தாய்மடி.. காப்போம்!

பல்லவி
 
தாய்மடி காக்கவென்று
      தங்கமண் மீட்கவென்று-வானம்
பாடிகள் பாடுகிறார்
      வந்து பாருமே -நீங்கள்
      வந்து பாருமே..                       தாய்மடி…
அனுபல்லவி
பாயுமொரு இசைமடியில்
      பண்ணெடுத்துத் தாய்மடியை-வானம்
பாடிகள் பாடுகிறார்
      பாரி ஆகுவீர்-நீங்கள்
      பாரி ஆகுவீர்! .. எங்கள்     -தாய்மடி..
 
சரணம்
பேயெறிந்த குண்டுகளின்
      பெருந்தீயில் மண்ணெரியும்
தாய்மடியைக் காத்திடவே
      தங்கமைந்தர் பாடுகின்றார்!
நீயுதிர்க்கும் காசுகளில்
      நிலத்துயரின் பசிமீட்கும்
தாய்மனது இருக்குதடா
      தமிழாநீ எழுந்திடடா      –தாய்மடி
 
தாழம்பூக் காடிடுருக்கும்
      தாமரைக்குக் குளமிருக்கும்
ஆலம் விழுதுகளில்
      அணிலோடிக் காதல்செய்யும்
வேழம் முறுகிவரும்
      வேய்ங்குயிலின் பாட்டிருக்கும்
வீடுவரும் பசுநிரையில்
      வேர்நிலமே பால்குடிக்கும்..    –தாய்மடி
 
தீயெழுந்து வருகுதடா
      திமிர்கொடுத்து எரியுதடா
பாயெறிந்த கடற்பரப்பில்
            பக்சன்படை திரியுதடா
சேய்மழலை துடிக்குதடா
      தேசநிலம் வெடிக்குதடா
தேசத்து உறவுகளே
      தொப்புள்கொடி அழைக்குதடா..   –தாய்மடி
 
-புதியபாரதி.