திருகோணமலையில் அமெரிக்கா தளம் ஒன்றை அமைப்பதற்காக சிறிலங்காவில் போரை நீடிக்கவும், அதைத் தீவிரப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிக்கும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அமெரிக்காவின் தந்திரத்தை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்றும் சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.பிலியந்தலவில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், கொச்சினைத் தளமாகக் கொண்டு வெளிவந்த ‘த வீக்‘ ஆங்கில வாரஇதழில், 1986ம் ஆண்டு மார்ச் 23ம் நாள் வெளியான செவ்வி ஒன்றில் வே.பிரபாகரன் விரிவாக விளக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச் செவ்வியின் ஒருபகுதியை அப்படியே வாசித்தும் காட்டினார்.
"இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும், தீவிரப்படுத்தவும் செய்வதே
அமெரிக்காவின் நோக்கம்.
இதன்மூலம் அது இந்தத் தீவில் கால் பதிக்கவும், திருகோணமலையில் தனது தளம் ஒன்றை நிறுவவும் முடியும்.
அமெரிக்க நிர்வாகம் இந்தப் பிராந்தியத்தில் தந்திரோபாய மற்றும் பூகோள நலன்களைக் கொண்டுள்ளது.
திருகோணமலையில் இயற்கைத் துறைமுகத்தை கொண்டுள்ள சிறிலங்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.
படிப்படியாக இந்த நாட்டில் ஊடுருவி, அதை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம்" இவ்வாறு பிரபாகரன் அந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
http://www.puthinapp...?20120406105941















