சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்டபோதிலும், கடந்த ஒரு வாரத்திலேயே இவ்விடயத்தில் திடீர்த் திருப்பங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா இவ்வருட முற்பகுதியில் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை கொழும்பிடம் வலியுறுத்தியிருந்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் றோபெர்ட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சருக்கு கையளித்த கடிதம் ஒன்றில், பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெனீவாவில் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னதாக பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்த்திருந்தது.
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், நல்லிணக்கம் என்பவற்றுடன் பொன்சேகாவின் விடுதலையையும் அமெரிக்கா முக்கியமானதாக நோக்கியது. இவை தொடர்பாகப் பேசுவதற்கு வாஷிங்டன் வருமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அழைத்திருந்தார். மார்ச் நடுப்பகுதியில் அவரது வருகை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காமையால் அமெரிக்கா செல்வதை பீரிஸ் தவிர்த்துக்கொண்டார். இந்தப் பின்னணியிலேயே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இருந்தபோதிலும், ஒத்திவைக்கப்பட்ட பீரிஸின் அமெரிக்க விஜயம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி ஹிலாரி கிளின்டனை அமைச்சர் பீரிஸ் சந்தித்ததார். அந்தச் சந்திப்பு இடம்பெற்ற போது பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை கொழும்பு வெளியிட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்னையிலிருந்து வெளிவரும் 'இந்து' பத்திரிகையாளரிடம்தான் இது தொடர்பில் முதலில் தகவலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பொன்சேகாவின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இது நீதிமன்றத் தீர்ப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாக இருப்பதாதால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு, அது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் என்பனவற்றை முன்னெடுக்க 3-4 நாட்கள் சென்றுள்ளது.
இருந்த போதிலும், இதற்கு முன்னரே பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ரிரான் அலஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்திவந்த போதிலும், ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனை ஒன்றுதான் அவரது விடுதலைக்குத் தடையாக இருந்தது. அதாவது, பொன்சேகா மன்னிப்பக் கோர வேண்டும், இல்லையெனில் பொன்சேகாவின் குடும்பத்தினர் யாராவது அவரது சார்பில் மன்னிப்பக் கோர வேண்டும் என ஜனாதிபதி முன்வைத்த நிபந்தனையை ஏற்க முடியாது என பொன்சேகா குடும்பத்தினர் கூறிவிட்டனர். இது ஜனாதிபதிக்குப் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையிலிருந்து ஜனாதிபதி இப்போது இறங்கிவந்திருப்பது இவ்விடயத்தில் அவர் மீது அதிகளவு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இவ்விடயம் தொடர்பான பேச்சுக்களுக்காக ரிரான் அலஸின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருப்பது மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை காலை ரிரான் அலஸ் ஜனாதிபதியின் வாஸஸ்தலத்தில் ஜனாதிபதியை சந்தித்து பொன்சோவின் விடுதலை தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தினார். லண்டனில் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டிரான் அலஸ் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதியால் அவசரமாக அங்கிருந்து அழைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அனோமா பொன்சேகாவடனும் பேச வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருந்திருக்கின்றது. இதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டபோது அங்கு செல்வதற்கு அனோமா மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. இந்த நிலையிலேயே ரிரான் அலஸ் இல்லத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதி அங்கு சென்றிருக்கின்றார். ஜனாதிபதி ஒருவர் அரசியல் விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்கு மற்றொருவருடை வீடு தேடிச் செல்வது என்பது இராஜதந்திர மரபை மீறிய ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதிக்குக் காணப்பட்ட நிர்ப்பந்தம் அந்தளவுக்கு இறங்கிச் செல்ல வேண்டிய ஒரு தேவையை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பின்னணியில் நிபந்தனைகளின் அடிப்படையில் பொன்சேகா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதேவேளையில், ஜனாதிபதியால் அவர் மன்னிப்பு வழங்கப்பட்டவராக இருந்தாலும், இரண்டு வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்பதால் அடுத்துவரும் ஏழு வருட காலத்துக்கு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிலோ அல்லது மாகாண சபைக்கோ அவர் போட்டியிட முடியாது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது. உடனடியாக அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கு இவை பொன்சேகாவுக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பது உண்மை!
இதனால், பொன்சோகாவின் விடுதலை உடனடியாக அரசுக்கு பாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவர் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் அரசியலில் ஈடுபடாவிட்டாலும், அரச எதிர்ப்பப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், அதன் மூலமாக தன்னுடைய கட்சியைக் கட்டியெழுப்புவதற்கும் அவர் முற்படுவார் என எதிர்பார்க்கலாம். அத்துடன், பொன்சேகாவின் அனைத்து அரசியல் உரிமைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டத்தை அவரது ஆதரவாளர்கள் தீவிரப்படுத்தலாம். இவை அனைத்தும் அரசுக்கு உடனடிப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அரச எதிர்த் தரப்பு அவருக்குப் பின்பாக அணிதிரள்வதற்கு வழிவகுக்கலாம்.
அதாவது, அவரது தீவிர அரசியல் பிரவேசம் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் முதலில் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும். ஐ.தே.க. ஏற்கனவே பிளவுபட்ட ஒரு நிலையில்தான் உள்ளது. பொன்சேகா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஜித் அணியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர உடபட அனைவரையும் அங்கு காண முடிந்தது. இந்த நிலையில் பொன்சேகாவுடன் இணைந்து தமது தீவிர அரசியலை முன்னெடுப்பதற்கு சஜித் குழுவினர் முற்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
பொன்சேகா விடுதலையானபோது அவர் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ரணில் விடுத்த கோரிக்கையை பொன்சேகா நிராகரித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரணிலின் தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் ஐ.தே.க.வினர் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செய்ய முன்வரலாம். அதனைவிட ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினரும் பொன்சேகாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் பொன்சேகாவின் வருகை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக பலமான எதிரணி ஒன்று உருவாக இது வழிவகுப்பதாக அமையலாம்! ஆனால், தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் இது எந்தவிதமான நலன்களையும் பெற்றுத்தருவதாக இருக்கப்போவதில்லை.
- பூராயத்துக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.
http://www.pooraayam...2-13-20-49.html
Edited by ஊர்பூராயம், 22 May 2012 - 01:47 PM.
















