும் துணிந்து நகர மையத்தை அடையும் போது, மிகவும் தாமதமாகி விட்டது. இரவு முழுவதும் காலியாக இருந்த நூலகம், இடிந்து விழும் எலும்புக்கூடாக மாறியிருந்தது, அதன் விலைமதிப்பற்ற சேகரிப்புகள் இருண்ட வானத்தில் எரிந்து கருகின. யாழ்பாணம் வைபவமலை மற்றும் பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவு உள்ளிட்ட விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் சாம்பலாகின.அடுத்த நாட்களில், யாழ்ப்பாணம் சாம்பல் நகரமாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருந்த நூலகம், புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் கிடந்தது, அதன் கருகிய எலும்புக்கூடு அதைச் சூழ்ந்திருந்த வன்முறைக்கு ஒரு கொடூரமான சான்றாகும்.அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், ஆனந்த் சில நாட்களுக்கு மாலினியைச் சந்திக்கவில்லை. மற்றும் மாலினியின் வீடு, நாச்சிமார் கோவிலடி என்பதாலும், அது தான் முதலில் தாக்கப்பட்ட இடம் என்பதாலும், அவளுக்கு, அவளின் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய, அவன் ஆவலாக இருந்தான். என்றாலும் அதன் பின் அவன் அவளைக் காணவே இல்லை. பாடசாலைக்கும் வரவில்லை என்பதை அவளின் பாடசாலை தோழி ஒருவள் மூலம், இரண்டு கிழமையின் பின், அறிந்தான். அதன் பின், அவன் விசாரித்ததில், அவளின் குடும்பம் கொழும்புக்கு அல்லது வெளிநாடு ஒன்றுக்கு இடம்மாறி விட்டனர் என்பதை அறிந்தான். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. அன்றைய காலத்தில் கைத்தொலை பேசி அல்லது வலைத்தளங்கள் இல்லை. பின்னர் 1984 ஆம் ஆண்டு நன்கொடைகளுடன், யாழ்ப்பாண பொது நூலகம் ஓரளவு மீண்டும் பகுதியாக கட்டப்பட்டது. ஆனந்த் இன்னும் அவளை மறக்க வில்லை. ஆனந்த் இன்னும் அந்த - பகுதியாக திறக்கப்பட்ட - நூலகத்தின் காலியான அரங்குகளில் அலைந்து திரிந்தான். இழந்த கட்டிட தொகுதிகளுக்காகவும், நூல்களுக்காகவும் மற்றும் காற்றில் சாம்பலைப் போல, அவனது பிடியிலிருந்து நழுவிய காதலுக்காகவும், அவனது இதயம் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கிறது!"நீ இன்னும் இங்கே இருக்கிறாய், மாலினி," அவன் கிசுகிசுத்தான் "நாம் இழந்த அனைத்தின் நினைவுகளிலும். நான் படித்த ஒவ்வொரு வசனத்திலும், மீதமுள்ள பக்கங்களின் ஒவ்வொரு கிசுகிசுப்பிலும், நீ இன்னும் இங்கே இருக்கிறாய். வாழ்கிறாய்! " என்று அவன் முணுமுணுக்க என்றும் மறக்கவில்லை!நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
Archived
This topic is now archived and is closed to further replies.