எம்மினிய தமிழகமே!

ஈழத் தமிழர்தம் இன்னல்கள்; கண்டுமே
     எழுச்சி கொண்டிலங்கு எம்மினிய தமிழகமே!
ஆழ்கடல் பிரித்தாலும் அன்பினாற் பிணைந்த
     ஆன்றவெம் உறவினரே! அழுகுரல் கேட்டங்கு
வீழ்ச்சிதான் அருகிடாது வியத்தகு ஓரினமாய்
     விலைதான் எதுவேனும் செலுத்திக் காப்போமெனச்
சூழ்ந்திடும் இருளகற்றி ஒளிக்கீற்றென எழுந்து
     சொந்தம் காத்திடத் துணையென வந்தவரே!

தன்னுயிர் மாந்தர்தம் தாங்கொணாத் துயர்கண்டு
     தளர்வுற்று உளம்நொந்து தக்கவே சினம்கொண்டு
‘என்னுயிர் பெரிதன்று, ஏற்றமிகு முதல்வராய்
     இலங்கிடும் வாய்ப்புத்தான் இனிமேல் எனக்கெதற்கு?
மன்னுயிர் வதைபடலம் மிக்கவே தமிழர்க்கு
     முடிவிலாத் தொடராய் மோதி நிற்கையிலே’
கன்னித் தமிழன்னை கனிவுடன் ஈன்றளித்த
     கருணை நிதியவர் கூறிய வாhத்தையிது!

துயரத்திற் தமிழீழம் வீழ்கின்ற காலையெலாம்
     துணிவுடன் அரசுகள் இரண்டினையும் எதிர்த்து
அயராது போராட்டம் நடத்திய வாறே
     ஆளுனராய்ச் செயற்பட்டு ஆட்சிதனைச் செலுத்திக்
கயவர்தம் வஞ்சனையிற் பதவிகள் போயினும்
     கலங்காது பொறுமை கடைப்பிடித்து இற்றைவரை
தயவுடனே தோள்கொடுத்த தன்மானத் தமிழனே
     தலைவரே! கலைஞரே! தாள்மிகப் பணிந்தோம்!

ஆண்டாண்டு காலமதாய் அருந்தமிழர் நாம்படும்
     அவலங்கள் உணர்ந்து கிளர்ச்சிகள் புரிந்து
கூண்டக்குள் அடைத்துக் கொடுந்துயரில் வீழ்த்திடினும்
     கொள்கை மாறிலாக் குணக்குன்றெனத் திகழ்ந்து
தாண்டியே, தடைகள்பல சார்ந்திட்ட போதிலும்
     தமிழர்க்காய் உயிர்வாழ்ந்து அவர்க்கே உமையீய்ந்து
வேண்டிய பொழுதுகளில் விறலோராய்ப் பொருதிடும்
     வீரமிகு தலைவர்களே பெரியோரே வணங்கினோம்!

மீனவச் சொந்தங்களே! மாற்றான் கொடுமையில்
     மன்னும் இன்னுயிர் கள்தம்மை இழந்தவரே!
ஈனச் சிங்களத்தின் எம்மிடுக்கண் களைந்திட
     இன்தொழில் நிறுத்தி ஏறுநடை போட்டவரே!
மானமே பெரிதெனத் திரண்டநீதித் துறையினரே!
     மக்களாய்க் கூடியவெம் வணிகப்பெருந் தகையினரே!
ஊனுயிர் உள்ளவரை உமையென்றும் நினைப்போம்
     ஊற்றெனப் பெருகும் அன்பினால் அணைத்தோம்!

திரையுலகச் சான்றோரே! தென்னகத்துத் திறலோரே!
     சிரமம் நோக்காது சேர்ந்தீரே தென்புறத்தே
உரைத்தீர் நல்வார்த்தை, உவகையிற் றிளைத்தோம்
     உரம்தந்து எமைக்காக்கும் உற்றவரே நன்றி!
கரையொதுங்க நாம்பற்றும் கட்டுமரமாய் நின்றிடுவீர்!
     காற்றோடு காற்றாய்க் களம்வந்து சேர்ந்திடுவீர்!
விரைகின்ற தமிழீழம் வரவேற்று மகிழும்
     விண்ணதிர வாழ்த்தொலியும் வண்டமிழில் ஓங்கும்!

மாணவ மணிகளே! மாசிலா மனத்தோரே!
     மலரும் தமிழீழம் மனதிற் பதித்தவரே!
காணுதற் கரியநல் காட்சியிற் தோன்றினீர்!
     காளையராய்க் கன்னியராய் அட்டைகள் தாங்கி
நாணிடச் செய்தீர்! நயவஞ்சக அரசினை
     நாளைய உலகின் நிலையான தூண்கள்!
பேணிடுவீர்! தமிழன்னை பெருமைதனை நாளும்!
     போற்றுகிறோம்! பிணைந்திடுவீர் ஈழம் காண்போம்!

உலகெங்கும் சேதிசொல்லும் ஊடகத் துறைகளே!
     உண்மைகளை எளியநடையில் அனைவரும் அறிந்திட
நலமே வழிசெய்தீர்! நாட்டினர் தெளிந்தனரே!
     நம்முள்ளம் என்றென்றும் நன்றியால் வாழ்த்தும்
பலமிகப் பொருந்திய இதழ்களாய் இலங்கும்நீர்
     பரிதவிக்கும் ஈழத்தவர் நிலைதனை உணர்த்தி
நிலம்மீட்கும் மறவர்க்காய்த்; தமிழகம் எழுச்சியுற
     நெடிதுயர்ந்த உள்ளத்தில் என்றும் உழைத்திடுவீர்!

   
நடிப்புலகிற் தடம்பதித்து நன்றே எம்மினத்தின்
     நிலையான தொடர்புகளைக் கொண்டவரே எழுக!
படிக்கும் பாலகராய் விளங்கிய காலம்முதல்
     படவுலகிற் றோன்றிய எழில்முகங்கள் அறிவோம்
துடிப்புடனே இனத்தின் துன்பங்கள் அறிந்து
     தூண்டிலில் அகப்பட்ட மீன்களென உணர்ந்து
விடியல் தேடியே வீறுகொண்டு போராட
     விழைந்தவெம் கலைஞர்களே! வெற்றி முழங்கட்டும்!

எங்களருந் தமிழகமே! ஏற்றமிகு எழிலகமே!
     ஏல்லோரும் ஒன்றிணைந்து அணிவகுத்து நின்றீரே!
மங்காத ஒளியென எம்மினம் விளங்கிட
     மனித சங்கிலிப் போராட்டம் நடத்திச்
சிங்களத்தின் கொட்டம் அடக்கித் தகர்த்திடச்
     சீற்றம் கொண்டங்கு கூடினீர் சென்னையில்
எங்கும் தமிழ்முழக்கம் ஒலிக்கட்டும்! ஓங்கட்டும்!
     ஈழமெங்கும் வெற்றிக்கொடி பறக்கட்டும் தொடர்வீர்!;

கனடாவிலிருந்து பவித்திரா

படம் : நன்றி - விடுதலை