
பிரித்தா னியாவிலே பேரணி கொண்டு
உரித்தான நிகழ்வு உண்மையில் இன்று
நெரித்திடும் சிங்க நெட்டுரம் முன்னே
பிரித்திடும் உண்மையின் பிளம்பே இதுவாம்!
குளிர்நிலை வந்து குலைக்கும் நேரம்
தளிரது போலே தமிழர்கள் திரண்டு
கண்ணுக் கெட்டிய காதம் வரைக்கும்
மண்ணது போட்டால் மண்விழா அடுக்காய்
பார்ச்சபை முன்னே பரந்த சதுக்கம்
கோர்த்த மானிடம் குலுங்கிட வைத்த
ஆர்ப்புச் சொல்லி ஐபிசி வானொலி
சேர்த்து உலகெலாம் செப்பிய வேளை
கேட்டுக் கேட்டுக் கிளர்ந்தேன் அம்மா!
மூட்டிய கனலும் முத்தமிழ் நிலமும்
பாட்டினில் கிடக்கப் பட்டிடா தென்ற
தீட்டிய சரித்திரம் திரண்டது கண்டேன்
இடைக்கா டர்முதல் எங்களின் நிலமகன்
அடைக்கல நாதனும் அம்மா பத்மினி
இன்னுமாய் இலண்டன் ஏற்புடைத் தமிழரும்
மின்னலாய் உலுக்கிய வேளையில் வெள்ளை
நாட்டினில் விதைத்து நல்கிய தெல்லாம்
பாராளு மன்றப் பட்டறி வாளர்
பேராய்ச் சனத்திடல் பொங்கிய காட்சியில்
நேராய்க் கண்டனர் நேர்த்தியாய் முன்னர்
தேராக் காட்சியைத் தேர்ந்தனர் அறிவீர்
வேற்று மொழியரும் விதம்வித நாட்டு
போற்றும் மாந்தரும் புத்தக் காட்டினில்
சிதறிப் போகும் செந்தமிழ் உறவின்
பதறும் நிலத்தை பார்த்துப் போகிறார்!
மழையொரு பக்கம் மாலையோர் பக்கம்
குளிரொரு பக்கம் கூட்டமோர் பக்கம்
நெரிசலில் நின்று நிறுத்திய தமிழரின்
வராற்றுக் கடமையை வகுத்த தமிழரின்
எழுச்சியை இலண்டன் ஏற்றிய சபையிலும்
அழுத்திய ராணி அரசுப் பொறியிலும்
கருத்தினைக் காட்டிய கட்டம் இன்றைய
உருப்பெறும் வேளை ஓங்கிய காட்சியை
நெறிப்படச் செய்த நீள்நிலம் தமிழரை
பொறித்திட வைத்தது பிரித்தா னியாவிலே
காட்டிக் கொடுப்பவன் காக்கையெட் டப்பன்
ஈட்டும் எல்லா இனத்திலும் ஆனால்
மீட்டும் தமிழரின் மேவிய எழுச்சி
காட்டும் விடுதலைக் கங்கணம் என்றே
கருத்துச் சொல்லிய கண்மணித் தமிழர்
நெருக்குதல் எல்லாம் நிலத்தின் வெற்றியாய்
இருக்கும் என்றனர் இதயத்தால் வாழ்த்திய
உருக்கும் நிகழ்ச்சியை இன்னொரு பெரிய
கனடா நாட்டுக் கட்டிலில் இருந்து
அனையது எல்லாம் அறிந்தேன் தமிழரே!
உலகம் முழுதும் ஓங்கிய தமிழர்
நிலமும் விடியலும் நிறுத்தி நடக்கும்
கலமாய் இனிமேல் களங்கள் இல்லை
இதுநாள் இதுநாள் இன்றைய நாளே
புதுநாள் என்றே புகுந்தவர் வாழ்க!
வானொலி உறவாய் வந்து விழுந்த
தேனொலி மாந்தரே தேசம் வாழ்த்துமே!
-புதியபாரதி
Recent comments
2 years 3 weeks ago
2 years 4 weeks ago
2 years 12 weeks ago
2 years 13 weeks ago
2 years 34 weeks ago
3 years 11 weeks ago
3 years 40 weeks ago
4 years 6 days ago
4 years 1 week ago
4 years 1 week ago