ஈழத் தமிழரின் இருண்ட நாட்களின் இருபத்தைந்தாண்டு நிறைவின் நினைவு நாள்.
ஈழத் தமிழர்களின் வாழ்வில் இருண்ட நாட்களெனக் கருதப்படுவதோடு, அவர்தம் வாழ்வியலிற் பல மாற்றங்களை ஏற்படுத்திய 1983இன் பிற்பகுதி நாட்களை எந்தவொரு தமிழனாலும் மறக்க முடியாது. இத்தகைய கறை படிந்த கறுப்பு ஜுலைக் கால் நூற்றாண்டின் நிறைவு நிகழ்ச்சியானது கனடியத் தமிழர் பேரவையினரால் ஜுலை இருபத்தைந்தாம் நாள், Toronto. Scarborough Centre இல் அமைந்துள்ள Campbell Square இல் நடத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியிற் பல்லின மக்களோடு பலதரப்பட்ட ஊடகங்களும் கலந்து சிறப்பித்தன.
கனடா தேசியப் பாடல், தமிழ் வாழ்த்துப் பா ஆகியவற்றுடன் இந்து, கிறீஸ்தவ வழிபாடுகளுடன் தொடக்கப்பட்ட நிகழ்ச்சியானது, பல்துறை சார் பேரறிஞர்களின் உள்ளம் திறந்த பேச்சுக்கள், உணர்வு கலந்த உரைகளுடன், நடனக் காட்சிகளும் அடங்கியதாக நிறைந்த மக்களின் கைதட்டற் பேரொலியின் மத்தியில் இனிதே நிறைவேறியது.
கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினரான குடும்ப வைத்தியர் டாக்டர் மீரா செல்வக்கோன் அவர்களின், வருகை தந்த அனைவருக்குமான வரவேற்புரையுடன் பேச்சுக்கள் தொடங்கின. அவர், ஜுலை இனவழிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தையும், கலவரத்தின்போது எவ்வாறான நடவடிக்கைகள் தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டன என்பதையும் விபரமாக எடுத்துரைத்தார். இச் செயற்பாடானது முன்னேற்பாடாக நன்கு திட்டமிடப்பட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டதே என்றும், குறிப்பிட்ட 23 தொடக்கம் 29ந் திகதி வரையான காலப்பகுதிக்குள் அன்றைய அரசின் பக்கச் சார்புடன், வாக்காளர் இடாப்பின் உதவி கொண்டு தமிழர்களின் வீடுகள், வியாபார நிறுவனங்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், குழந்தை தொட்டு முதியோர் வரை வெளியே இழுக்கப்பட்டு வெட்டியும் கொன்றும் குவித்த கொடுமை மிக்க வரலாற்றையும் தெரியப் படுத்தினார். 3000 பேருக்கு மேலானோர் சாவடைந்து, 10000 பேர்வரை காயப்பட்டதுடன், கோடிக் கணக்கான சொத்தழிவுகள் ஏற்பட்டதையும் வெளிப்படுத்தி, இன்றுவரை இக் கொடுமையானது வளர்ந்து பெரிதாகி 70000ற்கு மேற்பட்ட பொதுமக்களின் இழப்புக்களையும், துன்ப துயரங்களையும் உருவாக்கியதுடன், அவற்றின் வடுக்களைச் சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மினத்தின் இக்கட்டான நிலையையும் எடுத்துரைத்தார்.
அமைதியும் செழுமையும் நாமடைந்திட உலகமாதாவின் நல் வாழ்த்துக்கள் வேண்டி நடனக் காட்சியானது செல்வி தீபாவினால் வழங்கப்பட்டது.
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதியும், சிறீலங்காவின் மனிதவுரிமை மீறல்களின் அறிக்கைகளிற் பரந்த அறிவினைக் கொண்டவரும், இன்றுவரை அங்குள்ள கொடுமைகளை வெளிக் கொண்டு வருபவரும், நிலையான அமைதிக்காகப் பாடுபடுபவருமான, திரு. John Argue அவர்கள், மறக்க முடியாத, கொடுமைகள் நிறைந்த சம்பவத்தின் நினைவு நாளாக இந் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், ஈழத் தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்படல் வேண்டுமெனவும், அப்பாவிப் பொது மக்களே கொல்லப்படுகின்றனர் – வன்முறைகள், அத்துமீறல்கள் நிறுத்தப்படல் வேண்டுமெனவும் கூறியதோடு, இவற்றிற்கெதிரான அறிக்கைகள் தாம் வெளியிட்டதாகவும், ஆயினும் அவை தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவரும், பண்டார நாயக்கா குடும்பத்தவராகப் பிறந்திருந்தும், தமிழினத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமெனத் திடமான வார்த்தைகளிற் துணிவோடு குரல் கொடுத்து வருபவருமான டாக்டர் திரு பிறையன் செனெவிரத்தின அவர்களிடமிருந்து “சிங்களவரிடமிருந்து தமிழர்களுக்கு அனுதாபச் செய்தி” என்னும் அறிக்கை கிடைக்கப் பெற்றது. 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழர்கள் அடைந்துவரும் துன்ப துயரங்களுக்கு அனுதாபம் எனவும், சிங்களவராகத் தான் இருப்பதையிட்டு வெட்கப்படுவதாகவும், இலங்கை அரசாங்கத்தில் மனிதவுரிமை மீறுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டுமென்றும், இதற்கு நாளையென்பது தாமதமாகலாம் - இன்றே நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென்றும், உறுதி மிக்க உரைஞனாகத் தன்னை வெளிப் படுத்தியிருந்தார். மேலும் அப்போதைய ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜயவர்த்தனாவின் பொறுப்பற்ற தன்மையையும், அரசின் காரணமற்ற இனவழிப்பினையும் கொடூரங்களையும் வேறு பல விடயங்களையும் உள்ளடக்கி நீண்டதோர் தொகுப்பாக அனுப்பியிருந்தார்.
பல பயனுள்ள கருத்துக்கள் பொதிந்த இவ்வறிக்கையினைப் பார்வையாளர்களுக்குப் படித்துக் காட்டிய யோர்க் கல்விச்சபையின் உறுப்பினரான திரு நீதன் சண்முகராசா அவர்கள், தனதுரையின்போது எமது கடுமையான, நேர்மையான உழைப்பின் மூலமும், பிற வழிகளினாலும் கனடா அரசாங்கத்திற்கு எமது நன்றியினைச் செலுத்தி விட்டோமென்றும், தற்போது சிறிலங்காவில் இரு வேறு அரசாங்கங்கள் இருப்பதனைக் கனடிய அரசுக்கு எடுத்தியம்பி, எமது உரிமைக்கான ஆதரவினை வழங்க வேண்டுமென அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்தி நிற்போமெனவும் அறைகூவல் விட்டதுடன், இங்குள்ள பூர்வீக குடிகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் பரப்புரை செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கனடிய மாணவர் ஒன்றியத்தின் ஒன்ராறியோப் பிரிவின் தலைவி shelly melanson, 3000 ற்கும் மேற்பட்ட மக்களை ஒரேசமயத்தில் இனவழிப்புச் செய்தபோது இந்த உலக நாடுகள் வாய் மூடிப் பார்த்திருந்தமையைக் கண்டித்தார். தொடர்ந்தும் நிலவிவரும் இவ்விடர்களிற் கனடிய அரசு தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டுனெவும் கருத்துரைத்தார்.
பல்லின ஊனமுற்றோர் அமைப்பிற்கான வழக்கறிஞரும், சிறந்த படத் தயாரிப்பாளரும், தெற்காசிய மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான, Roger Nair அவர்கள் “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்துலகச் சமூகத்தின் தோல்வியே கறுப்பு ஜுலையாகும்” என வரைவிலக்கணம் சொன்னார். அத்துடன் கொசோவாவினதும், தமிழீழத்தினதும் பிரச்சினைகளை ஒப்பிட்டுப் பல கருத்துக்களைப் பகர்ந்தார்.
தமிழினத்தின் நீதியான போராட்டத்தை நன்குணர்ந்து, கனடியத் தமிழர்களுடன் நல்லுறவு பேணி வருகின்ற, United steel Workers அமைப்பின் உறுப்பினராகக் கலந்துகொண்ட Carol Egan அவர்கள், 25 வருடங்களுக்கு முன் நடைபெற்ற அக் கொடிய நிகழ்வினையொட்டி நாமனைவரும் கூடியிருக்கிறோம் என்றும், கனடா அரசானது சிறீலங்கா அரசின் அட்டூழியங்களை இனம்கண்டு அவர்களுக்கெதிரான அழுத்தங்கள் கொடுக்க வேண்டுமென்னும் தன் எண்ணத்தை முன்வைத்தார்.
கவிஞர் பொன்னையா விவேகானந்தன் அவர்கள், இலங்கை சுதந்திரம் அடைய முன்னரே சிங்களவர்கள் முசுலீம் இனத்தவரையே மிகவும் துன்புறுத்தினரென்றும், பெரும்பான்மை இனத்திடம் ஆட்சியதிகாரங்களை ஆங்கிலேயர் விட்டுச் சென்றமையால், காலப் போக்கில் அவ்வினம் தமிழர்களைக் கொடுமைப் படுத்தியதோடு அழிக்கவும் தொடங்கி இன்று நிலை மிகப் பயங்கரமானதாகி விட்டதென்றும் கூறினார். பயங்கரவாதப் பட்டியலிற் சேர்க்கப்பட்ட நெல்சன் மண்டலோவின் பெயர்கூட அண்மையிலேயே நீக்கப்பட்டதென்றும் அதேபோல் தமிழினத்தின் துன்பங்களுக்கும் விரைவில் முடிவொன்று எட்டுமெனவும் எதிர்வு கூறினார்
துப்பரவுப் பணியாளர் சங்கத்தின் பிரதிநிதியாக இணைந்துகொண்ட Rich whyman அவர்கள், 25 ஆண்டுகளைத் தொட்டுவிட்ட இந்நிகழ்ச்சியானது மிகவும் துன்பகரமானது என்றும், இத் துயரச் சம்பவத்தை மேற்குலகின் மிகச் சிலரே தெரிந்துள்ளனர் என்றும், அனைத்துலக மக்களும் இதனை அறிந்துகொள்ள வகை செய்யவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
கனடா இந்து அமைப்பின் முன்னைய தலைவரான Ron Banerjie அவர்கள், அடக்கு முறைக்கு ஆளாகும் எந்தவொரு இனமும் ஆயுதம் தூக்குவது விந்தையான விடயமல்ல எனக் கூறியதுடன், சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து மக்களுக்குத் தன் மன வருத்தத்தையும் தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தத்தின்போது தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தங்கியியிருந்து பல உயிர்களைக் காப்பாற்றியவரும், மனோதத்துவ டாக்டருமான Ellyn Shander அவர்கள் தலைமைப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். தான் தமிழீழத்திற் தொண்டாற்றிய காலத்தில் கண்ட, அனுபவித்த கொடுமைகளையும் மக்கள் தம் அவலங்களையும் குறிப்பாக அங்குள்ள மருத்தவ வசதியீனங்கள் - செஞ்சோலையில் 61 பெண்பிள்ளைகள் கொல்லப்பட்டமை போன்றவற்றை நீண்ட தொகுப்பாக, கவிதைப் பேச்சாக அளித்தார். அவரது பேச்சில் அன்பு, இரக்கம், துணிவு கருணை, நீதி, கண்டிப்பு, பெருந்தன்மை அனைத்தும் இசைந்து காணப்பட்டன.
சிறீலங்கா அரசே ஏனிந்தக் கொடுமை? இறைவா ஏனிந்த அவலங்கள்? மக்களே உங்கள் பங்களிப்பு என்ன? என்ற வினாக்களைத் தன் பேச்சுக்கு இடையிடையே புகுத்தியிருந்தார்.
தனக்குப் பல கனவுகள் இருந்ததாகவும், அவற்றுள் ஒன்று நிறைவேறியதாகவும், அது ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளரான அண்மையில் நியமனம் பெற்ற ஆபிரிக்க வாழ் தமிழ் நங்கையான நவநீதம் பிள்ளை (முதற் பெண் நீதவான்)அவர்களின்; நியமனமேயாகும்" என நயந்தவர், மேலும் தனக்கிருக்கும் கனவுகளாகப் பல எதிர் பார்ப்புக்களைத் தெரியப் படுத்தினார். அவர் தனது கூற்றில் “எனக்கோர் கனவுண்டு” என்றவாறே அவ்வார்ததையைப் பின்வரும் ஒவ்வொரு வரிக்கும் முன்னாலும் சேர்த்தார்.
நாட்டின் அனைத்துத் தமிழர்களும் மருத்துவ வசதி பெறவேண்டும். அகதி வாழ்வு வேண்டாம். சித்திரவதை ஆட்கடத்தல் நிறுத்தப்படல் வேண்டும்..பிறந்த நாள் விழாக்கள் எதுவித தடங்கலுமின்றி இனிதே நடக்க வேண்டும். காலையில் உறக்கம் கலைந்து முற்றத்திற்கு வரும் பெண்ணானவள் வழக்கமான விமானம் நோக்கிய பார்வையைத் தவிர்த்து, மழை பெய்யப் போகிறதா என்னும் எண்ணத்தில் வானை நிமிர்ந்து பார்க்கும் நிலை வரவேண்டும். மகிந்தரும் அவரது குழுவினரும் நீதியின் முன் நிறுத்தப்படல் வேண்டும் என்றும் இன்னோரன்ன பலவற்றைப் புகுத்தினார். இறுதியாகத் தமிழீழம் விரைவிற் காண்போம் என முழக்கமிட்டவாறே அனைத்து மக்களின் பலத்த கை தட்டுதலுக்கு மத்தியிற் தனது பேச்சினை நிறுத்திக் கொண்டார்.
மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லோகன் கணபதி அவர்கள், 25 ஆண்டுகள் கழிந்தாலும், அழிக்கப்பட்ட எம்மினத்தின் நினைவுகளைச் சுமந்து பெருந் திரளாகக் கூடியுள்ள மக்களுக்குத் தனது நன்றியினத் தெரிவித்தவாறே தொடர்ந்து, நாமனைவரும் ஒற்றுமையாக உலக நாடுகளிடம் எமது உரிமைக்கான ஒத்துழைப்பை வழங்கும்படி உறுதியாக வாதிடுவோம் என உரத்துக் குரல் கொடுத்து, மேலும் பல விடயங்களைக் கூறி நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பலமும் அதிகாரமும் மிக்க பல்லின மக்களின் வார்த்தைகளிற் பதிந்துள்ள பலவாறான நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களால் உள்ளம் மிகவும் உவகை கொள்ள, மலர்ந்த முகங்களுடனும் மன அமைதியுடனும் மக்கள் இருப்பிடம் ஏகினர்.
-கனடாவிலிருந்து பவித்திரா-
Recent comments
39 weeks 6 days ago
40 weeks 3 days ago
48 weeks 3 days ago
49 weeks 6 days ago
1 year 18 weeks ago
1 year 47 weeks ago
2 years 24 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago
2 years 37 weeks ago