கரும்புலி வீரன்

நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
கறுத்தவன் துணிவை
கவிதையில் வடிக்க
எழுத்துக் கூடி வரவில்லை
எப்படிச் செருக்குவேன்
என்னவன் வீரத்தை
நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
கறுப்பு ஒன்று வெடித்து
நெருப்பு ஒன்று பிளந்து
அடிமை விலங்குகள்
அறுத்துத் தெறித்தது
பார் இந்தத் துணிவை
யார் இந்தப் புதல்வர்
எரிப்பதற்காய் எழுந்த
எம் தேசத்தின் நெருப்புகள்
எப்படி இந்த வீரம் எமக்குள் புகுந்தது
கர்ணன் பெற்ற கவசகுணடலம்
கறுப்பு வீரனின் கண்ணில் தெரியுது
காற்றுக்குள் புகுந்து
நீ காரியத்தை முடிக்கின்றாய்
கடலைப் பிளந்து
கயவரை ஒழிக்கின்றாய்
பாறையைப் பிளந்து
பகைவரை முடிக்கின்றாய்
திரும்பி நீ வராமல்
எம் தேசத்தின் வித்தானாய்
நெஞ்சில் உறுதி கொண்டு
நினைத்ததை முடிக்கின்றாய்
உயிரைக் கவசமாக்கி
உன்னையே கொடுக்கிறாய்
நெஞ்சில் நெருப்பைத் தாங்கி
நெடும் தூரம் சென்று
பகைவன் கோட்டைக்குள் பாயும் புலி வீரா
உயிரைக் கொடுத்து
தடையை உடைத்து
விடை பெற்றாய்
என்ன கொடை இது
எமக்காய் நீ தருவது
என்ன பரிகாரம்
உனக்காய் நாம் கொடுப்பது
எப்படி இந்த வீரம்
எமக்குள் புகுந்தது
நினைத்துப் பார்க்க
நெஞ்சு பதறது
வியக்கிறது உலகம்
உன் வீரத்தின் நிலை கண்டு
விடிகிறது எம் தேசம்
வீரர் உம் தியாகத்தால்
கறுப்புப் பனையின் பலத்தைப் பெற்ற
என் கரும்புலித் தோழனே
நிமிர்ந்த எம் பனைக்கு
நீ தான் சாட்சியடா
மண்ணை மீட்பதற்காய்
மரணத்தை நேசித்தாய்
என்னத்தைப் பாட என் தோழனுக்கு
எழுத்துக் கூடி வரவில்லை
நினைத்துப் பார்க்க உன் வீரத்தை
நெஞ்சு பதறுது
காலத்தால் அழியாத கரும்புலித் தோழனே
உன் வீரத்தின் நினைவுகளோடு
நாளை ஒரு தேசம்
நமக்காய் பிறக்குமடா

நோர்வேயிலிருந்து பா. உதயகுமார்